உரைக்களம்

மறைமலையடிகளால் ஊட்டப்பட்ட தனித்தமிழ் உணர்ச்சியும், தனித்தமிழ்ப் படைப்புக்களும் தமிழ் இலக்கியப் பெருவெளியில் சிறப்பாகக் குறிக்கத்தக்கவை. தனித்தமிழ் இயக்கத்தைத் தொடக்கிவைத்த பெருமைக்குரிய மறைமலையடிகளே, தனித்தமிழ்ப் படைப்புக்களைத் தந்து, அதன் இலக்கிய வரலாற்றுக்கும் முன்னோடியாக விளங்குகின்றார் என்பர். எனினும், தற்காலத்தில் கிடைக்கின்ற தமிழ் இலக்கிய வரலாற்று நூல்களில் தனித்தமிழ் இலக்கியங்களின் வரலாறு கூறப்படுகின்றதா? என்ற வினாவுக்கு விடை இல்லை என்பதே. பிற மொழிக்கலப்புடைய இலக்கியங்களுக்கு எழுதப்படுகின்ற வரலாறுகளைவிடத் தனித்தமிழ் இலக்கியங்களுக்கு எழுதப்படுகின்ற வரலாறே மெய்யான தமிழ் வரலாறாக அமையும் பெற்றியுடையதென்பதனை மறுப்பார் உண்டோ?. எனினும், தமிழ் இலக்கிய வரலாற்று நூல்களை எழுதுவாருக்குத் தனித்தமிழ் உணர்வின்மையானே இத்தகைய நிலைகள் தொடர்கின்றன என்றே கருதத் தோன்றுகின்றது. இனியாகிலும் இத்தகைய நிலைகள் நீக்கப்பட வேண்டும். இனி எழுதப்படுகின்ற தமிழ் இலக்கிய வரலாற்று நூல்களில் தனித்தமிழ் இலக்கியப் படைப்புக்களின் வரலாறு இடம்பெற வேண்டும் என்பதே நம் விழைவு. இது நிற்க.

தனித்தமிழ்ச் சிறுகதைகள் என்னும் பெயரிய இந்த ஆய்வுரை, தனித்தமிழில் எழுதப்பட்டுள்ள சிறுகதைகளை அறிமுகம் செய்வதுடன், அச்சிறுகதைகளின் இயல்பினை எடுத்துரைக்க முயலுகின்றது. அத்தோடு, பிற சிறுகதைகளுக்கும் தனித்தமிழ்ச் சிறுகதைகளுக்கும் இடையிலான வேறுபாடுகளை விளக்குவதும் இவ்வுரையின் நோக்கமாகும். இம்முயற்சிக்கு, க. தமிழமல்லன் வெளியிட்டுள்ள விருந்து, வந்திடுவார், மஞ்சளுக்கு வேலையில்லை, வழி, வெல்லும் தூயதமிழ் சிறுகதைச் சிறப்பிதழ் (2014, 2015, 2016) ஆகிய நூல்களும் இதழ்களும் அடிப்படைகளாகக் கொள்ளப்பட்டுள்ளன. மேலும், க. தமிழமல்லனின் தனித்தமிழ் வளர்ச்சி, தனித்தமிழ் ஆகிய ஆய்வுநூல்களும், இரா. இளங்குமரனின் தனித்தமிழ் இயக்கம், கு. திருமாறனின் தனித்தமிழ் இயக்கம் ஆகிய ஆய்வுநூல்களும் பிறவும் துணைகளாகக் கொள்ளப்பட்டுள்ளன. ஒரோவழித் தமிழ் இலக்கண; இலக்கியங்களும், அவற்றின் உரைகளும், ஆய்வுகளும் பயன்கொள்ளப்பட்டுள்ளன.

தனித்தமிழின் வரலாற்றுத் தொன்மை

தமிழ் இலக்கண; இலக்கிய வரலாற்றைப் படித்தறிந்துள்ள பலருக்குத்  தனித்தமிழ் வரலாறு புதுமையாகவும் மருட்கைக்குரியதாகவும் தோன்றலாம். தனித்தமிழ் வரலாற்றை ஆராய்ந்த அறிஞர் பலரும் (க. தமிழமல்லன் 1978:  4; இரா. இளங்குமரன் 1991: 16; கு. திருமாறன் 2003: 35) வடமொழியெழுத்துக்களைத் தமிழாக்கி எழுதுவதற்குத் தொல்காப்பியர் கூறியுள்ள கருத்துக்களை எடுத்துக்காட்டி, அவர் காலத்திலேயே மொழித்தூய்மைச் சிந்தனைகள் இருந்துள்ளதை விளக்கியுள்ளனர். கிடைத்துள்ள நூல்களில் தமிழின் முதல்நூல் எனக் கூறத்தகும் தொல்காப்பியம் மொழித்தூய்மைச் சிந்தனையுடையதாதலை அறியும்போது, தமிழர்தம் மொழிக்காப்புச் சிந்தனைகளை உணரமுடிகின்றது.

தொல்காப்பியமும் மொழிக்காப்பும்

தொல்காப்பியர் வடவெழுத்துக்களைத் தமிழாக்கி எழுதுவது குறித்த நூற்பா ஒன்றில்தான் மொழிக்கலப்புக்கு எதிரான கருத்தினை மொழிந்து மொழித்தூய்மை குறித்து விளக்கியுள்ளார் என அறிஞர்கள் உரைத்துள்ளனர். ஆனால், வேறு சில நூற்பாக்களிலும் தொல்காப்பியர் மொழிக்கலப்பு குறித்து உரைத்துள்ளார் என்பதைக் காணமுடிகின்றது. அவற்றை விளக்குவோம்.

தொல்காப்பியர், சொற்களை வகைப்படுத்தும்போது அதாவது, செய்யுள் ஈட்டச் சொற்களைப் பற்றிக் கூறும்போது இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் என நான்காக்கி உரைக்கின்றார் (கே.எம்.வேங்கடராமையா முதலானோர் 1996 தொல்.881). இவற்றுள் இயற்சொல்லும், திரிசொல்லும் செந்தமிழ்ச் சொற்களாகவும், திசைச்சொல்லும் வடசொல்லும் பிறமொழிக் கலப்புடைய சொற்களாகவே தெரிகின்றன.

திசைச்சொல்லை விளக்க முனையும் இளம்பூரணர் “செந்தமிழ் நாட்டை அடையும் புடையும் கிடந்த பன்னிரு நிலத்தார்தம் குறிப்பினையே இலக்கணமாகவுடைய திசைசொற்கிளவிகள்” (ஆ. சிவலிங்கனார் 1988: 25) என்கின்றார். அடையும் புடையும் என்பதற்கு “அடைந்து (சேர்ந்தும்) பக்கத்தும் கிடந்த என விளக்கம் தருகின்றார் ஆ. சிவலிங்கனார் (1988: 25 அடிக்குறிப்பு எண்: 1). இதன்மூலம் திசைச்சொல் என்பது செந்தமிழ் நிலத்தின் எல்லைப்பகுதியில் உள்ள பிற மொழி வழங்கும் நிலத்துச் சொல் என்பதை உணரலாம். இக்கருத்து தெய்வச்சிலையார் காலத்திலும் வழங்கியுள்ளது என்பதை “செந்தமிழ் சேர்ந்த நாடென்றமையால், பிற நாடாகல் வேண்டும் என்பார் உதாரணம் காட்டுமாறு:

“கன்னித் தென்கரைக் கடற்பழந் தீபம்

கொல்லங் கூபகம் சிங்களம் என்னும்

எல்லையின் புறத்தவும் கன்னடம் வடுகம்

கலிங்கம் தெலுங்கம் கொங்காணம் துளுவம்

குடகம் குன்றகம்”

என்பன” (ஆ. சிவலிங்கனார் 1988: 27) என்ற பாடல் / நூற்பாவை எடுத்துக்காட்டுவதன்வழி அறியலாம். இக்கருத்து தெய்வச்சிலையாரால் பிறர் கருத்தாகக் காட்டப்பட்டபோதிலும் அக்கருத்து அவருக்கு உடன்பாடான ஒன்றே என்பதை அவருரையால் நுணுகியுணர்க. நச்சினார்க்கினியரும் தெய்வச்சிலையார் குறித்த பகுதிகளையே குறிக்கின்றார். செந்தமிழ் நிலம்சேர் “பன்னிரண்டையும் சூழ்ந்த பன்னிரண்டாவன” (ஆ. சிவலிங்கனார் 1988: 28) என்பது அவருடைய உரைப்பகுதி.

ஆதித்தர் “பிற மொழிச் சொற்கள் தமிழில் வருவனவற்றைத் திசைச்சொல் என்பதே சாலும். ஏன்? இவை பிற திசைகளிலிருந்து வந்தவையாதலின்” (ஆ. சிவலிங்கனார் 1988: 29) என உரைத்திருப்பது நம் கருத்துக்கு மேலும் வலுச் சேர்க்கின்றது.

நன்னூலார்,

“செந்தமிழ் நிலஞ்சேர் பன்னிரு நிலத்தினும்

ஒன்பதிற் றிரண்டினிற் றமிழொழி நிலத்தினுந்

தங்குறிப் பினவே திசைச்சொ லென்ப” (நன்.273)

எனத் தெளிவுபடவே தமிழொழி நிலம் எனக் குறித்துள்ளதைக் காணும்போது திசைசொல் என்பது பிற மொழிச் சொல்லே என்பது தெளிவாகின்றது.

“தமிழொழி பதினேழ்நிலமாவன: “சிங்களஞ் சோனகஞ் சாவகஞ் சீனந் துளுக்குடகம், கொங்கணங் கன்னடங் கொல்லந் தெலிங்கம் கலிங்கம் வங்கம், கங்க மகதங் கடாரங் கவுடங் கடுங்குசலம், தங்கும் புகழ்த் தமிழ் சூழ்பதி னேழ்நிலந் தாமிவையே” என்பன” எனப் பதினேழ் நிலப்பகுதிகளைச் சுட்டுகின்றார் நன்னூலின் முதல் உரையாசிரியராகக் கருதப்படுகின்ற மயிலைநாதர்.

நன்னூலின் உரையாசிரியராகிய சங்கர நமச்சிவாயர், “செந்தமிழ் நிலத்தைச் சேர்ந்த பன்னிரண்டு கொடுந்தமிழ் நிலத்தின்கண்ணும் பதினெண் மொழியுள் தமிழும் மேற் கூறும் வடசொற்குக் காரணமாகிய ஆரிய மொழியும் ஒழிந்த பதினாறு மொழியும் வழங்கும் பதினாறு நிலத்தின்கண்ணும் உள்ளோர் தம் குறிப்பினவாய்ச் செந்தமிழோர் குறிப்பினவன்றி, அத்திசைகளினின்றும் செந்தமிழ் நிலத்து வந்து வழங்குவன திசைச்சொல் என்று கூறுவர் புலவர்” (உ.வே. சாமிநாதையர் 1953: 189) என உரைப்பதும் காண்க. செந்தமிழ் நிலம் பன்னிரண்டு; அதனைச் சேர்ந்த பிற மொழி வழங்கும் (கொடுந்தமிழ்) நிலம் பன்னிரண்டு என வகைப்படுத்தியுள்ளமை அறியத்தக்கது. இக்கருத்து அதாவது செந்தமிழ் நிலம் பன்னிரண்டு; அதனைச் சேர்ந்த நிலம் பன்னிரண்டு என்ற கருத்து நச்சினார்க்கினியர் உரையிலும் கூறப்பட்டுள்ளதை மேலே கண்டோம்.

திசைச்சொல் முழுமையான செந்தமிழ்ச் சொல்லல்ல என்பதையும், உரையாசிரியர்கள் பிற மொழிகள் வழங்கும் எல்லை சார்ந்த சொற்களையே திசைச்சொற்களாக வழங்குவதையும், அவர்தம் சான்றுகள்வழி உறுதிப்படுத்த முடிகின்றது.  இவற்றின்வழி, தொல்காப்பியர் கூறியுள்ள திசைச்சொல்லும் பிற மொழிச் சொல்லாகவே அமைவதை அறிய முடிகின்றது. எனினும், தொல்காப்பியத்தில் வடவெழுத்து குறித்த நூற்பாவைத் தனித்தமிழ்க் கொள்கைக்குச் சான்றாக மொழிந்த அறிஞர்கள் யாரும் திசைச்சொற்களைப் பற்றி ஏதும் உரைத்துள்ளதாகத் தெரியவில்லை. எனினும், தொல்காப்பியர் வடவெழுத்துக்களை நீக்கி எழுதுக எனக் கூறியபோலத் திசைச்சொற்களை எவ்வாறு எழுதவேண்டும் எனக் கூறியிருப்பதாகத் தெரியவில்லை. இருப்பினும், வடசொல்லுக்கான இலக்கணத்தையே திசைச்சொல்லுக்கும் கொள்ளுவது பொருத்தமுடையதாகலாம்.

வடசொல் எனத் தொல்காப்பியர் குறிப்பது செந்தமிழ், கொடுந்தமிழ் அல்லாத பிற மொழிச் சொற்கள் அனைத்துக்கும் பொதுவானதாகக் கருதலாம். எனினும், அவர் காலத்தில் வடமொழிச் சொல்லே தமிழில் மிகுதியும் கலந்தமையால், அதனையே முதன்மையாக்கி அவர் உரைத்தார் எனக்கொள்ளல் தகும். ஒரு மொழி பேசுவோர் மட்டுமே ஓரிடத்தில் வாழவேண்டும் என்பது இயல்பான ஒன்றல்ல என்பதை உணர்ந்தவர் தொல்காப்பியர். குமுகாயம் என்பது பல்வேறு மொழிகளைப் பேசும் மக்கள் ஓரிடத்தில் இணைந்து வாழும் சூழலுக்கு ஆட்படுவது இயற்கை என்ற குமுகாய உண்மையையும் உணர்ந்தவராகத் தொல்காப்பியர் இருந்தமையான், தமிழ்ச் செய்யுள் இயற்றுவதற்குரிய சொற்களைத் தொகைப்படுத்தும்போது பிற மொழிச் சொற்களும் தமிழில் கலந்து வழங்குவதை அறிந்து, அக்கலப்புக்கு வரம்பு கட்டுவதுபோலத் தம் நூற்பாக்களை அமைத்தார். பிற மொழிச் சொற்களைத் தமிழ்ச்செய்யுளில் ஆளும்போது, அவற்றை அம்மொழிக்குரிய எழுத்துக்களால் எழுதுவது அறிவுடமையன்று; அவ்வாறு எழுதுவது தமிழ்ச்சொல் வளம் குன்றுவதற்கும்; அதன்வழி மொழிக்கலப்புக்கு அடிப்படையாகித் தமிழ்மொழி தன் இயல்பு திரிந்துபோவதற்கு வழிகோலும் என்பதானால், பிற மொழியெழுத்துக்களாகக் குறிப்பாக, வடமொழி எழுத்துக்களை அறவே நீக்கித் தமிழ்மொழிக்கேயுரிய எழுத்துக்களால் எழுதவேண்டும் என வழிகாட்டினார். இவ்வகை மொழிக்காப்பு முயற்சிகள் தொல்காப்பியரைத் தனித்தமிழ்க் கருத்தாளராக நமக்கு இனம் காட்டுகின்றன. நூற்பாக்கள் வருமாறு:

“வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ(ய்)

எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே”

(கே.எம். வேங்கடராமையா முதலானோர் 1996, தொல்.885),

“சிதைந்தன வரினு மியைந்தன வரையார்”

(கே.எம்.வேங்கடராமையா முதலானோர் 1996, தொல்.886).

(பார்வைக்கு: ஆ. மணி (க..ஆ.) 2017: 401 – 404).

தமிழ் நூல்களும் மொழிக்கலப்பும்

தொல்காப்பியரின் மேற்கருத்துக்கள் தமிழ்நூல்களில் பன்னெடுங்காலமாகப் போற்றப்பட்டன என்பதைத் தனித்தமிழ் அறிஞர்கள் எடுத்துக்காட்டியுள்ளனர். கழக இலக்கியங்கள் பிற சொற்கலப்பின்றி இலங்குவதைத் தனித்தமிழியக்கத் தந்தை எனப் போற்றப்படுகின்ற மறைமலையடிகள் விளக்கியுள்ளார். பிற மொழி இலக்கியங்களைத் தழுவி நூல் செய்யும்போதும், பிற பண்பாட்டுக் கருத்துக்களை உள்வாங்கி நூல் செய்யும்போதும் பிற மொழிச் சொற்கள் தமிழில் புகத்தலைபட்டன. இருந்தபோதிலும், பரிபாடலின் பாடலாசிரியர்கள், சீத்தலைச் சாத்தனார் முதலானோர் பிற மொழிச் சொற்களைத் தமிழ்ப்படுத்தியே வழங்கினர் என்ற உண்மையைத் தனித்தமிழ் இயக்க ஆய்வுகள் எடுத்துக்காட்டியுள்ளன. தொல்காப்பியர் காட்டிய வழியில் தொடர்ந்து வந்த மொழிக்காப்புச் செயல்களால் குறைந்த எண்ணிக்கையில் இருந்த பிற மொழிச் சொற்கள், மொழிக்காப்பு முயற்சிகள் தளர்வடையவே, காலப்போக்கில் மிகுதியாகத் தொடங்கின. இம்மாற்றம் மதத்தின் பெயரால் முன்னிறுத்தப்பட்டது என்பது தமிழ் நூல்களின்வழி அறியப்பெறும் உண்மையாகும். இறை தொடர்பான கருத்துக்களை முன்னிறுத்தியே பிற மொழிக் கலப்பு செய்யப்பட்டதைக் காணமுடிகின்றது; விதிவிலக்குகளும் இருக்கலாம். ஆனால், மிகுதியான மொழிக்கலப்புக்கு மதமே கரணியமாக அமைந்ததை மணிப்பவள நடை முதலான நிலைகளால் அறியலாம். தொல்காப்பியர் கால முதலாக இருந்த தமிழுணர்ச்சி மழுங்கியதன் விளைவாகத் தமிழ் இலக்கிய நூல்கள் மட்டுமல்லாது இலக்கண நூல்களிலும் பிற மொழிகளின் தாக்கம் மிகுந்து மொழிக்கலப்பு அளவில்லாமல் தமிழில் நிகழத் தொடங்கியது எனலாம். தமிழ் இலக்கண நூல்களின் (குறிப்பாக, வீரசோழீயம்) இயல்களின் பெயர்களும்கூட உபகாரகப் படலம் (வேற்றுமைப்படலத்துக்கு உதவியாகிய பொருள்களைக் கூறும் படலம் (உபகாரகம் – உதவியைச் செய்வது), தத்திதப் படலம் (குறிப்பு வினையாலணையும் பெயர் பற்றிய படலம்), தாதுப் படலம் (அடிச்சொற்கள் பற்றிய படலம்), கிரியாபதப் படலம் (வினைச்சொற்களைப் பற்றிய படலம்) என்றவாறு பிற மொழிச் சொற்களில் தரப்பட்டுள்ளதிலிருந்து பிற மொழிக் கலப்பின் தாக்கத்தைக் அறியமுடிகின்றது.

நூல்களிலிருந்து உரைகளும் உரைகளிலிருந்து நூல்களும் கருத்துக்களைப் பெறும் என்பது வெளிப்படை. இலக்கியங்களிலிருந்து இலக்கணம் உருப்பெறுதல் என்பது மாறி, உரைகளிலிருந்து இலக்கணம் உருவாதல் என்னும் மரபு மாற்றம் தமிழ்ச் சூழலில் நிகழ்ந்தது வரலாற்று உண்மையாகும். இதன் பின்புலங்கள் தனித்த ஆய்வுகளுக்குரியவை. எனினும், இம்மரபுமாற்றத்தால் கொடிய நிகழ்வுகளும் தமிழில் ஏற்பட்டமை குறிக்கத்தக்கது. அவ்வகையில், தமிழ் இலக்கண மரபில் தமிழுக்கும் வடமொழிக்கும் இலக்கணம் ஒன்றே என்னும் கருத்துக்குக் கால்கோள் செய்தனவாக உரைகளே அமைந்துள்ளன என்ற உண்மையைப் பின்வரும் பகுதி விளக்கக் காணலாம்.

“தொல்காப்பியம் சொல்லதிகார உரையில் சேனாவரையர்  வடமொழிக்கும் தமிழுக்கும் இலக்கணம் ஒன்றே என்ற கருத்திற்குக்  கால்கோள் செய்தார். அக்கருத்தினை வீரசோழிய ஆசிரியரும் அதற்கு உரை கண்ட பெருந்தேவனாரும் பேணி வளர்த்தனர். பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில், பிரயோக விவேகம் இயற்றிய ஆழ்வார் திருநகரி சுப்பிரமணிய தீட்சிதரும், இலக்கணக் கொத்தின் ஆசிரியரான சாமிநாத தேசிகரும் வடமொழிக்கு ஏற்றம் தந்து சிறப்புச் செய்து இரு மொழிக்கும் இலக்கணம் ஒன்றே என்று சாதித்தனர்.

தமிழறிஞர்கள் இத்தகைய ஆசிரியர்களின் கொள்கைகளைத் தகர்த்து எறிந்தனர்; கண்டித்துத் தமிழின் பெருமையை நிலை நாட்டினர். நாவலர்  சோமசுந்தர பாரதியார் ‘தமிழ் மரபு உணர்ந்து பேணாத வட நூல் வல்ல உரைகாரரால் இத் தகவிலா வழக்குப் பெருகி, தமிழ் ஒரு தனி மொழி அன்று
என இகழும் பியோக விவேகம், இலக்கணக்கொத்துப் போன்ற பனுவல்களும் தமிழில் எழுதப்பட்டன’ என்று கண்டிக்கின்றார்” (மு.வை. அரவிந்தன் 2008: 636 – 637). தனித்தமிழியக்கத்தின் தோற்றத்தால் மொழித்தூய்மைக் கருத்துக்கள் மக்கள் உள்ளத்தில் பதிந்தன. எனினும், இக்காலத்திலும் தனித்தமிழியக்கத்தின் தேவை குறைந்துவிடவில்லை என்றே சொல்லலாம். இந்நிலையில் தனித்தமிழியக்கத்தின் தலைவர் க. தமிழமல்லனின் தொண்டு அளப்பரியது என்றே சொல்லலாம். தனித்தமிழ்ப் படைப்பிலக்கியங்களின் வளர்ச்சிக்கென அவர்தம் பன்னிலை முயற்சிகள் பாராட்டத்தக்கன. கடந்த சில ஆண்டுகளாகத் தனித்தமிழ்ச் சிறுகதைப் போட்டிகளை நடத்திப் பரிசுகளும் வழங்கி வருகின்றார். வெல்லும் தூய தமிழ் இதழ்களில் சிறுகதைச் சிறப்பிதழ்களும் வெளியிட்டு வருகின்றார். தனி இயக்கமாகவே செயல்படும் அவருக்குத் தமிழ் உணர்வாளர்களின் நன்றியறிதலைப் புலப்படுத்துவது எம் கடன். இனி, படைப்பிலக்கியங்களில் உரைநடையில் அமைந்த இலக்கியங்களில் ஒன்றாகிய சிறுகதைகள் குறித்துக் காண்போம்.

படைப்பிலக்கியம் உரைநடை சிறுகதை

“அச்சு இயந்திரங்களின் வரவால் தமிழில் முதலில் மலர்ச்சி பெற்றது உரைநடையே. பல கையான கட்டுரை நூல்கள், சிறுகதை, நாவல், மொழி பெயர்ப்புகள், திறனாய்வு, உரையாசிரியர்கள் எனப் பல பிரிவுகளில் உரைநடை வளர்ந்தது” (//www.tamilvu.org/courses/degree/a041/a0414/html/a041451.htm) என்று கூறுவது தமிழ் நூல்களில் பரவலாகக் காணப்பெறும் கருத்தாகும். இவ்வகைக் கருத்துக்கள் பரப்புரையாகவே செய்யப்படுவதையும் காணமுடிகின்றது. எனவே, இக்கருத்துக்களின் உண்மைநிலையினை அறிவது இன்றியமையாததாகும். எனவே, அவற்றைக் காண்போம்.

உரைநடையின் தொன்மையும் தோற்றமும்

தமிழின் தொன்மை சான்ற நூலாகிய தொல்காப்பியத்திலேயே உரை, அதன் வகைகள் பற்றிய கருத்துக்கள் இடம்பெற்றிருப்பது உரைகளின் தொன்மையையும் வளமையையும் எடுத்துரைக்கும் நற்சான்றுகளாகும். உரைநடைகளையும் தொல்காப்பியம் விளக்கியுள்ளது. உரைநடையைத் தொல்காப்பியர் உரைவகைநடை எனக் குறித்துள்ளார். உரை, உரைநடை வகையுள் ஒன்று என்பதுபோன்ற கருத்து தொல்காப்பியத்தில் நேரடியாகக் குறிக்கப்படவில்லை என்றபோதிலும், அவ்வாறு கருதுவதற்குத் தொல்காப்பியம் தடையாக இல்லை என்றே சொல்லலாம். இக்காலத் தமிழர்க்கு இவை பற்றிய தெளிந்த சிந்தனைகள் உண்டென்று சொல்லிவிட இயலாது. தொன்மையையும் வளமையும் இழித்தும் பழித்தும் பேசுவது பெருமைக்குரிய செயல்களாக நினைக்கப்படுவதும் பேசப்படுவதும் தமிழ்க் குமுகாயத்தின் பெருமைக்கு உரிய செயல்களன்று என்பதை நாம் மனங்கொள்ள வேண்டும். தொல்காப்பிய நூற்பா வருமாறு:

“பாட்டிடை வைத்த குறிப்பி னானும்

பாவின் றெழுந்த கிளவி யானும்

பொருண்மர பில்லாப் பொய்ம்மொழி யானும்

பொருளொடு புணர்ந்த நகைமொழி யானுமென்

றுரைவகை நடையே நான்கென மொழிப” (தொல்.பொருள். பேரா. 485)

இந்நூற்பாவில் உள்ள ‘பொருள்மரபில்லாப் பொய்ம்மொழியானும்’ என்னும் தொடருக்கு, “ஒரு பொருளின்றிப் பொய்படத் தொடர்ந்து சொல்லுவன. அவை: ஓர் யானையும் குரீஇயும் தம்முள் நட்பாடி இன்னுழிச் சென்று இன்னவாறு செய்தனவென்று அவற்றுக்கியையாப் பொருள்படத் தொடர்நிலையான் ஒருவனுழை ஒருவன் கற்று வரலாற்றுமுறையான் வருகின்றன.

பொருளொடு புணர்ந்த நகைமொழியானும் என்பது, பொய்யெனப்படாது மெய்யெனப்பட்டும் நகுதற்கேதுவாகுந் தொடர்நிலை; அதுவும் உரையெனப்படும்; அவையாவன, சிறுகுரீஇயுரையும், தந்திரவாக்கியமும் போல்வனவென்க கொள்க. இவற்றுட் சொல்லப்படும் பொருள் பொய்யெனப்படாது உலகியலாகிய நகை தோற்றுமென்பது. இவ்வகையான் உரை நான்கெனப்படுமென்றவாறு” (நா. பொன்னையா 1943: 565) எனப் பேராசிரியர் உரைக்கின்றார். பேராசிரியரின் உரைப்பகுதியால் அறியப்பெறும் கருத்துக்களாவன:

 1. பொருள் மரபில்லாப் பொய்ம்மொழியாவது ஒரு பொருளின்றிப் பொய் படத் தொடர்ந்து செல்லுவதாகும்.
 2. யானையும் குருவியும் ஒன்றோடொன்று நட்பு கொண்டு, இன்னவாறு சென்று இன்னவாறு செய்தன என ஒருவனிடம் ஒருவன் கற்றுச் சொல்லி வருவனவாகும்.
 3. பொய்யாக அமையாது, மெய்யாகவே அமைந்தாலும், நகைச்சுவைக்கு ஏதுவாக அமைவது பொருளொடு புணர்ந்த நகைமொழியாகும்.
 4. சிறுகுரீஇயுரை, தந்திரவாக்கியம் ஆகியன பொருளொடு புணர்ந்த நகைமொழிக்குச் சான்றுகளாகும்.

மேற்பகுதியால் அறியப்பெறும் உண்மைகளாவன:

 1. உரைவகை நடை நான்கனுள், தொல்காப்பியரால் கூறப்படும் பின்னிரு வகைகளுள் முதல் வகைக்குப் பேராசிரியரால் கூறப்படும் சான்று இக்காலத்தில் கூறப்படும் சிறுகதையை ஒத்துள்ளது எனலாம். ஒருபுடையாக, ’பஞ்சதந்திரக்’ கதைகளைக் கூறலாமோ எனின், விலங்கினக் கதை என்பதைத் தவிர வேறு வகைகள் இருப்பதாகத் தோன்றவில்லை.
 2. பொருள் மரபில்லாப் பொய்ம்மொழிக்குப் பேராசிரியர் கூறும் சான்று ஒரு கதையின் சுருக்கம் போலத் தோன்றுகின்றது.
 3. ஒரு நிகழ்ச்சி அல்லது சிக்கல்தான் தலைதூக்கி இருக்க வேண்டும் என்ற சிறுகதை இலக்கணம் பேராசிரியர் கூறும் சான்றோடு ஒத்திருப்பதுபோலத் தோன்றுவதைக் காண்க.
 4. பேராசிரியர் காட்டும் கதையில் மிகுதியான கதைமாந்தர்களுக்கும் இடமிருப்பதாகத் தெரியவில்லை.
 5. பேராசிரியர் கூறும் கதை, ஒருவரிடம் இருந்து ஒருவர் கற்றுக் கொண்டு சொல்லி வருவது என்பதன்மூலம், இக்கதைகள் வாய்மொழியாக வழங்குவன என்னும் மரபை அறியலாம்.
 6. தொல்காப்பியர் காலத்திய கதைகள் நமக்குக் கிட்டாதபோதிலும், தொல்காப்பிய மரபினை அறிந்த பேராசிரியர் தரும் சான்றுகளை நாம் எளிதில் புறந்தள்ளிவிட முடியாது என்பதையும் நினைய வேண்டும். மேலும், சில கதைகள் செய்யுள்நிலையிலும் காப்பியங்களில் இடம்பெற்றுள்ள உண்மையும் குறிக்கத்தகும். கீரியைப் பார்ப்பனி கொன்ற கதை சிலப்பதிகாரத்திலும் (சிலப். 15:54 – 75), தனக்குத் துணையான ஆண் புறாவைக் கொன்ற வேடனின் பசியைப் போக்க தானும் நெருப்பில் விழுந்து இறந்துபோன பெண் புறாவின் கதை கம்பராமாயணத்திலும் (கம்ப. யுத்த. 4 வீபீடணன் அடைக். 112) இடம்பெற்றுள்ளமை அறியத்தகும். இவை செய்யுள்நிலையில் உள்ள கதைகள். எனினும், தொல்காப்பியர் காலக் கதைகள் மட்டுமல்லாது, பேராசிரியர் குறிப்பிடும் கதைகள் கூடச் சுவடி உருவில் கிடைக்காதது ஏன்? என்ற வினாவும் நம்முள் எழுவது இயல்பானதே. அதற்கும் விடை காண்பது தமிழ் உரைநடையின் தோற்றம் குறித்த பல வினாக்களுக்கும் / மயக்கங்களுக்கும் விடையளிக்கும் என்பதனால், அதனையும் ஈண்டு விளக்குவோம்.

 தமிழில் உரைநடை நூல்கள் சுவடியுருவில் கிடைக்காதது ஏன்?

உரைநடை நூல்கள் தொல்காப்பியர் காலம் தொடங்கிக் கூறப்பட்டாலும், அவை சுவடி உருவில் ஏதும் கிடைக்கவில்லையே என்ற வினாவுக்கு விடை காணும் முன்னர், சுவடி உருவாக்கம், சுவடிகளில் எழுதும் முறை ஆகியவை குறித்து அறிய வேண்டும். எனவே, அதனைக் காண்போம்.

சுவடி உருவாக்கம்

     சுவடிகளை உருவாக்குவது என்பது எளிய செயலன்று. இதனைப் பின்வரும் கருத்துக்கள் உணர்த்தக் காணலாம். பனை மரத்தில் உள்ள ஓலைகளில் அதிக முற்றலும், அதிக இளமையதும் இல்லாமல் நடுநிலையில் உள்ளவற்றைத் தேர்ந்தெடுத்து (இவையே நீண்ட நாட்கள் அழியாமல் இருக்கக் கூடியவை), அவற்றைத் தனித்தனியாகப் பிரித்து நரம்பு நீக்கித் தேவையான அளவில் நறுக்கி எடுக்க வேண்டும்.  இதனை ‘ஓலைவாருதல்’ என்பர்.  ஒத்த அளவாக உள்ள ஓலைகளை ஒன்று சேர்த்தலைச் ‘சுவடி சேர்த்தல்’ என்பர். பனை ஓலைகளின் மேற்பரப்பு கடினமானதாக இருப்பதால் பதப்படுத்தாமல் ஓலைகளில் எழுத முடியாது.  அவற்றை எழுதுவதற்குத் தக்கவாறு மென்மையாக்க வேண்டும். அப்போதுதான் ஓலைகள் எழுதுவதற்கு எளிதாகவும் சேதமடையாமலும் இருக்கும்.  எழுதுதற்குச் செம்மைப்படுத்தும் முறைகளால் ஓலைகளை விரைவில் அழிந்துவிடாமலும், பூச்சிகளால் அரிக்கப்படாமலும் பாதுகாக்கலாம். அதனால் எழுதுவதற்காக வெட்டப்பட்ட ஓலைகளைப் பதப்படுத்த நிழலில் உலர்த்தல், பனியில் போட்டுப் பதப்படுத்தல், வெந்நீரில் போட்டு ஒரு சீராக வெதுப்பி எடுத்தல், சேற்றில் புதைத்தல் போன்ற பல முறைகளை முன்னோர்கள் கையாண்டுள்ளனர்.

சுவடிகள் எவ்வாறு அணியமாக்கிப் பதப்படுத்தப்பட்டன என்பதை, “சுவடிகள் தயாரிப்பதற்கு முதலில் பனையோலைகளைத் தேவையான அளவில் கத்தரித்துக் கொள்வர். இவ்வாறு அளவு செய்து கொள்ளப்பட்ட ஏடுகள் மிக நன்றாக உலர்த்தப்படும்.   கொஞ்சம்கூட ஈரமில்லாமல் நன்றாகக் காய்ந்த பிறகு இவ்வோலைகளைத் தண்ணீரில் இட்டு வேகவைக்க வேண்டும்.  இவ்வாறு கொதிக்க வைப்பதால் ஏடுகளில் ஒரு வகையான துவள்வு ஏற்படுகிறது. பிறகு ஓலைகளை மீண்டும் நன்கு காய வைக்கவேண்டும். காய்ந்த பிறகு, கனமான சங்கு அல்லது மழுமழுப்பான கல் கொண்டு ஓலைகளை நன்றாகத் தேய்க்க வேண்டும்.   இப்படிச் செய்வதால்  ஏட்டிற்கு ஒரு பளபளப்பு ஏற்படும். மேலும் ஓலை நேரான தகடுபோல ஆகிவிடும். இப்போது ஏடு எழுதுவதற்கு ஏற்ற நிலையை அடைந்து விட்டது.   இம்முறைக்கு ஏட்டைப் பாடம் செய்தல் அல்லது பதப்படுத்துதல் என்று பெயர்.

’ஓலையைப் பதப்படுத்த மேற்கண்ட வழிகள் மட்டுமல்லாது, வேறு சில வழிமுறைகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன.  அவற்றுள் சில முறைகள்: அ. ஓலைகளைத் தண்ணீர் அல்லது பாலில் வேகவைத்தல், ஆ. நீராவியில் வேகவைத்தல், இ. ஈரமணலில் புதைத்து வைத்தல், ஈ. நல்லெண்ணெய் பூசி ஊற வைத்தல், உ. ஈரமான வைக்கோற் போரில் வைத்திருத்தல்.

சில முறைகளில் ஓலைகளின் மேல்பரப்பு மென்மையாவதுடன் அதில் உள்ள ’லிக்னின்’ என்ற பொருளும் வெளியேறும்.  இதனால் ஓலைகள் விரைவில் சேதமடைவதில் இருந்து பாதுகாக்கப்படுகின்றன.  ஒரிசாவில் பாதுகாப்பிற்காக மஞ்சள்நீர் அல்லது அரிசிக்கஞ்சியில் அரைமணி நேரம் ஊறவைத்துப் பதப்படுத்துவர்’ என்று கூறுவர். இவ்வாறு பதப்படுத்திய சுவடிகளில் ஒன்று அல்லது இரண்டு துளைகளிடுவர்.  இதனை ‘ஓலைக்கண்’ என்பர். ஒரு துளையில் கயிற்றை நுழைப்பர். கயிறு உருவாமலிருக்க ஈர்க்குடன் உள்ள ஓலையில் இரண்டு முக்கோணங்கள் உள்ளதாகக் கிளிமூக்குப் போலக் கத்தரித்துக் கட்டுவர்.  இதற்குக் ‘கிளிமூக்கு’ என்று பெயர்.  மற்றொரு துளையில் ஒரு குச்சி அல்லது ஆணியைச் செருகியிருப்பர்.  இதற்குச் ‘சுள்ளாணி’ என்று பெயர்.  சுவடிகளுக்கு மேலும் கீழும் மரத்தாலான சட்டங்களை வைத்துக் கிளிமூக்கினைக் கட்டிய கயிற்றினால் சுவடியை இறுக்கிக் கட்டி வைப்பர்.  இவ்வாறு சுவடிகள் பல நிலைகளைக் கடந்துதான் அணியமாகின்றன. இதன்மூலம், ஒரு சுவடி வேண்டுமென்றாலும், இத்தனை உழைப்பும் தேவையென்பதை அறியும்போது, சுவடிகளைப் பயன்படுத்துவதில் சிக்கனக்கொள்கை தானே வந்துவிடும் என்பதை உணரலாம்.

செய்யுள் என்பது சொற்செட்டும், கட்டும் உடையது; மாறாக, உரைநடை என்பது மிகுதியான சொற்பயன்பாடு உடையது என்பதை நாம் அறிவோம். எழு சீர்களைக் கொண்ட திருக்குறட் பாடலுக்கு எழுதப்பட்ட விளக்கவுரைகளைக் கொண்டு இவ்வுண்மையை அறியலாம். முதற்குறளுக்கு எழுதப்பட்டுள்ள விளக்கவுரைகள் வருமாறு:

 1. “சூளைச் சோமசுந்தரநாயகர் ஆங்கீரச ஆண்டு தை மாதத்தில் ‘சித்தாந்த சேகரம்’ என்னும் நூலில் முதற் குறளுக்கு விளக்கம் தந்து அத்வைதத்தை மறுத்தார்.
 2. சித்தாந்த சேகர நூலை மறுத்து ‘ஆரியன்’ என்பவர், ‘திருவள்ளுவர் முதற் குறள்’ என்னும் நூலை 8 பக்க அளவில் இயற்றினார்.
 3. இதே காலத்தில், சித்தாந்த சேகரத்துக்கு நாகப்பட்டினத்திலிருந்து ஒரு மறுப்பு நூல் வந்தது. நாகைவாதி என்பவர், நாகையிலிருந்து வெளிவந்த ‘ஸஜ்ஜன பத்திரிக்கை’ என்ற இதழில் மறுப்புரை எழுதினார்.
 4. நாகைவாதியை மறுத்து, முருகவேள் என்னும் துவித சைவர், ‘நாகை நீலலோசனி’ என்னும் இதழில் மறுப்புத் தந்தார்.
 5. முருகவேள் கருத்திற்கு எதிர் நூலாகத் தோன்றியது 16 பக்கமுள்ள ‘முதற் குறள் வாதம்’ என்னும் நூல். இதனை இயற்றியவர், துவிதமத திரஸ்காரி என்பவர்.
 6. முதற் குறள் வாதத்தை மறுத்து (வேதாசலம் பிள்ளை என்றபெயருடன் இருந்த) மறைமலையடிகள் 52 பக்க அளவில் முதற் குறள் வாத நிராகரணம் என்ற நூலை இயற்றினார்.
 7. முதற் குறள் வாத நிராகரணத்தை மறுத்து, 250 பக்க அளவில்முதற் குறள் உண்மை அல்லது முதற் குறள் வாத நிராகரண சத தூஷணி என்ற நூலை, சாது இரத்தின செட்டியார் (துவித மத திரஸ்காரி) இயற்றினார்  (1900)” (மு.வை. அரவிந்தன் 2008: 446).

ஏழு சீர்களைக் கொண்ட குறட்பாவை விளக்க இன்றைய நூல் அளவில் 250 பக்கம் விளக்கம் எழுதப்பட்டுள்ளது என்பதன்மூலம் செய்யுளின் சொற்சுருக்கமும், உரைநடையின் சொற்பெருக்கமும் புலப்படும். தமிழர்கள் உரைநடையைச் சுவடிகளில் எழுதாமைக்குரிய கரணியம் சுவடிகள் கிடைப்பதில் இருந்த தடைகளே என்னும் உண்மை இதன்மூலம் புலனாகக் காணலாம்.

சுவடிகளின் அருமைப்பாட்டுக்காகவே, உரைநடையைச் சுவடிகளில் எழுதிப் பாதுகாக்கும் வழக்கம் இல்லாமல் போனது என்பதை நாம் உணரவேண்டும். தாள்களும், அச்சுக் கருவிகளும் வந்ததாலும், செய்யுள் புனையும் ஆற்றல் தமிழறிந்த அனைவருக்கும் இயலாத கரணியத்தாலும், உரைநடையில் எழுதும் வழக்கம் மிகுதியானது எனலாம். எனவே, முற்காலத்தில் உரைநடையில் எழுதப்பட்ட சுவடிகள் நமக்குக் கிடைக்கவில்லை எனக் கருதுவது பொருத்தமுடையதாகத் தோன்றுகின்றது. இனிச் சிறுகதைகளின் இலக்கணத்தை அறிமுகநோக்கில் காண்போம்.

சிறுகதை இலக்கணம்

சிறுகதைக்கு இலக்கணமோ, வரையறையோ, குறிப்பிடத்தக்க பண்போ கிடையாது என்று கூறுவது உண்டு. அவ்வாறு கூறிவிட இயலாது என்போரும் உண்டு. சிறுகதைக்கென இரண்டு நூற்றாண்டு காலப் புதிய மரபு தோன்றிவிட்டது. இலக்கியத்திலிருந்து இலக்கணம் உருவாதல் தமிழியல்பு. இது பிற மொழிகளுக்கும் பொருந்தும். மேனாட்டார் தந்த கொடை எனச் சிலரால் கூறப்படுகின்ற சிறுகதைகளுக்கும், அவற்றின் பொதுவான தன்மைகள் குறித்துக் கருத்துகள் 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் கூறப்பட்டுள்ளன. அவற்றின் அடிப்படையில் சிறுகதைக்கெனச் சில வரையறைகள் கூறப்பட்டுள்ளன. அவற்றைத் தொகுத்துக் காண்போம்.

 • “சிறுகதை என்றால் அளவில் சிறியதாய் இருக்க வேண்டும்.
 • தனிமனித அல்லது சமுதாய வாழ்க்கையைச் சுவையோடு பிரதிபலிக்க வேண்டும்.
 • சிறுகதையில் ஒரு மனிதர் அல்லது ஓர் உணர்வு, ஒரு நிகழ்ச்சி அல்லது ஒரு சிக்கல் தான் தலைதூக்கியிருக்க வேண்டும்.
 • அளவுக்கு அதிகமான கதைமாந்தர்களுக்கு அங்கு இடமில்லை.
 • விரிவான வருணனைக்கும், சூழ்நிலைக்கும் சிறுகதை இடம்தரல் கூடாது.
 • குறைவான, ஏற்ற சொற்களால் இவை சுட்டிக் காட்டப்பட வேண்டும்.
 • பாத்திரங்களின் உரையாடல்களில் சொற்செட்டு அவசியம்.
 • சிறுகதை அளவிற் சிறியதாய், முழுமை பெற்று இருக்க வேண்டும்.
 • சிறுகதை நம்பக் கூடிய உண்மைத் தன்மையினைக் கொண்டு விளங்குதல் வேண்டும்.
 • நல்ல சிறுகதை ஆல விதையைப் போல் விரிவாகக் கூடிய கதைக்கருவைக் கொண்டிருத்தல் வேண்டும். (//www.tamilvu.org/courses/degree/p203/p2033/html/p2033112.htm).

தனித்தமிழ்ச் சிறுகதைகளும் சிறுகதை இலக்கணமும்

மேனாட்டார் கருத்துக்களின் அடிப்படையில் கூறப்பட்டுள்ள மேற்கண்ட இலக்கணம் அல்லது வரையறை தனித்தமிழ்ச் சிறுகதைகளுக்குப் பொருந்துமா? என்ற வினா நமக்குள் எழுவது இயல்பே. தனித்தமிழ்ச் சிறுகதைகளில் இருந்தே இவ்வகை இலக்கணம் வடித்தெடுக்கப்பட வேண்டும் என்பதே நம் கருத்தாயினும், சிறுகதை ஆய்வாளர்கள் கூறும் வரையறைகளும் தனித்தமிழ்ச் சிறுகதைகளில் இடம்பெற்றுள்ள தன்மையை எடுத்துக்காட்டும் முகத்தான் இவ்வொப்பீடு அமைந்துள்ளது. அவற்றைக் காண்போம்.

 1. அளவில் சிறியதாக இருத்தல்

சிறுகதை என்பது அளவில் அதாவது, படிக்கும் கால அளவில் / பக்க அளவில் சிறியதாக இருக்கவேண்டும் என்ற கருத்து தனித்தமிழ் சிறுகதைகளுக்கும் பொருந்தியுள்ளது. விருந்து சிறுகதைத் தொகுப்பில், த. பழமலை எழுதிய நினைப்பு, ச. குறளேந்தி எழுதிய எல்லோரும் மாந்தர்களே, தேவமைந்தன் எழுதிய நல்லதற்குக் காலமில்லை போன்ற சிறுகதைகள் அளவில் சிறியவையாக அமைந்துள்ளன.

 1. மாந்த வாழ்வைச் சுவையுடன் வெளிப்படுத்துதல்

மாந்தர்களின் தனிப்பட்ட வாழ்வை; குமுகாய வாழ்வை வெளிப்படுத்துவது சிறுகதைகளின் பண்புகளில் ஒன்றாகும். தனித்தமிழ்ச் சிறுகதைகளில் இப்பண்பு மிகச் சிறப்பாக வெளிப்பட்டுள்ளது. இவ்வுண்மையைப் பின்வரும் சான்று வெளிப்படுத்தக் காணலாம்.

மாந்தர்கள் மேடைகளில் பேசுவது ஒன்றாகவும், வாழ்க்கையில் செய்வது ஒன்றுமாக இருப்பதை நாம் கண்ணாரக் கண்டு வருகின்றோம். இப்பண்பினை வெளிப்படுத்தும் வகையில் க. தமிழமல்லன் (2004: 45 48) எழுதித் தொகுத்த ’வழி’ என்ற சிறுகதைத் தொகுப்பில் உள்ள வேகம் என்னும் சிறுகதை புனையப்பட்டுள்ளது. பொறுமையைப் பற்றி மிக அழகாகப் பேசிய பேச்சாளரைப் பாரட்ட நினைக்கும் ஒருவர் (பேச்சாளர், கதையைச் சொல்லும் மாந்தர் ஆகிய யாருடைய பெயரும் இக்கதையில் இடம்பெறவில்லை என்பது குறிக்கத்தக்கது) அந்தப் பேச்சாளரை ஒரு சாலை நிறுத்தத்தில் காண்கின்றார். ஆனால், பச்சை விளக்கினைக் கண்டதும், பேச்சாளர் தன்னுடைய வண்டியில் விரைவாகச் செல்லுகின்றார். அவரைப் பாராட்ட நினைக்கும் கதைமாந்தரும் தன்னுடைய உந்துவண்டியில் விரைந்து செல்கின்றார். ஆனால் மிக வேகமாகச் செல்லும் பேச்சாளரைத் துரத்திப் பிடிக்க முயலும்போது, விபத்துக்களைச் சந்திக்கும் நிலையில் இருந்து மயிரிழையில் தப்புகின்றார். எனவே, அவரைத் தொடர இயலாமல் போகின்றது. இவருடைய வேகத்தைக் கண்ட பலரும் இவரைச் சாடுகின்றனர். இருந்தாலும் இவர் வேகமாகவே தொடர்ந்து சென்று அவரை நெருங்க முயலும்போது, சட்டென்று அந்தப் பேச்சாளர் நின்று விடுகின்றார். மூன்று சக்கர வண்டி ஒன்று கரும்புகையைக் கக்கியதே அவர் உந்துவண்டியை நிறுத்தக் கரணியம் என்பதை அறியும் கதைமாந்தர் அதன் பின்னர் என்ன செய்தார் என்பதைக் கூறாமலே கதை முடிந்துவிடுவது பொருத்தமுடையது. சாலையில் கக்கப்பட்ட கரும்புகையே பேச்சாளருக்கு மட்டுமல்லாது, அவருடைய பேச்சைப் பாராட்டத் துரத்தியவருக்கும் பொறுமையைக் கற்றுக் கொடுக்கின்றது. இதனைவிடச் சிறப்பாக, மாந்தர்களின் வாழ்க்கையை வெளிப்படுத்திவிட இயலாது என்றே சொல்லலாம்.

 1. ஓர் உணர்வு / ஒரு நிகழ்ச்சியே முதன்மை பெறுதல்

சிறுகதைகளில் ஒர் உணர்வோ; ஒரு நிகழ்ச்சியோ தான் முதன்மை பெறவேண்டும் என்பதுதான் சிறுகதையின் உயிர்நாடியான பண்பு எனலாம். பல்வேறு உணர்வுகளோ, பல்வேறு நிகழ்ச்சிகளோ ஒரு சிறுகதையில் இடம்பெற்றால் அக்கதை தொடர்கதை என்ற நிலைக்கு நம்மை இட்டுச் செல்லுமே தவிர, சிறுகதை என்ற உணர்வை நமக்குத் தராது. அவ்வகையில் ஒரு கதையைச் சிறுகதையாக நிலைநிறுத்தும் இப்பண்பு, தனித்தமிழ்ச் சிறுகதைகளில் இயல்பாகவே அமைந்துள்ளது.

க. தமிழமல்லனின் (1992: 9 – 10) ’வந்திடுவார்’ என்னும் சிறுகதைத் தொகுப்பில் உள்ள ‘தனிக்குடும்பம்’ என்னும் சிறுகதை தனிக்குடும்பமாகச் செல்ல நினைக்கும் ஒரு நிகழ்ச்சியை முதன்மையாகக் கொண்டு அமைகின்றது. குளியலறையிலும் கழிவறையிலும் கதவைத் தாளிடாமல் ஒழுக்கக்குறைபாடுடன் இருக்கின்றார் என்ற குற்றம் சாற்றுகின்ற மனைவியின் பேச்சைப் பொறுத்துக்கொள்ள இயலாமல் தனிக்குடும்பமாகச் செல்ல முயலுகின்றான் மணி. அதனைத் தடுக்கும் தன் தந்தையிடம் சீறுகின்றான் மணி. குருதி அமுத்தம் உடையவர்கள் நடக்கும்போதுகூடக் கீழே விழுந்து இறந்துவிடக்கூடும். நான் குளிக்கும்போது அப்படி ஏதும் நடந்துவிட்டால், என் பிணத்தை எடுக்கத் தொல்லைப்படக் கூடாதென்றுதான் அவ்வாறு கதவைத் தாழிடாமல் குளித்தேன் என்று அவனுடைய தந்தைக் கூறுவதைக் கேட்ட மணிக்கு மட்டுமல்லாமல் நமக்கும் துக்கம் தொண்டையை அடைத்துக் கொள்வதை மறுக்க இயலாது. இரு பக்கங்களில் அமைந்தாலும் மிகச் சிறந்த ஓர் உணர்ச்சியை இச்சிறுகதை ஊட்டுவது மெய்யே.

 1. குறைந்த கதைமாந்தர்களைக் கொண்டிருத்தல்

சிறுகதைகள் அளவில் சிறியனவாகவும், ஒரு நிகழ்ச்சிக்கு மட்டும் முதன்மை கொடுப்பனவாகவும் இருக்க வேண்டுமென்றால், கதைமாந்தர்களின் எண்ணிக்கை மிகுதியாக இருக்கக் கூடாது என்பது இயல்பான ஒன்றே. அவ்வகையில் தனித்தமிழ்ச் சிறுகதைகள் குறைவான கதைமாந்தர்களையே கொண்டு சிறப்பதைக் காணமுடிகின்றது.

க. தமிழமல்லனின் (1997: 98 – 101) சிறுகதைத் தொகுப்பாகிய ‘மஞ்சளுக்கு வேலையில்லை’ என்னும் நூலில் ‘நிறுத்தடா வானொலியை’ என்னும் சிறுகதையில் கதைமாந்தர் இருவரே என்பதைக் காணும்போது, குறைவான கதைமாந்தர் என்னும் பண்பு தனித்தமிழ்ச் சிறுகதைகளின் பண்பும்தான் என்பது புலனாகின்றது.

 1. விரிவான வண்ணனைகளைப் படைக்காதிருத்தல்

சிறுகதைகளில் வண்ணனைகள் விரிவாக அமையக்கூடாது எனக் கருதுவர். அவ்வகையில் கழக இலக்கியங்களில் ஒன்றாகிய அகநானூற்றைப் போல விரிந்த வண்ணனைகளைக் கொண்டிராமல், குறுந்தொகை போலக் குறுகிய வண்ணனைகளைக் கொள்வது சிறுகதைகளின் பண்பாகும் என்ற வரையறைக்கு  உரு. அசோகன் எழுதிய பஞ்சு இனிப்பு (த. தமிழ்ச்செல்வி 2014 : 47 – 49) என்னும் சிறுகதை சான்றாகும்.

 1. குறைவான, ஏற்ற சொற்களால் அமைதல்

சொல்லுக பயனிற் சொல்லிற் பயனுடைய (குறள். 200) என்றும், சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல், வெல்லும்சொல் இன்மை அறிந்து (குறள். 645) என்றும், பலசொல்லக் காமுறுவர் மன்றமாசு அற்ற, சிலசொல்லல் தேற்றா தவர் (குறள். 649) என்றும் சொற்சுருக்கத்தின் பெருமையைப் பலபட மொழிவார் வள்ளுவப் பேராசான். இவை சிறுகதைக்கும் ஏற்றவை என்று சொல்வது மிகை. சிறுகதைகளின் அமைப்பே இத்திறனால் சிறப்பது உண்மை. இப்பண்பு தனித்தமிழ்ச் சிறுகதைகளிலும் உண்டு. பணம் ஒன்றே குறிக்கோளாகத் திரியும் மருத்துவர் சிலரின் பண்பினைப் படம்பிடித்துக் காட்டும் “பார்க்க மாட்டேன்” என்னும் சிறுகதையின் நிறைவுப் பகுதி மிகச் சுருக்கமாக அமைந்து சிறுகதை இலக்கணத்திற்குச் சான்றாகின்றது. அப்பகுதி வருமாறு: “ ‘காணி (ஸ்கேன்) எடுத்து வந்திருக்கேன். நீங்க பார்க்கவில்லையே! பார்க்காமலேயே மருந்து எழுதிக் கொடுக்கிறீங்க…’ என்றான் மாறன். சினத்தை மறைத்துக் கொண்டு ‘பார்க்கமாட்டேன், கொண்டு போங்க’.

மருத்துவரிடம் 50உருவா நீட்டினான் மாறன்.

‘100உருவா கொடுங்க’ என்று கை நீட்டினார். மருத்துவர் சிவன் நல்லவர்!” (தமிழமல்லன் 2004: 93 – 96). இதைவிடச் சுருக்கமாக மருத்துவர் சிலரின் பண்பினை வெளிப்படுத்துவது இயலாது என்றே கூறத் தோன்றுகின்றது.

 1. சொற்கட்டுடைய உரையாடல்கள்

சிறுகதைகளின் இன்றியமையாப் பண்புகளில் ஒன்று உரையாடல். அவ்வுரையாடல்களும் சுருக்கமாகவும் பயனற்ற சொற்கள் இன்றியும் அமைவது கதையின் சிறப்புக்கு அடிகோலுகின்ற ஒன்றாகும். அவ்வகையில் தனித்தமிழ்ச் சிறுகதைகள் அமைவதைக் காணமுடிகின்றது.

கருநாடகக் கன்னடர்களின் மொழிப்பற்றையும், தமிழர்களின் மொழியுணர்வையும் எடுத்துக்காட்டும் வகையில் அமைந்த பின்வரும் உரையாடல் மேற்கருத்துக்கும் கதையின் ஓட்டத்திற்கும் துணையாவதைப் பாருங்கள். “நீ சொல்லுவதைப் பார்த்தா எல்லோரையும்விட நீங்கதாண்டா சிறந்தவங்க. உங்க மாநிலத்தில்தான் எங்குமே தமிழ் இல்லையே! உங்களைப்போல எங்களை நினைச்சிடாதே!” (தமிழமல்லன் 1997: 76).

 1. அளவில் சிறிதாக, முழுமையுடையதாக அமைதல்

சிறுகதை என்னும் பெயரே அளவில் சிறிதாக அமையும் கதை என்பதை உனர்த்தும். எனினும், சிறுகதையின் பண்புகளில் ஒன்றாக கதை, அளவில் சிறிதாக அமைய வேண்டும் என்பதைக் குறித்துள்ளனர். அளவில் சிறிதாக இருந்தாலும், முழுமை பெற்றதாக இருப்பதே சிறுகதை என்ற இலக்கணம் தனித்தமிழ்ச் சிறுகதைளுக்கும் பொருந்துவது குறிப்பிடத்தக்கது. ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட தனித்தமிழ்ச் சிறுகதைகள் பான்மையும் அளவில் சிறியனவாகவும், பொருண்மையில் முழுமையுடையனவாகவும் இருப்பதைக் காணமுடிகின்றது. பல சிறுகதைகள் நான்கு, ஐந்து பக்க அளவில் நிறைவுபெற்றுள்ளமை குறிக்கத்தக்கது. சான்றாகச் சில கதைகளைக் கூறலாம். விருது (தமிழமல்லன் 2004: 26 – 29), தொல்லை வேணாம் (தமிழமல்லன் 2004: 35 – 36), வேகம் (தமிழமல்லன் 2004: 45 – 48), வேலை இல்லை (தமிழமல்லன் 2004: 56 – 57), நழுவல் (தமிழமல்லன் 2004: 67 – 69), பார்க்க மாட்டேன் (தமிழமல்லன் 2004: 93 – 96), பெண் வண்டி (தமிழமல்லன் 1997: 9 – 11), தொலைகாட்சியே நன்றி (தமிழமல்லன் 1997: 25 – 26), அமைச்சர் அதற்குள் புறப்பட்டாரா (தமிழமல்லன் 1997: 27 – 29), வெளியேற்றம் (தமிழமல்லன் 1997: 38 – 40), எங்கே போவது (தமிழமல்லன் 1997: 102 – 103), பட்டு (தமிழமல்லன் 1997: 109 – 110), விடுதலை (தமிழமல்லன் 1997: 123 – 126), திருநீறு (தமிழமல்லன் 1997: 127 – 130), வெறிநாய்க்குட்டி (தமிழமல்லன் 1997: 136 – 138)அத்தை (தமிழமல்லன் 1997: 139 – 141).

 1. சிறுகதைகள் நம்பக் கூடிய உண்மைத் தன்மை கொண்டிருத்தல்

சிறுகதைகள் நாம் நம்புவதற்குத் தகுந்த நிகழ்வுகளைக் கதைநிகழ்வுகளாகக் கொண்டு, உண்மைத் தன்மை பெற்றிருக்க வேண்டும் என்ற வரையறை, உண்மைக்குப் புறம்பானவற்றைச் சிறுகதைகளாக்கக் கூடாது என்ற கருத்தின் அடிப்படையில் எழுந்ததாகும். நம்பக்கூடியன என்பன இனம், பண்பாட்டு அடிப்படையில் மாறக்கூடியவை என்றாலும், எந்த இனத்தில்; பண்பாட்டில் ஒரு கதை எழுகின்றதோ, அதற்கு ஏற்பக் கதைகள் அமையவேண்டும் எனக் கருதலாம்.

தமிழ் இலக்கண, இலக்கியப் பரப்பில் இவ்வகைக் கருத்து, இலக்கண; இலக்கியம் முழுமைக்கும் வலியுறுத்தப்பட்ட ஒன்றே என்பது இவ்விடத்தில் நினையத்தக்கது. பொருளொடு புணராப் பொய்மொழி (தொல்.பொருள். பேரா. 485) பற்றிய தொல்காப்பியக் கருத்துக்கள் இவ்விடத்தில் நினையத்தக்கன. இக்கருத்துக்களுக்கு மாறாக, இறையனார் களவியல் உரைகாரர்  ”அஃது இவ்வுலகினும் இயற்கையான் நிலைபெறாது புலவரான் இல்லது இனியது நல்லதென நாட்டப்பட்டதோர் ஒழுக்க மென்பார் ‘ கண்ணிய’ என்றார்” (பவானந்தம் பிள்ளை 1916: 270*) எனக் களவியல் என்பது இவ்வுலகில் இல்லாதது; புனைந்துரை எனக் கருத்துரைத்தார். இக்கருத்து நச்சினார்க்கினியரால் “இஃது  இல்லதெனப்படாது உலகியலேயாம்.  உலகியலின்றேல் ஆகாயப்பூ நாறிற்றென்றவழி அதுசூடக் கருதுவாருமின்றி மயங்கக் கூறினானென்று உலகம் இழித்திடப்படுதலின் இதுவும் இழித்திடப்படும்” (நா. பொன்னையா 1948: 9*) என மறுத்துரைக்கப்பட்டது. வ.சுப. மாணிக்கனாரும் (1980: 290) “ இறையனார் அகப்பொருள் உரையாசிரியர் ஐந்திணையாவது இல்லது இனியது நல்லது என்று புலவரால் நாட்டப்பட்டதோர் ஒழுக்கம் எனவும்,  உலக வழக்கோடு இயையாது எனவும் ஒரு பெருங்கருத்தை எழுதியுள்ளார். இக்கருத்து இகலின்றி ஆராய்தற்கு உரியது. 1. புலவர்கள் கற்பித்த ஒழுக்கம்,  2.உலக வழக்கில் இல்லாத ஒழுக்கம், 3. இல்லை எனினும் கற்பனையாற் படைத்தற்குக் காரணம் இனிய ஒழுக்கம், 4. நல்ல ஒழுக்கம் என்ற நான்கு கூறுகள் இவர் கருத்தில் அடங்கியுள. இனியது நல்லது என்ற கூறுகளை நாமும் ஒத்துக் கொள்கின்றோம். ஐந்திணைக் காதல் தமிழ்ச் சமுதாயத்தில் காண்கில்லா அரிய பொருளா? மலடி பெற்ற நொண்டி முயற்கொம்பை ஏணியாகக் கொண்டு படிவைத்து ஏறிச் சென்று வானத்துக் கருந்தாமரையை
வாயாற் பறித்துப் பேரனுக்குப் பிறந்த நாட் பரிசாக அளித்தான் என்பது போலும் கட்டுக் கதையா? முழுதும் புலவர்தம் கற்பனைப் படைப்பா? சங்க இலக்கியம் புராணத்திலும் பெரும் புராணமா? இல்லது என்று புலவரால் நாட்டப்பட்டது என்னும் உரையாசிரியர் கொள்கை அதிர்ச்சி தருவதாகும்” என மறுத்துரைக்கின்றார். தமிழ் இலக்கண, இலக்கியங்கள் உள்ளதைப் புனைதலையே கருப்பொருளாகக் கொண்டவை என்பதை இதுகாறும் கண்ட கருத்துக்கள் தெளிவுபடுத்துகின்றன. நம்பக்கூடிய உண்மை நிகழ்ச்சிகளைப் புனைவதே சிறுகதைக்கும் இலக்கணம் என்ற கருத்து பிற மொழி இலக்கியங்களின் அடிப்படையில் கூறப்பட்டதாயினும், முந்தைய தமிழ் மரபின் தொடர்ச்சியே அன்றி; வேறில்லை எனலாம். ஒரோவகையில் இவ்வகைக் கருத்துக்கள் உலகப் பொதுமையன என்றும் கூறலாம்.

தனித்தமிழ்ச் சிறுகதைகள் முற்றும் உலக நிகழ்வுகளையே கதைப்பொருளாகக் கொண்டுள்ளன. நம்பக்கூடாத நிகழ்வுகள் எவையும் தனித்தமிழ்ச் சிறுகதைகளில் இல்லை என்றே சொல்லலாம். இன்னும் சொல்லப்போனால், தனித்தமிழ்ச் சிறுகதைகளில் நாம் காணும் நிகழ்வுகள் நம்மில் பலரது வாழ்க்கையில் நாம் சந்தித்தவை அல்லது சந்திப்பவையே என்றே கூறலாம்.

 1. விரியக்கூடிய கதைக்கருவைக் கொண்டிருத்தல்

சிறுகதைகள் அளவில் சிறியவையாக இருப்பினும், அக்கதைகளின் கருப்பொருள்கள் ஒரு புதினமாகவோ அல்லது தொடர்கதையாகவோ விரித்துரைக்கக் கூடியனவாக அமைய வேண்டும் என்ற கருத்து, தனித்தமிழ்ச் சிறுகதைகளுக்கும் பொருந்துகிற ஒன்றே. எனினும், ஒரு சிறுகதை ஒற்றை நிகழ்ச்சியை நடுவமாகக் கொண்டு அமைவதால், ஒரோவிடங்களில் இவ்விலக்கணம் எவ்வகையில் பொருந்தும் என்பதும் சிந்திக்கத்தக்கது.    இனி, தனித்தமிழ்ச் சிறுகதைகளில் இடம்பெற்றுள்ள உத்தி முதலானவற்றைக் காண்போம்.

சிறுகதை உத்திகளும் தனித்தமிழ்ச் சிறுகதைகளும்

“ஆசிரியர் தான் உணர்த்த விழையும் கருத்துக்களை வெளிப்படுத்தும் முறையே உத்தி” என உத்தியை விளக்குவர் (இரா. ஹேமமாலினி 1987 :102). ’உத்தியும் உள்ளடக்கமும் ஒன்றோடொன்று தொடர்புடையவை. உள்ளடக்கத்தினை உணர்த்துவது உத்தி’ என்னும் கருத்து (வீ. உண்ணாமலை 1991 : 86) உத்திக்கும் உள்ளடக்கத்திற்கும் உள்ள தொடர்பினை விளக்குகின்றது. தனித்தமிழ்ச் சிறுகதைகளில் காணப்பெறும் உத்திகளை 1. உள்ளடக்கம் சார்ந்த உத்திகள், 2. உருவம் சார்ந்த உத்திகள் என வகைப்படுத்தலாம்.

 1. உள்ளடக்கம் சார்ந்த உத்திகள்

தனித்தமிழ்ச் சிறுகதைகளில் இடம்பெற்றுள்ள உள்ளடக்கம் சார்ந்த உத்திகளை 1. தலைப்பிடுதல் உத்தி, 2. கதைத்தொடக்க உத்தி, 3. கதைப்பின்னல் உத்தி, 4. கதைமாந்தர் படிப்பாக்க உத்தி, 5. கதைநிறைவு உத்தி எனப் பகுத்தறியலாம்.

 1. தலைப்பிடுதல் உத்தி

சிறுகதைகள் அளவிலும் பொருண்மையிலும் சிறியன. புற்றீசல் போலப் பல்கிப் பெருகும் சிறுகதைகளுக்கிடையே ஒரு சிறுகதையைப் படிக்க வரும் வாசகனை ஈர்ப்பதற்கு அச்சிறுகதைக்குத் தரப்பட்டுள்ள தலைப்பே இன்றியமையாதது என்பது வெளிப்படை. ஒரு வகையில் சொன்னால் தலைப்புத்தான் ஒரு சிறுகதைக்கு வாயில் என்றே சொல்லலாம். எனவே, ஒவ்வொரு படைப்பாளரும் தம்முடைய கதைகளுக்குத் தலைப்புக்களிடுவதில் தனிக்கவனம் செலுத்துவர். தனித்தமிழ்ச் சிறுகதைகளிலும் இவ்வகையான போக்கினைக் காணமுடிகின்றது. ச. அமுதன் எழுதிய “ ஐயோ மகனே” (த. தமிழ்ச்செல்வி 2016: 21) என்னும் சிறுகதை படிப்பாளியின் உள்ளத்தில் ஒரு பதற்றத்தையும் என்ன நிகழ்ந்தது? என அறிகின்ற ஆர்வத்தையும் தூண்டும் வகையில் அமைந்துள்ளது இதற்குச் சான்றாகும். அதுபோன்றே, கனிமொழி எழுதிய “யார் பணம்?” (த. தமிழ்ச்செல்வி 2016: 37) என்னும் சிறுகதையும் அமைந்துள்ளது.   பட்டுக்கோட்டை இராசா எழுதிய “ஒன்றுக்குள் ஒன்று “(த. தமிழ்ச்செல்வி 2016: 48) என்னும் சிறுகதை ஒரு புதிர் போல அமைந்து ஈர்க்கின்றது. க. தமிழமல்லனின் வந்திடுவார் என்னும் சிறுகதைத் தொகுப்பு நூலில் உள்ள 16 சிறுகதைகளில் 11 சிறுகதைகள் “இளநீர்”, “நடிகை” என்னுமாப்போல ஒற்றைச் சொல் தலைப்புக்களைக் கொண்டவை. 3 சிறுகதைகள் இரட்டைச் சொல் தலைப்புக்களும் கொண்டவை. இவ்வாறு ஓரிரு சொற்களில் தரப்படும் தலைப்புக்களும் படிப்பாளியை ஈர்ப்பதில் பெரும்பங்கு வகிக்கின்றன என்றே சொல்லலாம்.

 1. கதைத்தொடக்க உத்தி

சிறுகதைகளின் தொடக்கம் மிகச்சிறப்பாக அமையவேண்டும் என்பதைச் சிறுகதையாசிரியர்களும் திறனாய்வாளர்களும் பலபடக் கூறியுள்ளனர். ஒரு குதிரை ஓட்டத்தின் தொடக்கம்போலச் சிறுகதையின் தொடக்கமும் அமையவேண்டும் எனச் சிறுகதைத் திறனாய்வாளர்கள் கருதுவர். தலைப்பு ஒரு வாயில் போல அமைந்து படிப்பாளியை ஈர்த்தால், தொடக்கம் அவனைக் கதைக்குள் செல்ல வழிநடத்த வேண்டும் என்றே கூறலாம். மிகச் சிறந்த சிறுகதை எனப் பாராட்டப்பட்ட சிறுகதைகள் அனைத்தும் மிகச் சிறந்த தொடக்கத்தைக் கொண்டவை எனக் கூறுதல் மிகை. அவ்வகையில் தனித்தமிழ்ச் சிறுகதைகளும் ஈர்க்கும் தன்மையுள்ள தொடக்கங்களைக் கொண்டுள்ளன.

“வாழ்க்கையை வெளிப்படுத்துவதாகவே சிறுகதை அமைவதால், வரையறுத்த தொடக்கம் என்பது அதற்குக் கிடையாது” (சு. வேங்கடராமன் 1977: 154) என்னும் கருத்து சிறுகதைகளின் தொடக்கத்தை அமைப்பதில் படைப்பாளியின் விடுதலை மனநிலையை உணர்த்தினாலும், பிறரால் படிக்கப்படுவதற்கெனவே சிறுகதைகள் எழுதப்படுவதால், படிப்போரின் உள்ளத்தை ஈர்க்கும் வகையிலான தொடக்கத்தைத் தரவேண்டிய பொறுப்பு படைப்பாளிக்கு உண்டு. இது அவர்தம் விருப்பத்தைச் சார்ந்து அமைந்தாலும் / அமையவில்லை என்றாலும், படைப்பாளி ஈர்ப்புடைய கதைத் தொடக்கத்தை தருகின்ற நிலைக்கு இயல்பாகவே தள்ளப்படுகின்றார் என்பதே உண்மை. தனித்தமிழ்ச் சிறுகதைகளும் உள்ளத்தை ஈர்க்கும்வகையிலான கதைத்தொடக்கங்களைத் தந்துள்ளன என்பதைக் காணமுடிகின்றது. சான்று ஒன்று தருவோம்.

“இனி ஒரு நொடிகூட நான் இங்கிருக்க மாட்டேன். உங்கப்பாவுக்குக் கொஞ்சங்கூட நாகரிகமே தெரியவில்லை. இவ்வளவு முதுமையிலும் கீழ்த்தரப்பண்பு போகவில்லையே. ஒன்று, நான் இங்கே இருக்கணும் அல்லது அவர் இருக்கணும். உடனே ஒரு வழி பண்ணுங்க” ( க. தமிழமல்லன் 1992: 9).

சிறுகதைத் தொடக்கங்களில் ’1. மரபுநிலைத் தொடக்கம், 2. ஆர்வநிலையைத் தூண்டுவன, 3. அறிமுகப்படுத்துவன, 4. உரையாடல் வடிவின, 5.வருணனையில் அமைவன, 6. கதைமாந்தர் பண்பு விளக்கத்தன, 7. கூற்று நிலைத் தொடக்கம் ஆகிய வகைமைகள் உள்ளன என்ப. தனித்தமிழ்ச் சிறுகதைகளில் இவ்வகைகள் அனைத்துக்கும் சான்றுகளைக் காணமுடிகின்றது.

 1. கதைப்பின்னல் உத்தி

கதைப்பின்னல் என்பது ஆசிரியர் பல நிகழ்ச்சிகளை ஒழுங்குபடுத்திக் கோர்வையாக அளிப்பதைக் குறிக்கும் என்பர் (தா.ஏ. பியூலா மெர்சி 1974: 29). மேலும், ’கற்போர் மனத்தில் தான் பதிக்க விரும்பும் உணர்வைத் தோற்றுவிக்கும் வகையில் கதைநிகழ்ச்சிகளைக் கலைஞன் முறைமாற்றி அமைத்தபின், முழுவடிவம் பெற்றுவிட்ட சிறுகதையில் நிகழ்ச்சிகள் கூறப்பட்டுள்ள நிரல்முறையே கதைப்பின்னல்” என்றும் கூறுவர் (மீனாட்சி முருகரத்தினம் 1976: 54). இதுகாறும் கூறப்பட்ட கருத்துக்கள் சிறுகதைகளின் உயிர்நாடியாக அமைவது கதைப்பின்னலே என்னும் உண்மையை உணர்த்துகின்றன. ஒரு படைப்பாளின் தனித்தன்மையைக் காட்டும் இடமாக அமைவது கதைப்பின்னலே என்ற கருத்தை மறுக்க இயலாது. படைப்பாளியின் அடையாளத்தைச் சுட்டிக் காட்டும் பகுதியாக அமையும் கதைப்பின்னலில் படைப்பாளிகள் மிகுதியும் கவனம் செலுத்துவது இயல்பான ஒன்றே. தனித்தமிழ்ச் சிறுகதைகளும் இவ்வகையில் கதைப்பின்னலில் சிறக்க அமைந்துள்ளதைக் காணமுடிகின்றது.

சிறுகதைகளில் 1. பின்னோக்கு உத்தி, 2. நனவோடை உத்தி, 3. கனவுநிலை உத்தி, 4. உருவக உத்தி, 5. உரையாடல் உத்தி, 6. உரையாடலின்றி அமைவன, 7. எடுத்துக்காட்டுக் கதை வடிவின, 8. நாட்குறிப்பு, 9. பேட்டி முறை, 10. கடித உத்தி ஆகிய கதைப்பின்னல் உத்திகள் அமையக்கூடும் என்ப.  இவ்வகைகள் நீங்கலான, உத்திகளும் தனித்தமிழ்ச் சிறுகதைகளில் உண்டென்பதற்குப் பின்வரும் சிறுகதை சான்றாகும்.

மலைவாழ் பழங்குடியினாகிய கருமலை ஒரு அலுவலகத்தில் கணக்கர் பணிக்கு வந்து சேருகின்றான். அந்த அலுவலகத்தில் இருந்த முத்துவும் முருகையனும் அவன்மீது வெறுப்புக் கொண்டு விலகியிருக்கின்றனர். பின்னர் ஒரு நாள் கருமலை முத்துவுக்கு விருந்து வைக்கின்றான். பின்னொரு நாள் முருகையனையும் கருமலை விருந்துக்கு அழைக்கின்றான். முருகையன், முத்துவிடம் விருந்து எப்படி எனக் கேட்க, அருமையான விருந்து; அத்தோடு அவன் மனைவியும் இரவு விருந்தானாள் என்கின்றான். மனக் குறுகுறுப்படைந்த முருகையன் விருந்துக்குச் செல்கின்றான். நல்ல விருந்துக்குப் பின், விருந்தினர் ஓரிரவு தங்கினால்தான் முழு விருந்து தந்த உணர்விருக்கும் எனக் கருமலை கூறுகின்றான். இரவில் முருகையனும் அந்த அழகு மங்கையின் கையைப் பிடித்து அன்பே எனத் தொடங்குகின்றான். அவளோ பளார் என அறைந்து விடுகின்றாள். முருகையன் அறை தாளாமல் சாய்ந்து விடுகின்றான். பின்னர் மலைவாழின மகளிர் சந்திக்கும் ஆண், அவளுடைய விருப்பத்திற்குரியவனாக இருந்தால், அவன் கன்னத்தில் ஓங்கி அறைவது அவர்களுடைய வழக்கம் என்றொரு செய்தியைக் கண்ட முருகையன் தான் வாங்கிய அறை எந்த வகை? என்ற குழப்பத்தில் இருப்பதாக முடிவடையும் விருந்து என்னும் சிறுகதை (க. தமிழமல்லன் 1985:43 – 48) சிறந்த ஒரு கதைப்பின்னலுக்குச் சான்றாகும்.

 1. கதைமாந்தர் படைப்பு உத்தி

தனித்தமிழ்ச் சிறுகதைகளில் இடம்பெறும் கதைமாந்தர்கள் பல வகையினர். அவர்களைப் படைப்பதில் பல உத்திகளைப் படைப்பாளர்கள் கைக்கொண்டுள்ளனர். அவற்றைப் பின்வருமாறு பகுத்தமைக்கலாம்: 1. குறிக்கோள் மாந்தர்களைப் படைத்தல், 2. முரண்நிலை மாந்தர்களைப் படைத்தல், 3. அஃறிணைகளைக் கதைமாந்தர்களாகப் படைத்தல், 4. படைப்பாளியே கதைசொல்லியாதல்.

தனக்கின்னா செய்தாருக்கும் இனியவே செய்யாக்கால் சால்பென்பது என்ன பயனுடைத்து? என்பார் வள்ளுவப் பெருந்தகை (குறள். 987). இத்தகைய குறிக்கோள் கொண்ட மாந்தர்களைக் காண்பது எளிதன்று. இவ்வகை மாந்தர்களைப் படைப்பது, மாந்தர்களிடையே தாமும் அப்பண்புடையவர்களாக வாழவேண்டும் என்னும் எண்ணத்தை விதைக்கும் என்னும் கருத்தில் தனித்தமிழ்ச் சிறுகதையாசிரியர்கள் தம் கதைகளில் அத்தகைய மாந்தர்களைப் படைத்துள்ளனர். க. தமிழமல்லனின் (2004: 26 – 29) விருது என்னும் சிறுகதையில் வரும் முதன்மைக் கதைமாந்தராகிய அறிவுத் தொடர்பன், தன் பெயரைக்கூட அழைப்பிதழில் போடுவதற்கு இசையாத, திருமகள் கேள்வனுக்கு விருது கொடுக்கப் பரிந்துரை செய்கின்றார். திருமகள் கேள்வன் செய்த இன்னாத செயல்களை இனியர் எடுத்துக் கூறியும், தம் கருத்தில் மாறாத் தன்மையாராக நிற்கும் அறிவுத்தொடர்பன் 987ஆம் குறளுக்கு இலக்கியமாகத் திகழ்கின்றார்.

 1. கதை நிறைவு உத்தி

சிறுகதைகளைப் பொருத்தவரையில், அவற்றின் தொடக்கம் எவ்வளவு இன்றியமையாததோ, அவ்வளவு இன்றியமையாதது கதை நிறைவும். கதையின் நிறைவே, படிப்போருக்கு உள்ளநிறைவையோ, ஏக்கத்தையோ தந்து, அக்கதைகளை உள்ளத்தில் நிலைநிறுத்தும் என்றே சொல்லலாம். “சிறுகதையின் முடிவு அதன் திருப்பத்தில் உள்ளது என்றோம். அது வாசகனை அந்தக் கதையை முற்றிலும் புதிதாக மீண்டும் கற்பனையில் எழுப்பச் செய்யவேண்டும்.

அப்படியானால் அது முடிந்தவரை குறைவான சொற்களில் சொல்லப்பட வேண்டும். எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு வாசகனின் கற்பனைக்கு விடப்பட வேண்டும்” (//www.jeyamohan.in/ 336#.WVZ67JKGPhk) என்னும் கருத்து, நம் கருத்துத் துணையாவதைக் காண்க.

“கதை வளர்ச்சிக்கேற்ப முடியவேண்டும். இப்படித்தான் முடியப்போகிறது என்று படிப்போர் தெரிந்துகொள்ளாத வகையிலும், முடிந்த பின்னர் இதுதான் சரியான முடிவு என்று அவர்கள் ஒத்துக்கொள்ளும் வகையிலும் கதை முடியவேண்டும்” (தா.ஏ. பியூலா மெர்சி 1974: 47) என்னும் கூற்று கதைமுடிவு பற்றிய பொதுக்கருத்தாகும். தனித்தமிழ்ச் சிறுகதைகள் இவ்வகையில் கதைநிறைவினைக் கொண்டிலங்குவதைக் காணமுடிகின்றது. ஓரோவிடங்களில் இக்கதைகள் மாறுபட்டு அமைவதையும் காணமுடிகின்றது.

கம்பித் தொலைக்காட்சி நிறுவனத்தில் பணிசெய்பவன் போல வந்து, கழுத்தணி முதலானவற்றைத் திருடிக்கொண்டு செல்ல நினைத்த ஒருவன், மக்களால் அடிபட்டு மயங்கி விடுகின்றான். என்ன செய்தும் மயக்கம் தீராததுபோல, அவன் நடிப்பதைக் கண்ட மருத்துவர் நெஞ்சு (இதய) அறுவை  செய்துவிட வேண்டும் என்று கூறிக் கொண்டே, “மயக்க ஊசியை மார்பில் குத்தினார். ஊசி முனை பட்டதும், இளைஞன் “ஐயையோ என்னை ஒன்னும் செய்துவிடாதீங்க! நான் சாகவில்லைங்க” என்று அலறிக்கொண்டே கீழே குதித்தான்” (க. தமிழமல்லன் 2004: 44) என வரும் சிறுகதை முடிவுப்பகுதி, இதுதான் சரியான முடிவு என்று பிறர் ஒத்துக்கொள்ளும் வகையில் முடிவதற்குச் சான்றாகும்.

 1. நடையியல் உத்தி

ஒரு படைப்பாளர் தம் கருத்துக்களைப் படைப்புக்களில் வெளிப்படுத்தும் மொழிநிலையை நடை எனலாம். மனிதர்களுக்கிடையே எண்ணங்கள் ஒன்றுபடுவதும், வேறுபடுவதும் போலக் கருத்துக்களை வெளிப்படுத்தும் மொழிநிலையிலும் ஒற்றுமைகளையும் வேறுபாடுகளையும் காணமுடியும். மொழி என்பது ஒரு கருவியே என்று சிலர் கூறினாலும், மொழி இல்லையென்றால், கருத்து வெளிப்பாட்டுக்கு வழியில்லாமல் போய்விடும். கருத்து வெளிப்பாட்டுக்கு வழியில்லையென்றால் மாந்தர்களுக்கும் விலங்கினங்களுக்கும் வேறுபாடில்லாமல் போய்விடும் என்பதை மறுக்க இயலாது. எனவே, மொழியே மாந்தர்களுக்கு உயிர் எனல் தகும்.

மொழியைக் கருவியென்றே நீங்கள் கொண்டாலும், கருவி செவ்வையாக இல்லையெனில், அதனால் விளையும் பயன் என்ன?. கூரியதோர் வாள்மன் என உரையாசிரியர்கள் கூறுவதுபோல, கூர்மையாக அமையாத வாளால் என்ன பயன்?. பிழைபடப் பேசுவதையும் எழுதுவதையும் சரியெனக் கருதுவோரால் விளையும் மொழிக்கேடுகள் கொஞ்சமா? என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். ஆங்கிலத்தில் பிழைபட எழுதிவிட்டால் துடிக்கும் உள்ளம்; தமிழில் எழுதும்போது செத்துப் போவது எப்படியெனத் தெரியவில்லை. பிழையற எழுதுவதும் பேசுவதும் நம் கடமையும் உரிமையுமாகும் என்பதை நினைவில் கொண்டால் தமிழ் தழைக்கும்.

படைப்பிலக்கியமாகிய சிறுகதையின் மொழிநடை எவ்வாறு அமையவேண்டும் என்பதைப் பற்றிப் பலரும் கருத்துக்களைக் கூறியுள்ளனர். அவற்றைக் காண்போம்.

“நடை என்பது கதை சொல்லப்படும் முறையும், கருத்து வெளியீட்டிற்குப் பயன்படுத்தப்படும் சொல் தொடர் அமைப்புகளும் ஆகும் என்பார் மீனாட்சி முருகரத்தினம் (1976: 146). இதன்மூலம், கதையும், கருத்தும் சொல்லப்படுவதற்கு இன்றியமையாதவை சொற்களும், தொடர்களுமே என்பதை அறியமுடிகின்றது.

தமிழ் இணையக் கல்விக்கழகப் பாடத்திட்டப் பகுதியில் தரப்பட்டுள்ள கருத்து வருமாறு: “சிறுகதைகளில் மொழிநடை எளிமையாய் இருத்தல் வேண்டும். சமுதாயத்தில் உள்ள பல்வேறு நிலையினரும் படித்து, பயன் கொள்ளும் இலக்கியம் இது. எனவே எளிய மொழிநடையின் மூலம் மட்டுமே படைப்பாளர்கள் வாசகர்களின் மனத்தில் கருத்துகளைப் பதிக்க வேண்டும். தனித்தமிழ் நடை, பண்டித நடை ஆகியவை சிறுகதைக்குக் கை கொடுக்காது. அதற்காக இழிவழக்குடன் கூடிய நடையும் உதவாது. ஒரு பழகிய நடையுடன் கூடிய பேச்சு வழக்கு சிறுகதைகளில் இடம்பெறல் வேண்டும். இதன் மூலமே படைப்பாளனின் படைப்பிலக்கியம் வெற்றி பெற இயலும்” (//www.tamilvu.org/courses/ degree/p203/p2033/html/p2033113.htm). இக்கருத்துக்களின் பொருத்தத்தைக் காண்போம்.

மேலே தரப்பட்டுள்ள கருத்துக்களை உற்றுநோக்கும்பொழுது, பின்வரும் வினாக்கள் நமக்குள் எழுகின்றன. அவற்றைக் காண்போம். 1. மொழிநடை எளிமை என்பதற்கான அளவுகோல் என்ன? 2. சமுதாயத்தில் பல்வேறு நிலையில் உள்ளவர்களும் படித்துப் பயன்பெறும் இலக்கியம் என்பதை முழுமையாக நாம் அறிய இயலுமா? உணவுக்கே வழியில்லாத நிலையில் வாழும் மக்களும், படிக்கும் திறனற்ற மக்களும் சிறுகதை முதலான இலக்கியங்களைக் காண்பதும் படிப்பதும் இயலுமா?. உணவு, உடை, இருப்பிடம் முதலான அடிப்படை ஏந்துகளைக் கொண்டோரும் கல்வியறிவுடையோரும் தான்  இலக்கியங்களைப் படிக்க முன்வருவர் என்பது வெள்ளிடை. இந்நிலையில் பாடத்திட்டப் பகுதியில் இப்படி எழுதுவது பொருத்தமுடையதாகுமா என்பது எண்ணிப் பார்க்கத்தக்கது. 3. தனித்தமிழ் நடை சிறுகதைக்குக் கை கொடுக்காது என்பது எவ்வளவு அறியாமையுடைய கருத்து. தனித்தமிழ்த் தந்தை மறைமலையடிகள் எழுதிய சிறுகதைகளுக்கும் இக்கருத்து பொருந்துமா?.  தமிழ் என்பதே தனித்தமிழ் தான் என்பதை அறியாமல் சொல்லப்படும் இதுபோன்ற கருத்துக்களால்தான் உரைநடை இலக்கியங்களை எழுதுவோர் தமிழில் எழுத இயலாதவர்களாக இருந்தும் தமிழின் சிறந்த எழுத்தாளர்களாகக் கொண்டாடப்படுகின்றனர். இந்த இழிநிலை எப்போது மாறுமோ?.

தனித்தமிழ்நடை சிறுகதைக்குக் கைகொடுக்காது என்போர் கருத்துக்குச் சாட்டையடி கொடுக்கும் முறையில் தனித்தமிழ்ச் சிறுகதைகள் அமைந்திருப்பதைக் காண்போர் அறிவர். இக்கதைகளைக் காணும்போது அவை தனித்தமிழால் எழுதப்பட்டன என்றாலும், இயல்பான பழகிய நடையிலே இருப்பதுபோலவே இவை அமைந்துள்ளதைக் காணமுடிகின்றது. சான்று ஒன்று தருவோம்.

“அரசு சார்பு வழக்கறிஞர் எழுந்தார். “மாண்பு மிக்க நடுவர் அவர்களே! பெண் காவல் அதிகாரி புகழரசி மேல் பலவகையான குற்றச்சாற்றுகள் உள்ளன. அவற்றை அறிக்கையாகத் தருவதற்கு மேலும் சிறிது காலம் தேவை. எனவே அன்புகூர்ந்து இந்த வழக்கை ஒத்தி வைக்குமாறு பணிவுடன் வேண்டுகின்றேன்” என்று கேட்டுக் கொண்டார்” (க. தமிழமல்லன் 1997: 123). இப்பகுதியில் அறிய இயலாத சொற்களோ, தொடர்களோ இல்லை. புதிய சொற்கள் (அவை பழக்கமின்மையாலும், அறியாமையாலும் புதியனவாகத் தெரிகின்றன) இருந்தாலும், பொருள் மயக்கம் தருவனவாக இல்லையென்றே சொல்லலாம். மேலும் பிற மொழிச் சொற்கள் வருமிடங்களில் அவற்றுக்குரிய தமிழ்ச்சொற்களைத் தந்து பிற மொழிச் சொல்லைப் பிறைக்குறிப்பில் தருவதால் [காணி (ஸ்கேன்)] , கதை படிக்கும் இன்பத்தோடு புதிய தமிழ்ச்சொற்களை அறியும் அகராதி இன்பமும் தனித்தமிழ்ச் சிறுகதைகளில் கிடைக்கின்றது. இரட்டை இன்பம் தரும் தனித்தமிழ்ச் சிறுகதைகளைப் போற்றுவோம்.

 1. உருவம் சார்ந்த உத்திகள்

     சிறுகதைகளை அவற்றின் உருவம் சார்ந்து ஒரு பக்கக் கதைகள், சில பக்கங்களைக் கொண்டமைந்தவை, பல பக்கங்களைக் கொண்டமைந்தவை எனப் பகுக்கலாம். தனித்தமிழ்ச் சிறுகதைகளில் இவ்வகைக் கதைகள் பரவலாகக் காணப்படுகின்றன. இன்னும் கூடுதலாகப் பல வகைகள் இருப்பினும், காலம்கருதி இத்துடன் நிறைவு செய்கின்றேன்.

முடிப்புரை

சிறுகதை என்னும் இலக்கிய வகைமை, தமிழைப் பொருத்தவரை புதியதன்று. காலந்தோறும் வழங்கி வந்த கதைகள் நமக்குச் சுவடி வடிவில் கிடைக்காமையால் இவ்வகை மயக்கங்கள் நேருகின்றன எனலாம். மொழித்தூய்மைக் கருத்தாக்கம் தொல்காப்பியர் காலம் முதலே இருந்து வந்த போதினும், இன்னும் அவற்றின் தேவை குறைந்துவிடவில்லை என்பதை அறிய முடிகின்றது. தனித்தமிழ்ச் சிறுகதைகள், மொழிக்கலப்புடைய பிற கதைகளைக் காட்டிலும், பல வகைகளில் மேம்பட்டுள்ளன. மேலும், மொழிநடையைப் பொருத்தவரையில் தனித்தமிழ்ச் சிறுகதைகள் உயர்நிலையின என்பதைல் ஐயமில்லை. எனினும், கற்பனை, கதைப்பின்னல், ஈர்ப்புடைய சூழல்களைப் புனைதல் ஆகிய நிலைகளில் தனித்தமிழ்ச் சிறுகதைகள் இன்னும் மேம்பட்டால் பிற கதைகளைப் படிப்போரும் தனித்தமிழ்ச் சிறுகதைகளை விரும்பிப் படிப்பர் என்றே கூறலாம்.

துணைநூல்கள்

 1. அரவிந்தன்.மு.வை. 2008(இரண்டாம் பதிப்பு). உரையாசிரியர்கள். சென்னை: மணிவாசகர் பதிப்பகம்.
 2. இளங்குமரன். இரா.. 1991. தனித்தமிழ் இயக்கம். சென்னை: மணிவாசகர் பதிப்பகம்.
 3. உண்ணாமலை.வீ.. 1991. புதுக்கவிதையில் சமுதாயம். சிவகங்கை: செல்மா.
 4. சாமிநாதையர். உ.வே. (பதி.ஆ.). 1995 (மூன்றாம் பதிப்பு). நன்னூல் மூலமும் மயிலைநாதருரையும். சென்னை : உ.வே.சா. நூல்நிலையம்.
 5. சிவலிங்கனார். ஆ. (பதி.ஆ.). 1988. தொல்காப்பியம் உரைவளம் – சொல்லதிகாரம் – எச்சவியல். சென்னை: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்.
 6. தமிழ்ச்செல்வி.த. (பதி.ஆ.). 2014 செபுதம்பர். வெல்லும் தூயதமிழ் – இலக்கிய மாத இதழ் –  சிறுகதைச் சிறப்பிதழ்.  புதுச்சேரி: திரு இராமன் மறுதோன்றி அச்சகம்.
 7. தமிழ்ச்செல்வி.த. (பதி.ஆ.). 2015 செம்டம்பர். வெல்லும் தூயதமிழ் – இலக்கிய மாத இதழ் –  சிறுகதைச் சிறப்பிதழ். புதுச்சேரி: திரு இராமன் மறுதோன்றி அச்சகம்.
 8. தமிழ்ச்செல்வி.த. (பதி.ஆ.). 2016 அகுத்தோபர். வெல்லும் தூயதமிழ் – இலக்கிய மாத இதழ் –  சிறுகதைச் சிறப்பிதழ். புதுச்சேரி: திரு இராமன் மறுதோன்றி அச்சகம்.
 9. தமிழமல்லன். க.. 1978. தனித்தமிழ். புதுச்சேரி: பொ. கண்ணையன்.
 10. தமிழமல்லன். க.. 1997. மஞ்சளுக்கு வேலையில்லை. புதுச்சேரி: தனித்தமிழ்ப் பதிப்பகம்.
 11. தமிழமல்லன்.க. (தொகு.ஆ.). 1985. விருந்து (சிறுகதைகள்). புதுச்சேரி: தனித்தமிழ்க் கழகம்.
 12. தமிழமல்லன்.க.. 1992. வந்திடுவார் (சிறுகதைகள்). புதுச்சேரி: தனித்தமிழ்ப் பதிப்பகம்.
 13. திருமாறன். கு. 2003. தனித்தமிழியக்கம். சென்னை: தமிழ்மண் பதிப்பகம்.
 14. பியூலா மெர்சி.தா. எ.. 1974. இருபதில் சிறுகதைகள். நாகர்கோவில்: செயகுமாரி.
 15. மீனாட்சி முருகரத்தினம். 1976. கல்கியின் சிறுகதைக்கலை. மதுரை: சர்வோதய இலக்கியப் பண்ணை.
 16. வேங்கடராமன்.சு.. 1977. அகிலன் சிறுகதைகள் ஒரு திறனாய்வு. சென்னை: தமிழ்ப் புத்தகாலயம்.
 17. வேங்கடராமையா.கே.எம். முதலானோர் (பதி.ஆ.). 1996. தொல்காப்பிய மூலம் – பாடவேறுபாடுகள் – ஆழ்நோக்காய்வு. திருவனந்தபுரம் : பன்னாட்டுத் திராவிட மொழியியற் கழகம்.
 18. ஹேமமாலினி (க.ஆ.). 1987. முதல் கருத்தரங்கு தமிழ் இலக்கிய ஆய்வுக்கோவை. தஞ்சாவூர்: அனைந்திந்திய தமிழ் இலக்கியக் கழகம்.
 19. //tamil.thehindu.com/opinion/columns/சிறுகதையாற்றுப்படை/article7741927.ece நாள்:01.2017.
 20. //www.jeyamohan.in/336#.WHpcJdJ97hk நாள்:14.01.2017.
 21. //www.muthukamalam.com/essay/seminar/s2/p2.html நாள்:01.2017.
 22. //www.tamilvu.org/courses/degree/a041/a0414/html/a041451.htm நாள்:01.2017.
 23. //www.tamilvu.org/courses/degree/p203/p2033/html/p2033112.htm நாள்:01.2017.
 24. //www.tamilvu.org/courses/degree/p203/p2033/html/p2033113.htm நாள்: 30.06.2017.

முனைவர் .மணி,

துணைப்பேராசிரியர் – தமிழ் & இணைத் தேர்வாணையர்,

பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லூரி,

புதுச்சேரி – 605 003, பேச: 9443927141,

மின்னஞ்சல்: manikurunthogai@gmail.com