Download the Pdf

கல்வி நிலையில் மிக உச்சமான ஆராய்ச்சிப் படிப்பு பிஎச்.டி. ஆகும். ஒரு நாட்டு மக்களின் கல்வித் தரத்தை அளவிட மிக முதன்மையான கருவி இப்பட்டமாகும். இப்பட்டத்தை ஒருவர் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்புத் தேர்ச்சி பெற்றுத் தொடர்ந்து கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில் இடம்பெற்று,  பொதுக்கல்வியாக இருந்தால் மூன்றாண்டுகளிலும் தொழிற்கல்வியாக இருந்தால் நான்காண்டுகளிலும் இளநிலைப் பட்டம் பெற்றுத் தொடர்ந்து அதே பாடத்தில் இரண்டாண்டுகள் அல்லது மூன்று ஆண்டுகள் படித்து எம்.ஏ., எம்.எஸ்சி., எம்.காம்., எம்.டி., எம்.எஸ்., முதலான தகுதியை அடைந்தவரே பிஎச்.டி. பட்டத்திற்குச் சேரமுடியும் என்பது பொதுவிதி. பிஎச்.டி., பட்டத்தில் முழுநேர ஆய்வாளராகச் சேர்வதற்கு முன்பு, ஒருவர் பதினேழு முதல் பதினெட்டு ஆண்டுகள் படித்திருக்க வேண்டும். பிஎச்.டி., ஆய்விற்கு முன்பு எம்.ஃபில் என்ற இளநிலை ஆராய்ச்சிப் பட்டமும் இருக்கிறது. தொடர்ந்து பிஎச்.டி. பட்டம் பெறுவதற்காகக் குறைந்தது மூன்றாண்டுகள் முழுநேர ஆய்வாளராக ஒரு பல்கலைக்கழகத்தில் அல்லது பல்கலைக்கழக ஒப்புதல் பெற்ற முதுநிலைப் பட்டமும் ஆராய்ச்சியும் நிகழ்த்தும் கல்வி நிறுவனத்தில் ஒருவர் சேரலாம். சேருபவர் முன்பே எம்.ஃபில் பட்டம் பெற்றிருந்தால் அவர் மூன்றாண்டுக்குப் பதிலாக இரண்டாண்டுகள் முழுநேர ஆராய்ச்சியாளராக இருத்தல் வேண்டும். பெரும்பாலும் இந்த அடிப்படை நெறிகளில் 1970 வரை மிகக்கண்டிப்புக் காட்டப்பட்டது. எனவே, அக்காலங்களில் பிஎச்.டி. பட்டம் பெற்றவர்கள் நல்ல தகுதியுடையவர்களாக இருந்தனர். பலவேறு அடிப்படை ஆராய்ச்சிகளை நிகழ்த்தினர். இந்தியாவிலும் அயல்நாடுகளிலும் உயர்நிலை வேலை பெற்றதுடன் ஆராய்ச்சி நிறுவனங்களில் தலைமைப் பொறுப்பையும் சிலர் எய்தினர். அவர்கள் வழங்கிய ஆராய்ச்சிக் கட்டுரைகள், ஆராய்ச்சி நூல்கள் மிகத் தரமுடையனவாக இருந்தன. அவர்களது படைப்புகள் கல்வியாளர்களுக்கும் மக்களுக்கும் தொடர் ஆராய்ச்சிக்கும் மிகுந்த பயனுடையனவாக இருந்தன.

அண்மைக்காலத்தில் பிஎச்.டி. ஆராய்ச்சிப் பட்டத் தரத்தில் பெரும் அதிர்ச்சியைக் கல்வியாளர்களும் ஆட்களைப் பணிக்குத் தெரிவு செய்யும் அதிகாரிகளும், அலுவலர்களும் நேரில் கண்டனர். தம்மிடம் வேலைக்காக வரும் பிஎச்.டி. ஆய்வாளரை நேர்காணல் காணும்போது அவ்வாய்வாளர்கள் அப்பட்டத்திற்குரிய தகுதியைப் பெற்றிருக்கவில்லை என்பது நிரூபணமாயிற்று. கிட்டத்தட்ட இந்தியாவில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகப் பிஎச்.டி. பட்டதாரிகள் நிலைமை இவ்வாறே இருந்தது. பழைய ஆய்வு முடிவுகளை  அசைக்கும் வண்ணம் ஆராய்ச்சிக் கட்டுரைகளையோ, நூல்களையோ எழுதும் வல்லமையும் அவர்களிடம் இல்லை என்பது தெள்ளத்தெளிவாகத் தெரிந்தது. பலவேறு காரணங்களாலும் சூழல்களாலும் பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் பணியாற்றும் வேலை பெற்ற பிஎச்.டி. பட்டதாரிகள் பெரும்பாலோர் தகுதி குறைந்தவராக இருந்தமையால் உயர்கல்வித் தரமும் மிகத்தாழ்வுற்றது. ஆசிய அளவிலும், உலக அளவிலும் தரப்படுத்தும் பலவேறு அனைத்துலக அமைப்புகளின் தரப்பட்டியலில் நம்நாட்டுப் பல்கலைக்கழகங்கள் எதுவுமே இடம்பெறாத பரிதாபநிலை தோன்றியது. ஆசிய நாடுகளில் ஜப்பான், சீனா, சிங்கப்பூர் முதலான ஒருசில நாட்டுப் பல்கலைக்கழகங்களே அனைத்துலகத் தர வரிசையில் இடம்பெற்றன.

தர வரிசையில் இடம்பெறுவதா வேண்டாமா என்பது முதன்மையில்லை. கல்வி நிறுவனங்களை நம்பி நம்இளைஞர்களை ஒப்படைத்திருக்கிறோமே என்பதுதான் நம் கவலை. பல்கலைக்கழகம் வழங்கும் பிஎச்.டி. பட்டம் நீர்த்துப் போகக் காரணம் எது? காரணர்கள்யார்? என்பன கண்டறியப் படவேண்டும். இது வெறும் கல்வி நிறுவனம் சார்ந்த சர்ச்சை அன்று. ஒரு சமுதாயம் சார்ந்த சர்ச்சை. பொதுமக்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் செலுத்தும் கோடிக்கணக்கான ரூபாயை உதவித்தொகையாகவும் சம்பளமாகவும் பெற்றுக் கொள்வோர் எந்த அளவு சமுதாயத்திற்கு மறுபங்களிப்புச் செய்கின்றனர் என்பது மிக முக்கியம். அதனைப் பொறுத்துத்தான் நிகழ்காலச் சமுதாயமும் அதனை நம்பி வருங்காலச் சமுதாயமும் மலரமுடியும்; வளர முடியும்.

இதுபற்றிய கவலை தற்போதைய மத்திய அரசுக்கு இருக்கிறது என்பதைப் புதிய மனிதவள அமைச்சர் கபில்சிபல் செயல்களும் அறிவிப்புகளும் தெளிவுபடுத்துகின்றன. 7 – 9 – 2009 செய்தியின் படி, மத்திய அரசு, யு.ஜி.சி., ஏஐசிடியு (AICTE), தொலைநிலைக் கல்விக்குழு (Distance Education Council), ஆசிரியர் கல்விக்கான தேர்வுக்குழு ஆகியவற்றிற்கு மேலாக, தேசிய உயர்கல்வி, உயர் ஆராய்ச்சி ஆலோசனைக்குழு (National Commission for the Higher Education and Research) என்ற ஒன்றை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மத்திய அரசிற்கு அறிக்கை வழங்கிய யஸ்பால் கமிட்டி அறிக்கையும் நம் உயர்கல்வியில் உள்ள ஓட்டையை மிகத் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டியுள்ளது. பிஎச்.டி. பட்ட வீழ்ச்சிக்கு முதல் பெரும்காரணம் பல்கலைக்கழக மானியக்குழு (UGC) என்ற தில்லியில் உள்ள அமைப்பாகும். பிஎச்.டி. பட்டப் படிப்புத் தொடர்பாக ஒவ்வோர் அணுவும் யுஜிசியின் ஆணை இன்றி அசையமுடியாது.

உரிய நெறியாளரோடு ஆய்வாளர் நேரில் பழகிப் படித்து ஒவ்வொரு பக்கமாக எழுத வேண்டிய எம்.ஃபில், பிஎச்.டி. ஆய்வுப் பட்டத்தை அஞ்சல் வழி வழங்க நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களுக்கு ஒப்புதல் வழங்கியது யுஜிசிதான். பல்கலைக்கழகத் துறைகளில் மட்டும் இருந்த ஆய்வு வசதியை இட்டத்திற்கு இணைப்புப் பெற்ற கல்லூரிகளுக்கு வாரி வழங்கியதும் யுஜிசிதான். கல்லூரிப் பல்கலைக்கழக ஆசிரியர்கள் மட்டும் ஆய்வு செய்யலாம் என்று இருந்தநிலையை மாற்றி, பள்ளிகளில் உள்ளோரும் பகுதிநேர ஆய்வு செய்யலாம் என்ற நெகிழ்ச்சியையும், அதனைத் தொடர்ந்து பள்ளிகளில் இல்லாதவரும் செய்யலாம் என்ற நெகிழ்ச்சியையும் பல்கலைக்கழகங்கள் வாரி வழங்க வழி செய்தது யார்?

ஆய்வு நிறுவனத்தில் சேர்ந்து முழுநேர ஆய்வு செய்யும் வரையறுத்த நெறிமுறை இருக்கிற பொழுதே வெளியில் உள்ளவர்கள் ஆராய்ச்சியாளர்களுக்கு எழுதித்தருகிறார்கள் என்ற குற்றச்சாட்டு இருந்தது. இத்தகு ‘பேய் எழுத்து முறை’ (Ghost Writing) பின்னாளில் பகுதிநேர ஆய்வுகளும், இன்ன பிற நிகழ்ச்சிகளும், அஞ்சல் வழி ஆய்வுகளும் அறிமுகமானபோது பேராட்சி செய்யத் தொடங்கியது. ஆய்வாளர் தம் ஆய்வைத் தாமேதான் செய்துள்ளாரா என்று அறிவதற்கு அமைக்கப்பட்ட வாய்மொழித் தேர்வு வெறும் சடங்காகிப் போனது. அனேகமாக இந்தியா முழுதும் வாய்மொழித் தேர்வினால் நிறுத்தப்பட்ட பிஎச்.டி. ஆய்வாளர்கள் யாரும் இருக்கவே முடியாது. ஒன்பது என்ற எண்ணிற்கு அடுத்தது பத்து என்பது போல வாய்மொழித் தேர்வு வெற்றுச் சடங்காக அமைந்துவிட்டது.

எம்.ஃபில் ஆராய்ச்சிப் பட்டத்தைத் தொடக்க நிலையில் அறிமுகப்படுத்திய பொழுதுவாய்மொழித் தேர்வுகட்டாயமாக இருந்தது. சில பல்கலைக்கழகங்களில் ஆய்வேடு திருத்துவதில் ஆசிரியர்களுக்குக் கூடுதல் பணிச்சுமை இருந்ததால் ஆய்வேடு ஒரு பாடத்தாளாக மாற்றப்பட்டது. விளைவு ஆராய்ச்சிப் பட்டம் ஆய்வேடு இல்லாமலும், வாய்மொழித் தேர்வு இல்லாமலும் நடந்தேறத் தொடங்கியது.

இச்சூழலில் சில ஆண்டுகளுக்கு முன்பு பல்கலைக்கழக மானியக்குழு, கல்லூரியில் பட்டவகுப்பு அளவில் பாடம் எடுக்கும் ஆசிரியர்களின் குறைந்த பட்சத் தகுதி எம்.ஃபில் என்று அறிவித்தது. அத்தகுதியைக் குறிப்பிட்ட காலத்திற்குள் எய்த வேண்டும் என்று அறிவித்தது. விளைவாக, கிட்டத்தட்ட அனைத்துப் பல்கலைக்கழகங்களும் எம்.ஃபில் படிப்பைப் பகுதிநேரப் படிப்பாகவும் அஞ்சல் வழிப் படிப்பாகவும் அறிவித்தன. ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் ஆயிரக்கணக்கானோர் இணைந்தனர். எம்.ஏ., எம்.எஸ்சி., எம்.காம். முதலான வகுப்புகளுக்குக் கல்லூரி, பல்கலைக்கழக அளவில் பாடம் எடுத்துக் கொண்டிருக்கும் ஆசிரியர் பிஎச்.டி. பட்டம் பெற்றிருந்தால் அவர் ஒரு சிலருக்கு எம்.ஃபில் பட்டத்திற்கும் பிஎச்.டி. பட்டத்திற்கும் வழிகாட்ட அனுமதிக்கப்பட்டிருந்தனர். மேற்கண்ட குறித்த காலத்திற்குள் எம்.ஃபில் பட்டம் பெறவேண்டும் என்று அஞ்சல் வழியில் பாடம் தொடங்கிய பல்கலைக்கழகங்கள் ஓர் ஆசிரியன் கீழ் நாற்பது ஐம்பது எம்.ஃபில் ஆய்வாளர்கள், பத்து இருபது பிஎச்.டி. ஆய்வாளர்களை ஆய்வு செய்ய அனுமதித்தது. விளைவு என்ன ஆயிற்று தெரியுமா? நெறியாளர்கள் ஆய்வாளர்கள் எழுதிவரும் ஆய்வேட்டைப் படித்துப் பார்க்க நேரமே இருப்பதில்லை. படித்துப் பார்க்காமலே கையெழுத்திட்டு விடுவர்.

எம்.ஃபில், பிஎச்.டி. ஆய்வு நிகழுமிடங்களைப் பற்றிய செய்திகள் இவ்வாறு இருக்க, அவற்றை மதிப்பீடு செய்யும் தேர்வாளர்கள் எவ்வாறு இருந்தனர், இருக்கின்றனர் என்பது மிகப் பெரிய சோகப் புராணமாகும். ஒரே தேர்வாளருக்குப் பத்து இருபது ஆய்வேடுகள் வந்து சேரும். அவை அனைத்தையும் அவர் படித்துப் பார்க்கிறாரா என்பது ஐயமே! ஒரு சிலர் படித்துப் பார்த்து மதிப்பீடு செய்திருக்கலாம். பெரும்பாலோர் வரிவரியாகப் படித்துப் பார்க்காமல் பட்டம் வழங்கலாம் என்று தம் தேர்வாளர் அறிக்கையைப் பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பிவிடுவர். இங்கும் தேர்வாளர்கள் சிலர் இந்தியா முழுதும் பணம் வாங்கிக் கொண்டு அனுப்புகிறார்கள் என்ற குற்றச்சாட்டுப் பல இடங்களில் எழுந்து நிலை பெற்றிருக்கிறது. தேர்வாளர்களிடமிருந்து அறிக்கைகளைப் பெற்று வாய்மொழித் தேர்வு என்ற சடங்கை நடத்துவது நெறியாளராவார். வாய்மொழித் தேர்வு எனும் சடங்கை முடித்து உரிய அறிக்கையைப் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பும் வரை ஆய்வாளரின் குடுமி நெறியாளர் கையில்தான்.

பிஎச்.டி. பொது வாய்மொழித்தேர்வை நடத்தும் தேர்வாளர் வெளியே இருந்து அழைக்கப்பட வேண்டும் என்பது சில பல்கலைக்கழகங்கள், நெறியாளர்கள் இதைப் போற்றுவதில்லை. இதனைப் பற்றிப் பலகலைக்கழகமும் அக்கறை கொள்வதில்லை. கிட்டத்தட்ட பிஎச்.டி. தொடர்பான இரகசிய முறை தற்போது முற்றும் ஒழிந்துவிட்டது. முன்பு நெறியாளருக்கும் உரிய தேர்வாளர் யார் யார் என்பது தெரியாது. ஆய்வேடு வழங்கிய ஆய்வாளருக்கும் தெரியாது. துணைவேந்தருக்கு மட்டுமே தெரியும். ஆனால் இன்று அனைவருக்குமே தெரியும். அனைவருக்கும் தெரியும் என்பதால் உள்ளே நடக்கும் பரிவர்த்தனைகளைப் பற்றி விவரித்துச் சொல்ல வேண்டாம். வேடிக்கை என்ன என்றால், இந்தப் புராணம் அனைத்தும் தற்போதைய பல்கலைக்கழக நிர்வாகங்களுக்கும் யுஜிசி நிர்வாகத்திற்கும் தெரியும். தெரிந்த பின்பும் உயர்கல்வி தாழ்ந்து கிடக்கிறது என்பதை யுஜிசி வாரம் விட்டு வாரம் வெளியிடும் அறிக்கைகள் உயர்கல்வித் துறையில் பெரும் குழப்பத்தை உண்டாக்கி உள்ளன.

இந்தியப் பல்கலைக்கழகங்கள் வழங்கும் பிஎச்.டி.யைக் கல்லூரி, பல்கலைக்கழக ஆசிரியத் தகுதிக்கு அடிப்படையாகக் கொள்ள இயலாத சூழலில்தான் நெட், ஸ்லெட் (NET, SLET) எனும் தேர்வுகள் தேசிய அளவில் அறிமுகப்படுத்தப்பட்டன. இத்தேர்வில் வெற்றி பெறுவோர்தான் கல்லூரி, பல்கலைக்கழகங்களுக்கு ஆசிரியராக வரமுடியும் என்று அறிவிக்கப்பட்டது. தற்போது இவ்வறிவிப்பு இருந்தாலும் போதும் என்று மாற்றிக் கொண்டிருக்கிறது. பின்னணி என்ன என்று தெரியவில்லை.

உயர்கல்வித் துறையின் மிகப்பெரிய அதிகார அமைப்பான யுஜிசி கடந்த முப்பதாண்டுகளாக வழிதவறித் தடுமாறிக் கொண்டிருக்கிறது என்பது உண்மையிலும் உண்மை. இதற்குக் காரணம் இந்த அமைப்பில் கடந்த  முப்பதாண்டுகளாக இடம்பெற்றிருந்த உறுப்பினர்கள், தலைமை வகித்த தலைவர்கள் ஆகியோரும் காரணர் என்றே சொல்லவேண்டும். இவர்களின் ஒப்புதலின்றி யுஜிசி தன் விருப்பத்துக்கு ஆணைகளை நினைத்தபடி மாற்றிக் கொண்டிருக்க முடியாது.

நம் எம்.ஃபில், பிஎச்.டி. ஆய்வுப் பட்டங்களைச் சரியான தரம் உடையனவாக மாற்றமுடியாதா? முடியும். உறுதியாக முடியும். முதலாவது, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளைப் பார்த்துக் காப்பியடித்து நம் இந்தியக் கல்வி முறையை இன்றைக்கு ஒன்று, நாளைக்கு ஒன்று மாற்றுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். இந்தியாவின் சுயசார்பான கல்வி முறையை முதன்முதலாகச் சிந்தித்து வடிவமைத்தவர் அண்ணல் காந்தியடிகளாவர். ஆசியாவில், ஏன் உலகிலேயே முன்னணி நாடாக முதனிலைக்குப் படியேறிக் கொண்டிருக்கும் சீனக் கல்வி அமைப்பைத் தீர்மானிப்பது அமெரிக்க, ஐரோப்பிய மாடல்கள் அல்ல. தங்கள் தேவைக்குத் தக தங்கள் மூளையைப் பயன்படுத்தி சீனா, தொடக்கக் கல்வி முதல் ஆய்வுக் கல்வி வரை வடிவமைக்கிறது. நாமும் இந்திய இழைமம் பிழையாமல் வடிவமைக்க முடியும், ஒருசில யோசனைகள் வருமாறு:

  1. எம்.ஃபில், பிஎச்.டி. அஞ்சல் வழி நடத்துதல் கூடவே கூடாது.
  2. மேற்கண்ட ஆராய்ச்சிப் பட்ட வகுப்புகளைப் பகுதி நேரப் பாடமாகவும் வழங்குதலை நிறுத்த வேண்டும். ஆராய்ச்சிப் பட்டத்தில் சேர விரும்புவோரை முழுநேர ஆய்வாளராகச் சேர்த்து, சேர்ந்து பயிலும் அக்காலத்திற்கு அவர் கல்வி நிறுவனத்தில் பணியாற்றுபவராயின் உரிய ஊதியத்தைத் தவறாமல் வழங்குதல்.
  3. மேற்கண்ட பாட வகுப்புகளில் சேர விரும்புவோருக்கு ஆராய்ச்சி விருப்பம் மட்டுமின்றி அதற்கான ஆர்வம் (Attitude), இருக்கிறதா என்பதைக் கலவி நிர்வாகம் சோதித்து அறிந்த பின்புதான் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
  4. ஆய்வாளர்கள் வழங்கும் ஆராய்ச்சிகள் கணினி வழித் தட்டச்சிட்டு வழங்கப்பெறுகின்றன. வாய்மொழித் தேர்வு முடிந்தபின் அவை தேர்வாணையர் அலுவலக குப்பையில் சேர்க்கப் பெறுகின்றன. மறுதலையாக இன்றைய கணினி யுகத்தில் அதனை நூலாகவே அச்சிட்டு வழங்க அனுமதிக்கலாம். நூற்றுக்கணக்கான பிரதிகளை ஆய்வாளர் அச்சிடவும் அனுமதிக்கலாம். உரிய தேர்துவாளர்கள் மட்டுமின்றி ஏனையோரும் அவர்தம் ஆய்வேட்டைப் படித்து வாய்மொழித் தேர்வுக்கு வர விருப்பமிருந்தால் ஏற்கலாம். இம்முறையால் மக்கள் வரிப்பணத்திலிருந்து செய்யப்படும் செலவால் உருவாகும் ஆய்வேடுகள் மக்களின் வாழ்வு ஆதாரத்துக்காக ஆய்வாளர்களால் திருப்பி அளிக்கப்பெறுகின்றன.
  5. சாதி, மத வேறுபாடு இன்றி கல்லூரி, பல்கலைக்கழகங்களில் ஆசிரியராக இடம்பெறக் குறைந்தபட்ச தகுதி பிஎச்.டி. என்பதில் நெகிழ்வே இருத்தல் கூடாது.
  6. சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் வழங்கப்பட்டது போலப் பிஎச்.டி. பட்டம்பெற்றவருக்கு மாதம் நூறு ரூபாய் சிறப்பு ஊதியம் நல்கப்பெற்றது. அதனைத் தொடர்வதில் தவறில்லை. அதனுடன் கூடக் கல்லூரி, பல்கலைக்கழக ஆசிரியர்கள் அனைத்துலகத் தரம் வாய்ந்த இதழ்களில் சிறந்த ஆராய்ச்சிக் கட்டுரைகளை, புதிய கண்டுபிடிப்புகளை வழங்குவார்களேயானால் அவர்களுக்குச் சிறப்பூதியம் வழங்குவது பற்றியும் நாம் சிந்திக்க வேண்டும்.
  7. ஆங்கிலத்தில் வழங்கப்படும் ஆய்வேடுகளுக்குத் தமிழில் சுருக்கமும் சேர்த்து வழங்குமாறு ஆய்வாளர்கள் பணிக்கப்பட வேண்டும்.
  8. ஆய்வேடுகளை வாய்மொழித் தேர்வின்போது மட்டும் ஒருசில நாட்களுக்குப் பொது நூலகத்தில் வைப்பது மட்டும் போதாது. ஆய்வேடு வழங்கிய நாளிலிருந்தே அவ்வாய்வேடு பொது நூலகத்தில் அனைவர் பார்வைக்கும் வந்துவிடுதல் வேண்டும்.
  9. பிஎச்.டி. ஆய்வேட்டைத் தேர்வ செய்யும் தேர்வாளர் பெயர்கள், வாய்மொழித் தேர்வாளர் பெயர், மற்றவர் அறியாதவாறு மந்தணம் காக்கப் பெறவேண்டும்.
  10. மூன்று தேர்வாளர்களில் ஒருவர் ஆய்வேட்டை நிராகரித்து இருந்தாலும் ஆய்வேடு நிராகரிக்கப் பெறவேண்டும்.

முனைவர் க.ப.அறவாணன்

மேனாள் துணைவேந்தர்

மனோண்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்

திருநெல்வேலி