வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடியவர், எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க என்ற உயரிய எண்ணத்தை உலகிற்கு உணர்த்தி அதன்படி வாழ்ந்து காட்டியவர் வள்ளலார். வடலூரில் சன்மார்க்க சங்கத்தைத் தோற்றுவித்து, சாதி, மதம், மொழி, இனம் இவற்றையெல்லாம் தவிர்க்க வழிவகை செய்தவர். எவ்வுயிரையும் தம்முயிர் போல எண்ணிய வள்ளலார் தாம் இயற்றிய அருட்பாவிலும் அன்பர்களுக்குச் சொன்ன உபதேசங்களிலும் இனப் பேதமையைச் சுட்டுகிறார். அவ்வகையான இனம் எத்தன்மையது என்பதை ஆய்வதே இக்கட்டுரை.

இனம்பொருள் விளக்கம்

இனம் என்பது அடையாளப்படுத்துதல், அப்பொருளின் தன்மை என்று கலைக் களஞ்சியம் பொருள் கூறுகிறது. தன்மை என்பதை வடமொழியாளர்கள் ‘லட்ஷணம்’ என்று கூறுகின்றனர். இது தமிழ்மொழியில் இலக்கணம் எனப்படுகிறது. தமிழ்மொழி அகராதி இனம் என்பதற்கு, குலம், வகுப்பு, சுற்றம், சேர்ந்த கூட்டம் என்பதாகப் பொருள் கூறுகிறது. இனம் என்பது பொதுவாக சேர்ந்த கூட்டம் என்று இலக்கியங்கள் பல எடுத்தியம்புகின்றன. தொல்காப்பியர் இனம் என்பதனை,

நேர்இன மணியை நிரல்பட வைத்தாங்கு

          ஓர்இனப் பொருளை ஒருவழி வைப்பது         (தொல்.பொருள்1417)

என்று கூறுகிறார். ஒரே தன்மை கொண்ட பொருளை ஓர் இனமாக வைப்பது என்பது ஒரே வகையான மணிகளைக் கோவைப்பட வைப்பது போன்று என்று உரையாசிரியர் விளக்கம் தருகிறார். ஆகவே, இனம் என்பது ஒரே தன்மை பொருந்தியவர்கள் ஒன்று சேரும் கூட்டம் என்பது புலனாகிறது. இவ்வினம் என்பது எல்லா உயிர்க்கும், உயிரல்லாதற்கும் பொருந்தும். குறிப்பாக உயிர்களுக்கு அதிலும் மானுடர்களுக்கு இவ்வினம் அகஒழுக்கத்தையும், புறஒழுக்கத்தையும் பொறுத்தே இனம் பகுக்கப்பட்டிருக்கிறது. உயிர்களிலே ஊர்வன, பறப்பன, நடப்பன என்ற அடிப்படையில் இனம் வகைப்படுத்தப்பட்டாலும் மனிதனுக்கு அவனின் அறிவினைப் பொறுத்தே இனம் சுட்டப்படுகிறது. இதனை வள்ளுவர்,

            நிலத்தியல்பால் நீர்திரிந்து அற்றாகும் மாந்தர்க்கு

            இனத்தியல்பது ஆகும் அறிவு (குறள்.452)

என்று கூறுவதன் வாயிலாக இனத்தியல்பால் அத்தன்மையான அறிவைப் பெறக்கூடும் என்று கூறுகிறார். சிற்றினம் சேராமை என்னும் அதிகாரத்தின் வாயிலாக அறிவைப் பொறுத்தே அவன் இனப்படுகிறான் என்றும் கூறுகிறார்.

வள்ளலார் குறிப்பிடும் இனம்

ஓரறிவு முதல் ஆறறிவு வரை எவ்வுயிரிடத்தும் அன்புபூண்டு ஒழுகிய வள்ளலார், தாம் இயற்றிய அருட்பாவில் இனப்பேதமையைச் சுட்டுகிறார். அவர் ஆறாம் திருமுறையில்,

உயிர்க்கொலையும் புலைப்பொசிப்பும் உடையவர்கள் எல்லாம்

            உறவினத்தார் அல்லர் அவர் புறஇனத்தார் அவர்க்குப்

பயிர்ப்புறும்ஓர் பசிதவிர்த்தல் மாத்திரமே புரிக

            பரிந்துமற்றை பண்புரையேல் நண்புதவேல் இங்கே

நயப்புறுசன் மார்க்கம்அவர் அடையளவும் இதுதான்

            நம்ஆணை என்றெனக்கு நவின்றஅருள் இறையே

மயர்ப்பறு மெய்த்தவர் போற்றப் பொதுவில் நடம்புரியும்

            மாநடத்தென் அரசேஎன் மாலை அணித் தருளே       (திருவருட்பா-4160)

என்று கூறுகிறார். சன்மார்க்க சங்கம் வைத்து, சமரசம் கண்ட வள்ளலார் மானுடர்களை உறவினத்தார், புற இனத்தார் என்று சுட்டுகிறார். தம் அன்பர்களுக்கு உபதேசம் செய்யுங்கால் ஒவ்வொரு முறையும் அகவினத்தார், புறவினத்தார் என்றே சுட்டிக் கூறுவார்.

அக இனமும் புறஇனமும்

வள்ளலார் சுட்டும் இவ்விரு இனமும் மனிதர்களின் செய்கையைப் பொறுத்தே அமைகிறது. அதிலும் அடிப்படைத் தேவைகளின் முதலாவதாக் கொள்ளும் உணவு முறையில் சன்மார்க்கத்தின் அடிப்படைத் தகுதியாகிக் கொண்டார். உயிர்க்கொலை செய்பவனும், அவ்வுயிரைக் கொன்று அதனைப் புசிப்பவனும் நம்மவர் இல்லை என்றும், அவன் புறஇனம் என்றும் சுட்டுகிறார். எவன் ஒருவன் உயிர்க்கொலை செய்வதைத் தவிர்த்தும் அதனை உண்பதை மறுக்கிறானோ அவனே அகவினம் அதாவது உறவினம் என்று கூறுகிறார். புறவினத்தாரின் இச்செய்கைகூட அவனது அறியாமையே என்று கூறுகிறார். ஆகையால் அவ்வினத்தினரை வெறுத்துவிடாமல் அவர்களுக்கும் பசிதவிர்த்தல் மட்டுமே செய்க என்று தம்பாடலில் குறிக்கிறார். மற்றபடி அவர்களுக்கு ‘பண்புரையேல் நண்புதவேல்’ என்று கூறுவதன்மூலம் அவர்களுக்குப் பண்பான சொற்களோ நட்புப் பாராட்டி அவர் செய்கைக்கு உதவவோ வேண்டாம் என்று கூறுகிறார். அவர்கள் சன்மார்க்க நெறியை மேற்கொள்ளும்வரை இதுவே அவர்களுக்குச் செய்ய வேண்டியது. இத்தகைய செயலைச் செய்பவரை வள்ளலார் குறிப்பிட்டபடி பல சான்றோர்களும் உயிர்க்கொலையையும் புலைப் பொசிப்பையும் கண்டிக்கின்றனர்.

கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையார்

            புன்மை தெரிவார் அகத்து      (குறள்-329)

என்று கூறுவதன்மூலம் கொலையையே செய்தொழிலாக உடைய மக்களை மாக்கள் (விலங்கு) என்று கூறுகிறார் வள்ளுவர். கொலைத்தொழிலின் இழிவை உணர்ந்தவரிடத்தில் தாழ்ந்த செயலினராகவே தோன்றுவர். இதில் மனித இனமாக இருந்தாலும் கொலைத் தொழிலால் விலங்கினமாகக் குறிப்பிடுகிறார். மேலும், ஏலாதி என்னும் நூலில் கணிமேதாவியார்

கொல்லான் உடன்பாடன் கொல்வர்

            இனஞ்சேரான் புல்லான்           (ஏலாதி-42)

என்று கூறுகிறார். கொலைத்தொழிலைச் செய்யும் இனத்தைச் சேர்ந்தவன் புல்லறிவை உடையவன் என்கிறார். புல்லறிவு என்பது அற்ப அறிவாகும், அல்லது அறியாமையைக் குறிப்பதாகும். இதுபோன்று இலக்கியங்கள் பல கொல்லாமையையும், புலால் உண்ணாமையையும் எடுத்துக் கூறி அவற்றை மேற்கொள்பவனையும் தவிர்ப்பவனையும் இனத்தால் வேறுபடுத்துகின்றன.

முடிவுரை

ஆன்மநேய ஒருமைப்பாட்டை வளரச்செய்யும் நோக்கத்திலேயே வள்ளலார் மானுடர்களை அகவினத்தார், புறவினத்தார் என்று வேறுபடுத்தினாரே தவிர பிறிதொன்றில்லை. பிறப்பால் எல்லா உயிர்களும் சமம் என்பதனை மேம்படுத்த புலையும், கொலையும் தவிர்ப்பது அவசியமாகும். உயிர்களின் அறிவு வளர்ச்சியைப் பொறுத்தே இன வேறுபாடு அடைகின்றது. அவற்றைக் களைந்து, அனைத்து உயிர்களிடத்தும் அன்பு செய்வதால் புறவினத்தார் எல்லாம் அகவினத்தாராகி ஓர் இனமாக இன்புற்று வாழலாம் என எண்ணியவர் வள்ளலார்.

துணைநின்றவை

  • கௌமாரீஸ்வரி எஸ்.(பதி.), 2009, தொல்காப்பியம் – இளம்பூரணர் உரை, சென்னை சாரதா பதிப்பகம், சென்னை.
  • துரைசாமிப்பிள்ளை ஒளவை சு.,(உரை.), 1989, திருவருட்பா – மூலமும் உரையும், அண்ணாமலைப் பல்கலைக்கழக வெளியீடு, அண்ணாமலை நகர்.
  • புலியூர்க் கேசிகன்(உரை.), 1998, திருக்குறள், பூம்புகார் பதிப்பகம், சென்னை.
  • ……………., 1959, கலைக் களஞ்சியம், தமிழ்வளர்ச்சிக் கழகம், சென்னை.
  • ……………., 2001, பதினெண் கீழ்க்கணக்கு மூலமும் உரையும், மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம்.
  • tamilmozhiagarathi.com

கா. தினேஷ்

தமிழ் – முனைவர் பட்ட ஆய்வாளர்

அண்ணாமலைப் பல்கலைக்கழகம்

அண்ணாமலை நகர் – 608 002.