ஆய்வுக்களம்

“வஜ்ஜாலக்கம் குறள்போல அறம், பொருள், இன்பம் எனும் முப்பால் பற்றிய கவிதைகள் அடங்கிய நூலாகும். திருக்குறளில் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்ற பகுப்பு உண்டு. வட மொழியில் பர்த்ருஹரி சுபாசிதத்திலும், நீதி சதகம், வைராக்ய சதகம், சிருங்கார சதகம் என்று அறம், வீடு, இன்பம் ஆகிய முப்பால் பகுப்புண்டு. வஜ்ஜாலக்கத்தில் அத்தகைய பகுப்புமுறை இல்லை எனினும் அறம், பொருள், இன்பம் ஆகிய முப்பால் (திரிவர்க்கம்) குறித்த கவிதைகளைத் தொகுத்துள்ளதாக நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார் (2005:14)”. எனவே வஜ்ஜாலக்கத்தில் இடம்பெறும் ஆள்வினை கருத்தியல் வள்ளுவரின் ஆள்வினையின் தாக்கத்தினால் எழுதப்பெற்றிருக்குமா? எனும் கருதுகோளை முன்வைத்து இவ்வாய்வு நகர்கிறது.

‘ஆள்வினை’ தனி மனிதனின் வலிமிகு பண்பை அடையாளம் காட்டும் சொல். இச்சொல்லுக்கு அப்படி என்ன பண்புகள் உள்ளன? இறைமாட்சி, கல்வி, கல்லாமை, கேள்வி, அறிவு, குற்றங்கடிதல், பெரியாரைத்துணைக்கோடல், சிற்றினஞ்சேராமை, தெரிந்து செயல்வகை, வலியறிதல், காலமறிதல், இடனறிதல், தெரிந்து தெளிதல், தெரிந்து வினையாடல், சுற்றந்தழால், பொச்சாவமை, செங்கோன்மை, கொடுங்கோன்மை, வெருவந்த செய்யாமை, கண்ணோட்டம், ஊக்கமுடைமை, மடியின்மை ஆகிய இருபத்தைந்தும் அப்பண்புகளாம். இவை ஒரு மனிதனிடத்து அமைய அவன் பிற மனிதனிடமிருந்து வேறுபடுத்திக் காட்டும். எனவே, மனிதன் ஒவ்வொரு படிநிலையிலும் தன்னைப் பிற மனிதர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுவதற்கு முயற்சிக்கிறான். அவன் அப்பண்பைப்பெற மேற்கொள்ள வேண்டிய படிப்பினைகளைத் தமிழில் வள்ளுவரும் (திருக்குறள் – கி.மு.31), பிராகிருதத்தில் சயவல்லபனும் (வஜ்ஜாலக்கம் – கி.பி.10) தந்துள்ளனர். அவ்விருவரின் ‘ஆள்வினையுடைமை – ஆள்வினைமுறை’ சிந்தனைகளினூடாகத் தரும் படிப்பினைகள் இங்கு ஒப்பிட்டுப் பார்க்கப்படுகின்றன.

வஜ்ஜாலக்கம் அறிமுகம்

வஜ்ஜாலக்கம் பிராகிருத மொழியில் எழுதப்பெற்ற செய்யுள் (காதா) வடிவுடைய நூலாகும். இந்நூல் தமிழின் திருக்குறள் போன்ற அறநூல்களின் சிந்தனைகளைக் கொண்ட நூலாகும். இந்நூலைச் சுவேதாம்பர சமணமுனி சயவல்லபன் கி.பி.பத்தாம் நூற்றாண்டில் இயற்றியுள்ளார். இதனை உரைநடையில் தமிழ்மொழிக்குக் கொணர்ந்த பெருமை மு.கு.ஜகந்நாதராஜாவைச் சாரும். இவர் மூலமொழியிலிருந்து நேரடி மொழிபெயர்ப்பாகத் தந்துள்ளார். இது தமிழில் மட்டுமின்றி, தெலுங்கிலும் கன்னடத்திலும் மொழிபெயர்க்கப்பெற்றுள்ளன. தமிழில் வஜ்ஜாலக்கம் (வைரப்பேழை) எனும் பெயரில் 832 பாடல்கள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன என மொழிபெயர்ப்பாளர் கூறுகிறார் (வஜ்ஜாலக்கம் 2005:20). ஆனால் தமிழினி பதிப்பகத்தில் வெளியிட்டுள்ள பதிப்பில் 795 பாடல்களின் உரைக்கருத்துக்கள் மட்டுமே காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

முன்னாய்வு

இதற்கு முன்பு வஜ்ஜாலக்கத்துடன் திருக்குறளை ஒப்பிட்டு இரண்டு ஆய்வுமுயற்சிகள் நடைபெற்றமையை அறியமுடிகின்றது. அவை வருமாறு:

 • அல்குல்: சங்கப்புலவர்களின் புனைவியலும் உரையாளர்களின் சொல்திறனும் (ந.இராஜேந்திரன்) எனும் தலைப்பிலான கட்டுரை, தமிழ்ச் சங்கப் பனுவல்களுக்கிடையே அமைந்திருக்கும் ‘அல்குல்’ குறித்த பதிவு பற்றிப் பேசினாலும், ஆய்வின் இறுதியில் தமிழ்ச் செவ்விலக்கியத்தின் சிறப்பை எடுத்துரைக்க வஜ்ஜாலக்கச் சிந்தனை கோடிட்டுக் காண்பிக்கப்பெற்றுள்ளது.
 • திருக்குறள் வஜ்ஜாலக்கம் உணர்த்தும் பாலியல் (த.சத்தியராஜ்) எனும் தலைப்பிலான கட்டுரை, திருக்குறள், வஜ்ஜாலக்கத்தில் காணப்படும் பாலியல் கருத்தை ஒப்பிட்டு நோக்குகிறது.

இவ்வடிப்படையில் நோக்கும்பொழுது இவ்வாய்வானது தாக்கத்தைக் கண்டறியும் முதன்மை ஆய்வாக அமைகின்றது.

ஆள்வினை : அறம் – பொருள் – காமம் இவற்றில் எதற்குரியது?

‘ஆள்வினை’ எதற்குத் தேவை? அறத்திற்காகவா? பொருளுக்காகவா? காமத்திற்காகவா? என்ற வினாக்களுடன் இவ்வாய்வைத் தொடங்கலாம். வள்ளுவர் ஆள்வினையுடைமையைப் பொருட்பாலில் வைக்கிறார். அப்படியெனில் பொருளாதாரத்தைப் பெருக்குவதில் மட்டும்தான் ஆள்வினை அவசியமாகிறது என்ற கருத்துடன்பாட்டுக்கு வரக்கூடும். இதற்கு ஓர் அமைதி கூறலாம். அறத்தைப் பேணிய மனித சமூகம் அரசியலில் கால்பதிக்கிறது. அவ்வரசியலில் ஆள்வினை மிகத்தேவையாகிறது. அதனால் வள்ளுவர் பொருட்பாலை இருபகுதியாக (அரசியல், உறுப்பியல்) அமைந்துள்ளார் எனலாம். அவற்றுள் அரசியலில் ஆள்வினையுடைமையைப் பதிவு செய்கிறார். “பொருளீட்ட வேண்டிய மக்களெல்லாருள்ளும் அரசன் தலைசிறந்தவனாதலாலும், மக்களெல்லாரும் தத்தம் தொழில் செய்து பொருளீட்டுதற்கு அரசனது காவல் இன்றியமையாததாலும் அரசாட்சி கூறவே அரசனுங் குடிகளும் பொருளீட்டுதல் அதனுள் ஒருங்கே யடங்கும்” (ஞா.தேவநேயப்பாவாணர் 2009:1). இது போன்ற கருத்து விளக்கங்களுக்கு இடந்தராமல் பொதுமையாக ஆள்வினைமுறை என விளக்கியுள்ளார் சயவல்லபன். அதாவது பெரும்பிரிவு இன்றிப் பொதுப் பிரிவில் விளக்கியமையாகும். வள்ளுவரிலிருந்து சயவல்லபன் வேறுபடுகின்றமைக்குப் பகுப்புமுறைக் கட்டமைப்பு குறித்த எண்ணம் எழாத சமூகப் பின்புலத்தில் வாழ்ந்தமை காரணமாகலாம். அவ்வாறுதான் இவ்விடத்தில் கருத வேண்டியுள்ளது. ஏனெனின் அறத்திற்கும் காமத்திற்கும் முக்கியத்துவம் அளித்துள்ள (2015:15) சயவல்லபன், ‘ஆள்வினை முறை’ப் பகுதியில் காமம் சார்ந்த பதிவுகளைத் தவிர்த்துள்ளார். இது வள்ளுவருடன் நெருங்கவைக்கிறது. அதுமட்டுமின்றி வள்ளுவரின் ஆள்வினைச் சிந்தனைகள் சயவல்லபன் கருத்துக்களில் புடமிட்டிருப்பதை உணர முடிகின்றன. அவற்றை முயற்சி – ஊழ் என்ற கருத்தியலால் விளக்க முயற்சிக்கலாம்.

முயற்சி ஊழ்

‘முயற்சி’ முயலும் வினையைக் குறிப்பது. இது ஆள்வினைப் பண்பை வளர்த்துக் கொள்வதில் பெரும்பங்காற்றுகிறது. மனித வாழ்க்கைமுறையில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் முயற்சியால் வென்றிருக்கின்றனர். அவ்வகையில் அவ்விரு புலவர்களும் ‘முயற்சி’ எனும் கருத்தியலுக்கு முக்கியத்துவம் அளித்துள்ளனர். வள்ளுவர் ‘முயற்சி’ குறித்துப் பத்துக் குறட்பாக்களில் தந்துள்ளார். அதிலும்,

“முயற்சி திருவினை யாக்கு முயற்றின்மை

யின்மை புகுத்தி விடும்” (குறள்.616)

எனும் குறட்பாவில் நேரடியாக முதன்மையளித்தமையைக் காணலாம். பிற ஒன்பது குறட்பாக்களிலும் அது தொடர்புடைய சிந்தனைகளைப் பதிவு செய்கிறார்.

 • வைராக்கியத்துடன் முயலுதல் (611)
 • அரைகுறையாக முயலுதல் கூடாது (612)
 • எல்லோருக்கும் உதவி செய்தல் என்னும் மேம்பாட்டில் முயற்சி தேவை (613)
 • போதிய முயற்சி இல்லாமல் பிறருக்கு உதவி செய்ய இயலாது (614)
 • குறிக்கோளை அடைய முயற்சி தேவை (615)
 • அயரா முயற்சி தேவை (617)
 • விடா முயற்சி இன்மை குற்றம் (618)
 • விடா முயற்சியால் சாதிக்கலாம் (619)
 • விடா முயற்சியுடையார் பயன்பெறுவர் (620)

அதனைப் போன்று சயவல்லபனும் இணையற்ற முயற்சி (109), சான்றோரின் முயற்சி (115), முயற்சியின் பயன் செல்வம் (116), முயற்சியுடையோர் (118), சான்றோர் இயல்பு முயற்சி (119) என்பதன் மூலம் ‘முயற்சி’ எனும் கருத்தியலுக்கு முக்கியத்துவம் அளித்துள்ளமையை உணரலாம். இக்கருத்தியலைப் பதினான்குக்கு ஐந்து கருத்துக்களில் விளக்கியிருப்பதை வைத்து ஊகிக்கும்பொழுது வள்ளுவரின் சிந்தனை சயவல்லபனிடத்தும் சென்றிருக்கும் வாய்ப்புண்டு எனலாம். அதற்குச் சான்றாக,

“தெய்வத்தா னாக தெனினும் முயற்சிதன்

மெய்வருத்தக் கூலி தரும்” (குறள்.619)

எனும் குறட்பாவில் “ஒரு முயற்சியை ஒருவன் தன் வாழ்நாள் முழுதுந் தொடர்ந்தும் வெற்றிபெறாது போயின், அன்று அது தெய்வத்தானாகவில்லையென்று துணியப்படும். ஆயினும், இதுவரை அவன்பட்ட பாட்டிற்கேற்ற பயனை அடைந்தேயிருப்பான். முயற்சி வெற்றி பெற்றிருப்பதால், அம் மெய்வருத்தக் கூலியோடு பெரும்பயன் அடைந்திருப்பான். ஆதலால் எவ்வகையிலும் கேடில்லை. ஆகவே, விடாமுயற்சியைக் கைவிடக்கூடாது என்பது கருத்து” (ஞா.தேவநேயப் பாவாணர் 2009:133) என இடம்பெறும் கருத்தைக் காட்டலாம். இது ‘தெய்வம்’ என்ற கருத்தியலை விளக்க முற்படுகிறது. அதாவது தெய்வமுறையில் கிடைக்கக்கூடிய பயன்கூட முயற்சியால் கிடைத்துவிடும் என்பதாகும். இதனையே சயவல்லபனும்,

 • ஆள்வினைத்திறன் (ஆற்றல்) உடையவர்கள் தம் மனவிருப்பத்தை நிறைவேற்றிக் கொள்கிறார்கள். இதில் ஐயமில்லை. தலை மட்டுமே உடைய ராகு சந்திரனை விழுங்குவதில்லையோ? (107)
 • ஆற்றல்மிக்க துணிபுடையவர்கள் தம் ஆள்வினைத் திறனால் எதையும் சாதித்துவிடுவார்கள். ஊழ் (விதி) கூட இவர் திறம் கண்டு தலையசைத்து வியப்புடன் பாராட்டும் (108)
 • துணிவினால் பெற்ற வினை எனும் மணியைப் பெற்ற தீரர்களைக் கண்டு அயன், மால், சிவன் ஆகிய மும்மூர்த்திகளும் வியந்து பாராட்டுவார்கள் (111)

போன்ற கருத்துக்கள்வழித் தெளிவுபடுத்துகிறார். இவர் வள்ளுவரிடமிருந்து சிந்தனையைப் பெற்றிருக்கலாம் என்பதற்கு ‘முயற்சி’ என்னும் கருத்தியலுடன் ‘ஊழ்’ எனும் வினையைப் பொருத்திக்காட்டிப் பேசிச்செல்வது காரணமாகின்றது. இரு புலவர்களும் ‘முயற்சி – ஊழ்’ எனும் சிந்தனைகளில் நெருங்கிப் போகின்றனர். அதனால்தான் வள்ளுவரின் ‘ஆள்வினை’ எனும் சிந்தனை, சயவல்லபனிடத்துச் சென்றிருக்கலாம் என ஊகிக்கத் தோன்றுகிறது. அதற்கு இரண்டு காரணங்களை முன்வைக்கலாம். அவை: கால வேறுபாடு, அவைதீக சமய ஒற்றுமை என்பன.

காலவேறுபாடு

‘காலவேறுபாடு’ எனும் காரணத்தை முன்வைப்பதற்குச் சயவல்லபரின் காலத்தைக் காட்டிலும் வள்ளுவரின் காலம் ஆயிரம் நூற்றாண்டுகளுக்குமேல் முந்தையது. வள்ளுவரின் சிந்தனை இப்புவி எங்கும் சென்றுள்ளமை நோக்கத்தக்கது. குறிப்பாகக் கிரேக்க ஆதிக் கவிதைகளில் வள்ளுவரின் தாக்கத்தைக் காணமுடிகின்றது என்பதை ப.மருதநாயகத்தின் கருத்தை ஊன்றிக் கவனிப்பாருக்குப் புரியும். அக்கருத்து வருமாறு:

… திருவள்ளுவரைப் பற்றிய செனகாவின் குறிப்பு நம்பத்தக்க வரலாற்று ஆவணச் சான்றாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்பதற்கு வேறுசில காரணங்களும் உண்டு. செனகா தமது நண்பராகிய லூசிலியஸ் (Lucilius) என்பார்க்கு எழுதிய மடல்களாகப் பல தத்துவத் தலைப்புகளில் அமைந்த மடலும் ஓர் அறக்கருத்தை வலியுறுத்தும். தாம் எடுத்துக் கொண்ட பொருளை விளக்கிச் சொல்லும் செனகா மடலின் இறுதியில் ‘என்னுடைய எண்ணங்களை மட்டுமல்லாமல் இன்னொரு அறிஞருடைய முடிவையும் உனக்குச் சொல்ல விரும்புகிறேன். அவர் யாராக இருப்பினும் அவருடைய கருத்து, சிறப்பானதாக இருப்பதால் அதை நீ அறிந்துகொள்ள வேண்டும் என்ற அவாவினால் இங்குப் பதிவு செய்ய விரும்புகிறேன்’ என்று எழுதி அம்மேற்கோளையும் தருவார். இவ்வாறு பல வெளிநாட்டு, உள்நாட்டு அறிஞர்களின் கருத்துகள் செனகாவின் கட்டுரைகளில் இடம்பெறுகின்றன. செனகா பேசுகின்ற பொருள்கள் பலவும் திருக்குறளில் காணப்படுகின்றன (பிறமொழி இலக்கியங்களில் தமிழிலக்கியங்களின் தாக்கம், 2014:74-75)

இக்கருத்தின் பின்னணியினை நோக்கினால் வள்ளுவரின் சிந்தனை சயவல்லபனிடத்து அமைந்துகிடக்கின்றமையை உணரலாம். அதற்கும் இங்குச் சுட்டிக்காட்டப்பட்ட மேற்கோளுக்கும் என்ன பொருந்தம் என வினவலாம். பொருத்தம் உண்டு. இம்மேற்கோள் கருத்து ஆதி கிரேக்க இலக்கியங்களில் பொதிந்துள்ள வள்ளுவரின் சிந்தனைகளைக் காட்டுவது. எனவே, மேலை இலக்கியங்களில் வள்ளுவரின் தாக்கம் இருக்கும் பொழுது கி.பி.பத்தாம் நூற்றாண்டில் எழுதப்பெற்ற வஜ்ஜாலக்கத்தில் இடம்பெறுவது ஒன்றும் வியப்பில்லை.

அவைதீக சமய ஒற்றுமை

இதனைப் போன்று இரண்டாவது காரணமாகிய ‘அவைதீகச்’ சிந்தனையும் மேலும் வலியூட்டுகின்றது. இவ்விருமொழிப் புலவர்களும் கடவுள்சாராக் கொள்கையுடையவர்கள். ஆகையால் வள்ளுவர் கருத்து எளிதில் சயவல்லபனிடத்து அமைதலுக்குக் காரணமாகிறது. அதனை வெளிப்படையாகவே தம் கருத்துக்களில் பதிவுசெய்கிறார். சான்றாக,

திருமகள் திருமாலின் மார்பில் வசிக்கவில்லை. அலை கடலிலும் வசிக்கவில்லை. தாமரை மலரிலும் வகிக்கவில்லை. முயற்சியுடைய நல்லோர் தம் ஆற்றல் எனும் கடலில்தான் வசிக்கிறாள் என்பது தெளிவு (118)

எனும் கருத்தினைக் காட்டலாம். இது ‘திருமகள் ஆள்வினைப் பண்பு உடையோரிடத்து அமைந்துள்ளாள்’ என்கிறது. ஆக, கடவுள் வேறெங்கும் இல்லை. மனிதனின் மனதில்தான் உறைந்துள்ளது எனும் கடவுள்சாரா கொள்கையுடையோரின் கருத்து இங்குப் புடமிட்டுள்ளது. ஆக, காலத்தால் மிகவும் பின்தங்கிய சயவல்லபனிடத்துத் திருவள்ளுவர்தம் சிந்தனை சென்றிருக்கிறது என்பது வெளிப்படை.

நிறைவாக

இதுவரை விளக்கப்பெற்ற கருத்தியல்களின் அடிப்படையில் நோக்கும்பொழுது திருவள்ளுவரும் சயவல்லபனும் தொல்காப்பியப் பாயிரத்தில் இடம்பெறும் ‘வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகத்து’ எனும் எல்லைக்கோட்டுப் பகுதிக்குள் வாழ்ந்தவர்கள் என்பதாலும், தமிழ் – பாலி – பிராகிருதம் ஆகிய மொழிகள் ஒன்றற்கொன்று தொடர்புடைய மொழிகள் என்பதாலும், சமணமும் பௌத்தமும் கடவுள்சாராக் கொள்கையுடையன என்பதாலும் கருத்தளவில் ஒருமித்து நிற்கின்றனர். ஒத்த கருத்துடையவர் எனக் கூறுவதைக் காட்டிலும் காலத்தால் இருவரும் வேறுபட்டு நிற்பதால் வள்ளுவரின் சிந்தனை சயவல்லபனிடத்துச் சென்றிருக்கிறது எனக் கருதுதல் பொருத்தமுடைத்து.

துணைநின்றவை

 • சத்தியராஜ் த., இராஜேந்திரன் ந., தமிழரசன் ம.(பதி.), 2017, தமிழ்ச் செவ்விலக்கிய மேன்மை (மகளிர் உடலியல் – பாலியல்சார் பதிவுகளை முன்வைத்து), காவ்யா பதிப்பகம், சென்னை.
 • தேவநேயப் பாவாணர் ஞா. (உரை.), 2009, திருக்குறள் தமிழ் மரபுரை (அறத்துப்பால்), தமிழ்மண் அறக்கட்டளை, சென்னை.
 • …, திருக்குறள் தமிழ் மரபுரை (பொருட்பால்), தமிழ்மண் அறக்கட்டளை, சென்னை.
 • மருதநாயகம் ப., 2014, பிறமொழி இலக்கியங்களில் தமிழிலக்கியங்களின் தாக்கம், தமிழ்ப் பேராயம், சென்னை.
 • ஜகந்நாத ராஜா மு.கு., 2005, வஜ்ஜாலக்கம், தமிழினி பதிப்பகம், சென்னை.

.சத்தியராஜ்

தமிழ் உதவிப் பேராசிரியர்

இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி (த.)

கோயமுத்தூர் – 641 028

9600370671, [email protected]