உரைக்களம்

திருக்குறளுக்கு அடுத்தநிலையில் மிகுதியான உரைகளையும், பதிப்புக்களையும் கொண்ட நூல் தொல்காப்பியம். தமிழின் முதல்நூல் என வ.சுப.மாணிக்கனாரால் புகழ்ந்துரைக்கப்பட்ட தொல்காப்பியம், அவராலேயே உரை செய்யப்பட்ட பெருமைக்கும் உரியது. அவ்வுரைக்கண் இடம்பெற்றுள்ள உரைநெறிகளை மாதிரி அணுகுமுறையில் எடுத்துரைப்பது இம்முயற்சியின் நிலைக்களம் ஆகும். இவ்ஆய்வுரைக்குத் தொல்காப்பியம் எழுத்ததிகாரம் – நூன்மரபும் மொழிமரபும் – மாணிக்கவுரை அடிப்படையாகும். உரைநெறி பற்றிய நூல்களும், கட்டுரைகளும் இம்முயற்சிக்குத் துணைகளாகக் கொள்ளப்பட்டுள்ளன.

மாணிக்கவுரை அறிமுகம்

தமிழ்ப் பல்கலைக்கழக வல்லுநர் குழுவின் தலைவராகப் பணியாற்றிய வ.சுப.மாணிக்கனார் பல்கலைக்கழக அமைப்பினை உருவாக்கித் தந்தவர். மேலும், அப்பல்கலைக்கழகத்தின் தொல்காப்பியப் புலத்தகைமை ஆய்வுக்கட்டிலில் முதல் தகைஞராகவும் பணி செய்தவர். அப்பணிக்காலத்தில் தொல்காப்பியம் எழுத்ததிகாரம் நூன்மரபும் மொழிமரபும் மாணிக்கவுரை என்னும் உரைநூலை எழுதினார் எனச் ச.அகத்தியலிங்கம் எழுதிய அணிந்துரை கூறுகின்றது (வ.சுப.மாணிக்கம் 1989: ப.எ.இ.). எனினும், அவ்வுரை மாணிக்கனாரின் மறைவுக்குப் பின்னர்த் தமிழ்ப் பல்கலைக்கழக 120ஆம் வெளியீடாக 1989 அக்டோபர்த் திங்களில் (திருவள்ளுவர் ஆண்டு 2020 புரட்டாசித் திங்கள்) முதற்பதிப்பாக 22 ரூபாய் விலையில் வந்துள்ளது. அண்மைக்காலமாக ’ஐ.எஸ்.பி.என்.’ என்ற பன்னாட்டுப் புத்தகத் தர எண்  (பன்னாட்டுத் தரப்புத்தக எண் என மொழியாக்கமும் உண்டு எனினும், முற்கண்டவாறு வழங்குவது இயைபுடையதாகத் தோன்றுகின்றது) பற்றிய கருத்துக்கள் பரவலாகப் பேசப்படுவதையும், நூலாசிரியர்களும் கட்டுரையாசிரியர்களும் தவிப்பதையும் காண்கின்றோம். ஆனால், 27 ஆண்டுகளுக்கு முன்னரே மாணிக்கனாரின் தொல்காப்பிய உரை ஐ.எஸ்.பி.என். (81–7090–143–X) எண்ணுடன் வெளிவந்துள்ளமை குறிக்கத்தக்கது.

மாணிக்கவுரைக்கு எழுதிய உரைப்பாயிரத்தில், “தொல்காப்பிய நினைவும் தொல்காப்பியக் கருத்தறிவும் பெறுதல் தமிழன் என்பான் ஒவ்வொருவனின் பிறப்புக் கடமையாகும்” என வ.சுப.மாணிக்கனார் (1989:II) முழங்குகின்றார். இளம்பூரணம், பேராசிரியம் என்னுமாப்போலத் தம் உரை மாணிக்கம் எனப் பெயர் பெறும் என்கின்றார். தொல்காப்பிய முழுமைக்கும் உரைசெய் நோக்கமும் உரைக்குறிப்புக்களும் உளவெனினும் காலப்பதம் பார்த்து முதற்கண் எழுத்ததிகாரத்துக்கு மாணிக்கவுரை எழுதியிருக்கின்றேன்” (வ.சுப.மாணிக்கம் 1989:III)  என்ற அவர்தம் கருத்து குறிக்கத்தக்கது. அவருரை தொல்காப்பிய முழுமைக்கும் எழுதப்படவில்லையே என்ற ஏக்கம் நமக்குள் இருந்தாலும், அவரால் எழுதப்பட்ட தொல்காப்பிய உரைக் குறிப்புக்களாவது அச்சுருக் கொள்ள வேண்டும். அதற்கு அவர்தம் கால்வழியினர் முழுமையான முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும் என்பது நமது வேண்டுகோள்.

தொல்காப்பிய உரைக்கண் தாம் மேற்கொண்ட உரைநயங்களைப் பற்றிய விரிவான குறிப்புக்களும் உரைப்பாயிரத்தின்கண் மாணிக்கனாரால் தரப்பட்டுள்ளமை குறிக்கத்தக்கது. ஒவ்வொரு உரைக்கூறும் இன்னின்ன நோக்கங்களோடு தரப்பட்டுள்ளது என்பதை இப்பகுதியில் மாணிக்கனார் விளக்கியுள்ளார். சான்று:

“இயல் முன்னுரை

இஃது இயலுக்கு ஒரு சிறிய முன்னுரையாகும். இயல்தோறும் வரும் இலக்கணக் கருத்துக்களின் சிறப்புக்களைப் புலப்படுத்தும். இன்றும் மக்கள் நடைமுறையில் இருக்கும் வழக்குகளோடு பொருத்திக் காட்டும். இதனால் கற்பவர்க்குத் தமிழிலக்கண நன்மரபுகள் தெரியவரும். இலக்கணக் காப்பில் அவர்கட்குப் பற்றும் பயிற்சியும் உண்டாகும்” (வ.சுப.மாணிக்கம் 1989:III).

மாணிக்கனாரின் வாழ்க்கைக் குறிப்புக்கள் சில இவ்வுரைப் பாயிரத்தின்கண் கூறப்பட்டுள்ளன. அவை கற்போருக்கும் உரையாசிரியருக்குமிடையிலான உறவுக்குப் பாலம் அமைப்பன எனலாம். “மக்களின் தமிழ்ப்பிடியும் தமிழ்த்தரமும் தொல்காப்பியவுணர்வுமே என் உரை நோக்கம்” (வ.சுப.மாணிக்கம் 1989:VI) எனத் தம் உரை நோக்கத்தைப் புலப்படுத்துகின்றார் மாணிக்கனார். பனம்பாரனார் எழுதிய பதினைந்து அடிகளுடைய சிறப்புப் பாயிரத்தின் மாணிக்கவுரை 16 பக்க அளவில் அமைந்திருப்பதிலிருந்தே அவ்வுரையின் இயல்பினை நாம் அறியலாம். தம்முடைய உரைக்கூறுகள் இன்னவை என மாணிக்கனாரே எடுத்துக்காட்டியுள்ளமையால், இந்த ஆய்வுரை உரைக்கூறுகளின்கண் இடம்பெற்றுள்ள உரைநெறிகளில் சிலவற்றை விளக்க முற்படுகின்றது. இனி, அவற்றைக் காணலாம்.

மாணிக்கவுரைஉரைநெறிகள்

மாணிக்கவுரைக்கண் 1.இயல் முன்னுரை, 2.இயற்கருத்து, 3.அகலவுரை, 4.வழக்கு, 5.திறனுரை, 6.இயல் முடிவுரை ஆகிய ஆறு கூறுகளை மாணிக்கனார் மொழிந்துள்ளார். இக்கூறுகள், அனைத்து நூற்பாக்களின் உரைகளின்கண்ணும் இடம்பெறவில்லை. நூற்பா உரைப்பகுதிகளின்கண் 1.நூற்பாத் தலைப்பு, 2.நூற்பா, 3.நூற்பாக் கருத்து, 4.அகலவுரை, 5.திறனுரை ஆகிய ஐந்து உரைக்கூறுகள் இடம்பெறுவதைக் காணமுடிகின்றது. அவற்றின்கண் காணலாகும் உரைநெறிகளில் குறிக்கத்தகுந்தவற்றுள் சில இவ்வுரைக்கண் விளக்கப்பெற்றுள்ளன.

நூற்பாக்களுக்குத் தலைப்பிடுதல்

தொல்காப்பிய நூற்பாக்கள் காலத் தொன்மையுடையன. இன்றைய தமிழ்நடை மட்டுமே அறிந்தாரும் எளிதில் கற்றுணரும் வகையில் அமைந்திருப்பது இந்நூற்பாக்களின் தனித்தன்மையாகும். இவ்வுண்மையை “தொல்காப்பிய நூற்பாக்கள் பழகு தமிழ்ச்சொற்கள் கொண்டவை; தடங்கலின்றிப் படிப்பதற்கு உரிய இன்னோசையுடையவை; இவறல் இல்லாச் சொல்வளம் நிறைந்தவை; இடுக்கு முடக்கற்ற தொடரோட்டம் வாய்ந்தவை. ஈறாயிரத்து ஐந்நூறு ஆண்டுகட்குப் பின்னும் இத்தொன்னூல் ஓரளவு தமிழ் கற்றோர்க்கும் விளங்கி வருவதற்குக் காரணம் நூற்பா அமைப்பேயாகும். பார்த்தவுடன் உருவத்தைக் கண்ணாடி பளிச்சென்று காட்டிவிடுவதுபோல், படித்தவுடன் நூற்பாவின் பொருள் விளங்கிவிடவேண்டும் என்ற நல்லியல்பைக் கடைபிடித்து எழுதியவர் தொல்காப்பியர்” (வ.சுப.மாணிக்கம் 19891:30*) என வரும் மாணிக்கத் தொடர்கள் உணர்த்துகின்றன. எளிய தொடர்களில் தொல்காப்பிய நூற்பாக்கள் அமைந்தபோதிலும், அந்நூற்பாக் கருத்துக்களுக்கு ஏற்பத் தலைப்புகள் தரப்படும்போது நூற்பாக் கருத்து மேலும் எளிதாகச் சென்று சேரும் என்ற கருத்து பதிப்பாசிரியர்களுக்கும் உரையாசிரியர்களுக்கும் இருப்பதனால், பதிப்புக்கள்தோறும் நூற்பாக்கள் தலைப்புக்களைப் பெற்றுள்ளன. இவ்வகையில், மாணிக்கவுரையும் தலைப்புக்களைப் பெற்றுள்ளநிலையைக் காணமுடிகின்றது. நூன்மரபின் முதல் நூற்பாவின் தலைப்பு” தமிழுக்கு எழுத்து முப்பது” (வ.சுப.மாணிக்கம் 1989:20) என்பதாகும். ”முதலெழுத்துக்களின் பெயரும் எண்ணிக்கையும்” (தமிழண்ணல் 1993:20; 2008:7) எனத் தமிழண்ணலும், “எழுத்துக்களின் பெயர்” என்ற சொ.சிங்காரவேலனும் (2005:3) ஆளுவதைவிட மாணிக்கனார் தரும் தலைப்பு ஐயங்களுக்கு இடமில்லாமல், தமிழுக்கு எழுத்து இவ்வளவே எனத் தெரிவிக்கும் வகையில் பொருத்தமுடையதாக அமைவது நினையத்தக்கது.

அகலவுரை என்னும் பெயரிய புதுமரபு

தொல்காப்பியர் காண்டிகை (தொல்.மரபி.103, 104), உரை (தொல்.மரபி.105, 106) என இருவகை உரைகளைச் சுட்டுவர். உரை எனத் தொல்காப்பியர் கூறுவதைப் பிற்காலத்துப்போல விருத்தியுரை எனக் கருதலாம்.

இறையனார் களவியல் உரையாசிரியர் 1.கருத்துரைத்துக் கண்ணழித்தல், 2.பொழிப்புத் திரட்டல், 3.அகலம் கூறல் ஆகிய மூவகை உரைகளைச் சுட்டியுள்ளார் (ச.பவானந்தம் பிள்ளை 1916:ககூ). யாப்பருங்கல விருத்தியுரைகாரர் பொழிப்பு, அகலம், நுட்பம் என்ற மூவகைகளைக் கூறியுள்ளார் (மே.வீ.வேணுகோபாலப் பிள்ளை 1960:8). நன்னூலார் காண்டிகை, விருத்தி (நன்.4) என இருவகை உரைகளைக் குறிப்பிட்டு அவற்றின் இலக்கணத்தையும் கூறியுள்ளார் (நன்.21, 22, 23).

உரையாவது பதினான்னு வகையான் உரைக்கப்படும் என்று கூறியுள்ள நன்னூல் விருத்தியுரைகாரர், அப்பதினான்கனுள் கருத்துரை, பதப்பொருள், உதாரணம் ஆகிய மூன்றோடு வினா, விடை ஆகிய இரண்டையும் சேர்த்து உரைப்பது காண்டிகை உரை என்றும், நூற்பாப் பொருளுக்கு இன்றியமையாத அனைத்தும் விளங்குமாறு கூறும் உரையாலும், ஆசிரிய வசனங்களாலும் காண்டிகைக்குரிய ஐந்து உறுப்புக்களாலும் ஐயம் தீரச் சுருக்காது விரித்து உரைப்பது விருத்தியுரை என்றும், உரைக்குக் கூறிய பதினான்கு உறுப்புக்களும் கொண்டது விருத்தியுரை என்றும் கூறுவர் (அ.தாமோதரன் 1999:131-132). இவை தமிழ் உரைகள் அனைத்தையும் மனங்கொண்டு கூறப்படுபவை என்பது தெளிவு. ஒரு நூற்பா / பாடலுக்குக் கூறப்படும் உரையைப் பொருத்தவரையில், அந்நூற்பா / பாடலின் பொருளைத் தெளிவுறுத்தும் பொழிப்புரை, பதவுரை ஆகிய இரண்டனுள் ஒன்றைத் தருவதே உரையாசிரியர்தம் மரபாகும். இம்மரபுக்கு மாறாக மாணிக்கவுரை அகலவுரை என்னும் உரைநிலையைக் கையாண்டு புதுமை படைத்துள்ளார். எனினும், அகலவுரைக்கண் பொழிப்புரையும், விளக்கவுரையும் இணைந்துள்ளதைக் காணமுடிகின்றது.

அகலவுரைக்கண் “நூற்பாவிற்குப் பெரும்பாலும் சொல்லுக்குச் சொல் கிடந்தாங்கு சொல்லுரை எழுதவில்லை. கற்பவர் விளங்கிக் கொள்ளுமாறு வேண்டும் விளக்கஞ் சேர்த்து விரிவுரையாக அமையும்” (வ.சுப.மாணிக்கம் 1989:III ) என்ற மாணிக்கனாரின் கருத்து அகலவுரைக்கண் இடம்பெற்றுள்ள உரைக்கூறுகளை விளக்கியுள்ளது. இது மெய்யே என்பதை “தமிழ்மொழிக்கு அடிப்படை முதலெழுத்து என்று வழிவழிச் சொல்லப்படுபவை முப்பது. இவை அகரம் தொடங்கி னகரவிறுதியாகும். சார்பெழுத்து என்று அடுத்த நூற்பாவில் கூறப்படும் மூன்றும் இவற்றோடு சேரா. முதலெழுத்தாகா; முதலெழுத்து வரிசையில் எண்ணப்படா என்பது கருத்து. மூன்றலங்கடை – மூன்று அல்லாதவிடத்து. அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ; க் ங் ச் ஞ் ட் ந் த் ந் ப் ம் ய் ர் ல் வ் ழ் ள் ற் ந் – இவை இக்கால வடிவன்கள்” (வ.சுப.மாணிக்கம் 1989:20 ) என வரும் உரைப்பகுதி காட்டுகின்றது.

தம்கால வழக்கினை ஒப்பிட்டுரைத்தல்

தொல்காப்பியம் மூவாயிரமாண்டுத் தொன்மையுடைய தமிழ் முதல் நூல் என்பது மாணிக்கனார் துணிபுரை. அந்நூலின்கண் கூறப்பெற்றுள்ள கருத்துக்களை விளக்குமாற்றால் சமகாலச் செய்திகளைக் கூறும்போது, அக்கருத்துக்கள் உரை எழுதப்பெறும் காலத்தைய மக்களுக்கு மிகச் சரியாகச் சென்று சேர வாய்ப்புள்ளது. எனவே, உரையாசிரியன்மர் தாம் வாழும் காலத்தின் நிகழ்வுகள் / கருத்துக்களைத் தம் உரையிடையே எடுத்துரைக்கும் வழக்கத்தைக் கைக்கொண்டுள்ளனர். பழந்தமிழ் உரைகளில் அழுந்திய மாணிக்கனார் உரையிலும் இக்கூறு இடம்பெற்றுள்ளமை வியப்புக்குரியதன்று.

சான்று வருமாறு: “ஒரு நாட்டின் அரசியலமைப்பினை வகுக்குநர் அந்நாட்டிற்கு உட்பட்ட நான்கெல்லைகளையும் முதற்கண் சுட்டிக்காட்டுவர். அதனால் விதிகளின் ஆட்சிக்கோடுகள் தெளிவாகும். விடுதலைபெற்ற நம் பாரதவமைப்பினைக் காண்க. இந்நன்முறை தமிழ்ப்பாயிரத்தில் பண்டே உண்டு. பதிவு செய்த திருமணம் போல அரங்கேற்றம் இசைவுமுத்திரை என்ப. ஒரு நூலைப் புலவரவை ஒப்புக் கொள்வது என்பது அறிவுலக முறையாகும். இது குடியரசு போன்றது. மக்கள் கற்பதற்குத் தக்க நூல் என்ற மதிப்பு விளம்பரம் இதனாற் கிடைக்கும். இன்று திரைப்படங்கள்கூடத் தணிக்கை முத்திரை பெற்ற பின் காட்சிக்கு வரக் காண்கின்றோம். இவ்வரன்முறை தொல்காப்பியக் காலத்திலேயே உண்டு என்பது தமிழ் மரபின் சிறப்பைக் காட்டும்” (வ.சுப.மாணிக்கம் 1989:1). இதனைவிடத் தெளிவாகப் பாயிரத்தின்கண் கூறப்பெறும் நாட்டெல்லை, அரங்கேற்றம் முதலியவற்றை இக்காலத் தமிழர்களுக்கு விளக்கிவிட முடியும் எனத் தோன்றவில்லை.

வினாவிடை முறை

உரையாசிரியர்தம் கருத்துக்களை விளக்கும்போது வினா – விடை முறையைக் கையாண்டு எழுதிச் செல்வதுண்டு. பழந்தமிழ் உரையாசிரியன்மர் ஒருக்கால், மாணாக்கர்களுக்குக் கற்பிக்கும் பணியையும் மேற்கொண்டிருந்த காரணத்தால், வினா – விடை முறை அவர்தம் உரைகளிலும் புகுந்து நிலைபெற்றது எனக் கருதுப. மாணிக்கனார் கல்லூரி, பல்கலைக்கழகப் பேராசிரியராக விளங்கியவராதலால், அவர்தம் உரையில் இக்கூறு இடம்பெறுவது இயல்பானதாகும். வினா – விடை முறையைக் கையாளுமிடங்களில் பான்மையும் ஒரு வினா, வினா எனச் சுட்டுவது மாணிக்கவுரை வழக்கமாகும். சான்று ஒன்று தருகுவன்:

”ஒரு வினா: குற்றெழுத்து ஐந்தாக நெட்டெழுத்து ஏழு வரலாமா? உயிர் பன்னிரண்டாக மெய் பதினெட்டாக வரலாமா?.

நன்றாக வரலாம். குறிலிலிருந்து நெடில் பிறப்பதில்லை; உயிருக்கும் மெய்க்கும் ஒத்த தொடர்பில்லை. எல்லாம் பொருண்மையாற்றலால் தனித்தனிப் பிறப்பானவை.” (வ.சுப.மாணிக்கம் 1989:27).

சிலவிடங்களில் இவ்வாறு வினா என்ற குறிப்பு இல்லாமலும் இவ்வுரைநெறி இடம்பெறுவதைக் காணமுடிகின்றது. சான்று வருமாறு: “மெய் என்பதன் பெயர்க்காரணம் யாது? உள்ளிருந்து வருங்காற்று நா அண்ணம் பல் இதழ் மூக்கு முதலான உறுப்புக்களின் தசைப்பகுதியோடு தசைப்பகுதி தொட ஒலி பிறத்தலின் மெய் எனப்படும். அதனாற்றான் ஒற்று என்ற குறியும் மெய்க்கு உண்டு” (வ.சுப.மாணிக்கம் 1989:34).

விடை முறைக் கருத்துக்களைத் தருதல்

வினாக் கேட்டு விடை தருவது என்ற நிலையிலிருந்து ஒரு படி மேற்சென்று வினாக் கேளாமலேயே விடையை எழுதிச் செல்கின்ற பாங்கினையும் மாணிக்கவுரையில் காணமுடிகின்றது. கற்போன் மனத்தில் எழக்கூடிய வினாக்களைச் சிந்தித்து விடையளிக்கின்ற மாணிக்கவுரை கற்போனின் உள்ளப்போக்கினை மிகத் தெளிவாக அறிந்துள்ள ஒரு உரை என்பதற்குப் பின்வரும் பகுதி சான்றாகும்.

”பாயிரம் நூலாசிரியனுக்காக எழுதப்படுவதில்லை; நூலைக் கற்போரை வழிநடத்துவதற்காக எழுதப்படுவது. இது கருதியே நூல் முற்றுப் பெற்ற பின் செய்யப்படுவது பாயிரமாயினும், நூலுக்கு முன் வைக்கப்படும் என்று அறிக” (வ.சுப.மாணிக்கம் 1989:1).

பாயிரம் யாருக்காக எழுதப்படுகின்றது?, கற்போர் பாயிரத்தைப் படிப்பதால் கிட்டும் பயன் என்ன?, பாயிரம் நூல் எழுதப்படும் முன்னர் எழுதப்படுவதா? அல்லது பின்னர் எழுதப்படுவதா?, நூல் எழுதிய பின்னர்ச் செய்யப்பட்ட பாயிரம் நூல் தொடங்கும் முன்னர் வைக்கப்படுவது ஏன்? ஆகிய வினாக்கள் மேற்கண்ட உரைப்பகுதியைக் காணும்போது நமக்குள் எழுவதை உணரமுடிகின்றது.

உவமை விளக்கம்

”ஒலியன் சிறுபான்மை தனியாகவும் பெரும்பான்மை எழுத்துக்கள் தொடர்ந்தும் பொருளை நேரடியாகக் குறிக்கும்போது சொல் அல்லது மொழி எனப்படும். எழுத்துக்கும் சொல்லுக்கும் உரிய தொடர்பு குருதியோட்டமும் நீட்டமும் ஒக்கும்” (வ.சுப.மாணிக்கம் 1989:89) என்னுமாப்போல ஒரு கருத்தினை விளக்கம் உவமைகளை ஆளும் மரபினை மாணிக்கவுரைக்கண் காண்கின்றோம். இவ்வகை விளக்கங்கள் அவருரைக்கண் பரக்கக் காணப்பெறும் ஒரு கூறாகும்.

சான்று காட்டல்

உரையாசிரியர்தம் அடிப்படைப் பண்பெனவே சொல்லத்தகும் ஒரு உரைநெறியாக இலங்குவது சான்று காட்டும் மரபாகும். இதனை மேற்கோள், வரலாறு, உதாரணம், காட்டு என்றெல்லாம் கூறுவது வழக்கம். இம்மரபுநெறி மாணிக்கனார் உரைக்கண்ணும் பெருவழக்குடைய ஒன்றாகவே திகழ்கின்றது என்பதனைக் காணமுடிகின்றது. சான்று காட்டுமிடங்களில் 1.இலக்கணச் சான்றுகள் தருதல், 2.இலக்கியச் சான்றுகள் தருதல், 3.பிற மொழிநூல், பிற துறைச் சான்றுகள் சுட்டுதல், 4.வழக்குநடைச் சான்றுகள் தருதல், 5.பல்வகைச் சான்றுகளை இணைத்துத் தருதல் ஆகிய நெறிகளைக் காணமுடிகின்றது. அவற்றைக் காட்டுக்களுடன் காண்போம்.

 1. இலக்கணச் சான்றுகள் தருதல்

தொல்காப்பியம் போன்ற இலக்கண நூல்களுக்கு உரையெழுதிய பெருமக்களுள் பலர் இலக்கண மேற்கோள்கள் தரும் வழக்கத்தைப் பரவலாகப் போற்றியுள்ளனர். வைரத்தை வைரத்தால் அறுப்பது போல, ஓர் இலக்கணக் கருத்துக்கு மற்றொரு இலக்கணக் கருத்தைத் தருவதே பொருத்தமுடையதாகலாம் என்ற கருத்து அவ்வுரையாசிரியர்மாருக்கு இருந்திருக்கலாம் என எண்ணத்தோன்றுகின்றது. மாணிக்கவுரையிலும் இவ்வகை மேற்கோள்கள் பலவுள. இலக்கணச் சான்றுகளை 1.தொல்காப்பியத்திலிருந்தே சான்று தருதல், 2.பிற இலக்கண நூல்களிலிருந்து தருதல் என மேலும் வகைப்படுத்த இயலும்.

எந்தவொரு நூலாய்வுக்கும் உரிய சான்றுகளை அந்நூலுக்குள்ளிருந்தே தருவது சாலச் சிறந்தது. சான்றாகத் தொல்காப்பியம் குறித்த ஆய்வில் தொல்காப்பிய நூற்பாக்களில் இருந்தே சான்று நல்க வேண்டும். அகச் சான்றுகளே மெய்ம்மையை அறிவதற்குப் பெரிதும் பயன் நல்குவன என்ற கருத்துடைய மாணிக்கனார் (1989: 24) “ஆய்தம் என்பதனை ‘ஆய்தல் உள்ளதன் நுணுக்கம்’ என்ற உரியியலானும், ‘நலிபுவண்ணம் ஆய்தம் பயிலும்’ என்ற செய்யுளியலானும் அறியலாம்” எனத் தொல்காப்பியச் சான்றுகள் தருவதால் அறியலாம்.

”ஒற்று முன்னாய் வரும் உயிர்மெய்யே என்று பவணந்தியார் இதனையே பின்பற்றுவார்” (வ.சுப.மாணிக்கம் 1989:46) என்னுமாப்போல பிற இலக்கண நூற்சான்றுகளைத் தருவதும் மாணிக்கவுரை இயல்பாம்.

 1. இலக்கியச் சான்றுகள் தருதல்

தமிழ் மரபில் இலக்கியங்களே இலக்கண நூல்களின் அடிப்படைத் தரவுகளுள் குறிக்கத்தகுந்தவை. இவ்வுண்மையை,

“இலக்கியம் இன்றி இலக்கணம் இன்றே;

எள்ளின் றாகில் எண்ணெயும் இன்றே;

எள்ளினின்று எண்ணெய் எடுப்பது போல

இலக்கியத்தி னின்று எடுபடும் இலக்கணம்”

– அகத்தியர் (மேற்கோள் மு.வை.அரவிந்தன்:128)

என வரும் மேற்கோளால் அறியலாம். எனவே, ஓரிலக்கண நூலுக்குச் சிறந்த சான்றாக நாம் இலக்கியங்களைக் கருதலாம். அதுவும், அந்த இலக்கண நூலுக்கு முற்காலத்தில் செய்யப்பட்ட இலக்கியங்களே தகுந்த சான்றுகளாகும் என்பதை மேற்கண்ட நூற்பா விளக்குகின்றது. இம்மரபுக்கு மாறாக, சங்க நூல்களுக்குப் பின்னர்ச் செய்யப்பட்ட நம்பியகப்பொருள் முதலான சில இலக்கண நூல்கள் சங்கப் பாடல்களின் மரபுகள் அந்நூல்களில் போற்றப்பட்டுள்ளன என்று கூறுதற்கியலவில்லை. சான்றாக, “பூத்தமை சேடியிற் புரவலர்க் குணர்த்தலும்” (நம்பி.94) என்ற மரபுக்குச் சங்கப் பாக்களில் சான்றுமுண்டுகொல். இஃது போலும் நிலைகளுக்குக் காரணம் இன்னதென்பது தனித்த ஆய்வுக்குரித்து. நிற்க.

மாணிக்கனார் உரை இலக்கியச் சான்றுகள் பலவும் பொதுளிய புத்துரையாகும் என்பதற்கு அவ்வுரைக்கண் காணப்பெறும் இலக்கியச் சான்றுகளே அடிப்படைகளாகும். தாம் கூற விரும்பும் கருத்துக்களுக்கு இலக்கண, இலக்கியச் சான்றுகள் உண்டென்பதை எண்பிக்கவே உரையாசிரியன்மர் இவ்வகைச் சான்றுகளைத் தருகின்றனர். மாணிக்கவுரையும் இந்நிலையைப் பின்பற்றுகின்றது என்னும் கருத்துக்கு,

“உண்டுண்டுண் டென்னும் உணர்வினாற் சாற்றுமே

டொண்டொண்டொண் டென்னும் பறை

என்பது நாலடியார்” (வ.சுப.மாணிக்கம் 1989:106) என வரும் உரைப்பகுதி சான்றாகும். பழந்தமிழ் உரையாசிரியன்மர் சிலர் குறிப்பாக, நச்சினார்க்கினியர் இன்ன நூலிலிருந்து தாம் மேற்கோள் அல்லது சான்று தருகின்றோம் என்பதற்கான இடம் சுட்டுவதில்லை என்பர் அறிஞர். ஆனால், அண்மைக்கால உரையாசிரியர் பலர் தாம் தரும் மேற்கோள் அல்லது சான்று மூலக்குறிப்பினைத் தவறாமல் தந்து செல்லும் பண்புடையவர்களாகத் திகழ்வதைக் காணமுடிகின்றது. விதிவிலக்குகளும் இருக்கலாம். மாணிக்கவுரை சான்று மூலக்குறிப்புத் தருவதில் பெருங்கவனம் செலுத்தியுள்ளது எனினும், பாடலெண்  சுட்டாமல் செல்லுவது குறிக்கத்தக்கது.

இலக்கியச் சான்றுகளைத் தருங்கால்,

”பண்டைக்காலத்துத் தமிழிசை வல்லுநர் தாமே பாட்டும் பாடி உடன் யாழும் மீட்டினர்.

’கோவலன் கையாழ் நீட்ட வவனும்

காவிரியை நோக்கினவும் கடற்கானல் வரிப்பாணியும்

மாதவிதன் மனமகிழ வாசித்தல் தொடங்குமன்’

என்ற சிலப்பதிகாரவடிகளும்,

’இருங்கடற் பவளச் செவ்வாய் திறந்திவள் பாடினாலோ

நரம்பொடு வீணை நாவின் நவின்றதோ’

என்ற சீவகசிந்தாமணியடிகளும்,

’மன்பெரும் பாண நாரும் மாமறை பாட வல்லார்

முன்பிருந் தியாழிற் கூடல் முதல்வரைப் பாடுகின்றார்’

என்ற திருத்தொண்டர் புராணவடிகளும் மிடறும் யாழும் இணைந்த தமிழிசை மரபை எண்பிக்கும்” (வ.சுப.மாணிக்கம் 1989:66–67) என்றவாறு அடுக்குச் சான்றுகள் காட்டலும்,

”கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்

நற்றாள் தொழாஅர் எனின்.

கொடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய் மற்றாங்கே

எடுப்பதூஉம் எல்லாம் மழை

ழா, தூ இவற்றை மேலும் ஒரு மாத்திரையளவு அப்படியே நீட்டிச் சொல்லுக; அர், உம் எனப் பிரித்துச் சொல்லற்க; பிரித்து எழுதற்க; அடுத்த வரிக்குக் கொண்டு செல்லற்க. இது கற்பிக்க வேண்டிய ஒலிநெறி” (வ.சுப.மாணிக்கம் 1989:30) என வருமாறுச் சான்றும், அச்சான்றினைக் கற்பிக்க வேண்டிய நெறிமுறைகளை எடுத்துரைத்தலும்,

’ஐயன்வெந் விடாத கொற்றத் தாவம் வந் தடைந்த தன்றே’ என்ற வாலிவதைப்படலச் செய்யுளில் நகர வகர மயக்கம் புதிய வரவாகும்” (வ.சுப.மாணிக்கம் 1989:54) என்னுமாறு பிற்கால மாற்றங்களைச் சுட்டிக்காட்டலும் மாணிக்கவுரை பண்புகளாகும். இங்குக் காட்டியவற்றுள் சான்றினைக் கற்பிக்கும் நெறிமுறைகளை எடுத்துக்காட்டும் நிலை மாணிக்கவுரையின் தனித்தன்மை சான்ற நெறியாகும். பழையவுரைகளின்கண்ணோ, பிற புத்துரைகளின் கண்ணோ காணப்பெறாத ஒரு நெறியாக இதனைக் குறிக்கலாம்.

 1. பிற மொழிநூல், பிற துறைச் சான்றுகள் சுட்டுதல்

உரையாசிரியர்கள் பன்மொழிப் புலமையாளர்கள் என்ற உண்மைக்கு அவர்தம் உரைகளே சான்றுகளாக இலங்கக் காண்கின்றோம். முற்கால உரையாசிரியர்களின் வடமொழிப்  புலமை தமிழ் ஆய்வுலகம் அறிந்த ஒன்றே. அண்மைகால உரையாசிரியர்கள் வடமொழி மட்டுமல்லாது பிற மொழிச் சான்றுகளும் தரக் காண்கின்றோம்.  அவ்வகையில் மாணிக்கவுரையிலும் பிறமொழிச் சான்றுகளைக் காணமுடிகின்றது.

”… புதிய கருத்துக்களை மரபுமுறையிற் படைத்துக் கொள்வதற்கும் இலக்கிய வுடமைகளைப் பேணிக் கொள்வதற்கும் பிற தாக்குதலால் மொழிக்குக் கேடு வராது காத்துக்கொள்வதற்கும் விதிமீறல்களைக் களைந்துகொள்வதற்கும் இலக்கண வரன் வேண்டும் எனவும், இலக்கணமில்லா மொழி அரசில்லா நாடு ஒக்கும் எனவும், கேரள பாணினீய ஆசிரியர் அரச வருமன் சாற்றிய பொன்மொழி தொல்காப்பியத்துக்குச் செவ்வன் பொருந்தும்” (வ.சுப.மாணிக்கம் 1989:58–59).

”செய்யுளிடத்து எழுத்துக்கள் பெறும் மாத்திரை யளவுரைக்கும் இலக்கணம் இயற்றமிழுக்கும் இசைத்தமிழுக்கும் பொதுவாம் என்பர் யாழ் நூல் எனப்படும் தமிழ் வாழ் நூல் கண் அடிகள் விபுலானந்தர்” (வ.சுப.மாணிக்கம் 1989:65) என்றவாறு பிற துறைநூற் சான்றுகள் தருதலும் மாணிக்கவுரை இயல்பாம்.

 1. வழக்குநடைச் சான்றுகள் தருதல்

தொல்காப்பியர்,

”வழக்குஞ் செய்யுளும் ஆயிரு முதலின்

எழுத்துஞ் சொல்லும் பொருளும் நாடிச்

செந்தமி ழியற்கை சிவணிய நிலத்தொடு

முந்து நூல் கண்டு முறைப்பட வெண்ணி”     (வ.சுப.மாணிக்கம் 1989:3-4)

நூல் செய்தவராதலின், அம்மரபுக்கு ஏற்பவே உரையாசிரியர்களும் தத்தம் உரைகளில் இலக்கிய மேற்கோள்கள் மட்டுமல்லாது வழக்கு மேற்கோள்களும் தந்துபோயினர். தொல்காப்பிய இளம்பூரணர் உரையில் இடம்பெற்றுள்ள மேற்கோள்களைத் தொகுத்துள்ள இக்கட்டுரையாளர் தம் கருத்து இவண் குறிக்கத்தக்கது. ”தொல்காப்பிய உரைமேற்கோள்களாக 3754 மேற்கோள்கள் தொகுக்கப்பட்டுள்ளன. இவற்றுள், இலக்கண மேற்கோள்களின் எண்ணிக்கை 345 ஆகும். இலக்கிய மேற்கோள்களின் எண்ணிக்கை 1183 ஆகும். வழக்கு மேற்கோள்களின் எண்ணிக்கை 1767 ஆகும்” (ஆ.மணி 2016:791). இதன்மூலம், தொல்காப்பிய இளம்பூரண உரைமேற்கோள்களில்  வழக்கு மேற்கோள்களே ஆதிக்கம் பெற்றுள்ள உண்மையை அறியலாம். மாணிக்கவுரையும் முன்னைய உரைநெறிகளுக்கு ஏற்பவே வழக்கு மேற்கோள்கள் பவற்றைத் தன்னகத்தே கொண்டுள்ளது. சான்று வருமாறு: “காண்க: அறம், அடவி, அறுவடை” (வ.சுப.மாணிக்கம் 1989:35). வழக்குச் சான்று காட்டுமிடங்களில் ”காண்க” எனச் சுட்டி எழுதுவது மாணிக்கவுரையின் மரபாகும்.

”வழக்கு: மியா – இது பேச்சு வழக்கிடை முன்னிலையில் வரும் ஏவற்சொல். கோண்மியா, சொன்மியா, கேளப்பா, சொல்லப்பா என்பது பொருள்”  (வ.சுப.மாணிக்கம் 1989:94) எனச் சான்றினை விளக்கிக் காட்டுதலும், ”ஆ – பக்கத்துக் கால் வாங்குதல்: ர – கா ஙா சா இன்ன பிற (15)” என்றவாறு சான்றினை விரிவாக விளக்கிக் காட்டுதலும், உயிர்மெய் என்பதனை விளக்குமிடத்தில் “தயிர்வடை, பூரிகிழங்கு போலக் கொள்க” (வ.சுப.மாணிக்கம் 1989:136) என்னுமாப்போலச் சான்றுகளைச் சுவைபட வழங்குதலும், “புறா, பலாக்காய், பிராண்டுதல், தராசு, வியாழன், வறட்டி, விளாம்பழம் என்ற சில தமிழ்ச்சொற்களைச் சிலர் இன்று மெய்ம் முதலாக ஒலிப்பதைக் கேட்கின்றோம். இது பிழை வழக்கு, கடியத்தகும்” (வ.சுப.மாணிக்கம் 1989:136) எனப் பிழைபட்ட வழக்காறுகளை எடுத்துக்காட்டும் இயல்பும் ஆகிய உரைநெறிகளை மாணிக்கவுரையில் காண்கின்றோம்.

 1. பல்வகைச் சான்றுகளை இணைத்துத் தருதல்

ஒரு கருத்தினை விளக்க முனையும் மாணிக்கனார் தம் உரைக்கண் இலக்கணம், இலக்கியம், வழக்கு ஆகிய பல்வகை சார்ந்த மேற்கோள்களை ஓரிடத்தே இணைத்துத் தரும் வழக்கத்தைக் கைக்கொண்டுள்ளார். இதனைப் பின்வரும் பகுதிகளால் அறியலாம்.

”அன்னாஅ, தோழீஇ, ஆடூஉ, வேஎல், கோஒன், எனவும், புகாஅஅர், நம்பீஇஇ எனவும் வரும். நற்றாழ் தொழாஅர் (2), செறாஅ அய் வாழிய (1200) என்பன திருக்குறள்” (வ.சுப.மாணிக்கம் 1989: 28) என்னுமாறு ஒரே கருத்துக்கு வழக்குச் சான்றுகளோடு, இலக்கியச் சான்றுகளை இணைத்துக் காட்டலும்,

”அவன் மகரம் எழுதினான்

அவள் லுகரம் எழுதினாள்                                                   பேச்சு வழக்கு

அவர் றிகரம் எழுதினார்

‘ணனவென் புள்ளிமுன் டணவெனத் தோன்றும்’

‘ஒற்றவும் வருடவும் லகார ளகாரம்’

’வருட ரகாரம் ழகாரம்’

‘தாம் வரூஉம் ரழவலங் கடையே’

என்பன தொல்காப்பிய நூற்பாக்கள்” (வ.சுப.மாணிக்கம் 1989:115) என்றவாறு ஒரே கருத்துக்கு வழக்கு மேற்கோள்களையும் இலக்கண மேற்கோள்களையும் இணைத்துத் தருதலும் மாணிக்கவுரை நெறிகளாகும். இஃதுபோன்ற இன்னும் பல மரபுகள் இருப்பினும், கட்டுரையின் அளவு கருதி, இத்தோடு நிறைவு செய்கின்றேன்.

முடிபுகள்

 1. மாணிக்கவுரை தொல்காப்பியம் முழுமைக்கும் எழுதப்படவில்லையே என்ற ஏக்கம் நமக்குள் இருந்தாலும், அவரால் எழுதப்பட்ட தொல்காப்பிய உரைக் குறிப்புக்களாவது அச்சுருக் கொள்ள வேண்டும். அதற்கு அவர்தம் கால்வழியினர் முழுமையான முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும் என்பது நமது வேண்டுகோள்.
 2. ஒரு நூற்பா / பாடலுக்குக் கூறப்படும் உரையைப் பொருத்தவரையில், அந்நூற்பா / பாடலின் பொருளைத் தெளிவுறுத்தும் பொழிப்புரை, பதவுரை ஆகிய இரண்டனுள் ஒன்றைத் தருவதே உரையாசிரியர்தம் மரபாகும். இம்மரபுக்கு மாறாக மாணிக்கவுரையில் அகலவுரை என்னும் உரைநிலையைக் கையாண்டு புதுமை படைத்துள்ளார். எனினும், அகலவுரைக்கண் பொழிப்புரையும், விளக்கவுரையும் இணைந்துள்ளதைக் காணமுடிகின்றது.
 3. வினாக் கேட்டு விடை தருவது என்ற நிலையிலிருந்து ஒரு படி மேற்சென்று வினாக் கேளாமலேயே விடையை எழுதிச் செல்கின்ற பாங்கினையும் மாணிக்கவுரையில் காணமுடிகின்றது. கற்போன் மனத்தில் எழக்கூடிய வினாக்களைச் சிந்தித்து விடையளிக்கின்ற மாணிக்கவுரை கற்போனின் உள்ளப்போக்கினை மிகத் தெளிவாக அறிந்துள்ள ஓர் உரையாகும்.
 4. மாணிக்கனார் உரைக்கண்ணும் பெருவழக்குடைய ஒன்றாகவே சான்று காட்டல் திகழ்கின்றது என்பதனைக் காணமுடிகின்றது. சான்று காட்டுமிடங்களில்இலக்கணச் சான்றுகள் தருதல், 2.இலக்கியச் சான்றுகள் தருதல், 3.பிற மொழிநூல், பிற துறைச் சான்றுகள் சுட்டுதல், 4.வழக்குநடைச் சான்றுகள் தருதல், 5.பல்வகைச் சான்றுகளை இணைத்துத் தருதல் ஆகிய நெறிகளைக் காணமுடிகின்றது.
 5. சான்றினைக் கற்பிக்கும் நெறிமுறைகளை எடுத்துக்காட்டும் நிலை மாணிக்கவுரையின் தனித்தன்மை சான்ற நெறியாகும். பழையவுரைகளின்கண்ணோ, பிற புத்துரைகளின் கண்ணோ காணப்பெறாத ஒரு நெறியாக இதனைக் குறிக்கலாம்.

துணைநூல்கள்

 1. அரவிந்தன். மு.வை., 2008 (இரண்டாம் பதிப்பு). உரையாசிரியர்கள். சென்னை: மணிவாசகர் பதிப்பகம்.
 2. இராஜரெத்தினம். தி. (பதி.ஆ.),. 2014. அகப்பொருள் விளக்கம் – செம்பதிப்பு. சென்னை: காவ்யா.
 3. மணி. ஆ., 2010. செம்மொழித் தமிழ் ஆய்வுரைகள். புதுச்சேரி: தமிழன்னை ஆய்வகம்.
 4. மணி. ஆ., 2014. தொல்காப்பியத் திறனுரைகள். சென்னை: லாவண்யா பதிப்பகம்.
 5. மணி. ஆ.. 2016. தொல்காப்பிய உரைமேற்கோள்கள் – தொகுப்பும் பகுப்பும். சென்னை: செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம். (வெளியிடப்பெறாத ஆய்வுத்திட்ட ஆய்வேடு).
 6. மாணிக்கம். வ.சுப., 1980 (பெருக்கிய பதிப்பு). தொல்காப்பியப் புதுமை. சிதம்பரம்: மணிவாசகர் நூலகம்.
 7. மாணிக்கம். வ.சுப., 1989. தொல்காப்பியம் எழுத்ததிகாரம் – நூன்மரபும் மொழிமரபும் – மாணிக்கவுரை. தஞ்சாவூர்: தமிழ்ப் பல்கலைக் கழகம்.
 8. மாணிக்கம். வ.சுப., 19891 (தொகை முதற்பதிப்பு). தொல்காப்பியக் கடல். சென்னை: மணிவாசகர் பதிப்பகம்.
 9. மோகன். இரா., 1999 (முதற்பதிப்பு). இந்திய இலக்கியச் சிற்பிகள் வ.சுப. மாணிக்கம். புதுதில்லி: சாகித்திய அகாதெமி.

குறிப்பு

* என்ற குறியீடு அவ்வெண் தமிழெண் வடிவில் தரப்பட்டது என்பதைக் குறிக்கும். தட்டச்சுநிலை கருதி, அவ்வெண் இவ்ஆய்வுரையில் கணித எண் வடிவாகத் தரப்படுள்ளது.

+ என்ற குறியீடு வ.சுப. மாணிக்கனாரால் தரப்பட்ட எண் என்பதைக் குறிக்கும். அவ்வெண் தொல்காப்பிய நூற்பாவின் எண் என்றாலும், இன்ன இயல் / அதிகாரத்திற்குரியது என்ற குறிப்பு அவரால் தரப்படவில்லை என்பதையும் குறிக்கும்.

(தமிழண்ணல் 1993:20; 2008:7) என வரும் குறிப்பில் அரைப்புள்ளிக்கு முன் வரும் முதலெண் 1993 ஆண்டுப் பதிப்பின் 20ஆம் பக்கத்தைக் குறிக்கும். அரைப்புள்ளிக்குப் பின்னர் வரும் இரண்டாம் எண் தமிழண்ணல் எழுதிய 2008ஆம் ஆண்டுப் பதிப்பின் 7ஆம் பக்கத்தைக் குறிக்கும். ஒரு ஆசிரியரே எழுதிய ஒன்றுக்கு மேற்பட்ட நூல்களில் ஒரு கருத்தே இடம்பெறுமிடங்களைக் குறிக்க இவ்வாறு ஆளுவது பொருத்தமுடையதாகலாம் என்ற எண்ணத்தில் முதன்முறையாக இவ்வாறு தரப்பட்டுள்ளது. இடச்சுருக்கம் கருதி இம்முறை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆய்வாளனின் கல்விப்பரவலை இவ்வகைக் குறிப்புக்கள் அறிய உதவுவது என்பது இதன் பயன் என்க.

முனைவர் .மணி,

துணைப்பேராசிரியர் – தமிழ்,

பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லூரி,

புதுச்சேரி – 605 003, பேச: 9443927141,

 மின்னஞ்சல்: [email protected]