Abstract: In the developing countries,  propagated the direct investment of foreigners. It can be perceived by the online sources. The paper aims to point out its advantage and disadvantage.

அறிமுகம்

வெளிநாட்டு நேரடி முதலீட்டின் (Foreign Direct Investment – FDI) முக்கியத்துவம் அதிகரித்து வருகின்றமையானது பொருளாதார உலகமயமாதலின் அவதானிக்கக் கூடிய முக்கிய அம்சமாக காணப்படுகின்றது. பெரும்பாலான நாடுகளில் வெளிநாட்டு நேரடி முதலீடானது தேசிய அபிவிருத்திக்கான உபாயங்களில் ஒன்றாக இருந்து வருகின்றது. உள்நாட்டு மூலதனம், உற்பத்தித் திறன் மற்றும் வேலைவாய்ப்பு என்பனவற்றினை முன்னேற்றுவதனூடாக விரைவான பொருளாதார அபிவிருத்திக்கான முக்கிய கருவியாக வெளிநாட்டு நேரடி முதலீடு கருதப்படுகின்றது.

அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் வெளிநாட்டு நேரடி முதலீடானது மூலதன பாய்ச்சலின் பிரதான கூறாகவும், தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கான ஒரு வாயிலாகவும் கருதப்படுவதனால் வெளிநாட்டு நேரடி முதலீட்டின் நிர்ணயிப்புக்கள் மீது இந்த நாடுகள் அதிக கவனம் செலுத்தி வருகின்றன. ஆகையால் இதுகுறித்து ஒவ்வொரு நாடும் அதிக கவனம் செலுத்த வேண்டியது முக்கியமானதாகும். மேலும் வெளிநாட்டு நேரடி முதலீடு தொடர்பான வரலாற்றுப் பின்னணி, கொள்கைகள் மற்றும் போக்குகள் என்பவற்றை ஆராய்வதன் ஊடாக அதன் மூலம் ஏற்படுத்தப்படும் நன்மை, தீமைகளைத் தெளிவாக வரையறை செய்யக்கூடியதாக இருக்கும்.

வெளிநாட்டு நேரடி முதலீடு என்பதனை வரைவிலக்கணரீதியாக நோக்குவோமாயின் வெளிநாட்டு முதலீடு என்பதனை வெளிநாட்டு நேரடி முதலீடு, வெளிநாட்டு நிதி சார் முதலீடு என இரண்டு வகைப்படுத்த முடியும். வெளிநாட்டு நேரடி முதலீடானது ஒரு நாட்டில் பிறிதொரு நாட்டினது தனியார் அல்லது பல்தேசிய கம்பனிகள் இலாப நோக்கம் கருதி மேற்கொள்ளும் வெளிநாட்டு தனியார் அல்லது பல்தேசியக் கம்பனிகள் நிதி, முகாமைத்துவம், தொழில்நுட்பம், மற்றும் ஏனைய வளங்களை மாற்றீடு செய்கின்றன. பில்லிங்டன் (Billington) என்பவர் உயர்ந்தளவான சந்தைப்பருமன் உயர்ந்தமட்ட வெளிநாட்டு நேரடி முதலீட்டு உட்பாய்ச்சலாக துணைபுரிவதாக குறிப்பிடுகின்றார்.

வெளிநாட்டு நேரடி முதலீட்டின் முக்கியத்துவம்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீடுகள், தனியார் மற்றும் பொதுத்துறை மூலதன உருவாக்கத்திற்கான ஆற்றல் வாய்ந்த மூலகங்களாகக் காணப்படுகின்றன. பொதுவாக வறிய நாடுகள் தமது முதலீட்டுத் தேவையினைப் பூர்த்தி செய்வதற்குப் போதுமான உள்நாட்டு வளங்களைக் கொண்டிருப்பதில்லை. இதற்குக் குறைந்தளவான உள்நாட்டுச் சேமிப்பு மிக முக்கியக் காரணியாக இருப்பதுடன் குறைந்த தலா வருமானம் உயர்ந்த மற்றும் அடிக்கடி தளம்பலடையும் பணவீக்க வீதம், மொத்த உள்நாட்டு பணவீக்க வீதத்தில் குறைந்தளவான ஏற்றுமதி மற்றும் அடிக்கடி தளம்பலடையும் பணவீக்க வீதம், மொத்த உள்நாட்டு உற்பத்தி வீதத்தில் குறைந்தளவான ஏற்றுமதி மற்றும் சிறப்பற்ற நிதி சார்ந்த இடைத்தரகர்கள் என்பன காரணமாகின்றன. அதேவேளை வறிய நாடுகளுக்கான உள்நாட்டுச் சேமிப்புக்களை அதிகரிப்பதற்கு அங்கு வரையறுக்கப்பட்ட வாய்ப்புக்களே காணப்படுகின்றன. இங்கு அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் மொத்த உள்நாட்டு முதலீடு, உள்நாட்டு சேமிப்பு முதலீடு என்பவற்றுக்கிடையிலான இடைவெளியைக் குறைப்பதற்கு வெளிநாட்டு முதலீடு இன்றியமையாததாகும்.

வெளிநாட்டு முதலீடு தொடர்பான ஆய்விலே வெளிநாட்டு நேரடி முதலீட்டினைத் தீர்மானிக்கும் காரணிகள், வெளிநாட்டு நேரடி முதலீட்டிற்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் இடையிலான தொடர்பினை விளக்குதல் ஆகிய இரண்டு விடயங்கள் இங்கு முக்கியப்படுத்தப்படுகின்றன. அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் பொருளாதார வளர்ச்சி மற்றும் அபிவிருத்திக்கான பிரதான மூலாதாரமாக வெளிநாட்டு நேரடி முதலீடுகள் இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. வெளிநாட்டு நேரடி முதலீடுகள் தொடர்பாக குறிப்பிடத்தக்க கோட்பாட்டு ரீதியிலான ஆய்வுகள் முன்வைக்கப்பட்ட போதிலும் அனுபவ ரீதியான ஆய்வுக்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு பொதுவான மாதிரியை காண்பது கடினமானதாகும்.

வெளிநாட்டு நேரடி முதலீட்டினைத் தீர்மானிக்கும் அல்லது நிர்ணயிக்கும் காரணிகள் தொடர்பாக பல கோட்பாடுகள் முன்வைக்கப்பட்ட போதும் ஆரம்பத்தில் இவை தொடர்பான ஆய்வுகளை முன்வைத்தவர்கள் என்ற வகையில் Adam Smith (அடம்ஸ்மித்), Stuart Mill (ஸ்டுவர்ட் மில்) மற்றும் Ohlin (ஒஹ்லின்) என்பவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர். அந்த வகையில் Ohlin (ஒஹ்லின்) என்பவர் வளர்ந்து வரும் சந்தைகளில் அதிகரித்த இலாப வாய்ப்புக்கள் மற்றும் சார்பளவில் குறைந்த வட்டி வீத முதலீட்டு வாய்ப்புக்கள் என்பன வெளிநாட்டு நேரடி முதலீட்டினைக் கவரும் பிரதான மூலகங்களாக குறிப்பிடுகின்றனர். மேலும், வர்த்தகக் கோட்பாடானது மூலதனப் பாய்ச்சல்களின் பருமன் மற்றும் திசை என்பன நாடுகளுக்கிடையேயான காரணி விகிதாசாரங்களின் வேறுபாடுகளினால் நிர்ணயிக்கப்படுவதாக குறிப்பிடுகின்றார். அந்த வகையில் வெளிநாட்டு நேரடி முதலீட்டினைக் நிர்ணயிக்கும் பிரதான காரணிகளாக சந்தைப் பருமன், பொருளாதார திறந்த தன்மை, பொருளாதார வளர்ச்சி, மனித மூலதனம், ஊழல், கூலி வீதம் மற்றும் அரச கொள்கைகள் என்பன குறிப்பிடப்படுகின்றன.

வெளிநாட்டு நேரடி முதலீட்டில் செல்வாக்குச் செலுத்தும் காரணிகள்

  1. திறந்த தன்மையும் வெளிநாட்டு நேரடி முதலீடும்:- திறந்த தன்மையானது பொருளாதாரமொன்றை நோக்கிய வெளிநாட்டு நேரடி முதலீட்டு உட்பாய்ச்சல் மீது நேர்க்கணிய செல்வாக்குச் செலுத்துவதாக சில ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.
  2. மனித மூலதனமும் வெளிநாட்டு நேரடி முதலீடும்:- வெளிநாட்டு நேரடி முதலீட்டினை நிர்ணயிப்பதில் மனித மூலதனத்திற்கு அதிகளவில் பங்கிருப்பதாக Noorbakhsh, Et al என்பவர்களது அனுபவ ரீதியான ஆய்வு சுட்டிக் காட்டுகின்றது. Loree மற்றும் Guisinger போன்றோர் வெளிநாட்டு நேரடி முதலீட்டின் உட்பாய்ச்சலின் மீது ஊழியச் செலவு நேரடியான தொடர்பினை கொண்டிருப்பதைக் காட்டினர். திறமையான மனித மூலதனத்தை அதிகளவில் வழங்கக் கூடிய நாடுகள் கூடியளவு வெளிநாட்டு நேரடி முதலீட்டினைக் கவரக் கூடியனவான உள்ளன.
  3. ஊழலும் வெளிநாட்டு நேரடி முதலீடும்:- பொருளாதாரத்தின் அபாயத்தன்மை பற்றிக் குறிப்பிடுகையில் Wei (1997, 2000) என்பவரின் ஆய்வு வெளிநாட்டு நேரடி முதலீட்டின் உட்பாய்ச்சலை தடைப்படுத்தும் பிரதான காரணியாக ஊழலினைக் குறிப்பிடுகின்றது. Hebib மற்றும் Zurawicki (2002) போன்றவர்களும் வெளிநாட்டு நேரடி முதலீட்டின் மீதான ஊழலின் எதிர்க்கணிய தாக்கத்தினை ஆதரித்தனர். பல ஆய்வுகளின் கரத்தினைக் நோக்காகக் கொண்டு ஆராயும் போது ஊழல் என்பது வெளிநாட்டு நேரடி முதலீட்டினை தாக்கமுறச் செய்யும் பிரதான காரணியாகவே கருதுகின்றன.
  4. உட்கட்டமைப்புக்களும் வெளிநாட்டு நேரடி முதலீடும்:- முதலீட்டு ஊக்குவிப்பு கொள்கைகள் வெளிநாட்டு நேரடி முதலீட்டினை நிர்ணயிக்கும் முக்கிய காரணியாக இருந்த போதிலும் தேசிய நலனை ஆதரிப்பது தொடர்பில் முதலீட்டு ஊக்குவிப்பு கொள்கைகள் மாத்திரம் செயற்றிறன் வாய்ந்தவை அல்ல என வாதிக்கின்றனர்.
  5. வெளிநாட்டு நேரடி முதலீடும் வளர்ச்சியும்:- கைத்தொழில் மற்றும் அவிருத்தியடைந்து வரும் நாடுகளை பிரநிதித்துவப்படுத்தி வெளிநாட்டு நேரடி முதலீடு மற்றும் பொருளாதார வளர்ச்சி என்பவற்றுக்கிடையிலான தொடர்பினை விளக்கும் வகையில் கோட்பாட்டு ரீதியான மற்றும் அனுபவ ரீதியான பல விடயங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. அதிகளவிலானவை வெளிநாட்டு நேரடி முதலீடு மற்றும் பொருளாதார வளர்ச்சி என்பவற்றுக்கிடையிலான இருவழித் தொடர்பினை விளக்கியுள்ளன.

வெளிநாட்டு நிறுவனமொன்றினது நேரடி முதலீடானது தொழிச்சாலை ஒன்றினை நிறுவுதல் அல்லது உள்நாட்டு நிறுவனங்களுடன் இணைந்த வகையிலான முதலீடுகளை மேற்கொள்ளல் மற்றும் புலமைசார் அறிவு மற்றும் தொழில்நுட்ப உள்ளீட்டினை உள்நாட்டு நிறுவனங்களுடன் பரிமாற்றிக் கொள்ளுதல் என்ற பல வடிவங்களில் இடம்பெறுவதாகவும் இது உள்நாட்டில் இயங்கும் நிறுவனமொன்றிற்கு புதிய சந்தைகள், புதிய உற்பத்திகள், மலிவான உற்பத்தி வசதிகள்  புதிய தொழில்நுட்பம், புதிய தேர்ச்சி மற்றும் சர்வதேச நிதிகள் என்பவற்றை பெறுவதற்கான வாய்ப்புக்களை வழங்குகின்றது என Graham மற்றும் Spaulding (2004) என்பவர்கள் வெளிநாட்டு நேரடி முதலீட்டினை வரையறை செய்கின்றனர்.

அந்த வகையிலே முதலீட்டினை உள்வாங்கும் நாடுகளின் (Hast country) நிறுவனங்களுடன் முதலீட்டினை மேற்கொள்ளும் (Home country) நாடுகளின் நிறுவனங்கள் புதிய தொழில்நுட்பம், மூலதனம், செயன்முறைகள், உற்பத்திகள் அமைப்பு ரீதியான நுட்பங்கள் மற்றும் முகாமைத்துவ அறிவு என்பவற்றினை பரிமாற்றிக் கொள்ளுவதன் ஊடாக பொருளாதார அபிவிருத்திக்கான உறுதியானதோர் ஊக்கத்தினை வழங்குகின்றன. அதாவது வெளிநாட்டு நேரடி முதலீட்டினை நிர்ணயிப்பதில் பொருளாதார வளர்ச்சியும் பொருளாதார வளர்ச்சியை நிர்ணயிப்பதில் வெளிநாட்டு நேரடி முதலீடும் காரணமாகின்றன என வாதிக்கப்படுகின்றது. பொருளாதார வளர்ச்சியை நிர்ணயிப்பதில் வெளிநாட்டு நேரடி முதலீடும் முக்கிய ஒரு காரணியாக குறிப்பிடப்பட்ட போதிலும் இத்தொடர்பினை உறுதிப்படுத்துவதில் பல்வேறுபட்ட வாதப்பிரதிவாதங்கள் காணப்படவே செய்கின்றன.

  1. சந்தைப் பருமனும் வெளிநாட்டு நேரடி முதலீடும்:- Pfefforman மற்றும் Madarassy (1992) என்பவர்களது கருத்தின்படி சந்தையின் பருமன் உள்நாட்டு விற்பனைக்கான வாய்ப்புக்களை வழங்குவதால், அது FOI வெளிநாட்டு நேரடி முதலீட்டினை கவருவதற்கான பிரதான மூலாதாரமாக அமையும். ஆகவே உயந்தளவான சந்தைப் பருமன் விற்பனைக்கு அதிகளவான வாய்ப்புக்களை ஏற்படுத்தி வெளிநாட்டு நிறுவனங்களுக்கு கூடிய அளவு இலாபத்தை பெற துணை புரிவதனூடாக வெளிநாட்டு நேரடி முதலீட்டினைக் கவருகின்றது.

அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் வெளிநாட்டு நேரடி முதலீடு

அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் வெளிநாட்டு நேரடி முதலீட்டிற்கான அவசியம் குறித்தும் அதன் விளைவுகள் தொடர்பிலும் விளக்கங்களை வழங்குவதில் பின்பழம் பொருளியல் கோட்பாடு முதன்மை வாய்ந்ததாகக் காணப்படுகின்றது. இதன்படி வெளிநாட்டு நேரடி முதலீட்டினை உள்வாங்கும் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளின் இறை இடைவெளி, அந்நியசெலாவணி இடைவெளி மற்றும் சேமிப்பு முதலீட்டு இடைவெளி என்பவற்றை நிரப்புவதற்கான ஒரு வழிமுறையாக வெளிநாட்டு நேரடி முதலீட்டு உட்பாய்ச்சல்கள் அமைவதாக குறிப்பிடப்படுகின்றது.அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளின் பொருளாதார நிலைமாறச் செயன்முறையில் வெளிநாட்டு நேரடி முதலீட்டு உட்பாய்ச்சல்களின் பங்களிப்பு பற்றி விளக்குவதற்காக Rowstow (1956,1971) “வளச்சிப் படிமுறைகள்” என்ற பொருளாதார வளர்ச்சிக்கோட்பாட்டினை விருத்தி செய்தார். இம்மாதிரியின்படி அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளுக்கான வெளிநாட்டு நேரடி முதலீட்டு உட்பாய்ச்சல் என்பது அந்நாடுகளின் நிலைமாற்றுப் பொருளாதார காலப்பகுதிகளில் தேவைப்படும் புதிய தொழில்நுட்பம் மற்றும் மூலதனத்தை வழங்கும் மூலாதாரமாகக் கருதப்படுகின்றது.

Solow (1956) இல் தனது புதியதொரு வளர்ச்சி மாதிரியில் கல்வி மற்றும் சனத்தொகை அதிகரிப்பின் ஊடாக உருவாகும் ஊழிய அளவு மற்றும் தரம் என்பவற்றில் ஏற்படும் அதிகரிப்பு, தொழில்நுட்ப முன்னேற்றம் மற்றும் வெளிநாட்டு நேரடி முதலீடு என்பவற்றினூடாக ஏற்படும் முதலீட்டு அதிகரிப்பு ஆகிய காரணிகள் வெளியீடுகள் வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்வதாக இவர் விளக்குகிறார். ஆகவே இவரது விளக்கமும் பொருளாதார வளர்ச்சி மீதான வெளிநாட்டு நேரடி முதலீட்டின் முக்கியத்தவத்தை தெளிவுபடுத்துகிறது. மறுபுறம் வெளிநாட்டு நேரடி முதலீட்டினை உள்வாங்கும் நாடுகளின் அறிவு, வெளிவாரிகள் மற்றும் மனித மூலதன விருத்தி என்பவற்றினூடாக வெளிநாட்டு நேரடி முதலீடு பொருளாதார வளர்ச்சி மீது தாக்கம் செலுத்துவதாக அகவய வளர்ச்சிக் கோட்பாடுகள் குறிப்பிடுகின்றன.

அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளின் வெளிநாட்டு நேரடி முதலீட்டினது முக்கியத்துவத்தினை விளக்கும் போது வளர்ச்சியினைத் துரிதப்படுத்தும் காரணிகளாக மனித மூலதனத்துடன் பௌதீக மூலதனத்தையும் இணைத்துக் கொண்டனர். Balasupramaniyam என்பவரின் கருத்துப்படி பொருளாதார வளர்ச்சியை துரிதப்படுத்தும் காரணிகளை அடையாளங்கண்டு அவற்றுள் வெளிநாட்டு நேரடி முதலீட்டினது பங்களிப்பு, முக்கியத்துவம் வாய்ந்தது எனக் குறிப்பிடுகின்றார். இவர்களது ஆய்வின் படி அறிவுச் சிதறல்கள் (Knowledge spillovers) மற்றும் Learning by doing என்பவற்றினூடாக பொருளாதார வளர்ச்சியை விரிவுபடுத்துவதில் வெளிநாட்டு நேரடி முதலீடு பிரதான காரணியாக அமைகின்றது.

மேலும் வெளிநாட்டு நேரடி முதலீட்டினை உள்வாங்கும் நாடுகளில் உள்ள தொழில் நிறுவனங்கள் மற்றும் கம்பனிகளுடனும் வெற்றிகரமாக போட்டியிடுவதற்காக பல்தேசியக் கம்பனிகள் நவீன தொழில்நுட்பங்களை தம்முடன் கொண்டுவருவதாகவும் இது வெளிநாட்டு நேரடி முதலீட்டினை உள்வாங்கும் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளின் தொழில்நுட்ப விருத்திக்கு துணைபுரிந்து பொருளாதார வளர்ச்சியை துரிதப்படுத்தவதாகக் குறிப்பிடுகின்றனர்.

வெளிநாட்டு முதலீட்டினை உள்வாங்கும் நாடுகளின் பொருளாதார வளர்ச்சி வெளிநாட்டு நேரடி முதலீட்டு உட்பாய்ச்சலை தூண்டும் ஒரு கவர்ச்சிகரமான அளவீடாக கருதுகின்றனர். மேலும் Lucas, Moore போன்றவர்கள் ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி அறிக்கையில் அந்நாட்டிற்கான வெளிநாட்டு நேரடி முதலீட்டு உட்பாய்ச்சல்கள் விரிவுபடுத்தப்படுவதாக குறிப்பிடுகின்றனர். Balasupramaniyan, Et al (1996) என்பவர்கள் 1970 – 1985 இடைப்பட்ட காலப்பகுதியில் 46 நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தி மேற்கொண்ட தமது ஆய்வகளின் விளைவாக பொருளாதார வளர்ச்சி மீது வெளிநாட்டு நேரடி முதலீடானது நேர்க்கணிய தாக்கத்தினை கொண்டிருந்தமையை சுட்டிக் காட்டுகின்றனர்.

உயர் வருமான நாடுகளில் பொருளாதார வளர்ச்சி மீது வெளிநாட்டு நேரடி முதலீட்டின் நேர்க்கணிய தாக்கத்தினை அடையாளங்கண்டு வெளிநாட்டு நேரடி முதலீட்டினை உள்வாங்கும் நாடுகள் புதிய தொழில்நுட்பங்களை இலகுவாக பெறக்கூடிய ஒரு மார்க்கமாக வெளிநாட்டு நேரடி முதலீட்டின் உட்பாய்ச்சல்கள் காணப்படுவதாக 78 அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளையும் 23 அபிவிருத்தியடைந்த நாடுகளையும் கொண்டதான மாதிரியில் Balasupramaniyan, Et al (1990) ஆகியோர் முன்வைக்கின்றனர். தனிப்பட்ட நாடு ரீதியான சான்றினை நோக்குகின்றபோது சீனாவின் பொருளாதார வளர்ச்சியைத் தூண்டுவதில் வெளிநாட்டு நேரடி முதலீடானது குறிப்பிடத்தக்களவு பங்களிப்பினை செய்ததாக குறிப்பிடுகின்றார் Dess (1998) என்பவர். மேலும் 1974 – 1996 இடைப்பட்ட காலப்பகுதியில் இந்தியாவின் தரவுகளைக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் குறுங்காலம் மற்றும் முதலீடு குறிப்பிடத்தக்களவு நேர்கணியத் தாக்கத்தைக் கொண்டிருந்ததாக குறிப்பிடுகின்றனர்.

இறுதியாக Zhang (2000) என்பவர் (1960 – 1937) இடைப்பட்ட காலப்பகுதியில் கிழக்காசியா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளை ஆய்விற்குட்படுத்தியபோது பொருளாதார வளர்ச்சியின் மீதான வெளிநாட்டு நேரடி முதலீட்டின் தாக்கம் தொடர்பிலான முரண்பாடான ஒரு கருத்தை வெளியிட்டார். தாய்வான், மெக்சிகோ, ஹொங்ஹொங் மற்றும் இந்தோனேசியா போன்ற நாடுகளில் பொருளாதார வளர்ச்சியை துரிதப்படுத்தவதில் வெளிநாட்டு நேரடி முதலீடானது குறிப்பிடத்தக்க அளவு பங்களிப்பை வழங்கியபோதும் கொலம்பியா, ஆர்ஜென்டீனா, பிறேசில், கொரியா, மலேசியா, தாய்லாந்து மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இத்தொடர்பு காணப்படவில்லை.

உலக பொருளாதார இணைப்பின் ஒரு முக்கிய அம்சமாக உலகளாவிய வெளிநாட்டு நேரடி முதலீட்டு பாய்ச்சல்கள் விளங்குகின்றன. மரபுரீதியாக வெளிநாட்டு நேரடி முதலீட்டு பாய்;ச்சல்கள் அபிவிருத்தியடைந்த நாடுகளையே கருத்திற்கொள்கின்றன. ஏனெனில் இந்நாடுகளே வெளிநாட்டு நேரடி முதலீட்டிற்கான பெரிய தாய் நாடுகளாகவும் (Parent), முதலீட்டினை அதிகளவில் உள்வாங்கும் நாடுகளாகவும் இருந்து வருகின்றன. 1990களின் ஆரம்பத்தில் இருந்து அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள்;, வெளிநாட்டு நேரடி முதலீட்டினைக் கவருவதில் அதிகளவில் ஆர்வம் காட்டி வருவதால், இந்நாடுகளில் வெளிநாட்டு நேரடி முதலீட்டில் பாய்ச்சல்கள் படிப்படியாக உயர்வடைந்து வருகின்றன.

அண்மைக்காலங்களில் அபிவிருத்தி அடைந்துவரும், அபிவிருத்தியடைந்த நாடுகளில் தனியார் மூலதன பாய்ச்சல்கள் அதிகரித்து வருகின்றன. இதற்குப் பிரதான காரணமாக உலகமயமாக்கம், சிறந்த உள்நாட்டுப் பொருளாதார நடவடிக்கைகள், உள்நாட்டுப் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் செயற்றிறன் வாய்ந்த நிறுவனங்கள் என்பன குறிப்பிடப்படுகின்றன. அண்மைக்காலங்களில் அபிவிருத்தியடைந்த நாடுளைக் காட்டிலும் அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளே வெளிநாட்டு நேரடி முதலீட்டு உட்பாய்ச்சல்களை அதிகம் பெறுவதில் சிறப்பாக செயற்படுகின்றன என்பதை உலகவங்கி ஆண்டறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.

அண்மைக்காலங்களில் அபிவிருத்தியடைந்துவரும் ஆசியாவின் மூலதனக் கட்டுப்பாடுகளை நீக்குவதில் அல்லது குறைத்தல் மற்றும் ஏனைய முதலீட்டு தடைகளை நீக்குதல் அல்லது குறைத்தல் போன்ற முதலீட்டுக் கொள்கைகளின் தாராளா மயமாக்களினால் தூண்டப்பட்டு வெளிநாட்டு நேரடி முதலீடு பாரியளவில் அதிகரித்து வருகின்றது. இக்கொள்கைளின் விருத்தியானது பல்வேறு காரணிகளில் ஏற்பட்டிருந்தது. அந்த வகையில் தொழில்நுட்பத்தின் விரைவான முன்னேற்றம், உலகளாவிய பிராந்திய உற்பத்தி வலைப்பின்னலின் தோற்றம், இருபக்க முதலீட்டு நடவடிக்கைகளின் உருவாக்கம், சர்வதேச முகவர்களிடமிருந்து கிடைக்கப்பெறும் கொள்கை ஆலோசனைகள், வெளிநாட்டு நேரடி முதலீட்டின் சாதக விளைவுகளை விளங்கிக்கொள்ளும் ஆற்றல் அதிகரித்துள்ளமை போன்றவை மிக முக்கியமானவையாகும்.

அபிவிருத்தியடைந்து வரும் ஆசியாவில் வெளிநாட்டு நேரடி முதலீட்டினை பெறுகின்ற முக்கிய ஒரு பிராந்தியமாக தென்னாசியா காணப்படுகின்றது. 1990களிலும் 2000ங்களில் ஆரம்பத்திலும் பெரும்பாலான தென்னாசிய அரசாங்கங்களினால் அறிமுகப்படுத்தப்பட்ட தாராளமயமாக்கல் கொள்கைகள் மற்றும் இப்பிரதேசத்திலுள்ள பெரும்பாலான நாடுகளினது உறுதியான பொருளாதார அபிவிருத்தி என்பனவே வெளிநாட்டு நேரடி முதலீட்டிற்கான அதிகரிப்பினைக் கொண்டமைந்த பிரதான காரணங்களாகும். தென்னாசிய பிராந்தியத்தில் வெளிநாட்டு நேரடி முதலீட்டினை கவருவதில் ஆதிக்கம் செலுத்தும் பிரதான நாடாக இந்தியா விளங்குகின்றது. இந்திய உயர்வுப் பருமனும் தாராளமயமாக்கல் குறித்த கொள்கை சீரமைப்புகளுமேயாகும். அதேசமயம் வெளிநாட்டு நேரடி முதலீட்டின் மொத்த உட்பாய்ச்சலில் இலங்கையின் பங்களிப்பை நோக்குவதில் 1980களில் மூன்றாம் இடத்திலிருந்து பிற்பட்ட யுத்த அனர்த்தத்தால் வீழ்ச்சியடைந்து பின்னர் உயர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

வெளிநாட்டு நேரடி முதலீட்டின் செயற்பாடானது முதலீட்டினை உள்வாங்கும் பொருளாதாரங்களுக்கு மூலதன உட்பாய்ச்சல் என்ற வடிவில் தொழில்நுட்ப சிதறல்கள், மனித முலதன உருவாக்கம், சர்வதேச வர்த்தக ஒருங்கிணைப்பு நிறுவன அபிவிரு;தியினை மேம்படுத்தல் மற்றும் நல்லாட்சி போன்ற நன்மைகளை வழங்கக்கூடியதாக இருக்கின்றது. ஆகையினால் பெரும்பாலான அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளின் அரசாங்கங்கள் வெளிநாட்டு நேரடி முதலீட்டினைக் கவருவதில் கூடியளவு கவனம் செலுத்தி வருகின்றன. அந்தவகையில் இலங்கை அரசாங்கங்கள் வெளிநாட்டு நேரடி முதலீட்னைத் தருவது தொடர்பாக காலத்திற்குக் காலம் புதிய பல கொள்கைகளை அமுல்படுத்திய போதும், ஏனைய அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளான இந்தியா, மலேசியா மற்றும் சீனா போன்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இலங்கையின் வெளிநாட்டு நேரடி முதலீட்டு செயலாற்றில் பின்தங்கிய நிலையிலேயே காணப்படுகின்றது.

அனுகூலங்கள்

அந்த வகையில் பொருளாதார வளர்ச்சியை தீர்மானிப்பதில் வெளிநாட்டு நேரடி முதலீடானது பிரதான இடத்தினை பெறுகின்றது. இது பற்றி முன்னர் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் இங்கு வளர்முகநாடுகள் என்று குறிப்பிடப்படுபவையாக தென்னாசியா, கிழக்காசியா, இலத்தீன், அமெரிக்கா, மத்தியகிழக்கு, வடஆபிரிக்கா முதலிய நாடுகள் காணப்படுகின்றன. இவ்வாறான நாடுகளில் உள்நாட்டு சேமிப்பு குறைவாக காணப்படுகின்ற காரணத்தினால் இங்கு சேமிப்புக்களை கொண்டு ஆற்றப்படும் முதலீடுகளும் குறைவாகவே காணப்படுகின்றன. இந்நிலையில் உள்நாட்டு சேமிப்பு குறைந்த நிலையில் முதலீடும் குறைவடைந்து செல்லும் நிலை காணப்படுமேயானால் நாட்டின் பொருளாதார அபிவிருத்தி குறித்த பாதகநிலை அடைய வாய்ப்புண்டு. இந்நிலையை அடையாமலிருக்க கூடுதலாக காணப்படும் சேமிப்பு முதலீட்டு இடைவெளியினை நிரப்புவதற்கு இங்கு சர்வதேச மூலதனம் இன்றியமையாத ஒன்றாக காணப்படுகின்றது.

இது அந்நிய நேரடி முதலீடாகவோ, பட்டியலிடப்பட்ட முதலீடாகவோ, வெளிநாட்டு கடன்களாகவோ, கொடையாகவோ வரலாம். இந்நிலையில் வெளிநாட்டு முதலீடுகளின் உள்வருகையின் காரணமாக உள்நாட்டில் முதலீட்டில் அதிகரிப்பு ஏற்பட அவ்வதிகரிப்பானது உள்நாட்டு வேலைவாய்ப்பு மட்டத்தினை அதிகரிக்கச் செய்கின்றது. இந்நிலையில் வேலைவாய்ப்பு அதிகரிப்பின் காரணமாக நாட்டில் வேலையின்மை வீதமானது குறைக்கப்படுகின்றது. இவ்வாறான செயற்பாடுகளுக்கூடாக நாட்டிலே காணப்படக்கூடிய பற்றாக்குறையான வளங்களின் முழுமையான பயன்பாட்டினை நோக்கி பொருளாதாரம் நகர்வடைய நிலையான பொருளாதார வளர்ச்சியை எட்டக்கூடியதாகவும் முழு வேலைவாய்ப்பையும் பெறமுடியும்.

மேலும், வெளிநாட்டு நேரடி முதலீட்டினை உள்வாங்குவதன் மூலம் குறித்த நாட்டில் சிறந்த தொழிநுட்ப முகாமைத்துவ முன்னேற்றத்தினை காணமுடியும். அந்தவகையில் இலங்கையில் காணப்படுகின்ற சான்றுகளை நோக்குவோம். அதாவது இலங்கையும் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் ஒன்றாக காணப்படும் நிலையில் வெளிநாட்டு நேரடி முதலீடுகளை உள்வாங்கியதனூடாக இலங்கையில் வேலைவாய்ப்பு தொடர்பிலும், தொழில்நுட்ப முகாமைத்துவ முன்னேற்றம் தொடர்பிலும் ஆராய்கின்ற போது இங்கு நாம் குறிப்பிடக்கூடிய பிரதான எடுத்துக்காட்டு மேல் கொத்மலை நீர்த்தேக்கம், இலங்கையின் வீதி கட்டமைப்பு பணிகள் போன்றவையாகும். மேல் கொத்மலை நீர்த்;தேக்கமானது ஐப்பான் அரசாங்கத்தினது முதலீட்டு வருவாயினை கொண்டு அமைக்கப்பட்ட வேலைத்திட்டமாகும். இத்திட்டத்தினூடாக ஏறத்தாழ 2000ற்கும் மேற்பட்ட உள்நாட்டு ஊழியர்களுக்கான நிரந்தர வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளமையும் இத்திட்டத்தில் தொழில்நுட்ப பணிகள் வியக்க வைக்கும் தன்மை கொண்டதாகவும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

அதுமட்டுமல்லாது இலங்கையின் வீதி சீர்திருத்த பணிகள் சீன அரசின் முதலீட்டு உதவிகளை கொண்டு ஆரம்பிக்கப்பட்டு அதன் மூலம் பல இலட்ச ஊழியர்கள் வேலைவாய்ப்புக்களை பெற்றமையும், நாட்டினுடைய வளங்கள் சிறந்த பயன்பாட்டு தன்மையினை அடைந்தமையும் குறிப்பிடத்தக்கது. இந்நிலைகளானது வெளிநாட்டு நேரடி முதலீட்டின் சாதக விடயங்களை தெளிவாக எடுத்துக்காட்டி நிற்கின்றது. மேலும் வெளிநாட்டு நேரடி முதலீட்டின் மூலம் சிறந்த தொழிநுட்ப முகாமைத்துவ முன்னேற்றம் மட்டுமல்லாது ஏற்றுமதி சந்தைகள் பயிற்றப்பட்ட ஊழியர்படை, தொழிற்பிரிப்பு, சிறப்பு தேர்ச்சி வெளியீட்டு அதிகரிப்பு என்பவற்றிலான முன்னேற்றகரமான போக்குகளும் குறிப்பிடத்தக்க விடயங்களாகும். உதாரணமாக இலங்கையில் 1977 இல் திறந்த பொருளாதார கொள்கையில் ஏற்பட்ட சாதகமான சீர்திருத்தின் விளைவாக இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 2.5% ஆக அதிகரித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இவ்வாறான வெளிநாட்டு நேரடி முதலீட்டின் உள்வருகையால் நாட்டில் உற்பத்தி அதிகரித்து அதனூடாக வெளிநாட்டிற்கான ஏற்றுமதியை அதிகரிக்க முடியும். இவ்வாறான அதிகரிப்பினூடாக போட்டி அதிகரித்து வெளிநாட்டு தொழிநுட்ப வருகையானது உள்நாட்டு உற்பத்தியின் தரத்தை அதிகரிக்கும் இதனால் வர்த்தகநிலுவை நடைமுறைக்கு சாதக நிலையினை அடைய சென்மதி நிலுவை மிகையடைந்து வெளிநாட்டு சொத்திருப்பு அதிகரிப்பினூடாக நாட்டில் ஓர் ஆரோக்கியமான பொருளாதார சூழ்நிலையினை அனுபவிக்க கூடியதாக காணப்படும். மேலும் நாட்டில் வெளிநாட்டு முதலீட்டு விளைவுகளால் வருமானத்தில் அதிகரிப்பு ஏற்படும். இந்நிலையில் மக்கள் தமது வருமான அதிகரிப்பிற்கு ஏற்ப தமது நுகர்வுத் தொகையினையும் அதிகரிக்க முனைவர் இவ்வாறு நுகர்வுத் தொகை அதிகரிப்பிற்கேற்ப அதன் மீது விதிக்கப்படும் வரியளவும் அதிகரிக்கும். ஆகையால் அரசிறை வருமானம் உயர்வடையும் நிலையில் நாட்டில் பாதீட்டு பற்றாக்குறை குறைவடைந்து நாட்டினுடைய பருகடன் வீதமானது குறைவடைந்து செல்லும் சாதகமான வளர்சிப் போக்கினை எட்டிப்பிடிக்க முடியும்.

பெரும்பாலும் குறை அபிவிருத்தி நாடுகள் விவசாயத்தை அடிப்படையாக கொண்டு காணப்படுகின்றது. ஆனால் சர்வதேச மூலதனமானது கைத்தொழில்களுக்கு முதலிடத்தை அளிப்பதனால் உற்பத்தி கட்டமைப்பில் மாற்றம் ஏற்பட கைத்தொழில் பொருளாதாரத்தை நோக்கிய வளர்ச்சி ஏற்படும். வளர்முக நாடுகளில் அரசதுறை உட்கட்டமைப்புகள் குறைபாடுடையது. இதனால் சர்வதேச மூலதனத்தை கவர இவை தனியார் மயமாக்கப்படும் போது நிர்வாகத்தின் தன்மை குறை அபிவிருத்தி நாடுகள் சர்வதேச மூலதனத்தைக் கவர நாணயத்தை மிதக்க விடும் போது நாணயத்தில் குறை மதிப்பினால் முதலீடு கூடி பொருளாதார வளர்ச்சி ஏற்படும். உதாரணமாக கிழக்காசிய நாடுகளான தென்கொரியா, தாய்வான், சிங்கப்பூர், தமது நாணய மாற்று வீதத்தை சந்தை சக்திகளின் அடிப்படையில் தீர்மானிக்க விட்ட போது அங்கு அந்நிய முதலீடுகள் பாரியளவில் அதிகரித்து பொருளாதார வளர்ச்சி 8 – 12% ஆல் அதிகரித்தமை குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டு நேரடி முதலீடுகளான நிபந்தனைகளின் அடிப்படையில் வழங்கப்படுவதானால் ஏற்றுமதிகளுக்கான வளர்ச்சிக்கட்டங்கள் அதிகரிக்கும். மேலும் பிரதேச ரீதியான அபிவிருத்திகளை நாட்டில் காணக்கூடியதாக இருக்கும். உதாரணமாக இலங்கையில் கட்டுநாயக்க, பியகம, கொக்கலை, மிகிந்தலை, போன்ற பிரதேச வலயங்களில் பயன்படுத்தப்பட்ட வெளிநாட்டு முதலீட்டு செயற்பாடுகளால் அங்கு ஏற்பட்ட அபிவிருத்திகள் குறிப்பிடத்தக்கவை. மற்றும் வெளிநாட்டு முதலீட்டு உள்வருகையினை ஈர்ப்பதன் ஊடாக குறித்த நாடானது ஊழியச் செறிவினை நோக்கிய உற்பத்தியை குறைத்து முதற்செறிவை நோக்கிய உற்பத்தி முறைகளை பின்பற்றி அதனூடாக நாட்டின் பொருளாதார முன்னேற்ற பாதையை எட்ட முடியும்.

பிரதிகூலங்கள்

மேற்குறிப்பிட்டவாறான பல்வேறு நன்மைகளை உள்ளடக்கியதாக வெளிநாட்டு நேரடி முதலீட்டு வருகை காணப்பட்ட போதிலும் தீய விடயங்களையும் ஏற்படுத்துவதில் அது விதிவிலக்கானதொன்றல்ல. அந்த வகையில் வெளிநாட்டு முதலீட்டின் மூலம் குறித்த நாட்டில் உற்பத்தி அதிகரித்து உயர் இலாபம் ஈட்டப்படுகின்ற போதிலும் அவற்றில் பெரும்பங்கு வெளிநாட்டு முதலீட்டாளர்களை சென்றடைவதினால் குறித்த நாட்டிற்கு அது பாதக விளைவினையே ஏற்படுத்துகின்றது. மேலும் உள்நாட்டில் சிறுகைத்தொழில் உற்பத்திகள் பாதிப்படைவதோடு அத்துறைசார் முயற்சியாளர்களும் பாதிப்படைகின்றனர். அதாவது பாரிய முதலீட்டு அளவானது வெளிநாட்டில் முதலீட்டு வருகையால் பயன்படுத்தப்பட்ட உள்நாட்டு கைத்தொழில் தங்கி வாழும் முயற்சியாளர்கள் அதற்கு ஈடுகொடுக்க முடியாத நிலையில் பாதிப்படையும் செயற்பாட்டினால் சிறுபுள்ளியை மறைக்கும் பெரும்புள்ளி என்ற செயற்பாட்டில் வெளிநாட்டு நேரடி முதலீடு பாதகத்தை தருகிறது.

அதுமட்டுமன்றி குறித்த நாடு வெளிநாட்டு முதலீட்டினை அடிப்படையாக கொண்டு உற்பத்தியை பெருக்கும் நிலைக்கு ஆளாகும் போது தாம் முதலீட்டு உதவியை பெறும் நாடுகளில் தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. அதாவது முதலீட்டினை வழங்கும் நாடுகளின் தலையீடுகள், கருத்துக்கள், ஆலோசனைகள் போன்றவற்றிற்கு விரும்பியோ விரும்பாமலோ தலைசாய்க்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படும். வெளிநாட்டு முதலீட்டினை பிறநாடுகளில் முதலிடுவதானுடாக அங்கு உழைப்பு சுரண்டல் இடம் பெறுவதை அவதானிக்கலாம். அதாவது தமது முதலீட்டினை மட்டும் முன்வைத்து விட்டு குறித்த நாட்டிலிருந்தான வளங்கள், உழைப்பு போன்றவற்றை பயன்படுத்தி இலாபத்தினை தமது நாட்டிற்கு கொண்டு செல்லும் போக்கானது இங்கு உழைப்புச் சுரண்டலினை காட்டி நிற்கிறது.

அத்தோடு உள்நாட்டு நிரம்பலிலும் வருமானத்திலுமான பாதிப்பை வெளிநாட்டு நேரடி முதலீடு நேரடியான தாக்கத்தினை சுட்டுகின்றமையை அதிகரிக்கலாம். அதாவது வெளிநாட்டு முதலீட்டினால் உற்பத்தியின் தரத்திற்கு உள்நாட்டு நிரம்பல் ஏற்புடையதாக இருத்தலின் இயலாமை, உயர் நுட்பம் இவற்றினால் உள்நாட்டு நிரம்பல் பாதிப்படையும் நிலை காணப்படுகிறது. வெளிநாட்டு முதலீட்டின் மூலம் இலாபத்தை நோக்காகக் கொண்ட உற்பத்திகளே இடம்பெறும். மாறாக சமூகநலனையோ பொருளின் தாக்கத்தையோ நோக்காகக் கொண்ட உற்பத்திகள் இடம் பெறமாட்டாது மேலும் இவ்வாறான வெளிநாட்டு முதலீட்டினூடாக குழந்தைக் கைத்தொழில்கள் கவனிப்பாரற்று கைவிடப்படக்கூடிய நிலைக்கும் தள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கதாக காணப்படுகின்றது.

மேலும் இவ்வாறான வெளிநாட்டு முதலீட்டினை கொண்டு முன்னேற்றமடையும் போது முதலிடப்பட்ட பிராந்தியத்திற்கும் ஏனைய பிராந்தியத்திற்கும் இடையிலான வேறுபாடு இவ்வாறான வெளிநாட்டு நேரடி முதலீட்டினூடாக குறித்த முதலீட்டை பெறும் நாட்டில் ஏற்படுத்தப்படும் பாதிப்பாக கருதப்படுகின்றது. வெளிநாட்டிலிருந்து பெறப்படும் முதலீடானது இடையில் இடைநிறுத்தப்படுகின்ற வேளை குறை அபிவிருத்தி நாடுகள் சடுதியான நிதி நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்படும். அத்தோடு சர்வதேச நாடுகளில் ஏற்படும் நெருக்கடிகள் எதிர் கொள்ள வேண்டிய நிலையில் குறை அபிவிருத்தி நாடுகள் விதிவிலக்கானவையல்ல. மேலும் இவை அவற்றிலிருந்து விடுபட்டு வெளிநாட்டு முதலீட்டை கவர பாரிய நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

தேவையற்ற பண்ட நுகர்வு, வருமானம் வீணடிக்கப்படும் செயற்பாடு, சார்பு வறுமை அதிகரித்தல், சமூக சீர்கேடுகள் அதிகரிப்பு, கலாசார சீரழிவுகள் பாலியல் துஷ்பிரயோகங்கள் போன்ற சமூக சார் பாதிப்புக்களும் தவிர்க்க முடியாததாகிவிடும். ஒரு நாட்டில் வெளிநாட்டு நேரடி முதலீடு உற்பத்திக்கு புதிய ஆற்றலை சேர்க்கும் புதிய திட்டங்களின் வடிவிலோ அல்லது நாட்டில் தற்பொழுது செயற்பட்டு வரும் திட்டங்களின் வடிவிலோ இணைப்பு அல்லது கையகப்படுத்தல்கன் வடிவிலோ இடம்பெற முடியும்.

அரசாங்கங்கள் வெளிநாட்டு நேரடி முதலீடுகள் மேற்கொள்ளப்பட வேண்டிய துறைகளை குறித்தொதுக்குவதுடன் ஏனைய துறைகளிலான முதலீடுகளை கட்டுப்படுத்திக் கொள்ள முடியும். மேலும் அவை இணைப்புக்கள் மற்றும் கையகப்படுத்தல்கள் பொருளாதாரத்தின் அனைத்து துறைகளிலும் அல்லது தெரிவு செய்யப்பட்ட துறைகளில் வெளிநாட்டவர்கள் வைத்திருக்க கூடிய பங்கு மூலதனத்தின் அளவை மட்டுப்படுத்தல் போன்ற நிபந்தனைகளை விதிக்க முடியும் அத்தகைய மட்டுப்பாடுகள் உள்நாட்டு தொழில் முயற்சிகளில் வெளிநாட்டுக் கட்டுப்பாட்டை வரையறுத்துக் கொள்ளும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படுகின்றன.

முன்னர் இத்தகைய வரையறைகள் இறுக்கமானவையாக இருந்து வந்த போதிலும் சிறிது காலத்தின் பின்னர் அவை பெருமளவுக்குத் தளர்த்தப்பட்டன. பொருளாதாரத்தின் மீதான வெளிநாட்டு கட்டுப்பாட்டினை குறைந்த மட்டத்தில் வைத்திருப்பதே முன்னர் குறிக்கோளாக இருந்து வந்தது. குறைந்தபட்ச வரையறைகள் மற்றும் பெருந்தொகையான ஊக்குவிப்புக்கள் என்பவற்றுடன் வெளிநாட்டு மூலதனத்தை வரவேற்பதே இன்றைய குறிக்கோளாக இருந்து வருகின்றது. புதிய திட்டங்களிலான நேரடி வெளிநாட்டு முதலீடு உள்நாட்டு மூலதன முதலீட்டின் அளவாக அதிகரிக்கின்றது. அது புதிய உற்பத்தி சார் சொத்துக்களை உருவாக்குவதன் மூலம் உற்பத்தி ஆற்றலை விரிவடையச் செய்கின்றது. மேலதிக மூலதன உருவாக்கத்தினை அடுத்து கையகப்படுத்தல்கள் ஏற்படலாம் அல்லது ஏற்படாமாலிருக்கலாம். உள்நாட்டு உரிமையாளர்களால் பெற்றுக் கொள்ளப்படும் கொடுப்பனவுகள் வேறு ஏதும் செயற்றிட்டங்களில் மீள் முதலீடு செய்யப்படலாம்.

புதிய வெளிநாட்டு உரிமையாளர் செயல்திறனை அதிகரித்து செயற்பாடுகளை விரிவாக்க முடியும் அல்லது அவர் அவ்வாறு செய்யாதிருக்கலாம். இத்தகைய வெளிநாட்டு நேரடி முதலீடு பொதுவாக கையகப்படுத்தல்களிலும் பார்க்க அதிகளவிலான புதிய தொழில்நுட்ப நிறுவன அமைப்பு, முகாமைத்துவ திறன்கள் என்பவற்றை எடுத்து வருகின்றன. மேலும் புதிய திட்டங்களிலான முதலீடுகள் புதிய வேலை வாய்ப்புக்களை உருவாக்கியதுடன் தொழில் வாய்ப்புக்களையும் அதிகரிக்கின்றன. ஆனால் கையகப்படுத்தல்களின் விளைவாக மீளமைப்பு, ஊழியர் குறைப்பு, ஊழியத்தை சேமிக்கும் முகாமைத்துவ நுட்பங்கள் என்பனவும் அதன் விளைவாக ஆட்குறைப்பும் இடம் பெறுகின்றது. ஆரம்பத்தில் வளர்முக நாடுகளில் புதிய செயற்றிட்டங்களாக வெளிநாட்டு நேரடி முதலீடு இடம் பெற்று வந்தது. பல்தேசிய நிறுவனஙஙகள் வளர்முக நாடுகளில் மலிவாக கிடைத்து வந்த ஊழியத்தை பயன்படுத்திக் கொள்ளும் நோக்கத்துடன் புடவை, ஆடை, பாதணிகள் பொம்மைகள் மற்றும் இலத்திரனியல் பொருட்கள் போன்ற ஊழியச் செறிவு மிக்க ஒரு சில கைத்தொழில்களை அந்நாடுகளுக்கு எடுத்துச்சென்றன.

ஒரு சில நிறுவனங்கள் வளர்முக நாடுகளில் இறக்குமதிகள் கட்டுப்படுத்தப்பட்டிருக்கும் சந்தர்ப்பங்களில் உள்நாட்டு சந்தைகளில் பண்டங்களை உற்பத்தி செய்யும் பொருட்டு முதலீட்டிற்கூடாகவோ துணை நிறுவனங்களை அந்நாடுகளில் நிறுவி இலாபத்தினை பெற்றுக் கொண்டன. இத்தகைய முதலீடுகள் வளர்முகநாடுகளில் குறிப்பாக கிழக்காசிய நாடுகளில் கைதத்தொழில் மயமாக்கலின் ஆரம்பத்தை குறித்தன. இத்தகைய வெளிநாட்டு முதலீடுகளின் விளைவாக இந்நாடுகள் ஊழியச் செறிவுமிக்க பண்டங்களின் முன்னனி ஏற்றுமதி நாடுகளாக எழுச்சியடைந்தன. வர்த்தகம், உற்பத்தி, நிதி மற்றும் ஏனைய சேவைகள் என்பவற்றில் பல் தேசிய நிறுவனங்கள் வளர்முக நாடுகளுக்குள் ஊடுருவி காணப்படுகின்றன.

1995 இல் பல்தேசிய நிறுவனங்கள் சீனா, சிங்கப்பூர், பிறேசில், தாய்வான், தென்கொரியா ஹொங்கொன், இந்தியா, இலங்கை போன்ற வளர்முக நாடுகளில் தமது வெளிநாட்டு நேரடி முதலீடு தொடர்பாக அதிகளவில் முதலிட்டதன் மூலம் தமது கிளை நிறுவனங்களையும் அங்கு நிலைநிறுத்தி அங்கிருந்து பாரியளவிலான வருமானத்தினை ஈட்டிக்கொண்டதோடு இம் முதலீடுகளை பெற்றுக் கொண்ட நாடுகளும் பல்வேறு தீய விடயங்களை எதிர் கொண்ட போதிலும் பொருளாதாரம் சார்பாக பல சாதக நன்மைகளையும் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும். எனவே அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் பொருளாதார வளர்ச்சி குறித்த போக்கிற்கு வெளிநாட்டு நேரடி முதலீடுகள் தமது பங்களிப்பை பாரியளவில் ஆற்றியிருக்கிறது என்றால் மறுப்பதற்கில்லை.

 

 

தீர்வுகளை நோக்கி

     அந்தவகையில் இலங்கையில் வெளிநாட்டு நேரடி முதலீட்டின் உட்பாய்ச்சலை தீர்மானிக்கும் பிரதான காரணியாக சந்தைப்பருமன், நாட்டின் பொருளாதார செழிப்பு நிலை திறந்த தன்மையின் அளவு, மனித மூலதனம், உட்கட்டமைப்பு வசதி மற்றும் ஊழல் என்பன  செல்வாக்குச் செலுத்துகின்றன. மேலும் இலங்கையில் பொருளாதார செயலாக்கத்திற்கு வெளிநாட்டு நேரடி முதலீடு குறிப்பிடத்தக்க அளவு பங்காற்றியுள்ளது. எனினும் இந்நிலைமை தொடர்ந்;தும் பேணப்பட வேண்டுமெனில் நீண்டகால அமைப்பு சீராக்கல்களின் பிரச்சினைகளை இனங்கண்டு அவற்றுக்குப் பொருத்தமான கொள்கைத் தீர்வுகளைக் கையாளும் போதுதான் வெளிநாட்டு நேரடி முதலீட்டிலிருந்ததான முழுமைப் பலனைப் பெற முடியும்.

இத்தகைய பிரதான கொள்கைத் தீர்வுகளாக நிலையான பேரினப் பொருளாதார மற்றும் அரசியல் சூழலை உருவாக்குதல், பௌதீக மற்றும் தொழில்நுட்ப உட்கட்டமைப்புக்களை மேம்படுத்துல், மனித வளங்களை விருத்தி செய்தல் பிராந்திய மற்றும் இருபக்க உடன்படிக்கைகள் மூலம் பாரியளவு சந்தைவாய்ப்புக்களை உருவாக்குதல்; மற்றும் முதலீட்டிற்கு சாதகமான வியாபார சூழலை உருவாக்குதல் என்பன குறிப்பிடத்தவையாகும். இவ்வாறான விடயங்கள் மீதான சீர்திருத்த வேலைத் திட்டங்களானது இலங்கையில் மாத்திரமன்றி இலங்கை போன்ற ஏனைய அபிவிருத்தியடைந்து வருகின்ற நாடுகளிலும் மேற்கொள்ளப்படுவதன் மூலம் வெளிநாட்டு நேரடி முதலீட்டில் இருந்ததான முழுமைப் பலனை பெறமுடியும்.

உசாவியவைகள்

…..

வினாயகமூர்த்திவசந்தா

கலைமாணி மாணவர்

பொருளியல் துறை

கலை கலாசார பீடம்

கிழக்குப் பல்கலைக்கழகம்

வந்தாறுமூலை

இலங்கை.

[email protected]

….