ஆய்வுச்சுருக்கம் (Abstract)

விசேட கல்வி என அழைக்கப்படுவது தற்போது உட்படுத்துகைக்கல்வி என பிரபல்யம் பெற்றுக் காணப்படுகின்றது. இக்கல்வி முறையானது குறைபாடுகளையுடைய விசேட தேவைகளை வேண்டி நிற்கும் மாற்றுத்திறனாளிகளது ஆற்றல்களை வளர்க்க உதவுகின்ற ஒரு கல்வி முறையாகும். அந்தவகையில் பிள்ளைகள் அனைவருமே ஏதாவது குறைபாடுகளைக் கொண்டிருப்பது வழமையானதாகும். இதனைப் போக்கியவாறு கல்வி வழங்க வேண்டியது கல்வித்துறையில் உள்ளவர்களினதும் பெற்றோர்களினதும் தலையாய கடமையாகும். இந்தக் குறைபாடுகளைக் கொண்டு பிள்ளைகளை ஒதுக்கிவிட முடியாது. எனவே இவர்களுக்குக் கல்வி வழங்குவதே விசேட கல்வியாகும். சாதாரண வகுப்பறைச் செயற்பாடுகளூடாகத் தமது கற்றல் செயற்பாடுகளை மேற்கொள்ள முடியாதவர்கள் அல்லது அவ்வாறு மேற்கொள்வதில் இடர்பாடுகளை எதிர்கொள்பவர்கள் விஷேட தேவையுடைய சிறார்களாகக் கருதப்படுவர். இவர்கள் சாதாரண பிள்ளைகளிலும் பார்க்க உடல், மனவெழுச்சிப் பண்புகளில் அதிக வேறுபாடு கொண்டவர்களாகக் காணப்படுவர். இவர்களுக்கு மேலைநாடுகளில் விசேடமான பாடசாலைகள் அல்லது விசேடமான வகுப்புகள் உள்ளன. எனினும் இலங்கை நாட்டில் சாதாரண வகுப்பறைகளிலேயே அவர்கள் வைக்கப்படுகின்றனர். இவர்கள் மாறுபட்ட நடத்தைக் கோலத்தை வெளிக்காட்டுபவர்களாக காணப்படுவதால் இவர்களைச் சாதாரண மாணவர்களுக்குக் கற்பித்தலை மேற்கொள்வது போன்று கற்பித்தலுக்கு உட்படுத்த முடியாது. இவர்கள் உடல், உள ரீதியாகப் பின்தங்கிய நிலையில் காணப்படுகின்றனர். இவர்களது விசேட கல்வி தொடர்பாக தற்போது உலகளாவிய ரீதியில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. மாற்றுத்திறன்களையுடைய மாணவர்களுக்கான கல்வி மட்டுமன்றி ஆசிரியர்களுக்கான பயிற்சிகளையும், இம்மாணவர்களது சூழல் மற்றும் சுகாதார வசதிகளையும் மேம்படுத்தும் திட்டங்களையும் நடைமுறைப்படுத்தி வருகின்றனர். தற்போது இலங்கையிலும் இது போன்று முக்கிய கவனம் செலுத்தப்படுவதோடு அரச நிறுவனங்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களும் வெளிநாட்டு நிதியுதவியுடன் பல்வேறு சேவைகளை வழங்கி வருகின்றன. இந்தவகையில் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச பிரிவிலுள்ள மாற்றுத்திறனாளிகளுக்குக் கல்வி வழங்கும் விசேட கல்வி நிறுவனங்கள் விசேட தேவையுடைய மாணவர்களுக்காக எத்தகைய கற்பித்தல் மற்றும் பராமரிப்பு முறைகளை  மேற்கொள்கின்றன என்பதை ஆராய்ந்து வெளிப்படுத்தும் பொருட்டு இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

திறவுச் சொற்கள் : வினைத்திறன், விசேட கல்வி, உட்படுத்துகைக் கல்வி, விசேட கல்வி நிறுவனங்கள்.

1.அறிமுகம் (Introduction)

நவீன உலகில் மாறி வருகின்ற சமூக மாற்றங்களுக்கேற்பவும், சமகாலத் தேவைகளுக்கேற்பவும், போட்டிச் சந்தை நிலைமைகளுக்கேற்பவும் சமூகத்தின் சகல பிரிவினர்களுக்கும் சமமான கல்வி வழங்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. உலகக் கல்விச் சிந்தனையாக அறிவதற்குக் கற்றல், ஆக்குவதற்குக் கற்றல், ஆவதற்குக் கற்றல், கற்றலுக்காகக் கற்றல் போன்ற எண்ணக்கருக்கள் தோற்றம் பெற்றுக் கல்வி இலக்குகள் மாற்றம் பெற்று வருகின்றன (Unesco,2002). இந்த வகையிலேயே மாற்றுத் திறனாளிகளுக்கான கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும் இன்று கல்விப்புலத்தில் முதன்மை பெறுகின்றது. உலகெங்கும் கல்வி துரிதகதியில் மிகப் பரவலாக மாற்றமடைந்தும் வளர்ச்சியடைந்தும் வருகின்றது. இக்காலகட்டத்தில் கல்வியின் முக்கியத்துவம் பெருகி வருகின்றது. எனவே மாணவர்கள் தொடர்ந்து கற்றல் அறிவு, திறன், மனப்பாங்கில் வளர்ச்சி பெறவும், சமூகத்தில் நல்மனிதனாகவும், தானும் சமூகத்தில் ஓர் அங்கத்தவன் எனும் உணர்வுடன் வாழவும் செவிப்புலனற்றோர், விழிப்புலனற்றோர், மந்தப் புத்தியுடையோர், உடல் ஊனமுற்றோர் போன்ற மாற்றத்திறனுடையோர் கல்வி பெற வேண்டியது அவசியமானதுடன் அதற்கான வாய்ப்புக்களைக் கல்விச் சமூகம் மேற்கொள்ள வேண்டியது காலத்தின் தேவையாகின்றது. (நிகம் கல்விமாணிப் பட்டக் கற்கைநெறி, சிறப்புமலர் 2002 – 2004) சகலரும் கல்வியைப் பெறும் உரிமை உள்ளவர்களே. ஆகவே மாற்றுத்திறன் கொண்ட நபர் தனது திறமைகளையும் அபிலாசைகளையும் அபிவிருத்தி செய்வதற்கும் தேவையான மருத்துவ சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்குக் கல்வி, பயிற்சி, புனர்வாழ்வு மற்றும் போதனைகள் போன்றவற்றைப் பெற்றுக் கொள்வதற்கும் உரிiயுடையோராவர். செவிப்புலன் அற்றோர், விழிப்புலனற்றோர், உடல் குறைபாடுடையோர் பொது வாழ்க்கைக்கும் தொழில் நிலையங்களுக்கும் ஒன்றிணைவதை இலக்காகக் கொண்டு சகல கல்வி, பயிற்சி மற்றும் கலாச்சார வேலைத்திட்டங்களை ஒழுங்கமைத்தல் வேண்டும். அவ்வாறு ஒன்றிணைத்தல் மிகவும் ஆரம்ப நிலையிலேயே இடம்பெற வேண்டும். ஒவ்வொரு தனிநபரினதும் தனிப்பட்ட சந்தர்ப்பங்களுக்கு ஏற்றவாறு கல்வி மற்றும் தொழில் பயிற்சி வேலைத்திட்டங்களை முன்னெடுத்தல் வேண்டும்.

மாற்றுத் திறனுடைய மாணவர்களைச் சாதாரண மாணவர்களுடன் பாடசாலைகளில் இணைத்துக் கற்பித்தல் செயற்பாட்டை முன்னெடுத்தல் என்பது மாற்றுத்திறனுடைய மாணவர்களைப் பொறுத்தமட்டில் அவர்களின் மீதான கவனிப்பு மிகக் குறைவாகவே இருக்கும். மாற்றுத்திறனுடைய மாணவர்கள் ஏனைய சாதாரண மாணவர்களை விட மாறுபட்ட செயற்பாட்டை வெளிக் காட்டுபவர்களாகவே காணப்படுவர். விசேடமாக கவனித்து அவர்களை பரிசோதனைக்கு உட்படுத்தி அவர்களது தேவைகளை கண்டறிந்து அவர்களுக்கு ஏற்ப கல்வியை வழங்குவதோடு புனர்வாழ்வு, தொழில் பயிற்சி போன்றவற்றையும் வழங்க வேண்டியுள்ளது. இவ்வாறான கல்வியை சாதாரண மாணவர்களுடன் வைத்து வழங்குவது என்பது சாத்தியமான விடயமல்ல. மேலும் மாற்றுத்திறனுடைய மாணவர்கள் பொதுவாக தங்கியிருந்து கற்றலை மேற்கொள்வது சிறந்ததாக கருதப்படுகிறது. மேலும்; மாற்றத்திறனுடையோருக்கு கற்பிக்கின்ற ஆசிரியர்கள் விசேட கல்வி தொடர்பான பூரண அறிவுடையோர்களாகவும் இருக்க வேண்டும். (சிவகுமார், 2007) ஒரு மாணவன் ஆரம்பக் கல்வியைக் கட்டாயம் கற்க வேண்டும் என்பது ஐக்கிய நாடுகள் சிறுவர் சாசனத்தின் யாப்புரையில் கூறப்பட்டுள்ளதுடன் இது சிறுவர்களின் உரிமையுமாகும். இதனடிப்படையிலே இலங்கையில் 5-14 வயது வரையான சிறுவர்கட்குக் கட்டாயக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. (Unesco:1999) சாதாரண மாணவர்களுடன் மாற்றுத்திறனுடைய பிள்ளைகள் சேர்ந்து கற்றலை மேற்கொள்ளும்போது அக்கற்றல் செயற்பாட்டுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அவர்கள் கற்றல் செயற்பாட்டிலிருந்து ஓரங்கட்டப்பட்டு ஒதுங்கிக் கொள்ளும் நிலையும் உருவாகலாம்.

  1. ஆய்வுப் பின்னணியும் நியாயப்பாடும்

மேற்படி விசேட கல்வி வழங்கும் நிறுவனங்கள்  மாற்றுத்திறனுடையோரின் கல்வியில் செலுத்தும் பங்களிப்புப் பற்றியதான இவ்வாய்வு விசேட கல்வியை வேண்டி நிற்கின்ற மாணவர்களை மையப்படுத்தி மேற்கொள்ளப்படவுள்ளது. அதாவது மட்டக்களப்பு மாவட்டத்தில் 5914 விசேட தேவையுடைய பிள்ளைகள் இருப்பதாக மாவட்டக் காரியாலய புள்ளிவிவர அறிக்கை குறிப்பிட்டுக் காட்டுகின்றது. ஆனால் 5914 மாணவர்களும் கல்வியைப் பெறவும் இல்லை, அதற்கான வசதிவாய்ப்புக்கள் கிடைக்கவும் இல்லை. இதற்கான காரணம் சமூகத்தில் விசேட கல்வி தொடர்பான அறிவு இன்மையேயாகும். எனவே இவ்வாய்வின் ஊடாக விசேட கல்வி என்றால் என்ன என்பதை ஓரளவுக்கேனும் எடுத்துக் கூறி விசேட தேவையுடைய பிள்ளைகளுக்குக் கல்வியை பெற்றுக் கொடுக்கப் பெற்றோரை விழிப்பூட்டலாம். மேலும் இம்மாவட்டத்தைப் பொறுத்தமட்டில் விசேட கல்வி தொடர்பாக இதுவரை பெரும்பாலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை. ஆதலால் இவ்வாறான புதிய ஆய்வுகளைச் செய்வதனால் சமூகம் பல நன்மைகளை அடையக் கூடியதாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பின் அடிப்படையிலும் இவ்வாய்வு செய்யப்படுகின்றது.

  1. ஆய்வு நோக்கம் (Objectives)
  2. பிரதேசத்திலுள்ள விசேட கல்வி வழங்கும் நிறுவனங்களை இனங்காண்பதுடன் அவை மாற்றுத்திறன் உடையோருக்கு எவ்வகையான கல்வி வழங்குகின்றன என்பதை அறிதல்.
  3. குறைபாடுகளுக்கேற்ப, கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் பொருத்தமான ஆசிரியர்களாலும் பொருத்தமான சாதனங்கள் மூலமாகவும் மேற்கொள்ளப்படுகின்றனவா என்பதை அறிதல்.
  4. விசேட கல்வி வழங்கும் நிறுவனங்களில் உள்ள ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் இடையே காணப்படும் இடையூடாட்டத்தையும் அந்நிறுவனங்களுக்குச் சமூகத்தால் வழங்கப்படும் ஒத்துழைப்புக்களையும் இனங்காணல்.
  5. நிறுவனங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளையும் அவற்றுக்கான காரணங்களையும் கண்டறிதல்.
  6. ஆய்வுப் பிரச்சினைகள் (Research Problems)
  7. ஆய்வுப் பிரதேசத்தில் மாற்றுத்திறன் கொண்ட பிள்ளைகள் அதிகமாகக் காணப்படுகின்றனர். ஆனால் அவர்களுக்கான விசேட கல்வியை வழங்கும் நிறுவனங்கள் குறைவாகவே காணப்படுகின்றன.
  8. விசேட தேவையுடைய பிள்ளைகளின் பெற்றோருக்குத் தமது பிள்ளைகளுக்குக் கல்வி வழங்க வேண்டும் என்ற அக்கறையின்மை.
  9. பெற்றோருக்கு விசேட கல்வி தொடர்பான புரிதலின்மை.
  10. பெற்றோருக்குப் பிள்ளைகளின் குறைபாடுகளை வெளிப்படுத்தி விசேட கல்வி வழங்கும் நிறுவனங்களுக்குத் தமது பிள்ளைகளை அனுப்ப விருப்பமின்மை.
  11. அனைவருக்கும் கல்வி, கட்டாயக் கல்வி என்ற கல்விக் கொள்கைகளைப் பெற்றோர் ஏற்று நடக்காமை.
  12. விசேட கல்வி வழங்கும் நிறுவனங்களுக்குப் போதிய வளங்கள், ஒத்துழைப்புக் கிடையாமை.
  13. ஆய்வு முறையியல் (Methodology)

இவ்வாய்வானது நிகழ்கால உண்மை நிலைமைகளை ஆராய்ந்து சரியான தகவல்களை அளிக்கும் விமர்சன முறையாக உள்ளமையால் அளவைநிலை ஆய்வாக உள்ளது. அந்தவகையில் மண்முனை வடக்குப் பிரதேசத்தில் விசேட கல்வியை வழங்கும் நிறுவனங்கள் மாற்றுத்திறனுடைய பிள்ளைகளின் கல்வியில் எவ்வாறான பங்களிப்புகளை வழங்குகின்றன போன்ற நிகழ்கால உண்மை நிலைகளை ஆராய்ந்து அவை தொடர்பான தகவல்களை வெளிப்படுத்தும் ஆய்வாக உள்ளது. மேலும் மட்டக்களப்பு மாவட்ட மண்முனை வடக்குப் பிரதேசத்திலுள்ள மாற்றுத்திறனாளிகளுக்குக் கல்வி வழங்கும் நிறுவனங்கள் ஒவ்வொன்றினதும் கல்வி நடவடிக்கைகளைத் தனித்தனியாக நோக்கி, உண்மை நிலைகளை வெளிப்படுத்துவதோடு அனைத்து நிறுவனங்களையும் பொதுவான ஒரு நோக்குடன் நோக்கி உண்மையை வெளிப்படுத்துவதாக அமைகின்றது. ஆய்வுக்குத் தேவையான தகவல்கள் நிறுவன பொறுப்பதிகாரிகள், ஆசிரியர்கள் ஆகியோரிடமிருந்து வினாக்கொத்துகள், பேட்டிகாணல் மூலமாகவும் மாணவர்களிடமிருந்து அவதானம், பேட்டிகாணல் மூலமாகவும்  மற்றும் பெற்றோரிடமிருந்து பேட்டி காணல் மூலமாகவும் தகவல்கள் பெறப்பட்டன. மேலும் கலந்துரையாடல், ஆவணங்கள் மூலமாகவும் தரவுகள் பெறப்பட்டுள்ளன. பெறப்பட்ட தரவுகள் அனைத்தும் பகுப்பாய்வு செய்யப்பட்டு பெறப்பட்ட முடிவு பொதுமையாக்கம் செய்யப்பட்டு உண்மை நிலைமைகள் வெளிக்கொணரப்பட்டுள்ளன.

  1. ஆய்வு மாதிரியெடுப்பு (Sampling)

மட்டக்களப்பு பிரதேச பிரிவிலுள்ள விசேட கல்வி வழங்கும் நிறுவனங்கள் மொத்தமாக ஐந்து காணப்படுகின்றன. அவை,

6.1 மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வி வழங்கும் நிறுவனங்கள்

குறியீடு நிறுவனத்தின் பெயர் அமைவிடம் மாற்றுத்திறன் வகை
A YMCA வாழ்வோசை தாண்டவன்வெளி பேச்சுத்திறன், செவிப்புலன் அற்றோர்
B தரிசனம் கல்லடி விழிப்புலன் அற்றோர்
C ஓசானம் சத்துருக்கொண்டான் மூளைவளர்ச்சி குன்றியோர்
D புகலிடம் செங்கலடி மனவளர்ச்சி குன்றியோர்
E மென்கஃப் ஊறணி உடல், உள, மனவெழுச்சி குன்றியோர்

அட்டவணை 1

மேற்குறிப்பிடப்பட்ட 5 நிறுவனங்களும் ஆய்வுக்காகத் தெரிவு செய்யப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 6.2 குடித்தொகை மாதியெடுப்பு

குறியீடு

 

மாணவர்களின் எண்ணிக்கை ஆசிரியர்களின் எண்ணிக்கை
ஆண் பெண்
A 30 41 11
B 11 12 06
C 07 17 04
D 12 07 02
E 19 26 04
மொத்தம் 79 103 27

அட்டவணை 2

மண்முனை  வடக்குப் பிரதேச பிரிவிலுள்ள மாற்றுத்திறனாளிகளுக்குக் கல்வி வழங்கும் விசேட கல்வி நிறுவனங்களில் உள்ள அனைத்து பொறுப்பதிகாரிகள், ஆசிரியர்கள், மாணவர்களும் ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளனர். மாணவர்களின் பெற்றோரில் ஆய்வாளரின் வசதி கருதி விசேட கல்வி நிறுவனங்களுக்கு அண்மையிலுள்ள பெற்றோர் மாத்திரம் ஆய்வு செய்யப்பட்டுள்ளனர். அந்தவகையில் ஒவ்வொரு பாடசாலையில் இருந்தும் 10 பெற்றோர்கள் தெரிவுசெய்யப்பட்டு மொத்தமாக 50 பெற்றோர் மாதிரிகளாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

  1. தரவுகளின் பகுப்பாய்வு

வினாக்கொத்துகள் மூலமும் பேட்டி கண்டதன் அடிப்படையிலும் மேலும் அவதானத்தின் மூலமும் பெறப்பட்ட தரவுகள் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளிகளுக்குக் கல்வி வழங்கும் விசேட கல்வி நிறுவனங்களில் கடமையாற்றும் ஆசிரியர்களின் கல்வித்தகைமைகளை நோக்குகையில்,

வரைபடம் 1

இங்குக் கற்பித்தல் பணியை மேற்கொள்ளும் ஆசிரியர்களுள் 13% ஆனோர் விசேட கல்வியில் பட்டம் பெற்றவர்களாக உள்ளனர். அத்துடன் 61% ஆனோர் டிப்ளோமா பெற்றவர்களாகவும் உள்ளனர். ஏனையோர் க.பொ.த உயர்தரம் மற்றும் க.பொ.த சாதாரண தரம் பயின்றவர்களாக உள்ளனர்.

7.2 குறைபாடுகளுக்கேற்ப கற்றல் கற்பித்தல் செயற்பாட்டை முன்னெடுத்தல்

ஐந்து நிறுவனங்களும் வேறுபட்ட குறைபாடுகளைக் கொண்ட பிள்ளைகளைத் தன்னகத்தே கொண்டுள்ளமையால் ஒவ்வொரு நிறுவனத்திலும் மேற்கொள்ளப்படும் கற்றல் கற்பித்தல் செயற்பாட்டைத் தனித்தனியாக நோக்க வேண்டியுள்ளது.

நிறுவனம் : 01 – YMCA வாழ்வோசை:

  • சைகை மொழி, ஒலி கேட்டல், ஒலி நயம், பேச்சு என்பனவற்றின் அடிப்படையில் கற்பித்தல் இடம்பெறுகின்றது, உதட்டசைவுக் கற்பித்தல், மூச்சுப் பயிற்சி, நாக்குப்பயிற்சி, எழுத்துப் பயிற்சி, பேச்சுப் பயிற்சி என்பன இடம்பெறுகின்றன, கணனி முறைக் கற்பித்தல், சொல்லட்டைகள், வசன அட்டைகள், பட அட்டைகள், கணனி மூலமான காட்சிப்படுத்தல், நடித்துக்காட்டல், களப்பயணம் மூலம் சூழலுடன் இணைந்த கற்பித்தல் முறை.

நிறுவனம் : 02 – Darisanam தரிசனம்

  • குற்றெழுத்துப் பயிற்சி, ஒலி முறையுடன் கூடிய கணினி முறைக் கற்பித்தல், இணைப்பாடவிதானச் செயற்பாடுகள் மூலமான கற்பித்தல், மாணவர்களுக்கு இலகுவாக விளங்கிக் கொள்ளக்கூடிய முறையில் மொழியாட்சியைக் கையாண்டு விளக்கும் முறை, சாதாரண மாணவர்களுடன் இணைந்த வகுப்பறைக் கற்பித்தல்

நிறுவனம் : 03, 04, 05 – ஓசானம் புகலிடம் மென்கஃப் – (mencafe)

இங்குக் காணப்படும் பிள்ளைகளுக்கு அவர்களது குறைபாடுகளுக்கேற்ப கற்பித்தல் மேற்கொள்ளப்படுகின்றது.

  1. மொங்கோலிசம்: தொழிற்பயிற்சி மாத்திரம்
  2. ஓட்டிசம் : யோகா பயிற்சி, பாட்டு, கைவேலை
  3. மைல்ட்: நேரசூசியிலுள்ள செயற்பாடுகள் மாத்திரம்
  4. பார்வைக் குறைபாடு: மொழிப் பிரயோகத்தில் மாத்திரம் கற்பித்தல்
  5. பேச்சுக் குறைபாடு: பேச்சுப்பயிற்சி, உதட்டசைவுப் பயிற்சி
  6. உடல் அங்கவீனம்: கைகளுக்குப் பயிற்சி, நடக்கப் பயிற்சி

7.3 ஆசிரியர், மாணவர், பெற்றோர் தொடர்பு

மாற்றுத்திறனாளிகளுக்குக் கல்வி வழங்கும் நிறுவனங்களில் உள்ள ஆசிரியர் மாணவர்களிடம் காணப்படும் தொடர்பானது 100% திருப்திகரமானதாக உள்ளது. இதனை ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட வினாக்கொத்துக்களிலிருந்து அறிய முடிகின்றது. இங்குக் கடமையாற்றும் ஆசிரியர்கள் சம்பளத்தை எதிர்பாராது ஒரு சமூக சேவையயாகக் கருதியே கடமையாற்றுகின்றனர்.

இக்கல்வி நிறுவனங்களுடனான பெற்றோரின் தொடர்பானது குறைவான நிலையிலேயே காணப்படுகின்றது. மாணவர்களின் கற்றல்சார் நடவடிக்கைகளில் பெற்றோரின் பங்களிப்பு எவ்வாறுள்ளது என ஆசிரியர்களிடம் வினவியபோது குறைவான பங்காற்றுதலே உள்ளதாகக் குறிப்பிடுகின்றனர். 53% பெற்றோரின் பங்காற்றுதலே திருப்திகரமானதாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

7.4 மாற்றுத்திறனாளிகளுக்குக் கல்வி வழங்கும் விசேட கல்வி நிறுவனங்களும் சமூகத்தின் ஒத்துழைப்பும்

இந்நிறுவனங்களின் பொறுப்பதிகாரிகளிடம் தங்களது நிறுவனத்திற்குச் சமூகத்தால் கிடைக்கும் ஒத்துழைப்பு எத்தகையது என்ற வினாவுக்குக் கிடைத்த தகவலின் பகுப்பாய்வு பின்வருமாறு அமைகின்றது. சமூகத்தின் ஒத்துழைப்பானது தங்களுக்குப் பூரணமாகக் கிடைக்கின்றது. நிறுவனங்களுக்குத் தேவையான வளங்கள் (நிதி, பௌதீகம்) கிடைக்கும் முறைகளைப் பின்வரும் வரைபடம் விளக்குகின்றது.

வரைபடம் 2

இந்நிறுவனங்களுக்கு பெரும்பாலான உதவிகள் வெளிநாட்டு நன்கொடைகள் மூலமாகவும், சமய நிறுவனங்கள் மூலமாகவும், சில அரச சார்பற்ற நிறுவனங்கள் மூலமாகவும் கிடைக்கின்றன.

7.5 விசேட கல்வி வழங்கும் நிறுவனங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள்

  • பெற்றோர் கூட்டங்களுக்கு சமூகம் வராமை
  • பெற்றோர் பங்காற்றுதல் குறைவு
  • விசேட கல்வி தொடர்பாகப் பெற்றோருக்குப் புரிதலின்மை
  • மேலதிக இணைப்பாட விதான செயற்பாடுகளைச் செய்வதற்கு வளங்கள் குறைவு
  • சாதாரண பாடசாலை ஆசிரியர்களின் ஒத்துழைப்புக் குறைவு
  • பொதுத்தேர்வின்போது விசேட தேவையுடைய மாணர்களுக்கு விசேட வினாப்பத்திரம் தயாரிக்காமை
  • நிதிப் பற்றாக்குறை, மேலும் மாணவர்களை உள்வாங்கிக் கொள்ள வளங்கள் போதாமை
  • பெற்றோர் பிள்ளைகளில் அக்கறையின்மை,பயிற்றுவிக்கப்படும் ஆசிரியர்கள் குறைவு
  • ஆசிரியர்களுக்குப் போதிய சம்பளம் இல்லாமை, வயது அடிப்படையில் அல்லாமல் தரங்களை அடிப்படையாகக் கொண்டு மாணவர்கள் வகுப்பாக்கப்பட்டுள்ளனர்
  • விசேட தேவையுடைய மாணவர்களைச் சாதாரண மாணவர்களுடன் இணைத்துக் கல்வி வழங்கும் போது பல தடைகளை எதிர்கொள்ள நேரிடுகின்றது.

8.கண்டறிந்தவை (Findings)

  • பெற்றோருக்கு விசேட கல்வி தொடர்பான போதிய அறிவும் விளக்கமும் இல்லை.
  • சமூகமானது மாற்றுத்திறனுடைய பிள்ளைகளில் அதிக நாட்டம் கொண்டு உதவி செய்யவில்லை.
  • மேலதிக மாணவர்களை உள்வாங்கிக் கல்வி வழங்க வளங்கள் போதாமை.
  • மண்முனை வடக்கில் காணப்படும் மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் விசேட கல்வி சென்றடையவில்லை.
  • இந்நிறுவனங்களில் இருக்கின்ற மாணவர்களுக்குத் திருப்திகரமான கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றது.
  • விசேட தேவையுடைய மாணவர்களைச் சாதாரண மாணவர்களுடன் இணைத்து கல்வி வழங்கும் போது பல தடைகளை எதிர்கொள்ள நேரிடுகின்றது.
  1. முடிவுகள்

இவ்வாய்வானது மண்முனை வடக்குப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள விசேட கல்வி வழங்கும் நிறுவனங்கள் மாற்றுத்திறனுடையோரின் கல்வியில் செலுத்தும் பங்களிப்புப் பற்றியதாகவே அமைந்துள்ளது. இதனால் இவ்வாய்வு இப்பிரதேசத்தில்  உள்ள விசேட கல்வி வழங்கும் நிறுவனங்களை மையப்படுத்தியதாகவே ஆய்வு முடிவுகள் அமைந்திருந்திருக்கின்றன. மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் 5914 விசேட தேவையுள்ள மாற்றுத் திறனுடையோர் காணப்படுகின்றனர். இவ்வாறு இருப்பினும் மண்முனை வடக்குப் பிரதேச செயலாளர் பிரிவில் 5 விசேட கல்வி வழங்கும் நிறுவனங்கள் மிகவும் கணிசமான மாணவர்களையே கொண்டு கல்வியை வழங்கி வருகின்றன. இந்நிலையில் இவ்விசேட கல்வி வழங்கும் நிறுவனங்கள் மாற்றுத்திறனுடையோரின் கல்வியில் பெரும் பங்காற்றி வருகின்றன.

எனவே,  தொகுத்து நோக்கும்போது விசேட தேவையுடைய மாணவர்கட்கு விசேட கல்வி வழங்கும் நிறுவனங்களால் அல்லது பாடசாலைகளால் மட்டுமே அவர்கட்கு ஏற்ற சிறந்த கல்வியை வழங்க முடியும். எனவே ஆய்வுக்குட்படுத்தப்பட்ட  ஐந்து விசேட கல்வி வழங்கும் நிறுவனங்களும் மாற்றுத்திறனுடையோரின் கல்வியில் சிறப்பான பங்களிப்பினை வழங்கி, அவர்களது வாழ்வில் ஒளியேற்றியுள்ளன என்ற முடிவுக்கு வரலாம். உண்மையில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட விசேட கல்வி வழங்கும் நிறுவனங்களில் விசேட கல்வி தொடர்பாகப் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் குறைவானவர்களே கல்வி கற்பிக்கின்றனர். இருப்பினும் சைகை மொழியில் தேர்ச்சி பெற்ற, பிரைய்லி எழுத்துமுறை கற்பிக்கத் தெரிந்த ஆசிரியர்கள் கற்றல் – கற்பித்தல் செயற்பாட்டுக்குத் தேவையான கற்றல் – கற்பித்தல் சாதனங்களின் உதவியுடன் சிறந்த கற்பித்தல் செயற்பாட்டைச் செய்கின்றனர். ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் இடையே சிறப்பான உறவுமுறை பேணப்படுகின்றது.

  1. தீர்வாலோசனைகளும் விதப்புரைகளும் (Conclusions)
  2. இவ்விசேட கல்வி வழங்கும் நிறுவனங்கள் அரச பாடசாலைகள் போல் சகல வசதிகளுடனும் சிறப்பாகச் செயற்படத் தேவையான வசதிவாய்ப்புக்களை இந்நிறுவனங்களுக்கு அரசாங்கம் செய்து கொடுக்கலாம்.
  3. ஆசிரிய நியமனம் வழங்கும்போது இவ்விசேட கல்வி வழங்கும் நிறுவனங்களுக்கும் ஆசிரியர்களை நியமனம் செய்து அவர்களுக்கு விசேட கல்வி தொடர்பான பயிற்சிகளையும், கற்கை நெறிகளையும் முன்னெடுக்க வேண்டும்.
  4. விசேட கல்வி தொடர்பான ஆசிரிய ஆலோசகர்களை அத்துறைசார் பரீட்சயமானவர்களை நியமித்து அவர்கள் ஊடாக இவ்விசேட கல்வி வழங்கும் நிறுவனங்கள் மேற்பார்வை செய்யப்பட வேண்டும்.
  5. மாற்றுத்திறனுடைய மாணவர்களின் கற்றல் கற்பித்தல் செயற்பாட்டுக்குத் தேவையான உபகரணங்களைப் பெற்றுக் கொடுப்பதில் கூடிய கவனம் செலுத்தப்பட வேண்டும்.
  6. விசேட தேவையுடைய மாற்றுத்திறனுடைய பிள்ளைகளின் கல்வி தொடர்பாக போதியளவு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும்.
  7. உடல், உளக் குறைபாடுடைய பிள்ளைகள் பிறப்பதற்கான காரணங்களையும் அதனைத் தடுப்பதற்கான வழிமுறைகளையும் சமூகத்துக்கு விழிப்புணர்வுக் கருத்தரங்குகள் ஊடாகத் தெளிவுபடுத்த வேண்டும்.
  8. இவர்களுக்குச் சிறந்த உளவளத்துணை நிபுணர்கள் மூலம் ஆலோசனை வழிகாட்டல் சேவைகளை வழங்கி உரிய கல்வியைப் பெற வழிசமைக்க வேண்டும்.
  9. மாற்றுத்திறனுடைய மாணவர்களைப் பொறுத்தவரையில் தொழிற்பயிற்சி அதிக முக்கியம் பெறுகின்றது. இவ்வாறான தொழிற்பயிற்சிகளை விசேடகல்வி வழங்கும் நிறுவனங்கள் சிறப்பாக வழங்கி வருகின்றன. எனினும் அந்நிறுவன மாணவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை விற்பனை செய்வதற்கு ஏற்ற சந்தை வாய்ப்புக்கள் ஏற்படுத்தப்பட வேண்டும். அதனூடாக அவர்கள் வருமானம் பெற்றுச் சுயமாக வாழ வழிசமைக்க வேண்டும்.

உசாத்துணை நூற்பட்டியல் (Bibliographies)

  • அரசரத்தினம்,பூ.க. (2007) “பிள்ளைகளை எப்படி அணுகவேண்டும்,” அகவிழி.
  • அருள்மொழி,செ. (2008) “கல்வி ஆய்வு முறைகள்,” எவக்கிறீன் பிரிண்டர்ஸ், மட்டக்களப்பு.
  • சந்திரசேகரம்,ப. (2004) “செவித்திறன் குறைவானோருக்குக் கற்பித்தல்” அகவிழி.
  • சின்னத்தம்பி,மா. (2008) “பாடசாலையும் சமூகமும்;” குமரன் புத்தக இல்லம்.
  • செல்வநாயகம்,இ உம் இரவீந்திரன்,ஆ. (2007) “சீரிய சிந்தனை விசேட கல்வி அடிப்படைகள்” திருவள்ளுவர் அச்சகம்.
  • பரமானந்தம்,சு. (2007) “கற்றலில் சிரமங்கள்” அகவிழி.
  • பார்த்தீபன்,ந. (2008) “மொழித்திறன் குறைபாடுகளும் அதற்கான பரிகாரங்களும்,” அகவிழி.
  • மகேசன்,ஏ. (2010) “விசேட கல்வியும் வழிகாட்டல் ஆலோசனைச் சேவையும்,” எவக்கிறீன் பிரிண்டர்ஸ், மட்டக்களப்பு.
  • ஜெயராசா,சபா. (2004) “ஆபத்து விளிம்பிலுள்ள கற்போர்,” அகவிழி.
  • ஜெயராசா,சபா. (2007). “கடினமான வகுப்பறைகளும் பாடசாலைகளும் சமகால கருத்து வெளிப்பாடுகள்,” அகவிழி.
  • http://www.ernweb.com/reference/article/specialneeds/
  • https://en.wikipedia.org/wiki/special-education.
  • http://www.papermasters.com/education-of-special-needs-students.html.
  • http://www.ultis.com/ultius-blog/reaserch-paper-on-special-education.html

Shandru Mariyadas

(Lecturer- prob),

Faculty of Arts and Culture,

Dept. of Education and Childcare,

Eastern University,

Srilanka.

[email protected]