பிறப்பு

தற்பொழுது 82 அகவை நிரம்பிய முதுபெரும் தமிழறிஞரான திரு.கோவை ஞானி என்றழைக்கப்படும் கி.பழனிச்சாமி அவர்கள் 01.07.1935இல் கோவை மாவட்டம் சோமனூரில்  பிறந்தவர். இவரது பெற்றோர் கிருட்டிணசாமி – மாரியம்மாள். இவருடன் பிறந்தவர்கள் எண்மர். இவரது வாழ்வு இயற்கை சூழ்ந்த பசுமையான கிராமச் சூழலுடன் அமைந்தது. இக்கிராமத்து உழவர்களோடும், நெசவாளர்களோடும், உழைப்பாளிகளோடும் நெருக்கமான உறவை ஏற்படுத்திக்கொண்டார். இளமையிலேயே தனது தந்தையாரிடம் வாசிக்கும் பழக்கத்தைப் பெற்றார்.

கல்வி

பள்ளிக்கல்வியைக் கிராமத்தில் பெற்ற இவர், கோவையிலும்,  அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலும் தமிழ்இலக்கியம் பயின்றார்.  முதுநிலைக் கல்வியை  சென்னைப் பல்கலையில் பெற்றார். இவர் கோவை, அருட்கலை ஆசான் ப.சு.மணியம், பேரா.உருத்திரமணி, பேரா.கே.எஸ்.மகாதேவன் போன்றோரிடமும், அண்ணாலைப் பல்கலைக்கழகத்தில் பேரா.லெ.ப.கரு.இராமநாதன் செட்டியார், பேரா.மு.அருணாசலம் பிள்ளை, பேரா.முத்துச்சாமி பிள்ளை, பேரா.தண்டபாணி தேசிகர், பேரா.சண்முகம் பிள்ளை, பேரா.நடேசன்பிள்ளை முதலியயோரிடமும் கல்வி கற்கும் வாய்ப்புக் கிட்டியமையைத் தனக்குக் கிடைத்த பெரும்பேறாகக் கருதுகிறார். தலைசிறந்த தமிழறிஞரிடம் தமிழிலக்கியத்தையும் இலக்கணத்தையும் ஆழமாகப்  பயின்று முதன்மையாகத் தேர்ச்சி  பெற்றதன் காரணமாகப் தமிழோடுதான் தனக்கு வாழ்வு என்பதை முற்றிலும் உணர்ந்தார். இவருக்குள் தமிழின் மீது தீராக்காதலும், தமிழுணர்வும், தமிழ்ப்பற்றும் ஏற்பட்டது. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படித்த காலத்தில் அங்குள்ள நூலகம் இவருக்கு வாய்த்த மற்றொரு சிறப்பாகும். படிக்கின்ற காலத்தில் பெரும் பகுதியை இந்நூலகத்திலேயே கழித்தார். இங்குதான் அவரது ஆழ்ந்த வாசிப்பின் எல்லை விரிவடைந்தது. வரலாறு, மெய்யியல்,  திறனாய்வு, பிற இலக்கியங்கள் எனத் தேடித்தேடிப் படித்தார். இதன் காரணமாகத் திறனாய்வு என்பதைத் தனக்குள் பெரிதும் வரித்துக் கொண்ட இவர் தமிழிலக்கியத்தில்  திறனாய்வை முதன்மையாகச் செய்துள்ளார். எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்பதைத் தன் வாழ்விலும் இயக்கச் செயல்பாட்டிலும் மெய்ப்பித்து வந்தவர்.  இவரது விரிந்த வாசிப்பின் காரணமாக ஆங்கில இலக்கியத்திலும் நன்கு தேர்ச்சி பெற்றிருந்தார்.

பணி 

கோவையில் சி.எஸ்.ஐ. மேல்நிலைப் பள்ளியில் பொறுப்பு மிக்க தமிழாசிரியராக முப்பதாண்டுகள் பணியாற்றியவர். மாணவர்களுக்கு நேசத்தோடு தமிழைக் கற்றுத் தந்தார். பிழையில்லாமல் பேசவும் எழுதவும் பழக்கினார். அவர்களுக்குத் தமிழ் உணர்வையும் தமிழறிவையும் புகட்டினார். 1988இல் நீரிழிவு நோய் காரணமாகப் பார்வையிழப்பு ஏற்பட்டது. பார்வையை மீண்டும் பெற இயலாத நிலையில் பள்ளிப்பணியை விட்டு விலகினார். அன்று முதல் இன்று வரை உதவியாளர் ஒருவரின் துணையோடு பெருமளவில் தொடர்ந்து படித்தும் எழுதியும் வருகிறார்.  தனக்குப் பார்வை இல்லாததை ஒரு குறையாக இன்று வரை அவர் பொருட்படுத்தியதே இல்லை. காரணம் ‘ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு எழுமையும் ஏமாப்பு உடைத்து’ என்ற வள்ளுவக் குறளுக்கு முற்றிலும் பொருத்தமானவர்.  அவர் கற்ற கல்வியும் வாசிப்பின் அனுபவமும் இன்றும் அவருக்குள் பசுமரத்தாணிபோல் நெஞ்சில் பதிந்துள்ளன.

மார்க்சியத்தில் ஈடுபாடு

பணியின் நிமித்தம் கோவையில் வாழ்ந்தார். தொழிற்பெருக்க நகரமான இங்கு நடைபெற்ற தொழிலாளர் போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் இவரை வெகுவாகப் பாதித்தன. முதலாளி தொழிலாளி என்ற ஏற்றத்தாழ்வு இவருக்கு உடன்பாடில்லை. இதன் காரணமாக மார்க்சியத்தின்பால் இவர் ஈர்க்கப்பட்டார். புலவர்.ஆதி, தோழர் எஸ்.வி.ஆர்., தோழர் நாகராசன் முதலியவர்கள் மூலம் மார்க்சியத்தை வெகுநுட்பமாகவும் விரிவாகவும் கற்கும் வாய்ப்பு நேர்ந்தது. மாவோவின் சிந்தனைக்கும் வசப்பட்டார். சோவியத் இலக்கியங்களைக் கற்றார். நக்சல்பாரி இயக்கத்தோடு தொடர்பு என இவரது மார்க்சியத் தேடல் விரிவுபெற்றது. மார்க்சியம் கற்றதால் தமிழுக்குள் ஆழ்ந்த செறிவைப் பெற முடிந்தது என்கிறார். இதன் மூலம் தமிழிலக்கிய ஆய்வில் மார்க்சிய நெறியைப் புகுத்தினார்.

சிற்றிதழ்ப்பணி

எழுபதுகளின் தொடக்கத்திலே சிற்றிதழ் இயக்கத்தோடு தொடர்பு கொண்டிருந்தார். சிற்றிதழ் இயக்கத்தில் சி.சு.செல்லப்பா, சிட்டி பெ.கொ.சுந்தரராசன், க.நா.சு., லா.ச.ரா., சுந்தர ராமசாமி முதலியவர்களின்  நல்லுறவைப் பெற்றார். 1968-70களில் கோவையிலிருந்து வெளிவந்த ‘புதிய தலைமுறை’ இதழின் ஆசிரியர் குழுவிலிருந்து பணியாற்றினார். இவ்விதழ் மார்க்சியம்,  இலக்கியம்,  தத்துவம் என்ற பொருண்மையில் வெளிவந்தது. பல திறனாய்வுக் கட்டுரைகளை இந்த இதழுக்காக ஞானி எழுதியுள்ளார்.

1970-72இல் வானம்பாடி இயக்கத்தோடு செயல்பட்டார். தமிழில் புதுக்கவிதையை மார்க்சிய உள்ளடக்கத்தோடு வளர்த்தெடுத்தனர். ‘கல்லிகை’ என்ற புதுக்கவிதை முறையிலான குறுங்காவியத்தை இவ்விதழில் ஞானி படைத்துள்ளார். மார்க்சியத்தின் பல்வேறு பரிமாணங்களைத் தமிழுலகம் அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் நண்பர்கள் ஒத்துழைப்போடு ‘பரிமாணம்’ (1979-83) இதழை நடத்தினார்.

1980இன் இறுதியில் சோவியத் இரசியாவில் முதலாளியத்தை உள்வாங்கிக் கொண்ட சோசலிச கட்டுமானம் தகர்ந்தது. இதனால் மார்க்சியத்திற்குப் புதிய வாய்ப்புகள் நேர்ந்துள்ளன என்ற நோக்கில் ‘நிகழ்’ இதழின் பொறுப்பைப் பெற்றார். தமிழ்நாட்டினுள்ளும் பெரியாரியம், பெண்ணியம், தலித்தியம், நவீனத்துவம், பின் நவீனத்துவம் ஆகிய புதிய போக்குகளும் தோன்றின. இவற்றை உள்வாங்கிக் கொண்டு மார்க்சியம் தன்னை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்ற முறையில் திறனாய்வுக் கட்டுரைகளை வெளியிட்டார். வரலாறு, இயற்கை வேளாண்மை, சிறுகதை, கவிதை, மதிப்புரை ஆகிய படைப்புகளையும் ‘நிகழ்’ இதழில் விரிவாக வெளியிட்டார். ‘சூடாகவும் விறுவிறுப்பாகவும் புதிய நூல்கள் பற்றிய திறனாய்வை நிகழ் பிரசுரிக்கிறது. ஞானி புத்தகத் திறனாய்வு செய்வதுடன், சிந்திக்கத் தூண்டுகிற கனமான கட்டுரைகளையும் இதில் வெளியிட்டுள்ளார்’ (வல்லிக்கண்ணன், தமிழில் சிறுபத்திரிகைகள், ப.264). தமிழ்ச் சிற்றிதழ் வரலாற்றில் நிகழுக்குச் சிறப்பான இடம் உண்டு என்பதைப் புரியமுடிகிறது.

இத்தகைய அனுபவங்களோடு ஞானி ‘தமிழ்நேயம்’ இதழை நண்பர்களின் ஒத்துழைப்போடு 1998இல் தொடங்கி 2012 முடிய 67 இதழ்களோடு நின்றது.  இவ்விதழ் சமகாலச் சிக்கல்களைப் பேசியதோடு தமிழ்க்கல்வி, தமிழ்த்தேசியம், தமிழர்களுக்கான மெய்யியல், தமிழ் வாழ்வியல், தமிழ்நாகரிகம் என அனைத்துக் களங்களிலும்  தன் ஆய்வினை அக்கறையோடு செயலாற்றியது குறிப்பிடத்தக்கது.  தமிழ்நேயம் தமிழர் இன நேயமாக மலர்ந்து மணம் வீசியது.

இவை தவிர பெண் எழுத்தாளர்களின் சிறுகதைத் தொகுப்புகள் எனப் பதினொரு நூல்களை வெளியிட்டுள்ளார்.  இப்பதினொரு தொகுப்பிலிருந்து சிறந்த கதைகள் தெரிவு செய்யப்பட்டு ‘காற்றாய் புயலாய்’ என்னும் தலைப்பில் பெருந்தொகுப்பாகக் காவ்யா பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இச்சிறுகதைகள் குறித்து ஆய்வியல் நிறைஞர் ஆய்வும், முனைவர்பட்ட ஆய்வும் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதும் கவனிக்கத்தக்கது. மேலும் பத்திற்கும் மேற்பட்ட சிறுவெளியீடுகளையும் கொண்டுவந்துள்ளார்.

படைப்புகள்

 • இந்திய வாழ்க்கையும் மார்க்சியமும் (1976)
 • மணல்மேட்டில் ஓர் அழகிய வீடு (1979))
 • கல்லிகை
 • மார்க்சியமும் தமிழிலக்கியமும் (1988)
 • தமிழகத்தில் பண்பாட்டு நெருக்கடிகள் (1994)
 • படைப்பியல் நோக்கில் தமிழிலக்கியம் (1994)
 • கடவுள் ஏன் இன்னும் சாகவில்லை (1996)
 • தமிழில் நவீனத்துவம் பின்நவீனத்துவம் (1999)
 • தமிழில் படைப்பியக்கம் (1999)
 • மறுவாசிப்பில் தமிழிலக்கியம் (2001)
 • தமிழ் நாவல்களில் தேடலும் திரட்டலும் (2004)
 • தமிழ் வாழ்வியல் தடமும் திசையும் (2005)
 • தமிழன்பன் படைப்பும் பார்வையும் (2005)
 • வள்ளுவரின் அறவியலும் அழகியலும் (2007)
 • தமிழ் மெய்யியல் அன்றும் இன்றும் (2008)
 • செவ்வியல் நோக்கில் சங்க இலக்கியம் (2010)
 • தமிழிலக்கியம் இன்றும் இனியும் (2010)
 • வானம்பாடிகளின் கவிதை இயக்கம் (2013)
 • ஏன் வேண்டும் தமிழ்த்தேசியம் (2015)
 • நமக்கான தமிழிலக்கிய கொள்கை (2015)

முதலியவை இவர் படைத்த திறனாய்வு நூல்கள். இவை தவிர இலக்கியம் வரலாறு, சமயம், தத்துவம், பொருளியல், மார்க்சியம் முதலிய துறைகளை ஆழ்ந்து கற்று, நூல்களும் வெளியிட்டவர். மெய்யியல் குறித்து ஆறு நூல்களும், மார்க்சியம் பற்றி மூன்று நூல்களும் அடங்கும். இவர் முப்பதிற்கும் மேற்பட்ட திறனாய்வு நூல்கள் எழுதியுள்ளார். மூன்று கவிதை நூல்கள் படைத்துள்ளார். இவர் தொகுத்த நூல்கள் பத்திற்கும் மேற்பட்டவை. இணையத்திலும் இவரது நூல்கள் அனைத்தும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும்  மேலாகத் தமிழிலக்கிய திறனாய்வுக்கு மார்க்சிய நோக்கில் வளம் சேர்த்துள்ளார். தமிழுக்கு நெருக்கடிகள் பல நேர்ந்துள்ள இக்காலத்தில் தமிழைத் தமிழறத்தைக் காப்பதன் மூலமே வரலாற்றில் தமிழன் தன்னைத் தக்க வைத்துக்கொள்ள முடியும் என்பதை வலியுறுத்தியுள்ளார். கோவையில் ‘தமிழக்களம்’, ‘தமிழ் அறிவியக்கம்’, ‘தமிழ்ப்பேரவை’ பல்வேறு இலக்கிய நிகழ்வுகளை முன்னின்று நடத்தியவர். தமிழறிஞர், திறனாய்வாளர், மார்க்சியர், இதழாசிரியர், படைப்பாளர் எனப் பன்முக ஆளுமை நிறைந்தவர்.

விருதுகள்

அமெரிக்கவாழ் தமிழர்களின் ‘விளக்கு விருதும்’, கனடா இலக்கியத்தோட்டத்தின் ‘இயல் விருதும்’, தமிழ்ப் பேராயத்தின் ‘பரிதிமாற்கலைஞர்’ விருதும் ‘தமிழ்த்தேசியச் செம்மல்’, ‘தமிழ்த்தேசியத் திறனாய்வாளர்’,  ‘செம்மொழி ஞாயிறு’, ‘பாரதி விருது’ போன்ற விருதுகளும் இவரைத் தேடி வந்தன. இத்தகைய ஆளுமை பொருந்திய ஞானியின் இலக்கியத் திறனாய்வில் இடம்பெறும் படைப்பியக்கம், மறுவாசிப்பு,  தமிழறம்,  மெய்யியல் போன்ற முக்கிய கூறுகளைப் பற்றி இங்குச் சுட்டிக் காட்டலாம்.

படைப்பியக்கம்

படைப்பு என்பது இலக்கியப் படைப்புகளை மட்டும் குறிப்பதில்லை. மாறாகச் சமுதாயத்தில் புதியதாகப் படைக்கப்படும் அனைத்தையும் குறிக்கும். பொதுவாகப் படைப்பாக்கம் கலைகளுடனும் இலக்கியத்துடனும் மட்டுமே இணைத்துப் பார்க்கப்படுகிறது. இதனைக் கடந்தும் படைப்புச்செயல் நடைபெறுகிறது. இதனை ‘கிரியேட்டிவ்விடிவ்’ என்று கூறலாம்.

ஞானி,  படைப்பியக்கம் குறித்து ‘படைப்புத்திறன் இல்லாமல் எந்த மனிதரும் இல்லை. கவிஞர் அல்லது படைப்பாளிகளுக்குள் இயங்குகிற படைப்புத்திறன் என்பது அவர்களுக்குள் மட்டும் இயங்குவதாகச் சிலர் போற்றுவதைக் கொண்டாடுவதை நான் வெறுக்கிறேன்.  இப்படிப் போற்றுபவர் தமக்குள் உள்ள படைப்புத்திறனைக் கண்டு கொள்ளாதவர்கள் அல்லது வளர்த்தெடுப்பதற்கான முயற்சிகளைச் செய்யாதவர்கள். அல்லது படைப்புத்திறன் என்பதை கவிதைக்குள் அல்லது இலக்கியத்திற்குள் மட்டும் காண்பவர். படைப்புத்திறன் இல்லாமல் விஞ்ஞானிகள், வணிகர்கள், உழவர், கொத்தனார் இல்லை’ (நானும் என் தமிழும், ப.13.) என்பதாக முன்வைக்கிறார். ஒற்றைப் பரிமாணத்தில் இயங்குவதாகப் படைப்பு இருக்க முடியாது. இத்தகைய செயலாக்கம் மனிதனின் அகத்திலும் புறத்திலும் பல்வேறு பரிமாணங்களில்  நடைபெறுகின்றன.  இவனால் தன் வாழ்வைப் புதிதாகக் கொண்டே இருக்க முடியும் என்கிறார்.

மனிதன் இயல்பில் படைப்பாளி / கலைஞன். சாதரணமாகக் குழந்தைகள் விளையாட்டிலிருந்து  இத்தகைய செயலைக் காணமுடிகிறது. பெண்கள் தம்மை ஒப்பனை செய்து கொள்வதும் படைப்புச் செயலே. படைப்புச்செயல் குறித்து பிராய்டு கூறுவதையும் இங்கு நினைவு கூரலாம். சமையற் கலையும் இவ்வாறே. விஞ்ஞானிகள் புதியவற்றைப் படைக்கின்றனர். சில சமயம் தீவிரமான படைப்புக்குள் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறான். படைக்கிறபொழுதே தனக்கான உலகத்தையும் தன்னையும் படைத்துக் கொள்கிறான் இவ்வாறு மனிதனின் உள்ளுறை ஆற்றலாக விளங்குகிறது.

மனிதர்களைப் போலவே சிற்றுயிர்களுக்குள் இருக்கும் படைப்புத் தன்மையைப் புரிந்து கொள்ளமுடியும். சிட்டுக் குருவி அழகிய கூடு கட்டுகிறது. தேனீ அற்புதமான தேனடையை உருவாக்குகிறது. சிலந்தி நேர்த்தியாக வலை பின்னுகிறது. நாம் காணும் அனைத்து உயிர்களுக்குள்ளும் இயக்கம் செயல்படுகிறது,  இவை படைப்புச் செயல்கள் போலத் தோன்றினாலும் இதே செயல்களைத்தான் இந்த உயிர்கள் காலங்காலமாகச் செய்கின்றன.  இது ஒரு வகையில் இயல்பூக்கச் செயல்கள். இதில் மாற்றமில்லை. ஆனால் மனிதனைப் பொருத்தவரை காலமாற்றத்திற்கு உரிய முறையில் படைப்பில் புதுமையை ஏற்படுத்தமுடியும்.  பகுத்தறிவின் துணைகொண்டு அழகியல்  உத்தியோடு ஒரு மனிதன் உருவாக்கும் படைப்புதான் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கும்.

படைப்பு  என்பதை எவ்வாறு விளங்கிக் கொள்வது என்பதற்கு உதாரணம் தருகிறார் ஞானி. சுண்ணாம்பையும் மணலையும் கலந்து வைத்தால் அவற்றைப் பிரித்துவிட முடியும். ஆனால் சுண்ணாம்பும் மணலும் ஓர் உயர் கொதிநிலையில் கண்ணாடி ஆகிறது. இதிலிருந்து சுண்ணாம்பையோ, மணலையோ பிரிக்கமுடியாது (1994:119) இவ்வாறு படைப்பு மனிதனோடு ஒன்றிவிடுவதாக அமைகிறது.

உழைப்புத்திறன் இல்லாமல் மேதைகள் உருவாவதில்லை. இவர்கள் உயிரைக் கொடுத்து உழைக்கிறார்கள். இத்தகைய உழைப்பு ஒரு மொழியை உயிர்த் துடிப்புள்ளதாக்குகிறது. மேலும்; மிகஉயர்ந்த மனஎழுச்சியோடு உச்ச அளவில் படைக்கும்போது அப்படைப்பு காலங்கடந்து நிலைத்து நிற்கும் என்பதில் அய்யல்மிலை என்று கூறும் ஞானி. மார்க்சின் மேற்கோள் ஒன்றை சுட்டிக்காட்டுகிறார். மில்டன் ‘சுவர்க்க நீக்கம்’ (பாரடைசு லாசுட்) என்ற காவியம் படைத்தார். அதாவது பட்டுப்பூழு பட்டு உற்பத்தி செய்வது போன்ற செயல்பாடு இது என்கிறார் மார்க்சு. பட்டுப்பூழுவுக்குப் பட்டு உற்பத்தி செய்வதுதான் அதன் இயல்பு. பட்டு உற்பத்தி செய்வதினாலேயே அது தன் வாழ்வை இழக்க நேரிடுகிறது. என்றாலும் பட்டு உற்பத்தி செய்யாமல் அதனால் இருக்கமுடியாது. பட்டு உற்பத்தி செய்வதே அதன் வாழ்வுச்செயல் வாழ்வை அர்த்தமாக்கும் செயல். இவ்வாறு தான் மில்டனுக்குள் படைப்புச்செயல்  இயங்கியதன் காரணமாக  அவரால் சுவர்க்க நீக்கம் படைக்கமுடிந்தது. மில்டனையும் படைப்புச்செயலையும் பிரிக்கமுடியாது. இதன்காரணமாகவே அவரது காவியம் பலநூற்றாண்டுகளைக் கடந்தும் இன்றும் அறிஞர் பலரால் பேசப்படுகிறது.

இவ்வாறாகப் படைப்புச்செயல் மனிதனுக்குள் உள்ளியக்கமாகச் செயல்படுவதை  ஞானி காண்கிறார். இச்செயலானது மனிதனையும் தாண்டி சிற்றுயிர்களுக்குள்ளும் இயங்குவதைப் புரிந்த கொள்ளமுடிகிறது.

மறுவாசிப்பு

முன்னைய காலத்து இலக்கியங்களைத் தற்காலத் தேவைக்கேற்ப விரிவுபடுத்தி  மறுஉருவாக்கம்/மறுவாசிப்பிற்கு  உட்படுத்தலாம். முதல்நூல், வழிநூல், சார்புநூல் எனும் பெயர்கள் இதனை உறுதிப்படுத்துகின்றன. பழந்தமிழிலக்கியங்களின் உயரிய விழுமியங்களைச் சமகாலத்திற்குப் பயன்படும் நோக்கில் அவற்றை மறுவாசிப்புக்கு உட்படுத்தல் இலக்கிய உலகில் புதியதன்று. பழந்தமிழிலக்கியத்திற்கும் நிகழ்கால இலக்கியத்திற்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. நிகழ்காலத்திற்கு ஏற்ற வகையில் அவற்றைப் பொருள்படுத்திப் பார்க்கும் பொழுதுதான்  பழந்தமிழிலக்கியங்கள் நம் நனவிலியோடு கலந்து விடுகின்றன. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட இலக்கியங்கள், காப்பியங்கள், தத்துவங்கள் அனைத்தும் இன்றைய காலகட்டத்தில் மாறக்கூடியவை. அதை மறுவாசிப்பு செய்யும் போதுதான் எது அறம், எது அறமற்றவை  என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.

இந்த வகையில் ஞானியின் இலக்கியதிறனாய்வில்  மறுவாசிப்பு இன்றியமையாத இடத்தைப் பெற்றுள்ளது. வள்ளுவத்தையும் சிலப்பதிகாரத்தையும் விடாப்பிடியாக மீள்வாசிப்புக்குட்படுத்துகிறார் ஞானி. மார்க்சிய நோக்கில் வள்ளுவரையும் இளங்கோவையும் பொருள்படுத்துகிறார். வள்ளுவரும் இளங்கோவடிகளும் தாம் வாழ்ந்த காலத்தில் தம் வாழ்வியல் அனுபவத்தோடு படைத்தனர் அவற்றை இன்னதென இப்பொழுது அறிந்து கொள்வது அரிது. எனினும் இன்றைய சூழலில் அவற்றை நம் அனுபவத்திற்கு ஏற்றவாறு வாசிப்புக்குட்படுத்துகிறோம். வள்ளுவர் செய்தது அவரது பிரதி/பனுவல் (டெக்சுட்). வாசகன் பொருள்படுத்தும் போது அது அவனது பிரதியாகிறது. இம்முறையில் வாசிக்கும் வாசகனது பார்வைதான் முக்கியம். தன் அனுபவத்திறகு ஏற்றவாறு வாசிக்கும் உரிமை வாசகனுக்கு உண்டு. சான்றாக,

‘அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை

பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை’  (குறள். 37)

பரிமேலழகர் பதின்மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். அவர் ஒரு சமயவாதி. இந்தக் குறளுக்கு அவர் தரும் விளக்கம்: சிவிகையில் ஊர்ந்து செல்பவன் முற்பிறப்பில் நல்வினை செய்தவன். சிவிகையைத் தாங்கிச் செல்பவன் முற்பிறப்பில் நல்வினை செய்யாதவன். இது பார்த்த அளவிலேயே புலப்படும். இதற்கு ஆகம அளவு கொண்டு ஆராயவேண்டாம். நாம்  இன்று எவ்வாறு பொருள்படுத்துகிறோம். சிவிகையில் ஊர்ந்து செல்வதும் அதைத் தாங்கிச் செல்வதும் இன்று தேவையில்லை. இந்த இரண்டு செயல்களும் அறநெறி பட்டவை அல்ல. ஊர்ந்து செல்பவன் இறங்கி நடக்கட்டும் இன்று நமக்குத் தேவை சமத்துவம்/சமதர்மம் என்கிறார் ஞானி.

சிலப்பதிகாரத்தை எவ்வாறு நம் காலத்திற்கு ஏற்றவாறு மீள்வாசிப்பு செய்கிறோம். கோவலன் இன்னொரு நாட்டிலிருந்து பிழைப்பிற்காக மதுரை வந்தவன். அவன் கையில் விலையுயர்ந்த சிலம்பு இருக்கமுடியாது. இப்படித்தான் பொற்கொல்லன் மன்னனிடம் சொன்னான். அரசனும் இதை நம்பினான்.  அரசியின் ஊடல் தீர்க்க அச்சிலம்பு பயன்படும் என்று எண்ணிய மன்னன் ஆராயாமல் உடனடியாக காவலரைக் கொண்டு, கோவலனைக் கொன்று அவன் சிலம்பைக் கொணர்க என்று ஆணையிடுகிறான்.

இம்மாதிரி செயல்கள் இன்றும் நடைபெறுகின்றன. இன்றைக்கும் நீதிக்கு இடமில்லை. அநீதிசெய்பவர்கள்தான் வாழ்வாங்கு வாழ்கின்றனர்.  ஏழைகள் சந்தேகத்திற்கு உரியவராகின்றனர். தண்டிக்கப்படுகின்றனர். சமூகத்தில் உயர்ந்தவர்கள் தவறு இழைத்தவராயினும் தண்டிக்கப்படுவதில்லை. நம் காலத்திற்கு ஏற்றவாறு மார்க்சியநெறியில் மறுஉருவாக்கம் செய்வதன்மூலம் புதிய அனுபவங்களையும் / விளக்கங்களையும் பெறமுடியும். இவ்வகையில் சிலப்பதிகாரம் நம் காலத்திற்கு உரியதாகப் பொருள்படுத்தமுடியும் என்கிறார் ஞானி.

‘அரசநீதி சரியாக வகுக்கப்படாத தன்மை, சான்றோர்களின் செயலற்ற தன்மை – இப்படிப் பல நிலைகளை அக்காலச் சமூகம் கொண்டிருந்தது. இத்தகைய சமூகம் அழிக்கப்படவேண்டும். நீதி நிலைபெற வேண்டும் என்ற ஆவேசம் இளங்கோவடிகளுக்குள் செயல்பட்டிருக்கிறது’ (படைப்பியல் நோக்கில் தமிழ் இலக்கியம், ப.53) என்கிறார் ஞானி. ஆனால் தி.சு.நடராசனின் மீள்வாசிப்பானது ஒன்றைப் பெறவேண்டுமானால் இன்னொன்றை இழக்கவேண்டும் என்ற முறையில் அமைகிறது. அதாவது, வார்த்திகன் மனைவிக்கு  கிடைக்கும் நீதி கண்ணகிக்கு மறுக்கப்படுகிறது. அரசநீதி என்பது வணிகவர்க்கத்தார்க்கு ஒரு வகையாகவும் மறையவர் இனத்தவர்க்கு வேறு வகையாகவும் இருக்கிறது என்றாலும் கண்ணகியின் எழுச்சியைக் காட்டுவதே இளங்கோவின் நிலைப்பாடு. இப்படிப் புரிந்து கொள்வதும் விளக்குவதும் சரியானது என்பதாக நடராசனின் வாசிப்பு அமைகிறது (சிலப்பதிகாரம் மறுவாசிப்பு, ப.69).

சிலப்பதிகாரம் பெற்ற செல்வாக்கைப் பெறாத மணிமேகலையையும் நமது காலச்சூழலில் வைத்துப் புரிந்து கொள்ளமுடியும் என்கிறார் ஞானி. மாதவி வாழ்க்கை அர்த்தம் உள்ளதாக இருக்க புத்த சன்னியாசியாக மாறுகிறாள். தனக்கு நடனம் வேண்டாம். அலங்காரம் வேண்டாம் என்று முடிவெடுக்கிறாள். தனது  மகளையும் மாற்றுகிறாள். உண்டு உறங்கி வாழ்வதல்ல, வாழ்க்கைக்கு அர்த்தம் வேண்டும். இலட்சியங்கள் வேண்டும் என்று மாதவி தன்னை மாற்றுகிறாள். மாதவி கணிகையர் குலப்பெண் என்றாலும் தன்னை மாற்றிக் கொள்வதன் மூலம் மங்கையர் குலத்தால் போற்றப்படுவதைக் காண்கிறோம். இதனை, ‘மாதவியின் மாண்பு’ என்ற தனது நூலில் ம.பொ.சி. ‘பிறப்பால் பரத்தையான மாதவி நல்லாளை மாண்புடைய பத்தினியாக்கியதோடன்றி அந்தப் பத்தினியையும் துறவியாக்கியது.  மாதவியின் மாண்பு கண்டு மங்கையர் குலம் பெருமிதம் கொண்டது’  (மாதவியின் மாண்பு, ப.88) என்ற  அவரது புரிதல் போற்றத்தக்கது.

மணிமேகலைக் காப்பியத்தினுள்ளும் வர்க்கப்போராட்டம் நிகழ்கிறது என்கிறார் ஞானி. மணிமேகலையைக் காதலிக்கும் உதயகுமாரன் அவளுக்கு விருப்பமில்லாமல் துரத்துகிறான். மணிமேகலை அவனுக்குக் கிட்டவில்லை. மாதவியின் பெண்தானே என்பதும் அவனுக்கு ஒர் எண்ணமாக இருந்திருக்கலாம். இளவரசன் என்றாலும் பெண்ணை அபகரிக்கும் செயல்களுக்குத் தண்டனை வழங்கவேண்டும் என்பது விதி. அரசன் வழங்க விரும்புகிறான். அரசிக்கு அவ்எண்ணம் இல்லை. மணிமேலைக்குத் தண்டனை வழங்குகிறாள்.  மணிமேகலை இப்படிப் பல வகைகளில் துன்புறுகிறாள். இக்காவியத்திலும் ஏழைகளுக்கும் பெண்களுக்கும் பாதுகாப்பில்லை. இதில் என்ன காண்கிறோம். சமூகத்தில் ஏற்றத்தாழ்வு இடம்பெறுகிறது.

மணிமேகலை அமுதசுரபியைக் கொண்டு புகார் நகரில் வறுமையில் வாழும் மக்களின் பசியைப் போக்கி வருகிறாள். ஒருநாளில் சிறையில் அடைபட்டுள்ள குற்றவாளிகள் பசிக் கொடுமையால் வருந்துவதை அறிந்து அங்குச் செல்கிறாள். பலருக்கும் அமுதசுரபியிலிருந்து உணவளிக்கிறாள். பசிக்கொடுமையால் துன்புற்று, அதன் காரணமாகவே குற்றம் செய்தவர் பலர் அங்கு அடைபட்டுள்ளனர். கொலை முதலிய பல்வேறு குற்றங்களுக்குக் காரணம் பசிக்கொடுமை என்பதை உணர்கிறாள். வர்க்கமுரண்பாடு நிலவும் காலம் முழுவதும்   சமூகத்தில் சமத்துவத்திற்கு இடமில்லை என்பதாக ஞானியின் கருத்தமைகிறது.

ஏற்றத்தாழ்வான சமூகச் சூழலில் கொடுமைகள் பல நேர்கின்றன.  கொடுமைகளுக்குக் காரணம் உணவின்மை போன்ற பல காரணங்கள்.  சமூகத்தின் இந்நிலை தீர்வதற்கு அள்ள அள்ள குறையாத ஓர் அட்சயபாத்திரம் இருந்தால் மட்டுமே முடியும் என்பதாக காப்பியத்தின் கருத்து அமைகிறது. தற்காலச்சூழலில் சமத்துவமும் சமதர்மமும் நிகழாமல் வர்க்கமுரண்பாடுகளைக் களைவது சாத்தியமில்லை என்பதாக ஞானி கருதுகிறார்.

இவ்வாறெல்லாம் சமதர்ம நோக்கில் திறனாய்ந்து  மார்க்சியத்திற்குப் புது வெளிச்சம் பாய்சிருக்கிறார்.  பசிப்பிணி தீர்ப்பதுதான் பேரறம். இந்த உண்மையை மையப்படுத்துவது மணிமேகலை. இந்தத் தமிழறம் நம் காலத்திலும் ஊர்கள், தோறும் நடைபெறுவதைக் காணலாம். ஏற்றத்தாழ்வு இருக்கும்வரை சமூகத்தில் வர்க்க வேறுபாடு இருந்துகொண்டே இருக்கும் என்கிறார்.

இராமாயணத்தின் – கதைகள் – விளக்கங்கள் பல அறிஞர்களால் இலக்கிய ஆர்வலர்களால் பல்வேறு கோணங்களில் மீள்வாசிப்புக்குட்படுத்தபட்டுள்ளது. (இராவணப் பெரியோன் Ravana the Great – பூரணலிங்கம் பிள்ளை,  இராவண காவியம் – புலவர் குழந்தை, இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும் – அ.ச.ஞா., சாபவிமோசனம் – புதுமைப்பித்தன்)

ஞானி இராமாயணத்தில் இடம்பெறும் அகலிகை கதையைத் தனது புரிதலுக்குட்படுத்தி  ‘கல்லிகை’ என்ற பெயரில் மறுவாசிப்பு செய்துள்ளார். வால்மீகி உருவாக்கிய காவியத்தைக் கம்பர் எடுத்துக் கொள்கிறார். அகலிகையைத் தூயவளாக்குகிறார். அவள் மனத்தினால் தீயவளில்லை என்கிறார். ஞானியின் பார்வையில்  இந்திரன் உடைமை வர்க்கத்தான். கவுதமன் மதவாதி. இந்த இருபெரும் சக்திகளுக்கிடையில் மாட்டிக்கொண்டவள்  அகலிகை. கௌதமனும் சரி இந்திரனும் சரி தம் தேவைக்குத் தகுந்தவாறு பயன்படுத்திக் கொண்டவர்கள். அகலிகையைக் குற்றம் சொல்ல முடியாது என்கிறார்.

கம்பர் காவியத்தை மார்க்சிய நெறிக்குட்படுத்தும் ஞானி, இராமன் அரசபதவி துறந்து காட்டிற்குச் செல்கிறான். காட்டிற்குள் வாழ்ந்த இவனுக்கு வேடர்கள், சுக்ரீவன், அனுமன் முதலியவர்களின் நட்பு கிட்டுகிறது. ஏழைகளோடு உறவு கொள்ளும் மனநிலையை இராமன், வனவாசத்தின் போதுதான் பெற்றான். தோழர்களின் ஒத்துழைப்போடு சீதையைக்  கவர்ந்து சென்ற இராவணனோடு போர் புரிகிறான். வெற்றி பெறுகிறான்.

இராமன் அயோத்தியில் அரசபதவி வகித்தான் என்றால் ஏழைகளோடு தோழமை கொள்ளும் வாய்ப்பு அவனுக்கு ஏற்பட்டிருக்காது. கதையின் இறுதியில் போர் முடிந்து அயோத்திக்குத் திரும்பிய இராமன் அரசனாகிறான். இப்பொழுது ஆளும் வர்க்கக்குணம் இவனுக்குள் வருகிறது. மனித தன்மையை இழக்கிறான். சீதையைச் சந்தேகித்துக் காட்டிற்கு அனுப்புகிறான்.

உடைமைச் சமூகத்தின் புத்தி இராமனுக்குள் வந்துவிடுகிறது. மனிதர்களுக்குள் ஏற்றத்தாழ்வு இருக்கும் காலம் முழுவதும் இராமகாதை நடைபெறும் இப்படிப் பொருள்படுத்துகிறார் ஞானி (மறுவாசிப்பில் தமிழிலக்கியம், ப.159). ஆளும் வர்க்கத்திலிருந்தும் மதவாத சக்திகளிடமிருந்தும் மனிதனுக்கு விடுதலை வேண்டும்/பெண்ணுக்கும் விடுதலை வேண்டும் என்பதாக இவரது பார்வை அமைகிறது. மறுவாசிப்பைத் தம் சமகால மக்கள் விளங்கிக் கொள்ளும் முறையில் இவரது பார்வை விரிவு பெறுகிறது.

தமிழறம்

ஞானியின் இலக்கியத் திறனாய்வில் அடிக்கடி இடம்பெறும் ஒரு சொல் தமிழறம் என்பதாகும். முதலில் பழந்தமிழ்ச் சமூகத்தில் நிலவிய தமிழறத்தை இங்கு விரிவாகக் குறிப்பிடலாம். சங்க இலக்கியம் ஒரு மாறுதல் கால இலக்கியம். சங்க காலத்திற்கு முன்பு இருந்தது இனக்குழுச் சமூகம். அந்தச் சமூகத்தில் மனிதர்களுக்கிடையில் ஏற்றத்தாழ்வில்லை. ஆண்டான் அடிமை என்ற நிலை இல்லை. கிடைத்ததைப் பங்கிட்டு உண்பது இவர்கள் நடைமுறை. வேட்டையாடிக் கிடைத்த உணவில் முதற்பங்கு பெரியவர்களுக்கும் கலைஞருக்கும் பெண்களுக்கும் உரியது. இத்தகைய சமுதாயம் நாளடைவில் தனிவுடைமைக்கும் அரசதிகாரத்திற்கும் இடங்கொடுத்து உடைமைச் சமூகமாக மாறியது. இந்தச் சமூகத்தில் ஆண்டான் x  அடிமை வேறுபாடு வந்துவிடுகிறது. தனிவுடைமை முன்னுக்கு வருகிறது. உடையவர்  x  இல்லாதவர் என்ற வேறுபாடு வந்துவிட்டது. ஒரு சிலர் செல்வராகவும் பலர் வறியவராகவும் இருக்கின்றனர்.

சங்க இலக்கியத்தில் இவ்இருவித போக்குகளையும் காண்கிறோம். இனக்குழுச் சமூகம் அழிந்த நிலையிலும் அந்தச் சமூகத்திலும் உயர்ந்த விழுமியங்களைப் போற்றி நிற்கும் சான்றோர்கள் இருக்கின்றனர். இந்தப் பண்புகளை இவர்களால் கைவிட இயலாது.  ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ (புறம்.192) ‘எல்லோர்க்கும் கொடுக்கும் மதி’ (புறம்.163) முதலிய உயர்ந்த குணங்களை விடாது கடைப்பிடிக்கும் சான்றோரைப் பெருமளவு காணமுடிகிறது.

சங்க இலக்கியத்தில் இத்தகைய உணர்வுச் சிக்கலை நாம் விரிவாகக் காண்கிறோம். கோப்பெருஞ்சோழன் புலவர், வறியவர் போன்றவர்களுக்கு நிறையப் பகிர்ந்தளிக்கிறான். ஆனால் அவனது மக்களுக்கு இதில் உடன்பாடில்லை. படை திரட்டிக் கொண்டு தன் தந்தையோடு போரிட விரும்புகிறார்கள். கோப்பெருஞ்சோழனும் போரிடத் தயாராகிறான். இந்நிலைகண்டு புல்லாற்றூர் எயிற்றியனார் தலையிடுகிறார் (புறம்.67). கோப்பெருஞ்சோழனுக்கு அறம் உரைக்கின்றார். போரில் நீங்கள் வெற்றி பெற்றால் உங்களுக்குப் பின்னர் இந்த அரசு செல்வத்தை யாருக்கு அளிப்பீர்கள். அல்லது நீங்கள் தோற்றால் நிலைமை என்ன ஆகும். ஆகவே இந்த அரசு செல்வத்தை உங்கள் மக்களுக்கே உரிமையாக்கிவிட்டு வடக்கிருத்தலே நல்லது என்கிறார்.  கோப்பெருஞ்சோழன் முன்னைய சமூகத்தின் அறத்தைத் தழுவிக் கொண்டவன். அவனது மக்களோ உடைமைச் சமூகத்தில் வளர்ந்தவர்கள். செல்வம்தான் அவர்களுக்குப் பெரியது. பண்பாடு பெரிதில்லை. கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்து உயிர்துறக்கிறான். அவனோடு சேர்ந்து புலவர் பலரும் வடக்கிருந்து உயிர் விடுகின்றனர். புதிய சமூகத்தின்  கொடுமையை அவர்களால் ஏற்க இயலாது, ஆகவே மடிகின்றனர். உடைமைச் சமூகத்தின் இப்போக்கு இன்றும் தொடர்வதைக் காணமுடியும். இவ்வாறெல்லாம் தமிழ்ச் சமூகத்தின் இந்த நிலையை மார்க்சியர் ஒருவரே புரிந்து கொள்ளமுடியும் என்கிறார் ஞானி.

பழந்தமிழிலக்கியத்தின் குறிப்பிட்ட சிறப்பான பாடலை இங்குக் குறிப்பிடலாம். இப்பாடல் எழுதப்பட்டது சங்க காலத்தின் முதற்காலமாக இருக்கலாம். பாடியவர் பக்குடுக்கை நன்கணியார்.

‘ஓர்இல் நெய்தல் கறங்க ஓர்இல்

ஈர்ந்தண் முழவின் பாணி ததும்பப்

புணர்ந்தோர் பூஅணி அணியப் பிரிந்தோர்

பைதலுண்கண் பணிவார்பு உறைப்பப்

படைத்தோன் மன்றஅப் பண்பி லாளன்!

இன்னாது அம்மஇவ் உலகம்

இனியகாண்க இதன் இயல்உணர்ந் தோரே.’   (புறம்.194)

இப்பாடலில் கவிஞர், ஒரு வீட்டில் மணப்பறை முழங்க, அதே தெருவில் இன்னொரு வீட்டில் சாப்பறை முழங்குகிறது. இப்படி இந்த உலகத்தைப் படைத்தவன் பண்பிலாதவன். இன்னாத இவ்வுலகில் இனிய காண்பதே அறிவுடைய செயலாகும் என்பதாக கூறுகிறார்.

ஞானி, இனக்குழுச் சமூகத்தில் முன்பு உலகம் ஒன்றாக இருந்தது. பின்னர் உடைமைச் சமூகத்தில் உலகம் இரண்டாகப் பிளவுபட்டது ஏற்றத்தாழ்வு நிறைந்த இந்த உலகம் வெறுக்கத்தக்கது. இவ்வாறு  வேறுபட்ட உலகத்தைப் படைத்த இறைவன் பண்பில்லாதவன்.  இன்பமும் துன்பமும் நிறைந்த இவ்வுலகில் அறநெறியில் இன்பம் தேடி வாழ்வதுதான் மனிதச் செயல் என்கிறார்.

மற்றொரு பாடலான ‘தென்கடல் வளாகம் பொதுமையின்றி’ (புறம்.189) எனத் தொடங்கும் நக்கீரர் பாடல், நாட்டை ஆளும்  ஒரு மன்னனுக்கும், இரவில் உணவுக்காகக் காட்டில் வேட்டையாடித் திரியும் வேடனுக்கும் – இருவருக்கும் உணவு நாழியளவு, உடுத்த இரண்டு ஆடைகள் மட்டுமே. பிறவகைகளில்  இருவரும்  ஒத்தவரில்லை. வேடன் தான் வேட்டையாடிய உணவினைப் பிறருக்குப் பகிர்ந்துதான் உண்பான். அவனால் தனித்து உண்ணமுடியாது. செல்வமுள்ளவன் பிறருக்குக் கொடுத்து உதவவேண்டும். செல்வத்துப் பயனே ஈதல்.  ஆனால் செல்வத்தைத் தானே வைத்திருந்து நுகர்வான் என்றால் அவன் இழப்பது பலவாகும். அரசனும் வேடனுமாக வேறுபட்ட இந்தச் சமூகத்தில்தான் இத்தகைய கொடுமை நிகழ்கிறது. பிறரோடு பகிர்ந்து கொள்ளாமல் ஒருவன் செல்வத்தை வைத்திருப்பான் என்றால் இத்தகையவனுக்கு வாழ்வில் எந்த இன்பமும் கிடைப்பது இல்லை.

‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ (புறம்,192) என்ற கணியன் பூங்குன்றனாரின் பாடலில், சமூகம் வேகமாக மாறி வருகிறது. மின்னல் மின்னிப் பெரிதாக இடிஇடித்து மழை பொழிகிறது. ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. வெள்ளத்தில் அகப்பட்ட ஒரு புணை சில சமயம் மேட்டிலும் சில சமயம் பள்ளத்திலும் அடித்துச் செல்லப்படுகிறது. இது போலவே சமூகத்தில் வந்த புதிய போக்கு இப்படித்தான் மேடு பள்ளம் இன்றி எல்லாவற்றையும் தகர்த்துக் கொண்டு வருகிறது. சில சமயம்  சமூகத்தில் மேலிடத்தில் பெரியவர். சமூகத்தின் அடித்தளத்தில் சிறியவர். இவர்களின் செல்வத்திற்கும் வறுமைக்கும் தனிப்பட்ட காரணங்கள் இல்லை. சமூக வெள்ளத்தில் மாட்டிக் கொண்டவர்கள் இவர்கள். ஆகவே பெரியவர் என்று சிலரைப் பார்த்து வியப்பதுமில்லை. சிறியவர் எனப் பலரைப் பார்த்து இகழ்வதுமில்லை.

உடைமைச் சமூகத்தின் மாற்றங்களினால் ஏற்படும் விளைவுகள் மக்களின் மனத்தையும் மனிதப் பண்பையும் அழித்துவிடும் ஆற்றல் வாய்ந்தவை. என்ற உண்மையை உணர்ந்து பழந்தமிழ்ச் சான்றோர் தொலைநோக்குப் பார்வையுடன் சிந்தித்து முரண்களுக்கு இடையேயும் தமிழ்ப் பண்பாட்டைப் பேணிக் காக்கும் முயற்சியை மேற்கொண்டுள்ளனர் என்பதைப் பழந்தமிழ்ப் பாடல்கள் உணர்த்துகின்றன.

தமிழிலக்கியத்தில் முதன்மையானதும் உன்னதமானதுமான சங்க இலக்கியத்தில் காணப்படும் இந்தத் தமிழறம் அடுத்துவரும் திருக்குறள், சிலம்பு, மணிமேகலை ஆகியவற்றின் ஊடாகவும் இயங்குகிறது.

‘இருவேறு உலகத்து இயற்கை திருவேறு

தெள்ளிய ராதலும் வேறு’  (374)

என்கிறார் வள்ளுவர்.

இந்தச் சமூகத்தில் செல்வமும் அறிவும் எதிர்துருவங்களில் இயங்குகின்றன. காரணம் உலகம் இன்று இரண்டுபட்டதாக மாறிவிட்டது. இரண்டுபட்ட இந்த உலகில் மனித வாழ்க்கை என்பது உயர்ந்தோர் x தாழ்ந்தோர், செல்வர் x வறியவர் என்ற பாகுபாட்டிற்கு உரியதாகி விட்டது. இந்தச் சூழலில்தான் வள்ளுவரை மார்க்சிய கண்ணோட்டத்தில் விரித்துரைக்கிறார் ஞானி.

‘ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்

பேரறி வாளன் திரு’ (215)

இயற்கையாகப் பெய்த மழையால் ஊர் நடுவில் உள்ள குளம் நிறைகிறது. இந்தக் குளத்திலிருந்து யாரும் நீர் எடுக்கலாம். அதே போன்றதுதான் பேரறிவாளன் ஒருவனிடம் சேர்ந்த செல்வம். ஒருவனிடத்தில் சேரும் பெருஞ்செல்வத்தில்  பலரது உழைப்பு அடங்கியிருக்கிறது. பலரது உழைப்பில் உருவானதே பெருஞ்செல்வம். இத்தகைய செல்வத்திற்கு எல்லோரும் உரிமை உடையவர். எனவே தேவையானபோது  எடுத்துக்கொள்ளலாம்.

இத்தகைய பண்பைத்தான் வள்ளுவர் ஒப்புரவு என்கிறார். இதனையே இன்று தமிழறம் என்கிறார் ஞானி. தற்காலத்தில் இதைச் சமத்துவம் என்றும் சமதர்மம் என்றும் ஏற்றத்தாழ்வு மிகப் பெருகிவிட்ட இக்காலச் சமூகத்தில் சமதர்மம் அல்லாமல் நமக்கு வாழ்வில்லை என்கிறார். ஞானி தன்னை ஒரு தமிழ்மார்க்சியன் என்று கருதிக் கொள்கிறார்.  தமிழால் தனக்குள் மார்க்சியம் வளம் பெற்றது என்கிறார். இவர் தமிழியல் ஆய்வில்  மார்க்சிய  சிந்தனையை மேலோங்கச் செய்தவர்.  மார்க்சியத்தின் வழியே தமிழைச் செழுமைப்படுத்தமுடியும் என்பதாக இவரது கருத்தமைகிறது.

மெய்யியல்

மெய்யியல்  ஞானியின் திறனாய்வு பார்வையில் முக்கியத்துவம் பெறுவதைக் காணலாம். திறனாய்வு என்பது மனிதனை முன்னைய தளைகளிலிருந்து விடுதலை செய்வதாக இருக்க வேண்டும். இந்த நோக்கத்தோடுதான்  மெய்யியல் என்று பேசுகிறார். வாழ்க்கைக்கு என்ன அர்த்தம் இருக்கமுடியும்?  விடுதலையைத் தவிர வேறு அர்த்தம் இருக்கமுடியாது என்கிறார்.

தமிழிலக்கியத் திறனாய்வாளர்களில் மெய்யியல் பற்றிப் பேசுபவர் அரிது. ஞானி மட்டுமே மெய்யியல் நோக்கை முதன்மைப்படுத்தித் திறனாய்வு செய்துள்ளார். இலக்கியத் திறனாய்வு என்று தொடங்கினால் அது வாழ்க்கையோடும் வரலாற்றோடும் பிரபஞ்சத்தோடும்  மனிதனுக்கான உறவு பற்றிப் பேசுவதாக இருக்கவேண்டும். இத்தகைய விரிவான பார்வையின் பின்னணியில் தான் குறிப்பிட்ட இலக்கியம் பற்றிப் பேசமுடியும். மனித வாழ்வு எவ்வகையில் அழகுபெறும்? மனிதவாழ்வில் எப்பொழுது அறம் தங்கும்? மனித வாழ்வுக்கான அர்த்தம் என்ன? மெய்ம்மை என்ன? என்று சிந்தனைகளுக்கான விளக்கங்கள் புறநானூற்றுப்பாடலில் விரிவாக கூறப்பட்டுள்ளதைத் தமது நூலில் விளக்கியுள்ளார். பழந்தமிழ்ச் சமூகத்தின் பொதுமை அறம் உன்னதமானது. அனைவருக்குமானது. வாழ்வின் மேன்மையைச் சொல்லுவது. ஒட்டுமொத்தமான சமூகமும் ஒன்றுபடுவதற்கான மெய்யியல் கருத்துகள் இலக்கியங்களில் பொதிந்துள்ளன. பக்தி இலக்கியம் சமயச்சார்புடையது என்று விலக்கிவிட முடியாது. சமயத்தினுள்ளும் மெய்யியல் கருத்துகள் மனித விடுதலையை இறுதி இலக்காகக் கொண்டுள்ளன என்று கூறும் ஞானிக்குள் மார்க்சியம் கடந்த சமயப்பார்வை தென்படுவதைக் காணமுடிகிறது. இதனால் இவர் பிற மார்க்சியரிடமிருந்து பெரிதும் மாறுபடுகிறார்.

நிறைவாக

நாடு, மொழி முதலிய எல்லைக்குட்படாமல் சில திறனாய்வுக்கூறுகள் பொதுமையாக இருக்கும். இவ்வகையில் ஞானியின்  திறனாய்வு நெறி மார்க்சிய நோக்கில் பல புதிய பரிமாணங்களைக் கண்டிருக்கிறது.  தமிழ்மார்க்சியத்தின் மையக்கூறு சமத்துவமும் சமதர்மமுமாகும்.  பிரபஞ்சத்தின் உயிரியக்கம், படைப்பியக்கம் நமக்குள்ளும் இருக்கிறது / இயங்குகிறது என்கிறார்.  பழந்தமிழிலக்கியத்தில் புறநானூறும் வள்ளுவமும் தமிழறத்தின் உச்சம். இவை மனித வாழ்க்கையைப் பற்றியும் உலகினைப் பற்றியும் விளக்கமாகப்  பேசுகின்றன. தமிழறமும் தமிழரின் மெய்யியற் சிந்தனைகளும் வேறுவேறல்ல. திருவள்ளுவரின் ஒப்புரவு என்ற பார்வை மார்க்சியத்தின் சமதர்ம இலக்காகும்.  தமிழிலக்கியத் திறனாய்வில் ஞானியின் தமிழ்மார்க்சிய நெறி குறிப்பிடத்தக்கது என்பதில் அய்யமில்லை.

பார்வை நூல்கள்

 • ஞானி, படைப்பியல் நோக்கில் தமிழ் இலக்கியம், வைகறை, கோவை,
 • ஞானி, நானும் என் தமிழும், நிகழ், கோவை,
 • ஞானி, மறுவாசிப்பில் தமிழ் இலக்கியம், காவ்யா, பெங்களூர்,
 • ஞானி, தமிழ்மெய்யியல் அன்றும் இன்றும், காவ்யா, சென்னை,
 • கைலாசபதி க., இலக்கியமும் திறனாய்வும், பாட்டாளிகள் வெளியீடு, சென்னை, 1976.
 • சிவஞானம் ம.பொ., மாதவியின் மாண்பு, ம.பொ.சி.பதிப்பகம், சென்னை,
 • நடராசன் தி.சு., சிலப்பதிகாரம் மறுவாசிப்பு, என்.சி.பி.எச்.,
 • வல்லிக்கண்ணன், தமிழில் சிறுபத்திரிகைகள், ஐந்திணை பதிப்பகம்,

இர.ஜோதிமீனா

முனைவர்பட்ட ஆய்வாளர்

தமிழ்த் துறை, அரசு கலைக்கல்லூரி,

கோயம்புத்தூர் – 18