மெய்ப்பாடு என்ற தமிழ் இலக்கியக் கோட்பாடு அதன் விளக்கங்கள் அனைத்தையும் ஒருசேரக்கொண்டு ஆயும்போது ஓர் உலக இலக்கியப் பொதுமைக்கோட்பாடாகக் காட்சியளிக்கிறது.

இலக்கியம் வாய்மொழியாக இருந்தபோது ஆடலுடன் கூடிய பாடலாக இருந்தது. கூத்துக்களில் இருந்த முக உடலசைவுகள், சைகை ஆகியன உணர்ச்சியை வெளிப்படுத்திக் காட்டின. இலக்கியத்தில் சொற்களை வைத்துத்தான் உணர்ச்சியை வெளிப்படுத்த வேண்டியதாயிற்று. இவ்வாறு தோன்றிய மெய்ப்பாட்டுச் சொற்களின் விளக்கம் தொல்காப்பியர் காலத்திலிருந்தே பெறப்படுவதை அறியலாம். அகத்திற்கும் புறத்திற்கும் பொதுவான மெய்ப்பாடுகள் மெய்ப்பாட்டியலின் முதல் 12 நூற்பாக்களால் கூறப்படுகின்றன.

மெய்ப்பாடு

மெய்ப்பாடு என்ற சொல் மெய்யின்கண் தோன்றும் அவிநயம் எனப்பொருள் கூறப்படுகிறது. மெய்யின்கண் தோன்றுதலின் மெய்ப்பாடாயிற்று என்பார் இளம்பூரணர் (பொருள்.மெய்ப்பாட்டியல்.3, இளம்.,). இவரே  ‘இன்சுவை என்பது காணப்படுபொருளாற் காண்போரகத்தின் வருவதோர் விகாரம்’ (மு.நூ.மெய்ப்.1, இளம்.,) எனவும் கூறுகிறார். இக்கூற்றுகளால் உலகியலிலிருந்து கூத்துக்கலை வளர்வது நமக்குப் புலனாக்குகிறது.  பேராசிரியர், ‘சுவைப்பொருளுஞ் சுவையுணர்வுங் குறிப்பும் விறலுமென நான்காயின’ எனப் பகுக்கும்போது மெய்ப்பாடு கூத்தினுள் வெளிப்படும் முறையாகக் கொள்ளப்படுகிறது  (தொல்.பொருள்.மெய்ப்.1, பேரா.,). எனவே, மெய் என்பது பொருட்பிழம்பு; பாடு என்பது தோன்றுவது.

கவிதையானது தான் மெய்யாகிய பொருட்பிழம்பைத் தோற்றுவிக்கிறது என்பதாகும். மேலும் விளக்குமேயானால் சொல்ல வந்ததை அப்படியே கண்ணால் கண்டதுபோல், காதால்கேட்டதுபோல் உருவாக்கிக் கண்முன்னர் நிறுத்துவதே மெய்ப்பாடு. இவற்றைச் சங்க இலக்கியங்களில் நன்கு உணரலாம்.

மெய்ப்பாடு இலக்கியவுத்தி

மெய்ப்பாடு என்பது உடம்பில் தோன்றும் அசைவுகளே நினைவுக்கு வருவதால் அது நாடகத் தொடர்புடையது.  தொல்காப்பியர் தாம் கூறும் மெய்ப்பாடு இலக்கியத்திற்கே உரியது எனச் சுட்டுகிறார்.

உய்த்துணர் வின்றித் தலைவரு பொருண்மையின்

மெய்ப்பட முடிப்பது மெய்ப்பா டாகும்        (தொல்.பொ.செய்யுளி.196)

ஒன்றைப்பற்றி ஆராயாமல் கூறியவுடனேயே அதன்பொருளை மெய்ப்பாடு தோன்ற முடிப்பது மெய்ப்பாடாகும். இளம்பூரணர்,  ‘செய்யுட் செய்வார் மெய்ப்பாடு தோன்றச்செய்தல் வேண்டுமென்பது கருத்து’ (தொல்.இளம்.செய்யுளி.196) எனவும்  ‘இவ்விலக்கணங் கூத்தினுட் பயன்படல் உண்டாதலின் ஈண்டு வேண்டாவெனின், ஈண்டுஞ் செய்யுட் செய்யுங்காற் சுவைபடச் செய்யவேண்டுதலின் ஈண்டுங் கூறவேண்டுமென்க’ (மு.நூ.மெய்ப்.3இளம்.,) எனவும் சுட்டிச்செல்கிறார்.

மெய்ப்பாடு உணரப்படுதல்

தொல்காப்பியர் மெய்ப்பாட்டியலில் தலைவன் தலைவியிடையே இருக்கவேண்டிய ஒப்புமைகளையும் இருக்கக்கூடாத பண்புகளையும் பட்டியலிடுகிறார்.

கண்ணினும் செவியினும் திண்ணிதின் உணரும்

       உணர்வுடை மாந்தர்க்கு அல்லது தெரியின்

       நன்னயப் பொருள்கோள் எண்ணருங் குரைத்தே

(தொல்.பொருள்.மெய்ப்.27இளம்.,)

என்னும் மெய்ப்பாட்டியல் இறுதி நூற்பாவில் படைப்பவனோடு ஒன்றுபட்டுக் கலையை நுகரவேண்டும் என்ற கருத்தை அழுத்தமாகக் கூறுகிறார் தொல்காப்பியர். ‘நன்னயப் பொருள்கோள் எண்ணருங் குரைத்தே’ என்று மெய்ப்பாட்டைச் சுட்டுகிறார். செய்யுளைப் பொறுத்தவரை மெய்ப்பாடென்பது நல்லநயமான பொருளைக் கொள்ளுதலே. மாந்தர்கள் மெய்ப்பாட்டின்வழி மற்றொருவர் தம் உளக்கருத்தை அறிவதென்பது ஆகும்.

பேராசிரியர், செய்யுளியல் முதல் நூற்பாவுரையில், ‘மெய்ப்பாடென்பது சொற்கேட்டார்க்குப் பொருள் கண்கூடாதல்’ என உரை கூறுவார். நச்சினார்க்கினியர், மெய்ப்பாடென்றது சொற்கேட்டோர்க்குப் பொருள்கட் புலனாதலை (தொல்.பொருள்.செய்யுளி.1, நச்.,) என்றே குறிப்பிடுகிறார். தண்டியலங்காரம், ‘மெய்ப்பாடாவது நேராகக் கண்டதுபோலத் தோன்றும் கருத்து’ எனக் குறிப்பிடுகிறது.

உய்த்துணர்வு இன்றித் தலைவரும் பொருளான்

       மெய்ப்பட முடிப்பது மெய்ப் பாடாகும்   (தொல்.செய்யுளி.204)

       எண்வகை இயல்நெறி பிழையா தாகி

       முன்னுறக் கிளந்த முடிவினது அதுவே   (தொல்.செய்யுளி.205)

என்பது தொல்காப்பியம்.

இளம்பூரணர், ‘யாதானும் ஒன்றைக் கூறியவழி அதன்கண் பொருண்மையை விசாரித்து உணர்தலன்றி அவ்விடத்துவரும் பொருண்மையானே மெய்ப்பாடு தோன்ற முடிப்பது மெய்ப்பாடு என்னும் உறுப்பாம் என்றவாறு’ என்பார். பேராசிரியர், ‘உய்த்துணர்ச்சி யின்றி செய்யுளிடத்து வந்த சொல்லப்படும் பொருள்தானே வெளிப்பட்டாங்குக் கண்ணீரரும்பல், மெய்சிலிர்த்தல் முதலாகிய சத்துவம் படுமாற்றான் வெளிப்படச் செய்வது மெய்ப்பாடென்னும் உறுப்பாம் என்றவாறு’ என உரைப்பார்.

செய்யுளியல் முதல் நூற்பா, செய்யுளுறுப்புக்களாகக் கூறும் 34 உறுப்புக்களையும் வரிசைப்படுத்தும்போது மெய்ப்பாட்டை இருபதாவது உறுப்பாகக் கூறுகிறது. அதாவது,

பயனே மெய்ப்பாடு எச்சவகை எனாஅ (தொல்.செய்யுளி.1, வரி.7)

என்பதில் பயன், கூற்றெச்சம், குறிப்பெச்சம் என்பன பாடலில் பொருள்கொள்ளும் முறை பற்றியது. மெய்ப்பாடும் பாட்டுப்பொருளை உணர்வதைப் பற்றியது என்ற ஐயம் உண்டாகிறது.

மெய்ப்பாட்டினை நாடக மெய்ப்பாடு, இலக்கிய மெய்ப்பாடு என இருபிரிவாகப் பிரிக்கலாம். இலக்கிய மெய்ப்பாடு என்பது பொருட்பாடாகும். அதாவது சொல்லப்படும் பொருள் தானே வெளிப்படுவது. சொல் கேட்போருக்குப் பொருள் கண்கூடாக அறிவது. இது தமிழ் இலக்கியத்தில் பெரிதும் அகத்திணையைச் சுட்டியே உணரப்படும். ஆகவே கவிதையில் மெய்ப்பாடு தானே வெளிப்படுத்துவதாகும்.

கவிதையின் சொல், தொடரைக் கண்டதும், கேட்டதும் அதன்பொருள் மெய்ப்பாட்டை உணர்த்துவதாக அமையும்.

தொல்காப்பிய மூலத்தாலும் உரை விளக்கங்களாலும் பெற்ற மெய்ப்பாட்டுக் கோட்பாட்டைக் கீழ்வருமாறு பகுக்கலாம் என்பார் தமிழண்ணல். அவை,

 1. செய்யுட் செய்வார் மெய்ப்பாடு தோன்றச்செய்தல்
 2. செய்யுளைப் படித்ததுமே மெய்ப்பாடு தோன்றுதல்
 3. பாடலின் கருத்து, உணர்வு உடனே மனத்திற்கு ஆகுதல்
 4. கண்ணீரரும்பல், மெய்மயிர்சிலிர்த்தல் முதலாகிய சத்துவம் தோன்றுமாற்றால் வெளிப்படச்செய்தல்
 5. சொல் கேட்டார்க்குப் பொருள் கண்கூடாதல்
 6. நோக்கு உறுப்பினால் உணர்ந்த பொருட்பிழம்பினைக் காட்டுதல் (ஒவ்வொரு பாக்களையும் மறித்து நோக்குவதால் அதன் அடைமொழி முதல் தொடர்நிலை வரை ஒவ்வோர் உறுப்பும் நன்கு உணரப்படுகின்றன. அதனால் பாடலின் கருத்து, பொருட் பிழம்பாகப் படிப்பவர் மனத்தில் தோன்றுகிறது).

நாடகத்தில் காட்சி ஒன்றில் நடிப்பவரிடத்தில் மெய்ப்பாடுகள் தோன்றுவதால் காண்பவரிடத்திலும் அவ்வுணர்வுகள் தோன்றும்.  கவிதையைப் படிக்கும்போது அதில்வரும் செய்தி கண்ணெதிரே தோன்றுமாறு இருக்குமேயானால் படிப்பவரிடத்தில் மெய்ப்பாடு தோன்றும்.

ஒரு பாடலின் சிறு அடைமொழி முதல் அதன் முழுப்பொருள்வரை வடிவமும் பொருளும் ஒருசேரக்கொண்டு நோக்கி உணர்வார்க்கு அப்பாடலின் பொருட்பிழம்பு (image) கண்ணெதிரே தோன்றும். அவ்வாறு காட்டப்பெறுவதே மெய்ப்பாடாகும்.

யாழ்ப்பாணம் சி.கணேசையர் தரும் விளக்கம்:- ‘இவள்மேனி அணைபோலும்; இது பரிசத்தால் அறிந்து சுவைத்தது.  இக்கனி அமிழ்து போலும்; இது நாவால் உணர்ந்து சுவைத்தது.  இவள் மேனி மாந்தளிர் போலும்; இது கண்ணாலுணர்ந்து சுவைத்தது. இவள் கூந்தல் பூப்போலும் நாற்றமுடையது; இது மூக்காலுணர்ந்து சுவைத்தது. இவள் மொழி யாழிசை போலும் இனிமையுடையது; இது செவியாலுணர்ந்து சுவைத்தது. இவ்வாறு மெய்ப்பாடு எனும் பொருளை உணர்தற்கு ஐம்புலனுணர்வுதான் மிக முக்கியமாகும்.

இனித் தொல்காப்பியர் கூறும் மெய்ப்பாடுகளைக் காணலாம்.

நகையே யழுகை இளிவரன் மருட்கை

யச்சம் பெருமிதம் வெகுளி யுவகையென்

றப்பா லெட்டே மெய்ப்பா டென்ப          (தொல்.மெய்ப்.3)

நகை: எள்ளல் (இகழ்தல்), இளமை, பேதைமை (அறிவின்மை), மடம் (ஒன்றை வேறொன்றாகத் திரியக்கோடல்)

அழுகை (அவலம்): இழிவு (இழிவுபடுத்துதல்), இழவு (உயிரையோ பொருளையோ இழத்தல்), அசைவு (முன்னிருந்த சிறப்புக் குன்றித் தளர்தல்), வறுமை

இளிவரல் (பிறர்முன் இழிவுக்கு இலக்காகுதல்): மூப்பு, பிணி, வருத்தம், மென்மை (பிறர்முன்மெலியராதல்)

மருட்கை (வியப்பு): புதுமை (முன்பு இல்லாதது), பெருமை (முன்பு காணாத அளவு பெரியதாதல்), சிறுமை (மிகவும் நுண்ணியன), ஆக்கம் (ஒன்று மற்றொன்றாதல் அல்லது ஒன்றன் வளர்ச்சி, பரிணாமம்)

அச்சம்: அணங்கு (தெய்வத்தால்), விலங்கு, கள்வர், தம்இறை அல்லது தம்தலைவராயினார் (தந்தை, ஆசிரியர்)

பெருமிதம்:   கல்வி, தறுகண்மை (போர்,வீரம்), புகழ், கொடை

வெகுளி: உறுப்பறை (உறுப்புக்களை வெட்டுதலால்), குடிகோள் (குடிமக்களை நலிதலால்), அலை (அலைத்து வருதலால்), கொலை

உவகை: செல்வம் உடைமை, புலன் (அறிவுடைமை), புணர்வு (காதல் கூட்டத்தால்), இன்ப விளையாட்டு (ஆடல், பாடலால்)

இவையாவும் உலகியலில் மிக இயல்பாகத் தோன்றும் மெய்ப்பாடுகளாகக் கருதப்படுகின்றன.

தமிழ் அகஇலக்கியமும் புறஇலக்கியமும் நாடகப் பண்புடையன. அதனால் தொல்காப்பியர்,

நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்

       பாடல் சான்ற புலனெறி வழக்கம்   (தொல்.பொருள்.அகத்.53)

என்பார்.

தொல்காப்பியம் தவிர பிற இலக்கணங்களில் மெய்ப்பாடு குறித்துப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. பின்வருமாறு,

அகப்பொருள் விளக்கம் அகப்பாட்டுறுப்புப் பன்னிரண்டு என்று கூறுகிறது. அதில் மெய்ப்பாடும்  ஒன்றாகும். அதாவது,

திணையே கைகோள் கூற்றே கேட்போர்

              இடனே காலம் பயனே முன்னம்

              மெய்ப்பாடு எச்சம் பொருள்வகை துறைஎன்று

              அப்பால் ஆறிரண்டு அகப்பாட் டுறுப்பே      (211)

என்பதாகும்.

இறையனார் அகப்பொருள் கூறும் முறையும் நோக்கத்தக்கது. அதாவது

திணையே கைகோள் கூற்றே கேட்போர்

இடனே காலம் எச்சம் மெய்ப்பாடு

பயனே கோள் என்று ஆங்கப்பத்தே

அகனைந் திணையும் உரைத்த லாறே   (56)

என அகப்பாட்டுறுப்புப் பத்து என்பதாகும்.

சுவையணி என்ப சுடுஞ்சினம் காமம்

              வியப்பு அவலம் இழிவுஅச்சம் வீரம்நகைஎன

              எண் மெய்ப்பாட்டின் இயைவன கூறி

              உள் மெய்ப்பாட்டை உணர்த்தித் தோற்றலே   (354)

என (தொன்னூல் விளக்கம்) மெய்ப்பாடு குறித்து இலக்கணங்கள் கூறுகின்றன.

மனத்தொடர்பு மெய்ப்பாடு

சங்க இலக்கியம் முழுவதும் மனத்தால் தொடர்புகொள்ளும் மெய்ப்பாடுகளைக் கொண்டவையாகும். கண்ணுக்குத் தெரியாத அருவமான உணர்வுகள் உடல்உறுப்பு அசைவுகளால் உருப்பெற்று ஒருவரிடமிருந்து மற்றவருக்குச் சென்று சேர்கின்றன.

 ‘அப்பால் எட்டே மெய்ப்பாடு’ என்னும்போது நகை, உவகை, அழுகை முதலியன இக்கருத்திற்குக் கொடுக்கப்படும் பெயராகக் கொள்ளவேண்டியுள்ளது.

மெய்ப்பாடு தோன்றும் எண்ணான்கு பொருள்கள்

எட்டு மெய்ப்பாடுகள் கூறிப் பிறகு ஒவ்வொன்றும் நான்கு நான்கு அடிப்படைகளில் பிறக்கும் எனத் தொல்காப்பியர் கூறுதலால் இவற்றைப் பெருக்கிவரும் முப்பத்திரண்டே மெய்ப்பாட்டியல் முதல் நூற்பாவில் கூறப்படுகின்றது என இளம்பூரணர் எடுத்துரைப்பார்.

பேராசிரியர், உலகின்கண் சுவைக்கப்படும் பொருளும் அதனை நுகரும் பொறியுணர்வும் அதனால் ஏற்படும் மனக்குறிப்பும் அக்குறிப்பின்வழிப் புறத்தே நிகழும் மெய்ப்பாடும் என நான்குள.  இவற்றை நகை முதலிய எட்டோடும் உறழ முப்பத்திரண்டாகும் என்பார்.

மெய்ப்பாடு என்பது வாழ்க்கையிலும் அமைகிறது; நாடகத்திலும் வெளிப்படுகிறது; இலக்கியத்திலும் உணரப்படுகிறது. இலக்கியத்தில் பொருள் வெளிப்பாடே அதன் மெய்ப்பாடாகிறது. மெய்ப்பாட்டியலில் முதல் 12 நூற்பாக்களிலும் இறுதி ஒரு நூற்பாவிலும் உணர்த்தப்படுவது அகத்திற்கும் புறத்திற்கும் உள்ள பொது மெய்ப்பாடுகள்.  இடையில் 14 நூற்பாக்கள் அகத்திணைக்குரியனவாகும்.

அகப்பாடல்களில் வரும் தலைமை மாந்தரையும் அவர்கள்பால் நிகழும் மெய்ப்பாடுகளையும் பற்றி மட்டும் தொல்காப்பியர் விளக்கிச் செல்கின்றார். அதனால்தான் தலைவன் தலைவியர் பண்புநலன்களை அவர் எடுத்துரைக்கிறார்.

பிறப்பே குடிமை ஆண்மை ஆண்டோடு

       உருவு நிறுத்த காம வாயில்

       நிறையே அருளே உணர்வோடு திருவென

       முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே  (தொல்.மெய்ப்.35பேரா.உரை)

குடிப்பிறப்பும், ஒழுக்கமும், ஆண்மையும் (பெண்மையும்), வயதும், வடிவமும் அதில் பொருந்திய காமவுணர்வும், நிறைவும், அருளும், அறிவும், திருவும் எனத் தலைவன் தலைவியர் ஒத்திருக்க வேண்டும். அவர்கள்பால் இருக்கத்தகாத சில பண்புகளும் உள்ளன.

நிம்பிரி, கொடுமை, வியப்பொடு, புறமொழி

       வன்சொல், பொச்சாப்பு, மடிமையொடு குடிமை

       இன்புறல், ஏழைமை, மறப்போடு ஒப்புமை

என்றிவை இன்மை என்மனார் புலவர்  (தொல்.மெய்ப்.26பேரா.உரை)

ஒருவர் மீது ஒருவருக்குப் பொறாமை, ஒருவர் ஒருவருக்கெதிராகச் செய்யும் கொடிய சூழ்ச்சி, ஒருவரினும் ஒருவர் தம்மைப் பெரியராக வியத்தல், ஒருவர் ஒருவரைப் பற்றிப் புறங்கூறுதல், கடுஞ்சொல் கூறுதல், சோர்வு (பிழை செய்தல்), முயற்சியின்மை, இழிந்த குடி உயர்ந்த குடி என வேறுபாடு கருதுதல், ஒருவர் ஒருவரினும் இன்புறுவதாக நினைத்தல், பேதைமை, மறத்தல் (கற்றதை மறத்தல், நன்றி மறத்தல்), இன்னாரோடு இவர் ஒப்புமை யுடையரெனத் தலைவன் தலைவியர் ஒருவரை ஒருவர் ஒப்புமைப்படுத்திப் பார்த்தல் என இப்பன்னிரண்டு குற்றங்களின் நீங்கியவரே உயர்ந்த தலைவன் தலைவியர் ஆவர்.

அகப்பாடல்களில் மெய்ப்பாட்டுடன் படைத்தல் என்பது பாடலில் வரும் பாத்திரங்களை அல்லது அப்பாடல்கள் யாருடைய கூற்றாக வருகின்றனவோ அவர்களுடைய இயல்புகளை உலகியலில் உள்ளவாறு புனையவேண்டும்.

களவுக்கால மெய்ப்பாடு

தலைவன் தலைவியை முதன்முதல் கண்டவிடத்து அவள் புகுமுகம் புரிவாள்; பொறிநுதல் வியர்ப்பாள்; நகுநயம் மறைப்பாள்; தன் மனச்சிதைவைப் பிறர் அறியாதவாறு மறைக்க முயல்வாள். இது முதல் நிலை.

இரண்டாம் நிலையில் தலைவியின் கூந்தல் முடிநெகிழ்ந்து, அவிழ்ந்து விரியும், காதிலுள்ள தோடு தானே கழன்று விழும். கைவளை, மோதிரம் போன்றவற்றை அடிக்கடி தடவிப் பார்ப்பாள்; உடையை அடிக்கடி பெயர்த்து உடுத்துவாள். இவ்வாறு தலைவிபால்  நிகழ்வனவாகக் கூறப்படும் மெய்ப்பாடுகள் உலகியல் சார்ந்தனவாகும். தலைவியின் மனநிலையைப் புறத்தே காட்டுவன.

நெய்த னறுமலர் செருந்தியொடு விரைஇக்

கைபுனை நறுந்தார் கமழு மார்ப

னருந்திறற் கடவு ளல்லன்

பெருந்துறைக் கண்டிவ ளணங்கி யோனே (ஐங்.182)

என்ற ஐங்குறுநூற்றுப் பாடல், தலைவி களவொழுக்கம் மேற்கொண்டபொழுது உடல்மெலிந்தாள்.  அவளது பெற்றோர் அவள் மெலிவு தெய்வத்தால் ஆனது என்று நினைத்தனர்.  அணங்கு எனும் அச்சம் மெய்ப்பாடு தோன்றியது. மேலும் ஐங்குறுநூறு 133, 137, 140  பாடல்களும் தலைவியின் உடலும் உள்ளமும் குறித்து வந்தவை.

காலம் நீட்டிக்கும் போது களவை நீட்டிக்காது தன்னைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று எண்ணும் தலைவி (ஐங்.119, 192) தோழியிடமும் தன் நெஞ்சத்திடமும் தனது உள்ளத்து உணர்வுகளை வெளிப்படுத்தும் மெய்ப்பாடுகளாக நிரம்பப் பார்க்க முடிகின்றன.

முனிவு மெய்ந்நிறுத்தல் – தலைவி தன் உள்ளத்து வெறுப்பைத் தன்முகம், உடல் முழுதும் புலப்பட வெளிப்படுத்தி நிற்பது.  தூது முனிவின்மை – புள்ளும் மேகமும் போல்வன கண்டவழி அவற்றைத் தூதுவிட எண்ணுதல்;  ‘அவரிடம் சொல்லுமின்’ எனத் தூதிரந்து பன்முறையாலும் வேண்டுதல்.

அம்ம வாழி தோழி நம்மொடு

சிறுதினைக் காவல னாகிப் பெரிதுநின்

மென்றோண் ஞெகிழவுந் திருநுதல் பசப்பவும்

பொன்போல் விறற்கவின் றொலைத்த

குன்ற நாடற் கயவர்நன் மணனே (ஐங்.230)

தலைவியைத் திருமணம் செய்யும்பொருட்டுச் சுற்றத்தாரைத் தூதுவிட்டான் தலைவன்.  தலைவி தன்பெற்றோர் மறுப்பார்களோ என்று அஞ்சினாள்.  அச்சம் எனும் மெய்ப்பாடு வெளிப்படுவதை உணரமுடிகின்றது.

கற்புக்கால மெய்ப்பாடுகள்

வரைந்தெய்தியபின்  ‘தெய்வம் அஞ்சல்’ மெய்ப்பாட்டிற்குத் தலைவி உரியவள் ஆவாள்.  தலைமகனையே தெய்வமென எண்ணுவாள். ஆதலால், பிறைதொழுதல் போன்றவற்றை மேற்கொள்ள மாட்டாள். இல்லது காய்தல்’ என்பது ஒன்று. களவின்கண் போலாது, தலைமகனிடம் இல்லாத குறையொன்றை உண்டாக்கிக்கொண்டு அவனிடம் ஊடல் கொள்ளுதல் இஃது அவனைத் தனக்கே உரித்தாக்கிக்கொள்ளும் உரிமையுணர்வு பற்றி வருவதாகும். இவ்வகையான மெய்ப்பாட்டை மருதத்திணையில் முழுமைறளயும் காணலாம்.

அள்ள லாடிய புள்ளிக் கள்வன்

முள்ளி வேரளைச் செல்லு மூர

னல்ல சொல்லி மணந்தினி

நீயே னென்ற தெவன்கொ லன்னாய் (ஐங்.22)

இங்குக் களவுக்காலத்தில் நன்மை தரும் சொற்களைச் சொல்லி நம்மை மணந்துகொண்டு கற்புக் காலமாகிய இப்பொழுது உன்னைப் பிரியேன் எனக் கூறியது கண்டு அவலம் கொள்கிறாள் தலைவி. மேலும் உன்னைப் பிரியேன் எனக் கூறுவது அவனது பொய்ம்மையுடைய மொழி எனக் கருதி ஊடல் கொள்கிறாள்.

வள்ளுவர், தலைவனிடம் ஊடல் கொள்ளும் தலைவியின் உள்ளக் கிடக்கையை காமத்துப்பாலில் வரும் புலவிநுணுக்கம் எனும் ஓர் அதிகாரத்தில் பதிவுசெய்வார்.

ஒரு பாடலில் மாந்தர்களின் உரையாடல் நிகழும்போது இரண்டு மெய்ப்பாடுகளும் வரும்.  இத்தன்மையைக் கலித்தொகைப் பாடல்களில் அதிகமாகக் காணலாம். ஐங்குறுநூற்றில் (ஐங்.14) தலைவன் கொடுமையை மறந்து அவன் மார்பையே நினைந்து பொறுமை இழந்து புலம்பும் அழுகை மெய்ப்பாடும், தலைவன் கொடியவனே என்றாலும் அவனது மார்பு குளிர்ச்சியும் உறக்கத்தையும் தரும் இனியசாயலும் உடையதாய் இருப்பதும் இளிவரல் எனும் மெய்ப்பாடும் அமைகிறது.

பிரிவுக்கால மெய்ப்பாடுகள்

புணர்ச்சிக்கு நிமித்தமாகும் களவுக் காலத்தும் கற்புக் காலத்தும் பிரிவின்கண்ணும் நிகழ்வன. இன்பத்தை வெறுத்தல் என்பது இதில் ஒரு மெய்ப்பாடு.  இன்பம் தரும் யாழும் குழலும் கேட்டபோதும் பூவும் சந்தனமும் கண்டபோதும் அவற்றில் வெறுப்புத் தோன்றும். இது பிரிவினால் தோன்றும் வெறுப்பு.

கணங்கொ ளருவிக் கான்கெழு நாடன்

குறும்பொறை நாட னல்வய லூரன்

றண்கடற் சேர்ப்பன் பிரிந்தெனப் பண்டையிற்

கடும்பகல் வருதி கையறு மாலை

கொடுங்கழி நெய்தலுங் கூம்பக்

காலை வரினுங் களைஞரோ விலரே (ஐங்.183)

வரைதல் பொருட்டு ஆவன செய்தற்குத் தலைவன் பிரிந்தானாக அப்பிரிவாற்றாத தலைவி எதிரே மாலைப் பொழுது வருதல்கண்டு அம்மாலையை நோக்கிச் சொல்லியது. இது அசைவு எனும் அழுகையின் மெய்ப்பாடு.

நகை மெய்ப்பாடுகளின் பிரிவுகளைக்கொண்டு ஐங்குறுநூற்றுப் பாடல்களை ஆராயலாம்.

எள்ளல்

தவறில ராயினும் பனிப்ப மன்ற

விவறுதிரை திளைக்கு மிடுமண னெடுங்கோட்டு

முண்டக நறுமலர் கமழும்

தொண்டி யன்னோ டோளுற் றோரே (ஐங்.177)

இங்குத் தலைவியும் தோழியும் ஓரிடத்தில் சேர்ந்து நிற்கிறார்கள். தோழியிடம் தலைவியைச் சுட்டிக்காட்டி இவள் என்னை வருத்துவதற்கு நான் என்ன தவறுசெய்தேன் என்று கேட்கத் தோழி, நின்துயர்க்கு நீயே காரணம் அன்றி எம்பெருமாட்டியல்லள் என்பதுபட எள்ளி நகையாடியது. இது புணர்ச்சி நிமித்தமாகக் கூற்று நிகழ்ந்துழி வரும் நகை என்னும் இளமை என்பதாகக் கொள்ளலாம்.

இளமை

சிறுவரைப் போலப் பின்னால் இருந்து வருந்தும் செயல்களைச் செய்கிறாய். உன்னைக் கண்டவர் உன்செயலுக்காகச் சிரிக்கமாட்டார்களா எனச் சிறுமையான பிள்ளைத்தன்மையுடன் செயல்படுகிறான் தலைவன் என்பது குறித்து ஒரு பாடல் அமைந்துள்ளது.  இதை,

வெண்ணுதற் கம்பு ளரிக்குரற் பேடை

தண்ணறும் பழனத்துக் கிளையோ டாலு

மறுவில் யாணர் மலிகே ழூரநீ

சிறுவரி னினைய செய்தி

நகாரோ பெரும நிற்கண்டிசி னோரே (ஐங்.85)

எனும் பாடலடிகளில் காணலாம்.

மடம்

வெள்ளாங் குருகின் பிள்ளை செத்தெனக்

காணிய சென்ற மடநடை நாரை

பதைப்ப வொழிந்த செம்மறுத் தூவி

தெண்கழிப் பரக்குந் துறைவ

னெனக்கோ காதல னனிக்கோ வேறே (ஐங்.156)

வெள்ளாங்குருகின் பார்ப்பினைத் தனது எனக் கருதி நாரை பார்க்கச்செல்லுவது போல, பரத்தையர் இல்லத்திலிருந்து தலைவி வீட்டிற்குத் தூதுவர்களை அனுப்பிக் கொண்டிருக்கிறான் என்ற மடத்தன்மையாய் நகைப்பதாகப் பாடல் வந்தது.

பெருமையும் சிறுமையும் மெய்ப்பாடு எட்டன்

       வழிமருங்கு அறியத் தோன்றும் என்ப  (தொல்.உவம.19பேரா.உரை)

ஒன்றை பெருக்கவும் சிறுக்கவும் கூறுதல் மெய்ப்பாட்டின்வழிப் புலப்படத் தோன்றும் என்பர் இளம்பூரணர்.

வெண்ணுதற் கம்பு ளரிக்குரற் பேடை

தண்ணறும் பழனத்துக் கிளை யோடாலு

மறுவில் யாணர்மலிகே ழூரநீ

சிறுவரி னினைய செய்தி

நகாரோ பெருமநிற் கண்டிசி னோரே (ஐங்.85)

என்பது தலைவன் சிறுமையான பிள்ளைத் தன்மையுடையவனாகச் செயல்படுகிறான் என்பது கருத்தாகும்.

“இங்குப் பெருமை சிறுமை என்பன பொருள்களின் பெருக்கம் சுருக்கங்களையும் இன்பதுன்பக் கூறுபாடுகளின் பெருக்கம் சுருக்கங்களையும் குறித்து நின்றன என்பதும் பெருமை சிறுமை பற்றிய இவ்வுவமைகள் மெய்ப்பாட்டொடு பொருந்திவாராத நிலையில் இவற்றால் பயனில்லை என்பதும் இளம்பூரணர் கருத்தாகும்” என்று க.வெள்ளைவாரணார் தம் உரைவளப் பதிப்பில் தெளிவுபடுத்துவார் (க.வெள்ளைவாரணன், தொல்காப்பியம் உவமையியல் உரைவளம், 1985:96).

உவம உருபும் மெய்ப்பாடும்

சங்க இலக்கியத்தில் அன்ன, போல, ஏய்ப்ப, உறழ, கடுப்ப, வெல்ல, ஒடுங்க, ஒட்ட என இவ்வாறு வரும் உவம உருபுகளும் அவற்றை வினைப்பால் உவமம், மெய்ப்பால் உவமம் என இவ்வாறு தொல்காப்பியர் வகைப்படுத்தல் மெய்ப்பாட்டுத் திறனுடையனவாகவும் விளங்குகிறது. ஐங்குறுநூற்றில் அன்ன (ஐங்.13, 209, 215, 303), போல (ஐங்.84, 188, 202, 300, 365) பெரும்பான்மையாக வந்துள்ளது.

பொருட்பாடும் அகத்திணை மெய்ப்பாடும்

அகத்திணை மாந்தர்களின் பண்புநலன்களை, மனநிகழ்வுகளை அவர்களது தோற்றம், செயல், பழக்கவழக்கங்களைக் கொண்டு அறிந்துகொள்ள இயலும். உதாரணமாக,

அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்

              கடுத்தது காட்டும் முகம்                    (குறள்.706)

முகம்நோக்கி நிற்க அமையும் அகம்நோக்கி

              உற்றதுணர் வார்ப் பெறின்          (குறள்.708)

              பகைமையும் கேண்மையும் கண்ணுரைக்கும் கண்ணின்

              வகைமை உணர்வார்ப் பெறின்             (குறள்.709)

என வரும் திருக்குறள் பாடல்கள் மெய்ப்பாட்டை உணர்த்துகின்றன.

மேலைநாட்டு இலக்கியங்களில் ‘உணர்வுக்’ கூறு (Emotional Element) என்பது மிகவும் வலியுறுத்தப்படுகிறது. அதுவே மெய்ப்பாடு என மேலோட்டமாக ஆய்பவர் கூறுவர்.  ஆழ்ந்து கற்பார்க்கு இமேஜரி (Imagery) எனப்படும் உருவுடன் இம்மெய்ப்பாட்டுக் கோட்பாடு ஒற்றுமையுடையதாயிருக்கிறமையை உணர்வர். இலக்கியத்தில் உரு என்பது மனவுருவாகும். ஐம்புல அனுபவத்தினால் அது ஏற்படுகிறது. ஒன்றைப் படித்தவுடன் ஐம்புல அனுபவம் ஏற்பட்டு மனத்தில் ஒரு கற்பனையுலகமும் தோன்றும்.

கவிதையைப் படைப்பவனுக்கும் படிப்பவனுக்கும் இடையே ஏற்படும் மொழித் தொடர்புதான் மெய்ப்பாடு எனப் புரிந்துகொள்ளப்படுகிறது. மேலும், ஒரு சமூகம் சார்ந்து, இனம் சார்ந்து படைப்பு உருவாகும்போது மெய்ப்பாடுகளை அச்சமூகத்தைச் சார்ந்தவரும், அவ்வினத்தைச் சார்ந்தவரும் மட்டுமே அறிவர்.

இலக்கியங்களில் அகத்திணை மாந்தர்களின் பண்புநலன், காதல், ஒழுக்கங்கள் என்று அவர்தம் புறத்தோற்றங்கள் மற்றும் செயல்கள்வழி மெய்ப்பாட்டினை அறிந்துகொள்ள முடிகிறது. எனவே கூற்று அடிப்படையிலான திணைப் பாடல்களில் மாந்தர்கள் உள்ளவாறு புனையப்படுவது அவர்களின் பேச்சு, உலக வழக்கில்போல் இயல்பான பேச்சுநடை மெய்ப்பாட்டுக் கோட்பாடுகளின்வழித் தோன்றிய சிறப்பாகக் கருதவேண்டியதாகிறது.

தலைவனின் பிரிவுத்துயர் ஆற்றாது புலம்பும் தலைவியின் பாடல்கள் ஏராளம் உண்டு. இவை பற்றி வரும் பாடல்களில் அவலச்சுவை கொண்ட  மெய்ப்பாட்டைக் காணலாம். மேலும் உவகை மெய்ப்பாட்டில் புலன் மெய்ப்பாடு சுட்டப்படுவதைச் சங்கப் பாக்களில் காணமுடியும். இன்பமும் துன்பமும் எனும் இருவகை நிலைகளை உள்ளடக்கியே தொல்காப்பியம் மெய்ப்பாடுகளும் ஐங்குறுநூற்றுப் பாடல்களும் அமைந்திருக்கின்றன. தொல்காப்பியர் மெய்ப்பாடுகளைப் பட்டியலிட்டாலும் அதை எடுத்துக்காட்டுகளுடன் மேற்கோள்கொண்டு உரை விளக்கியவர்கள் உரையாசிரியர்களே. தொல்காப்பியம் தமிழ்ச் சமூக இனத்தின் மெய்ப்பாடுகளைச் சிறிதும் பிறழாமல் பதிவுசெய்திருப்பது கவனத்திற்குரியது.

பார்வை நூல்கள்

 1. அகப்பொருள் விளக்கம், கா.ர.கோவிந்தராச முதலியார், கழக வெளியீடு, சென்னை, 1966
 2. இறையனார் களவியல் என்னும் இறையனார் அகப்பொருள், கா.நமச்சிவாய முதலியார், சி.ஆர்.என் & சன்ஸ், 1943.
 3. ஐங்குறுநூறு, பொ.வே.சோமசுந்தரனார், கழகம், 1961
 4. திருக்குறள் பரிமேலழகர் உரை, R.மீனாக்ஷிசுந்தரம் பிள்ளை, பூமகள் விலாச அச்சுக்கூடம், ஏ.ரங்கசாமி முதலியார் & சன்ஸ், மதராஸ், 1931 .
 5. தொல்காப்பியம் பொருளதிகாரம் உவமையியல் உரைவளம், க.வெள்ளைவாரணன், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், 1985.
 6. தொல்காப்பியம் பொருளதிகாரம் செய்யுளியல், கு.சுந்தரமூர்த்தி, கழகம், 1965.
 7. தொல்காப்பியம் பொருளதிகாரம் மெய்ப்பாட்டியல் உரைவளம், க.வெள்ளைவாரணன், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், 1986.
 8. தொல்காப்பியம் பொருளதிகாரம், கணேசைய்யர், 1943.
 9. தொல்காப்பியம் பொருளதிகாரம், ச.பவானந்தம் பிள்ளை, 1917.
 10. தொன்னூல் விளக்கம் மூலமும் உரையும், கனம்.ஜி.மெக்கென்ஜி.காபன்அய்யர், இரண்டாம் பதிப்பு, அர்ச்.சூசையப்பர் அச்சுக்கூடம், 1891.

. நாகராஜன்

முனைவர்பட்ட ஆய்வாளர் (பகுதி நேரம்)

இலக்கியத்துறை, தமிழ்ப் பல்கலைக்கழகம்,

தஞ்சாவூர்