தமிழிலக்கியத்தைப் பொறுத்தவரை இத்தனை வகை எண்ணிக்கைகளான இலக்கியங்கள்தான் உண்டு அல்லது படைக்கப்பட்டுள்ளதென அறுதியிட்டு வரையறுக்க இயலாது. இருப்பினும் பல்லாயிரக்கணக்கான நூல்கள் கிடைத்த போதிலும் அவற்றைக் கையிற்கிடைத்த, அழிந்து போன நூல்களென இருவகையாகப் பிரிக்கலாம். அதிலும் சுவடி வாயிலாகவே பெரும்வாரியான   இலக்கியங்கள் உருப்பெற்றன. அவை பாதுகாக்கப்படாததன் நிமித்தம் பல இலக்கியங்கள் மறைவு தினத்தைச் சூட்டிக்கொண்டன. இன்றும் சங்க இலக்கிய நூல்கள் உருப்பெற்று நம் கரங்களில் நிலைப்பதற்கு முழுமுதற்காரணம் உ.வே.சா எனினும் அது மிகையாகா. சி.வை.தா. போன்ற   ஆளுமைகளின் தளராது சோர்ந்துபோகாது  இடைவிடாது முயன்றதன் விளைவால் சங்க இலக்கியங்கள் தத்தம் பிறந்த தினத்தைத் தக்க வைத்துக் கொண்டன.  1500 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய இலக்கியங்களைத் தனியொருவனாகத் தேடி அலைந்து சேகரித்த நிலைப்பாடுகளை என் சரித்திரத்தில்’ படிக்கும்போது உ.வே.சா. தமிழ்மீதும் தமிழிலக்கியங்கள் மீதும் கொண்ட உன்னதமான அன்பிற்கு ஈடுயிணை ஏதுமில்லை என்பதை உணர முடிந்தது.

பல்வேறு காலக்கட்டங்களில் மனிதனின் வளர்ச்சிநிலை மாறும்போது இலக்கியத்தின் வளர்ச்சித் தன்மை மாற்றங்கொள்கின்றன. சமகாலங்களில் எவ்வகை இலக்கியங்கள் பேசப்படுகின்றதோ அதுவே இலக்கியங்களாகப் பிரதிபலிக்கப்படுகின்றன. நீதி வலிந்து பேசும் காலத்தில் அறஇலக்கியமும், சமயம் ஏத்திப் பேசும் காலங்களில் பக்தி இலக்கியமும், இதுபோல் சிற்றிலக்கியப் படையெடுப்பின் காலங்களில் உலா, தூது, பள்ளு, குறவஞ்சி, அந்தாதி, பிள்ளைத்தமிழ், சதகம் போன்ற இலக்கிய வகைகளும் தோன்றுவது இயல்பே. தற்போது கணினித்தமிழ் சார்ந்த இலக்கியங்கள் படையெடுப்பதுபோல அவ்வவ் காலங்களில் இவ்வாறு தோன்றுவது புதியதன்று.

ஆக, இலக்கியங்களைப் படைப்பவர், பாதுகாப்பவரென ஒவ்வொருவரும் போற்றப்படத்தக்கவர்களே. அவ்வகையில் அறியப்படாப் புலவர் வரிசையில் புலவர் இரா.பாண்டியன் பல சிற்றிலக்கியங்களை ஈன்றெடுத்துள்ளார். புலவரின் இலக்கியப் படைப்புகள் அச்சாக வெளிவந்துள்ளனவே தவிர அவரைப் பற்றியும் அவரின் படைப்புப் பற்றியும் முற்றிலும் பேசப்படவில்லையென அறிய முடிகிறது. இலக்கியத்தின் வாயிலாக விருந்தளித்த புலவரின் படைப்புகளைத் தமிழுலகம் அறிந்து ஆய்வுக்குட்படுத்த வேண்டுமெனும் நோக்கில் இக்கட்டுரை அமைகின்றது.

பிறப்பும் வளர்ப்பும்

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரிலிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள வெண்ணீர்வாய்க்கால் எனும் ஊரில் 1944ஆம் ஆண்டு பசுபதி – அழகம்மாள்    என்போர்க்கு ஒரே புதல்வனாகப் பிறந்தவர் இரா.பாண்டியன். தனது தந்தை கவிஞராக விளங்கிடினும் கவித்துறையில் முழு ஈடுபாடற்றவராகவும், மதுபழக்கமுடையவராகவும் திகழ்ந்ததால் தனது சிறிய தந்தை கூ.கா.இராமசாமி என்பவரால் 16 வயதில் தத்தெடுத்து மலேசியாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டார். தனது வாழ்க்கைத் துணைவியாக அத்தை மகள் வள்ளிமயில் என்பவரை 23ஆம் வயதில் திருமணம் செய்துகொண்டார்.

பினாங்கு செந்தமிழ்க் கலாநிலையத் தலைவர் முதுதமிழ்ப் பெரும்புலவர் தமிழவேள், தவத்திரு சுவாமி இராமதாசரை (கொளுந்தரை) அன்பு குருவாக ஏற்று இலக்கிய, இலக்கணங்களைத் தேடலோடு பயின்று வந்தார். இவருடைய பரம்பரையினர் புலவர்களாகயிருந்ததன் விளைவால் இளமை முதற்கொண்டே கவிதைத் துறையில் தன்னார்வமும் ஈர்ப்பும் தொற்றிக் கொண்டது. 1960களில் எழுத்துத்துறையில் காலடி வைத்தார். தொடர்ச்சியாக எழுத்துத் துறையில் மூழ்கி முத்தெடுக்கும் திறம் வயப்பட்டது. சுமார் பத்தாயிரம் பாடல்களை எழுதியும், நூற்றுக்கு மேற்பட்ட கவிதைப் போட்டிகளில் பங்கு கொண்டு எண்ணற்ற பொற்பதக்கம், ரொக்கம் எனப் பலவகையான பரிசுகளைப் பெற்றுள்ளார்.

நன்றி மறவாமை

     புலவரின் சிறிய தந்தை கூ.கா.இராமசாமி, தன்னைப் பினாங்கு அழைத்துச் சென்று படிக்க வைத்து உயர வைத்த நன்றிக்கடனை மறவாமலிருக்க தன்பெயருக்கு முன் இரா.பாண்டியன் எனத் தன்னை அழைத்துக் கொண்டார். இதனை அருள்மிகு கூத்தப்பெருமாள் அந்தாதி எனும் நூலில்

வஞ்சகர்க்கு முன்னென்னை

வாழவைத்த என்தெய்வம்

நெஞ்ச மிலார் முன்னென்னை

நிமிரவைத்த நல்லன்னை

செஞ்சொல்லார் சிற்றப்பா

                  திரு. ராமசாமிக்கே

அருஞ்சொல்லார் பனுவலிதை

ஆக்குகின்றேன் காணிக்கை

என வரும் பாடல்வழி உணரலாம். இதில் அந்நூலை தன் சிற்றப்பாவிற்குக் காணிக்கையாக சூட்டிருக்கிறேன் எனக் கூறியிருப்பது, புலவரின் நன்றிமறவா உள்ளத்தை வெளிப்படுத்துகின்றது.

புனைபெயர்கள்

புலவரவர் வள்ளி மணாளன்’, ’மதுரை மாறன் எனும் புனைபெயர்களில் பல்வேறு சிறுகதைகளையும், கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.

இதழ்களும் படைப்புகளும்

மலேசியாவில் வெளிவந்த நாளேடுகளான தமிழ்முரசு, தமிழ் நேசன், தமிழ் மலர் ஆகியவற்றில் இவரது படைப்புகள் வெளிவந்துள்ளன.

நிர்வகித்த பொறுப்புகள்

தமிழ்மீது அளவற்ற அவா கொண்டதின் நிமித்தம் தமிழ் இலக்கிய இயக்கங்களிலும் பல சமூக இயக்கங்களிலும் முக்கிய பொறுப்பேற்றுப் பணியாற்றியுள்ளார். அதுமட்டுமின்றி செந்தமிழ்க் கலாநிலையச் சிலாங்கூர் கிளைச் செயலராகப் பதவி வகித்துள்ளார்.

கவித்திறத்தால் பெற்ற பட்டங்கள்

புலவர் எண்ணற்ற கவிதைகளை எழுதி சமூகத்துடன் பயணித்துள்ளார். பல்வேறு இலக்கியக் கூட்டங்களில் கலந்தும் பேசியும் தமிழ்மொழி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்துள்ளார். பொற்பரிசுக் கவிஞர், கவிஞர்க்கோ, கவித்தென்றல், பைந்தமிழ்ப் புலவர், செந்தமிழ்க் கவிமணி, மகாகவி போன்ற பட்டங்கள் பெற்றுள்ளார்.

பிற புலவர்களின் புகழ்மொழிகள்

     அத்திப்பூ எனும் நூலுக்குப் பதிப்புரை வழங்கிய செந்தமிழ்க் கலாநிலையத்தார்,

’’கலாநிலையக் குடும்பத்தில் ஒருவரான அவர் பாவலராகவும், நாவலராகவும், சீரிய பணியாளராகவும் இருந்து ஆற்றிய சேவைகள் பெரிதும் புகழுக்குரியவையாகும், எந்தப் பிரச்சனையையும் கூர்ந்து நோக்கும் கூர்த்த மதியுடைய அவர் சமுதாயச் சிந்தனையுடைய கவிதைகளைப் படைப்பதில் கைதேர்ந்தவர்’’ எனவும், ’’தமிழ்க்கவிதை வானில் அவர் ஒரு ஒளிர்கின்ற நட்சத்திரம். தமிழ் கூறும் நல்லுலகில் தன் கவிதைத் திறத்தால் பலருக்கும் நன்கு அறிமுகமான இரா.பாண்டியன் அவர்கள் பூங்கொடி என்ற காவியத்தையும் தோரணங்கள், வரத விநாயகர் பிள்ளைத்தமிழ் என்ற நல்ல நூற்களையும் வெளியிட்டுத்தன் கவித்துவத்திற்கு முத்திரை பதித்தவர்’’

எனக் குறிப்பிட்டுள்ளனர் (அத்திப்பூ, ப.5).

அருள்மிகு கூத்தப் பெருமாள் அந்தாதி நூலுக்கு அணிந்துரை வழங்கிய முனியாண்டி

“அழகுத் தமிழ்நடையில் அவர் பாடியுள்ள அந்தாதி, கற்கண்டின் சுவை பயப்பதாகும் என்றால் மிகையாகாது. அந்தாதி கட்டளைக் கலித்துறையில் பாடுவதே சால்பென்ற வழிநின்று சீரிய கவிமலர்களை யாத்துள்ளார்’’

எனக் கூறியுள்ளார் (அருள்மிகு கூத்தப்பெருமாள் அந்தாதி ப.5).

அருள்மிகு வரத விநாயகர் பிள்ளைத்தமிழ் எனும் நூலிற்கு வாழ்த்து மொழி வழங்கிய கலா நிலையம் சார்ந்த வண்ணக் கவிஞர்களின் வாழ்த்து மொழியில்,

சித்தி விநாயகரின் சீர்பரவப் பேர்பரவப்

            பத்தியுடன் பாண்டியன்செய்த பாவமுது நித்திலமே!

கண்டார்க்கு வண்ணங் கனிந்தநிலா காவியஞ்செய்

            பண்டிதர்க்கு மின்பப் பலா

என மு.முனியாண்டியும்,

சீதக் குணத் திரளோன்

மாணவர்க்குள் செல்வக் குழந்தை

அருந்தமிழில் மாதவச் சித்தன்

எனக்கினிய

போதக்குழந்தை கவிவீர பாண்டியனின்

பிள்ளைத்தமிழ்

நாதத்தில் நல்ல நடையில் செந்தமிழின்

போதத்தில் நன்றெனவே போற்று’’

எனப் புஷ்பவேணியும்,

வள்ளலிற்கு வள்ளல் வரத விநாயகரின்

            பிள்ளைத் தமிழோ பெருந்தமிழாம் தொல்லுலகில்

            பாண்டியன் பேர் நிற்கும் பலகால் மனம்விரும்பி

            வேண்டியதும்கிட்டு விரைந்து

எனச் செந்துறைக் கவிஞர் கரு.முத்துவேலும்,

பிள்ளையார் மீதிலொரு பிள்ளைத் தமிழ்பாடி

            எல்லோரும்போற்ற இனிதளித்த வல்லகவி

            பாண்டியனும் பாண்டியனின் பைந்தமிழும் நம்முளத்தைத்

            தூண்டிவிடு மின்பச் சுடர்’’

எனச் செந்துறைக் கவிஞர் எஸ்.கே.வடிவேலும் வழங்கியுள்ளனர் (அருள்மிகு வரத விநாயகர் பிள்ளைத்தமிழ், பக்,9,10).

அருள்மிகு கருமாரி அம்மன் சதகத்திற்குச் சாற்றுக்கவி பாடிய இராமதாசர்

முந்து தமிழ்ச்சதகம் முற்றும் தெளிந்ததன்பின்

            சிந்தைக் கினியதாய்ச் செப்பினான் இந்த நறும்

            காலத்திற் கேற்ற தெனக் கற்ற தமிழ்ப் புலவர்

            ஞாலத்திற் கேற்பென்றார் நன்று!’’

எனும் வெண்பாவில் புலவரின் கவித்திறமையைப் போற்றியுள்ளார் (அருள்மிகு கருமாரி அம்மன் சதகம், ப,10).

இயற்றிய நூல்கள்

புலவரவர்கள் சிற்றிலக்கிய வகைகளான பிள்ளைத்தமிழ், சதகம், அந்தாதி, புகழ்மாலை, காவியமெனப் பல்வேறு நூல்களை இயற்றியுள்ளார். அவை:

 1. பூங்கொடி (காவியம்)
 2. அருள்மிகு வரதவிநாயகர் பிள்ளைத்தமிழ்
 3. அத்திப்பூ (காவியம்)
 4. கூத்தப்பெருமாள் அந்தாதி
 5. சாதுகுரு சுவாமிகள் புகழ்மாலை
 6. திருப்பாடல் திரட்டு (தொகுப்பு நூல்)
 7. அருள்மிகு கருமாரி அம்மன் சதகம்
 8. வாழவந்தம்மன் புகழ்மாலை
 9. தண்ணீர் மலையப்பன்
 10. திருப்புகழ்ச்சி மாலை
 11. கருப்பையன் புகழ்மாலை
 12. நன்றி மலர்கள்
 13. தோரணங்கள் (சமூக எழுச்சி நூல்)
 14. கண்கள் கண்டபோது (அச்சில்)

பூங்கொடி (காவியம்)

பினாங்கு செந்தமிழ்க் கலாநிலையத்தாரால் 1978ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட நூல் பூங்கொடி. 168 பக்கங்களைக் கொண்ட இந்நூலிற்கு சு.சாலமன் பாப்பையா மதிப்புரை வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இஃது காவிய நூலாதலின் இக்காவியத்திற்குக் கடவுள் வாழ்த்து, நதிவளம், இயற்கை வளம், பயிர்வளம், இளமைக்கனவு, நோய்க்கொடுமை, ஊழ்வினைப் பயன், அழுகை, தாலாட்டு, பொறுமை, வீரம், அமைதி என்கின்ற பல்வகை தலைப்புகளில் பலவித ஓசைகளோடு காவியத்திற்குரிய அத்தனை தன்மைகளைப் பெற்று விளங்குகின்றது.

இக்காவியமானது நாற்பது இயல்களைத் தாங்கி அறுசீர், எழுசீர், எண்சீர், விருத்தப்பாக்களாலும், கட்டளைக் கலித்துறை, அகவல், வெண்பா, வெண்டுறை முதலிய பாவினங்களாலும் படைக்கப்பட்டுள்ளது. இடம்/காலம் ஆகிய இரண்டிற்கும் தக்கவாறு பாடல்களை ஏற்படுத்தி உவமைகளைக் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. உவமை, தற்குறிப்பு, ஏற்றம், இயல்பு, விபரீதம் முதலிய அணிகளும் இடையிடையே ஒளிர்கின்றன.

இக்காவிய நூலிற்கு முதுதமிழ்ப் பெரும்புலவர் தமிழவேள் தவத்திரு சுவாமி இராமதாசர் (05.04.1978 பினாங்கு) அணிந்துரையும், செந்தமிழ்ப் புலவர்மணி வீ.கே.சுப்பிரமணியம் (15.12.1977 பினாங்கு) சாற்றுக்கவியும்  வழங்கியுள்ளனர்.

இக்குறுங்காவியம், 1974ஆம் ஆண்டு மலாயா தமிழ் எழுத்தாளர் சங்கம் நடத்திய குறுங்காவியப் போட்டிக்கு எழுதப்பட்டு, இரண்டாம் பரிசைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

ருள்மிகு வரதவிநாயகர் பிள்ளைத்தமிழ்

     பிள்ளைத்தமிழ் என்பது தமிழிலக்கியத்தில் வழங்கும் பிரபந்தநூல் வகைகளுள் ஒன்று. புலவர்கள் தாம் விரும்பிய தெய்வங்கள், புலவர் பெருமக்கள், ஆதீனகர்த்தர், அரசர், உபகாரிகள், அவர் அவர்கட்கு உகந்தவர்கள் ஆகியோரைக் குழந்தையாக உருவகித்து கற்பனை பல அமையப் பாடுவதாகும். இப்பிள்ளைத்தமிழ் வரதவிநாயகர் மீது பாடப்பட்டதாகும். நமது தாய்மொழி ஒரு தெய்வீக மொழியென்பதால் எண்ணற்றப் பாடல்கள் ஆன்மீகம் தொடர்பாகாவே வெளிவந்துள்ளன. அதைப்போலவே இந்நூலும் ஆன்மிகத்தை யொட்டியே அமைகின்றது.

பினாங்கு செந்தமிழ்க் கலாநிலையத்தாரால் 1988ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. காப்புப் பருவம், செங்கீரைப் பருவம், தாள்ப் பருவம், சப்பாணிப் பருவம், முத்தப் பருவம், வருசைப் பருவம், அம்புலிப் பருவம், சிற்றிற் பருவம், சிறுபறைப் பருவம், சிறுதேர் பருவம் எனப் பத்து பருவங்களில் இந்நூல் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நூலுக்குச் சாற்றுகவியைத் தமிழ்வேள் செந்தமிழ்ப் போராளி சுவாமி இராமதாசர் பாடியுள்ளார். கரு.சாத்தையா மலேசியா வாழ்த்துரையும், வீகே.சுப்பிரமணியம் (பினாங்கு), சைவமணி மு.முனியாண்டி (பினாங்கு), திருமதி புஷ்பவேணி, செந்துறைக் கவிஞர் கரு.முத்துவேல், செந்துறைக் கவிஞர் எஸ்.கே.வடிவேல், செந்துறைக் கவிஞர் வே.ஏசையா, செந்துறைக் கவிஞர் குருபத்திரத்னா சோலை முருகன் ஆகியோர் வாழ்த்து மொழி பாடியுள்ளனர்.

அத்திப்பூ 

பினாங்கு செந்தமிழ் கலாநிலையத்தாரால் 1990ஆம் ஆண்டு வெளிவந்த நூல் அத்திப்பூ. இஃது ஒரு காவியம். இது 506 பக்கங்கள் நான்கு காண்டங்கள்  (மலர்ச்சிக் காண்டம், சூழ்ச்சிக் காண்டம், திருப்பக் காண்டம், மறுமலர்ச்சிக் காண்டம்) ஐம்பத்தைந்து படலங்கள் ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பத்து நான்கு (1984) பாடல்கள் அமைந்துள்ளது. எளிய நடையிலும் ஓரளவு கற்றோர் யாவரும் படித்தவுடன் புரியுமளவிற்கு புனையப்பட்டு ஆசிரிய விருத்தத்தில் எழுதியுள்ளார். சமூக உணர்வுடன் சமூக சீர்திருத்த நோக்கோடு படைக்கப்பட்டுள்ள அதே வேளையில், இலக்கிய இன்பம் அதனால் சிதைவு படாதவகையில் சிறப்பாக அமைந்துள்ளன.

காப்பியப் பெயரும் பொருத்தமும்

இற்றைக் காலங்களில் நாட்டின் மீதான அக்கறை மக்களிடம் மலிந்தும் நலிந்தும் கிடக்கின்றன. இக்காவியத்தில், அரசன் மகளைக் காதலித்த குற்றத்திற்காகக் கடுமையான தண்டனைகள் பல பெற்றபோதும் மனஞ்சலியாது, நாட்டைக் காக்கக் தனது பணி முக்கியவாய்ந்ததென்று கருதி, எவரும் அழைக்காது தாமகவே முன்வந்து, உதவிகள் பலபுரிந்து, பகைவர்களைத் துவம்சம் செய்து பெருவீரனாகக் காப்பியத்தலைவன் படைக்கப்பட்டுள்ளான். அவ்வீரனும் மருத்துவக் குடியில் தோன்றியுள்ளான். மனிதப் பண்புகள் மறைந்து வரும் நாளில் அதில் திறனுடையவனாய் முன்நிற்கின்றான். இதனை எடுத்துரைக்கும் முகமாக,

நாடது கடத்தப் பட்ட

                        கைதிநா னான போதும்

                  நாடதுமென்றன் நாடே

                        நான்வேறு நாட்டா னன்று!

      `           மாடது மேயக் கூட

                        வக்கில்லா நிலமா னாலும்

                  நாடதை மாற்றாங் கையில்

                     நல்கிடல் ஆண்மை யன்றே!

எனும் அடிகள் அமைந்துள்ளன. இக்காவியத்தில் காப்பியத் தலைவனின் சிந்தனையோட்டங்கள் நாட்டுப்பற்றின் ஆழத்தைப் பிரதிபலிக்கின்றன. அதுமட்டுமின்றி பல்கலை வித்தனாக, அவற்றைப் பலருக்கும் கற்பிக்கும் கலைஞனாக, மிக உயர்ந்த பண்பாளனாகப் படைக்கப்பட்டு அவனது வீர வரலாற்றை எடுத்துரைப்பதாக இருப்பதால் இக்காவியத்தின் பெயர் ’அத்திப்பூ என அமைந்திருப்பது ஏற்புடையதே.

காப்பியத் தலைவனின் அரச மகளை காதலித்தக் குற்றத்திற்காகக் கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்ட செய்திகள் தென்படுகின்றன. இக்காவியத்துடன்  நாட்டுபுறத் தெய்வமான மதுரைவீரன் கதையில் காணலாகும் நிகழ்வுகளை பொருத்திப் பார்க்க முடிகின்றது. மதுரை வீரன் கதை மன்னனின் மகளைக் காதலித்தது குற்றமெனக் கூறி மாறுகால் மாறு கை வாங்கப்பட்டதை உணர்த்துகின்றது. மதுரை வீரனும் நாட்டுப் பற்றுமிக்கவனாய்த் திகழ்ந்ததால் இரவு நேரங்களில் குதிரையில் சென்று நாட்டை அச்சுறுத்திய கள்வர்களை ஒழித்தார். ஆக மதுரை வீரனின் தாக்கம் அத்திப்பூவில் மலர்கிறது எனலாம்.

இக்காவியத்திற்குச் சிறப்புப் பாயிரம் தமிழவேள் முதுதமிழ்ப் பெரும்புலவர் இராமதாசரால் வழங்கப்பட்டுள்ளது. ஆசியுரையைக் குன்றக்குடி அடிகளார் வழங்கியுள்ளார். மேலும் ஆசியுரை வழங்கிய ஆண்டிலிருந்து நூலானது எட்டு ஆண்டுகள் கழித்தபின்னரே இந்நூல் வெளிவந்துள்ளது என்பதை அறியமுடிகிறது.

இக்காவியத்திற்கு அணிந்துரை சி.பாலசுப்பிரமணியனும் (துணைவேந்தர் தமிழ்ப் பல்கலைக்கழகம்), கே.தனுஷ்கோடியும் (ஆசிரியர் முஸ்லீம் உயர்நிலைப்பள்ளி, முதுகுளத்தூர்) வழங்கியுள்ளனர். சாற்றுக்கவிகளை வீ.கே.சுப்பிரமணியம் (பினாங்கு), பி.எம்.அபுபக்கர் (மீசல்), வீ.ஏசையா (பினாங்கு) போன்றோர் வழங்கிச் சிறப்பித்துள்ளனர்.

கூத்தப்பெருமாள் அந்தாதி

அந்தாதி எனப்படுவது யாப்பியலில் ஒரு தொடை வகையாகும், அந்தாதி எனும் சொல் முடிவு என்னும் பொருள் தரும். அந்தம், தொடக்கம் என்னும் பொருள்படும். ஒரு பாடல் முடிவிலுள்ள எழுத்து, அசை, சீர், சொல், அடி அடுத்து வரும் பாடலின் தொடக்கமாக அமையும் பாடல்களால் ஆனது அந்தாதிச் செய்யுளாகும். அடுத்தடுத்து வரும் அடிகள் அந்தாதியாக அமையும் போது அது அந்தாதித் தொடை எனப்படும். அந்தாதி அமைப்பு பாடல்களை வரிசையாக மனப்பாடம் செய்வதற்கு எளிமையாக இருக்குமென்பது குறிப்பிடத்தக்கதாகும்.

பினாங்கு செந்தமிழ்க் கலாநிலையத்தாரால் 1993ஆம் ஆண்டு  வெளியிடப்பட்ட நூல் அருள்மிகு கூத்தப்பெருமாள் அந்தாதி. 58 பக்கங்கங்களைக் கொண்டு திகழும் இந்நூல் பாடல்கள் அனைத்தும் கட்டளைக் கலித்துறையால் அமைந்துள்ளது. அந்தாதித் தொடையால் ஆன நூறு பாடல்களும், பின் வருகைப் பதிகம் என்ற பதினொரு பாடல்களும் அதனுள் அடங்கியுள்ளன.

நூல் எழுந்ததற்கான காரணம்

கூத்தப்பெருமாள் என்பது புலவரின் குலதெய்வம். இக்குலதெய்வமானது முதுகுளத்தூர் அருகிலமைந்த புளியங்குடி என்னும் சிற்றூர்க் கருகில் உள்ளது. கூத்தப்பெருமாள் பெரும்பாலன் எனும் பெயரிலும் அழைக்கப்படுகின்றது. கவிஞர் நோய்வாய்ப்பட்டு இருந்தபோது இந்நூல் தோன்றியது என்பதை,

அண்மையில் நோய்வாய்ப்

            பட்டிருந்த நிலையில் அருள்கொண்ட

            டாவேசித்து வருதி செய்து,

            கட்டளைப் பிறப்பித்துப் பாடப்

            பாலித்த படி இந்த

            அந்தாதிப் பனுவலைப் பாடும்

            பேறு கிட்டியது

            இளமைக் காலந் தொட்டே

            எங்கள் குலதெய்வம்

            கூத்தப் பெருமாள் மீதிற்

            பாமாலை சூட்ட வேண்டும்

            என்று என்னுள் ஆர்த்தவேட்கை

            இதன்வழி நிறைவுறுகிறது

எனும் பா மூலம் தெளிவுபடுத்துகின்றார்.

அந்தாதி கட்டளைக் கலித்துறையில்தான் பாடவேண்டுமென்ற மரபிற்கேற்ப  பாடலைக் கையாண்டுள்ளார். கூத்தப் பெருமாள் அந்தாதியுடன் கூத்தப்பெருமாளுக்கு பெரும்பாலன் என்ற ஒரு பெயரும் இருப்பதால் பெரும்பால வருகைப் பதிகம் என்ற ஒன்றையும் இணைத்துப் பாடியுள்ளார்.

இந்நூலுக்கு அழகு சேர்க்கும் வண்ணம் சைவமணிக் கவிஞர் மு.முனியாண்டி (பினாங்கு) அணிந்துரையும், செந்தமிழ்க் கலாநிலையம் பதிப்புரையும் வழங்கியுள்ளது.

சாதுகுரு சுவாமிகள்  புகழ்மாலை

பினாங்கு செந்தமிழ்க் கலாநிலையத்தாரால் 1994ஆம் ஆண்டு வெளிவந்த நூல் சாதுகுரு சுவாமிகள்  புகழ்மாலை. காலமளித்த கனி என்ற பெயரில் அபிராமம் குடமுருட்டி ஸ்ரீமத் (சத்) சாது குருமார்களின் மீது பாடிய புகழ் மாலையே இந்நூல். முப்பத்தாறு பக்கங்களில் காணலாகும் இந்நூலானது, காப்பு, முருகர் துதி, சத்தி துதி, சிவன் துதி, ஐயப்பன் துதி, தமிழே துணை எனும் தலைப்புகளில் காணப்படுகின்றன. முப்பது பாடல்களில் சாதுகுரு சுவாமிகளைப் புகழ்ந்து பாமாலையாகப் பாடியுள்ளார்.

இந்நூலுக்குச் சாற்றுக்கவி வீ.கே.சுப்பிரமணியமும், கோதவனும் (மலேசியா) பாடியுள்ளனர்.

திருப்பாடல் திரட்டு

பினாங்கு செந்தமிழ்க் கலாநிலையத்தாரால் 1994ஆம் ஆண்டு வெளிவந்தத நூல் திருப்பாடல் திரட்டு. இஃது ஒரு தொகுப்பு நூல். இந்நூலை இயற்றியவர் கா.கூ.வேலாயுதப்புலவர். இந்நூலாசிரியரின் பேரன் பாண்டிப் புலவரால் தொகுத்து 104 பக்கங்களில் காணலாகின்றன. நூலாசிரியர் கா.கூ.வேலாயுதப்புலவரின் காலம் பத்தொன்பதாம் நூற்றாண்டு பிற்பகுதியும் இருபதாம் நூற்றாண்டு முற்பகுதியும் ஆகும். பாஸ்கர சேதுபதி (1868-1903) சமஸ்தானத்தில் பரிசு பெற்ற புலவர்  வாழ்ந்த காலத்தைச் சார்ந்தவர்.    .

முருகக் கடவுளின் பெருமைகளையும், ஒவ்வொரு ஊரிலும் இடம்பெற்ற  முருகக் கடவுள் பற்றி பாடப்பெற்ற பாடல்களும் இந்நூலில் இடம் பெறுகின்றது, குறிப்பாக வரத விநாயகர் (வெண்ணீர்வாய்க்கால்), தென்கொடுமளூர் குமரக்கடவுள், படைவீட்டு காவடிச்சிந்து, சீரலைவாய்ச்சிந்து, பழனி, கழுகுமலை, கதிர்காமம், திருக்கொடுமளூர், திருக்குன்றக்குடி, சிவசுப்ரமணியம், நவரசக்கீர்த்தனை, திருச்செந்தூர் திவ்விய வழிநடைச்சிந்து போன்ற தலங்களில் அமைந்துள்ள கடவுளைப் பாடப்பட்ட பாடல்கள் இடம்பெற்றுள்ளன. கணபதி, சிவலிங்க பந்தம், முருகன் ரத பந்தம் ஆகிய பெயர்களில் சீட்டுக்கவியை வரைபடத்தின் மூலம் சுட்டியுள்ளார்.

இந்நூலுக்குச் சாற்றுக்கவி தெய்வம்நாயகம் பிள்ளையும் (சித்திரங்குடி), துரைச்சிங்கம்பிள்ளையும் (கடலாடி சமஸ்தான வித்துவான்), வித்வ சிரோன்மணி காயாம்பு ஐயங்காரும், அண்ணாச்சாமி ஐயங்காரும் (பெருங்கருணை), வீ.கே.சுப்பிரமணியமும் (பினாங்கு) வழங்கியுள்ளனர்.

வாழ்த்துப்பா கோதவனும் (பரமக்குடி) இரா.பாண்டிப்புலவரும் வழங்கியுள்ளனர்.

அருள்மிகு கருமாரி அம்மன் சதகம்

பினாங்கு செந்தமிழ்க் கலாநிலையத்தாரால் வெளிவந்த நூல் அருள்மிகு கருமாரி அம்மன் சதகம். 1995 ஆம் ஆண்டு வெளிவந்த இந்நூலானது 96 பக்கங்களைக் கொண்டு திகழ்கின்றது.

சதகம் என்பது தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் எனவும் வடமொழியில் பிரபந்தம் எனவும் அழைக்கப்படும் பாட்டியல் வகைகளுள் ஒன்று. தமிழிலக்கியத்தில் சொல்லப்படும் அகப்பொருள் அல்லது புறப்பொருள் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை அடிப்படையாகக் கொண்டு நூறு பாடல்களால் பாடப்படுவதே சதகம் என்பது பாட்டியல் நூல்கள் சொல்லப்படும் இலக்கணம். சதகம் என்பது நூறு எனப் பொருள்படும் வடமொழிச் சொல் ஆகவே நூறு பாடல்களைக் கொண்ட சிற்றிலக்கியம் சதகம் எனப்பட்டது

நூல் தோன்றிய விதத்தினை இயம்புகையில்

அருள்மிகு கருமாரி

                  அம்மன்மேல் ஒருநூல்

                  பாடவேண்டும் என்ற

                  எண்ணம் இதயத் தடாகத்தில்

                  அரும்பில் பல ஆண்டுகள்

                  ஆசியும்,

                  மலராக ஏழு ஆண்டுகள்

                  காத்திருக்க வேண்டியதாயிற்று

எனும் அடிகளில் விளக்குகிறார்.

இந்நூல் தொடக்கத்தில் காப்பு, வேலவர் துதி, கலைமகள் துதி, அலைமகள் துதி, சத்தி துதி, நாரணன் துதி, பாண்டிமுனி ஐயா துதி, தமிழ் வாழ்த்து, ஞானகுருநாதர் வாழ்த்து, குருமகான் போற்றி, அவையடக்கம் எனும் தலைப்புகளில் ஒவ்வொரு பாடல்களைப் பாடியுள்ளார். அதன்பின் கருமாரி அம்மனை வைத்து நூறு பாடல்களை எழுதியுள்ளார். இந்நூலானது சதக இலக்கியத்தின் தன்மை மாறாமல் அமையப் பெற்றிருப்பது புலவரின் கவிப்புலமையை பறைச் சாற்றுகின்றது.

இந்நூலுக்கு அணிந்துரை மு.முனியாண்டியும் (பினாங்கு), சாற்றுக்கவி ஏ.எம்.என்.இராமதாசரும் (பினாங்கு), கோதவனும் (பரமக்குடி) வழங்கிச் சிறப்பித்துள்ளனர்.

வாழவந்தம்மன் புகழ்மாலை

வெண்ணீர் வாய்க்கால் கவிமணி பதிப்பகத்தாரால் வெளிவந்த நூல் வாழவந்தம்மன் புகழ்மாலை.  2000ஆம் ஆண்டு வெளிவந்த இந்நூலானது 63 பக்கங்களாகத் திகழ்கிறது. வெண்ணீர்வாய்க்கால் என்ற நல்லூரின் கண் எழுந்தருளி இருக்கின்ற வாழவந்தாள் மீது அலங்கார நடையில் மாலையாகத் தொடுத்துள்ளார்.

விநாயகர் துதி, கருப்பையன் துதி, சாஸ்த்தா துதி, தமிழ் வாழ்த்து, எம்மான் சாது சுவாமிகள் துதி, குருவணக்கம் எனும் தலைப்புகளில் பாடல் பாடியுள்ளார்.

இந்நூலுக்கு வாழ்த்துப்பா பண்டரிநாத இராக்காயி அம்மாள் குடும்பத்தினரும், கோ.தேவேந்தினார் – இலட்சுமியம்மாளும், கவிஞர் கோவதனும் பாடியுள்ளனர்.

தண்ணீர் மலையப்பன், திருப்புகழ்ச்சி மாலை, கருப்பையன் புகழ்மாலை, நன்றி மலர்கள், தோரணங்கள் (சமூக எழுச்சி நூல்) போன்ற நூல்கள் கிடைக்கப்பெறவில்லை புலவரின் நூல்கள் அனைத்தும் ஆய்வுகுட்படுத்துமளவிற்கு உள்ளன. குறிப்பாக அத்திப்பூ  எனும் காவியத்தை முனைவர்பட்ட ஆய்விற்கும், பூங்கொடி எனும் நாவல் ஆய்வியல் நிறைஞர் பட்ட ஆய்விற்கும் மேற்கொள்ளுதல் வேண்டும். அவ்வாறு கையாளும்போது இலக்கியத்தின் தன்மையையும், புலவரின் பன்முகப் படைப்பாகத் திறனையும் வெளிக்கொணர வகைசெய்யும்.

முகவை மாவட்டத்தில் பிறந்து இலக்கியத்தின் மீது கட்டுக்கடங்கா ஆர்வத்தாலும், கவித்திறன் வழியாக மலேசிய கவியுலகில் தனக்கென்றோர் தனி இடத்தைப் பிடித்துக் கொண்டார். இதனால் பல்வேறு தமிழறிஞர்களின் நட்புறவு பெற்றுச்சிறந்துள்ளார். அதுமட்டுமின்றி பல்வேறு அரசியல் தலைவர்களுடனும் நெருங்கிப் பழகியுள்ளார்.

2007ஆம் ஆண்டு தனது 63ஆம் அகவையில் மலேசிய மண்ணில் புலவரவர்களின் உயிர் பிரிந்தது. அவரது உடல் பல்வேறு தமிழறிஞர்கள், அரசியல் தலைவர்களின் மெளன அஞ்சலியுடன் அடக்கம் செய்யப்பட்டது. அவரின் உடல் அமைதியாய் கிடத்தியிருந்தாலும் அவர் விட்டுச் சென்ற படைப்புகள் இன்றளவும் முணுமுணுத்துக் கொண்டிருக்கின்றன.

தகவலாளி

புலவரின் மனைவி: பா.வள்ளிமயில்

புலவரின் மகன்: பா.வெற்றிவேல் பாண்டியன்

துணை நூற்பட்டியல்:

 • பாண்டியன்.இரா, அத்திப்பூ,1990, செந்தமிழ்க் கலா நிலையம், பினாங்கு.
 • பாண்டியன்.இரா, அருள்மிகு கருமாரி அம்மன் சதகம், 1995, செந்தமிழ்க் கலா நிலையம், பினாங்கு.
 • பாண்டியன்.இரா, அருள்மிகு கூத்தப்பெருமாள் அந்தாதி, 1993, செந்தமிழ்க் கலா நிலையம், பினாங்கு.
 • பாண்டியன்.இரா, பூங்கொடி, 1978, செந்தமிழ்க் கலா நிலையம், பினாங்கு.
 • பாண்டியன்.இரா, அருள்மிகு வாழவந்தம்மன் புகழ்மாலை, 2000, கவிமணி பதிப்பகம், வெண்ணீர் வாய்க்கால், முதுகுளத்தூர்.
 • பாண்டியன்.இரா, அருள்மிகு வரதவிநாயகர் பிள்ளைத்தமிழ், 19988, செந்தமிழ்க் கலா நிலையம், பினாங்கு.
 • வேலாயுதம்.கா,கூ, பாண்டியன்.இரா (தொ.ஆ), 1994, செந்தமிழ்க் கலா நிலையம், பினாங்கு.
 • விக்கிப்பீடியா
 • மதுரை வீரன் கதை (பிற செய்திகள் கிடைக்கப் பெறா)
 • google.com

பின்னிணைப்பு

புலவர் பரம்பரை

பாண்டிப் புலவர்

 

பசுபதி (தந்தை)

 

 வேலாயுதப் புலவர் (தாத்தா)

 

கூத்தப்பெருமாள் பண்டிதர் (தந்தையின் தாத்தா)

 

காயாம்பு பண்டிதர் (தாத்தாவின் தந்தை)

 

 

 

சே.முனியசாமி

தமிழ் உதவிப் பேராசிரியர்

ஜெ.பீ, கலை அறிவியல் கல்லூரி

 ஆய்க்குடி, தென்காசி.