உளவியல் என்பது உள்ளத்தைப் பற்றி விஞ்ஞான ரீதியான அறிதலாகும். உளவியல் பற்றிய சிந்தனைகள், கோட்பாடுகள் காலத்திற்குக் காலம் தோற்றம் பெற்று வளர்ச்சியடைந்து வந்துள்ளன. அவற்றினை வளர்த்தெடுப்பதில் உளவியல் அறிஞர்களுக்கு முக்கிய பங்குண்டு. அவ்வறிஞர்கள் காலத்தின் போக்கைப் பிரதிபலிப்பதுடன் காலத்தினை உருவாக்குகின்ற பணியையும் மேற்கொண்டுள்ளனர். இத்தகைய சிந்தனையாளர்கள் வரிசையில் ரசிய நாட்டு உயிரியல் விஞ்ஞானி ஐ.பி.பவ்லோவ் அவர்களுக்குத் தனியிடம் உண்டு.

இவரது மேதாவிலாசத்தின் அடிப்படைகளையும் பலவிதமான வரம்புகளையும் கடந்து சென்ற அவரது அணுகுமுறைகளையும் தரநிர்ணயம் செய்வதற்குப் பொருள், மனம்,  உணர்வு என்பவற்றின் தோற்றம் குறித்தும் அவற்றுக்கிடையிலான உறவு குறித்த தெளிவும் அவசியமானதொன்றாகும். ஆத்மா, சிந்தனை, உணர்வு என்பன குறித்துப் பலரால் பல்வேறுபட்ட கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. மனதைவிட பொருளின் முதன்மையை ஏற்றுக்கொள்பவனே பொருள்முதல்வாதி. சிந்தனை என்பது பொருளை அடிப்படையாகக் கொண்டு உருவானதாகும். உதாரணத்திற்கு மாம்பழம் குறித்த சிந்தனை எண்ணம் தோன்றுகின்றது. இங்குப் பொருளே சிந்தனைக்கு அடிப்படையாக உள்ளது. எனவே சிந்தனை இன்றிப் பொருள் இருக்க முடியும். பொருளின்றிச் சிந்தனை இருக்க முடியாது. இதனடிப்படையில் பொருளைப் புறநிலையாகக் கொண்டு தோற்றம் பெற்ற சிந்தனையானது பொருள்முதல்வாத சிந்தனை என அழைக்கப்படுகின்றது. இவ்விடயம் குறித்து லெனின் அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். “புறநிலை யதார்தத்தைக் குறிப்பிடுகின்ற தத்துவார்த்த வகையே பொருளாகும். மனிதனுக்கு உணர்வுகளால் தரப்படுகின்றது. பொருளை நம் உணர்வுகளால் நகல் எடுக்கலாம் . புகைப்படம் எடுக்கலாம், பிரதிபலிக்கலாம். எனினும் இவற்றுக்கு அப்பால் பொருள் சுயேற்சையாக இருக்கிறது.” பொருள் என்பது இடையறாது மாறிக் கொண்டே இருக்கும். மாற்றங்கள் யாவும் இயக்கத்தையும்,  இயக்கங்கள் அனைத்தும் மாற்றத்தையும் உள்ளடக்கி நிற்கும். அவ்வகையில் இயக்கம் என்பது ஒரு வகையில் முரண்பாடாகும். பொருள்களிலே காணப்படும் இயல்பான முரண்பாடுகளின் வெளிப்பாடாக இயக்கமும் மாற்றமும் நிற்கின்றது என்பது யதார்த்த நியதி. பொருள்களில் இயல்பாகவே காணப்படும் எதிர்மறைக்கு இடையிலான முரண்பாடு பற்றிய தேடலானது இயக்கவியல் என அழைக்கப்படும்.

இங்கு இயக்கம் என்பது ஒருவகையில் முரண்பாடாகும். பொருள்களிலே காணப்படும் இயல்பான முரண்பாடுகளின் வெளிப்பாடாகவே இயக்கமும் மாற்றமும் நிகழ்கின்றது. புறநிலையுலகின் அனைத்து இயங்கியல் போக்குகளும் உடனேயோ அல்லது சற்றுத் தாமதமாகவோ மனித அறிவில் எதிரொளியாகக் காணப்படும். சமுதாய நடைமுறையில் ஒரு நிகழ்வு தோன்றி வளர்ந்து, மறைதல் என்பது இடையறாது தொடர்ந்து நடந்து கொண்டேயிருப்பதைப் போலவே மனித அறிவின் வளர்ச்சியிலும் நிகழ்வுகள் தோன்றி வளர்ந்து மறைந்து கொண்டே இருப்பதைக் காண்கின்றோம். மனிதன் தன் நடைமுறைகளினால் சில குறிப்பிட்ட கருத்துக்கள், கோட்பாடுகள்,  திட்டங்கள் ஆகியவற்றிற்கு இணங்கப் புறநிலை யதார்த்தத்தை மாற்றி அதை மேலும் மேலும் வளர்த்தெடுத்திருக்கின்றான். இவ்வாறு செய்வதன் வாயிலாகப் புறநிலை யதார்த்தத்தைப் பற்றி அவனது அறிவு ஆழமாகிக் கொண்டே செல்லும். புறநிலை யதார்த்த உலகை மாற்றுவதற்கான நிகழ்வுகள் தொடர்ந்து இடையறாது நடந்து கொண்டே இருக்கும். அதைப்போன்றே நடைமுறையின் மூலமாக உண்மையை அறியும் மனிதனின் முயற்சிக்கும் எப்போதும் முடிவில்லை.

இந்த நியதியானது பௌதிக பொருள்களில் மட்டுமின்றி மனித சமுதாயத்திற்கும் பொருந்தக் கூடிய ஒன்றாகும். சமூக அசைவியக்கமும் அதனடிப்படையாக எழுகின்ற சிந்தனைகளும் கருத்தோட்டங்களும் இத்தகைய இயக்கம் மாறுதல் என்ற அடிப்படையான விதிகளுக்கு உட்பட்டே இயங்குகின்றன. இந்த மாற்றத்தின் இயக்கவியலை புரிந்து கொள்வதன் மூலமே சமுதாய மாற்றத்திற்கு முழுமையான பங்களிப்பினை வழங்க முடியும். மாறாக இதனை புரிந்து கொள்ளாது பின் நிற்கின்ற அல்லது புரிந்து கொள்ளாதவர்களின் கையிலிருந்து வரலாறு நழுவிவிடும் என்பதனைக் கடந்த கால நிகழ்வுகள் எடுத்துக் காட்டியுள்ளன. இதற்கு மாறாக பொருள்களின் இயக்கம் மாறுதல்கள் அவற்றுக்கிடையிலான முரண்பாடுகள் யாவும் பல காட்சியில் பெறப்படும் மாயை. இவர்கள் பொருளை விட சிந்தனைக்கும் உடலைவிட ஆன்மாவிற்கும் அறிவைவிட நம்பிக்கைக்கும் முதலிடம் கொடுக்கின்றார்கள். இவர்கள் கருத்து முதல்வாதிகள் என அழைக்கப்பட்டனர். அந்த வகையில் பொருள்- சிந்தனை-ஆத்மாவுக்கு இடையிலான உறவு குறித்து கருத்து முதல்வாதிகள் பொருள் முதல்வாதிகளுடன் முரண்பட்ட கருத்தினைக் கொண்டுள்ள அதேசமயம் இரு எதிர் முகாம்களாகப் பிரிந்து இதுவரை தத்துவப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

இச்சூழலில் பவ்லோவ் அவர்களின் ஆராய்ச்சியானது வயிற்றுச் சுரப்பிகளைப் பற்றியும் உமிழ் நீருக்கும் மூளையின் இயக்கத்திற்கும் உள்ள தொடர்பைப் பற்றியதாகவே அமைந்தது.  அதாவது பவ்லோவ் முன்வைத்த நிபந்தனைப்படுத்தல் பற்றிய கருத்துக்கள் கற்றல் பற்றிய பிற்கால ஆய்வுத் தளத்தில் ஆழமான செல்வாக்கினைச் செலுத்தியுள்ளதாகக் கொள்ளலாம். உடற்றொழிலியலாரான இவரை ஓர் உளவியலாளராகக் காணவைத்தவை இக்கருத்துக்களேயாகும். தெறிவினைகளை நிபந்தனைப்படுத்துவது தொடர்பான குறிப்பாக உணவுச் சமிபாடு தொடர்பான இவரது ஆய்வுகளே ‘நிபந்தனைப்படுத்தல்’ எனும் செயற்பாடு பற்றிய கருத்துக்களை முன்வைக்க உதவின. இவரது கொள்கைகள் ‘பழைய நிபந்தனைப்பாட்டுக் கொள்கை’ எனவும் வழங்கப்படுகின்றது. மிருகங்களுக்கு(நாய்) உணவு வழங்குவதை அவர் பரிசோதனைக்குட்படுத்தி அதிலிருந்து ஆன்மா பற்றி உடல்களது நியதிகளை விளக்கியுள்ளார். இதற்காக நாயின் ஆசைகளையும் அதன் எதிர்பார்ப்புகளையும் பற்றி தெரிவதற்கான முயற்சியில் ஈடுபட்டார். இந்த விஞ்ஞான ஆய்வில் தம் வாழ்நாள் முழுவதையும் செலவிட்டார். அவரது ஆய்வுக் கட்டங்கள் பின்வருமாறு வகுக்கப்பட்டு விளக்கமளிக்கப்பட்டன.

ஆய்வின் முதல் கட்டம்:

ஒரு நாயின் கன்னத்தினூடாக குழாய் ஒன்றினைப் பொருத்தி அதனூடாக உமிழ்நீரின் அளவைக் கணிப்பிடுவதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டார். நாயின் கவனம் சிதறாத வகையில் அதனை இருட்டறை ஒன்றில் வைத்துத் தன்னியக்கக் கருவியினூடாக உணவு (இறைச்சி) வழங்க ஏற்பாடு செய்தார். இந்தச் செயற்பாடுகளின்போது கிடைக்கும் தகவவல்களை மிகவும் கவனமான முறையில் பதிவுசெய்து கொண்டார். ஆரம்பத்தில் இறைச்சியைக் கண்டதும் நாயில் உமிழ்நீர் சுரக்கப்பட்டதை அவதானித்தார். இச்செயற்பாட்டைப் பின்வரும் வரைபடம் விளக்குகின்றது.

இறைச்சித் துண்டு (S)                  உமிழ்நீர் (R)

இங்கு இறைச்சித்துண்டைக் கண்டதும் பசியுள்ள நாயின் வாயில் உமிழ்நீர் சுரந்தது.  அவ்இறைச்சித் துண்டு தூண்டியாகும். உமிழ்நீர் சுரத்தல் துலங்கலாகும். இச்செயற்பாடானது நிபந்தனைக்குட்படாத ஒன்றாகும்.

பரிசோதனையின் இரண்டாவது கட்டம்:

இங்கு நாய்க்கு இறைச்சித் துண்டை வழங்கும்போது மணி ஒலிக்கப்பட்டது. இவ்வாறு மீண்டும் மீண்டும் இறைச்சித் துண்டை வழங்கும்போது மணி ஒலிக்கப்பட்டது. மணியை இறைச்சியுடன் சம்பந்தப்படுத்தும் நிகழ்ச்சிக்கு முன்னர் மணியோசை நாயில் குறிப்பிட்ட விளைவைத் தோற்றுவிக்கவில்லை. ஆனால் பின்பு மணியோசையோடு இறைச்சியையும் சம்பந்தப்படுத்திக் கொடுக்கப்பட்டபோது உமிழ்நீர் சுரந்தது. இங்கு மணியொலி நடுநிலைத் தூண்டல் அல்லாது கற்ற அல்லது நிபந்ததனைப்படுத்தப்பட்ட தூண்டலாக இருக்கின்றது. இதன்போது உமிழ்நீரைச் சுரத்தல் நிபந்தனைப்படுத்தப்பட்ட துலங்கலாக இருக்கின்றது. இதனைப் பின்வரும் வரைபடத்தின் மூலமாகக் காட்டலாம்.

இறைச்சித் துண்டு

உமிழ்நீர் சுரத்தல்

மணி ஒலி

பரிசோதனையின் மூன்றாவது கட்டம்:

இங்கு இறைச்சித்துண்டை வழங்காமலே மணி ஒலிக்கப்பட்ட போது நாயின் வாயில் உமிழ்நீர் சுரந்தது. இயற்கையான தூண்டிக்கு (இறைச்சித் துண்டு) பதிலாக வேறொரு தூண்டி (மணி ஒலி) நிபந்தனைப்படுத்தப்பட்டது. இங்கு மணியொலியைக் கேட்டவுடன் நாயின் வாயில் உமிழ்நீர் சுரத்தல் இயற்கையானதொன்றல்ல. அது நிபந்தனைப்படுத்தப்பட்ட தூண்டியினால் ஏற்படும் நிபந்தனைப்படுத்தப்பட்ட துலங்கலாகும்.  இதனைக் கீழுள்ள வரைபடத்தில் காணலாம்.

மணி ஒலி (CS)     உமிழ்நீர் சுரத்தல் (CR)

மணியொலிக்கு உமிழ்நீர் சுரக்கும் துலங்கல்களைப் போல வேறு தூண்டல்களினால்       பெற்றுக் கொள்ள முடியும் என்பதை பவ்லோவ் பல்வேறு பரிசோதனைகளின் மூலமாகக் கண்டறிந்தார்.

பரிசோதனையின் நான்காவது கட்டம்:

மணி ஒலித்த பின்னர் இறைச்சித்துண்டைக் காட்டாது விட்டால் காலப்போக்கில் நாயின் வாயில் உமிழ்நீர் சுரக்கின்ற தன்மை இல்லாது போய்விடும். இவ்வாறு துலங்கல் காட்டாது இருத்தல் துலங்கல் அழிதல் அல்லது தடைப்படல் என்றழைக்கப்படும். இவ்வாறு அழிந்த துலங்கல் சில சந்தர்ப்பங்களில் மீண்டும் தானாகவே ஏற்படும் சந்தர்ப்பங்களும் உண்டு. எடுத்துக்காட்டாக மணி ஒலிக்கு மட்டும் நாயின் உமிழ்நீர் சுரத்தல் தடைப்பட்டுப் பிறிதொரு சந்தர்ப்பத்தில் மணி ஒலிக்கு உமிழ்நீர் சுரக்கும். இதனைப் பவ்லோவ் சுயமாகத் தோன்றும் துலங்கல் என்பார். இவ்வாறு சமமான தூண்டிகளைத் தெரிவுசெய்து ஒன்றுக்குப் பதிலாக மற்றொன்றை நிபந்தனைப்படுத்துவதன் மூலமும் துலங்கலைப் பெற்றுக்கொள்ள முடியும். எடுத்துக்காட்டாக மணி ஒலிக்குச் சமமான ஒலியை ஏற்படுத்துவதன் மூலம் நாயின் உமிழ்நீர் சுரந்தது.  ஒரு தூண்டலில் இருந்து மற்றொரு தூண்டிக்குத் துலங்கலை மாற்றுதல் தூண்டியின் பரவல் என அழைக்கப்படும். பின்வரும் வரைபடம் அதனை எடுத்துக் காட்டுகின்றது.

மணி ஒலி (CS)

ஒலி (CS)                    உமிழ்நீர் (CR)

பயிற்சியின் பின்னர்:

ஒலி (CS))   உமிழ்நீர் சுரத்தல் (CR)

உணவுப் பொருட்கள் வாய்க்குள் போடுவதற்கு முன்னோ அல்லது போடாமல் இருக்கும் போதோ உமிழ்நீர் சுரக்கப்படலாம். அதாவது உணவைக் கண்ணால் காண்பதாலோ அதன் வாசனையை முகர்வதாலோகூட சில நேரங்களில் உமிழ்நீர் சுரக்கும். ஒரு நாய் குறிப்பிட்ட நேரத்திற்கொருமுறை உணவருந்தியது. உணவு அருந்துவதற்கு முன்னால் மணியடிக்கப்பட்டது. எனவே மணியடித்தவுடனே வரும் உணவை உட்கொள்ளும் பழக்கத்திற்கு நாய் ஆட்படுத்தப்பட்டது. அதன்பின் மணியோசை கேட்ட அளவிலேயே நாயின் உமிழ்நீர் சுரக்க ஆரம்பித்தது கண்டுபிடிக்கப்பட்டது. சோதனையால் உண்டுபண்ணப்பட்ட நிலைமைகளுக்கு இணங்க நாயின் உணர்வு மணிஓசைக்கேற்ப மாறிக் கொண்டுள்ளது. அடுத்தகட்ட ஆய்வில் மணியடிக்கப்பட்டது. ஆனால் நாய்க்கு உணவு ஏதும் தரப்படவில்லை. இச்சோதனையைத் தொடர்ந்து செய்தபோது மணியடிக்கப்பட்ட பின்னும் உணவு ஏதும் தராதபோது நாயின் உமிழ்நீர் சுரத்தல் நின்றுபோனது. அது தடுக்கப்பட்டுவிட்டது. அதாவது மாறிய புதிய நிலைமைகளுக்கேற்ப தூண்டுதலும் மாறிவிட்டது. இதற்கு முந்தைய நிலைமையில் ஏற்பட்ட செயல்கள் தடை செய்யப்பட்டன. மேலும் பவ்லோவ் மூளையின் புறப்பகுதி சரியாக வேலைசெய்யாதபோது இத்தகைய இச்செயல்கள் நடைபெறாது எனவும் கண்டுபிடித்தார்.

பவ்லோவின் இப்பரிசோதனையின் வாயிலாக மூன்று கொள்கைகள் உருவாக்கப்பட்டன. அவை உயர்நிலை நிபந்தனைப்பாடு, மறைதல், பொதுமைப்பாடு ஆகிய கொள்கைகள் ஆகும். படி முறையான ஆய்வுகளுக்கூடாகக் கற்றல் பற்றிய கோட்பாடுகளின் தெளிவுக்கும், வளர்ச்சிக்கும் வித்திட்டவர்களுள் பவ்லோவும் ஒரு முக்கிய நபராவார். வகுப்பறைக் கற்றலை நோக்காகக் கொண்டு இவரது கொள்கை உருவாக்கப்படவில்லை. எனினும் நிபந்தனைப்பாடு தொடர்பாக இவர் முன்வைத்த கருத்துக்கள் பல பள்ளி நடவடிக்கைகளுக்குப் பொருந்துவன. அவை தற்காலத்தில் குறிப்பாக கனிஸ்ட இடைநிலை வகுப்பறைப் பிரிவில் இக்கொள்கை இன்றும் பிரயோகிக்கப்பட்டு வருகின்றது. இனி அதனைப் பற்றிய விளக்கத்தைக் கீழே நோக்குவோம்.

உயர்நிலை நிபந்தனைப்பாடு:

நிபந்தனைப்படுத்தப்படாத தூண்டியுடன் (உணவு) இணைத்து வழங்கப்பட்ட நடுநிலையான தூண்டியானது (மணி ஒலி) நிபந்தனைப்படுத்தப்பட்ட தூண்டியாக மாறுவதுடன் மட்டும் நின்றுவிடவில்லை. வேறொரு நடுநிலைத் தூண்டியை நிபந்தனைப்படுத்தும் இயல்பைப் பெற்றுவிடுவதனையும் பவ்லோவ் அவதானித்தார். குறித்த பரிசோதனையில் மணியொலியானது முதல் நிலை நிபந்தனைப்பட்ட தூண்டியாக மாறிய பின்னர் மணியொலியுடன் இணைத்து நடுநிலைத் தூண்டியாகிய ஓர் ஒளி வழங்கப்பட்டது. ஒளியும், ஒலியும் பல தடவைகள்  இணைத்து வழங்கப்பட்ட பின்னர் ஒளியானது நாயிடம் உமிழ்நீர் சுரக்க வைக்கும் தன்மையைப் பெற்றுவிடுகின்றது.  இவ்வாறு நிபந்தனைப்பட்டுவிட்ட தூண்டியொன்று இன்னொரு நடுநிலைத் தூண்டியை நிபந்தனைப்பட்ட தூண்டியாக மாற்றும் செயற்பாடு உயர் நிலை நிபந்தனைப்பாடு எனப்படும். இங்கு இது இரண்டாம் நிலை நிபந்தனைப்பாடு எனவும் குறிப்பிடலாம். விலங்குகளைப் பொறுத்தவரையில் இரண்டாம் நிலைக்கு மேலான உயர் நிலை நிபந்தனைப்பாட்டை ஏற்படுத்த முடியவில்லை எனவும் பவ்லோவ் அறிந்து கொண்டார்.

நிபந்தனைப்படுத்தல் ஏற்படுவதற்கு மீளவலியுறுத்தல் அவசியம். அதுவும் குறித்த காலம் வழங்கப்படுவதன் அவசியம் பல பரிசோதனை முடிவுகளுக்கூடாகச் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.  உயர்நிலை நிபந்தனைப்படுத்தல்  பற்றிய கருத்துக்கள் ஆசிரியருக்கு நன்கு உதவவல்லன. அவ்வகையில் கனிஸ்ட இடைநிலை வகுப்பறையில் இக்கற்றல் நிகழுமாற்றை எடுத்துநோக்குவோமாயின்  மாணவர்களின் வளர்ச்சிப் படிமுறையில் முக்கியமான கட்டம் இக்கனிஸ்ட இடைநிலை பாடசாலைக் காலமாகும். காரணம் பிறப்பில் பெற்றுக் கொண்ட திறன்களை பிரயோகிக்கும் காலமாகும். எனவே அவ் வயதில் முறையான வழிகாட்டல்களும் இயல்பூக்கங்களும் மாணவர்கள் மத்தியில் வளர்க்கப்படல் வேண்டும். ஆசிரியர்கள் இக்காலத்தில் மாணவர்களை கற்றலுக்கும், நற்பழக்கங்களை ஏற்படுத்துவதற்கும், தீய பழக்கங்களை ஒழிப்பதற்கும் இவ்வுயர்நிலை நிபந்தனைப்பாட்டை பிரயோகிக்க வேண்டும். அதாவது பாடசாலைக்குள் நுழைவதிலிருந்து இந்த உயர்நிலை நிபந்தனைப்படுத்தல் ஆரம்பித்து விடுகின்றது. அதாவது பிள்ளை பாடசாலை மணி ஒலிக்கு முன்னாள் பாடசாலைக்குச் சமூகம் தர வேண்டும் என்ற நிபந்தனைப்படுத்தலின்கீழ் நிபந்தனைப்படுத்தப் பட்டுவிட்டது. இதற்குக் காரணம் பாடசாலை மணி ஒலிக்கும் முன்னதாகச் செல்லவில்லை எனில் தண்டணைக்குள்ளாக நேரிடும் எனும் இரண்டாவது நிபந்தனை பிள்ளையினுள் பதியப்பட்டுள்ளது. இதனால் அப்பிள்ளை எவ்வாறேனும் பாடசாலை மணி ஒலிக்க முன்பு பாடசாலைக்குச் சென்றுவிடும்.   இச் செயன்முறையில் நிபந்தனைப்படுத்தப்பட்ட தூண்டிகளாக மணி ஒலியும் தண்டனை கிடைக்கும் என்ற பயவுணர்வும் பிள்ளையில் ஏற்படுத்தப்படுகின்றது. இதற்கான நிபந்தனைப்படுத்தப்பட்ட துலங்கலாக மணி ஒலிக்கமுன் பிள்ளை பாடசாலைக்கும் வருதலைக் குறிப்பிடலாம். மேலும் கனிஸ்ட இடைநிலை வகுப்பறைகளில் பல புதிய நிகழ்வுகள் நிகழ்கின்றன.  அதாவது அவ்வகுப்பில் வகுப்புத்தலைவி என ஒருவரை ஆசிரியர் தேர்ந்தெடுத்திருப்பார். அப்பிள்ளையின் கட்டுப்பாட்டின்கீழ் வகுப்பறை முகாமைத்துவம் செய்யப்படும். இதற்கு ஏனைய பிள்ளைகள் கட்டுப்பட வேண்டும். உதாரணமாக வகுப்பறையைச் சுத்தம் செய்வதற்கான ஒழுங்குமுறை அமைக்கப்பட்டிருக்கும். அதன்படி மாணவர்கள் வகுப்பறையைச் சுத்தம் செய்ய வேண்டும். இதனைக் கண்காணிப்பது வகுப்புத் தலைவியின் பொறுப்பாகும். மாணவர்கள் அதனைச் செய்யாதுவிடின் அது வகுப்புத் தலைவியினூடாக ஆசிரியருக்கு அறியப்படுத்தப்டும். இதில் மாணவர்கள் வகுப்பறை சுத்தம் செய்வதற்காக நிபந்தனைப்படுத்தப்பட்டுள்ளனர். இதில் தூண்டிகளாக வகுப்புத் தலைவியும் ஆசிரியரினால் வழங்கப்படும் தண்டனையினால் உருவாகும் பயவுணர்வும் துலங்களாக வகுப்பறை சுத்தம் செய்யப்படுவதையும் கூறலாம். மேலும் மாணவர்கள் பாடசாலையில் ஒலிக்கும் ஒவ்வொரு மணி ஓசைக்கும் ஏற்ப தங்கள் செயற்பாட்டை மாற்றுகின்றனர். அதாவது நண்பர்களுடன் பேசிக் கொண்டோ அல்லது வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டோ உள்ள மாணவன் பாடத்திற்கான மணியொலியோ அல்லது ஒன்றுகூடல்  உணவு உண்ணல் செயற்பாட்டுக்கான மணியொலிக்கேற்ப அவ்வவ் செயற்பாட்டில் ஈடுபடுவர். மணியோசைக்கு அம்மாணவர்கள் துலங்கலைக் காட்டுகின்றனர்.

ஆசிரியர் தூரத்தில் வருவதனைக் கண்டால் மாணவர்கள் அவ்வாசிரியருக்குக்  காலைவணக்கம் சொல்வதற்கும் பாடத்திற்கு ஆயத்தமாகியும் விடுவார்கள். அதிலும் அவர்கள் கையில் தடி வைத்திருந்தால் மாணவர்கள் அத்தடிக்குத்  துலங்கலைக் காட்டுவார்கள். தண்டனைக்குப் பயந்து மாணவர்கள் அமைதியாகவும் ஒழுக்கமாகவும் நடந்து கொள்வர். மேலும் இடைநிலை மாணவர்களுக்குத் தவணைப் பரீட்சை நடப்பதோடு அப்பரீட்சை முடிவில் அம்மாணவர்களுக்கு மதிப்பெண்களுடன் கூடிய அறிக்கை வழங்கப்படும். அதுவும் அது ஒன்றுகூடல் மண்டபத்தில் எல்லா மாணவர்கள் முன்னிலையில் நிகழும். அதாவது நல்ல மதிப்பெண்களைப் பெற்ற மாணவன் பாராட்டப்படுவதினால் அம்மாணவனுக்கு மீண்டும் மீண்டும் அப்பாராட்டை பெற வேண்டும் என்ற தூண்டல் உருவாகும்.  அதாவது மாணவர்களின் மனவெழுச்சியைத் தூண்டி அவர்களை முன்னேற்றப்பாதையில் செலுத்த இம்முறை பயன்படுத்தப்டும். இதில் இன்னொரு துலங்களும் நிகழும். அதாவது ஒரு மாணவன் பாராட்டப்படும் போது மற்றைய மாணவர்களும் தானும் இவ்விடத்தை அடைய வேண்டும் என தூண்டப்படுவர். இதனை மனதில் நிறுத்தியே பரிசளிப்பு நிகழ்வுகளும் விளையாட்டுப்போட்டிகளின் வெற்றிக் கொண்டாட்டங்களும் நடத்தப்படுகின்றன. மேலும் பாராட்டு, புகழ்தல், பரிசில்கள் என்பன உடனுக்குடன் வழங்கப்படுவதன் மூலம் கற்றல் மேம்படுத்தப்படும். அத்தோடு பாடசாலை ஒழுக்க விதிக் கோவைகளுக்கு கட்டுப்பட்டு நடப்பதும் மாணவர்கள் தண்டனைக்குப் பயந்து துலங்கலைக் காட்டும் செயன்முறையாகும். மேலும் மாணவர்களுக்கு விளங்கும் முறைக்கேற்ப இலகுவாகக் கற்பிப்பதன் மூலம் அவர்கள் சிறந்த துலங்கலை அடைவார்கள். உதாரணமாக விளையாட்டுக்களின் மூலமோ அல்லது கேளிக்கையான பாட்டின் மூலமோ இலகுவாக மாணவர்களின் துலங்களை ஏற்படுத்தல். அதாவது இப்போது கோள்களை ஞாபகத்தில் வைத்திருக்க அதனைப் பாடலாய் பாடுதல்            (பூ வெள்ளைப் பூ சென்று விட்ட சனி என்று பாடுதல்) போன்றவற்றின் மூலம் ஞாபகத்தில் வைத்திருத்தல்.

மாணவர்களுக்குக் கற்றலில் துலங்களை ஏற்படுத்த கொண்டுவரப்பட்டதே 5E – கற்றல் முறையாகும். இடைநிலை மாணவர்களின் கற்கைகளில் பல்வேறு நுட்பங்களைப் பாவித்து அவர்களை நிபந்தனைக்குட்படுத்தி துலங்கலைப் பெறுகின்றனர். இதனைக் கீழே நோக்கலாம்.

முன்மொழியப்பட்ட     செயற்பாடுகள்                (தூண்டல்) ஆசிரியர் செயற்பாடுகள் (தூண்டல்) மாணவர் செயற்பாடுகள்                                 (துலங்கல்)
ஈடுபடல் (Engagement) செய்துகாட்டல்.

வாசிப்பு

சுயாதீனஎழுத்து வேலைகள்.

பகுப்பாய்வு செய்தல்.

சிந்தனைக் கிளறல்.

வரைவிலக்கணம் செய்தல்

பாடம்தொடர்பான ஆர்வத்தைத் தூண்டல்.

இடையீடு செய்யும் ஆர்வத்தைத் தூண்டல்.

மாணவர்களிடையே வினவுதல்.

முன்னைய அனுபவங்களைக் கிளறுதல்.

நடித்துக்காட்டல்.

மாணவர்களிடையே இணைப்பை ஏற்படுத்துதல்.

மணவர்கள் தர்க்கரீதியான வினாக்களை எழுப்புவர்

.

குறித்த செயற்பாடு தொடர்பாக தமது ஆர்வத்தை வெளிக்காட்டுவர்.

கண்டறிதல்;(Exploration)

 

 

குழுவேலைகள்.

அணிவேலைகள்.

கண்டறிதல்.

ஈடுபடுதல்.

பரிசோதனை செய்தல்.

ஆராய்தல்.

பிரச்சினையைவிடுவித்தல்

அறிவுறுத்தலின்றி மாணவர்களுடன் இணைந்து பணியாற்றல்.

மாணவர்களைத் தொடர்ச்சியாக இயங்கவைத்தல்.

தோழமைத்துவத்தைப் பேணல்

வரையறுத்த நேரத்திற்குள் சுயாதீனமாக இயங்குதல்.

புதிய அனுமானங்களை உருவாக்குதல்.

குழுவாகக் கலந்துரையாடி செயற்படுதல்

விளக்குதல் (Explanation) பரிசோதனை முறையில் விசாரணை.

செயற்றிட்ட முறையிலான ஈடுபாடு.

சிந்தனைவிருத்தி.

 

மாணவர்களைத் தமது வினாக்களை முன்வைக்கத் தூண்டுதல்.

மாற்றுத் தீர்வுகளை ஊக்குவித்தல்.

மாணவர்களின் எண்ணங்களை விருத்தியாக்கல்.

மேலும் மேலும் வினாக்களைத் தொடுத்தல்.

புதிய பரிசோதனை முறைகளை வடிவமைத்தல்.

 

திறன்களை ஒப்பிட்டுப் பார்த்தல்.

விரிவாக்கம்;(Exploration) மாணவர்கள் தாம் கற்றுக் கொண்ட செயற்பாடுகளை மேலும் விரிவுபடுத்தல்.

நடைமுறை உலகுடன் பிரயோகித்துப்பார்த்தல்

மாணவர்களை முறைசார்ந்த முறையில் தமது அடைவை மாணவர்கள் விளக்கிக் கொள்ள முன்வைக்கவும் தூண்டுதல்.

எண்ணக்கருவை விருத்தியாக்கல்.

புதிய வினாக்களை முன்வைத்தல்.

தமது ஆக்கங்களை முன்வைப்பர்

மதிப்பிடுதல்(Evaluation)   முழு மதிப்பீடு

 

 

 

ஆசிரியர் மாணவர்களின் உள்ளீட்டை வெளிக்கொண்டு வருதல்; சிறந்த வினாக்களுக்கு விடையளித்தல்.

தன்னைத் தானே மதிப்பிடுதல்

 

இவ்வாறாக ஆசிரியர்கள் பல செயற்பாடுகளை அளித்து மாணவர்களை நிபத்தனைப்படுத்தி துலங்க வைக்கின்றனர். வறிய மாணவர்களுக்குப் பரிசில்களை வழங்கி செல்வந்தர்களுக்குப் தட்டிக் கொடுத்து, ஊக்கப்படுத்தி அவர்களுக்கான தூண்டிகளாக ஆசிரியர்கள் கனிஸ்ட பிரிவில் செயற்படுகின்றனர்.

மறைதல்:

நிபந்தனைப்பாட்டினால் ஆக்கப்பட்ட தூண்டி துலங்கள் இணைப்பு மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்படாவிடால் (அதாவது பயிற்சி அல்லது வெகுமதி அளிக்கப்படாவிட்டால்) அது நாளடைவில் அழிந்cவிடும். அதாவது உயிரி அந்தக் கற்றலை மறந்துவிடும். பவ்லோவின் பரிசோதனையில் மணியொலிக்கு உமிழ்நீர் சுரக்க கற்றபின் அடுத்தடுத்து உணவு வழங்கும் போது மணியொலி வழங்காமல் விட்டால் நாளடைவில் அது மணியொலிக்கு உமிழ்நீர் சுரப்பதை மறந்துவிடும். உறுதிபெற்ற தூண்டல்-துலங்கள் இணைப்புகளை இலகுவில் செயலிழக்கச் செய்ய முடியாது. காரணமற்ற பயம்,  துவேஷம், தப்பபிப்பிராணம் ஆகியன ஓரளவு உறுதியான நிபந்தனைப்படுத்திய தூண்டல்-துலங்கள் இணைப்புகளாகும். இவற்றைப் போக்க விசேட முறைகளும் பொறுமையும் நீண்ட காலமும் தேவைப்படும்.

இவை இடைநிலை வகுப்பறையில் செயற்படுமாற்றை எடுத்துநோக்குவோமாயின் இடைநிலைக் கல்வியில் மாணவர்களுக்குக் கணிதப்பாடம் கடினமான தர்க்க சிந்தனை வாய்ந்ததாகக் காணப்படும். இதனைக் கற்பிக்கும் ஆசிரியர் ஒரு வாய்ப்பாடமாகக் கற்பித்துக் கொண்டு (வாய் வார்த்தையாக) போகும்போதும் அந்நேரத்தில் மட்டும் இக்குறிப்பிட்ட பாடம் விளங்கக்கூடியதாக இருக்கும். நாளடைவில் அப்பாடம் மறந்துவிடும். இதுவே மறைதல் ஆகும். இதனால் அங்கு துலங்கல் என்பது இடம்பெறாது. இதனைப் போக்குவதற்காகவே மாணவர்களுக்கு ஆசிரியர்கள் மனதில் இலகுவாகப் பதியக்கூடிய முறைகளைப் பின்பற்ற வேண்டும். உதாரணமாக வாய்ப்பாட்டை  மனனம் செய்வதற்கு விளையாட்டின் மூலமாகவோ அல்லது பாடல் வடிவிலோ மனதில் நிறுத்துதல்.  இவ்வாறு செய்யும் போது இப்பாடம் முதிர்ச்சிக் காலம் வரை மனதில் நிற்கும்.  விஞ்ஞான பாடத்தில் ஓர் அங்கியின் தொழிற்பாட்டை அல்லது அதன் அவையகத்தை மாணவர்களுக்கு வெறுமனே கூறும்போது அதனை அவ்விடத்திலேயே மறந்துவிடுவார்கள். இதனை விடுத்து அவ்வங்கியின் உறுப்பை செயன்முறை ரீதியாகப் பார்க்கும்போது அது மனதில் பதியும்.  இல்லையேல் அங்கும் துலங்கலற்ற மறத்தல் இடம்பெறும். இதன் பெறுபேறு கணித,  விஞ்ஞான பாடத்தின்  பெறுபேறின் வீழ்ச்சியாகும். இதனைக் கருத்தில் கொண்டே வெளிநாடுகளில் பிள்ளைகளுக்கு எல்லாம் செயன்முறை ரீதியாகக் கற்பிக்கப்படுகின்றது.  அவர்களுக்கு மறைதல் என்பது மிகவும் குறைந்தமட்டத்திலே இடம்பெறும். உதாரணமாக ஒரு கோழி எவ்வாறு உருவாகின்றது என்பதை புத்தகத்தின் வாயிலாகக் கற்கும் போது ஒரு நாளுக்கு மேல் அச்செயன்முறை ஞாபகத்தில் இருந்து மறைந்துவிடும். இதனைக் கண்கூடாகப் பார்க்கும் செயன்முறையாகச் செய்யும் போது நினைவிலிருக்கும். பரீட்சை நேரத்தில் இவ் ஒவ்வாமையான கற்பித்தலினால் மாணவர்கள் அவர்களுடைய கல்வி தடைப்படுவது இம்மறைதலினாலாகும்.

மேலும் கற்பிக்கும் ஆசிரியர்கள் மாணவர்களை அணுகும் முறை கரடுமுரடாகக் காணப்படும் பட்சத்தில் மாணவர்களுக்கு ஆசிரியரால் வழங்கப்படும் கல்வி மாணவர்களில் மறத்தலை உண்டு பண்ணும். உதாரணமாக கனிஸ்ட இடைநிலை மாணவர்கள் குழந்தையிலிருத்து பிள்ளைப் பருவத்துள் நுழையும் மாணவர்களாவார்கள். இவர்கள் பாசத்தை அதிகம் எதிர்பார்ப்பார்கள். பாடசாலையில் 100 ஆசிரியர்கள் இருப்பினும் மாணவர்களுக்கு ஒருசிலரையே மிகவும் பிடிக்கும். அவ்வாசிரியருடன் நெருங்கிய தொடர்பு வைத்திருப்பதோடு அவர்கள் கற்பிக்கும் பாடத்தினையும் கூர்ந்து நோக்குவர். அவ்வகையில் ஒரு பாடத்தை மாணவர்களுடன் சேர்ந்து அவர்கள் மொழிநடையில் விளங்கப்படுத்த வேண்டும். அவ்வாறில்லாமல் தன்னுடைய வீட்டு பிரச்சினைகளையும்,  சோம்பலினையும் வெளிப்படுத்தும் வகையில் பாடம் கற்பிக்கப்படும் போது மாணவர்களுக்குத்  தூண்டலோ,  துலங்களோ ஏற்படாது. தூண்டல் ஏற்பட்டாலும் அது பின்னர் மறைந்துவிடும். இதனைத் தடுக்க குழு செயற்பாடு,  விவாதம் போன்றவற்றைச் செய்தல் வேண்டும்.

பொதுமையாக்கல்:

ஒரு தூண்டி – துலங்கல் இணைப்பு நிபந்தனைப்படுத்தப்பட்ட பின்பு குறித்த தூண்டியுடன் ஒத்த வேறு தூண்டிகளும் அதே துலங்களைக் கொடுக்கின்றன. வாட்சனின் பரிசோதனையில் பிள்ளை வெள்ளை நிறமுள்ள முயலுக்கு பயப்படக் கற்பிக்கப்பட்டபின் அவன் வெள்ளை நிறமுள்ள மயிர்வெள்ளை நிற விளையாட்டுப் பொருட்கள் ஆகியவற்றுக்குப் பயப்படுவதைக் காணலாம். இவ்வாறே குறித்த நாய்க்கு பயப்படப் பழகியபின் எல்லா நாய்களுக்கும் சில வேளை எல்லா மிருகங்களுக்குமே பயப்படுவதுண்டு. பவ்லோவின் பரிசோதனையிலும் குறித்த ஒரு மணியொலிக்கு உமிழ்நீர் சுரக்கும். வேறு மணியொலிக்கும் உமிழ்நீர் சுரந்தது. தூண்டிப் பொதுமையாக்கத்துக்கு ஓர் எல்லையுண்டு. வெள்ளை முயலுக்குப் பயப்பட்ட பிள்ளை மஞ்சள் நிறப் பூனைக்குப் பயப்படலாம்.  ஆனால் கறுத்த பூனைக்குப் பயப்படாது.  குறித்த ஓர் எல்லைக்கு அப்பால் உள்ள நிறங்கள் குறித்த துலங்கலைக் கொடுக்காது. மணியோசைக்கு உமிழ்நீர் சுரக்கும் நாய் அந்த ஓசையின் சுருதியின் குறித்த ஓர் எல்லைக்கு அப்பால் சுருதியுடைய மணியோசைகளுக்கு உமிழ்நீர் சுரக்கமாட்டாது.  இதனைக் கனிஸ்ட இடைநிலைப் பிரிவு வகுப்பறையின் சில உதாரணங்கள் வாயிலாக விளக்கலாம். ஐந்தாம் தரத்தில் கற்ற சுற்றாடல் பாடத்தின் விரிவாக்கமே ஆறாம், ஏழாம் தரத்தில் விஞ்ஞான பாடமாகக் கற்பிக்கப்படுகின்றது. உதாரணமாக ஐந்தாம் தரத்தில் சுற்றாடலில் கற்ற அங்கியின் வாழ்க்கை கட்டம் கனிஸ்ட இடைநிலையில் வாழ்க்கைச் சங்கிலியென கற்பிக்கப்படுகின்றது. மாணவன் இங்குகற்கும் முன்னமே கற்ற பாடம் நினைவுக்கு வரும். அப்பாடத்திற்கு அவன் நிபந்தனைப்படுத்தப்பட்டு தூண்டப்பட்டு விட்டான். இனி எங்கு அவ்வாழ்க்கை வட்டம் எனும் சொற்பதத்தைக் கேட்டாலும் அவன் துலங்கலைக் காட்டுவான். மேலும் பாடசாலையில் சில பிள்ளைகள் குறிப்பிட்ட ஆசிரியருக்கு பயப்படுவதுண்டு. பின்னர் அந்த ஆசிரியர் கற்பிக்கும் கணித பாடத்துக்கும் அவர் இருக்கும் வகுப்பறைக்கும் இறுதியில் அவர் கற்பிக்கும் பாடங்களுக்குமே பயப்படுவதுண்டு. அவ்வாறு மாணவர்கள் பொதுமையாக்கப்படுகின்றனர்.

மேலும் பாடசாலை மணிஒலிக்குப் பழக்கப்பட்ட பிள்ளை வேறு எங்கு மணி ஒலி கேட்டாலும் அதே எண்ணத்தைக் கொண்டிருப்பான். இவற்றைப் போலவே பாடசாலை வகுப்பறையில் நடந்துகொள்ளும் விதமே வெளிச்சூழலிலும் நடக்க உந்துதப்படுத்தும். இப்பொதுமையாக்கல் மூலம் பல்வேறு குழப்பங்களும் ஏற்படுகின்றன. உதாரணமாக ஒரே சொல்லுக்குப் பல்வேறு அர்த்தம் இருத்தல் சிக்கலானதாக இருத்தல்.

இவ்வாறாக, பவ்லோவின் நிபந்தனைப்படுதலின் இம்மூன்று கொள்கையானது செயற்பாடுகளாக வெளிப்பட்டும் மறைமுகமாகமாகவும் கனிஸ்ட இடைநிலை வகுப்பறைகளில் மேற்கொள்ளப்படுவது கண்கூடு.  அத்தோடு இவ்வாராய்ச்சியின் பேறு எதுவாக இருப்பினும் மாணவர்களின் கற்றலுக்கான சரியான வழிப்பாதையாக உள்ளது என்பதில் எந்தவித ஐயமுமில்லை. அத்தோடு இவை இயக்கத்திறன் உள்ள பூரணமான மாணவனை உருவாக்க உதவுகின்றன.

துணைநின்றவை

  • அருள்மொழி செ, 2017, கற்பித்தலுக்கான உளவியல், துர்க்கா பதிப்பகம், மட்டக்களப்பு.
  • கருணாநிதி மா, 2008, கற்றல் கற்பித்தல் மேம்பாட்டிற்கான வழிமுறைகள், சேமமடு பதிப்பகம், கொழும்பு.
  • சந்திர சேகரன் சோ, 2007, மாணவர்கள் கவனத்தை எவ்வாறு ஈர்ப்பது?, அரசு வெளியீடு, இலங்கை.
  • பெனடிக் பாலன் யோ, 2005, கல்வி உளவியல் அடிப்படைகள், பூபாலசிங்கம் புத்தக சாலை, கொழும்பு.
  • முத்துலிங்கம் ச, 2010, கல்வியும் உளவியலும், சேமமடு பதிப்பகம், கொழும்பு.

யேசுஐயா டிலானி, (உதவி விரிவுரையாளர்)

கல்வி பிள்ளைநலத் துறை, கலை கலாசாரப் பீடம்,

கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை. [email protected]