பாண்டிய நாட்டுத் தொன்மை

தமிழகத்தின்தென்புலம்என விளங்கிய ஆட்சிப் பகுதிபாண்டிய மண்டலம்என அழைக்கப்பெறுகிறது. பாண்டிய மண்டலத்தைப் பன்னெடுங்காலம் ஆண்ட பாண்டியர்கள், படைப்புக் காலந்தொட்டு மேம்பட்டு வரும் தொல்குடியினர் என வரலாறு புலப்படுத்துகின்றது. இதனைப் பின்வரும் கருத்து விளக்கும்.

வடமொழியாளர் ஆதிகாவியமெனக் கூறும் வால்மீகி இராமாயணத்திலும் கி.மு.நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த காத்யாயனர் நூலிலும் பாணினி வியாகரணத்திற்கு வரைந்த வாத்திகம் என்ற உரையிலும் இலங்கையின் வரலாறு கூறும் பண்டைய நூலான மகாவம்சத்திலும் அசோகப் பெருவேந்தனின் கல்வெட்டிலும் மெக்சுத்தனீசின் குறிப்புகளிலும் காணப்பெறும் பாண்டியர் குறித்த செய்திகள் அவர்தம் தொன்மையை மெய்ப்பிக்கும் (தமிழ்நாட்டு வரலாறு பல்லவர் பாண்டியர் காலம், 1990:401).

திருவாசகத்தில் மாணிக்கவாசகர் பாண்டிய நாட்டைப்பாண்டிய நாடே பழம் பதிஎனக் கூறுகின்றார். இப்பாண்டிய நாட்டில் தமிழ்மொழி செழித்து வளரப் பலர் பங்காற்றியுள்ளனர். அதனால்செந்தமிழ் நாடுஎன்றும் அழைக்கப்பட்டது.

பாண்டிய நாட்டின் எல்லை

பாண்டிய நாட்டின் நிலப்பரப்பானது கிழக்கிலும் தெற்கிலும் கடல்பரப்பு எல்லையாகவும் மேற்கு எல்லையில் மேற்குத்தொடர்ச்சி மலையும் வடமேற்கில் கொங்குநாடும் வடகிழக்கில் புதுக்கோட்டையும் வடக்கில் வெண்ணாறு வரையும் பரவியிருந்தது. அதனால் பாண்டி மண்டலம் எனப்படுவது இன்றைய மதுரை, இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல், திருநெல்வேலி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களின் வெள்ளாற்றுத் தென்பகுதியினையும் ஏறக்குறையக் கொண்டிருந்தது என அறியமுடிகிறது.

பாண்டியரின் ஆட்சிப் பரப்பு

மன்னர்கள் தம் ஆற்றல் வலிமையால் படையெடுத்துத் தமக்குச் சொந்தமான பெயர்களை நாட்டி ஆட்சி செய்துள்ளனர். முற்காலப் பாண்டியர் காலத்திற்கு முன்பே பாண்டிய நாடு எனவும் அதன்பின்பு சோழர் காலம் முதல்இராசராச வளநாடு’, ‘இராசராச மண்டலம்’, ‘இராசராசப் பாண்டி நாடுஎனவும் பெயர் பெற்ற போதிலும்பாண்டிய நாடுஎன அழைத்து வந்தனர். இரண்டாம் இராசசிம்மன் முதலானோர் காலத்தில் சோழ மண்டலம், தொண்டை மண்டலம், பாண்டிய மண்டலம் போன்றவை பாண்டியர் ஆட்சிக்குட்பட்ட பகுதிகளாய் விளங்கின. காலப்போக்கில் மன்னர்களின் படையெடுப்பு, வெற்றி, தோல்வி ஆகிய காரணங்களினால் முற்றிலும் மாற்றப்பட்டது. பலர் அரசாட்சி செய்தனர். தற்போது பாரதம் முழுதும் மக்களாட்சி முறை நிலவுகிறது. இருப்பினும் இம்முறைக்கு முந்தைய நிலை சேதுபதி மன்னர்களால் ஆட்சி செய்யப்பட்டுள்ளது. இதுமன்னராட்சியின் இறுதிநிலையாகும்.

இராமநாதபுரம் மாவட்டம்

தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் இராமநாதபுரம் மாவட்டம் மிகப்பெரிய மாவட்டமாகும். இது இந்திய தீபகற்பத்தின் கிழக்குக் கடற்கரையோரத்தில் கிழக்கே பாக்ஜலசந்தியும் மேற்கே மன்னார் வளைகுடாவும் சூழ அமைந்துள்ளது. இம்மாவட்டத்தின் கடற்கரை ஓரம் 290 கி.மீ.ஆகும். இத்தகைய எல்லைகளைத் தாங்கி நிற்கும் இம்மாவட்டமானது தமிழ்நாட்டில் வரலாற்றுச் சிறப்புமிக்க மாவட்டமாகும். பல்வேறு புலவர் பெருமக்கள் வாழ்ந்த மாவட்டமாகவும் தமிழ்மொழியும் இலக்கியங்களும் வளமையடைவதற்கு மாட்சிமையடைந்த மாவட்டமாகவும் திகழ்ந்துள்ளது. காலப்போக்கில் (வரலாற்றுப் போக்கில்) தன்னை இணைத்துக் கொள்ளாததால் மனிதகுல உணர்வு, சாதி போன்ற காரணங்களினால் பின்தள்ளப்பட்டுப்பின்தங்கிய’, ‘வறட்சி மாவட்டம்’, ‘கலவரபூமி’, ‘சாதிச்சண்டைகளின் பிறப்பிடம்’, ‘வானம் பார்த்த பூமிஎனும் பெயர்களைத் தற்போது தாங்கிக் கொண்டிருக்கிறது. ஏறக்குறைய 113 ஆண்டுகளுக்கு முன்பு இம்மாவட்டம் பேரும் புகழும் அடைந்து விளங்கியதற்குச் சான்றுகள் பல உள்ளன. அயலக வாணிபம், இலக்கியம், மொழி வளர்ச்சி, கொடைத்தன்மை, வீரம், போர்முறை, ஆட்சி புரியும் தன்மை போன்ற பல தனித்தன்மைகளில் விளங்கியதை வரலாற்றுத் தரவுகள் மூலம் அறியமுடிகின்றது. தற்போதைய இராமநாதபுரம் மாவட்டத்தைச்சேது நாடுஎன அழைப்பர். சேரநாட்டின் வரலாற்றையும் சேதுபதி மன்னர்களைப் பற்றியும் முற்காலத்தில் சேரமறவர், சோழ மறவர், பாண்டிய மறவர் என மூவேந்தர்களின் வெற்றித் தொழில்களுக்கும் குறுநில வேந்தராய்ப் போர்த்துணைவராய் விளங்கியுள்ளார்கள் என்பதை இலக்கியச் சான்றுகள் பகர்கின்றன. அதுமட்டுமில்லாது சேதுநாட்டில் தமிழ் மொழியும் மொழிப்புலவர்களும் செழித்தோங்கி வளர முக்கிய மன்னர்களாகச் சேதுநாட்டு மன்னர்கள் திகழ்ந்துள்ளனர். அவற்றைச் சுட்டிக்காட்டுவதாக இக்கட்டுரை அமைகின்றது (இக்கட்டுரையில் இராமநாதபுரம் என்ற சொல்லாடலுக்குப் பதிலாகச் சேதுநாடு எனப் பயன்படுத்தப்படுகிறது).

சேதுநாடு

இராமநாதபுரம் மாவட்டத்திற்குப் பல பெயர்கள் உண்டு. சேதுநாடு, புண்ணிய நாடு, சிரிம்பினிநாடு, செம்பிநாடு, செம்பிநாட்டு மறவர், செவ்விருக்கை நாடு, கீழச்செம்பியநாடு, ராசேந்திர மங்கலை நாடு, மங்களநாடு, மறவர் நாடு, பசும்பொன் மாவட்டம், முகவை மாவட்டம் எனப் பல பெயர்கள் உள்ளன.

அயல்நாடுகளில் சேதுநாடு எனும் பெயர் சுட்டப்பெறாமல் பிறிதொரு பெயரில் அறிமுகமாகியிருந்தது. பண்டைய எகிப்தியப் பயணி ஒருவர் (Cosmos Indico Plensis 530-550 AD) தமிழ்நாட்டில்மாறல்லோபகுதியில் இருந்து சங்கு நிறைய ஏற்றுமதியானதாகக் குறிப்பிட்டுள்ளார்.

யூல் என்ற அறிஞர்மாறல்லோஎன்பது மறவர்நாடு (அதாவது சேது நாடு) என்பதன் மரூஉ எனச் சீனமும் அதற்கான வழியும் எனத் தமது நூலில் குறிப்பிட்டுள்ளார். கிறித்துவ நற்பணி மன்றத்தைச் சேர்ந்த ஏசுசபைப் பாதிரியார்கள் தங்கள் தலைமையிடத்திற்கு ஆண்டுதோறும் அனுப்பிய ஆண்டறிக்கைக் கடிதங்களில் இப்பகுதியில் பணியாற்றிய இடம், தேதி பற்றிக் குறிப்பிடும்போது இடம் என்பதில்மறவா’ (MARAVA) என்றே எழுதியுள்ளனர். (மனோகரன்.மீ., கிழவன் சேதுபதி, .23)

ஆறுகளும் தீவுகளும்

சேதுநாட்டில் வைகையாற்றுடன் ரகுநாதக் காவேரி என்ற குண்டாறு, நாராயணக் காவேரி, கிருதமால், கோட்டக்கரை, விருசலை, பாம்பாறு, தேனாறு, மணிமுத்தாறு, வெள்ளாறு முதலிய சிற்றாறுகளும் ஓடுகின்றன. இந்நாடு பத்துக்கும் மேற்பட்ட ஆறுகளையும் பதினைந்திற்கும் மேற்பட்ட தீவுகளையும் கொண்டதாக விளங்கியுள்ளது. இதனை

 இராமேசுவரம், குந்துக்கல், பள்ளிவாசல், முயல்தீவு, பூமறிச்சான், முள்ளித்தீவு, மணலித்தீவு, வாலித்தீவு, ஆப்பத்தீவு, நல்ல தண்ணீர்த்தீவு, உப்புத்தண்ணீர்த்தீவு, குருசடைத் தீவு உள்ளிட்ட 16 தீவுகளையும் கொண்டது சேதுநாடு (மனோகரன்.மீ., கிழவன் சேதுபதி, .23)

எனவரும் கருத்துவழி அறியலாம்.

பாண்டியர் சோழர் விஜயநகர மன்னர்களுக்குப் பிறகு சேதுபதி வம்சம் சடைக்கத்தேவர் (1604-21.) ஆட்சியிலிருந்து தொடங்குவதாக வரலாறு தெரிவிக்கின்றது. சோழர்கள், சமணர்கள் ஆகியோர் வாழ்ந்ததற்கான வரலாற்றுச் செய்திகள், கல்வெட்டு, காசுகள், ஊர்ப்பெயர்கள் மூலம் கிடைக்கின்றன. இராமநாதபுரம் மாவட்டம் முழுமையும் பாண்டிய நாட்டின் பகுதியாக விளங்கிய பொழுதிலும் ஏறக்குறைய முன்னூறு ஆண்டுகள் சோழப் பேரரசின் ஆட்சிக்கு அடங்கிய நாடாகக் கி.பி.919 முதல் இருந்து வந்துள்ளது. ஆகச் சோழ, பாண்டியர்களின் ஆட்சிக்கு அடங்கிய நாடாக இருந்தாலும்சேதுநாடு,’ சங்ககாலம் முதல் புகழ்பெற்று விளங்கியது என்பதற்குச் சான்றுகள் கிடைக்கப்பெறுகின்றன.

எளிய மக்கள் தங்களது அயராத உழைப்பினாலும் தன்னலமற்ற தொண்டினாலும் பணிவினாலும் படிப்படியாகப் படைவீரர், படைத்தலைவர் என உயர்ந்து இறுதியில் குறுநிலப் பகுதிகளின் மன்னர்களாகவும் ஆக முடியும் என்பதை மெய்ப்பித்துக் காட்டியவர்கள் மறவர் சீமையினர். தமிழகச் சிற்றரசர் மரபினர்களில் இவர்கள் மிகவும் குறிப்பிடத்தக்கவர்கள். வேளிர், மலையமான்கள், அதியமான்கள், தொண்டைமான்கள், முத்தரையர், இருக்குவேளிர், வானாதிராயர்கள் எனத் தமிழகம் பல சிற்றரசு மன்னர்களைக் கண்டுள்ளது. இந்திய வரலாற்றில் போர்வழியிலன்றி ஆன்மிக நெறியில் நின்று இந்தியா முழுவதிலும் புகழ்படைத்த மரபினர் சேதுபதி மரபினர் (கமால்.எம்.எஸ்., சேதுபதி மன்னர் வரலாறு, 2003:IV அணிந்துரை).

எனக் கோ.விசயவேணு கோபால் கூறுகின்றார்.

இவர் தொன்றுதொட்டே தமக்கியல்பாயுள்ள வீரச்செயலாலும் வில்வாள் முதலாய படைத்தொழில் வலியாலுமே தம்முயிர் வாழ்தலிற் சிறந்த தமிழ்நாட்டு மறவர் குடியினராவர் (இராகவையங்கார்.இரா., தமிழகக் குறுநில வேந்தர்கள், 1994:110).

சேதுநாடானது மூவேந்தர்க்குப் பின் தமிழகத்தில் அந்நியர் ஆட்சி ஏற்படும் வரை சுதந்திரமாக ஆட்சிபுரிந்த ஒரே நாடு என்பது சிறப்பிற்குரியதாகும்.

சேதுபதிகள் சோழன் மறவரே

ஆன்நிரைகளைக் கவர்ந்து செல்லல் வெட்சி ஆகும். அதனை மீட்டுச் செல்வது கரந்தை என்பர். படைத்தொழில் வலிமையுடைய மறவர்களே இதில் ஈடுபடுவர். இம்மறவர்களுள் சிறந்தவர் தமிழ்நாட்டு மறவர் குடியினர் ஆவார். வெட்சி மறவரை ஆறலைப்பார், கள்வர் எனவும் கரந்தை மறவரை வயவர், மீளியர் எனவும் அழைப்பர். இதனைக் குறிப்பிடும் பதிவு வருமாறு:

இவர் தொன்றுதொட்டே தமக்கியல்பாயுள்ள வீரச் செயலானும் வில்வாள் முதலாய படைத்தொழில் வலிமையாலுமே தம்முயிர் வாழ்தலிற் சிறந்த தமிழ்நாட்டு மறவர் குடியினராவர். வில்லேர் வாழ்க்கை விழுத்தொடை மறவர் என்றார் அகநானூற்றினும் (35) இம்மறவரையே வில்லேருழவர், வாளுழவர், மழவர், வீரர் முதலிய பல பெயர்களாற் கூறுவர் முன்னோர். இவர் நிரைகவர்ந்து ஆறலைத்துக் குறைகொள்ளுங் கொடுந்தொழிலாற் றம்முயிரோம்பும் வெட்சி மறவர் எனவும் அவ்வெட்சி மறவரை முனையிற் சிதற வீழ்த்து அவராற் கவரப்பட்ட நிரைகளை மீட்டு ஆறலையர் மற்காத்துப் பிறருயிரோம்பு முகத்தாற் றம்முயிர் வாழுங் கரந்தை மறவர் எனவும் இரு திறத்தினராவர். இதனை ஆகுபெயர்த்துத் தருதலும் (பொ.புறத்.5) என்னுந் தொல்காப்பியத்து நச்சினார்க்கினியருரையானும் தனிமணியிரட்டுந் தாளுடைக் கடிகை, நுழைநுதிநெடுவேற் குறும்படை மழவர், முனையாகத் தந்து முரம்பின் வீழ்த்த வில்லேர் வாழ்க்கை விழுத்தொடை மறவர் (35) என்னும் அகநானூற்றுரையானும் அறிந்துகொள்க எனச் சுட்டுகிறார்.

வெட்சி மறவரை ஆறலைப்பார், கள்வர் எனவும் கரந்தை மறவரை வயவர், மீளியர் எனும் பெயர்களில் அழைப்பர். இவ்விரு மறவர்களைச் சேதுபதிகள் தீதெலாங்கழுவுஞ் சேதுநீராடப் போது வார்யாவரையும் ஆறலை கள்வர் முதலியோராற் சிறிதும் இடர்ப்படாமற் காத்து அவர்கட்கு வேண்டுவன உதவுதலே தமக்குறு தொழிலாகக் கொண்ட சிறப்பாற்றம் பெருவலியானே பிறருயிரோம்புங் கரந்தை மறவரேயாவர் எனக் குறிப்பிடுகின்றார்.

இம்மறவர் வாழ்ந்த பழையவூரைக் கரந்தை எனவும் இவரைக் கரந்தையர் எனவும் இவர் தலைவனைக் கரந்தையர்கோன் எனவும் பிற்காலக் கவிகள் வழங்கி வந்தனர். சான்றாக

அற்பனை மேவுங் கரந்தையர்கோன் ரகுநாதன்மணி 62)

பாரைப் புரந்த ரகுநாதன் வெற்பிற் பகலில்விண்சேர் (63)

பழியுந் தவிர்த்த ரகுநாத சேது பதிவரையீர் (64)

மல்லார் கரந்தை ரகுநாதன் றேவை வரையின் மணிக் (67)

சூரியன் வீரையர் கோன் ரகுநாதன் கரும்பிலின்று (68)

மைவாய்த்த வேற்படை யான்ரகு நாதன் மணவையன்னீர் (72)

நாவுக் கிசையும் பெரும்புக ழான்ரகு நாதன் வரைக் (74)

காரும் பொருவுகை யான்ரகு நாதன் கரந்தையன்னீர் (75)

கார்த்தலந் தோயுங் கொடிமதில் சூழுங் கரந்தையர்கோன் (76)

என ஒருதுறைக்கோவையிலுள்ள பாடல்கள் சுட்டுகின்றன.

இவ்வகை மறவரே தமிழ்நாட்டு மூவேந்தருக்கும் சிறந்த பெரும்படையும் படைத்தலைவருமாய் விளங்கியவர்கள் ஆவர்.

இவ்வீரரே இம்மூவேந்தரையும் தமது அரிய பெரிய வெற்றித் தொழில்களால் இன்புறச் செய்து அவர்களின் ஆட்சியில் செங்கோல் தலைநிமிர்ந்து நிற்கக் குறுநில வேந்தர்களாய்த் திகழ்ந்து போர்புரிவதற்குத் துணைபுரிந்தனர். இவர் இம்மூன்று தமிழ்வேந்தர்க்கும் உரியராதல் பற்றி முற்காலத்தே சேரன் மறவர், பாண்டியன் மறவர், சோழன் மறவர் என மூன்று பகுதியினராக வழங்கப்பட்டனர் (தமிழக்கக் குறுநில வேந்தர்கள், .III).

சோழன் மறவரை நன்னன், ஏறை, அத்தி, கங்கன், கட்டி (அகம்.44) எனவும் பாண்டியன் மறவரை கோடைப்பொருநன் பண்ணி (அகம்.13) எனவும் சேரன் மறவரைப் பழையன், பண்ணன் (அகம்.44, 326, புறம்.183) எனவும் அழைக்கப்படுகின்றனர்.

சேதுநாட்டுப் படைவீரர் குறுநில மன்னராயிருந்தனர் என்பதற்குத்

தானே சேறலுந் தன்னொடு சிவணிய

சேறலும் வேந்தன் மேற்றே    (தொல்.பொருள்.அகத்.28)

எனும் சூத்திரத்தின் உரையில் நச்சினார்க்கினியர் சொற்றச் சோழர் கொங்கர்ப்பணிஇயர், வெண்கோட்டியானைப் போர்க்கிழவோன், பழையன் மேல்வாய்த்தன்ன என வரும் நற்றிணையை எடுத்துரைத்து இது குறுநில மன்னர் போல்வார் சென்றமை தோன்றக் கூறியது எனச் சுட்டுகிறார். மேற்சுட்டிய பழையன் (அகம்.44) என்பவன் சோழன் படைத்தலைவனான குறுநில மன்னன் என்பது இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.

சேதுபதி பெயர்க்காரணம்

சேது என்றால் பாலம் எனவும் பதி என்றால் தலைவன் எனவும் பொருள்படும். இராமர் இலங்கைக்குச் செல்வதற்காக அமைத்த பாலத்தில் பாதுகாவலராக இராமரால் நியமிக்கப்பட்டவர்களாகக் கருதப்பட்டவர்கள்சேதுபதிகள்என அழைக்கப்பட்டனர். இக்காரணங்கள் சமய அடிப்படையில் தோன்றியவை. ஆயின்சேதுபதிஎன்பதற்கு வரலாற்றுச் சான்றுகளின் அடிப்படையில் விளக்கம் காண்பது சிறந்தது.

சேதுபதியும் சோழ மறவனும்

சேதுநாடு செம்பிநாடு, (பிள்ளை அந்தாதி) ராசேந்திர மங்களநாடு, மங்கலநாடு (இராமய்யன் ராமம்மானை), எனக் குறிப்பிடப்பட்டுள்ளன. செம்பிநாடன் (60, 82) செம்பியர்கோன் (203), செம்பிநாட்டிறை (208), செம்பியர் தோன்றல் (218) என ஒருதுறைக் கோவை ரகுநாத சேதுபதியைக் கூறுகின்றது. இப்பெயர்களுள் செம்பியன்எனும் பெயரானது சோழர்க்குரிய பெயராகும். சோழர்க்குரிய பெயர் எங்ஙனம் சேதுமறவருக்கு வழங்கப்பட்டதென்பதற்குப் பல சான்றுகள் உள்ளன. இச்சேதுபதிகள் சோழன் மறவராவர். இது பற்றியே இவரைச் செம்பிநாட்டு மறவர் என வழங்குவர். செம்பியன்சோழன்பாண்டிய நாடு பாண்டிநாடு ஆனதுபோலச் செம்பியன் நாடு செம்பிநாடு என ஆகியதென இராகவையங்கார் குறிப்பிடுகின்றார். அக்குறிப்பு வருமாறு:

சோழர் தொடர்பின் சுவடுகள் மறவர் மண்ணில் தென்படக் காரணம் என்ன? இராசராசசோழன் கி.பி.1059இல் இலங்கைமீது படைஎடுத்தபோது சென்ற பாதையில் பாதுகாப்பிற்காக ஒருபடை நிறுத்தினான் எனவும் அப்படையின் தலைவனின் வழிவந்தோனே பின்னால் சேதுபதி எனுஞ் சிறப்பினைப் பெற்றவன்.’ (மனோகரன்.மீ., கிழவன் சேதுபதி, 2012, .29)

இலங்கையும் பாண்டி மண்டலமும்

அதன் பின்னர்’12 ஆம் நூற்றாண்டில் இரண்டாம் இராசாதிராசசோழன் (கி.பி.1163-1178) காலத்தில் மதுரை அரசுக்காக வாரிசுரிமைப்போர் தொடங்கியது. குலசேகர பாண்டியனுக்குச் சோழனும் பராக்கிரம பாண்டியனுக்கு இலங்கைப் பராக்கிரமபாகுவும் ஆதரவு தந்தனர். பராக்கிரம பாண்டியன் கொல்லப்பட்டதறிந்து இலங்கைப் படை இராமேசுவரம் முதலிய ஊர்களைக் கைப்பற்றியது; பராக்கிரமபாண்டியன் மகன் வீரபாண்டியனை அரியணையில் அமர்த்தியது. ஆனால் கி.பி.1167இல் சோழர் படை குலசேகர பா்ணடியனுக்கு ஆதரவாகப் படையெடுத்து வந்து, மதுரையைக் கைப்பற்றி அவனிடம் அளித்தது. இந்தப் போர்கள் நிகழ்ந்த காலம் கி.பி.1167-லிருந்து 1175க்குள் ஆகும் (மனோகரன்.மீ., கிழவன் சேதுபதி, 2012, .29). இந்தக் காலக்கட்டத்தில்இலங்கை பராக்கிரமபாகு கி.பி.1173இல் இராமேசுவரம் கோவிலின் கருவறையைக் கட்டுவித்தான். இச்செய்தி இலங்கையில் தும்பலா எனுமிடத்தில் உள்ள கல்வெட்டால் புலப்படுகிறது (மனோகரன்.மீ., கிழவன் சேதுபதி, 2012, .29).

மகாவம்சம் எனும் நூலின் மூலம் இலங்கைக்கும் தென்தமிழகத்திற்கும் உள்ள தொடர்பு மிகப் பழமையானது என அறியமுடிகின்றது. ஏனெனில் இந்நூலின் காலம் கி.பி.459-477 ஆகும்.

இந்நாட்டிலிருந்து அங்கே குடியேறிய அரசன் விஜயா தனக்குப்பட்டத்தரசி இருந்தால்தான்முடிசூடிக் கொள்வேன்என்று நிபந்தனை விதிக்க அமைச்சர்கள் பெண் தேடிப் புறப்பட்டனர். தென் இந்தியாவில் மதுரையை ஆண்டு கொண்டிருந்த பாண்டு(டி) மன்னனின் மகளை மணம் முடிக்க இசைவு பெற்றனர். பாண்டியன் மகள் தூதுவர் ஆக 800 பேர் உள்ளிட்ட பரிவாரங்கள் கலங்களில் இலங்கைக்குப் பயணமாயினர். பாண்டியனின் செல்வி முதல் ஈழவேந்தனின் பட்டத்தரசி ஆனாள். கி.பி.944இல் முதற்பராந்தகச் சோழன் காலத்தில் இலங்கை மீது தொடங்கிய சோழர் ஆதிக்கம் சில ஆண்டுகள் தொடர்ந்தும் சில ஆண்டுகள் விட்டுவிட்டும் 15 ஆம் நூற்றாண்டு வரை நீடித்தது.’ (மனோகரன்.மீ., கிழவன் சேதுபதி, 2012, .29)

இலங்கை நாட்டின் மீது சோழர்களின் ஆதிக்கம் ஏறக்குறைய 5 நூற்றாண்டுகள் வரை நீடித்திருந்தது. அதன் பின்னர்ச் சோழர்களது வலிமை குறைந்தபோது அவர்களின் ஆதிக்கம் இலங்கைமீது விடப்பட்ட பின் சேதுபதிகளின் கவனம் இலங்கைமீது திசைதிரும்பியிருக்கலாம் என வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். கடல் அருகில் இலங்கை அமைந்திருப்பதால் மேற்கூறிய கருத்துச் சாத்தியமெனக் கருதலாம். இதற்குச் சான்றாகச் சென்னை மாநிலப் படைவீரர் வரலாற்றில் இன்றைய மறவரின் முன்னோர் இலங்கையின் பெரும்வாரியான நிலங்களைத் தனதாட்சிக்கீழ் வைத்திருந்தார்கள் எனக் குறிப்பிடுகிறது.

பாண்டிய நாட்டில் சோழ மறவர் குடியேறுதல்

கி.பி.1064இல் குலோத்துங்கச் சோழன் பாண்டிய நாட்டை ஆட்சி செய்த வீரபாண்டி என்பவரின்மீது போர்தொடுத்துப் பாண்டிநாட்டைத் தன்வசத்திற்குள் கொண்டு வந்த தன் தம்பியாகிய கங்கை கொண்டான் சோழர்களுக்குச் சுந்தர பாண்டியன் என்னும் பெயர் சூட்டி அப்பாண்டி நாட்டை ஆளும் அரசுரிமை கொடுத்தான். இதனால் பாண்டிய நாட்டின் மீது போர் செய்யப் பெரும் உதவியாய் அமைந்த சோழன் மறவர்கள் பலர் இப்பாண்டி நாட்டிற்குக் குடியேறினார்கள். இச்சான்றைக் கால்டுவெல் திருநெல்வேலி வரலாறு எனும் நூலில் இராகவையங்கார் எடுத்துக்காட்டியுள்ளார். அக்குறிப்பு வருமாறு:

குலோத்துங்க சோழனுக்குப் பின்னே சோணாடு பல வேற்றரசரால் படையெடுக்கப்பட்டுப் பிறர்பிறர் ஆட்சிக்குள்ளாகி அரசுரிமை மாறுபட்டதனானே, இம்மறவர் தம் படைத்தலைமை இழந்து தந்நாட்டே வேற்றரசர்கள்கீழ் ஒடுக்கதலினும் வேற்றுநாட்டிற் குடியேறி வாழ்தல் சிறந்ததாமென்று கருதிச் சோணாடு விட்டுக் கடலோரமாகப் போந்து சேது திரித்துக்காடுகெடுத்து நாடாக்கித் தம்மரசு நிலையிட்டு ஆட்சிபுரிந்தனராவரெனக் கொள்ளினுமமையும். இவர் ஆட்சியுட்படுத்த நாட்டிற்கும் இவர் பயின்ற செம்பநாட்டின் பெயரே பெயராக இட்டு வழங்கினர் போலும். இவர்களது சாசனங்களிற் பெரும்பாலும் குலோத்துங்கசோழ நல்லூர்க்கீழ்பால் விரையாதகண்டனிலிருக்கும் வங்கி காதிபர் என்னும் ஒரு விசேடனம் காணப்படுதலால் இவர் சோணாடுவிட்டு ஈண்டுப் போந்துகண்ட தலைமைநகர் குலோத்துங்க சோழநல்லூர் என்பதாகுமென ஊகிக்கத்தக்கது. (இராகவையங்கார்.இரா., தமிழகக் குறுநில வேந்தர்கள், 1994, .113)

மேற்சுட்டியகண்டன்என்பது குலோத்துங்க சோழனின் பெயராகும். அதனைத் தமிழ்நாவலர் சரிதத்தில் ஒட்டக்கூத்தர்

தொழுகின்ற மன்னர் சொரிந்திட்ட செம்பொன்றுணத் திணவன்

டுழுகின்ற தார்க்கண்ட னேறிய ஞான்று

எனப் பாடியுள்ளதன்வழிக் காணமுடிகிறது. கண்டன் என்ற பெயராலே கண்டனூர் முதலாகப் பல ஊர்கள் இச்சேதுநாட்டில் வழங்கப்படுகின்றன. முந்தைய இராமநாதபுரம் மாவட்டம் எனக் கருதப்படும் சிவகங்கையில் கண்டனூர் எனும் ஊர் காரைக்குடிக்கு வடகிழக்கில் பத்துக் கி.மீ.தொலைவில் உள்ளமை குறிப்பிடத்தக்கது. அப்பெயர் வழங்கப்பட்டமைக்கான காரணத்தைப் பழ.அண்ணாமலை குறிப்பிட்டுச் செல்கிறார்.

பொன்னி ஆறு பாயும் சோழநாட்டை புகார் நகரைத் தலைநகராகக் கொண்டுகண்டன்என்னும் சோழன் ஆண்டு வந்தான். அவன் பெருவியாதியால் பீடிக்கப்பட்டு மனம் நொந்திருந்த வேளையில் அந்நாட்டு அறவோர்கள் கூறிய ஆலோசனைப்படி தல யாத்திரை மேற்கொண்டான். அப்போது படையுடன் வீர வனத்தில் வந்து தங்கியிருந்தபோது, வேடுவன் அம்மன்னனைக் கண்டு தான் கண்டெடுத்த சிவலிங்கம் பற்றியும் அதன் பெருமை பற்றியும் கூறினான். மன்னன் அச்சிலையைக் காண்போம் என்று சொல்லி எழுந்ததும் காலில் இருந்த குட்டம் நீங்கிற்று. கை குவித்துத் தொழுததும் கைக்குட்டம் நீங்கிற்று. சிவலிங்கத்தை மனதால் வணங்கியதுமே அவன் உடம்பில் இருந்த குட்டம் நீங்கிற்று. சோழன் கண்டன் ஊர் உண்டாக்கியதால் இது கண்டனூர் எனப் பெயர் பெற்றது (செட்டிநாட்டு ஊரும் பேரும், அண்ணாமலை.பழ., 1986, பக்.38, 39).

காரைக்குடி அருகில் உள்ள சாக்கோட்டை என வழங்கப்படும் வீரவனத்தில் வீரமரத்தின் அடியிலிருந்து கண்டெடுத்ததால் வீரவன நாதர் எனப் பெயர் பெற்றது. ‘அதற்குத் திருமுடித் தழும்பர்எனும் பெயரும் உண்டு. இச்செய்தியானது வீரவனப் புராணத்தில் சோழன் முக்தியடைந்த படலம் மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையால் எழுதப்பட்டது. அதனை,

அன்னவெம் கானம், முற்ற

அழித்துமா நகர்உண் டாக்கிப்

பன்னமும் குடிகள் ஏற்றிப்

பல்வளங் களும் பொருந்தித்

தன்னமும் குறைவுறாத

தன்பெயர் விளங்கும் ஆற்றாய்

கல்நவில் தடம்பு யத்தான்

கண்டனர் எனும்பேர் இட்டான்

என வரும் 22ஆம் பாடல் விளக்குகிறது.

திருப்பத்தூருக்கு வடமேற்கில் 6கி.மீ. தொலைவில்கண்டவராயன்பட்டிஎனும் ஊர் உள்ளது. இவ்வூரில் உள்ள பழ.கிரு.ஊருணியின் கரையில் உள்ள கல்வெட்டு ஒன்றில் வராயன் என்ற வீரவம்சத்திற்கு அரசன் ஒருவரால் செப்புப்பட்டயம் கொடுக்கப்பட்டுள்ள செய்தி தெரிகிறது. வராயன் என்ற வீரன் ஒருவனை அரசன் ஒருவன் இங்குக் கண்டதாலேயே இவ்வூருக்குக் கண்டவராயன்பட்டி எனப் பெயர் வந்ததாகக் கூறுகின்றனர் (செட்டிநாட்டு ஊரும் பேரும், அண்ணாமலை.பழ., 1986, பக்.38, 39).

அதனைப் போன்றே திருப்பத்தூருக்குத் தெற்கே 15 கி.மீ. தொலைவில் கண்டரமாணிக்கம் எனும் ஊர் உள்ளது. இவ்வூரில் நகரத்தார்கள் குடியேறி ஊருக்குத் தேவையான தண்ணீருக்காக ஊருணி வெட்டும்போது அம்மன் சிலை ஒன்றைக் கண்டனர். பின்னர் அம்மன் சிலைக்கு மாணிக்கவல்லி அம்மன் எனப் பெயரிட்டு மாணிக்கத்தைக் கண்டதால் கண்டமாணிக்கம் என ஆகியது. காலப்போக்கில் கண்டரமாணிக்கம் எனத் தற்போது அழைக்கப்படுகிறது.

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகில் கண்டிரமாணிக்கம் எனும் ஊர் தற்போது உள்ளது. சோழர்கள் இப்பகுதியினை ஆட்சி செய்ததால் இப்பெயர் வந்தது என யாவரும் அறிந்ததே. தற்போதைய இராமநாதபுரம் மாவட்டத்தின் சத்திரக்குடியிலிருந்து வளநாட்டுக்குச் செல்லும் வழியில் கண்டரமாணிக்கம் எனும் ஊர் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

சேதுபதிகளின் தலைநகராக விளங்கிய முகவைக்கு ஒரு காத தூரத்தில் வையைக் கரையில் கங்கை கொண்டான் எனும் பெயரில் ஓர் உள்ளது என்பதையும் சேதுநாட்டு வீரபாண்டி, விக்கிரமாண்டி, வீரசோழன், சோழபுரம் எனும் பெயரில் சில ஊர்கள் உள்ளன. பரமக்குடி அருகில் விக்கிரபாண்டிபுரமும் முதுகுளத்தூர் அருகில் வீரசோழன் எனும் பெயரில் சோழர்களது பெயரினைத் தாங்கி நிற்கின்றது எனலாம். கண்டநாடு, கொண்டநாடு, கொடாதான் என்னும் பெயர்பெற்றுக் குலோத்துங்க சேதுபதி என்னும் பெயரால் விளங்கின. குலோத்துங்கச் சோழன் சாசனங்களில் அகளங்கன் என்ற சொல் உள்ளது. இச்சொல்லிற்கு அமிர்தகவிராயர் அபயரகுநாத சேதுபதி (208) செம்பியன், அநபாயன் ரகுநாதன் (242) புனற்செம்பியான், சென்னிக்குஞ் சென்னி என்னும் இரகுநாதன் (219) எனக் குறிப்பிடுகின்றார்.

சோழன் மறவர்க்குப் பண்ணன் என்னும் பெயர் உண்டு. காவிரி வடகரையில் உள்ள அவன் ஊராகிய சிறுகுடியின் பெயர் வழக்கும் இவர் குடியேறிய நாட்டில் தற்போதும் காணலாகின்றது. விரையாத கண்டனென்பது சேதுநாட்டு இராஜசிங்க மங்களம் (Rsமங்கலம்) பகுதியிலுள்ளது. இப்பகுதியில் பண்ணக்கோட்டை, சிறுகுடி என வழங்கும் ஊர்கள் தற்போதும் உள்ளன.

சோழகுலத்தினரைத் தொண்டியோர்எனவும் அழைப்பர். சான்றாகவங்க வீட்டித்துத் தொண்டியோர்’ – (சிலம்பு.ஊர்காண்) தொண்டியந்துறை காவலோன் எனும் ஒரு பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

இராமநாதபுரம் மாவட்டம் முழுமையும் பாண்டிய நாட்டின் பகுதியாக விளங்கிய பொழுதிலும் ஏறக்குறைய முந்நூறு ஆண்டுகள் சோழப் பேரரசின் ஆட்சிக்கு அடங்கிய நாடாகக் கி.பி.919 முதல் இருந்து வந்ததை வரலாறு வர்ணித்துள்ளது (எல்.எம்.கமால், இராமநாதபுரம் மாவட்டம், .8). இக்காலக்கட்டத்தில் இராமநாதபுரம் மாவட்டத்தின் வடபகுதி ராஜராஜப் பாண்டியநாடு ராஜேந்திர சோழவளநாடு எனவும் தென்பகுதி செம்பிநாடு எனவும் வழங்கப்பட்டுள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வாயிலாக அருப்புக்கோட்டைப் பள்ளிமடம் கல்வெட்டில் நிர்வாகத்தைச் சோழ இளவல்கள் சோழ பாண்டியர் என்ற பட்டத்தைச் சுமந்து இயங்கி வந்தனர். இவர்களிடம் சிறப்பு மிக்கவர்கள் சோழகங்கதேவன், சோழகங்கன் ஆவார் என வெளிப்படுகிறது. ராஜராஜ சோழனது கல்வெட்டுகள் எதிர்கோட்டையிலும் (கி.பி.1007) திருச்சுழியிலும் (கி.பி.997) திருப்பத்தூரிலும் (கி.பி.1013) உள்ளன.

சோழப் பேரரசின் பெருமைக்குரிய இன்னொரு பேரனான மூன்றாம் குலோத்துங்க சோழ தேவனது 35-வது ஆட்சி ஆண்டுக் கல்வெட்டு பிரான்மலையிலும் 22, 40, 48, 49வது ஆட்சியாண்டுக் கல்வெட்டுகள் குன்றக்குடியிலும் 44வது ஆட்சியாண்டுக் கல்வெட்டு பெருங்கருணையிலும் 48-வது ஆட்சியாண்டுக் கல்வெட்டு கோவிலாங்குளத்திலும் கிடைத்துள்ளன. இராமநாதபுரம் மாவட்டம் பெரிய பட்டினம் கிராமத்தில் நிகழ்த்திய அகழ்வுகளில் ராஜராஜ சோழன், சுங்கம் தவிர்த்த சோழன் ஆகியவர்களது செப்புக்காசுகள் கிடைத்துள்ளன. இவை இந்த மாவட்டத்தில் சோழர்களது வலுவான ஆட்சி நடைபெற்றதற்கு வரலாற்றுச் சான்றுகளாக உள்ளன. கி.பி.1218க்குள் குலோத்துங்க சோழனது வீழ்ச்சி, பாண்டியர்களது இரண்டாவது பேரரசின் எழுச்சியைக் காட்டியது. பாண்டியநாடு பழம் பெருமையை எய்தியதுடன் பாண்டிய நாட்டின் எல்லைகள் வடக்கே சோழநாட்டையும் மேற்கே வேளு நாட்டையும் உள்ளடக்கியதாக விரிந்தன. (எஸ்.எம்.கமால், நா.முகம்மது செரீபு, இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்றுக் குறிப்புகள், 1984, .9)

சோழர்கால ஆட்சியில் எழுந்த ஊர்கள்

சேதுநாட்டில் பல இடங்களில் / பல ஊர்களில் சோழர்கள் பெயர்கள் இன்றும் வழக்கில் இருந்து வருகின்றன. அதனைப் பின்வரும் பட்டியல் உணர்த்தும்.

.எண் ஊர்ப் பெயர்கள் வட்டம்
1.      சோழவந்தான் சிவகங்கை
2.      சோழந்தூர் திருவாடனை
3.      சோழபுரம் இராஜபாளையம், சிவகங்கை
4.     சோழன்குளம் மானாமதுரை, இராமேஸ்வரம்
5.      சோழமுடி சிவகங்கை
6.      சோழக்கோட்டை சிவகங்கை
7.      சோழப்பெரியான் திருவாடனை
8.      சோழியக்குடி திருவாடனை
9.      சோழகன்பட்டி திருப்பத்தூர்

சோழர்கள் வெற்றிபெற்ற பெயர்கள் தாங்கிய ஊர்ப்பெயர்கள் குறித்த பட்டியல் வருமாறு:

.எண் ஊர் வட்டம்
1.      கங்கை கொண்டான் பரமக்குடி
2.      கிடாரம் கொண்டான் இராமநாதபுரம்
3.      வீரசோழன் அருப்புக்கோட்டை
4.     கோதண்டராமன் பட்டனம் முதுகுளத்தூர்
5.      செம்பியக்குடி பரமக்குடி, முதுகுளத்தூர், திருவாடனை

மேற்கண்ட பட்டியல்களை நோக்குகையில் சேதுநாட்டில் சோழர்களது ஆட்சி நிலைபெற்று இருந்ததையும் இவர்கள் இட்டுச் சென்ற பெயர்கள் சான்றுகளாகக் காணக் கிடைக்கின்றமையையும் அறியமுடிகின்றது.

பெயருக்குமுன் ‘முத்து’ என்ற சொல்லைப் புகுத்தல்

குலோத்துங்க சேதுபதியின் மகன் சமரகோலாகல சேதுபதி வீரத்தின் அடையாளமாக இவர் சோழர்களிடம் மன்னர் வளைகுடா கடலில் முத்துக்குளிக்கும் உரிமையைத்  தனது வீரத்திற்குப் பரிசாகப் பெற்றார். இப்பரிசு பெற்றதின் விளைவாகத்  தமது கடல் வளமுடையதாக மேம்படுத்திச் சிறந்து விளங்கினார். இவ்வாறு சிறந்து விளங்கியமையால் தம் பெயருக்கு முன் ‘முத்து’ என்னும் சொல்லினை இணைத்துக் கொண்டார். ஆக முத்து எனும் சொல் இவ்வாறே இணைக்கபட்டதென அறியமுடிகிறது.

முத்து விஜயரகுநாதன் என்பது இவருக்குச் சிறந்த (அரசர் முதலியோர் பெறும் பட்டவரிசை) பெயராகும். இவரது சாசனங்களிற் ‘சொரிமுத்து வன்னியன்’ என ஓர் விருதாகாவளி காணப்படுவதும் இவரது கடற்படுமுத்தின் பெருக்கத்தினையே குறிப்பதாகும்.

வணங்காத தெவ்வைப் பெருமால் சொரிமுத்து வன்னியன்

னணங்காரு மார்பன் ரகுநாதன்

என ஒருதுறைக் கோவையில் வருதல் காண்க.

வன்னியர்

இன்றைய தமிழகத்தில் வன்னியர் என்பது ஒரு சாதியின் பெயராக அழைக்கப்படுகிறது. ஆனால் “வன்னியர்” என்பதும் அரசர் படைத்தலைவர்க்கு வழங்கப்பட்ட பெயர் (த.கு.வே., ப.120). இதனைக்

கருமுகிற் கணிநிறத் தழற்கட் பிறையெயிற்

றரிதரு குட்டி யாயபன் னிரண்டினைச்

செங்கோன் முளையிட் டருணீர் தேக்கிக்

கொலைகள வென்னும் படர்களை கோலித்

தருமப் பெரும்பயி ருலகுபெற விளைக்கு

நாற்படை வன்னிராக்கிய பெருமாமன்

எனும் அடிகளின் மூலம் அறியலாம்.

பெயருக்குப் பின் தேவர் எனும் சொல் உருவாதல்

சேதுநாட்டு மறவர் “தேவர்” எனச் சிறப்புப்பெயர் புனைதலும் அச்சோழர்பாற் பயின்றமையைக் குறிக்கின்றது. குலோத்துங்கச்சோழத்தேவன், திரிபுவனத் தேவன், ராஜராஜசோழத்தேவன், ராஜேந்திர சோழத்தேவன் எனச் சோழர் சாசனங்களில் வழங்கப்படுகின்றன.

திரிபுவனதேவன் என்பது வெண்பாமாலை உரையினும் கண்டது. தேவருருவாய் நின்று உலகங்காத்தலின் அரசனைத் தேவன் என்பர் என உணர்க. இவையெல்லாம் இம்மறவர்க்கும் சோழர்க்கும் உள்ள பண்டைய உறவினை வலியுறுத்துவனவாம்.’ (இராகவையங்கார்.இரா., தமிழகக் குறுநில வேந்தர்கள், 1994, ப.120).

புறப்பொருள் வெண்பாமாலை இயற்றிய ஐயனாரிதனார் “மூவர் விழுப்புகழ் முல்லைத் தார்ச் செம்பியன்” (பாடாண் படலம், 34) எனும் அடியினைக் கூறியுள்ளார். இம்மறவர் புனைகின்ற முல்லை மாலை சோழர்க்குரிதாகுமென மேற்கூறிய பாடல் மூலம் அறியலாம். அதுபோல் அரசர்க்குப் போர்ப்பூ எனவும் தார்ப்பூ எனவும் இரண்டு உண்டு. அதனைப் ‘படையுங் கொடியும்’ (மரபியல்.81) என்பதன் மூலம் விளக்கப்பெறலாம்.

வளரி

வளரி, வளைதடி என்ற பெயரால் தமிழகத்தில் வழங்கப்பட்ட ஆயுதமே பூமராங் என்பதாகும். பூமாராங் எனும் ஆயுதமானது கையால் வீசியெறியக்கூடிய வகையில் வளைந்த வடிவத்துடன் காணப்படும். இவ்வளரியானது ஏறக்குறைய பிறை வடிவமாக இருக்கும். ஒரு முனை மிகவும் கனமாகவும் மறுமுனை கூர்மையாகவும் இருக்கும். இதனை மரம், இரும்பு, யானைத்தந்தம் போன்றவற்றால் செய்து பயன்படுத்தி வந்துள்ளனர். மரத்தால் செய்த வளரி வேட்டையாடுதலுக்கும் இரும்பால் செய்த வளரிப் போர் புரிவதற்கும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

கையாளும் முறை

நன்கு பயிற்சி பெற்றவர்கள் இதன் கனமற்ற நுனியைக் கையில் பிடித்துக் கொண்டு தோளுக்கு மேலே பலமுறை வேகமாகச் சுழற்றி விரைவாக இலக்கினை நோக்கி எறிந்திட அது இலக்கினைத் தாக்கிவிட்டு எறிந்தவரிடமே திரும்பவும் வந்து சேரும். இதனை வீசி எறிபவர் மிகுந்த கவனத்துடனும் நுட்பத்துடனும் எறிந்து எதிரியைத் தாக்க வேண்டும். எதிரியைத் தாக்கிவிட்டு வீசி எறிந்தவரிடமே வந்து சேரக்கூடிய அற்புதமான ஆயுதம் இதுவாகும். திரும்ப வரும்பொழுது கவனமாகக் கையில் பிடித்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில் வீசியெறிந்தவரைத் தாக்கும் வாய்ப்பு உள்ளது.” (தமிழாய்வுக் கட்டுரைகள் (தொகுதி I) ப.31).

இலக்கியங்களில் வளரி

மகாபாரதப் போரில் கிருஷ்ணன் பயன்படுத்திய சுதர்சனச் சக்கரம் தமிழர்களிடையே வழங்கி வந்த வளரி என்னும் ஆயுதமாகும் (மணிமாறன், தமிழ் ஆய்வுக் கட்டுரைகள் தொகுதி I, 2016, ப.31).

இது சுதர்சனம் என்னும் சக்கராயுதம் குறித்துச் சங்க நூலான கலித்தொகை சுட்டுகிறது. இது திருமாலின் ஆயுதமாகக் கூறப்பட்டுள்ளது.

மல்லரைமறம் சாய்த்த மலர்த்தண்தார் அகலத்தோன்

ஒல்லாதார் உடன்றுஓட உருத்துஉடன் எறிதலின்

கொல்யானை அணிநுதல் அழுந்திய ஆழிபோல்

கல்சேர்பு ஞாயிறு கதிர்வாங்கி மறைதலின்        (134:1-4)

எனும் அடிகள் மூலம் அறியமுடிகிறது.

களித்த வீரர் விரட்ட நேமி

கண்டு வீசு தண்டிடைக்

குளித்த போழ்து கைப்பிடித்த

கூர்மழுக்கள் ஒக்குமே                   (கலிங்கத்துப்பரணி:418)

எனும் அடிகளானவை போரில் மகிழ்ச்சி கொண்ட வீரர்கள் சக்கரப்படையை விடுத்தனர். எதிர்த்துப் போர் புரியும் மற்ற வீரர்கள் அவற்றின்மேல் தண்டாயுதத்தை மோத அடித்தனர். தண்டாயுதத்தில் பதிந்த சக்கரப்படை கூர்மையான மழுவாயுதம் போன்று இருந்ததாகக் கலிங்கத்துப்பரணி வளரி பற்றிக் குறிப்பிடுகின்றது.

எரிகோல் அஞ்சா அரவின் அன்ன              (புறம்.89-5)

எனும் அடியில் உள்ள எரிகோல் என்பது இங்கே வளரியைச் சுட்டுகின்றது. இவ்வளரியானது வேட்டைக் கருவியாகவும் பிறரைத் தாக்கும் கருவியாகவும் சங்க காலத்தில் பயன்படுத்தி வந்துள்ளனர் என்பதை மேற்கூறிய பாடலடி மூலம் அறிய முடிகிறது.

மாலை வெண்காழ் காவலர் வீச

நறும்பூம் புறவின் ஒடுங்குமுயல் இரியும்         (ஐங்குறு.421:1-2)

எனும் ஐங்குறுநூற்று (விரவுபத்து) அடிகளில் வெண்காழென்றது மாலைக்காலத்து முயலெறியும் தடியை என்னும் வளரியாகிய வளைதடியாகும். இவ்வடியில் ‘காவலர்’ எனும் சொல்லினை ஆராய்ந்து நோக்குகையில் காவலர் என்பார் ஊர்க்காவலை மேற்கொண்டவராவார். இம்மக்கள் ஊர்க்காவலராக இருந்த வழக்கம் ஆங்கிலேயர் இங்கு ஆட்சி செய்ய வருவதற்கு முன்னர் வரை தென்தமிழகத்தில் தொன்றுதொட்டு இருந்து வந்ததைத் தர்ஸ்டன் எனும் ஆய்வறிஞர் குறிப்பிட்டுள்ளதாக மணிமாறன் (தமிழ் ஆய்வுக் கட்டுரைகள், தொகுதி – IV), பக்.37-38) குறிப்பிடுகின்றார்.

வளரி என்பது குறுங்கோல் வளைதடி என்பதைக்

குறுங்கோ லெறிந்த நெடுஞ்செவிக் குறுமுயல்           (புறம்.339:4)

எனும் அடி குறிப்பிடுகின்றது.

நைடதம் எனும் நூலில் வளரியைக் ‘குணில்’ எனக் குறிப்பிடுகின்றது. இதனைக்

கொடுங் குணில் பொருத வெற்றிப்

போர்ப்பறை குளிற வெம்போர்க்

கடுந்திறல் வயவர் வில்நாண்

புடைப்பொலி கடலின் ஆர்ப்பது’              (நைடதம்.729)

எனும் அடிகளில் காணமுடிகின்றது. குணில் என்பதற்கு வளைந்த குறுந்தடியால் ஆக்கப்பெற்ற வெற்றியைக் கொடுக்கின்ற போர் முரசு ஒலிக்க என்பதாகும் என்றும் போர்க்களத்தில் நிறைய பேர் இறக்கும்படிச் செய்யும் போர்ப்பறையை அப்பதனால் குணில் என்னாது கொடுங்குணில் என்றார் எனவும் தமிழ் ஆய்வுக்கட்டுரைகள் (தொகுதி I) எனும் நூலில் மணிமாறன் குறிப்பிடுகின்றார்.

இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவையில் வளரி பற்றிய செய்தி குறிப்பிட்டுள்ளது. அதனை

வரகிலையின் பொலுங் கோட்டின் வளரி வரைந்துலகை

முரசிலை யாக்கிய சீராச ராசன் முகில் வரையீர்               (160)

எனும் அடிகள் மூலம் காணமுடிகிறது.

சேதுபதியும் வளரியும்

“இதனை ஆளுதலிலிவர் மிகக் கைதேர்ந்தவராவர். கருதிய குறியினைத் தப்பாமலெறிதலும் எறிந்த வளரியை மீண்டும் தங்கைக்கு எய்துவித்தலும் இவர்க்கே சிறந்த பெருஞ்செயல்களாயிருந்தன என்ப” (தமிழக குறுநிலவேந்தர், ப.121)

எனத் தளசிங்க மாலையில் சேதுபதிகள் முற்காலத்து எட்டன் எனப் பெயர் கொண்ட ஒருவனோடு போர் புரிந்து அவன் தலையையே தம் வீரக்கழலில் அணிந்து கொண்டனர் எனும் செய்தியைக் கூறுகின்றது. இதனைச்

சிலையா மெழுத்துஞ் சகாயமுங் கீர்த்தியுஞ் செந்தமிழு

நிலையாகு மன்னச்சொல் வார்த்தையு மென்றைக்கு நிற்குங் கண்டாய்

கலையாருங் கானில்வன் கல்லைப்பொன் னாக்கிய காலிலெட்டன்

றலையார் விசய ரகுநாத சேது தளசிங்கமே

எனும் அடிகள் பாடிய மிதிலைப்பட்டிச் சிற்றம்பலக் கவிராயர் மூலம் அறியமுடிகின்றது.

“சேதுபதிகளது வடிவமைத்த பண்டைக் கல்லுருவங்களிலெல்லாம் இடையிற் சுற்றிய வீரக்கச்சையில், இவ்வளரியே செருகப்பட்டுள்ளது. இன்றைக்கும் காணலாம். இதுவே இவர்க்குரிய பேரடையாளமாவது. இவரது வீரக்கழல் சேமத்தலை எனப் பெயர் சிறக்கும். இது தம்மால் வெல்லப்பட்ட பகைவனது தலையே தமக்குச் சிறந்த தாளணியாக்கிக் கொண்டு விளங்கியமை குறிப்பதாகும்” (இராகவையங்கார்.இரா., தமிழகக் குறுநில வேந்தர்கள், 1994, ப.121)

தற்காலத்தில்

பாண்டி நாட்டினர் ஆங்கிலேயருக்கு எதிரான போரில் வளரியைப் பயன்படுத்தியதாக எட்கர் தர்ஸ்டன் பதிவு செய்துள்ளார். “மருதுபாண்டியர்கள் கி.பி.1780 ஆம் ஆண்டில் நவாப் படைகளையும் கி.பி.1801இல் ஆங்கிலேயப் படைகளையும் எதிர்த்துப் போரிட்டபோது வளரியைப் பயன்படுத்திய குறிப்பு காணப்பெறுகின்றது. இவ்வளரியைக் கண்டு ஆங்கிலேயர்கள் மிகவும் அஞ்சினார்கள் என்றும் இதனாலேயே போர் முடிந்ததும் கர்னல் அக்னியு சிவகங்கைப் பகுதியில் பத்தாயிரம் வளரிகளைக் கைப்பற்றியதாகவும் சென்னைப்படை வரலாறு தெரிவிக்கின்றது (தமிழக ஆய்வுக் கட்டுரைகள், தொகுதி I), ப.40). ஆங்கிலேயத் தளபதி கர்னல் வெல்த் என்பவர் (1795இல்) சிவகங்கையை ஆட்சி செய்த சின்னமருதுவிடம் வளரி வீசும் பயிற்சியினைக் கற்றுக்கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார். அதேபோல் பெரிய மருது, ஆங்கிலேயரை எதிர்த்து நின்று வளரியைக் கையாளுவதில் திறம்படைத்தவராகத் திகழ்ந்துள்ளார் எனும் செய்தியை அறியமுடிகிறது. ஆங்கிலப் படைகள் தன்னைச் சுற்றிய நிலையில் வளரியை எடுத்துப் போர் செய்ய முயலும்போது பக்கவாத நோயின் விளைவால் மருதுவால் வளரியைப் பயன்படுத்த முடியவில்லை. அச்சூழலில் ஆங்கிலேயத் தளபதியைப் பார்த்து

மன்னவனே யிற்றென்முன் வந்ததுபோல்

ஒருமாதத் துக்குமுன் வந்தாயானால்

என்னைப் பிடிக்க உன்னால் ஆகாது

மேலும் வளரியால் தலைதுணித் திடுவேன்

எனும் அடிகளைப் பாடுகின்றார்.

“மருது சகோதரர்கள் காலம் வரையில் வளரி என்ற ஆயுதத்தைப் பாண்டிய நாட்டில் முக்குலத்தோர் எனப்படும் மக்களிடையே பழக்கத்தில் இருந்து வந்துள்ளது என்பதை Stone Age in India, எனது இராணுவ நினைவுகள் எனும் இரண்டு நூல்களை மேற்கோளாகக் கொண்டு ச.அருணாச்சலம் எழுதியுள்ளார்” (தமிழக ஆய்வுக் கட்டுரைகள், தொகுதி I, ப.36)

என மணிமாறன் குறிப்பிடுகின்றார்.

வளரிக்குத் தடை

இருபதாம் நூற்றாண்டு வரை வளரி பயன்படுத்தியுள்ளனர் என்பதைக் கீழ்க்காணும் விளக்கத்தின் மூலம் அறிய முடிகின்றது. கி.பி.1915 இல் மதுரை மாவட்டத்தில் கொண்டு வரப்பெற்ற குற்றச்சட்டத்தை எதிர்த்துப் பிறமலைக் கள்ளர் சமுதாயம் கி.பி.1921-இல் கிளர்ந்தெழ உசிலம்பட்டி வட்டம் பெருங்காம நல்லூரில் பெருங்கிளர்ச்சி வெடித்தது. அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் பலர் இறந்தனர். இக்கிளர்ச்சியின்போது இம்மக்கள் பயன்படுத்திய ஆயுதங்களில் வளரியும் ஒன்றாகும். இதன் காரணமாக இவ்வாயுதத்தைப் பயன்படுத்த ஆங்கில அரசு தடை விதித்தது.வீடுகளில் வளரி வைத்திருந்தால் அவர்களைக் குற்றவியல் தண்டனைக்கு உட்படுத்தினர். எனவே இதனை வழிபாட்டிற்குரிய பொருள்களுள் ஒன்றாகக் கோயில்களில் வைத்துப் பாதுகாத்தனர் (தமிழ் ஆய்வுக் கட்டுரைகள் தொகுதி I, மணிமாறன், 2016, ப.41).

வளரி பிரசாதமும் குலமரபின் ஆயுதமும்

முற்காலத்தில் போர்புரியும் வீரர்கள் தம் கொண்டையில் வளரியைச் சொருகி வைத்திருப்பர். போர் மூளும்போது கொண்டையிலிருந்து உருவி வளரியின் மூலம் எதிரிகளைப் போரிட்டு வீழ்த்துவர். இத்தகுச் சிறப்புமிகு வளரியினைத் தற்போதும் சில முக்குலத்து இன மக்களின் பழைய குடும்பங்களில் காணலாம்.பூசைக்குரிய பொருளாக வளரியைப் பயன்படுத்துகின்றனர். வளைதடியை அனுப்பிப் பெண்ணைக் கொண்டு வரும் வழக்கமும் இவர்களிடையே இருந்துள்ளது என்றும் திருமணத்திற்கு முன் வளைதடியை இருவீட்டாரும் மாற்றிக் கொள்வதும் உண்டு. இதனாலேயே மறவர் கொடுப்பது வளரிப் பிரசாதம் என்ற பழமொழி ஏற்பட்டதென மணிமாறன் குறிப்பிடுகின்றார். விஜய சேதுபதி (கி.பி.1710-1725) தனது மகள் அகிலாண்டேஸ்வரியைச் சிவகங்கைக்கு மணமுடித்து அனுப்பி வைத்தபோது சீர்களில் ஒன்றாகத் தம் குலமரபு ஆயுதமான வளரியையும் அனுப்பி வைத்ததாகக் கல்வெட்டு இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது (தமிழக ஆய்வுக் கட்டுரைகள், தொகுதி II, ப.43).

இப்படிப்பட்ட வளரியைப் பூமராங் எனும் பெயரில் ஆஸ்திரேலியப் பழங்குடி மக்களான அபோர்ஜினியர்கள் பயன்படுத்தி வருவதாகச் செய்திகள் கூறுகின்றன. ஆனால் அதற்கு முன்பாகவே தமிழனால் கண்டறியப்பட்டது என்பதே நிதர்சன உண்மையாகும். திருநெல்வேலி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் அகழ்வாய்வின் மூலம் இரண்டு மண்டை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டன. அவ்விரண்டு மண்டை ஓடுகளை ஆராய்ந்த அறிஞர்கள் திராவிடரும் அபோர்ஜினியரும் சேர்ந்து வாழ்ந்துள்ளனர் என்ற முடிவினைக் கருதியுள்ளனர். மேலும் இங்குக் கண்டெடுத்த மண்டை ஓடுகளில் ஒன்று திராவிடருக்கும் மற்றொன்று ஆஸ்திரேலியப் பழங்குடிகளின் முன்னோருக்கும் உரியது என ஜி.எலியட் ஸ்மித் கூறியுள்ளார்.

இவ்வாறு சிறப்புமிக்க ஆயுதமான வளரி தற்போதும் பாதுகாப்பாகவும் கண்காட்சியாகவும் வைத்துப் பராமரிக்கப்பட்டு வருகின்றது. இராமநாதபுரம் ராமவிலாசத்தில் தொல்லறிவியல் துறையினரால் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. புதுக்கோட்டை திருக்கோகர்ணத்தில் உள்ள அருங்காட்சியகத்திலும் இவ்வளரி பாதுகாக்கப்பட்டு வருகின்றது.

சோழரால் பிரிக்கப்பட்ட நாடுகள்

முந்தைய காலச் சேதுநாடு என்பது இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை போன்றவையே. இம்மூன்று சமஸ்தானங்களும் ஒருங்கே இணைந்தாகும் கிழவன் சேதிபதி காலத்துப் புதுக்கோட்டை கி.பி.1673-1708 பவானி சங்க சேதுபதி காலத்துச் சிவகங்கை கி.பி.1724-1728 ஆகிய ஆண்டுகளில் நாட்டிற்குச் சேதுபதிகளே தனித்தலைவராய்ச் செங்கோல் செலுத்தினார்கள் என வரலாறு சுடடுகின்றது.

சோழரால் நாடாட்சி பிரித்தளிக்கப்பட்ட திரையரெல்லாம் தொண்டைமான்கள் எனப் பெயர் கொண்டாற் போல இச்சேதுபதிகளால் நாடாட்சி பிரித்தளிக்கப்பட்டவராகிய புதுக்கோட்டையுடையாரும் தொண்டைமான் என்னும் பட்டத்தினைப் புனைந்து விளங்குதலுங் கண்டு கொள்க. பண்டைக் காலத்துச் சேதுநாடு என்பன இராமநாதபரம், சிவகங்கை, புதுக்கோட்டை இம்மூன்றும் ஸமஸ்தானங்களும் ஒருங்கு சேர்ந்ததாகும் (இராகவையங்கார்.இரா., தமிழகக் குறுநில வேந்தர்கள், 1994, .122).

ஆரியர் வருகை

சேதுபதிகளே வடநாட்டில் உள்ள ஆரியர்களை அழைத்துப் புண்ணிய ஸ்தலமாகக் கருதப்படும் இராமேஸ்வரம் கோவில் கடவுளுக்கு வருவழித் தொண்டராய் சிறக்கச் செய்தனர். ‘ராமநாதசுவாமி ஸகாயம்என்பதே பண்டைக்காலச் சேதுபதிகளின் கையொப்பமாகும். இதற்குச் சான்றாகச்

சூலங்கைக் கொண்ட விரோமேசர் தாண்முடி ஆடியெழு

ஞாலங்கைக் கொண்ட ரகுநாயகன்

எனவும்,

சூரியர் போற்றுமிராமேசர் தாளிணைக் கன்புவைத்த

சூரியன் வீரையர் கோன்ரகு நாதன்

எனவும் அமிர்தகவிராயர் அடிகளின் மூலம் விளங்கப்பெறலாமென ராகவையங்கார் சுட்டுகின்றார். மேலும் சான்றுக்கு வலுசேர்க்கும் வகையில் இவர்களின் சாசனங்களில்ஆரியர் மானங்காத்தான்என ஒரு விருது வழங்குவதும் இவர் ஆரியரைப் போற்றி வந்தமையைக் குறிக்கின்றது.

சோழர்களில் தலைநகராக்கிய ஊர்கள்

சேதுபதிகள் இராமநாதபுரத்தைத் தமக்குரிய தலைநகரமாக மாற்றிக் கொள்வதற்கு முன் சோழர்கள் சேதுநாட்டின் பல ஊர்களைத் தமதாக்கிக் கொண்டனர். அவ்வாறு தலைநகராக்கிய ஊர்களின் பெயர்களைக் கீழே காணலாம்.

.எண் ஊர்ப்பெயர் சான்று
1.      குலோத்துங்க சோழன் நல்லூர் கல்வெட்டு
2.      விரையாத கண்டன் கல்வெட்டு
3.      செம்பி ஒருதுறைக்கோவை
4.     கரந்தை ஒருதுறைக்கோவை
5.      வீரை ஒருதுறைக்கோவை
6.      தேவை (இராமேஸ்வரம்) ஒருதுறைக்கோவை
7.      மணவை ஒருதுறைக்கோவை
8.      மழவை ஒருதுறைக்கோவை
9.      புகலூர் ஒருதுறைக்கோவை

சோழர்களால் சுட்டப்பட்ட ஊர்ப்பெயர்களில் அரசாண்ட பழைய சேதுபதிகளின் பெயர்கள் முறையே வரிசையாகத் தற்போது கிடைக்கவில்லை. இருப்பினும் “சேதுபதிகள் வரலாறு குறித்துள்ள பழைய கையெழுத்துப் பிரதி யொன்றாற் சில பெயர்கள் அறியலாவன. அப்பெயர்கள் வருமாறு:

 

 1. ஆதிரகுநாத சேதுபதி
 2. ஜயதுங்கரகுநாத சேதுபதி
 3. அதிவீரரகுநாத சேதுபதி
 • வரகுணரகுநாத சேதுபதி
 1. குலோத்துங்க சேதுபதி
 2. சமரகோலாகல சேதுபதி
 3. மார்த்தாண்ட பைரவ சேதுபதி
 4. சுந்தரபாண்டிய சேதுபதி
 5. காங்கேயரகுநாத சேதுபதி
 6. விஜயமுத்துராமலிங்க சேதுபதி

இவர்கள் சேதுநாட்டிலுள்ள சில பழைய கோவில்களைக் கட்டுவித்தனர் எனவும் அவற்றிற்குச் சில கிராமங்கள் அளித்தனர்” (தமிழகக் குறுநில வேந்தர்கள், ப.123). ஆனால் இதற்கான முழுமையான சான்றுகள் கிடைக்கப்பெறவில்லை. இவருக்குப் பின் நாடாண்ட இருபத்து மூன்று சேதுபதிகளின் (1604-1903) வரலாறு கிடைத்துள்ளது. Mr.Nelson’s Madura country மகா ஸ்ரீஸ்ரீ.பி.ராஜாராமராகவன் Ramnad manual, Mr.Sewell துரையவர்களுடைய List of Autiquities madras vol-II ஆகியோரின் நூல்களில் மேற்கூறிய இருபத்து மூன்று சேதுபதி மன்னர்களின் ஆண்டுகள் குறிப்புடன் (ஏறக்குறைய 3 நூற்றாண்டுகள்) கொடுத்துள்ளனர்.

இலக்கியங்களில் சேதுவும் சேதுநாடும் குறித்த பதிவுகள்

தமிழரின் பண்பாட்டுக் களஞ்சியமெனப் போற்றப்படும் சங்க இலக்கியம் பல புலவர் பெருமக்களால் பாடப்பட்டுள்ளன. ஒருங்கிணைந்த இராமநாதபுரம் மாவட்டம் எனும் முறையில் சங்க இலக்கியத்தில் சேதுநாட்டைப் பற்றிப் பாடிய புலவர்கள் கணிசமாக உள்ளனர். சேதுநாட்டையோ அம்மன்னனையோ பாடிய புலவர்களின் பாடல்களை ஆராய்ந்து அவை இருவகையில் பிரிக்கப்பட்டுள்ளன. 1.சேதுநாட்டில் பிறந்த புலவர்கள் 2.சேதுநாட்டில் பிறவாது பிற ஊர்களில் பிறந்து சேதுநாட்டு மன்னர்களைப் பாடிய புலவர்கள் எனும் முறையில் கையாளப்பட்டுள்ளது. சங்க காலப் புலவர்களாவோர்: பிசிராந்தையார், அள்ளூர் நன்முல்லையார், வெள்ளைக்குடி நாகனார், நல்லாந்தையார், ஒக்கூர் மாசாத்தியார், ஒக்கூர் மாசாத்தனார், பாரி, ஐயூர் மூலங்கிழார், உக்கிரப் பெருவழுதி (மன்னன்), உறையூர் ஏணிச்சேரி முடமோசியார், கோவூர் கிழார், கணியன் பூங்குன்றனார், வெண்ணிக்குத்தியார், மருதன் இளநாகனார், மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார், காரிக் கண்ணனார், கோணாட்டு எறிச்சிலுர்மாடலன், ஆவூர் மூலங்கிழார், வடம வண்ணக்கன் பேரிசாத்தனார், கதையங் கண்ணனார், மருங்கூர்கிழார்,  பெருங்கண்ணன், மருங்கூர்ப்பட்டினத்து சேந்தங்குமரனார், மருங்கூர்பாகைச் சாத்தம் பூதனார், மருதன் இளநாகனார், நல்லாந்தையர், கோவூர்க்கிழார், மிளைக் கந்தன், முப்பேர் நாகனார், மோசி கண்ணத்தனார், வேம்பற்றூர்க் கண்ணன் கூத்தன், வேம்பற்றூர் குமாரனார்.

சங்க இலக்கியத்திற்குப் பின் வந்த இலக்கியங்களில்

இளங்கோவடிகள் (சிலப்பதிகாரம் (காடுகாண்காதையில்)) புல்லங்காடன், பரிப்பெருமாள், படிக்காசுப்புலவர், பொன்னங்கால் அமிர்தகவிராயர், கம்பர், பரிமேலழகர், மாணிக்கவாசகர், மணவாள முனிவர், பொன்னங்கால் அமிர்தகவிராயர், மிதிலைப்பட்டி சிற்றம்பலக்கவிராயர், ஒட்டக்கூத்தார் போன்ற புலவர் பெருமக்கள் சேதுநாட்டில் பிறந்தவர்களாயும் சேதுநாட்டில் பிறவாது பாடிப் பரிசில் பெற்றவர்களாயும் திகழ்கின்றனர். இது மட்டுமில்லாது பல இலக்கியங்களும் பல புலவர்கள் இந்நாட்டினைப் பற்றியும் இந்நாட்டு மன்னரைப் பற்றியும் பாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இதுவரையிலான செய்திகள்வழிச் சேதுநாடு, சேதுபதி பற்றிய புரிதலுக்கான குறிப்புகள் பின்வருமாறு:

 • சேதுவையும் இமயத்தையும் இருபேரெல்லையாகக் கொண்டு இப்பரதகண்டம் வடநாடு/தென்னாடு என இரண்டாகப் பகுத்து நிற்கின்றது. இதனைக் கம்பர் உறுதிப்படுத்துகிறார் எனும் செய்தி நமக்குக் கிடைக்கின்றது.
 • சேர சோழர் படைப்புக் காலந்தொட்டே மேம்பட்டு வருதலுடைய பழைய தமிழ்க்குடியினராவர் என்ற செய்தி பரிமேலழகரின் உரை மூலம் அறிய முடிகிறது.
 • பாண்டியர் தலைமைக்குள்ளாய இச்சேதுநாடு சோழர், பாண்டியரை வென்று பாண்டிய நாட்டில் பெரும்பகுதியைத் தம் நாடாக்கிக் கொண்ட காலந் தொடங்கிச் செம்பி நாடாய், இந்நாட்டு மறவர், சோழன் மறவராய காரணத்தால் செம்பிநாட்டு மறவர் எனப் பெயர் பெற்று விளங்கியுள்ளனர்.
 • “வங்க வீட்டத்துத் தொண்டியோ” சேதுநாட்டுத் தொண்டி பற்றிச் சிலப்பதிகார ஊர்காண் காதை சிறப்பிக்கிறது.
 • மாறல்லோ’ என்பது மறவர்நாடு என்பதன் மருஉ என ‘யூல்’ என்ற அறிஞர் (530-550 AD) சேது நாட்டைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.
 • பத்திற்கும் மேற்பட்ட ஆறுகளும் பதினைந்திற்கும் முற்பட்ட தீவுகளைக் கொண்டதாகத் திகழ்ந்துள்ளது சேதுநாடு.
 • மூவேந்தர்களுக்கும் போர் மறவராய்த் திகழ்ந்துள்ளனர்.
 • சேதுநாட்டில் சோழர் ஆட்சிபுரிந்தமைக்குப் பல சான்றுகள் கிட்டியுள்ளன.
 • வளரி எனும் ஆயுதத்தைக் கையாளுவதில் திறம்மிக்கவர் சேதுநாட்டினர் என்பதை அறியமுடிகிறது.
 • வடநாட்டில் உள்ள ஆரியர்களை அழைத்துப் புண்ணியத்தலமான இராமேஸ்வரத்திற்கு வருகை புரியத் துணைபுரிந்தவர்கள் சேதுபதிகளே.
 • புலவர்களை ஆதரித்துப் பரிசில் கொடுத்துச் சிறப்பு செய்தவர்கள் இச்சேதுபதிகளே.

மேற்சுட்டிய செய்திகள் இராகவையங்காரின் தமிழகக் குறுநில வேந்தர்கள் எனும் நூலின் மூலம் அறியமுடிகிறது.

மதுரையிலும் கொற்கையிலும் இருந்து நீண்ட காலங்களாக ஆட்சி ஆண்ட பாண்டியர்களது அதிகார வரம்பிற்குள்ளும் இவர்களைத் தொடர்ந்து சோழர்கள், இசுலாமியர், நாயக்கர், சேதுபதி மன்னர்கள் இராமநாதபுரத்தினை ஆட்சி செய்துள்ளனர். அக்காலத்தில் இப்பகுதி நாடு, வளநாடு, கூற்றம் எனப் பல்வேறு பிரிவுகளாக நிர்வாகத்தின் பொருட்டுப் பிரிக்கப்பட்டிருந்தது.

வேம்புக்குடி நாடு                    –      சாத்தூர் வட்டம்

வேம்பு நாடு, பருத்திக்குடி            –      அருப்புக்கோட்டை வட்டம்

வடதலைச் செம்பிநாடு               –      முதுகுளத்தூர் வட்டம்

கீழ்ச் செம்பிநாடு, செவ்விருக்கை நாடு  –      இராமநாதபுரம் வட்டம்

பொலியூர் நாடு                      –      கமுதி வட்டம்

கைக்கை நாடு                       –      பரமக்குடி வட்டம்

ராஜராஜப்பாண்டி நாடு               –      மானாமதுரை வட்டம்

தென்னாலைநாடு நாடு, களவழிநாடு    –      தேவகோட்டை வட்டம்

கானப்பேர் நாடு                            –      சிவகங்கை வட்டம்

திருப்பாடாவூர் நாடு                  –      திருப்பத்தூர் வட்டம்

இடையா நாடு, தழையூர் நாடு        –      திருவாடானை வட்டம்

இந்த நாடுகள் மதுரோதைய வளநாடு, மதுராந்தக வளநாடு, கேரள சிங்க வளநாடு, அதளையூர் வளநாடு, திருபுவன முழுதுடையார் வளநாடு, வரகுணவளநாடு, ஜெயமாணிக்க வளநாடு என்பன போன்ற பிரிவுகளும் அடங்கும். இவற்றினிடையே பகானூர் கூற்றம், துகவூர் கூற்றம், முத்தூர் கூற்றம், மிழலைக் கூற்றம் போன்ற உட்பிரிவுகளும் இருந்தமை தெரிய வருகின்றன. இவையனைத்தும் பாண்டியர்கள், சோழர்கள் பிற்காலப் பாண்டியர் ஆகிய பேரரசுகளின் கால நிலையாகும். (இராமநாதபுரம் மாவட்டம், வரலாற்றுக் குறிப்பு, ப.2)

நாயக்க மன்னர்களின் ஆட்சியின்போது சேதுநாடு பெரிதும் மாற்றம் பெற்றது. அவர்கள் தங்களது பூர்வீக நாடான வடுகர் மாநிலத்தில் அக்காலக் கட்டத்தில் நடைமுறையில் இருந்த அமர நாயக்க முறையான யானைக்காரர் முறை நிர்வாகத்தைப் பாண்டிய நாட்டில் புகுத்திக் கடைப்பிடித்தனர். இதன் விளைவாய்த் தென்பாண்டிச் சீமை எழுபத்தியிரண்டு (72), பாளையப்பட்டுகளாகப் பிரிக்கப்பட்டுப் பெரும் நிலக்கிழார்கள், குறிப்பிடப்பட்ட எல்லைக்குட்பட்ட பாளையப் பகுதிகளின் தலைவர்களாக நியமனம் செய்யப்பட்டனர் என்பதை அறியமுடிகிறது.

சேதுநாட்டில் சமண, பௌத்த அடையாளங்கள்

சேதுநாட்டில் சமணர்கள் கமுதி, அருப்புக்கோட்டை, திருச்சுழி ஆகிய பகுதிகளில் வாழ்ந்துள்ளனர். எட்டாம் நூற்றாண்டைய ‘பள்ளிமடம்’ கல்வெட்டு இந்த உண்மையை உணர்த்துகிறது. அனல் வாதத்திலும் புனல் வாதத்திலும் சம்பந்தரிடம் தோல்வியுற்ற சமணர்கள் மதுரைக்குப் பிறகு அடுத்த புகலிடமாக இப்பகுதியில் குடியேறியிருக்க வேண்டும். அவர்களுக்குப் பாண்டியன் மாறஞ்சடையன் தக்க உதவிகளை வழங்கினான் (இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்றுக் குறிப்புகள், ப.12)

கோவிலாங்குளத்தில் உள்ள இன்னொரு கல்வெட்டிலிருந்து இப்பகுதி சமணத்துறவிகளும் மகாவீரதீனிகளும் விரும்பி வாழ்ந்த பகுதியாக விளங்கியது தெரிகிறது. இதனைப் போன்று இம்மாவட்டத்தின் வடகிழக்குப் பகுதியும் அருக சமயத்திற்கு ஆதரவு தந்ததாகத் தெரிகிறது. இளையான்குடி, ஆனந்தூர், அமைந்தகுடி, திருக்காளக்குடி, பிரான்மலை, கீழப்பனையூர் ஆகிய சிற்றூர்களில் காட்சியளிக்கும் சமணத் துறவிகளது கற்திருமேனிகள் இந்த உண்மையை உறுதிப்படுத்துகின்றன. சீ(சை)னமங்கலம், சாத்தப்பள்ளி, சாத்தனூர், சாத்தன்குளம், சாத்தமங்கலம், அச்சன்குளம், அச்சன்குடி, அறப்போது, நாகணி, நாகனேந்தல், விளக்கனேந்தல், குணங்குடி, குணபதிமங்கலம் ஆகிய ஊர்களும் சமணர்களது குடியேற்றங்கள் என்பதில் ஐயமில்லை (இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்றுக் குறிப்புகள், பக்.12-13).

இது மட்டுமின்றிப் பௌத்த சிலைகள் இம்மாவட்டத்தில் கண்டறியப்பட்டுள்ளன. மகாவீரர் சிலை கிடாரம் அருகில் இருந்துள்ளது எனக் கூறுகின்றனர். இளையான்குடி, சாலைக்கிராமம் ஆகிய ஊர்களில் இன்றும் பௌத்த சிலைகள் காணலாகின்றன.

அகழாய்வில் சேதுநாடு

தற்போது அழகன்குளம் (மருங்கூர்பட்டினம்) எனும் ஊரில் தொல்லியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாய்வின் மூலம் சேதுநாட்டின் பண்டைய சமூகம், வாணிபம், மக்கள் நிலை ஆகியவற்றை அறியலாம். தற்போது சிவகங்கை மாவட்டம் எல்லை மதுரை நகரிலிருந்து அண்மைத் தொலைவில் கீழடி எனும் ஊர் உள்ளது. இந்தியத் தொல்லியல் துறையின் 6 ஆம் அகழாய்வுப் பிரிவினர் முதல்கட்ட அகழாய்வைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட அகழாய்வில் ஈடுபட்டு வருகின்றனர். தொல்கால அடையாளப் பதிவுகளை வெளிக்கொணரும் முகமாக ஐயாயிரத்திற்கும் முற்பட்ட சுடுமண், கிணற்று உறைகள், குழாய்கள், வடிகால்கள், வாய்க்கால்கள், மூடிய நிலையிலான சாக்கடை வழிப்பாதைகள், குளியலறை, கழிவுக் குழிகள், சிற்றறைகள், தாழிகள், மண்பாண்டங்கள், இரும்பு உலைக் குழிகள், அணிமணிகள், காசுகள், கருவிகள், தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

வைகை ஆறு உற்பத்தியாகும் வருசநாட்டு மலையிலிருந்து முடிவுறும் இராமநாதபுரம் வரையிலும் ஆற்றின் இரு புறங்களிலும் 280-க்கும் மேற்பட்ட தொல்லியல் இடங்கள் கண்டறியப்பட்டு உள்ளன. இவற்றுள் பழங்கால வாழிடத் தொல்லியல் நிலப்பரப்பாகக் கீழடி அடையாளப்படுத்தப்பட்டு இருக்கிறது[1].

மேற்சுட்டிய 280 இடங்களில் சேதுநாடும் இடம்பெறுகிறது. கீழடி போல் சேதுநாட்டின் பெரும்பான்மையான பகுதிகளில் அகழாய்வு மேற்கொண்டால் தொல்தமிழர்களின் வாழ்க்கை முறையினை அறிவதோடு மட்டுமின்றிச் சேதுநாட்டின் பழமையின் அடிச்சுவடுகளையும் அறியலாம்.

துணைநூற்பட்டியல்

 1. அண்ணாமலை பழ., செட்டிநாடு ஊரும் பேரும், 1986, மணிவாசகர் பதிப்பகம், சிதம்பரம்.
 2. அமிர்தகவிராயர், ஒருதுறைக்கோவை, 1977, பழனியப்பா பிரதர்ஸ், சென்னை.
 3. இராகவையங்கார் ரா., தமிழகக் குறுநில வேந்தர்கள், 1994, பாரதி பதிப்பகம், சென்னை.
 4. உ.வே.சா., ஐங்குறுநூறு பழைய உரை, 1957.
 5. கமால் எஸ்.எம்., சேதுபதி மன்னர் வரலாறு, 2003.
 6. கமால் எஸ்.எம்., முகம்மது செரீபு.நா., இராமநாதபுரம் மாவட்ட வரலாற்றுக் குறிப்புகள், 1984, பாரதி அச்சகம், மானாமதுரை.
 7. கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள், (பிற குறிப்புகள் இல்லை)
 8. புலனத்தகவல்.
 9. தமிழ்நாட்டு வரலாற்றுக் குழு, தமிழ்நாட்டு வரலாறு (பல்லவர்-பாண்டியர் காலம்), 1990, தமிழ்நாடு அரசு வெளியீடு, சென்னை.
 10. மணிமாறன், தமிழ் ஆய்வுக் கட்டுரைகள், தொகுதி I, 2016, சரசுவதி மகால் நூலகம், தஞ்சை.
 11. மனோகரன் மீ., கிழவன் சேதுபதி, 2012, அகரம் பதிப்பகம், தஞ்சாவூர்.

[1] கீழடி : மடைச்சி வாழ்ந்த தொல்நிலத்தில் எம் காலடித்தடங்கள், ஏர் மகாராசன் – புலனத்தகவல்

சே. முனியசாமி

முனைவர்பட்ட ஆய்வாளர்

இந்திய மொழிகள் மற்றும் ஒப்பிலக்கியப் பள்ளி

தமிழ்ப் பல்கலைக்கழகம்

தஞ்சாவூர்