இடைச்சொற்கள் என்பன பெயர் வினைகளைச் சார்ந்து இயங்குவன எனினும், இடைச்சொற்கள் இன்றி மொழியில் சொல்லுருவாக்கங்கள் நிகழ்வதில்லை. காலந்தோறுமான தமிழ் இலக்கண நூல்களில் இடம்பெறும் இடைச்சொற்கள் குறித்த இயல் அமைப்புகளை நோக்கும்வழி இடைச்சொற்களின் இன்றியமையாமையை அந்நூல்கள் எவ்விதம் புலப்படுத்தியிருக்கின்றன என்பதை விளக்க இக்கட்டுரை முற்படுகிறது.

இடையியல் மாற்றங்கள்

தமிழ் மரபிலக்கண நூல்கள்; சீகன்பால்கு, பெஸ்கி, ரேனியஸ், கிரால் உள்ளிட்ட ஐரோப்பியர்களின் கற்பித்தல் இலக்கண நூல்கள்; தற்காலத் தமிழுக்கான இலக்கண நூல்கள் ஆகியனவற்றை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது  இடையியல் தனது இயல் இருப்பு நிலையிலும் உள்ளடக்க நிலையிலும் காலந்தோறும் மாற்றம் கண்டுள்ளது.

அம்மாற்றங்கள்,

 1. சொல்லதிகார இடையியல் இருப்புநிலை மாற்றம்
 1. வரிசைமுறை மாற்றம்
 2. தனிஇயல் அமைக்காமை
 1. இடையியல் உள்ளடக்க நிலை மாற்றம்
 1. பிற சொற்றொகுதிகளை இணைத்தமை
 2. தனிச் சொற்கள் (பட்டியல்) குறிப்பிடப்படாமை

என்ற நிலைகளில் காணப்படுகின்றன.

சொல்லதிகாரத்தின் இடையியல் இருப்புநிலை மாற்றம்

தமிழின் மரபான சொல்லதிகார இயல் வைப்பு முறை பெயர், வினை குறித்த இயல்களுக்குப் பின்னர் இடையியலை வைத்து விவரிப்பதாகும். பின்வந்த இலக்கண நூல்கள் இவ்வரிசை மாறிய வைப்பு முறை ஏற்படுத்தியும், இடைச் சொற்களுக்குத் தனி இயல் ஏற்படுத்தாமலும் மாற்றத்தை உண்டாக்கியுள்ளன.

தொல்காப்பியம் இடையியல் வைப்புமுறைக்கான காரணத்தை இது பெயரையும் வினையையும் சார்ந்து தோன்றுதலின் அவற்றின்பின் கூறப்பட்டது (1986:1) என்று தெய்வச்சிலையார் கூறுகிறார். சார்ந்து வருதலால் அவை சிறப்புடையன அல்ல, முக்கியத்துவம் குறைந்தன (less important,1945:196 ) என்று குறிப்பிடப்பட்டன. தற்காலத் தமிழில் பெயரடை, வினையடை என்பன தனிச் சொல்வகுப்புகளாக நிலைபெற்றுவிட்ட நிலையில் பெயர், வினை, பெயரடை, வினையடை என்று தனித்தியங்கும் சொற்பிரிவுகளின் விளக்கத்திற்குப் பின்னரே இடை குறித்து விவரிக்கும் முறை கடைபிடிக்கப்படுகிறது.

எனினும், ரேனியஸ் (1846) தனது தமிழ் கற்பித்தல் இலக்கண நூலில், சொல்லியலின் முதன்மைப் பகுதியாக இடைச்சொல் பற்றி விளக்கிவிட்டு, அதன் பிறகே பெயர், வினை பற்றிய இயல்களை அமைக்கிறார். பிற சொல் வகைகளின் உருவாக்கத்திற்கு இடைச்சொற்களே மிகவும் உறுதுணையாயுள்ளன எனவும் இவ்இடைச் சொற்களை முதலில் கற்று அறிவு பெறுவது, மொழிக் கற்றலை எளிதாக்கிவிடும் (1846:37) என்றும் கூறுகிறார். விதி, விளக்கமுறை இலக்கண நூல்களில் சார்ந்து இயங்காதன என்ற நிலையில் இடைச்சொற்கள் பெற்ற இரண்டாம் நிலையும் கற்பித்தல் நூலில் பிற சொற்பிரிவுகளின் தோற்றத்திற்கு இன்றியமையாதது என்ற நிலையில் அவை பெற்ற முதன்மை நிலையும் கருதத்தக்கன.

எனினும் ரேனியஸின் இயல் வைப்புமுறை பரவலாகப் பின்பற்றப்படவில்லை. ஏனெனில் பெயர், வினைகள் உருவாக்கத்திற்குத் தேவையான இடைச்சொற்கள் அவ்வவ் இயல்களிலேயே விளக்கிக் கூறப்பட்டுவருகின்றன.

மரபு இலக்கண நூல்களிலும் கூட இடையியலுக்கெனத் தனி இயல் அமைக்கப்படாமல்  உள்ளது. இலக்கணக்கொத்து, பிரயோக விவேகம், முத்துவீரியம், சுவாமிநாதம் ஆகியன இடைச்சொல்லுக்கெனத் தனி இயல் அமைக்கவில்லை. இலக்கணக் கொத்து, முத்துவீரியம் ஆகியன ஒழிபியலிலும் சுவாமிநாதம் எச்சமரபிலும் இடைச்சொல் குறித்துக் கூறியுள்ளன. இந்நூல்கள் அனைத்தும் வடமொழிச் சார்பின என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

பெஸ்கி எழுதிய கொடுந்தமிழ் (1728) இலக்கண நூலிலும் இடையியலுக்கெனத் தனி இயல் அமைக்கப்படாமல் நான்காவது இயலான தொடரியலின் ஆறாவது பகுதியாக இடைச்சொற்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. பிற சொற் பிரிவுகளும் இடைச்சொல் பகுதியில் இடம் பெற்றமை, தொடர்ப் பயன்பாட்டு விளக்கமுறை ஆகியன இதற்குக் காரணங்களாகின்றன.

இக்காலத் தமிழ் மரபு நூலில் ‘சில ஒட்டுகள்’ என்ற தலைப்பில்தான் இடைச்சொற்கள் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளன. ஒட்டுக்களை முன்னொட்டு, பின்னொட்டு, உள்ளொட்டு எனப் பிரித்து வடமொழியிலிருந்து கடன்பெற்ற சொற்களில் முன்னொட்டுக்கள் உள்ளன என்றும் கூறுகிறார். பின்னொட்டுக்களே தமிழில் உள்ளன என்று கூறுபவர் –உம், -ஓ, -ஆவது ஆகியனவற்றை விவரிக்கிறார். இவற்றில் உம், ஓ என்பனவற்றைத் தமிழிலக்கண நூல்கள் இடைச்சொற்கள் எனக் கூறும் என்கிறார்(2011:266). ஆக,மொழியியல் வளர்ச்சி அடைந்த தமிழ்ச் சூழலில் இடைச்சொல்லிற்கான தனி இயல் அமைக்கப்படாமல் ‘ஒட்டுகள்’ என்ற பிரிவு முக்கியத்துவப்படுத்தப்படுகிறது.

இடையியல் உள்ளடக்க நிலை மாற்றம்

குறிப்பிட்ட வகை இடைச்சொற்களின் பட்டியலைப் பொருண்மையுடன் கூறும் மரபாகவே தமிழ் இலக்கண நூல்களில் இடையியல் அமைக்கப்பட்டு வந்திருந்தது.

தொல்காப்பியத்தின்படி இடைச்சொற்கள் ஏழு வகையினதாகவும் நன்னூலின்படி எட்டு வகையினதாகவும் அமைகின்றன.

இடைச்சொல்லிற்கான தனி இயலில் தொல்காப்பியம், இலக்கண விளக்கம் ஆகியன அசைநிலை, இசைநிறை, தத்தம் குறிப்பிற் பொருள் செய்வன குறித்தும்; நன்னூல் அசைநிலை, இசைநிறை, தத்தம் பொருள, குறிப்பு என்பனவற்றையும்; நேமிநாதம் தத்தம் குறிப்பில் பொருள் செய்வன குறித்தும் விவரித்துள்ளன. ஏனைய வகைகள் எழுத்ததிகாரம் (சாரியை, இடைநிலை, விகுதி), சொல்லதிகாரப் பிற இயல்கள் (சாரியை, விகுதி, வேற்றுமை, இசைநிறை), பொருளதிகாரம் (ஒப்பு உருபு) ஆகியவற்றில் விளக்கப்பட்டுள்ளன. எனவே மரபான இடையியல் அமைப்பு தத்தங் குறிப்பில் பொருள் செய்வன, அசைநிலை, இசைநிறை ஆகியனவற்றை விவரிப்பதாகவே உள்ளது.

நன்னூல் கூறும் எட்டு வகைகளைக் குறிப்பிடும் கிரால் அவற்றை ஒரு குழப்பமான பட்டியலாகக் கருதுகிறார் (1955:55). அவற்றில் பெரும்பாலானவை வினையடைகள், முன்னொட்டுக்கள், இணைப்பிடைச் சொற்கள் என எண்ணுகிறார். மேலும், ஐரோப்பியர்கள் எழுதிய இலக்கண நூல்களில் பிற புதிய சொல் வகுப்புகளும் இடைச்சொல் பிரிவில் இணைக்கப்பட்டுள்ளன. சீகன்பால்கு (1716) ஏழாவது இயலாக அமைத்துள்ள ‘particles’ இயலில் பின்னுருபுகள், வினையடைகள், வியப்பிடைச் சொற்கள், இணைப்புச் சொற்கள் ஆகியன விளக்கப்பட்டுள்ளன. பெஸ்கி முதற்கொண்டு பிறரும் இம்முறையைப் பின்பற்றியுள்ளனர். ஆங்கிலத்தின் முன்னொட்டுக்கள், பின்னொட்டுக்கள், இணைப்பிடைச் சொற்களுக்கு இணையான சொற்களைத் தமிழ் இடைச்சொற்களில் கண்டறிந்தும் கூறியுள்ளனர்(1891:113-135). வியப்பு, இணைப்புச் சொற்கள் இடைச்சொற்களில் அடங்கும் எனினும் வினையடைச் சொற்களை இடையியலில் அமைத்துள்ளமை உற்றுநோக்கத்தக்கதாகும். தமிழில் தனிச்சொற் பிரிவாக அமையாத, தமது மொழிகளில் தனிச்சொற் பிரிவாக அமைந்தவற்றை ஒன்றிணைத்து இடையியலில் அமைக்கின்றனர். இவற்றை மோ.இசரேயல் இடைச்சொற்கள் எனக் கொள்ளாமல் ஒருநிலைச் சொற்கள் எனக் கொள்கிறார் (1977:16).

இக்காலத் தமிழ் இலக்கணம் நூலில் தனிச்சொல் நிலையில் அமைந்தவை, தனிச்சொல் போலத் தோன்றினாலும் விகுதி போலச் செயல்படுவன, மிதவை ஒட்டுகள், விகுதிகள் என்று இடைச்சொற்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் அடங்காதவற்றை ஏனையவை எனப் பிரித்துள்ளார் (2002:30-32). உரையாடல் குறிப்பான்கள், விளிசார் ஒட்டு, வியப்புக் கிளவிகள், நிரப்பிகள் போன்றனவும் இடைச் சொற்களில் அடக்கப்பட்டுள்ளன (2002:115-122).

இடையியலுக்கான இடைச்சொற்றொகுதியைக் கற்பித்தல் மற்றும் விளக்கமுறை இலக்கண நூல்கள் பட்டியலாகத் தரவில்லை. சீகன்பால்கு தொடங்கி மு.பரமசிவம் வரை இடைச்சொற்களைத் தொடரில் அமைத்து அவற்றின் செயல்பாட்டு நிலையை விளக்குகின்றனர்.

மாற்ற விளைவுகள்

மாற்றம் கண்ட அமைப்புதான் வளர்ச்சி அடைந்ததாகக் கருதப்படும். தமிழில் இடைச்சொல் என்னும் சொற்பிரிவு இயல் இருப்புமுறை, உள்ளடக்க நிலை ஆகியவற்றில் காலந்தோறும் மாற்றங்களைக் கண்டு வந்துள்ளது. இம்மாற்றங்களின் தீவிரத்தால்தான் “இடைச்சொல்லுக்குப் புதிய வரையறை வேண்டும்”(2011:ix) என்ற கருத்து இந்நூற்றாண்டில் முன்வைக்கப்பட்டுள்ளது. ஒரு இலக்கண நூலில் இடையியல் என்று தனி இயல் அமைக்கப்பட்டிருந்தாலும் இடைச்சொற்கள் பல்வேறு இயல்களில் விவரிக்கப்படுவதையும் அவற்றின் தொடரியல் பங்களிப்பினையும், புதுச்சொற்கள் பெருக்கத்தினையும் கருத்திற்கொண்டு அவ்வரையறை அமைக்கப்பட வேண்டும்.

 துணைநூற்பட்டியல்

 1. இசரேயல், மோ., இடையும் உரியும், சிந்தாமணி வெளியீடு, 1977.
 2. சிவலிங்கனார், ஆ., தொல்காப்பியம் – சொல்லதிகாரம் ( உரைவளம்), உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை.
 3. சுப்பிரமணியர், ச.வே., (ப.ஆ)., தமிழ் இலக்கண நூல்கள், மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம், 2007.
 4. நுஃமான் எம்.ஏ., அடிப்படைத் தமிழ் இலக்கணம், அடையாளம், புத்தாநத்தம், 2007.
 5. பரமசிவம், கு., இக்காலத் தமிழ்மரபு, அடையாளம் பதிப்பகம், புத்தாநத்தம், திருச்சி, 2011.
 6. பொற்கோ, இக்காலத் தமிழ் இலக்கணம், பூம்பொழில் வெளியீடு, சென்னை, 2002.
 7. Arden,A.H., A Progressive Grammar of Common Tamil, CLS,Madras,1891.
 8. Bartholomeo Zegenbalg, Grammatical Damulica, 1716.
 9. Charles graul, D.D., Outline of Tamil Grammar, Leip Zig, 1855.
 10. Constanins Joseph Beschi, A Grammar of the common dialect of the tamul language called கொடுந்தமிழ், Madras, 1848.
 11. Rhenius, C.T.E. , A grammar of the Tamil language with an appendix, Madras, 1936.
 12. Subrahmanya sastri, P.S., Tolkappiyam-collatikaram- with an English commentary , Annamalai University, Annamalai Nagar,1945.

முனைவர் மா.ஆசியாதாரா

உதவிப் பேராசிரியர், தமிழாய்வுத்துறை

காவேரி மகளிர் கல்லூரி, திருச்சிராப்பள்ளி-18.