“இருளை நீக்கி ஒளியினைக் காட்டுவாய்

இறப்பை நீக்கி அமிர்தத்தை ஊட்டுவாய் ..”

எனும் மகாகவி பாரதியின் நாட்டிற்கான கல்வி பற்றிய கவிதையானது, கல்வியின் மீதான விலையேறப்பெற்ற மகத்துவத்தைச் சுட்டிக்காட்டி  நிற்கின்றது. இத்தகு மனித வாழ்கையையே மாற்றியமைக்கும் “கல்வி” எனும் சொல்லை நாம் சுயாதீனமாகப் பயன்படுத்திய போதிலும் அதனால் கருதப்படுவது யாது என வினாவப்பட்டால் அதற்காக வழங்கக்கூடிய குறித்த விடை ஏதும் கிடையாது. அது ஒரு கருத்துப்பொருளான எண்ணக்கருவாக அமைந்திருப்பதே அதற்கான காரணமாகும். வெறுங்கண்ணால் காணக்கூடிய மற்றொருவருக்கு அது பற்றிய விளக்கக்கூடிய ஒன்றாகிய கூட்டுப்பதத்தைவிட, கருத்துப்பொருளான சொல்லுக்கு வரைவிலக்கணம் கூறுவது இலகுவானதொன்றல்ல. கல்வி என்பதால் கருதப்படுவது யாது எனும் வினாவைக் கல்வித்தத்துவ ஞானியே எழுப்புகின்றான். இதற்கான பற்பல விடைகள் கிடைக்கப்பெறலாம். அவ்வொரு விடையையும் கவனத்திற் கொண்டு அப்பதத்தினால் கருதப்படுவது யாது என ஆய்ந்தறிவது பொருத்தமானதாகும். அந்தவகையில் கல்வி எனும் எண்ணக்கருவானது காலத்திற்குக் காலம் விருத்தியடைவது. இவ்வெண்ணக்கருக்கள் சிலவற்றில் நிலையான அம்சங்கள் இருந்தாலும் சமுதாய காலமாற்றங்களுக்கேற்ப புதுக்கேள்விகள், புதுத்தேவைகள் என்பவற்றிற்கேற்ப அவை மாற்றமடைகின்றன. அதன் காரணமாக கல்வி பற்றிய திட்டமான வரைவிலக்கணம் ஒன்றை முன்வைப்பது கடினமான விடயம் எனலாம். ஆகவே கல்வி தொடர்பான மாற்றமுறுகின்ற எண்ணக்கருவை அக்காலகட்டங்களில் வாழ்க்கை நடாத்திய  தத்துவ ஞானிகள், அறிஞர்கள் , ஆசிரியர்கள் மூலமாக நாம் அறிந்து கொள்ள முடியும். அந்தவகையில் கல்வி தொடர்பாக எண்ணக்கருவை பற்பல  காலகட்டங்களில் உள்ள வரைவிலக்கணங்கள் கொண்டு ஆராய்வதற்கு ஆதாரமாக கல்வி என்பது யாது,  கல்விக்கான சுருக்கமாக வரைவிலக்கணங்கள்,  அவை மாற்றம் பெறுவதற்கான காரணங்கள் யாவை,  கல்வியின் நோக்கங்களுடன் இணைந்த துறைகள் யாவை என்பன பற்றி சுருக்கமாக நோக்குவது வினாவினடத்து முழுவிளக்கத்தை எமக்கு அளிப்பதாக அமையும் எனலாம்.

கல்வி என்ற சொல்லானது EDUCARE என்ற லத்தீன் மொழிச்சொல்லில் தோன்றியதாகும். “கல்” எனும் வினையடியோடு “வி” எனும் தொழிற்பெயர் விகுதி சேர்ந்து கல்வி என்றாகிறது. இது கல்லுதல் அல்லது அகழ்தல் எனப்பொருள் கொள்ளப்படுகிறது. உள்ளே இருப்பதனை வெளிக்கொண்டு வருதல் எனவும் இதனைக் கூற முடியும். சோக்கிரட்டீஸ் தொடக்கம் ஜோன் டூயி வரையான மேனாட்டு சிந்தனையாளர்களும் யக்ஞவல்லியர் தொடக்கம்  மகாத்மா காந்தி வரையிலான கீழைத்தேய சிந்தனையாளர்களும் அவர்களது வாழ்கைத்தத்துவங்களின் அடிப்படையில் கல்வியை வரையறை செய்துள்ளனர். தத்தமது வாழ்கை அனுபவங்களையும், சிந்தனைகளையும், எண்ணக்கருக்களையும் அடிப்படையாகக் கொண்டு இவர்கள் வழங்கியுள்ள வரைவிலக்கணங்களை சுருக்கமாக நோக்க முடியும். கல்வி என்றால் என்ன ?  என்ற வினாவிற்கு விடைதேடும் நோக்கில் பல்வேறு அறிஞர்கள் கருத்துகளை கூறியுள்ளனர்.

கல்வி என்பது தனிமனிதனின் வளர்சியாகும் ஆனால் இத்தனித்தன்மை வளர்ப்பதுடன் சமூக ஊழல்களையும் அகற்ற வேண்டும். சமுதாய பொருளாதார வளர்ச்சிக்கு உயிர் நாடியாக காணப்படுவது கல்வியாகும். அத்துடன் மனிதன் இருவிதமான அறிவைக் கொண்டவன் .ஒன்று இயலறிவு மற்றயது அனுபவ அறிவு . “இயலறிவிற்கும் அனுபவ அறிவிற்கும் செம்மையளிக்கும் திட்டவட்டமான ஒழுக்கம் கல்வியாகும்” என பொதுவாக கல்வி வகைப்படுத்தப்படுகின்றது. உலகை ஒன்றாக காண்பதே கல்வி” என தற்கால நெறியிலாளர்களையே வியக்கச் செய்யும் வகையில் ஒளவையார் நமக்கு கல்வி பற்றி கூறியுள்ளார் . அத்துடன் “கைப்பொருள் தன்னின் மெய்ப்பொருள் கல்வி” எனக் கொன்றை வேந்தனிலும், “உற்றுழியுங் கைக்கொடுக்கும் கல்வியினூங்கிலைச் சிற்றுயிர்க்குற்ற துணை” என நீதி நெறி விளக்கத்திலும் கல்வியின் பொருள் அமைந்துள்ளது.

 • கல்வி என்பது ஏட்டறிவை மட்டும் குறிப்பதன்று. ஒருவர் பெறுகின்ற அனுபவங்கள் கல்வி என்ற செயற்பாட்டில் உள்ளடக்கப்படும் கல்வி என்பது மனிதனுடைய ஆளுமையை வளர்சியடையச் செய்கின்ற செயற்பாடாகும்.
 • முழு நிறைவான ஆளுமையை வளர்க்கும் கல்வி என்பது கருவறை முதல் கல்லறை வரை வாழ்நாள் முழுதும் இடம்பெறுகின்ற செயன்முறையாகும்.
 • கல்வி என்பது அறிவு விருத்தி, உடல் விருத்தி, உள விருத்தி, அழகியல் விருத்தி, ஆன்மீக விருத்தியை முன்னெடுக்கின்ற செயற்பாடாகும்.
 • கல்வி என்பது உள்ளிருக்கும் பல்வேறு ஆற்றல்களையும், திறன்களையும் வெளிக்கொணர உதவும் செயன்முறை என்பது கல்வி எனும் சொல்லுக்கு முழுமையை கொடுக்கிறது.
 • கல்வி கற்றல் எனும் கருத்தைப் பெற்று வாழ்கையில் கல்வி மூலம் உயருதல் எனும் கருத்தையும் பெறுகின்றது.
 • மக்களின் பண்புகளையும் ஆற்றல்களையும் உயர்த்தி வளப்பதன் முலம் மக்களின் ஆளுமை வளர்ச்சிக்கு வழிகோலுவது கல்வியாகும்.
 • கல்வி என்பது ஆய்வை பெற்றுக்கொள்வதாகும்
 • கல்வி என்பது அறிவை பெற்றுக்கொள்வதாகும்
 • புறத்தே இருந்து கொண்டு வரப்பட்டு உட்படுத்திக்கொள்ளப்படும் விடயங்கள் இ நிகழ்வுகள் ஆகியவற்றினூடாக கட்டியெழுப்பப்படும் ஒரு சக்தியாகும்.
 • மனித தன்மையினை மனிதர் பெறத்துணையாக விளக்குவது என்று ஆங்கில கவிவாணன் வில்லியம் வோட்ஸ்வர் கூறியுள்ளார்
 • “கல்வி, தவறுகண், இசைமை கொடையென சொல்லப்பட்ட பெருமிதம் என்பது நான்கே” என்பது தொல்காப்பியனார் வாக்கு. அதாவது மக்களுக்கு வாழ்கையை கொடுக்கும் நான்கினுள் கல்வியும் ஒன்று என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 • கல்வியானது நுண்மதியாற்றலையும் திறன்களையும் வளர்க்கின்றது. அத்துடன் வாழ்கைக்கு வேண்டிய நற்பண்புகளையும் வளர்க்க வேண்டும். நற்பண்புகளை வளர்ப்பதன் மூலமே வாழ்கையின் குறிக்கோளை கல்வியால் பெற்றுக்கொடுக்க முடியும். வாழ்கைக்கும் கல்விக்கும் நெருங்கிய தொடர்பு காணப்படுகிறது. வாழ்கையின் குறிக்கோளை அடைய வழி கல்வியாகும். “கல்வியே வாழ்க்கை வாழ்க்கையே கல்வியாகும்.”

கீழைத்தேய அறிஞர்கள் கூறும் வரைவிலக்கணங்கள்

“தனியாளுக்குத் தேவையான அறிவைக் கொடுப்பதுடன், தனியாளின் உடல், உள, மனவெழுச்சி, சமூக இணக்கம், நடத்தை, ஆளுமை, விழுமியம் என்பவற்றை விருத்தி செய்யும் முகமாக அனுபவத்தை வழங்கி சமூகத்தோடு இயைபுபடுத்தும் செயற்பாடு கல்வியாகும்.” – (பொதுவான கருத்து)

1.அரவிந்தர் – “ஆன்மாவுக்குள் இருக்கும் ஆற்றலை வெளிக்கொண்டு வர உதவுவதே கல்வி”

2.மகாத்மா காந்தி – “பிள்ளையினுள் அடங்கியுள்ள அனைத்து ஆற்றலையும் வெளிக்கொண்டு வருவது கல்வியாகும்”

“வாழ்க்கைக்காக வாழ்க்கை அனுபவங்கள் ஊடாக முழு வாழ்க்கையிலும் பெறப்படும் செயன்முறையாகும். அல்லது தலை,உள்ளம், கை என்பவற்றை வளர்ச்சியடையச் செய்வதே கல்வி ” ஆகும்.

3.சங்கரர் – “ கல்வி என்பது தன்னை உணர்தலாகும் ”

4.இரவிந்திரநாத் தாகூர் – “மாயை நீங்கி உண்மை உலகைக் கண்டறிய உதவுவதே கல்வி”

5.விவேகானந்தர்- “மனிதனுள் ஏற்கனவே அமைந்துள்ள அல்லது புதைந்துள்ள தெய்வீகப்பூரணத்துவத்தை வெளிக்கொண்டு வருவதே கல்வி”

மேலைத்தேய அறிஞர்கள் கூறும் வரைவிலக்கணங்கள்

1.சாக்ரடீஸ் – உறுதியான உடலில் உறுதியான மனதைத் தோற்றுவிப்பதாகும்

2.சேர் பேர்சிலன் – தனித்தன்மையில் பூரண விருத்தியாகும். ( ஓருவர் மானிட வாழ்க்கைக்கு அவராலான ஆகக் கூடிய தனித்துவமான பங்களிப்பை வழங்கல் )

3.பிளெட்டோ – கல்வியானது உடலிலும் ஆன்மாவிலும் எல்லா நன்மைகளையும் விருத்தியாக்க வேண்டும்.  மனிதனது ஆற்றல் முழுவதையும் விருத்தியாக்க வேண்டும்

4.ஜோன் டீயூவி – ஒருவனது சூழலைப் பயன்படுத்த உதவுவதும்இ அவனது பொறுப்புக்களை நிறைவு செய்ய உதவுவதுமான ஆற்றல்களை விருத்தியாக்குவதே கல்வி

5.றெட்டின் – முதியோர், இளையோர் மீது செலுத்தும் செல்வாக்கு (இவ்விருத்தி உடல், அறிவு, அழகியல், சமூகம், ஆத்மீகம் என்பவற்றில் ஏற்படல். வாழ்வின் இறுதி நோக்கம் இறைவனுடன் கலத்தல். இவை சமூக தனிமனித நன்மைக்காகவிருத்தல் )

6.தொம்சன் – ஒரு தனியாளின் வாழ்க்கையில் நடத்தை, சிந்தனை, மனப்பாங்கு போன்றவற்றில் நிரந்தரமாக மாற்றத்தை ஏற்படுத்தும் சூழல் செல்வாக்கு கல்வியாகும்.

7.பெஸ்டலோஜி – இயற்கையாகவும் இசைவாக்கமானதுமான அபிவிருத்திக்கு மனிதனின் உள்ளாற்றலை இட்டுச் செல்லல். ( மனிதனிலுள்ள ஆற்றல்களை அபிவிருத்தி செய்து, பிள்ளையின் தன்மைக்கும், திறமைக்குமேற்ப உரிய இடம் வழங்கப்படல் வேண்டும். )

8.ரூஸோ – இயற்கைக்கு ஏற்ப விருத்தியடையும் செயற்பாடே கல்வி

9.அரிஸ்ரோடில் – மனிதனின் திறமையை, குறிப்பாக அவனுடைய மனதை வளர்க்கின்ற செயற்பாடு கல்வி.

மேற்குறிப்பிட்டவாறு பல்வேறு எண்ணக்கருக்கள் வரைவிலக்கணங்களாக கல்வியில்  தோற்றம் பெறலாயிற்று . இவ்வாறான எண்ணக்கருக்கள் பல்வேறு காரணங்களால் மாற்றம் பெறலாயிற்று.

கல்வி தொடர்பான வரைவிலக்கணங்கள் வேறுபடக் காரணங்கள்

கல்வி தொடர்பான விடயப்பரப்புக்கு பல்வேறு அறிஞர்களும் பல்வேறு விதமான கருத்துக்களை முன்வைத்திருப்பதானது ‘ கல்விக்கு வரைவிலக்கணம் கூறுவது மிகவும் சிக்கலான தன்மையுடையது.’ என்ற விடயத்தை கூறுகின்றது. குருடன் யானையைக் கண்ட கதை போல பல்வேறு துரை சார்ந்தவர்களும் (தாவரவியலாளன், மத போதகன், உளவியலாளன், தத்துவஞானி, அரசியலறிஞன், ஆசிரியன், ஓவியன் முதலியோர்) அவர்களது இயல்புகளுக்கேற்ப தமக்கேயுரிய சொந்த வரையரைகளை கல்வியைப் பொறுத்துக் கொண்டுள்ளனர். இவ் வரையறைகளை மக்கள் காலத்திற்கும் சூழலிற்கும் ஏற்ப ஏற்று நடைமுறைப்படுத்தி வந்துள்ளனர். கல்விக்கான பல்வேறு விதமான வரையறைகள் தோன்ற ஏதுவான காரணங்களை கீழ்வருமாறு எடுத்துக்காட்டலாம். இவை கல்விக்கான எண்ணக்கருவில் மாற்றத்தை உருவாக்க தவரவில்லை.

01.மனித ஆளுமையின் சிக்கலான தன்மை

கல்வியின் பிரதான நோக்கம் ஆளுமையை விருத்தி செய்வதாகும். ஒருவர் இவ்வுலகில் பெற்றுக்கொள்கின்ற அறிவு, அனுபவம், ஆற்றல் ஆகியவற்றின் தொகுப்பு கல்வி எனப்படும். ஒருவர் பெறுகின்ற கல்வியானது அவரது ஆளுமைக்கும் ஆற்றலுக்கும் அடித்தளமாக இருந்து அவரின் ஒவ்வொரு செயலையும் சிறப்பாகச் செய்ய வழிவகுக்கும். கல்வியைப் பெற்றவர்கள் மக்களிடமிருந்து மாறுபட்டு மற்றவர்களுக்கு வழிகாட்டுகிற சிறப்பு பெற்றவர்களாக இருப்பார்கள்.

மேலும் இவர்கள் நுட்பமாகச் செயற்படுகின்ற கூர்மையான அறிவுடையவராக இருந்து வழிநடாத்துவர். ஆனால் இங்கு கல்வியில் ஆளுமையானது மிகவும் சிக்கலான தன்மையுடையதும் பல்வேறு அம்சங்களைக் கொண்டதுமாகும். எடுத்துக்காட்டாக சமூகம், அறிவு, பௌதீகம், ஒழுக்கம், ஆத்மீகம், அழகியல் முதலியனவாக அவற்றைக் குறிப்பிடலாம். இவற்றில் சிலவற்றின் மீதான அழுத்தமானது கல்வி பற்றிய பல்வேறு விதமான வரைவிலக்கணங்களுக்கும் வழிவகுக்கின்றது.

மேலும் ஒவ்வொருவருடைய எண்ணக்கருக்களுக்கும், ஆளுமைக்கும், திறன்களுக்கும் பாரிய வேறுபாடு நிலவுவதைக் காணலாம். அது ஒவ்வொருவருடைய வயது மட்டத்தையும் பொருத்து அமைந்திருக்கலாம். எனவே இவ்வாறான நிலையில் கல்விக்கான எண்ணக்கருவும் வேறுபடலாம். இதனாலேயே ஆத்மீகவாதிகள், ‘தன்னை உணர்தலே கல்வி’ எனவும் வரைவிலக்கணம் கூறியுள்ளனர். எனவே மனிதருடைய ஆளுமையின் சிக்கலான தன்மை கல்விக்கான வரைவிலக்கணங்கள் ஒவ்வொருவருக்கும் வேறுபட காரணமாக உள்ளது.

02.மனித சூழலின் சிக்கலான தன்மை

கல்விக்கான எண்ணக்கரு வேறுபட்டமைக்கான மற்றுமொரு காரணமாக மனித சூழலின் சிக்கலான தன்மையைக் குறிப்பிடலாம். அதாவது, ‘ஒரு மனிதன் தனது சூழலுக்கேற்ப இசைவாக்கம் பெறும் செயன்முறையே கல்வி’ என்பர். இங்கு சூழலானது ஒவ்வொரு காரணிகளிலும் தங்கியுள்ளதைக் காணலாம். கண்டுபிடிப்புக்கள், தொழிநுட்பச்செறிவு, சுருங்கிப்போன உலகம், பொருளாதார வளர்ச்சி போன்றன நாட்டுக்கு நாடு வேறுபடுவதைக் கானலாம்.

மேலும் சூழல், சமூகம், பௌதீகம், கலாசாரம், பொருளாதாரம் என்று பல்வேறு அம்சங்களைக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. சூழலை எடுத்து நோக்கும் போது நாட்டுக்கு நாடு இடத்திற்கு இடம் வேறுபடுகின்றது என்பது கல்வியின் எண்ணக்கருவின் மாற்றத்திலும் செல்வாக்கு செலுத்துகின்றதை காண முடியும். உதாரணமாக : இந்தியாவின் கல்வி வரையரையிலிருந்து அமெரிக்காவின் கல்விக்கான வரையறை மாற்றம் பெறுவதைக் குறிப்பிடலாம்.

அவ்வாறே மேற்கூறப்பட்ட பௌதீகம், கலாசாரம், சமூகம், தொழிநுட்பம், பொருளாதாரம் விருத்தியடைந்து காணப்படும் பிரதேசங்களிலும் இவை விருத்தியடையாது காணப்படும் பிரதேசங்களிலும் கல்விக்கான வரையறைகளில் பாரிய வேறுபாடிருப்பதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. ரூஸோ போன்ற அறிஞர்கள் இயற்கைச் சூழலை மையப்படுத்தி வரையரை செய்துள்ளார்.

ஆரம்ப காலத்தில் மக்களுடைய வாழ்க்கை சிக்கலின்றி இலகுவானதாக காணப்பட்டது. ஆனால் தற்போது அவ்வாறில்லை. மனிதவாழ்க்கை பல்வேறு சிக்கல்களினைக் கொண்டிருப்பதனை எம்வாழ்வில் நாம் காணலாம். மேலும் ஆரம்ப காலத்தில் தொழில் வேறு அதற்கான கல்வி வேறு என்று இருக்கவில்லை. தொழிற்கல்விக்கு அழுத்தமும் கொடுக்கப்படவில்லை. மாணவர்களும் அதனைப் பெரிதுபடுத்தி துன்பமடையவும் இல்லை. ஆனால் பொருளாதார சூழல் மாற்றமடைந்த போது கல்விக்கான எண்ணக்கருவிலும் மாற்றங்கள் ஏற்பட்டன.

இத்தொழிற்கல்வியானது ஆங்கிலேயரின் வருகைக்குப்பின்பே அமுல்படுத்தப்பட்டது. எனவே தற்காலப் பொருளியலாளர்கள் ‘பொருளாதார ரீதியில் சமூகத்திற்கான ஆக்கத்திறனுள்ள அங்கத்தவனாக மனிதனை மாற்றும் செயன்முறையே கல்வி’ எனக் கூறுகின்றனர். எனவே மனித சூழலின் சிக்ககலான தன்மையும் கல்வியின் எண்ணக்கருவில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது என்பதைக் காணலாம்.

03.பல்வேறு தத்துவங்கள்

கல்வியில் மாற்றத்தை ஏற்படுத்தும் மற்றுமொரு காரணியாக அறிஞர்களின் பல்வேறு தத்துவங்கள் விளங்குகின்றது. வாழ்க்கையை நுணுகி ஆராய்ந்த சில அறிஞர்கள் தமது வாழ்வில் கண்ட அனுபவங்கள், சிந்தனைகள், நிகழ்வுகள், சம்பவங்கள் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு கல்விக்கான வரைவிலக்கணங்களை கூறியுள்ளனர். இதில் நமது முன்னோர்கள், பெரியோர்கள் மற்றும் அறிஞர்களின் வாழ்வினில் இடம்பெற முக்கியமான சில நிகழ்வுகளைக் கொண்டு வரையறை அமைந்திருப்பதைக் காணலாம். எடுத்துக்காட்டாக வாழ்க்கையில் நிலையாமையை ஆராய்ந்த புத்தர் ‘ஆசையே துக்கத்தின் காரணம்’ எனக் கூறுகிறார்.

புத்தர் வாழ்க்கையை வாழ்ந்த பிறகு அவ்வாழ்க்கையின் யதார்த்தத்தை உணர்ந்து நிலையாமையை அறிந்ததனாலேயே அவ்வாறு கூறினார். மேலும் அவர் கூறுவதாவது ஆசையைத் துறத்தலே துக்கம் நீங்குவதற்கான வழி இதுவே பரிநிர்வாணத்துக்கான செயற்பாடே கல்வியாக வேண்டும்.’ என்று அவருடைய தத்துவக் கருத்துக்கள் அமைந்துள்ளன.

மேலும் முன்னைய பாரம்பரியர், சான்றோர்கள் வாழ்க்கையை நுணுகி ஆராய்ந்து அறம், பொருள், இன்பம், வீடடைதல் போன்றவற்றுக்கான செயன்முறையே கல்வி என்று கூறினர். இவர்கள் திருவள்ளுவர் கூறிய கருத்துக்களையே முன்வைத்துள்ளனர். எனவே திருவள்ளுவரையும் ஒரு தத்துவ ஞானியாகக் கொள்ளலாம். அவர் திருக்குறளில் கற்றாங் கொழுகுதலே கல்வி என்று கல்வி பற்றி கூறியுள்ளார்.

இவ்வாறு பல்வேறுபட்ட தத்துவக்கருத்துக்கள் கல்வியின் வரையரையை மாற்றியமைப்பதில் செல்வாக்கு செலுத்தியமையால் கல்விக்கான வரைவிலக்கணமும் ஒவ்வொரு தத்துவ ஞானிகளின் கருத்துக்களுக்குமேற்ப வேறுபடுகின்றது.

04.கல்விக்கோட்பாடுகளும் அவற்றின் பிரயோகங்களும்

கல்வியின் கோட்பாடுகளும் கல்விக்கான வரைவிலக்கணத்தில் தாக்கம் செலுத்தியுள்ளது. சில கல்விக் கோட்பாடுகளும் அவற்றின் பிரயோகங்களும் கால, சூழல்களுக்கேட்ப மாற்றமடைவதனால் கல்வியின் வரைவிலக்கணமும் மாறுபட்டு காணப்படுகின்றது. இக்கல்விக் கோட்பாட்டில் உலவியல் கோட்பாடுகளும் காணப்பட்டன. அதாவது பல்வேறுபட்ட உளவியலாளர்கள் மாணவர்களின் உள்ளத்தை ஆராய்ந்து சில கருத்துக்களை முன்வைத்துள்ளனர். ஆரம்பகால உளவியலாளர்கள் பிள்ளையின் மனம் தெளிவான கரும்பலகை, அதன் மீது எதனையும் அழுதலாம். என்றும் பிள்ளையின் மனம் களிமண் போன்றது அதனைப் பயன்படுத்தி எவ்வாறான வடிவத்தையும் அமைக்கலாம் என்று சில உளவியலாளர்கள் கருதினர்.

மேலும் சிலர் குழந்தையின் மனம் வெற்றுக்குடம் போன்றது அதில்அறிவை அள்ளி ஊற்றி நிறைக்கலாம் எனக் கருதினர். வேறு சிலர் மனப்பாடம் செய்வித்தலே கல்வி என்றும் தண்டனையே கல்விக்கு வழி என்றும் அடியாத மாடு படியாது போன்று பல்வேறு பொருட்களுக்கு ஒப்பிட்டு கூறியிருப்பதால் அறிஞர்களிடையே சில கருத்து வேறுபாடுகள் நிறைந்திருப்பதைக் காணலாம். எனவே இதுவும் கல்வி என்னும் எண்ணக்கரு வேறுபடக் காரணமாகும்.

மேலும் பின் வந்த கல்விக்கோட்பாடுகள் கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் நவீன கல்வியின் வரையறைக்கு வழி செய்தமையும் குறிப்பிடத்தக்கது. அவற்றின் படி வாழ்வாங்கு வாழ்வதற்கான செயற்பாடே கல்வி நல்ல பிரஜைகளை உருவாக்குவதே கல்வி,அறிவு, திறன்,மனப்பாங்குகளில் நிரந்தர மாற்றம் தருவதே கல்வி போன்ற வரைவிலக்கணங்கள் தோற்றம் பெற்றன. இதனால் சட்டங்களிலும் கல்வியை கட்டாயமாகக் கொண்டு வரும் நிலை ஏற்பட்டு 0 – 14 வயது வரை கல்வி கட்டாயமாக்கப்பட்டது. இது இலங்கை இந்தியாநாடுகளில் பிரயோகிக்கப்பதுகின்றது. எனவே கல்விக்கோட்பாடுகளும் அவற்றின் பிரயோகங்களும் கல்விக்கான வரைவிலக்கணத்தில் வேறுபாட்டை ஏற்படுத்தியுள்ளன.

இத்தகைய கல்விக்கான பல்வேறு வரைவிலக்கணங்கள் காணப்படுவதோடு அதனை அடியொற்றி பல்வேறு துறைகளுடன் தொடர்புபட்டு முழுமையடைந்து காணப்படுகின்றது. அவையாவன : சூழ்நிலையும் கல்வியும், சமூக வாழ்கையும் கல்வியும், பண்டைய காலமும் கல்வியும், கல்வியும் தனியாளும், சமூகமும், கல்வியில் சமூக நோக்கம், கல்வியில் அறிவு நோக்கம், கல்வியில் ஒழுக்க நோக்கம், கல்வியில் சமய நோக்கம்,கல்வியில் தொழில் நோக்கம், கல்வியில் சர்வதிகார நோக்கம்  போன்றவற்றை வகைகளாக குறிப்பிட முடியும்.

மேற்காட்டப்பட்ட விளக்கங்கள் கல்வின் வரைவிலக்கணத்திற்கும், அதனை அடியொற்றி கட்டமைக்கப்படுகின்ற விடயங்களையும் கொண்டதாக அமையப்பெற்றது. இந்தவகையில் முன்னரே சுருக்கமாக காட்டப்பட்ட வரைவிலக்கணங்களில் வௌ;வேறு காலகட்டத்திற்கு பொருத்தமான ஐந்து கல்வித்தத்துவஞானிகளை அடிப்படையாக கொண்டு அவர்களது கல்வி வரைவிலக்கணங்களை அடிப்படையாக கொண்டு கல்வி பற்றிய எண்ணக்கருக்களை விரிவாக நோக்குவோம்.

சாக்ரட்டீஸின் காலப்பகுதியில் எழுந்த கல்வி எண்ணக்கருக்கள்

“தன்னைப்பற்றிய விளக்கத்தை பெற்றுக் கொள்வதற்குத் தேவையான அறிவை வழங்கும் செய்முறையே கல்வியாகும்”

“எனக்குத் தெரிந்திருப்பதெல்லாம் எனக்கு எதுவுமே தெரியாது என்பதுதான். எனது அறியாமை அறிந்து கொள்வதற்கான ஞானம் எனக்குண்டு . நான் ஞானத்தை விரும்பும் ஒரு ஒரு தனியாள் ஆவேன்” என்று தனது கருத்தை கல்வி பற்றி கூறிப்பிடுகின்றார். அவரது இந்த வரைவிலக்கணமானது அவரது காலத்தில் இருந்து தற்போது வரை முக்கியமானதாக காணப்படுகிறது. கல்வி எனும் எண்ணக்கருவானது அவரது வரைவிலக்கணத்தில் செல்வாக்கு செலுத்திய நிலையினை அவரது காலகட்டத்தில் உள்ள வாழ்கை, சிந்தனைகள், செயற்பாடுகள் மூலமாக நாம் ஒவ்வொரு விடயத்திலும் தெளிவாக அறிந்து கொள்ள முடியும்.

சாக்ரட்டீஸ் உலகின் முதற்தரமான தலைசிறந்த ஆசிரியர் என்ற பெருமைக்குரியவர். அவரது வினாவிடை முறையும் , உரையாடல் முறையும் காலத்தால் அழியாத கற்பித்தல் அணுகுமுறையாக விளங்குகின்றது. அவர் கல்வி பற்றி ஒரு சமயம் தனது மாணாக்கரோடு உரையாடும் போது “எனது தாய் குழந்தை நலம் பேணும் மருத்துவமாது. எனது தாயைப்போலவே எனது கவனம் முழுவதுமே மாணவர் மனதில் கருக்கொண்டிருக்கும் அனைத்தையும் சுகப்பிரசவமாக வெளிக்கொணர்வதிலேயே கவனம் செலுத்துகின்றது”. என்றார். கல்வியின் உண்மை நோக்கை, கற்பித்தலின் நுட்பத்தை இக்கருத்து பிரதிபலிக்கின்றது. ஆசிரியர் பற்றி சாக்ரட்டீஸ் கூறும்போது “ஆசிரியர் பொருளுக்காக தம் அறிவை விற்கக்கூடாது. ஏவர் பணம் கொடுத்துக்கேட்பினும் அறிவை விற்பவர் ஞான விளக்குகள் அல்லர். பொருளின் பொருட்டு அறிவை விற்பவர் அறிவுப் பரத்தையர்” என்று குறிப்பிட்டார். இக்கருத்தும் அவரது கல்வியிடைய எண்ணக்கருவை அதன் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தியது.

சாக்ரட்டீஸின் மெய்யியல் சிந்தனைகள் அவரது உரையாடல்கள் மூலம் வெளிவந்தன. ஒரு சிறந்த கல்வியூட்டும் அணுகுமுறையாகவே இந்த உரையாடல் விளங்கியது. “ஒவ்வொரு புதிய விடயங்களை அறியும் போது எனது அறியாமையே எனக்குப்புலனாகிறது. எனக்கு எதுவுமே தெரியாது என்ற சிந்தனையே அறிவைப்பெற உந்துதலாக அமையுமென அவர் எண்ணினார்.” இக்கருத்து முன்னரே கூறிய வரைவிலக்கணத்தின் நிலைப்பாட்டை எமக்கு காட்டியது. இக்கருத்து இன்றைய நிலைக்கும் பொருந்துவதாக அமைகிறது. அதாவது தற்போதய மாணவர் மையக்கற்றலில் தேடியறிந்து புதியவற்றை உள்வாங்கவும் செயற்பட்டு கற்கவும்  மேலும் புதியவிடயங்களை தேடவும் ஆதாரமாக அமைகிறது.

சாக்ரட்டீஸின்  சிந்தனைகள் எதுவும் எழுத்து வடிவில் இல்லை . ஆனால் அவரது கருத்துக்கள் யாவும் பிளெட்டோ தனது உரையாடல் நூல்களில் விரிவுபட தொகுத்துத் தந்துள்ளார். பிளெட்டோவின் சிந்தனைகள் சோக்கிரட்டீஸின் கருத்துக்களின் விரிவான விளக்கமே என்று குறிப்பிடுவர். ஆனால் பிளெட்டோ சில இடங்களில் முரண்பாடான கருத்துக்களையும் முன் வைத்துள்ளார் என்பது பிளெட்டோவின் சிந்தனைகள் சாக்ரட்டீஸின் சிந்தனைகளில் இருந்து வேறுபட்டு புதிய கருத்துகளை வெளியிட்டதன் விளைவே. “மக்கள் உண்மையென்று கருதும் கொள்கைக்காக உயிரைத்தியாகம் செய்தல் வேண்டும்” என்ற கருத்து தலைசிறந்த கல்வி எண்ணமாகும். கல்வி இத்தகையதோர் மனஒழுக்கத்தை வளர்ப்பதாக இருக்க வேண்டும். இதனால் சாக்ரட்டீஸ் ஒழுக்க மெய்யியலின் தந்தை எனக் கொள்ளப்படுகிறார்.  மனிதச் செயலின் நோக்கத்தை ஒழுக்கமே தீர்மானிக்கிறது என்று கருதினார். இத்தகைய கல்வி நோக்கமானது பாடசாலைகளில் ஒழுக்கத்தை வலியுறுத்தி மாணவர்களை ஒவ்வொரு விடயங்களின் ஊடாகவும் கட்டுப்பாட்டுப்பாட்டிற்குள் கொண்டுசெல்லவும் அவற்றிற்கு ஏற்ப பாடசாலையில் பல்வேறு ஆளணியினர் நியமிக்கப்பட்டு இருப்பதையும் காணலாம்.

சாக்ரட்டீஸிற்கு எழுபதாவது வயதில் ஏதென்ஸ் நீதிமன்றம் மரணதண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது. அவர் தப்பிப்பதற்கு வழிகள் பல இருந்தும் “எனது தாய்நாடு எனக்கு அளித்த தண்டனையை மறந்து  நான் உயிருடன் வாழ்தல்  எனது தாய்நாட்டிற்கே களங்கம் தருவதாகும் எனக் கூறி மறுத்தார். அவரது மரணவாசகம் “ புதைக்கப்படுவது எனது உடல் அன்றி எனது சிந்தனைகள் அன்று” என்று கூறினார். சிந்தனைக்கு முக்கியமளித்தார். இத்தகைய நிலையானது தற்காலக் கல்வி முறையில் முக்கியமாக உள்ளது எனலாம். சிந்தனையைக் கிளறி மாணவர்களைக் குழுக்களாகப் பிரித்துக் கல்விச் செயற்பாட்டில் வழிநடத்தப்படுவது இவரது காலகட்டத்தை நமக்குக் கண்முன் காட்டுகிறது.

உண்மை என்பதே அறிவுக்குச் சாக்ரட்டீஸ் கண்ட பொருள் உண்மை என்பது உள்ளுணர்வாகப் பெருகும்போது அறிவு தன்னை அறியும் அறிவாக அமைகிறது. வாழ்க்கை என்பது மனட்சாட்சி அடிப்படையிலானது. ஒவ்வொருவனும் தனது மனட்சாட்சிக்குத் தன்னைத்தானே உண்மையானவன் என்பது புலப்பட வேண்டும். “தன்னையறிவதன் மூலமே மக்களாட்சி மலர்கிறது.” கல்வியே கல்வியினால் விளையும் அறிவே நல்லாட்சிக்கு இலக்கணமாக அமைய வேண்டும் என்பது இவரது கருத்து. இக்கருத்து இன்றைக்கும் பொருத்தமாகும். சுய விளக்கத்தை போல வாழ்கைக்கு பொருத்தமான வேறு விடயங்கள் இல்லையென்றே கூறலாம். தனது ஆற்றல், குறைபாடு, தான் செய்வது சரியா, தவறா என்பதனை புரிந்து கொள்வதைப்போல முக்கியமானது மாவர்களிடத்தில் வேறொன்றுமில்லை.

அறிவினால் ஆகும்  இன்பமே மேலான இன்பம். நடைமுறைக்கு ஏற்ற கருத்துக்களை வேண்டும். கருத்தியல் என்பது சாதனைக்கு ஏற்புடையதாக இருக்க வேண்டும். அறிவும் உண்மையும் நிரம்பிய சமூதாயமொன்றை இவர் தனது  உயர் சிந்தனையாகக் கொண்டார். சாக்ரட்டீஸ்(கி.மு.469-399) ஏறக்குறைய 70 ஆண்டுகள்  வாழ்ந்த இவர் 50 ஆண்டுகளிற்கு மேலாக ஏதென்ஸ் நகர வீதிகளிலும்  பூங்காக்களிலும் தன் வாழ்நாளை உரையாடிய வண்ணமே களித்தார். நூல்கள் எழுதவுமில்லை “எனது சிந்தனை ஏட்டில் எழுதப்படாதது” என்றார். உண்மை தேடல் முறை, மனித சமூகத்தில் உண்மையை நோக்கி முகப்படுத்தும் சமூகச் செயற்பாடு என நம்பினார். அவரது ஆழ்ந்த உண்மையின் தன்மை சோக்கிரட்டீஸிற்கு முற்பட்ட காலம் – பிற்பட்ட காலம் என நோக்க வைத்தது. கல்வி முறையில் உரையாடல் முறை என்பது சோக்கிரட்டீஸ் முறை என குறிப்பிட வைத்தது. வினாக்களை அணுகி விடையை அறியும் இத்தகைய முறை தற்போது அனைவராலும் பின்பற்றப்படுகிறது.

இவ்வாறு சாக்ரட்டீஸின் கல்வி தொடர்பான எண்ணக்கருக்கள் அவரது வாழ்க்கைமுறை, செயற்பாடுகள், மக்களுடன் தொடர்புபட்ட நிலைமை அவர் கூறிய கருத்துக்கள் போன்ற பலவற்றின் மூலமாக அறிந்து கொள்ள முடியும். இவ்வாறான அனைத்தையும் ஒன்றிணைத்ததாக “தன்னைப்பற்றி விளக்கத்தைப் பெற்றுக்கொள்வதற்குத் தேவையான அறிவை வழங்கும் செயன்முறையே கல்வியாகும்” என்ற வரைவிலக்கணம் காட்டி நிற்கிறது. ஒட்டுமொத்தமாக நோக்கும்போது உலகினில் பிறந்த  மனிதன் கல்வியினால் மட்டுமே தன்னையறிந்து கொள்கின்றான். தாயின் வயிற்றிலிருந்து கற்க ஆரம்பிக்கும் குழந்தை சூழலில் வளரும் போது அதற்கு சரியான கல்வி வழங்கப்பட்டு பாடசாலை, பல்கலைக்கழகம் என்று சென்று தனது இருத்தலை தக்கவைத்து நாட்டிற்கு சிறந்த பிரஜையாகிவிடுகிறது. ஆனால் கல்வியை சூழலில் பெறாத பிள்ளை வாழ்கையை கொண்டு செல்லும் நிலையறியாது ஒழுக்கரீதியாக பின்னடைவை ஏற்று தானும் தன்னையறியாது தன் மூலமாக நாட்டின் எதிர்காலத்தை பாழாக்கி விடுகிறது. தன்னையறிவதே கல்வி என்ற சோக்கிரட்டிஸ் பெருந்தகையின் கல்விக்கான வரைவிலக்கணம் அன்றும், இன்றும் எமது வாழ்வை வழிநடத்திச் செல்வதற்கு உறுதுணையாக அமைகின்றது என்றால் ஐயமில்லை.

ரூசோவின் காலப்பகுதியில் எழுந்த கல்வி தொடர்பான எண்ணக்கருக்கள் (1722-1778)

“பிள்ளைக்கு கல்வியை அவனது ஆற்றல்கள், தேவைகள், விருப்பங்கள் என்பவற்றிற்கேற்பப் பெற்றுக் கொடுக்க வேண்டும்.”

“மனிதன் சுதந்திரமாக பிறக்கின்றான். ஆனால் எங்கும் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருக்கிறான். மனிதன் இயற்கையில் நல்லவனாகப் பிறக்கின்றான். ஆனால் கெடுக்கப்பட்ட சூழலின் தாக்கத்தினால் தீயவனாகின்றான். சூழலின் பிடியிலிருந்து மனிதனை மீட்பதாகவே கல்வி அமைய வேண்டும் என்றார்.” இவரது இத்தகைய வரைவிலக்கணங்களானது அவரது காலகட்டத்தில் இருந்த கல்வி பற்றிய எண்ணக்கருவை எமக்கு தெளிவுபடுத்துகின்றது. பிள்ளையை மையமாகக் கொண்டே கல்வியானது கட்டமைக்கப்பட வேண்டும் என்றும் கல்வியை வழங்குவதற்கு ஏற்ற சூழலை அமைக்கவேண்டும் என்றும், சூழலின் எதிர்மறையான தாக்கங்களில் இருந்து பிள்ளையைப் பாதுகாப்பதே இவரது கல்வி பற்றிய வரைவிலக்கணத்தின் மையப்பொருளாக காணப்பட்டது. மேலும் கல்வி பற்றிய எண்ணக்கருவானது வரைவிலக்கணத்தில் செல்வாக்கு செலுத்திய நிலையினை  கல்விக்கு அவர் கூறிய கருத்துக்கள் கல்வியை வகைப்படுத்திய வகைப்பாடுகள் மூலமாக அறிந்து கொள்ளலாம். பழையதை அழிக்கப் பிறந்தவர் வால்டர். ஆனால் புதுமையை ஆக்கப்பிறந்தவர் ஜீன் ஜக் ரூசோ என றோமன் றோலன்ட் என்ற பேரறிஞர் குறிப்பிடுகிறார். அத்தகையளவில் இவரது கல்விக்கான தன்மை காணப்பட்டது. தற்காலத்தில் பாடசாலையில் பிள்ளையை மையமாக கொண்டு கல்வியானது கட்டமைக்கப்பட்டுள்ளது இவரது எண்ணக்கருவின் தார்ப்பரியத்தை காட்டுகிறது. அத்துடன் பாடசாலையில் மாணவணையை மையப்படுத்தி பல்வேறு செயற்பாடுகள் முன் பள்ளி தொடங்கி உயர் கல்வி வரை உலகம் முழுவதும் செயற்படுத்தப்படுவதை நாம் காணமுடிகிறது. இத்தகைய நிலைப்பாடு முன்னரே கூறிய அவரது வரைவிலக்கணம் வாயிலாக அறிய முடிகிறது.

ரூசோ இயற்கை வாதத்தின் முன்னோடியாகக் காணப்பட்டார். இவருடைய கருத்தின்படி ஒழுக்கக் கல்வியை போதனையாக மட்டுமன்றி அனுபவமாக்கவும் வேண்டும் எனக் குறிப்பிடுகின்றார். ஒழுக்கக் கல்வி இயற்கையான செயற்பாடுகளாக இருக்குமானால் அதுவே மாணவர்களுக்கு இலகுவில் ஒழுக்க அனுபவமாக்கப்படும் என்கிறார்.

இயற்கை தான் குழந்தையின் முதல் ஆசிரியர். இயற்கை தான் குழந்தைக்கு முதலில் கற்றலை ஏற்படுத்துகின்றது. இயற்கைக்குப் பிறகுதான் தாய், தந்தை, குரு எல்லாம்.  ஒவ்வொரு குழந்தையும் இயற்கையின்படி வளர அனுமதிக்கப்பட வேண்டும் என  ஆசிரியர்களுக்கு வலியுறுத்துகின்றார். இத்தகைய நிலைப்பாடும் இயற்கை – கல்வி என்று மையப்படுத்திய வரைவிலக்கணம் சுட்டிக் காட்டி நிற்கின்றது.

பிள்ளைக்குத் தேவைக்கு அதிகமாகவோ அல்லது முரணாகவோ மேலதிக கல்வியைத் திணிக்கக் கூடாது என  ரூசோ குறிப்பிடுகின்றார். அத்தோடு பிள்ளைகள் இயற்கையோடு இணைந்து அதனை அவதானித்துக் கற்க வேண்டும் எனவும் குழந்தைகளின் தேவைகளுக்கேற்பவே கற்றல் இடம்பெற வேண்டும் எனவும் குறிப்பிடுகின்றார். “குழந்தை பிறப்பின்போதே மாணவனாகி விடுகின்றது இயற்கையால்” என்பது ரூசோவின் கருத்தாகும். இத்தகைய நிலையினை தற்போது முன்பள்ளி மாணவர்களது கற்றல் செயற்பாட்டில் அதிகளவு நோக்க முடிகிறது. அதாவது இயற்கையுடன் ஒன்றிக்கும் வகையில் பல்வேறு மூலைகள் வகுப்பறையில் காணப்பட்டு மாணவர்களிற்கு இயற்கையூடாக கற்றல் இடம் பெறுகிறது. இத்தகைய நிலையும் கல்வி பற்றிய அக்காலத்தில் இருந்த எண்ணக்கருவை வரைவிலக்கணம் வாயிலாக தற்போதும் புடமிட்டு காட்டுகிறது. பின்வரும் ஒவ்வாரு வகைப்பாடுகளும் முன்னரே கூறிய கல்வி பற்றிய எண்ணக்கருக்களை விளக்குகின்றது.

ரூசோவின் நவீன கல்விக் கருத்துக்கள்

1.குழந்தையை சமூகத்திற்காகப் பலியிடக் கூடாது.

2.தனியாளின் விருப்பங்கள் பிரதான அம்சத்தினை விட மேலானதாகக் கருதப்பட வேண்டும்.

3.கல்வி பிள்ளையின் தேவைக்கேற்ப இயைபாக்கம் பெறவேண்டும்

4.சகல கல்விச் செயன்முறைக்கும் பிள்ளையே மையம்.

5.கல்வி நுட்பங்கள் பிள்ளையின் இயற்கைக்கும், வளர்ச்சிக்குமேற்ப தீர்மானிக்கப்பட வேண்டும்.

6.கல்வி என்பது இயற்கை விதியைக் கண்டறிதல்.

7.ஒழுக்கத்தினைப் போதிப்பதனை விட அதை அனுபவமாக்க வேண்டும்.

8.நூல்களில் அதிகம் தங்கியிருப்பது அறிவு விருத்திக்குத் தடையாகும்.

9.மனிதனை எல்லாவகையான செயற்கையிலிருந்தும் இயற்கைக்குத் திருப்ப வேண்டும்.

10.ஒவ்வொரு பிள்ளையும் தனது உள்ளத்தை விருத்தியாக்க அனுமதிக்கப்படல் வேண்டும்.

 

ஆசிரியர் தொடர்பாக ரூசோ முன்வைக்கும் கருத்துக்கள்

‘ஆசிரியர்கள் ஞானவிளக்குகள்’ என்ற சாக்ரட்டீஸின் கருத்தினைத் தழுவியே இவருடைய கருத்துக்களும் காணப்படுகின்றன.

1.ஆசிரியர்கள் போதனையிலும், சாதனையிலும் மற்றவருக்கு எடுத்துக்காட்டாக விளங்க வேண்டும்.

2.நிறைந்த ஞானமுள்ளவராகக் காணப்பட வேண்டும்.

3.சமூக ஊழல்களை அகற்றும் ஆற்றல் கொண்டவராகக் காணப்பட வேண்டும்.

4.கடமைகளை உணர்ந்து குழந்தைகள் செய்யும் தவறகளை தாமே பொறுப்பேற்கும் தன்மை இருக்க வேண்டும்.

5.மன்னுயிர்த் துன்பங்களை தன்னுயிர் துன்பங்களாக மதிப்பவராகவும், கருணையுள்ளம் கொண்டவர்களாகவும், துன்பம் துடைக்கும் தூய உள்ளம் கொண்டவர்களாகவும் இருந்து குழந்தையிடம் நற்பண்புகளை வளர்க்க வேண்டும்.

6.அடக்குமுறையாலன்றி அன்பால் குழந்தைகளை ஆட்கொள்ள வேண்டும்.

ரூசோவின் பெண்கல்வி பற்றிய இன்றைய நிலைப்பாடு

1.ஆணுக்குப் பணிவிடை செய்து அன்பு செலுத்தும் குடும்பத்தலைவியே அவள்(பெண்) ஆண்களுக்குரிய கல்வியோ, உயர் கல்வியோ பெண்ணுக்குத் தேவையில்லை.

2.நன்மைகளைப் பெற்றெடுக்கக் கூடிய உடல் நலம் தரும் உடற்பயிற்சியும்இ கலையறிவுமே அவளுக்குத்தேவை.

3.ஆணின் உள்ளத்தைப் புரிந்து வாழ்பவளாக விளங்க உதவும் அறிவு மட்டும் போதுமானது.

என்பது தொடர்பாகக் கூறினாலும் பெண்களிடம் அறனும் அறிவும் வளர்க்கப்பட வேண்டும் உயரிய பண்புகளை அவர்கள் அடைய வேண்டும் அவர்களது கருத்துக்கள் மதிக்கப்பட வேண்டும் அவர்கள் பெறும் கல்வியானது இறுதி நாள் வரை பயனளிக்கப்படுவதாக இருக்க வேண்டும். எனவும் கருத்துரைத்திருந்தார்.

எவ்வாறாகக் காணப்பட்டாலும் பெண்கள் ஆண்களுக்காகவே படைக்கப்பட்டனர் என்பதும் அவர்களுக்கு உயர்கல்வி தேவையில்லை என்பதும் இன்றைய பெண் விடுதலை விரும்பிகளினால் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக அமையவில்லை. ஆனால் ரூசோ இவ்வாறு கருத்துரைப்பதற்குக் காரணம் குழந்தைகளின் நல்ல சிறப்பான வளர்ச்சிக்கும் அன்பால் கணவளுக்குப் பணிவிடை செய்ய விரும்பும் துணைவியின் முக்கியம் பற்றிய நல்ல நோக்கத்தினாலேயே ஆகும்.

ரூசோவும் சமயக் கல்வியும்

மதபீடங்களின் மமதயைக் கண்டித்தார். ரூசோ மதம் எனும் போர்வையில் ஏற்படும் மாசுக்களைக் கண்டித்தாரே தவிர சமயம் தேவையில்லை எனக்கூறவில்லை.

சமயமே மனித வாழ்வின் ஒழுக்க நெறிக்கு வழிவகுக்கும் எனவும் கூறினார். எனவே சமய உணர்வுகளைக் குழந்தைப் பருவத்திலிருந்தே கொடுப்பது நல்லது என்கின்றார். இதன் மூலம் அவர் சமயத்தினை ஆதரிப்பவராகவே விளங்குகிறார்.

ரூசோவும் கலைத்திட்டமும்

முதலாம் நிலை 1-5 வயது

உடலாலும், உள்ளத்தாலும் மென்மையான குழந்தைக்கு இயற்கையான வீட்டுச் சூழலே கல்விக்குரிய சூழலாகும். குழந்தைகளின் விருப்புக்களுக்கிணங்கவும் எதிர்காலக் கல்வியின் முன்னாயத்த செயற்பாடாக இருக்க வேண்டும்.

இரண்டாம் நிலை 5-12 வயது

புலன்களின் வளர்ச்சி அவசியம். புத்தகக் கல்வி தேவையில்லை. உணர்வுகளை விருத்தியாக்க வேண்டும். உ-ம் தீர்வு ஒன்றினைக் காணச் செய்தல்.

எல்லாக் கற்றலும் விளையாட்டுடன் தொடர்புடையதாகக் காணப்படுவது சிறப்பானது. மனனம் செய்யும் முறைகள் பயன்படுத்துவது நீக்கப்பட வேண்டும்.

மூன்றாம் நிலை 12-15 வயது

ஆராயும் மனப்பான்மை கொண்ட பருவம் என்பதனால் பிரச்சினைகளைக் கொடுத்து அவற்றினைத் தீர்ப்பதற்கான ஆற்றலினை வளர்க்க வேண்டும்.

நூல்களின் வாசிப்பு, கணிதம்,கைப்பணி, நுண்கலை ஆகிவற்றினைக் கற்பிக்கலாம். அறிவுக்கான ஆர்வமே இங்கு தூண்டப்பட வேண்டும்.

நான்காம் நிலை 15-20 வயது

கட்டிளமைப் பருவம் என்பதால் சமூகத்தோடு இணைந்து உறவாடக்கூடிய சமூகத்தினை விளங்கிக் கொள்ளக் கூடிய பாடங்கள் புகட்டப்பட வேண்டும். உ-ம் சமூகவியல், பொருளியல், வரலாறு, சமயம்

ஐந்தாம் நிலை 20 வயதுக்கு மேல்

சமூக உறுப்பினனாக மாறி உயர்வடையும் பருவம் என்பதனால் சமுதாயத்தினை உருவாக்கும் தொழில் சார் பாடங்கள் புகட்டப்பட வேண்டும்.

மேற்காட்டப்பட்ட ரூசோவினுடைய ஒவ்வொரு செயற்பாடுகளும் கல்வியில் அவை செல்வாக்கு செலுத்திய நிலைகளும் அக்காலத்தில் காணப்பட்ட கல்வி பற்றிய எண்ணக்கருவை அடிப்படையாகக் கொண்டேயாகும். அவை பிள்ளையை மையமாகக் கொண்டும், இயற்கைக்கு ஏற்ப சீரிய விதத்தில் கல்வி வழங்கப்பட வேண்டும் என்றும் இயற்கை அதற்கு ஏற்றதாக காணப்பட வேண்டும் என்றும் காட்டியது. இத்தகையவற்றை  அன்றும் இன்றும் வலியுறுத்துவதாக ரூசோவினுடைய கல்வி பற்றிய வரைவிலக்கணம் அமைந்துள்ளது.

கல்வியில் ஜோன்டியூவியின் கல்வி பற்றிய எண்ணக்கருக்கள்(1859-1952)

“கல்வி வாழும் செயன்முறையே தவிர எதிர்காலத்தில் வாழ்க்கைக்கு ஆயத்தமாக்குவதன்று”

“கல்வி என்பது அனுபவங்களை ஒழுங்கமைப்பதும், மீளமைப்பதுமாகும்”

“உயிர்ப்பற்ற – செயற்படாத பிள்ளை தனியே கருத்துக்களை கிரகித்துக் கொள்பவனேயாவான். உயிர்ப்பான செயற்படுகின்ற பிள்ளை கருத்துக்களை தோற்றுவிப்பவனாவான்”

என்று ஜோன்டியூவி தனது கல்விக்கான வரைவிலக்கணத்தைக் குறிப்பிடுகின்றார். இவ்வரைவிலக்கணமானது அவரது காலகட்டத்தில் இருந்த கல்வி பற்றிய எண்ணக்கருவை எமக்கு தெளிவுபடுத்துகிறது. அமேரிக்க நாட்டினைச் சேர்ந்த இவர் கல்வி முறை, கல்வித்தத்துவம், கல்வி உளவியல் இம் மூன்றையும் இணைத்து கல்விச் செயன்முறையாக்கினார். இவரது கல்விக்கான எண்ணக்கருக்கள் வரைவிலக்கணத்தின் விளக்கத்தை எமக்கு விளக்குகின்றது.

மனிதன் பெற்ற சக்தி சிந்தனைதான் எனவும். சிந்தனைச் சக்தியை விருத்தியாக்கிக் கொண்டு சாதனைகள் ஆக்கிப் பயன்படும் விலங்கே மனிதனானவன் எனவும் விளக்கியுள்ளார். இதனை உயிர்ப்பான – உயிர்பற்ற பிள்ளையினது வரைவிலக்கணம் தெளிவு படுத்துகிறது. உதாரணமாக இத்தகைய நிலையானது தற்போது ஆசிரியர்கள் கல்வியை வழங்கி கணிப்பீடுகள்  பரீட்சைகள் வாயிலாக சிந்திக்க தூண்டுவதை நோக்க முடியும்.

மனிதன் அறிவைப் பெறுகின்ற வழியானது செயல் ரீதியான அனுபவம் எனவும் கல்வி என்பது அனுபவம் மூலம் கிடைக்கப்பெற வேண்டும். ஒரு பாடசாலை உருவாக்குகின்ற மனிதன் சமூகத் தேவைகளோடு பின்னிப்பிணைந்தவனாகக் காணப்படுகின்றான். பிரச்சினைகளோடு திண்டாடி தனிப்பட்ட முறையில் பெறும் அனுபவங்களே உண்மையான கல்வியாகும். எதிர்கால அனுபவங்களைப் பெறுவதில் நிகழ்காலத்தினை விழிப்புடன் பயன்படுத்தும் போதுதான் கல்வி அபிவிருத்தி பேணப்படும் என்றும் குறிப்பிட்டார். தற்கால அனுபவத்தில் பெறப்படாத அறிவு ஏட்டுச்சுரக்காய் போலத் தென்படும். இவருடைய கருத்துப்படி பாடசாலைக் கல்வி மூலம் பெறும் அனுபவமும், பிள்ளை வாழும் சமூகத்தில் இருந்து பெறும் அனுபவமும் ஒற்றுமையாகக் காணப்பட வேண்டும் இல்லையேல் கல்வியின் உயிரோட்டம் நலிவுறும். எனவே பாடசாலைக் கற்றல் அனுபவங்கள் வாழ்க்கைக் கற்றல் அனுபவங்களோடு தொடர்புபட்டுக் காணப்பட வேண்டும் என்கிறார். இதனை கல்வி என்பது அனுபவங்களை ஒழுங்கமைப்பதும் மீளமைப்பதாகும் என்ற வரைவிலக்கணம் கல்விக்கான எண்ணக்கருவை எமக்கு விளக்குகிறது.

காலம் மாறுகின்றபோது நிரந்தரமான கல்வி நோக்கங்கள் என எதுவும் இருக்க முடியாது. கல்வி என்பது வாழ்வதற்குத் தயாராகுதல் அல்ல வாழ்வதே கல்வி. கல்விக் குறிக்கோள்கள் சந்தர்ப்ப சூழ்நிலைக்கேற்ப மாற்றியமைக்கப்பட வேண்டும். கல்வியின் நோக்கங்களை முன்கூட்டியே தீர்மானிக்க முடியாது. அவை மீண்டும் மீண்டும் புதுப்பிக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.அத்துடன் முயன்று தவறுதல் மூலம் பயன்பாட்டுவாதி கற்றல் முறையை விருத்தியடையச் செய்கின்றான். எனவே கல்விச் சிந்தனைகள் உருவாக்கப்படும்போது பிள்ளைகளையும் தற்காலச் சமூக அறிவியலையும் அடிப்படையாகக் கொள்ள வேண்டும். இவ்வாறான கல்வி மூலமே சமூகம் சீர்திருத்தப்படுகின்றது. ‘பரிசோதனை ரீதியான விஞ்ஞான முறைகள் அறிவு பெறுவதற்கான ஊடகம்’ எனக் குறிப்பிட்ட இவர் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட முடிவுகளை மறுதலித்தார். இத்தகைய அனைத்துக் கருத்துகளையும் ஒன்றிணைத்ததாக கல்வியானது வாழும் செயன்முறையானது எதிர்காலத்தில் வாழ்வதற்கு ஆயத்தமாவதல்ல என்று காட்டுகின்றது. அத்துடன் கீழ்வரும் ஒவ்வொரு நிலைகளும் ஜோன் டியூவியின் கல்வி எண்ணக்கருக்களை மேலும் விளக்குகின்றது.

ஜோன் டியூவியின் ஆசிரியர் தொடர்பான கருத்துக்கள்

 • குழந்தையை விளங்கிக்கொண்டு அவனின் விருத்திக்கும் முதிர்ச்சிக்குமேற்ப பொருத்தமான அனுபவங்களை வழங்குவதே ஆசிரியரது கருமமாக இருத்தல் வேண்டும்.
 • ஆசிரியர் வெறுமனே அறிவைக் கொடுப்பவராக அல்லாமல் அறிவைத் தோற்றுவிப்பதற்கான வழிகாட்டியாகவே அமைய வேண்டும்.
 • புதிய அனுபவங்களை மாணவர்கள் பெற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பங்களை நுண்ணாய்வு செய்பவராக இருந்து மாணவர்களின் ஆக்கபூர்வமான சிந்தனைகளுக்கு வழிசெய்பவர்.
 • முன்கூட்டிய குறிப்பிட்ட அனுபவங்களை மட்டும் ஏற்படுத்திக் கொள்வதன் மூலம் ஆசிரியர் மாணவர்களின் உள்ளார்ந்த நலன்கள் வெளிவருவது தடைப்படுகின்றது என்றும் கூறினார்.

தொகுத்து நோக்கும் போது ஜோன் டியூவியின் கல்வி தொடர்பான எண்ணக்கருக்கள் ஒவ்வொன்றும் விலையேறப்பெற்றதாக அமைகின்றது. இவை மாணவர்களின் முற்போக்குக் கல்வியாகவும் அனுபவத்தை மையப்படுத்தியதாகவும் பாடசாலை கல்வி வாய்ப்புகள் மனிதனை சுற்றாடலுடன் இடைத்தொடர்புடன் அமையச் செய்ய வேண்டும் என்றும் மணல்  செங்கற்கள் வகுப்பறைக்குள் கொண்டுவரப்பட வேண்டும் என்றும்  நூற்கல்வி குறைந்தளவே முக்கியப்படுத்த பட வேண்டும் என்றும் “ நான் பார்கிறேன் இ நான் கேட்கிறேன் நான் எழுதுகின்றேன் என்று உணராது நான் செய்கிறேன்  செயற்படுகிறேன் எனும் உயிர்பான அனுபவக்களமாக வகுப்பறை மாற்றப்பட வேண்டும் என்றார். பயன்பாடுடைய செயலை செய்கின்றேன் என்ற உணர்வு தரும் ஆர்வம் ஆசை அதன் விளைவான அனுபவம் என்பனவே அறிவை பெறும் சிறந்த வழியாகும் என்றார். இத்தகைய அனைத்தையும் முன்னரே கூறிய அவரது வரைவிலக்கணம் சுருக்கமாக கூறிநிற்கிறது. இம்முறை இன்றைய காலகட்டத்தில் மேற்கத்தேய நாடுகளிலும் கீழைத்தேய நாடுகளிலும் கல்வியில் பரிணமிக்கின்றதை யாராலும் மறுக்க முடியாது.

மகாத்மா காந்தியின் கல்வி தொடர்பான எண்ணக்கருக்கள்(1869-1948)    

20ஆம் நூற்றாண்டில் அறிவினை மட்டும் மையமாகக் கொண்ட கல்விச் சிந்தனைகள் மாற்றமடைந்து குழந்தையை மையமாகக் கொண்ட வாழ்க்கை மையக் கல்விமுறை எழுந்தது. வாழ்கை மையக் கல்விக்கு மிகவும் பெரும் பணியாற்றியவர் காந்தியாவார். வாழ்கையை நெறிப்படுத்தக் கூடியதான ஆதாரக் கூறுகளை கல்வி கொண்டிருத்தல் வேண்டும் என்பது இவருடைய கருத்து.

கல்வி என்பது அறிவை வளர்ப்பது ஆற்றல்களை வளர்ப்பது உணர்வுகளை பண்படுத்துவது மக்களை வாழ்க்கைக்கு ஆயத்தம் செய்வது மனிதனின் நடத்தையை சமூகத்துக்கேற்ப மாற்றியமைப்பது எனக் குறிப்பிட்டிருந்தார். “மனிதனுள் காணப்படும் ஆளுமைப் பண்புகளை படிப்படியாகவும் முழுமையாகவும் வெளிப்படுத்துவது கல்வி என்று கூறினார்.” (கல்வி மனிதனின் உரிமை என்பதும் இவரின் கருத்தாகும்). நான் கல்வி எனக்குறிப்பிடுவது பிள்ளையிடமும் வளர்ந்தோரிடமும் உடல், உள்ளம், ஆன்மா என்ற வகையில் உயர் நிலைகளை வெளிக் கொணர்தலே” என்று குறிப்பிட்டார். அவரது இந்த வரைவிலக்கணமானது கல்விக்கான வெளிக்கொணர்தலை மையப்படுத்தியதை காணலாம். கல்வி பற்றி இவர் கூறிய விடயங்கள் அனைத்தும் அக்கால கட்டத்தில் கல்வி பற்றி இருந்த எண்ணக்கருவை மையமாக கொண்டே கட்டமைக்கப்பட்டதனை மேற்கூறிய அவரது வரைவிலக்கணங்கள் எமக்கு காட்டி நிற்கின்றது. இதனை மேலும் வலியுறுத்தும் வகையில் பின்வரும் ஒவ்வொரு விடயங்களும் அமையப்பெற்றது. ஆரம்பக் கல்வி பற்றி இவர் குறிப்பிடுகையில்

1.எல்லாக் கல்விக்கும் முதலுணர்வு ஏற்படுத்தும் கல்வியாகும்.

2.இதன் மூலம் கல்வியின் உயர்ந்த படிகளை அடையலாம்.

3.“குழந்தைகள் பிற் காலப் பெரியார்கள்” என்பது ஆரம்பக் கல்வியின் நோக்கமாகும்.

ரசிய நாட்டிலுள்ள டால்ஸ்டாய் எனும் தத்துவஞானியின் கருத்துக்கள் விவசாய அடிப்படையில் கல்வி சமரச அடிப்படையில் கல்வி உலக நெறியை வளர்க்கும் கல்வி என்பவற்றினை மையப்படுத்தியது. இவரின் இக்கருத்துக்களில் கவர்ந்த காந்தி அவற்றினை ஆரம்பக் கல்வியின் மூலம் மாணவர்களுக்கு வளர்த்தெடுக்க அதிகம் முக்கியத்துவம் கொடுத்தார். இவை அவரது வரைவிலக்கணத்தில் பொதிந்துள்ள கல்வியின் அடிப்படையை காட்டி நிற்கின்றது.

ஆசிரியர் தொடர்பாகக் கூறுகையில்,

ஒரு ஆசிரியன் தன்னால் ஆற்றமுடியாத கருமத்தினை மாணவன் ஆற்றவேண்டும் என போதித்தல் கூடாது. ஆசிரியர் மாணவர் தொடர்பு அன்பாகக் காணப்பட வேண்டும். இத்தொடர்பு கல்விக்கு நிறைவு தரும் எனவும் குறிப்பிட்டார். கல்வியின் சிறப்பு ஒரு மாணவன் தன் ஆசிரியரிடத்திற்கொள்ளும் ஈடுபாட்டிலும் அவன் மீது வைத்திருக்கும் மதிப்பிலும் தங்கியுள்ளது என்றார். எனவே தான் இவருக்கு குருகுலக் கல்வி முறை மிகவும் கவர்ந்ததாகும்.

உ-ம் செயற்பாட்டு அனுபவங்களால் ஆன கல்வி

“வெறும் ஏட்டுக்கல்வி மட்டும் கல்வியாகாது” எனவும் அதனோடு தொழிற் பயிற்சியும் கொடுக்க வேண்டும் எனவும் கூறிய இவர் உடல் உழைப்பை கல்வியோடு இணைத்தார்.

உ-ம் 1937 யூலை 31 இல் ஹர்ஜன் பத்திரிகையில் அவர் குறிப்பிட்டதன் படி கல்வி பயனுள்ள உற்பத்தித் தொழிலை மையமாகக் கொண்டிருக்க வேண்டும் என்பதிலிருந்து புலனாகிறது.

உடல், உளம், ஆன்மா என்பனவற்றில் சமமான உலகியல் அறிவினைப் பெறுதல், உடலினைப் பேணுதல் போன்ற வளர்ச்சிக்குக் கல்வி பொருத்தமுடையதாய் இருத்தல் வேண்டும் என்கிறார். ஜோன் ரஸ்கின் “கடையனுக்குக் கடைத்தேற்றம்” என்கின்ற நூலானது காந்திக்கு சர்வோதயம் தொடர்பான கருத்தினை ஏற்படுத்தியது.

இவரின் சர்வோதய இயக்கம் பின்வரும் துறைகளில் தனது குறிக்கோளினைக் கொண்டது.

 • ஆதாரக்கல்வி
 • முதியோர் கல்வி
 • கைத்தொழில் வளர்ச்சி தாய் மொழி வளர்ச்சி
 • மாணவனின் முன்னேற்றம்
 • மாதர் முன்னேற்றம்
 • உழவர் நிலை உயர்தல்
 • தாழ்த்தப்பட்ட மக்கள் நிலை உயர்தல்
 • பூர்வீகக் குடிமக்கள் நிலை உயர்தல்
 • சன்மார்க்க நெறி
 • உடற் சுகாதாரம்
 • குடும்பசுகாதாரம்

உடல் உழைப்பு மூலம் பொருளைச் சம்பாதித்து உயர்வடைய எல்லோருக்கும் சந்தர்ப்பம் உண்டு ஆகையால் “ஒரு வழக்கறிஞருக்குக் கொடுக்கும் அதே மதிப்பினை ஒரு நாவிதனுக்கும் கொடுக்க வேண்டும்” என்கிறார். குறிப்பிட்ட விடயங்கள் அனைத்தும் கல்வியின் மூலம் சமவாய்பை அடைய வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. இவருடைய தத்துவக் கருத்துக்கள் சில.

1.இலவசக் கல்வி அளிக்கப்பட வேண்டும். காந்தியின் கலைத் திட்டத்தின் படி கல்வி மொழி தாய்மொழி. அன்னிய மொழியில் கல்வி கற்பிக்கும் போது தாய் மொழி தேசப்பற்று என்பன குறைவடையும்.

2.செய்து கற்றல் மூலம் மாணவனின் கற்றலின் நாட்டமும் விடயமும் அதிகரிக்கின்றது.

3.பிறர் உனக்கு என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறாயோ அதையே நீ பிறருக்கும் செய்.

4.பல்கலைக்கழகங்கள் பல்வேறு வகையான கலைகளையும் ஒருங்கிணைக்கும் நிலையமாகத் திகழ்ந்து சமுதாய நலனுக்காக உழைக்க வேண்டும்

என்று பல்வேறுபட்ட விடயங்களைக்குறிப்பிட்டார். “மனிதனுள் காணப்படும் ஆளுமைப் பண்புகளைப் படிப்படியாகவும் முழுமையாகவும் வெளிப்படுத்துவது கல்வி என்று கூறினார்.” எழுத்தறிவு மட்டும் குறிக்கோள் அல்ல அது ஒரு ஊடகம். கற்பவர் உள்ளத்திலும் ஆன்மாவிலும் காணப்படும் சிறந்த இயல்புகளை வெளிக்கொணரச் செய்து அவனிடத்தே முழுமலர்ச்சியைத் தோற்றுவிப்பதே கல்வி என்பதை ஆணித்தரமாகக் காட்டினார். மேற்காட்டிய காந்தியடிகளாரின் ஒவ்வொரு செயற்பாடுகளும் அவர் கல்விக்கு கூறிய விடயங்களும் ஆசிரியர்கள் மாணவர்கள் எவ்வாறு அமைய வேண்டும் என்பதும் கல்வி கட்டமைக்கப்பட வேண்டிய விதங்களும் அவை எத்தகையளவில் மனித வாழ்வில் முக்கியமானது என்பதை எமக்கு காட்டிநிற்கிறது. இன்றைய நிலையில் அனைவர்க்கும் கல்வி தாயுணர்வுடைய ஆசிரியர்களாக காணப்படல் வேண்டும் என்று முன் பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவதும், தாய்மொழி ரீதியாகக் கல்வி மையப்படுத்தப்படுவதும் மாணவர்களில் உள்ளிருந்து கற்றல் கொண்டுவரப்படுவதற்கான வழிகள் நடைமுறையில் இருப்பதும் இவரது கால கட்டத்தில் காணப்பட்ட வரைவிலக்கணத்தின் உள்ளார்ந்த உண்மைத்தன்மையை எமக்கு காட்டி நிற்கின்றது.

இரவீந்திர நாத் தாகூர் காலகட்டத்தில் கல்வி பற்றிய எண்ணக்கருக்கள் (1863-1941)

“ மாயை நீங்கி உண்மை உலகைக் கண்டறிய உதவுவதே கல்வி ”

“இயற்கையில் ஈடுபட்டு ஒன்றிணைந்து பெறப்படும் அன்பு சமூகத்துடன் இணையும் சேவையாக மாறக் கல்வி உதவவேண்டும்” என்று கல்வி பற்றித் தனது வரைவிலக்கணத்தைக் குறிப்பிட்டார் தாகூர். இவரது இந்த வரைவிலக்கணத்திற்கு வித்திடுவதாகவும், வளர்த்துச் செல்வதாகவும் பின்வரும் ஒவ்வொரு விடயங்கள் காணப்பட்டது .

சிறுவர்களே உலகின் தந்தைகள் எனக்கூறி “சாந்தி நிகேதன்” என்ற பள்ளியை ஆரம்பித்தார். சுதந்திரம், விளையாட்டு, இசைப்பாடல் அவர்களது ஆத்மாவை விழிப்படையச் செய்து கல்வயூட்டுவதே அவர் கையாண்ட கல்வியின் நுட்பம், எளிமை, இனிமை ஆகிய சூழலை அமைப்பவர் ஆசிரியர். ஆசிரியர் மாணவரை நெருங்கிய தொடர்புடன் அமைப்பதே சாந்திநிகேதன் ஆகும். இங்கு நாடகங்கள் கல்வி ஊடகமாகப் பயன்படுத்தப்பட்டது. அத்துடன் “விஸ்வபாரதி” என்ற பல்கலைக்கழகத்தை நிறுவி கல்விக்கு முக்கியமளிக்க உதவினார். மேற்குறிப்பிட்ட விடயங்கள் கல்வியின் மூலம்  உண்மை உலகை கண்டறிவதற்கு பிள்ளைகளை வழிப்படுத்துவதற்கு உதவியாக அமைந்தது என்பதைக் காணலாம்.

பண்பாட்டு விடுதலை பெறுவதே முதன்மையான நோக்கமாகக் கொண்ட தாகூர் கல்வியென்றால் பண்பாடு என்று கருதினார். பண்பட்ட மனிதன் கல்வி கற்றவன். அவன் பண்பாட்டில் பற்றுறுதி கொண்டவன் பண்பாடில்லாத கல்வி பெறுமதி அற்றது என்பதைக் காட்டினார். இந்திய பண்பாடும் அதன் கல்வியும் அமரத்துவ நோக்குடையது என்பதை வலியுறுத்தினார். இவை சமூகமான பண்பாட்டுடன் தொடர்புபடுத்திய வரைவிலக்கணத்தை நமக்குக் காட்டுகின்றது. அதாவது கல்வியானது சமூகத்துடன் ஒன்றிணைந்த நிலையாக அமைய வேண்டும் என்பதைக் கூறுகின்றது.

தாகூர் நாடகங்கள் ஊடாகத் தனது கருத்துக்களை வெளியிட்டார். துறவி, சதி போன்ற பல நாடகங்கள் மனிதன் இவ்வுலகில் எவ்வாறு வாழ வேண்டும் என்பவற்றை அழகுடனும் விழிப்புணர்வுடனும் காட்டின. அன்பே எல்லாவற்றிற்கும் முக்கியமானது என்பதைக் கூறினார். “அன்பின் ஆள்புலம்” என்ற வார்த்தையினூடாக அன்பின் புனிதத்தன்மையை வெளிக்காட்டினார். இதனை இயற்கையுடன் கொண்டிருக்கும் அன்பை சமூகத்துடன் கொண்டு வரல் வேண்டும் என்ற வரைவிலக்கணம் எமக்கு காட்டி நிற்கிறது.

அழகுப்பண்பு, அன்பு நிலை, அறிவுத்திறன், ஆற்றலின் வலிமை இவை மானிட முழுமையை வளர்க்கும் கூறுகளாக தாகூர் கருதினார். புலனுனர்வுகளை பகுத்தாராய்ந்து அறிவாக்கி அந்த அறிவின் மூலம் வாழ்கையை பல வகைகளிலும் செம்மை பெறச் செய்யும் போது பண்பு உருவாகிறது. அந்த பண்பும் அறமும் உடைய சமூகத்தை தோற்றுவிக்கிறது. கல்வி அத்தகைய பயன்பாட்டின் கருவூலம் என்பது தாகூரின் கருத்தாகும். “அறிவொன்றே ஆளுமை ஆகிவிடாது” என்று தாகூர் கூறியுள்ளார். அறிவு ஆளுமையினின்று வேறுபட்டது என்பதுடன் ஒழுக்கம், ஒழுக்கத்தை வரவழைக்கும் அழகியலுணர்வு மனிதனை மனிதனாக்கும் என்பது தாகூரின் கருத்து.

இன்றைய நவீன கல்விச்சிந்தனை தாகூரின் பங்களிப்பினை ஏற்றுள்ளது. அதாவது அறிவை மட்டும் வளர்ப்பது கல்வியன்று ஒழுக்கத்தையும் வளர்க்க வேண்டும் என்ற இவரது கருத்து இன்றைய மாணவர்களது வாழ்வில் முக்கியமுடையதாக உள்ளது. பாடசாலையில் வழிகாட்டல் ஆலோசகர்கள் பல்வேறு காரணங்களிங்கான நியமிக்கப்பட்டாலும் ஒழுக்கத்தை முக்கியப்படுத்தியமையும் ஒன்றென்பதை யாராலும் மறுக்க முடியாது. ஆகவே மேற்குறிப்பிட்ட பல்வேறு விடயங்கள் தாகூரின் மூலம் எழுந்த கல்வி எண்ணக்கருவாக உள்ளது. உண்மைத்தன்மையை கண்டறிய கல்வி உதவுவதுடன் அவை சமூகத்துடன் இணைந்து செயற்பட முக்கியமென்பதே இதன் சாராம்சமாகும். இவை தற்காலத்தில் கல்வியின் குறிக்கோளாக நாம் உணர்ந்து கொள்வதை நோக்க முடியும். ஆகவே இவரது காலகட்டத்தின் கல்வி எண்ணக்கருக்களை வெளிப்படுத்துவதாக வரைவிலக்கணமும் அமையப்பெற்றுள்ளது.

மேற்குறிப்பிட்ட வகையில் கல்வி தொடர்பாக ஒவ்வொரு அறிஞர்களாலும் அவர்களது காலகட்டத்தில் உள்ள எண்ணக்கருக்களை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு வரைவிலக்கணங்கள் தோற்றம் பெற்றது. அன்றும் இன்றும் சில வரைவிலக்கணங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டும் சில வரைவிலக்கணங்கள் மாற்றம் பெற்றும்  வருகின்றது. “கற்றது கைமண்ணளவு கல்லாதது உலகளவு” என்ற முதுமொழியைக் கொண்டே இக்கல்வியும் அதற்கான வரைவிலக்கணமும் இன்று வரை முடிவில்லாத தேடலாக அமையப்பெறுகிறது. நவீனத்துவத்தை அடிப்படையாக கொண்ட இந்தக் காலப்பகுதியானது செல்கின்றது. தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டும், தொழிற் கல்வியை மையப்படுத்தியும் அனைவரையும் கல்வியின்பால் ஈர்க்க வேண்டும் என்று நாடுகளுக்கிடையே சட்டங்கள், கல்விச் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. ஆகவே கல்வியானது மனித வாழ்வை மனிதனிற்கே உணர்த்தும் தேடலாக பொருள் கொள்ளப்பட்டு வருகின்றது என்றால் அது மிகையாகாது . இத்தகைய கல்வியை நாம் பெறுவதுடன் அதனை எதிர்காலத்திற்கும் வளமுடையதாக வழங்குவதற்கு ஏற்ற செயற்பாடுகளை நாம் பாரியளவில் முன்வைக்கும் போது எமது கல்வி எண்ணக்கருக்கள் கூட நாளைய தலைமுறையினர்க்கு ஒரு வரைவிலக்கணமாக உருவாக வாய்ப்புண்டு.

துணைநின்றவை

 • ஆனந்தராஜ் ந., 2005, தேசியத்தை நோக்கிய கல்வி, நந்திப் பதிப்பகம், வல்வெட்டித்துறை.
 • ஆறுமுகம் வ., 2000, கல்விப்பாரம்பரியங்கள், உயர் கல்விச்சேவை பதிப்பகம், யாழ்ப்பாணம்.
 • கருணாநிதி மா., 2008, கற்றல் கற்பித்தல் மேம்பாட்டிற்கான வழிமுறைகள், சேமமடு பதிப்பகம். கொழும்பு
 • கினிகே எல்.ஜ., 2008, புதிய கலைத்திட்ட நோக்கும் பாடசாலைக் கல்வியில் எதிர்பார்க்கப்படும் மாற்றமும், ம். கல்விவாண்மை தேர்ச்சி விருத்தி மைய வெளியீடு, மீட்பே சந்தி, பாதுக்கை
 • சந்திரசேகரம் ப., கல்வித் தத்துவம், யாழ்ப்பாணக் கூட்டுறவு தமிழ் நூற்பதிப்பு விற்பனை நிலைய வெளியீடு.
 • செல்வராஜா மா., 2005, முன்பள்ளி கல்விச் சிந்தனைகளும் செயற்பாடுகளும், கௌரி வெளியீட்டகம்.
 • செல்வராஜா மா., 2009, தொடக்கக் கல்வி பற்றிய சிந்தனைகளும் பாடத்திட்டமும், மணிமேகலைப் பிரசுரம், சென்னை.
 • ஜெயராசா சபா., 2006, கல்வியில் புதிய சீர்திருத்தங்கள், அகவிழி வெளியீடு, கொழும்பு.
 • …………………., 2007,  கலைத்திட்டம், அகவிழி வெளியீடு, கொழும்பு.

யேசுஐயா டிலானி

உதவி விரிவுரையாளர்

கிழக்குப் பல்கலைக்கழகம்

இலங்கை

[email protected]