கோவையில் வாழ்ந்த முதுபெரும் மரபுக்கவிஞர் வெள்ளியங்காட்டான். எளிய விவசாயக் குடிமகனான இவர், பாவலராகவும், பகுத்தறிவாளராகவும், சிறிதுகாலம் ஆசிரியராகவும், தையல் கலைஞராகவும், மெய்ப்புத் திருத்துநராகவும், மொழிபெயர்ப்பாளராகவும் பல தளங்களில் பயணித்திருக்கிறார். தமக்கென வீடோ, நிலமோ எதுவும் சேர்த்துக் கொள்ளாதவர். வறுமையிலும் செந்நெறி பிறழாதவர். எளியவர்பால் மிகுந்த அன்பு கொண்டவர்.

கவிஞர் வெள்ளியங்காட்டான் கோவையின் தாகம் தணிக்கும் பில்லூர் அணைக்குச் செல்லும் வழியில் உள்ள வெள்ளியங்காடு என்ற அழகிய கிராமத்தில், திரு.நாராயணசாமி், காவேரிஅம்மாள் அவர்களின் மகனாக 21.8.1904 இல் பிறந்தார். ஏழ்மையான குடும்பத்தில் மூத்தமகனாகப் பிறந்த இவருக்கு, உடன்பிறந்தவர்கள் பத்துச் சகோதரிகள் ஆவர். இராமசாமி என்பது இவரது இயற்பெயர். தான் பிறந்த கிராமத்தின் எழில் கொஞ்சும் இயற்கை அழகும், அங்குள்ள மக்களின் உழைப்பும், அன்பும் இவரைக் கவர்ந்ததால், அவ்வூரின் பெயரையே தமதாக்கிக் கொண்டார்.

திண்ணைப் பள்ளியில் மூன்றாண்டு மட்டுமே கல்வி பயின்றவர் எனினும் தாமே அரிதின் முயன்று நூல்களைத் தேடி விரும்பிக் கற்றார். இலக்கிய நூல்களான புறநானூறு, வள்ளுவம், இராமாயணம் போன்றனவும், இலக்கண நூல்களான தொல்காப்பியம், நன்னூல் போன்றவற்றையும் ஆழ்ந்து கற்றார். இவற்றோடு கன்னட மொழியையும் கற்றுத் தெளிந்தார். சமஸ்கிருதப் புலமையும் வாய்க்கப் பெற்றவர்.

தமிழ்மீதும் தமிழ்நாட்டின் மீதும் தீராக்காதல்

கவிஞரின் தாய்மொழி தெலுங்கு. இருப்பினும் தமிழ்மொழியின் மீதும் தமிழ்நாட்டின் மீதும் அவருக்கிருந்த பற்றை அவரது பாடல்கள் மூலம் அறியலாம்.

நான் பிறந்த தமிழ்நாடு போன்ற வொரு

நல்ல நாடுலகி லில்லையே…

தேன்பிறந்த தமிழ் போன்றினிக்கும் ஒரு

தெளிவு தந்த மொழி இல்லையே…

என்கிறார்.  மேலும் தமிழ் மொழியால் தன்னால் தலைநிமிர்ந்து நிற்க முடியும். நான் ஒரு தமிழன் என்று உரத்து முழங்குகிறார். சங்கத் தமிழ் நூல்களைக் கவிஞர் ஆழ்ந்து விரும்பிக் கற்றதினால், புறநானூற்றையும் வள்ளுவத்தையும் வானளாவப் புகழ்கிறார். இவை ஒப்பற்ற இலக்கியம் என்கிறார்.

நான்கு நூறு புறம் நான்கு நூறு அகம்

நனியும் நல்ல திருக் குறளொடும்

வான்கண் மீன்களென வைகி யொளிருகிற

வகையில் சங்கத் தமிழ் நூல்களே

என்று இவரால் பாடமுடிகிறது என்றால் அந்நூல்கள் மீது அவர் கொண்ட அளவற்ற காதலே காரணம் எனலாம். படிப்பதிலும், எழுதுவதிலும் பாக்கள் புனைவதிலும் பெரும் விருப்பங் கொண்டார். எழுத்துக்கும் வாழ்க்கைக்கும் இடைவெளி இன்றி வாழ்ந்தவர். உலகில் இன்று வரை எவரும் எழுதாத, இனியும் எவரும் எழுத முடியாதவாறு, நான்கு வரிகளில் தம் சுயசரிதையை எழுதியவர்.

என் காவியங்களே என் வாழ்க்கை

என் வாழ்க்கையே என் எழுத்து

என்னைப் பற்றிச் சொல்வதற்கு

என் இலக்கியங்கள் உயிர் வாழ்தல் மட்டுமே

என்று எழுத்தையே மூச்சாகக் கொண்டு செயல்பட்டவர் கவிஞர். இவையே என்றும் காலத்தால் அழியாது போற்றப்படுவன என்பதை உணர்ந்தவர். இவரது கனவைக் கவிஞரின் மகள் நளினி நிறைவேற்றிவிட்டார். தன் தந்தையின் அனைத்துப் படைப்புகளையும் தொகுத்து நூலாக்கித் தமிழுக்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளார். இவரது விடாமுயற்சியும், ஓயாத உழைப்பும் போற்றுத்தலுக்குரியவை. கவிஞரின் மகள் நளினி குறித்துத் தமிழறிஞர் ஞானி அவர்கள் கீழ்க்கண்டவாறு விளக்குகிறார்.

“கவிஞரின் மகள் நளினி அவர்கள் வயதான நிலையிலும் தம் தந்தையின் நூல்களை வெளியிட்டு, ஏறக்குறைய கோவையில் நடைபெற்ற அத்துணை இலக்கியக் கருத்தரங்குகளிலும் கலந்து கொண்டு, எழுத்தாளர்கள், கவிஞர்கள், தமிழ்ப்பேராசிரியர்கள் போன்ற அனைவருக்கும் அந்நூல்களை அளித்துள்ளார்.”

இல்லறம் அல்லது நல்லறமன்று என்பதற்கிணங்கக் கவிஞர் 1929இல் குட்டியம்மாள் என்ற பெண்ணை மணந்து கொண்டார். இவர்களுக்கு வசந்தாமணி, மனோகரன், நளினி ஆகிய மூவரும் மக்களாவர். தன் குடும்பம் எண்ணிக்கையில் பெரிது என எண்ணிய கவிஞர் அடிமைப்பட்ட, வறுமைப்பட்ட என் தாய்நாட்டிற்குத் தேவைக்கு மேலும் ஒரு குழந்தையைப் பெற்றுச் சுமை கூட்டி விட்டேனே என்று வருந்தினார். நகையொன் றில்லாத நங்கை நறுமணங் கமழும் முல்லை என்று கவிஞர் தனது மனைவி மக்களைப் பார்த்தே பாடியிருக்கிறார். மனைவி குட்டியம்மாள் மங்கல நாணின்றி வேறு எதையும் அணியாதவர். மிகவும் எளிமையானவர். அதேபோலவே கவிஞரின் மகள்களும் இன்றும் பெரிய வசதி வாய்ப்பைப் பெற்றிருந்தும் அணிகலன்கள் எதையுமே அணிவதில்லை.

நல்ல இரசனையுள்ள இந்தத் தந்தையின்பால் பெருமதிப்பும் கவிதையில் மிகுந்த ஈடுபாடும், கொண்டவர்கள். தம் தந்தையின் கொள்கையில் சிறிதும் பிறழாது இருந்தவர்கள் என்கிறார் இரா.ராசா.

சமுதாயப் பணிகள்

வெள்ளியங்காட்டான் அவர்கள் எழுத்துப் பணியில் மட்டுமல்லாது, வாழ்க்கையில் மேற்கொண்ட சமுதாயப் பணிகளும் போற்றுதலுக்குரியவை. சமத்துவம், சமதர்மம் பேணியவர். உண்மை, நேர்மை என வாழ்ந்தவர். யாருக்கும் அடிபணியாத குணத்தோடு நெஞ்சில் உறுதியும் துணிவும் கொண்டவர்.

ஒரு சமயம் கவிஞர் தன் தந்தையாருடன் ஒத்துப் போகாத சூழலில், பிழைப்பிற்காகக் கைத்தொழிலாகத் தையற்கலையைக் கற்றார். தையல்கலைஞராக இருக்கும்பொழுது,  அதிகாலையில் கடைவாசலில் ஓர் ஆதிவாசி குளிரால் நடுங்குவதைக் கண்டார். உடனே கவிஞர் கடையில் வேறொரு நபருக்காகத் தைத்து வைத்திருந்த சட்டையை எடுத்து ஆதிவாசிக்கு அளித்தார். ஏழை எளியவருக்கு இலவசமாகவே ஆடைகளை வடித்துக் கொடுப்பார். எஞ்சியிருக்கும் துண்டுத் துணிகளைத் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்குத் தைத்துக் கொடுத்து மகிழ்வார். மாலையில் இளையர்களுக்குக் கல்வி கற்றுத் தருவார்.

1948இல் சந்தேகவுண்டன் பாளையம் என்ற கிராமத்தில் பகலில் ஆசிரியராகப் பணியாற்றினார். விவசாயம் செய்யும் இளைஞர்களுக்கு மாலையில் அங்குச் சென்று தமிழ் இலக்கியங்களான புறநானுறு, வள்ளுவம் போன்றவற்றைக் கற்றுக் கொடுத்தார். ஆசிரியராக அங்குச் சிறிது காலமே பணியாற்றினார். இருப்பினும் அவரது ஆக்கம் சமூகத்திற்குத் தேவையான ஒன்றாகும்.

1950இல் அவர் துணைவியின் இழப்பே அவரது பேரிழப்பாகும். 1945இல் கோவையில் வரதராஜபுரம் என்ற பகுதியில் கவிஞர் வாழ்ந்து வந்தார். அச்சமயத்தில் ஊரில் காலரா நோய் பரவிக் கொண்டிருந்தது. கவிஞர் தங்கியிருந்த பக்கத்துத் தோட்டத்தில் வேலை பார்த்த தம்பதியருக்குக் காலரா நோய்த் தொற்றிக் கொண்டது. அத்தோட்டக்காரர் அவர்களை விரட்டி விட அப்பணியாளர்களைத் தன்னுடைய குடியிருப்பில் வைத்திருந்தார். இத்தகைய செயலால் கவிஞரின் வீட்டுக்கும் மாடுகளுக்கும் தண்ணீர் தர தோட்டக்காரர் மறுத்ததால் மாடுகளைத் தெரிந்தவர்களிடம் அனுப்பிவிட்டு வழியின்றிச் செம்பனூரில் குடிபெயர்ந்தார். அவ்வூரில் காந்தியவாதியான லிங்கய்யா என்பவரின் உதவி கிடைத்தது. அதன்வழித் திண்ணைப் பள்ளி ஆசிரியராகப் பணி புரிந்தார். 1956இல் இடிகரை கிராமம் சென்ற அவர், அவ்வூரில் செய்யப்பட்ட சுதந்திர வித்யாலயம் என்ற உயர்நிலைப் பள்ளியில் விடுதிக் காப்பாளராகப் பணிபுரிந்தார். அவ்விடுதியில் குழந்தைகளுக்குக் காய்ந்த காய்கறிகளைச் சமைத்து வழங்குவதைக் கண்டு மனம் பொறுக்க முடியாமல் அதனைத் தொடர்ந்து எதிர்த்தார். இதன் காரணமாக அப்பணியிலிருந்தும் விலகினார்.

1956இல் கோவை சிங்காநல்லூரில் சிறிது காலம் கவிஞர் வாழ நேரிட்டது. அச்சமயத்தில் நவ இந்தியா என்ற நாளிதழில் மெய்ப்புத் திருத்துநர் பணியில் சேர்ந்தார்.  அங்குப் பணியாற்றிய பொழுதே, கவிதை, காவியம் என நிரம்பப் படைத்தார். அவ்விதழிலும் சில வெளியாயிற்று.1960இல் மெய்ப்புத் திருத்துநர் பணிக்கு ரூ.150 என நிர்ணயித்து அரசு சட்டம் இயற்றியது. கவிஞருக்குப் போதுமான பள்ளிப்படிப்புச் சான்றிதழ் இல்லாத காரணத்தாலும் தாம் ஆற்றிய பணிக்கான ஊதியம் மறுக்கப்பட்டதாலும் கவிஞர் தனது சுயமரியாதை காரணமாக அங்கிருந்து வெளியேறினார்.

இவ்வாறு பல சூழல்களிலும் அலைக்கழிக்கப்பட்டு வந்தார். மனிதநேயமும், உண்மையும், அன்பும், கொண்ட கொள்கையில் உறுதியும், உள்ள அவரால் ஓரிடத்தில் நிலைத்து வாழ முடியவில்லை. வள்ளுவரின் மெய்நெறியையே தம் வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டு இறுதிவரை வாழ்ந்தும் காட்டியவர்.

அடிமை யாக மாட்டேன்-எவர்க்கும்

அடிமை யாக மாட்டேன்

கொடுமை கோடி செய்து-என்னைக்

கொன்றுவிட்ட போதும்

எனத் தான் பிறர்க்கு அடிமையாகாமல் அன்புக்கும் அறத்திற்கும் கட்டுப்பட்டே வாழ்ந்தவர். ஏழை எளியவர்களின் துன்பங்களை எழுத்தில் வடிப்பவர் மட்டுமல்ல. அவர்களின் உடனிருந்து குறைகளைக் களைந்தார்.

கவிஞரின் படைப்புகள்  1942-லிருந்து 48 வரை

கவிஞரின் கவிதைகள் தமிழன், இந்துஸ்தான், வினோதன், அதர்மம், தமிழுலகம், மதுர மித்ரன், சேரநாடு, நவஇந்தியா, தியாகி, பிரசண்ட விகடன், ஈழகேசரி போன்ற பல்வேறு இதழ்களில் வெளிவந்திருக்கின்றன.

தொடக்கத்திலிருந்து 1948 வரை கவிஞர் எழுதிய கவிதைகள் அனைத்தும் தொகுக்கப்பட்டு, தியாகி இதழ் ஆசிரியர் திரு.இராம சடகோபன் அவர்கள், பேராசிரியர் ஆ.சீனிவாச ராகவர், சிவாஜி இதழ் ஆசிரியர் திருயோக சீதாராம் மற்றும் வெண்ணைநல்லூர் திரு.வடிவேல் ஆகியவர்களின் பாராட்டுகளோடு இனிய கவி வண்டு என்னும் பெயரில் 22.9.1948இல் முதல் தொகுதி வெளியிடப்பட்டது.

1950இல் காஞ்சிபுரத்தில் அச்சிடப்பெற்ற எச்சரிக்கை என்னும் இரண்டாவது கவிதைநூல், கவிஞரின் துணைவியார் நோய்வாய்ப்பட்டு இருந்த நிலையில் வறுமை காரணமாக நூலின் படிகள் அனைத்தும் கிலோ ரூ.6.50 என்ற விலைக்கு விற்க நேர்ந்ததன் காரணமாக நூல் ஆக்கம் பெறவில்லை. பின்னர் 1974இல் இனிய கவிவண்டு, எச்சரிக்கை என்னும் இருநூல்களில் உள்ள கவிதைகள் அனைத்தும் தாயகம் என்னும் பெயரில் வெளிவந்தது.

மரபு முறையில் கவிஞர் எழுதிய காவியங்கள் தொடர்ந்து வெளிவந்தவை. அவை:

1.   கவிஞன் 1967

2.   அறிஞர் 1977

3.   தமிழன் 1979

4.   பரிசு 1980

 

5.   புரவலன் 1984

6.   தலைவர்

7.   துணைவி

8.   துறவி கை எழுத்துப் பிரதிகளாக

 

 

 

 

 

இவைகளில் சில தனித்தனியே நூலாக்கம் பெற்றன. பின்னர், கவிஞரின் கவிதை நூல்கள், சிறுகதைகள், காவியங்கள், மொழிபெயர்ப்புகள் என அனைத்தும் சிதறிவிடாமல் பாதுகாக்கும் பொருட்டு, கவிஞரின் மகள் திருமதி நளினி அவர்களும், அவர்களது மகள் சித்ரா அவர்களும் பெருந்தொகுப்பாகக் கொண்டுவரத் திட்டமிட்டனர். இதன் விளைவாக கோவை ஞானி அவர்களின் பெரு முயற்சியாலும், வெள்ளியங்காட்டான் படைப்புகள் தொகுதி-1, தொகுதி-2, 2011இல் உருவாக்கம் பெற்றது. கவிஞரின் காவியங்கள் அனைத்தும் அடங்கிய தொகுதி-1, 748 பக்கங்கள் அடங்கியது.

கவிஞரின் கவிதைகள், கதைகள், கட்டுரைகள், கடிதங்கள், பத்திரிகைகளில் இடம் பெற்றவை (நவஇந்தியா). அமரகீதம், பொன்மொழிகள், மிர்தாத் என இவை அனைத்தும் அடங்கிய தொகுதி-2. 968 பக்கங்கள் ஆகும். இவ்விரு பெருந்தொகுப்புகளையும் காவ்யா திரு.சண்முக சுந்தரம் (சென்னை) அவர்கள் மிகுந்த அக்கறையோடு வெளியிட்டார்.

1991இல் கவிஞர் காலமான பிறகு, கவிஞரின் பேரனும், திருமதி நளினி அவர்களின் மகனுமான கோவை மகேந்திரன் அவர்களின் உதவியோடு கவிஞரின் சில படைப்புகள் பல வெளியீடாக நூலாக்கம் பெற்றன. அவை வருமாறு:

  1. வெள்ளியங்காட்டான் கவிதைகள்

2005இல் கவிஞர் புவியரசு அவர்களின் பெருமுயற்சியால் வெளிவந்தது. இந்நூலுக்குத் திரு.மகேந்திரன் சிறப்பான முன்னுரை எழுதியுள்ளார். தனது தாத்தாவின் கவிதைகளைத் தமிழ் மக்களுக்கு அடையாளப் படுத்துவதில் பெரும் மகிழ்ச்சி கொள்கிறார். இந்நூலுள் புத்தகம் என்ற தலைப்பில் இடம்பெறும் புத்தகத்துள் தோய்ந்து புலன் கூர்மை யுற்றவனைச், சக்தியாய்க் காணும் சகம் என்ற புதுக்குறள் குறிப்பிடத்தக்கது.

  1. கவியகம் (கவிதை) – இந்நூல் தமிழக அரசின் நிதி உதவியோடு வெளிவந்தது.
  2. நெஞ்சை உருக்கும் நீதிக்கதைகள்
  3. புது வெளிச்சம், தன்னைத் தான் அறிய ஆகிய இரு நூல்களும் 2007இல் வெளிவந்தன.
  4. ஒரு கவிஞனின் இதயம் (கடிதங்கள்)(2007)
  5. அறிநெறிக் கதைகள் (2007)
  6. கவிஞன் என்பவன் (பன்முகப் பார்வை) – வெள்ளியங்காட்டான் படைப்புகள் குறித்துப் பல்வேறு அறிஞர்களின் கருத்துரைகள் அடங்கியது.

மேற்கண்ட அனைத்து நூல்களும் 2010இல் தமிழக அரசால் நாட்டுடைமையாக்கப்பட்டன. இவரின் படைப்புகளைத் தமிழுலகம் இனியேனும் தன் நெஞ்சிலும் நினைவிலும் வைத்துப் போற்றும் என்று நம்புவோம்.

கவிஞரின் நூல்குறித்து…

கவிஞர் என்பவன் எப்படி இருக்க வேண்டும் என்பதைத் தனது காவியத்தில் வடித்துள்ளார். அது வருமாறு:

சுகத்தினிற் சுவையு றாதும்

சுதந்திரம் துலங்கும் தூய

முகத்தினில் முனிவு றாதும்

முறையாக நூல்க ளாராய்ந்து

தகத்தினை ஆட்கொண்டுள்ள

அறிவினைக் கவிதையாக்கிச்

சகத்தினிற் சாவை வென்றோன்

சத்தியக் கவிஞனே காண்    – (புரவலன்)

கவிஞருக்கு எண்ணம் வேறு செயல்வேறன்று. தாம் எண்ணியதையே வாழ்க்கையில் செயல்படுத்தினார். தம் எழுத்திலும் வடித்தார்.

உண்மைக் கிங்கு குறைவொன்றில்லை

உள்ளதை யுவந்த ளிக்கும்

வண்மைக்கு வரம்பொன் றில்லை

வாழ்வாங்கு வாழ வல்ல

வெண்மைக்கு விதியொன் றில்லை

வெறுப்பன விட்டு விட்ட

திண்மைக்குத் திகைப் பொன்றில்லை

தேசமே தெரிந்து கொள்ளே       (பாட்டாளி)

          ‘தலைவன்’ என்னும் பாவியநூலை மதிப்பீடு செய்த டாக்டர்.மா.இராமலிங்கத்தின் கருத்து இங்கு நோக்கத்தக்கது.

தலைவன் என்னும் பாவியம் இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் எழுதப்பெற்றுள்ள வெண்பா யாப்பிலான இனிய நூல். மிகச்சிறந்த மரபுக்கவிஞரான வெள்ளியங்காட்டான் தன் வாழ்வின் பட்டறிவினையும், கல்வியறிவினையும் இணைத்து இந்நூலை யாத்துள்ளார். நாட்டை நன்னெறிக்குய்விக்கும் நூல்கள் அண்மைக் காலத்தே தோன்றாத குறையினைப் போக்கி நிறைவுசெய்ய வல்லது தலைவன் என்னும் இந்நூல். அறநெறிச் சிந்தனைகளையும் ஆன்மீகச் செய்திகளையும் ஆய்ந்து தெளிந்து எளிய வெண்பாவின் வாயிலாக வெளியிட்டுள்ள கவிஞரின் சமுதாயப்பணி போற்றுதற்குரியது (கவிஞன் என்பவன், ப.68).

இந்நூலில் திருக்குறள் சிந்தனைகளும் ஆன்மீகக் கருத்துகளும் விரவி வருகின்றன.

திருக்குறள் கற்றுத் தெளியாதான் சிந்தை

செருக்கிருள் சுற்றிச் செறிந்து – கருக்கிருளாய்

வீடெங்கும் வெட்கம் விளைவித்து விட்டுளதால்

நாடெங்கும் நட்பு நலித்து (47-20)

திருக்குறள் கருத்துகளை மக்கள் கற்றுத் தெளிய வேண்டும் என்பதையும், திருக்குறளின் மீது உள்ள பற்றின் காரணமாகக் கவிஞர் இவ்வாறு விளக்குகிறார்.

ஆற்றற் கரியவொரு ஆன்மீக வாழ்வில் நாம்

போற்றற் கருதல் புகழொன்றே – சாற்றின்

அதுவே அமிழ்தம் அழிவின்மை ஆயின்

அது வேநா மாவ தறிந்து

இவ்வுலகில் ஆற்றற்கு அரிய பெரும்பேறு என்னவென்றால் அழியாத புகழை அடைவதே ஆகும். அழியாத புகழ் நல்ல ஒழுக்கம், நற்செயலால் மட்டுமே விளையும் என்கிறார்.

ஒரு கவிஞனின் இதயம் என்னும் நூல், கவிஞர் தன் மக்களுக்கும் நண்பர்களுக்கும் எழுதிய கடிதங்கள். இவை வெறும் கருத்துபரிமாறல் கடிதங்கள் அல்ல. இவரின் ஒவ்வொரு வரிகளும் நாட்டிற்கும் மக்களுக்கும் அறிவுறுத்தும் வைரவரிகள். உயர்ந்த இலக்கியங்களுக்கும் படைப்புகளுக்கும் உள்ள வலிமை கடிதங்களுக்கும் உண்டு என்ற வகையில் இக்கடிதங்கள் அமைந்திருக்கின்றன. 11.10.47 முதல் 29.11.1962 வரை எழுதப்பட்ட மடல்கள் இந்நூலில் இடம்பெறுகின்றன.

தன் மகளுக்கு எழுதும் ஒரு மடலில் கவிஞர் இவ்வாறு கூறுகிறார். செல்வந்தனாவது மிகவும் சுலபம். ஆனால் கவிஞனாவது மிகமிகக் கடினம். ஆயினும் நான் கவிஞனாக வாழ்வதையே விரும்புகிறேன். ஒரு கவிஞனாக வாழ்வதைக் காட்டிலும் உயர்ந்த வாழ்க்கை உண்மையாக வேறொன்றில்லை, என நான் உண்மையாகவே நம்புகிறேன். வாழ்க்கை என்பதுதான் என்ன…. ஆம். அது ஓர் இடையறாத முயற்சி. மனத்தில் அச்சமோ கவலையோ இன்றிச் சதா இயங்கிக் கொண்டே இருப்பதே வாழ்க்கை. அச்சமும், கவலையும் வாழ்க்கையைக் கோணலாக்கிவிடும் என்கிறார்.

23.9.46 அன்று தன் நண்பருக்கு எழுதிய மடலில் தமிழகத்தில் வறுமை என்ற நோய் தலைவிரித்தாடுகிறது. அந்நோயைத் தீர்க்கும் மருத்துவர்களும் இன்று தமிழகத்தில் இல்லை. என வருந்தி எழுதுகிறார். பழங்காலத் தமிழ்ச் சமூகத்தில் இந்நோயைத் தீர்க்கும் அரசர்களும் புலவர்களும் உலவிக் கொண்டிருந்தனர் என்ற செய்தி புறநானூற்றில் இருப்பதைச் சுட்டிக்காட்டுகிறார். இதனை,

நமது மிக மிகப் பழங்கால நூலாகிய புறநானூறு என்னும் சங்க காவியத்தில் சில பேரிடம் இருந்ததாகத் தான் தெரிகிறது. அவர் யார் எனின், பாரி, காரி, ஓரி, பேகன், குமணன் என்ற பெயர்களால் விளங்கி வந்தவர்களே யாவர். இதில் பாரி என்பவருடைய மருந்து மிக மிக விசேசமானதாக இருந்ததாகவும் தெரிகிறது. அந்த மருந்தின் பெயர் கொண்ட என்பது தான் என்கிறார் (கவிஞர் வெள்ளியங்காட்டான் படைப்புகள், தொகுதி II, ப.654).

என்ற கருத்து வெளிக்காட்டும்.

பணம் சேர்ப்ப தொன்றே பழகிப் பாங்காய்க்

குணம் சேர்த்த லொன்று குறைத்தீர்

என்கிறார் வெள்ளியங்காட்டான். கவிஞன் என்னும் காவியம் குறித்து அணிமலர் பத்திரிகையில் சின்ன சேலம் கவிஞர் முருகுசுந்தரம் கீழ்வருமாறு குறிப்பிடுகின்றார்.

திரு.வெள்ளியங்காட்டான் மிக உயர்ந்த கவி. நம் நாட்டின் இன்றைய தேவை என்ன என்பதைத் தெளிவாக உணர்ந்து கவிஞன் என்னும் காவியத்தை எழுதியுள்ளார். இலக்கணமே தேவை இல்லை என கட்சி கொண்டு பேசும் இந்த நேரத்தில் இலக்கணப் பிழையே இல்லை எனும் படி ஒரு நூல் வருவது வியப்பிற்குரியதன்றோ.. பாடல்கள் யாவும் கண்ணாடி போல் தெளிவாகக் காட்டுகின்றன. கம்பனைப் போல் பல இடங்களில் இலாவகமாக எழுத்தைக் கையாளுகிறார்.

மாந்தளிர் மேனி யொக்கும்

மதிமுக மொக்கும் மங்குல்

கூந்தலை யொக்கும் நீலம்

கூர்விழி ஒக்கு மேனும்

ஏந்திய கொங்கைக் கொப்பும்

இடைக் கொப்பும் இன்னொன்றில்லாச்

சாந்தியின் நிலையைக் கண்டு

சஞ்சலமுற்றான் நந்தன்

என்கிறார் வெள்ளியங்காட்டான். இத்தகைய கவிஞரின் எழுத்துக்கள் நாட்டுக்குத் தேவை. அவரின் எழுத்துக்களைத் தேடிப் படிக்க வேண்டியது தமிழரின் கடமை.

புதுவெளிச்சம் என்ற நூலில் கவிஞரின் சிந்தனைக் கருத்துகள் மிக ஆழமானவை. பொருந்தும் நிலையான நுட்பமானவை. எக்காலத்திற்கும் பொருந்தும். காசைத் தேடுவதற்கான நூல்களுக்கு மட்டுமே ஒரு மொழி இடம் தருமாயின் அம்மொழி மாசுபட்டதாகி விடும்.

மொழியின் ஆக்கசக்தி பேச்சிலோ, கருத்துப் பரிமாற்றத்திலோ, செய்தித்தாள்களின் அளவிலோ அடங்கி விடுவதல்ல. அகம், புறம் என அனைத்தையும் ஆய்ந்தறிந்த அழகும் ஆளுமையும் உள்ள நூல்களாக அமைந்து நம் எதிர்கால மக்களுக்கு வைப்பு நிதியாக்கி வைப்பதில் தான் மொழியின் வளர்ச்சியும் வாழ்வும் இருக்கிறது. மொழி பற்றிய சிந்தனை ஆழ்ந்து நோக்கத்தக்கது. நல்ல நூல்களே ஒரு சமூகத்தை வாழ்விக்கும். மொழி அழியாமல் பாதுகாக்கும் என்பது இவரது கருத்தாகும்.

மேலும் இந்நூலில் மதத்துக்கும் மெய்யியலுக்கும் உள்ள வேறுபாட்டை நன்கறிந்து மதப்போர்வையால் மறைப்புண்டு கிடக்கும் பல மெய்யியல் வாழ்வியல் கருத்துகளை விளக்கியுள்ளார். சார்பு நிலையினையும் அறிவுசாரா நம்பிக்கையினையும் மக்களிடையே புகுத்தி அவர்களைக் காலங்காலமாகத் தெளிவு பெறாமல் மடமையில் தள்ளி வந்திருக்கும் பல சமயச் சார்பான வட சொற்களை எடுத்துக்கொண்டு அவற்றின் உண்மைப் பொருள் என்னவாயிருக்கும் என ஆராய்கின்றார். அவ்வுண்மைப் பொருளை அகழ்ந்தெடுத்து அது இதுவே எனக் காட்டும்பொழுது நாம் வியப்படைகிறோம் (கவிஞன் என்பவன், ப.33) என ம.இரா.தங்கப்பா கூறுவதிலிருந்து அறியமுடிகின்றது.

இவ்வாறாக, கவிஞரின் படைப்புகளில் மனிதநேய கருத்துகளும் தமிழ்மொழிப்பற்றும் தாய்நாட்டுப்பற்றும், உலகியற் சிந்தனைகளும், கவிநயமும் காணப்படுகின்றன. மதம், மந்திரம், தெய்வம், சடங்கு என்ற மாயவலைக்குள் சிக்கிக் கொள்ள விரும்பவில்லை. எதனையும் பகுத்தறிவின் துணைகொண்டு தம் சிந்தனைகளையே உரமாக்கியுள்ளார்.

சிந்தனையே சக்தி – சிறந்த

சிந்தயனையே யுக்தி,

சிந்தனையே பக்தி – செய்த

சிந்தனையே முக்தி           (வெள்ளியங்காட்டான் கவிதைகள், ப.162)

மொழிபெயர்ப்புப் பணி

கவிஞர் ஒவ்வோர் ஊராக இடம்பெயர்ந்து இறுதியில் கர்நாடகம் சென்று வாழ்ந்தார். அங்குக் கன்னட மொழியை விரும்பிக் கற்றுத் தோய்ந்தார். இதனால் கன்னட மொழியில் உள்ள மிகச்சிறந்த அரிய நூற்களைக் கற்கும் வாய்ப்பைப் பெற்றார். அந்நூல்களைக் கற்றதோடு தமிழில் மொழிபெயர்த்தும் வெளியிட்டார். இதனால் அறுபதிற்கும் மேற்பட்ட மிகச்சிறந்த சிறுகதைகளையும் மூன்று குறுநாவலையும் தமிழில் வழங்கினார். மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மேல்நாட்டுச் சிந்தனையாளர்களின் மொழிகளையும் அழகாகத் தமிழ்ப்படுத்தியுள்ளார்.

கவிஞருக்குத் தன்னுடைய இறுதிக்காலம் வரையிலும் படிப்பதிலும் எழுதுவதிலும் உள்ள ஆர்வம் சற்றும் குறையவில்லை. அவர் பின்வருமாறு கூறுகிறார்.

என்னுடைய எழுத்தாசை இன்னும் என்னை விட்டு நீங்கவே இல்லை. கன்னடத்திலிருந்து தமிழில் பெயர்த்து எழுத வேண்டிய ஒரு சில கட்டுரைகள், 1988லும், இந்தப் புத்தாண்டு சனவரி வந்தவற்றையும் நான் தொகுத்து ஒரு நூலாக்கிவிட இங்கேயே முயன்று பார்த்தேன். எனினும் என் முயற்சிக்கு உள்ளம் ஒத்துழைக்கவில்லை; கையும் கூட வலிக்கத் தொடங்கி விடுகிறது. என்ன செய்ய?

என்று மிகவும் வருந்தி மகளுக்குக் கடிதம் வாயிலாகத் தெரிவிக்கிறார் (கவிஞர் வெள்ளியங்காட்டான் படைப்புகள், தொகுதி II, .651).

கவிஞரின் படைப்புகள் குறித்த ஆய்வுக்கட்டுரைகள்

கவிஞரின் படைப்புகள் குறித்த ஆய்வுகளை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தினரால் நடத்தப்பட்ட பன்னாட்டுக் கருத்தரங்கில் ஒரு தமிழாசிரியர் பணித்துள்ளார். மேலும் கேரளம், தமிழ்ப் பல்கலைக் கழகத்திலும் கவிஞர் வெள்ளியங்காட்டான் படைப்புகள் குறித்த விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 2014இல் நான்கு கல்லூரிகளில் அவரது பாடல்கள், பகுதி-1 தமிழ்ப் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டிருக்கின்றன.

 

 

இறுதிக்காலம்

1991ஆம் ஆண்டில் 87ஆம் அகவையில் புற்றுநோய் காரணமாகக் கவிஞர் காலமானார். இவர் இன்று நம்மோடு இல்லை எனினும் அவர் நமக்கு விட்டுச் சென்ற காவியங்களும் பாவியங்களும் நமக்குள் வாழ்கின்றன. கவிஞரின் படைப்புகள் அனைத்தையும் இன்று உலகறியச் செய்த கவிஞரின் மகள் திருமதி வெ.இரா.நளினி அவர்களின் விடாமுயற்சியும் ஓயாத உழைப்பும், தந்தையின் மீதுள்ள பற்றும் வியக்கத்தக்கன. கவிஞரின் படைப்புகள் குறித்து காந்திகிராம பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் நா.மார்க்கண்டன் அவர்களின் பின்வரும் கருத்துச் சிந்திக்கத்தக்கது.

கவிஞரின் படைப்புகள் அனைத்தும் உயர்ந்த சிந்தனையைத் தூண்டுகின்றன. கருத்துக்களை மிக எளிய முறையில் வெளிப்படுத்துகிறார். பகுத்தறிவுடன் கூடிய அவரின் படைப்புகளைப் பள்ளி, கல்லூரிகளில் கட்டாயப் பாடமாக வைக்க வேண்டும். இதற்கான அனைத்தையும் ஆய்ந்து செய்வது அரசின் கடமையாகும்.

கவிஞரின் படைப்புகளைப் படித்தால் நல்லவர்கள் உருவாகலாம். இன்றைய சூழ்நிலைக்கேற்ற கவிதைகள் இவை. காலத்தோடு ஒட்டிய கவிதைகளுக்குச் சத்தியம் தவிர வேறு பொருளிருக்க முடியாது. உண்மைக்குப் புறம்பாகச் சிந்திக்காமல் சேவை செய்வதையே லட்சியமாகக் கொண்ட அவரின் வாழ்க்கை முறையை நாமும் பின்பற்றினால் எதிர்காலம் சிறப்பாக அமையும் (கவிஞன் என்பவன், ப.20-21)

படைப்புகளின் மதிப்பீட்டுக் கருவிகளில்…

தமிழகம் மட்டுமல்லாது இவ்வுலகமே கவிஞரைப் பற்றித் தெரிந்துகொள்ளப் பல்வேறு முயற்சிகளை நளினி அவர்கள் எடுத்து வருகிறார். கவிஞரின் படைப்புகள் பற்றி இணையத்தில் செய்திகளாகவும், கட்டுரைகளாகவும், ஆய்வுகளாகவும் இருக்கின்றன. பல்வேறு இளைஞர்கள் இவரைப் பற்றி அறியப் பெரியதொரு வாய்ப்பாக இணையம் இருக்கிறது. மேலும் சிங்கப்பூர் நூலகத்தில் “படிக்க வேண்டியவை” என்ற இடத்தில் இவரது இரு தொகுதிகள் முதல் வரிசையில் இருப்பதாக ந.செந்தலை கெளதமன் அவர்கள் பெருமிதத்துடன் கூறுகிறார். அதுமட்டுமின்றி கவிஞர் புவியரசு அவர்கள்,

… பழைய பொய்மைச் சித்தாந்தங்களின் மீது தமது கனவை உமிழும் கவிஞர், அவற்றையெல்லாம் தூக்கிக் குப்பைக் கூடையில் வீசி எறியுங்கள் என்கிறார். அறிவியல் பார்வையும், விசாலமான சமய நூலறிவும், உண்மையை உரக்கச் சொல்லும் துணிவும், காலத்திற்கேற்ற சிந்தனையும் கொண்டு படைத்துள்ள இந்தப் புது வெளிச்சம் என்ற ஆய்வு நூல், நம் சிந்தைக் குழப்பத்தைத் தெளிவுபடுத்தும் அரிய படைப்பு (கவிஞன் என்பவன், ப.14)

என்றும், கோவை ஞானி

தமிழ் மரபு, பண்பாடு, சமத்துவம், சமதர்மம், பகுத்தறிவு போன்ற தமிழ் உணர்வுகளை எல்லாம் உலகளவு தாங்கி நின்றவர். தமிழர்களின் நெடுங்காலப் பாரம்பரியத்தைப் படித்து அறிந்து, தெளிந்து, பேரிலக்கியங்களை உருவாக்க முனைந்தவர்… கவிதை என்பது சத்தியத்தை வெளிப்படுத்துவதாக இருக்க வேண்டும். சத்தியத்தை வெளிப்படுத்தாத கவிதை கவிதையாகாது. சத்தியம் பேசுவதே கவிதை. வறுமையும் கவிஞனும் ஒன்றாகவே வாழ்ந்தாகவேண்டியுள்ளது. வேறு வழிஇல்லை. வசதியைத் தேடிக் கவிதை செல்லுமானால் அக்கவிதைகள் காலத்தால் அழிக்கப்பட்டுவிடும். ( கவிஞன் என்பவன், ப.15)

என்றும், நாஞ்சில் நாடன்

நூற்றைந்து ஆண்டுகளுக்கு முன்பு பிறந்த கவிஞன் எழுத்துக்காகத் தனது, உடல் பொருள் ஆவியை அர்ப்பணித்தவன்; பசி, பிணி, மூப்பு, சாக்காடு என யாவற்றையும் பார்த்து அல்லற்பட்டு அழுது ஆற்றாது, சிரித்துக் கொண்டே வாழ்ந்தவன் எனும் ஆகிருதியைச் சந்திக்கிறோம்… மூன்றாவது வகுப்பு வரையே கற்ற ஒருவரிடம் புலவர்களை விடவும் குறட்பாவும், வெண்பாவும், விருத்தமெனும் ஒண்பாவும் ஏவல் கேட்டு நின்றிருக்கின்றன (கவிஞன் என்பவன், பக்.24-25)

என்றும் கூறுகின்றனர். மரபின் மைந்தன் முத்தையா கடித இலக்கியம் பற்றிக் கூறும்பொழுது சத்தியத்தின் நெருப்பு மூட்டித் தன்னேயே வாட்டிக் கொண்ட கவிஞனின் செம்மாந்த வாழ்வின் செப்பேடுகள் என ரசனை (2007) என்ற மாத இலக்கிய இதழில் கூறியதோடு, உலகப் புகழ்பெற்ற கலீல் ஜிப்ரானோடு ஒப்பிட்டு கல்யாணம் செய்து கொண்ட கலீல் ஜிப்ரான் வெள்ளியங்காட்டான் (கவிஞன் என்பவன், பக்.34-35) எனவும் அறிமுகப்படுத்துகிறார்.

பாவலர் இரணியன், கவிஞர் ஒரு தொழிலாளியாகவும், படிப்பாளியாகவும் சிந்தனையாளராகவும் படைப்பாளியாகவும், திகழ்ந்தார். அறம் செய்யும் வகை அறிந்திருந்த அவருக்குப் பொருள் செய்யும் வகைதான் புலப்படவில்லை. பொருளை நேசித்த மக்களுக்கு அறநேயராகவும், அறிவு நேயராகவும் வாழ்ந்த ஒருவரை அடையாளம் காண இயலவில்லை. நீதிக்கதைகளும், அறநெறிக் கதைகளும் அரிய கருத்துக்கள் பொதிந்தவை. இவரைப் பற்றி நார்வே நாட்டில் வாழும் தமிழர், இணையத்தில் வாசித்து விட்டு எங்களிடம் பேசினார். எங்களுக்கு வெட்கமாகயிருந்தது. வெளியூர்த் தமிழர்கள் அறிந்த இவரை நாமோ கண்டு கொள்ளவில்லை (கவிஞன் என்பவன், பக்.39-45) எனவும், டாக்டர் வெள்ளிமலை,

கவிஞர் தம் எழுத்தைத் தமது வாழ்க்கையின் வேராகவும் தமது மூச்சாகவும் கருதியவர். இலக்கியம் என்பது சமூகத்தின் மனச்சான்றாகவும் மனித குலத்தின் ஆத்மாவாகவும் இருக்க வேண்டும் என்பதில் நம்பிக்கை கொண்டவர் … விளம்பரத்தையோ புகழையோ விரும்பாதவராகக் குடத்துள் இட்ட விளக்குப்போல், உறையுள் இட்ட வாளென அடக்கமாக, எளிமையாக வாழ்ந்து சமுதாயத்திற்கு எடுத்துக் காட்டாக விளங்கியனார் (கவிஞன் என்பவன், ப.65)

எனவும் கூறியுள்ளனர். தி.க.சி., இக்கவிஞரின் கவிதைகளை 1942ஆம் ஆண்டிலேயே நான் படித்திருக்கிறேன் (கவிஞன் என்பவன், பக்.27) எனக் குறிப்பட்டுள்ளார். சமீபத்தில் அமெரிக்கா சென்ற துணை ஆட்சியர் (பணிநிறைவு) வெ.சுப்ரமணியன் அவர்கள் அரிசோனா மாகாணத்தின் தமிழ்ச் சங்கத்திற்குச் சென்று உரை நிகழ்த்தி, கவிஞரின் இரு தொகுதி நூல்களையும் வழங்கி உள்ளார். புலவர் இளங்கீரன் அவர்கள் பிஎச்.டி. பட்டத்தைக் கற்பகம் கல்லூரியில் (தற்பொழுது பல்கலைக்கழகம்) கவிஞரின் நூல்களை ஆய்வு செய்து பட்டம் பெற்றுள்ளார். அவர் கவிஞருக்கு நெருக்கமானவர்.

கவிதை என்பது ஒரு கருத்தல்ல. அது குருதி வடியும் காயத்திலிருந்தும் அல்லது அழகு அரும்பும் புன்னகையிலிருந்தும் பிறப்பது. கவிஞன் தன் இதயத்தில் தோய்ந்து எழுதுவதே கவிதை எனக் கவிதை பற்றி ஜிப்ரான் எழுதுகிறார். அதன்படி வாழ்ந்தும் காட்டியவர் வெள்ளியங்காட்டான்.

இர.ஜோதிமீனா

முனைவர் பட்ட ஆய்வாளர்,

தமிழ்த் துறை,

அரசு கலைக்கல்லூரி,

கோயம்புத்தூர் – 18