தொல்காப்பியம், வீரசோழியம், நேமிநாதம், நன்னூல், இலக்கண விளக்கம், தொன்னூல் விளக்கம், முத்துவீரியம், சுவாமிநாதம், அறுவகை இலக்கணம், தமிழ்நூல், தென்னூல், தமிழ்க் காப்பு இயம் முதலான இலக்கண நூல்களில் வேற்றுமை குறித்த கருத்துநிலை அடைந்துவரும் மாற்றங்களையும் வளர்ச்சிநிலைகளையும் எடுத்துரைப்பதாக இக்கட்டுரை அமைகின்றது.

முதலாம் வேற்றுமை

தொல்காப்பியம், எழுவாய் வேற்றுமையைப் பெயர் வேற்றுமை என்றும் முதலாம் வேற்றுமை என்றும் குறிப்பிடுகின்றது. எழுவாய் வேற்றுமைக்கு உருபு கிடையாது. இவ்வேற்றுமை ஏற்கும் பயனிலைகள் ஆறாகும். 1. பொருண்மை சுட்டல் 2. வியங்கொள வருதல் 3. வினைநிலை உரைத்தல் 4. வினைவிற் கேற்றல் 5. பண்புகொள வருதல் 6. பெயர்கொள வருதல் ஆகும் (தொல்.65-67). வீரசோழியம், முதலாம் வேற்றுமையாகக் கருத்தாக் காரகம் என்பதைக் குறிப்பிடுகின்றது. இவற்றின் உருபுகளாகச் சு, அர், ஆர், அர்கள், ஆர்கள், கள், மார் என்பனவற்றைச் சுட்டுகின்றது (வீரம்.சொல்.வேற்றுமை.2). நேமிநாதம், தொல்காப்பியத்தைப் பின்பற்றி எழுவாய் வேற்றுமைக்கு இலக்கணம் வகுக்கின்றது. தொல்காப்பியம் சுட்டிய ஆறு பயனிலைகளையே இவ்விலக்கணநூலும் குறிப்பிடுகின்றது (நேமி.41). நன்னூல், பெயராய் நிற்கும் எழுவாய் உருபு ஆறு வேற்றுமைகளை ஏற்கும் எனவும், நீயிர், நீவிர், நான் போன்றவற்றை எழுவாய் ஏற்கும் எனவும், வேற்றுமை உருபுகளை ஏற்கும்போது திரிதல் இல்லாத பெயரே எழுவாய் வேற்றுமையாகும் என்கிறது (நன்.சொல்.293-295). இலக்கணவிளக்கம், தொன்னூல் விளக்கம், நன்னூலைப் பின்பற்றி முதலாம் வேற்றுமைக்கு இலக்கணம் வகுக்கின்றது (இல.வி.197), (தொ.வி.சொல்.56). முத்துவீரியம், தொல்காப்பியம் மற்றும் நன்னூலினைப் பின்பற்றி இலக்கணம் வகுக்கின்றது (மு.வீ.509-512). சுவாமிநாதம், ஐந்து பாலிலும் மூன்று காலத்தினும் மூன்று இடத்தினும் வரும் சொற்கள் எழுவாய் வேற்றுமைக்கு உருபாகவும் வரப்பெறும் என்கிறது (சுவாமி.41). அறுவகை இலக்கணத்தில் வேற்றுமை குறித்த செய்திகள் இடம்பெறவில்லை. தமிழ்நூல், முதல் வேற்றுமைப் பொருளும் உருபும் முழுப்பெயர் மட்டும் தொடர்ப்பட நிற்பதே என்றும், ஒரு தொடரில் செய்பவனே எழுவாய் ஆகும் என்றும் குறிப்பிடுகின்றது. நன்னூல் சுட்டிய பயனிலைகளையே இந்நூலும் பின்பற்றுகிறது (தமிழ்.70-71). தென்னூல், இருதிணைப் பொருள்களின் குறியீடாகக் குழுவாய்க் கிடக்கும் சொற்களுள் ஒன்று அக்குழுவின் நீங்கி ஒன்றை விளக்குதற்கு வினைமுதலாகத் தோன்றும் நிலையே முதல்வேற்றுமையின் பொருள்நிலையாகும் எனவும், எழுவாய் வேற்றுமை தனியொரு சொல்லாக வருதலன்றித் தொகைமொழியாயும், தொடர்மொழியாயும் வரும் எனவும், தெரிநிலை வினையாலணையும் பெயர்தவிர்த்த ஏனைய எழுவாய் பெயர்நிலைச்சொற்கள் காலம் காட்டாது எனவும் குறிப்பிடுகின்றது (தென்.46-48). தமிழ்க் காப்பு இயம் நன்னூலைப் பின்பற்றி எழுவாய் வேற்றுமைக்கு இலக்கணம் வகுக்கின்றது.

இரண்டாம் வேற்றுமை

தொல்காப்பியம் முதலாகத் தமிழ்க் காப்பு இயம் வரையிலான அனைத்து இலக்கணநூல்களும் இரண்டாம் வேற்றுமை உருபாக ஐ என்பதைச் சுட்டுகின்றன. தொல்காப்பியம் (தொல்.71-72), வினையையும் வினைக் குறிப்பையும் இடமாகக் கொண்டு தோன்றுபவை  இரண்டாம் வேற்றுமையாகும் என்கிறது. இரண்டாம் வேற்றுமை ஏற்கும் பயனிலைகளாகக் காப்பு, ஒப்பு, ஊர்தி, இழை, ஒப்பு, புகழ், பழி, பெறல், இழவு, காதல், வெகுளி, செறல், உவத்தல், கற்பு, அறுத்தல், குறைத்தல், தொகுத்தல், பிரித்தல், நிறுத்தல், அளவு, எண், ஆக்;கல், சார்தல், செலவு, கன்றல், நோக்கல், அஞ்சல், சிதைப்பு போன்றவற்றைக் குறிப்பிடுகின்றது.

வீரசோழியம் (வீர.4), பற்றுக்கருமம், வீட்டுக்கருமம், இருபுறக்கருமம், தான்தெரிகருமம், தான்தெரியாக்கருமம், கருத்தாக்கருமம், தீபக்கருமம் ஆகியவற்றை இரண்டாம் வேற்றுமை உருபுபேற்கும் பயனிலைகள் என்கிறது. நேமிநாதம், சுவாமிநாதம் (சு.நா.42) ஆகிய இலக்கண நூற்கள் தொல்காப்பியத்தைப் பின்பற்றி  இலக்கணத்தை வரையறை செய்கின்றன.

ஐயென் னுருபிரண் டாவ ததுவினையும்

எய்தும் குறிப்பும் இயலவரும்தையலாய்

ஆனொடு மூன்றா வதுதான் வினைமுதலும்

ஏனைக் கருவியுமாம் ஈங்கு (நேமி.42)

நன்னூல் (நன்.296), ஆக்கல், அழித்தல், அடைதல், நீத்தல், ஒத்தல், உடைமை என்ற ஆறு பயனிலைகளைக் குறிப்பிடுகின்றது. இலக்கணவிளக்கம் (இல.வி.199), தொல்காப்பியர் கூறிய இரண்டாம் வேற்றுமைப் பயனிலைகளை மூன்றாகப் பகுக்கிறது.

 1. இயற்றல் – 1 (இழைத்தல்)
 2. திரித்தல் – 8 (ஒப்பு, இழப்பு, அறுத்தல், குறைத்தல், தொகுத்தல், பிரித்தல், ஆக்கல், சிதைத்தல்)
 3. எய்தல் – 19 (மற்றவை யெல்லாம்)

தொன்னூல் விளக்கம் (தொ.வி.57), நன்னூலைப் பின்பற்றி இலக்கணம் வகுக்கின்றது. முத்துவீரியம் (மு.வீ.513-514), காப்பு, ஒப்பு, ஆக்கல், அழித்தல், அடைதல், நீத்தல், அஞ்சல், உடைமை என்பனவற்றைப் பயனிலைகளாகக் குறிப்பிடுகின்றது. தமிழ்நூல் (தமிழ்.74), நன்னூல் கூறிய ஆறு பயனிலைகளுடன் விரும்புதல், அறிதல் என்பதனையும் இணைக்கின்றது. தென்னூல் ஆக்கல், அழித்தல், அடைதல், நீத்தல், திரிபுறல் என்ற பயனிலைகளைக் குறிப்பிடுவதைப் பின்வரும் நூற்பா தெளிவுபடுத்துகிறது.

ஐயெனப் பெயரிய இரண்டா குவதே

எவ்வழி வரினும் ஆக்கல் அழித்தல்

அடைதல் நீத்தல் திரிபுறல் முதலா

எழுவா யதுதொழில் படுநிலைத் தாகும் (தென்.50)

தமிழ்க் காப்பு இயம் (த.கா.இ.109-110), எய்தல், பொருத்தல், நோக்கல், நீத்தல், இயற்றல், காதலித்தல், வேறாக்கல், அளத்தல் முதலிய பயனிலைகளைச் சுட்டுகின்றது.

மூன்றாம் வேற்றுமை

தொல்காப்பியர் (தொல்.73-74), மூன்றாம் வேற்றுமை உருபாக ஒடு என்பதைக் குறிப்பிடுகின்றார். இவ்வேற்றுமை வினைமுதல், கருவி என்ற இரண்டின் அடிப்படையில் தோன்றும் என்பதைப் பின்வரும் நூற்பா விளக்குகின்றது.

மூன்றா குவதே

ஒடுவெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி

வினைமுதல் கருவி அனைமுதற் றதுவே (தொல்.சொல்.73)

மூன்றாம் வேற்றுமை ஏற்கும் பயனிலைகளாக, அதனினியறல், அதற்றகு கிளவி, அதன்வினைப்படுதல், அதனினாதல், அதனிற்கோடல், அதனொடுமயங்கல் ,அதனோடியைந்த ஒருவினைக் கிளவி, அதனோடியைந்த வேறுவினைக் கிளவி, அதனோடியைந்த ஒப்பல் ஒப்புரை, இன், ஆன் என்பதைக் குறிப்பிடுகிறது தொல்காப்பியம்.

வீரசோழியம் (வீர.6), ஒடு, ஓடு, ஆல் என்பதை உருபாகக் குறிப்பிடுகின்றது. இவ்வேற்றுமையின் பொருள்நிலையினைப் புறக்கரணம், அகக்கரணம் என்று இரண்டாகப் பிரிக்கின்றது. நேமிநாதம் (நேமி.42), ஆன், ஒடு என்பதை உருபாகச் சுட்டுகின்றது. வினைமுதல், கருவி என்ற பொருள் அடிப்படையில் இவை வரும் என்கிறது.

நன்னூல் (நன்.297), இலக்கணவிளக்கம் (இல.வி.200), தொன்னூல் விளக்கம் (தொ.வி.58), சுவாமிநாதம் (சு.நா.42), தமிழ்நூல் (தமிழ்.75) ஆல், ஆன், ஒடு, ஒடு என்பதை உருபுகளாகக் குறிப்பிட்டு, இவை  கருவி, கருத்தா, உடனிகழ்வு என்ற பொருள் அடிப்படையில் பயின்றுவரப்பெறும் என்கின்றன. முத்துவீரியம் (மு.வீ.515-516), ஆல் என்பதை மட்டும் வேற்றுமை உருபாகச் சுட்டுகின்றது. இவை கருவி, கருத்தா, உடனிகழ்வு என்ற பொருள் அடிப்படையில் வரப்பெறும் என்றும் குறிப்பிடுகின்றது.

சுவாமிநாதம் ‘கொண்டு’ என்ற சொல்லுருபினையும், தமிழ்நூல், தமிழ்க்காப்பு இயம் ‘உடனே’ என்ற சொல்லுருபினையும், தென்னூல் ‘உளி’, ‘மாறு’ என்ற சொல்லுருபுகளையும் குறிப்பிடுகின்றன. தென்னூல் ‘இன்’, ‘ஆன்’ என்ற மாற்றுருபுகளையும், தமிழ்க்காப்பு இயம் ‘ஒடு’ என்ற மாற்றுருபினையும் குறிப்பிடுகின்றன. தென்னூல் (தென்.51-56), ஒடு என்ற வேற்றுமை உருபினையும், உடனிகழ்வாய் வரும் ஒருவினைக்கிளவி, வேறுவினைக்கிளவி, ஒப்பல்ஒப்புரை என்ற பயனிலைகளையும் குறிப்பிடுகின்றது.

மூன்றா குவதே

ஒடுவெனப் பெயரிய வேற்றுமைக்கிளவி

வினைமுதல் கருவியொடு நிகழ்செயல் அதுவே (.கா..111)

தமிழ்க் காப்பு இயம் (த.கா.இ.111-14), தொல்காப்பியத்தைப் பின்பற்றி இலக்கணம் வகுக்கின்றது.

நான்காம் வேற்றுமை

தொல்காப்பியம் முதலாக அனைத்து இலக்கணநூற்களும் ‘கு’ என்பதை நான்காம் வேற்றுமை உருபாகச் சுட்டுகின்றன. தொல்காப்பியம் (தொல்.75-76), எப்பொருளாயினும் ஏற்றுக்கொள்ளும் தன்மையுடையதே நான்காம் வேற்றுமையின் இயல்பாகும் என்கிறது. அதற்குவினையுடைமை, அதற்குடம்படுதல், அதற்குப்படுபொருள், அதுவாகுகிளவி, அதற்குயாப்புடைமை, அதன்பொருட்டாதல், நட்பு, பகை, காதல், சிறப்பு ஆகியன இவ்வேற்றுமையின் பயனிலைகள் ஆகும்.

வீரசோழியம் (வீர.6), கு, பொருட்டு என்பதை உருபாகக் குறிப்பிடுகின்றது. கோளிக்காரகம், ஆர்வக்கோளி, கிடப்புக்கோளி, இரப்புக்கோளி என்பது இதன் பயனிலைகளாகும். நேமிநாதம் நான்காம் வேற்றுமைப் பொருளான கு எந்த இடத்திலும் ஈ பொருளை ஏற்று நிற்கும் என்பதைப் பின்வரும் நூற்பா மூலம் விளக்குகிறது.

ஓதுங் குகர உருபுநான் காவதஃ

தியாதிடத்தும் ஈபொருளை ஏற்குமாம்கோதிலா

தின்னுருபைந் தாவ திதனினித் தன்மைத்தி

தென்னு மொருநான் கிடத்து (நேமி.43)

நன்னூல் (நன்.298), தொன்னூல்விளக்கம் (தொ.வி.59) இவ்வேற்றுமை உருபு  ‘இதற்குஇது’ என்ற முறையில் அமைந்துவரப்பெறும் எனவும், இவ்வேற்றுமையின் பயனிலைகளாகக் கொடை, பகை, நேர்ச்சி, தகவு, அதுவாதல், பொருட்டு, முறை என்பதையும் குறிப்பிடுகின்றன.  இலக்கணவிளக்கம் (இல.வி.201), முத்துவீரியம் (மு.வீ.517-58), தென்னூல் (தென்.58) ஆகிய இலக்கணநூற்கள் நன்னூல் குறிப்பிட்ட பயனிலைகளைப் பின்பற்றுகின்றன.

சுவாமிநாதம் (சு.நா.42), வினைமுதல் கொள்வோனாய்க் கொடைப்பொருளில் வினைச்சொல்லையும், பெயர்ச்சொல்லையும் பயனிலையாகக் கொண்டு முடியும் என்கிறது. தமிழ்நூல் (தமிழ்.76), பயனிலையாகப் பகை, நட்பு, தகுதி, முதற்கருவியாதல், பொருட்டு, எல்லை என்பதைக் குறிப்பிடுகிறது. தமிழ்க் காப்பு இயம் (த.கா.இ.115) தொல்காப்பியத்தைப் பின்பற்றி இலக்கணம் வகுப்பதோடு, ‘பொருட்டு’ என்ற சொல்லுருபினையும் குறிப்பிடுகிறது.

ஐந்தாம் வேற்றுமை

தொல்காப்பியம் (தொல்.77-78), முதலாக அனைத்து வேற்றுமை உருபுகளும் இன்னினை ஐந்தாம் வேற்றுமை உருபாகக் குறிப்பிடுகின்றது. இப்பொருளின் இத்தன்மைத்து இப்பொருள் என்ற பொருளில் அமைந்து வருவது இவ்வேற்றுமை என்கிறது தொல்காப்பியம். வண்ணம், வடிவு, அளவு, சுவை, தண்மை, வெம்மை, அச்சம், நன்மை, தீமை, சிறுமை, பெருமை, வன்மை, மென்மை, கடுமை, முதுமை, இளமை, சிறத்தல், இழித்தல், புதுமை, பழமை, ஆக்கம், இன்மை, உடைமை, நாற்றம், தீர்தல், பன்மை, சின்மை, பற்றுவிடுதல் போன்றன இவ்வேற்றுமையின் பயனிiலைகள் ஆகும் என்கிறார் தொல்காப்பியர்.

வீரசோழியம் (வீர.3), ஐந்தாம் வேற்றுமை உருபாக இன்  என்பதையும், அவை அவதி, அசலம், சலம் என்ற பொருள்களில் அமையும் என்றும் விளக்குகின்றது. நேமிநாதம் (நேமி.43), தொல்காப்பியத்தைப் பின்பற்றி இலக்கணம் அமைக்கின்றது. இவை உவமம், நீக்கம், எல்லை, ஏது என்ற பொருளில் வரப்பெறும் என்கிறது.

நன்னூல் (நன்.299), இலக்கணவிளக்கம் (இல.வி.202), தொன்னூல் விளக்கம் (தொ.வி.60), இல், இன் என்பனவற்றை ஐந்தாம் வேற்றுமை உருபுகளாகக் குறிப்பிடுகின்றன. இவ்வேற்றுமை நீங்கல், ஒப்பு, எல்லை, ஏது என்ற பொருள்களில் வரப்பெறும் எனவும் குறிப்பிடுகின்றன. இலக்கணவிளக்கம் ஐந்தாம் வேற்றுமை இதனின்இற்று இது என்னும் தன்மையில் வரப்பெறும் என்கிறது.

முத்துவீரியம் (மு.வீ.518-519), இல், இன் என்பனவற்றைக் குறிப்பிடுவதோடு, அச்சம், ஆக்கம், தீர்தல், பற்றுவிடல், நீங்கல், ஒப்பு, எல்லை, ஏது என்ற பொருள்களிலும் வரப்பெறும் என்கிறது. சுவாமிநாதம் (சு.நா.43), இல், இன் என்பனவற்றை ஐந்தாம் வேற்றுமை உருபுகளாகக் கொள்கின்றது. இவை ஏது, எல்லை, நீக்கம், உவமை ஆகியப்பொருளில் வந்து பெயரையும் வினையையும் கொண்டு முடியும் என்கிறது.

ஐந்தன் உருபே இன் இல் என்பர்

நீங்கல் பொருள்தர நிகழும் போதில்

நின்றுஇருந் தென்ப நிரலே இணையும் (தமிழ்.77)

தமிழ்நூல் இல், இன் என்பதைக் குறிப்பிடுகிறது. தென்னூல் (தென்.58), ஐந்தாம் வேற்றுமை உருபாக இன்னினைச் சுட்டுகின்றது. மேலும், இது ஒன்றையொன்று ஒப்பிட்டும், உறழ்ந்தும், நீக்கியும், எல்லையும் அளவையுமாக இப்பொருளின் இப்பொருள் இந்நிலையினது என்னும் பொருள்பட வரப்பெறும் என்கிறது. நின்று, இருந்து, உம், விட, காட்டினும் என்பனவற்றை ஐந்தாம் வேற்றுமையின் சொல்லுருபுகளாகக் குறிப்பிடுகின்றது.

தமிழ்க் காப்பு இயம் (த.கா.இ.118-120), இன் என்பதைச் சுட்டுகின்றது. இவ்வுருபு இதனைவிட இது இத்தன்மையது என்னும் பொருளில் வரும் எனவும், இன் உருபு உம் என்னும் இடைச்சொல்லை ஏற்றுவருமானால் ஒப்பீட்டுப் பொருளைச் சிறப்பாகப் புலப்படுத்தும் என்றும் குறிப்பிடுகின்றது. வண்ணம், வடிவம், அளவு, சுவை, தன்மை ஆகியவற்றைக் கொண்டு இதனின்இது இத்தன்மையத்து என்று ஒப்புமைக்காட்டலும், நீங்கல், எல்லை இவற்றின் அகற்சியை இதனின் இது இத்தன்மையத்து என்று காட்டலும் இவை போன்ற பிறவும் ஐந்தாம் வேற்றுமையது பாகுபாட்டில் வரும் எனவும் குறிப்பிடுகின்றது.

ஆறாம் வேற்றுமை

தொல்காப்பியம் (தொல்.79-80), ஆறாம் வேற்றுமை உருபாக ‘அது’ என்பதைக் குறிப்பிடுகின்றது. இது கிழமைப்பொருளில் வரும் வேற்றுமையாகும். இவ்வேற்றுமையானது தற்கிழமை, பிறிதின்கிழமை என்ற இரண்டு கிழமைப்பொருளில் வரப்பெறும் என்றும் குறிப்பிடுகிறது. இயற்கை, உடைமை, முறைமை, கிழமை, செயற்கை, முதுமை, வினை, கருவி, துணை, கலம், முதல், ஒருவழியுருப்பு, குழு, தெரிந்துமொழிச் செய்தி, நிலை, வாழ்ச்சி என்பன இவ்வேற்றுமையின் பொருள்பாகுபாடுகள் ஆகும்.

வீரசோழியம் (வீரம்.7), ஆறாம் வேற்றுமை உருபாக உடை என்பதைச் சுட்டுகிறது.  உடை என்னும் உருபு ஆன், ஆள், ஆர், ஆர்கள், அது, இன என்னும் சொற்களின் பின் வரப்பெறும் என்கிறது. நேமிநாதம் (நேமி.42), தொல்காப்பியத்தைப் பின்பற்றி இலக்கணம் வகுக்கின்றது.

நன்னூல் ஆறாம் வேற்றுமையில் ஒருமைக்கு அது, ஆதுவும், பன்மைக்கு அ என்பதும் உருபாகும் என்கிறது. பண்பு, உறுப்பு, ஒருபொருள் கூட்டம், பலபொருள் கூட்டம், ஒன்று திரிந்து மற்றொன்றாதல் என்னும் ஐந்து தற்கிழமைப் பொருள்களையும், அவையல்லாத பொருள், இடம், காலம் ஆகிய பிறிதின் கிழமைப் பொருள்களையும் உடையனவாக வரப்பெறும் என்பதைப் பின்வரும் நூற்பா தெளிவுறுத்துகிறது.

ஆறன் ஒருமைக்கு அதுவும் ஆதுவும்

பன்மைக்கு அவ்வும் உருபாம்: பண்புஉறுப்பு

ஒன்றன் கூட்டம் பலவின் ஈட்டம்

திரிபின் ஆக்கம் ஆம்தற் கிழமையும்

பிறிதின் கிழமையும் பேணுதல் பொருளே (நன்.சொல்.300)

இலக்கண விளக்கம் (இல.வி.203), தொன்னூல் விளக்கம் (தொ.வி.61), முத்துவீரியம் (மு.வீ.512-513) ஆறாம் வேற்றுமையின் இலக்கணத்தை நன்னூலைப் பின்பற்றி வகுக்கின்றன. சுவாமிநாதம் (சு.நா.43), ஆறாம் வேற்றுமையினை ஒருமை, பன்மை என்று பிரிக்காமல் அது, ஆது, அ, உடைய என்பதை உருபாகக் கொள்கிறது. தற்கிழமையில் சினை, குணம், தொழில் என்பதும் பிறிதின் கிழமையில் பொருள், இடம், காலம், என்பது வரும் என்கிறது. உடைய என்ற சொல்லுருபினையும் இது குறிப்பிடுகின்றது.

தமிழ்நூல் (தமிழ்.78), உடைமைப் பொருளில் வருவது ஆறாம் வேற்றுமை உருபாகும் என்கிறது. அது, உடைய என்பனவற்றை உருபுகளாகக் குறிப்பிட்டு, உடைய என்பதைச் சொல்லுருபாகவும் காட்டுகின்றது. தற்கிழமை, உறுப்பு, பண்பு, தொகுதி, திரிபு என்னும் பொருள்களிலும், பிறிதின்கிழமை, பொருள், இடம், காலம் என்னும் பொருள்களிலும் வரப்பெறும் என்கிறது.

அது வெனப் பெயரிய ஆறா குவதே

பண்புறுப் புக்குழு பலவின் ஈட்டம்

வாழ்நிலை செய்யுள் திரிபி னாக்கம்

இன்னன பிறவும் தன்னினும் பிறிதினும்

இதன திதுவெனும் கிழமைத் ததுவே (தென்.58)

தென்னூல் (தென்.58-59), அது, ஆது, அ என்ற உருபுகளையும் உடைய என்ற சொல்லுருபினையும் குறிப்பிடுகின்றது. தற்கிழமை, பிறிதி;ன்கிழமை ஆகியவை பண்பு, உறுப்பு, குழு, பலவின் கூட்டம், வாழ்ச்சி, செய்யுளுரிமை, திரிபின் ஆக்கம் என்ற பொருண்மைகளில் வரப்பெறும் என்கிறது. தமிழ்க்காப்பு இயம் (த.கா.இ.121-124), ஒருமைக்கு அதுவும் பன்மைக்கு அவும் உருபாகும் என்கிறது. இது தற்கிழமையாகவும். பிறிதின்கிழமையாகவும் இதனதுஇது என்னும் பொருளில் வரப்பெறும் என்றும், உடைய என்பதைச் சொல்லுருபு என்றும் குறிப்பிடுகின்றது. கிழமைப் பொருளில் வரும் சொற்களாக இயல்பு, உடைமை, முறைமை, நிலம், வினை, உறுப்பு, கருவி, கலம், துணை, குழு, திரிபு முதலானவற்றைக் குறிப்பிடுகின்றது.

ஏழாம் வேற்றுமை

தொல்காப்பியம் முதலாக அனைத்து இலக்கண நூல்களும் ‘கண்’ என்பதை ஏழாம் வேற்றுமை உருபாகக் குறிப்பிடுகின்றன. தொல்காப்பியம் (தொல்.81-82), ஏழாம் வேற்றுமை உருபு கண் என்கிறது. இவ்வேற்றுமை வினைசெய் இடம், நிலம், காலம் என்பவற்றை ஏற்று வரப்பெறும் என்கிறது. கண், கால், புறம், அகம், உள், உழை, கீழ், மேல், பின், சார்;, அயல், புடை, தேவகை, முன், இடை, கடை, தலை, வலம், இடம் என்ற பத்தொன்பது உருபுகளைக் குறிப்பிடுகின்றது.

வீரசோழியம் (வீர.7), உருபுகாளக் கே, உழை, வயின், பக்கல், உழி, இல், கண், சார் என்பதைக் குறிப்பிடுகின்றது. நேமிநாதம் (நேமி.42), தொல்காப்பியத்தைப் பின்பற்றி இலக்கணம் வகுக்கின்றது.

அதுஎன்ப தாறாம் உருபாம் இதன

திதுவென் கிழமையிரண் டெய்தும்விதிமுறையாற்

கண்ணென்ப தேழாம் உருபாகுங் காலநில

நண்ணும் வினையிடத்து நன்கு  (நேமி.42)

நன்னூல் (நன்.301-302), ஏழாம் வேற்றுமையினை இடப்பொருள் வேற்றமை என்கிறது. அறுவகைப் பெயர்களும் தற்கிழமை மற்றும் பிறிதின்கிழமை என்னும் இரண்டிற்கும் இடமாக நிற்கும் என்கிறது. கண், கால், இடை, தலை, வாய், திசை, வயின், முன், சார், வலம், இடம், மேல், கீழ், புடை, முதல், பின், பாடு, அளை, தேம், உளை, வழி, உழி, உளி, உள், அகம், புறம், இல் என்ற இருபத்தி ஏழு உருபுகளைக் குறிப்பிடுகின்றது.

இலக்கண விளக்கம் (இல.வி.204), இவ்வேற்றுமை உருபு பொருள், இடம், காலம் என்னும் மூவகைக் குறிப்பின் கண் தோன்றலாம் என்கிறது. மேலும், தொல்காப்பியம் குறிப்பிட்ட பத்தொன்பது உருபுகளையும் குறிப்பிடுகின்றது இந்நூல். தொன்னூல் விளக்கம் (தொ.வி.62), பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என்ற அறுவகைப் பெயர்களும், தற்கிழமை பிறிதின் கிழமைப் பொருளில் வரும் என்கிறது.

முத்துவீரியம் (மு.வி.526-525), நன்னூல், தொல்காப்பியத்தைப் பின்பற்றி இலக்கணம் அமைக்கின்றது. சுவாமிநாதம் (சு.நா.43), இவ்வுருபு பொருள் முதலாக ஆறையும் கருத்தாவின் இடனாக ஏற்று வினையையும் பெயரையும் கொண்டு முடியும் என்கிறது.

தமிழ்நூல் (தமிழ்.79), இல், கண், இடம், பால் முதலிய உருபுகளைக் குறிப்பிடுகின்றது. தென்னூல் (தென்.60-61), இவ்வேற்றுமை பல்வகை இடம், வினைநிகழ்ச்சி, இருவகைக்காலம் ஆகியவற்றை இடனாகக் கொண்டு பிறக்கும் என்கிறது. கண், கால், புறம், அகம், உள், உழை, கீழ், மேல், முன், பின், அயல், புடை, கடை, இடை, தலை, வாய், வலம், இடம், முதல், சார், தேஎம், திசை, உழை, வழி, உழி, உளி, இல், வயின் என்ற இருபத்தியெட்டு உருபுகளைக் குறிப்பிடுகின்றது.

தமிழ்க் காப்பு இயம் (த.கா.இ.125-127), இல் என்பதை ஏழாம் வேற்றுமை உருபாகக் குறிப்பிடுகின்றது. இவ்வேற்றுமை பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் ஆகியவற்றிலும் பலவகையான குறிப்பிலும் வினை நிகழுமிடத்துத் தோன்றும் என்கிறது. இடப்பொருள் உணர்த்தும் சொல்லுருபுகளாகக், கண், கால், புறம், அகம், உள், உழை, கீழ், மேல், முன், பின், அயல், புடை, வலம், இடம், மிசை, சார், வழி, வயின், வாய், தலை, இடை, கடை, பாடு. அளை. ஊழி, திசை, பால் என்ற இருபத்தியேழினைக் குறிப்பிடுகின்றது. ஊடே, இடையே, நடுவே என்பனவற்றை இடப்பொருளில் வரும் கூட்டுச்சொற்கள் என்கிறது.

எட்டாம் வேற்றுமை

தொல்காப்பியம் (தொல்.118), விளியெனப்படுவது தம்மையேற்கும் பெயரோடு விளங்கத் தோன்றும் இயல்புடையது என்கிறது. வீரசோழியமும், நேமிநாதமும் விளியின் இலக்கணத்தைக் குறிப்பிடவில்லை. நன்னூல் (நன்.303), இலக்கண விளக்கம் (இல.வி.205), தொன்னூல் விளக்கம் (தொ.வி.69), தமிழ்நூல் (தமிழ்.81), தென்னூல் (தென்.64), தமிழ்க் காப்பு இயம் (த.கா.இ.131) போன்ற இலக்கண நூற்கள் எல்லாம், படர்க்கையோரைத் தன்முகமாகத் தான் அழைப்பதுவே என்று விளிக்கு இலக்கணம் வகுக்கின்றன.

தொல்காப்பிய உரையாசிரியரான நச்சினார்கினியர் ஈறுதிரிதல், ஈற்றயல் நீடல், பிறிது வந்தடைதல், இயல்பாதல் என்னும் நான்கு வகைகளில் விளியானது மாற்றமடையும் என்கிறார் (தொல்.120). நன்னூல் (நன்.303), இலக்கண விளக்கம் (இல.வி.205), தொன்னூல் விளக்கம் (தொ.வி.69), தமிழ்நூல் (தமிழ்.81), தமிழ்க் காப்பு இயம் (த.கா.இ.132) ஆகிய இலக்கண நூற்கள் பெயர்கள் விளியேற்கும் போது அடையும் மாற்றங்களாகத் திரிபு, குன்றல், மிகுதல், இயல்பு, அயல் திரிபு என்னும் ஐந்தாகக் குறிப்பிடுகின்றன.

சுவாமிநாதம் (சு.நா.44), ஈற்றயல் அளபெழல், ஈறுநீடல், ஈற்றயல்நீடல், ஈறுகெடுதல், ஈற்று விகுதி கெட்டு ‘ஆ’ விகுதி சேர்தல், ஆ, ஓ, ஏ ஆகிய விகுதிகளைப் பெற்று வருதல், ஈற்றயல் அ, ஆ, இ, ஈ பெற்று வருதல், ஈறு அளபெடுத்து வேறு ஒற்று மிகுதல், ஈறுமிகுதல் என்னும் எட்டு விளி மாற்றங்களைக் குறிப்பிடுகின்றது.

தொகுப்புரை

தொல்காப்பியம் முதல் தமிழ்க் காப்பு இயம் வரையிலான இலக்கண நூல்கள் காலமாற்றம், வளர்ச்சியின் அடிப்படையில் வேற்றுமை குறித்த கருத்தாக்கத்தில் மாற்றங்களையும் வளர்ச்சிகளையும் பதிவு செய்துள்ளன. தற்காலத் தமிழின் மொழிநிலை, பல புதிய இலக்கண மாற்றங்களையும், வளர்ச்சி நிலைகளையும் கொண்டு திகழ்வதோடு, புதிய இலக்கணக் கூறுகளைக் கொண்டு அமைவதும் கவனிக்கத்தக்கது. இக்கட்டுரையின் அடுத்தக்கட்ட நகர்வு, இக்கோட்பாடுகளை இக்காலத் தமிழில் பொருத்திப் பார்த்து, இக்காலத் தமிழில் இவ்வேற்றுமைகள் அடைந்த மாற்றங்களையும் வளர்ச்சிகளையும் இனம்கண்டு இக்காலத் தமிழுக்கான புதிய வேற்றுமைக் கோட்பாட்டினை உருவாக்குவதாகும். இலக்கண உலகில் மொழிநிலையில் ஏற்படும் இவ்வகை மாற்றங்கள், வளர்ச்சிகள், புதிய போக்குகள் போல்வனவற்றைத் தொடர்ந்து காணுவதும், பதிவு செய்வதும் பிற்கால மொழி ஆய்வுகளுக்குப் பெரிதும் பயன்படும்.

துணைநின்றவை

 • அகத்தியலிங்கம் ச., 1979, மொழியியல் சொல்லியல், பெயரியல், அனைத்திந்தியத் தமிழ் மொழியியற் கழகம், அண்ணாமலை நகர்.
 • அழகேசன் சு.,1991, இலக்கணப் பாதையில், சோபிதம் பதிப்பகம், நாகர்கோவில்.
 • …………….., 1996, இலக்கணச்சுவை, சுதாபதிப்பகம், தூத்துக்குடி.
 • …………….., 2007, இலக்கணப் பார்வைகளும் பதிவுகளும், சேகர் பதிப்பகம், சென்னை.
 • …………….., 2012, தொல்காப்பியக் கொள்கைகளும் தமிழ் இலக்கண வளர்ச்சியும், காவ்யா பதிப்பகம், சென்னை.
 • அழகேசன் சு. & வேல்மயில் த., 2009, இலக்கணத் தேடல்கள், காவ்யா பதிப்பகம், சென்னை.
 • இன்னாசி சூ., 2009, சொல்லியல், பாரி புத்தகப் பண்ணை, சென்னை.
 • சக்திவேல் சு., 2003, தமிழ் மொழி வரலாறு, மணிவாசகர் பதிப்பகம், சென்னை.
 • …, 2003, சொற்கள், மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம்.
 • சண்முகதாஸ் அ., 1982, தமிழ்மொழி இலக்கண இயல்புகள், முத்தமிழ் வெளியீட்டகம், யாழ்ப்பாணம்.
 • …, 2008, தமிழ்மொழி இலக்கண இயல்புகள், என்சிபிஎச், சென்னை.
 • சண்முகம் செ.வை., 1984, சொல்லிலக்கணக் கோட்பாடு, தொல்காப்பியம் – முதல்பகுதி, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.
 • …, 1986, சொல்லிலக்கணக் கோட்பாடு, தொல்காப்பியம் – இரண்டாம் பகுதி, அனைத்திந்தியj; தமிழ் மொழியியற் கழகம், அண்ணாமலைநகர்.
 • …, 1992, சொல்லிலக்கணக் கோட்பாடு, தொல்காப்பியம் – மூன்றாம் பகுதி, மணிவாசகன் பதிப்பகம், சென்னை.
 • …, 2001, இக்கால எழுத்துத் தமிழ், குமரன் பப்பிளி~ர்ஸ், சென்னை.
 • சுப்பிரமணியன் ச.வே., 1971, இலக்கணத் தொகை சொல், ஜெயகுமாரி ஸ்டோர்ஸ், நாகர்கோவில்.
 • பரமசிவம் கு., 1983, இக்காலத் தமிழ்மரபு, அன்னம் (பி) லிட், சிவகங்கை.
 • பொற்கோ, 1973, இலக்கண உலகில் புதிய பார்வை – தொகுதி 1, என்சிபிஎச், சென்னை.
 • …, 1981, இலக்கண உலகில் புதிய பார்வை – தொகுதி 2, என்சிபிஎச், சென்னை.
 • …, 1989, தமிழ் இலக்கணக் கோட்பாடுகள், ஐந்திணைப் பதிப்பகம், சென்னை.
 • …, 1995, இலக்கண உலகில் புதிய பார்வை – தொகுதி 3, என்சிபிஎச், சென்னை.
 • …, 2006, இக்காலத் தமிழ் இலக்கணம், பூம்பொழில் வெளியீடு, அடையாறு, சென்னை.

முனைவர் கி. சங்கர நாராயணன்

உதவிப் பேராசிரியர்

தமிழ்மேம்பாட்டுச் சங்கப்பலகைத் துறை

சென்னைப் பல்கலைக்கழகம்

மெரினா வளாகம், சென்னை – 600 005