Abstract: The thoughts of Swami Viveganandar are not standing out only the limitations how builds the personality of a man to the Barath nation but also the whole world.  The western philosophers who interprets the personality reveal different theories on personality. Sexual motives by Sigmund Freud, myths by Karl Yunk and society by Eric Ericson are referred those motivations of one personality.  Differed from those motivations, Swami Viveganandar emphasized in unique way of Indian tradition that one personality determined by the spiritual power. He said that energy, soul, willpower, intellectual power and spiritual power are the five influencing one personality however spiritual power is determined everything. He brought the spiritual power which one intrapsychic is raising a man to the Indian domestic. He emphasises each have to raise the divine energy and nature. Further, thoughts and actions of a man is decided his present and the future when that thoughts and actions are to be right, clear and strong, the man become a good personality which makes a path for the society and country with good personality.  Thoughts for personality by Viveganandar which were not included the time frame of the vision of prophecy are essential needed for the contemporary world. The study explains, today, the thoughts of Veveganadar are seeding to free from the misunderstanding on the personality and to get the attention of the real best personality. The data for the study gathered from secondary sources which had done using analytical method, comparative method and critical method.

Keywords: Personality, Spiritual power, Willpower, Energy, Intellectual strength

 ஆய்வுச் சுருக்கம்

சுவாமி விவேகானந்தரின் சிந்தனைகள் ஒரு தனிமனித ஆளுமை எவ்வாறு கட்டமைக்கப்பட வேண்டும் என்பதற்கான சிறந்த வரையறைகளைப் பாரத தேசத்திற்கு மட்டுமன்றி முழு உலகத்திற்குமாகப் பறைசாற்றி நிற்கின்றன. ஆளுமை குறித்து விளக்கமுற்பட்ட மேலைத்தேய சிந்தனையாளர்கள் ஆளுமை குறித்துப் பல்வேறுபட்ட கருத்தாக்கங்களை வெளிப்படுத்தி நின்றனர். சிக்மண்ட் புறொய்ட் பாலியல் உந்தல்களையும், காள் யுங் தொன்மங்களையும், எரிக் எரிக்சன் சமூகத்தினையும் ஒருவரது ஆளுமையினைத் தீர்மானிக்கின்ற ஊக்கிகளாகக் குறிப்பிடுகின்றனர். சுவாமி விவேகானந்தர் இவை யாவற்றிலும் இருந்து வேறுபட்டு இந்திய மரபிற்கே உரிய தனித்துவமான பாணியில் ஒருவரது ஆளுமையினைத் தீர்மானிப்பது ஆன்மீக பலமே என்பதனை வலியுறுத்தினார். ஒருவரது ஆளுமையைத் தீர்மானிப்பதில் உடல் பலம், உயிர் பலம், மனபலம், அறிவு பலம், ஆன்மீக பலம் எனும் ஐந்து கூறுகள் செல்வாக்குச் செலுத்துவதாகக் குறிப்பிடும் விவேகானந்தர் ஆன்மீக பலமே அனைத்தையும் தீர்மானிப்பதாகக் குறிப்பிடுகின்றார். ஒருவரது உள்ளத்திலே புதைந்து கிடக்கின்ற ஆன்மபலமே ஒருவனை உயர்வடையச் செய்கின்றது. அத்தகைய ஆன்ம பலத்தை இந்திய மக்களுக்கு எடுத்தருளினார்.

ஒவ்வொருவரும் தமது தெய்வீக ஆற்றலையும், இயல்பையும் ஓங்கச் செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். மேலும் ஒருவனது சிந்தனைகளும், செயல்களுமே அவனது நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் தீர்மானிக்கின்றன என்பதனை எடுத்துக் காட்டினார். எனவே சிந்தனைகளும், செயல்களும் சரியானதாகவும், தெளிவானதாகவும், வலுவானதாகவும் அமைகின்றபோது ஒரு மனிதன் சிறந்த ஆளுமைமிக்க மனிதனாக உருவாகின்றான் என்பதனை எடுத்துக் காட்டியதோடு, சிறந்த ஆளுமை மிக்க தனிநபர்களின் உருவாக்கம், சிறந்த ஆளுமை மிக்க சமூகத்தினதும், நாட்டினதும் உருவாக்கத்திற்கு வழிவகுக்கும் என்பதனையும் தெளிவாக எடுத்துக்காட்டினார்.இத்தகைய கால வரம்பிற்குட்படாத தீர்க்கதரிசனத்தைக் கொண்ட விவேகானந்தரது ஆளுமை குறித்த சிந்தனைகள் சமகால உலகிலும் மிகவும் தேவைப்பாடுடையனவாய் விளங்குகின்றன. இன்றைய உலகில் ஆளுமை என்பது குறித்து காணப்படுகின்ற தவறான புரிந்து கொள்ளல்களில் இருந்து விடுபட்டு, உண்மையான சிறந்த ஆளுமை குறித்த விழிப்புணர்வினைப் பெற்றுக் கொள்வதற்கு சுவாமி விவேகானந்தரது சிந்தனைகள் வித்திடுகின்றன என்பதனை இவ்வாய்வு வெளிப்படுத்தி நிற்கின்றது.இவ் ஆய்வுக்குரிய தரவுகள் இரண்டாம் நிலைத்தரவுகளில் இருந்து பெற்றுக் கொள்ளப்பட்டதோடு, இவ் ஆய்வானது பகுப்பாய்வு முறையியல், ஒப்பீட்டு முறையியல், விமர்சன முறையியல் என்பவற்றின் துணைகொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

திறவுச் சொற்கள்: ஆளுமை, ஆன்ம பலம், மனபலம், உடல் பலம், அறிவுசார் பலம்.

  1. ஆய்வுச் சிக்கல்

ஒரு நிலையான அபிவிருத்தியை நாட்டில் ஏற்படுத்துவதற்குத் தனிநபர் ஆளுமை என்பது இன்றியமையாத ஒன்றாகும். இத்தகைய தனிநபர் ஆளுமையினை விருத்தி செய்வதற்கு ஆளுமை குறித்த சரியான புரிந்துகொள்ளல்கள் அவசியமாகின்றன. ஆனால் இன்றைய இயந்திரமயமான விஞ்ஞான தொழில்நுட்ப உலகில் உண்மையான ஆளுமை என்பது எவ்வாறிருக்க வேண்டும், அதனை எவ்வாறு விருத்தி செய்து கொள்வது? என்பது குறித்துப் பெரும்பாலும் தவறான புரிந்து கொள்ளல்களே காணப்படுகின்றன. இதன் விளைவாக ஒரு சமூகம் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுப்பதோடு வன்முறைகளுக்கும் இலக்காகின்றது. அத்தோடு சமூகத்தில் குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் ஆளுமை குறித்த சரியான விழிப்புணர்வின்மை ஆரோக்கியமான ஆளுமை கொண்ட எதிர்கால சந்ததியின் இருப்புக்கு பெரும் அச்சுறுத்தலாகும். இத்தகைய நிலைப்பாட்டிலிருந்து மீள்வதற்கும், ஆளுமை குறித்த சரியான விழிப்புணர்வினை ஏற்படுத்துவதற்கும், ஒரு உறுதியான தனிமனித ஆளுமையினைக் கட்டமைத்துக் கொள்வதற்கும், அதன் வழி சமூகத்திலும், நாட்டிலும் நிலையான அபிவிருத்தியை ஏற்படுத்துவதற்கும் விவேகானந்தருடைய ஆளுமை குறித்த சிந்தனைகள் சமகாலத்தில் எவ்வளவு பொருத்தப்பாடுடையனவாக உள்ளன என்பதே இவ் ஆய்வின் பிரச்சினையாகும்.

  1. ஆய்வின் கருதுகோள்கள்
  2. விவேகானந்தருடைய ஆளுமை குறித்த சிந்தனைகள் ஆளுமை என்பது குறித்த சரியான விழிப்புணர்வினை ஏற்படுத்தக்கூடியன.
  3. ஒரு சமூகத்தில் நிலையான அபிவிருத்தியை ஏற்படுத்தக்கூடிய சிறந்த ஆளுமையினை விருத்தி செய்வதற்கு விவேகானந்தருடைய சிந்தனைகள் வழிவகுக்கக்கூடியன.
  4. உறுதியான ஆளுமையினை விருத்தி செய்வதற்கான விவேகானந்தரின் சிந்தனைகள் சமகால உலகில் மீள்வாசிப்புச் செய்யப்பட வேண்டியவை.
  5. ஆய்வின் பின்னணியும் முக்கியத்துவமும்

சமகால இந்திய மெய்யியற் சிந்தனையாளர்களில் சுவாமி விவேகானந்தர் முதன்மை வாய்ந்தவராவார். அவர் தன்னுடைய ஆளுமை பற்றிய சிந்தனைகளால் இருளிலும், அறியாமையிலும், சிறுமையிலும், அடிமையிலும் அகப்பட்டு துன்பப்பட்டுக் கொண்டிருந்த பாரதத்தை எழுச்சி பெறச்செய்தார். தனிமனிதனது ஆன்மீக ஆற்றலும்,உள்ளத் துணிவும் எவ்வளவு பரந்ததும், ஆழமானதும் என்பதனை தன்னுடைய சிந்தனைகளாலும், வாழ்க்கையாலும் வெளிப்படுத்தி இந்திய தேசத்தின் விடிவெள்ளியாக பரிணமித்தவர். அவரது ஆளுமை குறித்த கருத்துக்களில் வேத, உபநிடதங்கள் ஆளுமை குறித்து வெளிப்படுத்திய உயர்ந்த எண்ணக்கருக்களும், கருத்தமைவுகளும் செல்வாக்குச் செலுத்தின. எனினும் பழமை என்னும் வேரை நிலத்தில் ஆழமாகவும், வலுவாகவும் ஊன்றிக் கொண்டு மேலெழுந்த புதுமை என்னும் கிளைகளைப் பரப்பி ஆளுமை விருத்தி பற்றிய தத்துவ மரத்தை தளிர்க்க வைத்தார். விவேகானந்தரது ஆளுமை பற்றிய சிந்தனைகள் உண்மையான ஆளுமை எவ்வாறிருத்தல் வேண்டும் என்பதனையும், அத்தகைய உண்மையான ஆளுமையினை விருத்தி செய்து கொள்வதன் வழியாக தனிநபர்களும், அதன் வழியாக சமூகம், நாடும் செழித்தோங்கும் என்பதனையும் வெளிப்படுத்தின. எனவே இத்தகைய பயன்மிக்க சிந்தனைகளை மீட்டெடுக்க வேண்டியது அவசியமாகின்றது. அவ்வாறு மீட்டெடுப்பதன் மூலம் ஆளுமை குறித்த சமகால நிலைமைகளுடன் அவற்றை பொருத்திப் பார்க்க முடியும். இதன் மூலம் பொருத்தமுடையதும், அவசியமானதுமான கருத்தாக்கங்களை மீள்வலியுறுத்த முடியும். மேலும் அவற்றின் இன்றைய தேவை என்ன? அவை சமகால உலகில் ஏற்புடையனவா? அல்லவா? என்பவற்றை ஆராய்ந்து வெளிப்படுத்துவதே இவ்ஆய்வின் முக்கியத்துவமாக அமைகின்றது.

  1. ஆய்வுமுறையியலும், தரவு சேகரித்தலும்

ஙஇக்கட்டுரையானது பகுப்பாய்வு முறையியல், ஒப்பீட்டு முறையியல், விமர்சன முறையியல் என்பவற்றின் துணைகொண்டு மேற்கொள்ளப்படுகின்றது. இக்கட்டுரையில் விவேகானந்தருடைய ஆளுமை குறித்த சிந்தனைகளையும், சமகால உலகின் நிலைப்பாடுகளையும் விரிவாக பகுப்பாய்வு செய்யும் வகையில் பகுப்பாய்வு முறையியலும், ஆளுமை குறித்த பல்வேறு அறிஞர்களது கருத்துக்களுடன் விவேகானந்தரது ஆளுமை குறித்த கருத்துக்களை ஒப்பிட்டு அதன் மேன்மைத் தன்மையினை எடுத்துக்காட்டும் வகையில் ஒப்பீட்டு முறையிலும் பயன்படுத்தப்பட்டு, அக்கருத்துக்கள் விமர்சன ரீதியாக ஆராயப்பட்டு விளக்கப்படவுள்ளன. இக்கட்டுரைக்குத் தேவையான தரவுகள் இரண்டாம் நிலைத்தரவுகளினூடாக பெறப்படுகின்றது. அதாவது விவேகானந்தரால் எழுதப்பட்ட நூல்களையும், விவேகானந்தரது ஆளுமை பற்றிய சிந்தனைகள் குறித்து விமர்சனரீதியாக எழுதப்பட்ட நூல்களையும், சஞ்சிகைகள், பத்திரிகைகள், இணையத்தளம் போன்றவற்றில் வெளியான கட்டுரைகளையும் ஆதாரமாக கொண்டு தரவுகள் பெறப்படுகின்றன.

  1. ஆய்வுரை

5.1 அறிமுகம்

இந்திய சிந்தனை மரபு ஆளுமை விருத்தி குறித்து உயர்ந்த எண்ணக்கருக்களையும், கருத்தமைவுகளையும் வழங்குகின்றது. இந்தக் கருத்தமைவுகள் வேத உபநிடதங்களில் இருந்து விரிவாக்கம் செய்யப்பட்டவை. அந்தவகையில் விவேகானந்தருடைய கருத்துப்படி ஒரு ஆன்மாவினுடைய எல்லா சக்திகளும், சாத்தியப்பாடுகளும் உயிர் பெறுகின்றபோது ஆன்மீக வாழ்வு விழிப்படைகின்ற போது ஆளுமை விருத்தி ஏற்பட்டு முடிவில் மனிதன் தூய்மையானவனாகவும், பூரணமானவனாகவும் உருவாகின்றான். ஆளுமை என்பது ஒரு நபர் சிந்திக்கின்ற, உணர்கின்ற, நடந்து கொள்ளுகின்ற வழிகளை வெளிப்படுத்தி நிற்கின்ற ஒன்றாகும். ஒரு தாவரம் மண்ணுக்குள் புதையுண்டு மறைந்திருக்கின்ற விதையிலிருந்து தோன்றுகின்றது. ஆனால் அந்த விதையின்றி அந்தத் தாவரம் தோன்ற முடியாது. அது போன்றே விதைகள் போன்று மனதில் மறைந்திருக்கின்ற சிந்தனைகளில் இருந்தே ஒவ்வொரு நடத்தைகளும் தோன்றுகின்றன. அந்த சிந்தனைகளை விடுத்து மனிதனது சிந்தனைகள் அணுகப்பட முடியாதவை. ஒருவருடைய கடந்தகால சிந்தனைகளும், செயற்பாடுகளும் அவருடைய நிகழ்காலத்தை தீர்மானிக்கின்றன. இந்த நிகழ்கால சிந்தனைகளும், செயற்பாடுகளும் எதிர்காலத்தை தீர்மானிக்கின்றன. இந்த விதியே சுவாமி விவேகானந்தருடைய கருத்துப்படி ஆளுமை விருத்தியினை ஆளுகின்ற விதியாகும்.

சுயம் பற்றிய பிரச்சினைகள், ஆன்மா, மனித இயல்பு, மனித இருப்பு மற்றும் அவை யாவை? என்ன பொருள்படுகின்றன? அவை எவ்வாறு தீர்மானிக்கப்படுகின்றன? போன்ற விடயங்கள் பற்றிய மனித அனுபவமும் மனித வாழ்வில் வெளிப்படுவதோடு அவை ஆளுமை விருத்தியிலும் செல்வாக்குச் செலுத்துவதனை பாரம்பரிய இந்திய தத்துவமரபு விளக்கி நிற்கின்றது. இத்தத்துவமரபு விவேகானந்தரது ஆளுமை விருத்தி பற்றிய சிந்தனைகளிலும் பெரிதும் செல்வாக்குச் செலுத்தின. சிக்மண்ட் புறொய்ட் பாலியல் உந்தல்களையும், காள் யுங் தொன்மங்களையும், எரிக் எரிக்சன் சமூகத்தினையும் ஒருவரது ஆளுமையினைத் தீர்மானிக்கின்ற ஊக்கிகளாகக் குறிப்பிடுகின்றார். சுவாமி விவேகானந்தர் இவை யாவற்றிலும் இருந்து வேறுபட்டு இந்திய மரபிற்கே உரிய தனித்துவமான பாணியில் ஒருவரது ஆளுமையினைத் தீர்மானிப்பது ஆன்மீக பலமே என்பதனை வலியுறுத்தினார். மனித வாழ்வு என்பது சாதாரணமாக மனம், உடல் ஆகியவற்றின் இணைவு மாத்திரமல்ல என்பது விவேகானந்தரது நம்பிக்கையாக இருந்தது. அதற்கும் மேலாக பல விடயங்கள் மனித வாழ்வில் இணைந்திருப்பதாக அவர் கருதினார். வேதாந்த மெய்யியலின் பிரகாரம் மனித வாழ்வு பின்வரும் ஐந்து வகையான கூறுகளால் ஆனது.

  1. உடல் பலம்
  2. உயிர் பலம்
  3. மன பலம்.
  4. அறிவுசார் பலம்
  5. ஆன்மீக பலம்

இத்தகைய வேதாந்த கருத்தாக்கத்தின் அடிப்படையில் ஒருவரது ஆளுமையைத் தீர்மானிப்பதில் உடல் பலம், உயிர் பலம், மனபலம், அறிவு பலம், ஆன்மீக பலம் எனும் ஐந்து கூறுகள் செல்வாக்குச் செலுத்துவதாகக் குறிப்பிடும் விவேகானந்தர் ஆன்மீக பலமே அனைத்தையும் தீர்மானிப்பதாகக் குறிப்பிடுகின்றார். அத்தகைய ஆன்ம பலத்தை இந்திய மக்களுக்கு எடுத்தருளினார். நமக்கு, நாம் எத்தகைய வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும் என பிறர் வழிகாட்டுவது அவசியமில்லை. உள்வலிமை படைத்து வளர்ந்து வருகின்ற ஒரு மரம் தன் இயல்பையும், தன் வலிமையையும் தானே விளக்குவது போல நாமும் நமது தெய்வீக ஆற்றலையும், இயல்பையும் எவரது உதவியும் இன்றி ஓங்கச் செய்ய வேண்டும் என்கின்றார். ஒவ்வொருவரது சிந்தனைகளும், செயல்களுமே அவர்களது நிகழ்காலத்தையும், எதிர்காலத்தையும் தீர்மானிக்கின்றது என்பதனை எடுத்துக் காட்டினார். சிறந்த ஆளுமை மிக்க நபர்களை உருவாக்குவதன் மூலம் சிறந்த ஆளுமை மிக்க சமூகத்தினதும், நாட்டினதும் உருவாக்கத்திற்கு வழிவகுத்தார்.

5.2 உடல் பலமும் ஆளுமை விருத்தியும்

மனித உடல் இறைவன் தந்த அரிதான பரிசு. சிறந்த உடல்நலம் மகிழ்ச்சிகரமான வாழ்வுக்கும், வெற்றிகரமான வாழ்வுக்கும் ஆதாரமாகும். உடலும் மனமும் ஒன்றுக்கொன்று மிக நெருக்கமான தொடர்புடையவை. உடல் நலக்குறைவு மனக் கவலைகளையும், மன அழுத்தங்களையும் ஏற்படுத்துவதோடு வாழ்வில் அடைய வேண்டிய இலக்கினைத் தடைசெய்வதாகவும் அமைகின்றது. இதனையே சுவாமி விவேகானந்தர் எமது வாழ்வில் ஏற்படுகின்ற பெரும்பாலான துன்பங்களுக்கு எமது உடல் பலவீனமே காரணம் எனக் குறிப்பிட்டார். மேலும் அது குறித்துக் குறிப்பிடும் பொழுது “தன்னடக்கம் உள்ள வாழ்க்கையினால் அனைத்து விடயங்களையும் மிகக் குறுகிய காலத்தில் கற்றுக் கொள்ள முடியும்.” எனவே சத்துள்ள உனவு, ஒழுங்கு முறையான உடற்பயிற்சி, நல்ல பழக்க வழக்கங்கள், சுய கட்டுப்பாடு என்பன ஆளுமையின் ஒரு பகுதியான உடல் நலத்தை விருத்தி செய்ய உதவுகின்றன. இதனையே விவேகானந்தரது பொன்மொழிகள் நமக்கு வெளிப்படுத்தி நிற்கின்றன. “சுய வலிமை பெற்ற வீரர்களாக எழுந்து நில்லுங்கள்! நீ வலிமை நிறைந்த ஒரு களஞ்சியமாக உன்னை உருவாக்கிக் கொள்” என்கின்றார். விவேகானந்தருடைய கருத்துப்படி உடல் பலவீனமே நோய் உண்டாவதற்கு முக்கிய காரணமாகும். நம்முடைய உடல் பலவீனப்பட்டு வெளியிலிருந்து வரும் நோய்க் கிருமியை எதிர்க்க முடியாத பலக்குறைவான நிலையில் இருந்தாலன்றி எந்த நோய்க் கிருமிக்கும் நம் உடலில் நோயை உண்டாக்க கூடிய சக்தி கிடையாது. அதுபோல நாட்டின் தேசிய வாழ்க்கை பலவீனமாகும் போது அரச, சமூக, கல்வித் துறைகளில் ஏற்படும் குறைகள் சமுதாயத்தில் நுழைந்து பாதிக்க ஆரம்பிக்கின்றன என விளக்கினார்.

5.3 உயிர் பலமும் ஆளுமை விருத்தியும்

உயிர் பலம் குறித்த அவருடைய சிந்தனைகளும் ஆளுமை விருத்தி குறித்த சிந்தனைகளில் செல்வாக்குச் செலுத்தின. மனிதன் ஒரு ஆன்மா; அதற்கென ஓர் உடல் உண்டு என்பதே விவேகானந்தரின் கருத்தாகும். மனிதன் ஓர் உடல்; அதற்குள் அதனை இயக்க உயிர் உண்டு என்பது மேலைநாட்டுக் கருத்து. அழிவில்லாத ஆன்மா பேரான்மா எனப்படும் இறைவனின் ஒரு சிறு பகுதியே ஆகும். அதில் நிறவேறுபாடோ, மொழி வேறுபாடோ, இன வேறுபாடோ இல்லை என்பதே விவேகானந்தரின் கருத்தாகும். ஆன்மாவாகிய உயிரை நீர் நனைக்காது, ஆயுதம் வெட்டாது, நெருப்பு சுட்டெரிக்காது. இந்த ஆன்மாவுக்கு பிறப்பு இறப்பு இல்லை அது நித்தியமானது. இத்தகைய ஆன்மாவே எமது நியமான சொரூபத்தை உள்ளவாறே ஊட்டுவது. இத்தகைய ஆன்மாவின் சக்தி ஓங்கும் பொழுது நம்முள் புதைந்து கிடக்கும் பேராற்றல்கள் வெளிக்கிளம்பிவிடும். அதனைப் பயன்படுத்தி பெருவாழ்வை நமக்கு நாமே உண்டாக்கிக் கொள்ளலாம். அதாவது ஆன்மா ஆரம்பமும் முடிவும் அற்றது. சர்வ சக்தியும், தூய்மையும் ஞானமும் ஒவ்வொரு ஆன்மாவிலும் புதைந்திருக்கின்றது. ஒவ்வொரு மனித அல்லது மிருகத்தின் உள்ளத்திலும் அவர்கள் எவ்வளவு தாழ்ந்து பலவீனமாக இருந்த பொழுதிலும் அதே மகத்தான சர்வ வல்லமை பொருந்திய ஆன்மா குடிகொண்டிருக்கின்றது. நமக்குள் இருக்கும் வித்தியாசத்திற்குக் காரணம் ஆன்மாவின் வித்தியாசம் அல்ல. ஆன்மாவின் சக்தியை வெளிப்படுத்துவதிலுள்ள வித்தியாசம் தான். இது குறித்து விவேகானந்தர் குறிப்பிடும் பொழுது “எனக்கும் மிகச் சிறிய பிராணிக்கும் உள்ள வித்தியாசம் ஆன்மாவின் சக்தியை வெளிப்படுத்துவதிலுள்ள வித்தியாசம் தான்” என்கின்றார். எனவே மனிதர்களிடையே காணப்படுகின்ற ஆளுமை வேறுபாட்டிற்கு அவர்களது ஆன்மாவின் சக்தியை வெளிப்படுத்துவதிலுள்ள வேறுபாடுதான் காரணமாக அமைகின்றது.

5.4 மன பலமும் ஆளுமை விருத்தியும்

அடுத்து ஒரு சிறந்த ஆளுமை உள்ள மனிதனை உருவாக்குவதற்கு மனபலமும் முதன்மையானதாக உள்ளது என்பது விவேகானந்தரது கருத்தாகும். அவரது கருத்தில் உடல் பலத்தை விட மனபலம் முதன்மையானதாகக் காணப்படுகின்றது. மனம் என்பது எண்ணங்களின் களஞ்சியம். எதிர்மறையானதும், தீயதுமான எண்ணங்கள் பலவீனமாக மனிதனை உருவாக்குகின்றன. பலவீனமானதும், கட்டுப்பாடற்றதுமான மனம் எப்பொழுதும் துன்பங்களை விளைவிப்பதோடு அழிவுகளையும் ஏற்படுத்துகின்றது. தோல்விகளையும், வீழ்ச்சிகளையும் மாத்திரமே சிந்திக்கின்ற மனம் எதிர்மறையான எண்ணங்களையே உருவாக்குகின்றன. இத்தகைய பலவீனங்களில் இருந்து மீண்டெழுவதற்கு விவேகானந்தரது சிந்தனைத் துளிகள் உதவுவதாக உள்ளன. விவேகானந்தர் “பலவீனத்திற்குத் தீர்வு பலவீனம் குறித்து சிந்திப்பதல்ல மாறாக பலம் குறித்து சிந்திப்பதே” என்கின்றார். மனதினுடைய முக்கியமான செயற்பாடுகளான உணர்ச்சிகள் ஆளுமை விருத்தியில் செல்வாக்குச் செலுத்துகின்றன. ஒருவர் தனது உணர்ச்சிகள் மீது கட்டுப்பாடுடையவராக இருத்தல் வேண்டும். அது அவரை மகிழ்ச்சியானதும் ஆரோக்கியமானதுமான ஆளுமை உடையவராக உருவாக்கும். உணர்ச்சிகள் பிரதானமாக இருவகைப்படும்.

  1. விரும்பத்தக்கவை.
  2. வெறுக்கத்தக்கவை.

மரியாதை, அன்பு, நம்பிக்கை, சந்தோசம், இரக்கம், திருப்தி, கௌரவம் போன்ற உணர்ச்சிகள் விரும்பத்தக்கவைகளாகும். மாறாக கோபம், துன்புறுத்துதல், பயம், பொறாமை, அதிருப்தி, வெட்கம் போன்ற உணர்ச்சிகள் வெறுக்கத்தக்கவைகளாகும். ஒரு நபர் கட்டுப்படுத்த முடியாத மனநிலைகளோடு ஒன்றியவராக இருந்தால் அவருடைய ஆளுமை விருத்தியடையாது. எனவே ஒருவர் தன்னுடைய ஆளுமையினை விருத்தி செய்து கொள்வதற்கு உணர்ச்சிகளை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பதனை அறிந்திருத்தல் வேண்டும். அது மனதின் குறுகிய எல்லைகளில் இருந்து உயர்ந்த சுயத்தை உருவாக்கிக் கொள்ள வழிவகுக்கும். இத்தகைய மன பலத்தினை உருவாக்கிக் கொள்வதற்குரிய சிறந்த மார்க்கமாக விவேகானந்தர் தியானத்தினை எடுத்துரைக்கின்றார். “தியானம் நமக்கு எந்த வன்மையையும் தரும்” என்றார்.

விவேகானந்தர் யாழ் இந்துக் கல்லூரியில் ஆற்றிய உரையில் மனதின் சக்தி குறித்துக் குறிப்பிடும் பொழுது “நாம் நினைத்தபடி ஆகின்றொம். உங்களைப் பலவீனர்கள் என்று நீங்கள் நினைத்தால் பலவீனர்களாவீர்கள். பலமுள்ளவர்களென்று நினைத்தால் பலமுள்ளவர்களாவீர்கள். தாழ்ந்தவர்களென்று நினைத்தால் தாழ்ந்தவர் என்று நினைத்தால் தாழ்ந்தவர்களாவீர்கள். பரிசுத்தவான்களென்று நினைத்தால் பரிசுத்தவான்களாவீர்கள். உங்கள் பிள்ளைகளைக் குழந்தைப் பருவத்திலிருந்து தைரியம் கொடுக்கக்கூடிய எண்ணங்களை ஊட்டி வளர்த்து வாருங்கள். பலவீனமாக்குகின்ற கருத்துக்களையும் வழிபாடுகளையும் அவர்களுக்குக் கற்பிக்காதீர்கள். அவர்களைப் பலமுள்ளவர்களாக மாற்றுங்கள். அவர்கள் தன்னம்பிக்கையுடன் ஆண்மையுள்ளவர்களாய் எதையும் ஜயிக்கவும் எதையும் சகிக்கவும் கூடியவர்களாய் இருக்கட்டும்” என்றார். மேலும் அவர் குறிப்பிடுகையில் எல்லா சக்திகளும் எமக்குள்ளேயே உள்ளன என்றும், எம்மால் எந்தவொன்றையும் செய்யமுடியும் எனவும் குறிப்பிடுகின்றார். இதனை வலியுறுத்தும் வகையில் “நாம் அனைவரும் இறைவனின் குழந்தைகள் என்றும், எதையும் செய்யக்கூடிய ஆற்றல் எம்மிடம் இருக்கின்றது” எனவும் குறிப்பிட்டார். நேர்நிலையான சிந்தனைகள், நல்ல நூல்களை வாசிக்கும் பழக்கம், தியானம் செய்தல் என்பவற்றின் மூலம் ஆளுமையின் ஒரு பகுதியான மன பலத்தினை உருவாக்கிக் கொள்ள முடியும்.

5.5 அறிவுசார் பலமும் ஆளுமை விருத்தியும்.

அறிவுசார் பலமானது உடல்பலம், உளபலம் ஆகியவற்றை விட மேலானதாக மதிப்பிடப்படுகின்றது. அத்தோடு ஆளுமையில் அது ஓர் பிரதான பங்கினை வகிக்கின்றது. ஒவ்வொரு மனிதனுள்ளும் அறிவு சார்ந்த பகுதி காணப்படுகின்றது. ஆனால் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் சரியான அல்லது முறையான அறிவுசார் பயிற்சி இல்லாமையினால் அது செயற்திறன் அற்ற பகுதியாகவே காணப்படுகின்றது. அறிவு ஒன்றுதான் மனிதனை முழுமையாக்கும். ஆனால் அது இன்னொருவர் கூறிய எல்லைக்குள் தன்னாய்வை நீத்து நின்றுவிடுவதில்லை. “அறிவு வலிமையுடையது. அற்றம் காக்கும் கருவி. புத்தியே சகல சக்தியும். அதனைப் பயன்படுத்தும் வழிகள் பற்றியே இடர்கள் தோன்றுகின்றன. வெற்று நூலறிவு உள்நூலைக் காட்டாதவரை பயனற்றதே. உள்ளுணர்வுக் பார்வை வலிமையுடையவனுக்கே வரும். அந்த வலிமை அறிவினால் மட்டுமே விளையும். மேலும் மனிதனுள் ஏற்கனவே புதைந்து கிடக்கும் முழு நிறைவை வெளிக்கொணர்வதே கல்வி” என விவேகானந்தர் ஆளுமையில் அறிவின் வகிபங்கினை விளக்குகின்றார். இயற்கையிலேயே அறிவு எல்லோர்க்கும் உள்ளது. அதனைப் பயன்படுத்திப் பகுத்தறிய வேண்டும். அதையும் தாண்டி உள்ளுணர்ச்சி பெற்று புதைந்துள்ள முழுநிறைவைக் காணவேண்டும். அத்தகைய மெய்யான அறிவை ஒருவன் பெற்றுவிட்டால் அவனுக்கென்று ஒன்றாகக் காணல், தன்னல மறுப்பு, பிறரைத் தூற்றாமை, மற்றோர்க்கும் அருளல் போன்ற சில நற்பண்புகள் தாமாக வந்து அமைந்துவிடும் என்கின்றார்.

இன்றைய காலகட்டத்தில் மனிதன் தொழில்நுட்பத்தின் மிதமிஞ்சிய பயன்பாடு காரணமாக இயந்திரங்களில் தங்கியிருக்கும் நிலைக்கு மாற்றப்பட்டுள்ளான். கணனிகளே அனைத்தையும் சேமித்து வைத்துக் கொள்கின்றன. மாறாக மனிதனுடைய ஞாபக சக்தியும் சிந்தனைத் திறனும் விருத்தியடையாமலே பேணப்படுகின்றது. உண்மைத் தன்மை, படைப்புத் திறன், ஆழ்ந்த சிந்தனை யாவும் மனித இனத்திலிருந்து விடுபட்டுக் கொள்கின்றது. செயற்கையானதும், போலச்செய்வதும், மேலெழுந்தவாரியானதும், ஆழமற்றதுமான சிந்தனைகள் எங்கும் தமது இடத்தினை நிறைத்துக் கொள்கின்றன. இத்தகைய வாழ்க்கை முறைகள் இலகுவான வாழ்க்கை முறைகளை எமக்குத் தருவதாக இருக்கலாம். ஆனால் இவை சரியான வாழ்க்கைப் பாதையினை மாற்றி பிழையானவற்றைச் செய்கின்ற பாதையினை உருவாக்கிவிடக்கூடும். இதனால் அறிவு பலத்தினை சரியான வகையில் விருத்தி செய்து கொள்ள வேண்டும். மனதிலுள்ள தீய எண்ணங்களை அழிப்பதற்கும் சரியான பாதையினைப் பின்பற்றுவதற்கும் அது மிகமிக இன்றியமையாததாகும். எனவே பலமான தீர்மானமான அறிவினை நாம் உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

5.6 ஆன்மீக பலமும் ஆளுமை விருத்தியும்

விவேகானந்தரது கருத்துப்படி உடல்பலம், உயிர்பலம், உளபலம், அறிவுசார் பலம் ஆகியவற்றுக்கு மேலாக ஆன்மீக பலம் விளங்குகின்றது. அவரது கருத்துப்படி நிலையற்ற இந்த உடலில் அழிவற்ற நிலையான தூய அறிவு நிலையின் இயல்புடைய மகிழ்வான அமைதியான மிகப் பெரிய சக்தியுடைய, அறிவுடைய ஏதோ ஒன்று இருப்பதாகக் நம்பினார். அத்தகைய ஒன்று பிறப்பு, முதிர்வு, இறப்பு போன்ற மாற்றங்களுக்கு உள்ளாவதில்லை. அது அன்பு, இரக்கம், சேவை, தூய்மை, உண்மைத் தன்மை, பயமற்ற நிலை போன்ற அனைத்துத் தெய்வீக இயல்புகளையும் பரவலடையச் செய்கின்றது. இதனை பகவான் ஸ்ரீகிருஷ்ணர் பகவத் கீதையில் “அனைத்து உடல் உறுப்புக்களும் முழுமையான உடல் மேலானது; உடலுக்கு மனம் மேலானது; மனதிற்கு அறிவு மேலானது; எவ்வாறிருப்பினும் அறிவிற்கும், உடல் உளம் ஆகியவற்றும் மேலானது நம்முள் உள்ளுறையும் ஆன்மீகம்” எனக் குறிப்பிட்டார். ஆன்மீக வாழ்வே தனிமனிதனும், தேசத்தினதும் உயிர் சக்தி அது சரியாக இருந்தால் மற்றெல்லாம் நன்றாக நடைபெற்றுவரும் என விவேகானந்தர் எடுத்துரைத்தார். கடவுள் வழிபாடு நம்மை அளவற்ற சக்தியுள்ளவர்கள் என்று நினைக்கச் செய்கின்றது. அச் சக்தியை நாம் வெளிப்படுத்தாமல் இருக்கலாம் எனினும், அது எம்முள்ளே இருக்கிறது. சர்வ ஞானமும், சக்தியும், தூய்மையும், சுயேச்சையும் எம்முள்ளே இருக்கின்றன. நாம் ஏன் அதை வெளிப்படுத்த முடிவதில்லை? அதைச் சரியாக நம்பாததால். அதை நிச்சயமாக நம்பினால் அது வெளிப்பட்டே தீரும். கடவுள் வழிபாடு நமக்கு இந்த ஞானத்தை அளிக்கின்றது.

இத்தகைய தெய்வீகத் தன்மை வாய்ந்த ஆன்மீகம் எமது இதயத்தினுள் உள்ளுறைகின்றது. ஆனால் அது பற்றிய விழிப்புணர்வு எமக்கு இருப்பதில்லை. இத்தகைய தெய்வீக இயல்பினை விருத்தி செய்து கொள்வதற்கு நான்கு வேறுபட்ட மார்க்கங்கள் உதவுவதாக உள்ளன. அவையாவன

  1. பக்தி யோகம்
  2. ஞான யோகம்
  3. கர்ம யோகம்
  4. இராஜ யோகம்

இந்த நான்கு வகையான மார்க்கங்களைப் பயில்வதன் மூலம் எம்முள் உறையும் தெய்வீகத்தை விருத்தி செய்து கொள்வது தனிமனித ஆளுமை விருத்திக்கு உதவுவதோடு, சமூக நலனுக்கும் வித்திடுவதாக அமையும்.

5.7 ஆளுமை குறித்த சிந்தனைகளும் விவேகானந்தரும்

சிக்மண்ட் புறொய்ட் ஆளுமை குறித்துக் குறிப்பிடுகின்றபொழுது அவர் மனித மனம் குறித்த புரிந்துகொள்ளல்களின் அடிப்படையில் விளக்குகின்றார். புறொய்ட் மனதினை நனவு மனம், முன்னனவு மனம், நனவில் மனம் என வகைப்படுத்துகின்றார். இதில் அவர் நனவிலி மனதிற்கு அதிக முதன்மை கொடுத்தார். நனவில் மனம் என்பது விழிப்பு நிலைக்கு அப்பாற்பட்ட நனவு நிலைக்குக் கொண்டுவர முடியாத மனதின் கூறுகளாகும். பயங்கள், ஏற்றுக் கொள்ளப்பட முடியாத ஆசைகள், சுயநலத் தேவைகள், வெட்கப்படத் தகுந்த அனுபவங்கள், சிறுபராயத்தில் நிறைவேறாத ஆசைகள், அடக்கப்பட்ட உணர்வுகள், பாலியல் இச்சைகள் போன்ற பல்வேறு விடயங்கள் இந்த நனவிலி மனதில் புதைந்திருக்கும். இத்தகைய நனவிலி மனதின் செயற்பாடுகளே ஒருவருடைய ஆளுமையைத் தீர்மானிக்கின்றன என்கின்றார். மாறாக விவேகானந்தர் மனித மனதில் அதி அற்புதமான தெய்வீக ஆற்றல் புதைந்திருக்கின்றது என்றும், அதனைக் கண்டு உணர்ந்து கொள்ள முடியாமையினாலேயே ஒருவருடைய ஆளுமையில் பின்னடைவு ஏற்படுவதாகவும், அதனைக் உணர்ந்து கொள்ளும் பொழுது ஒருவர் ஆளுமை மிக்கவராகத் திகழ முடியும் எனவும் குறிப்பிடுகின்றார். புறொய்ட் ஆளுமை அடிப்படையில் மனதினை ஐனஇ நுபழஇ ளுரிநச நுபழ என மூன்று வகைப்படுத்தினார். ஐன என்பது மனதின் பண்படா சக்தி எனவும், ளுரிநச நுபழ என்பது உயர்ந்த விழுமியங்கள், தெய்வீகம், ஆன்மிகம், மனச்சாட்சி, ஒழுக்கம் என்பவற்றோடு இணைந்த ஆன்மிகப் பகுதி எனவும், நுபழ என்பது இவை இரண்டையும் சமநிலைப்படுத்தும் மனதின் பகுதி எனவும் குறிப்பிடுகின்றார். விவேகானந்தர் மனதினை ஆன்மிகத் தன்மை உடையதாகவே கண்டுகொண்டு அதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார்.

மேலும், விவேகானந்தரது கருத்துப்படி மனம் மாத்திரம் ஒருவரது ஆளுமையைத் தீர்மானிப்பதில்லை எனவும், உடல்பலம், உயிர்பலம், மனபலம், அறிவுபலம், ஆன்மிக பலம் என்பவற்றின் சேர்க்கையே ஒருவரது ஆளுமையினை முழுமைப்படுத்துகின்றது எனவும் குறிப்பிட்டதோடு இந்திய தத்துவ மரபிற்கே உரிய பாணியில் ஆன்மிக பலத்திற்கு அதிக முக்கியத்தவம் கொடுத்தார். மேலும் காள்யுங் எமது ஆளுமை தொன்மங்களால் தீர்மானிக்கப்படுகின்றது என்றார். அதாவது எமது முன்னோர்களிடம் இருந்து ஆளுமைக்கூறுகள் கடத்தப்பட்டு எமது ஆளுமை தீர்மானிக்கப்படுகின்றது என்றார். மேலும் எரிக்சன் எமது ஆளுமை எம்மைச் சூழ அமைந்துள்ள சமூகத்தினால் தீர்மானிக்கப்படுவதாக குறிப்பிடுகின்றார். இவர்களது கருத்துப்படி சிறந்த ஆளுமையினை உருவாக்கிக் கொள்வதென்பது குறித்த தனிமனிதனில் மாத்திரம் தங்கியிருப்பதில்லை. ஆனால் இத்தகைய கருத்துக்களில் இருந்து வேறுபட்டு ஒருவனது ஆளுமை அவனுள் உள்ளுறையும் ஆன்மீக பலத்தில் தங்கியிருப்பதாக விவேகானந்தர் குறிப்பிடுகின்றார். இக்கருத்தின் படி ஒரு சிறந்த ஆளுமை ஒருவன் தன் ஆன்மீக பலத்தின் வழி கட்டமைத்துக் கொள்ளக்கூடிய ஒன்றாகின்றது.

  1. முடிவுரையும் பரிந்துரைகளும்

தொகுத்து நோக்குகின்ற பொழுது உடல், உயிர், உளம், அறிவு, ஆன்மீகம் போன்ற அனைத்து வகையான பலங்களையும் உருவாக்கிக் கொள்வது பல்துறை சார்ந்த ஆளுமை விருத்திக்கு அத்தியாவசியமானதாகும். அதாவது இவை அனைத்தையும் நிறைவானதாக ஆக்கிக் கொள்ளும் முயற்சி ஓர் உண்மையான ஆளுமை மிக்க நபரை உருவாக்க வல்லதாகும். சிறந்த ஆளுமை மிக்க நபர்களை அதிகளவில் கொண்டிருப்பது ஓர் சிறந்த சமூகத்தை உருவாக்கும். அதுவே சிறப்பும், வாய்ந்த நாட்டினை உருவாக்குகின்றது. தற்காலத்தில் ஆளுமை என்பது சரியாகப் புரிந்துகொள்ளப்படாத வகையில், உடல், உடை, அலங்காரங்களால் ஆளுமை வெளிப்படுவதாக கருதப்படுகின்ற நிலையில் அத்தகைய உண்மைத் தன்மையற்ற, வெளிப்பகட்டான ஆளுமையினால் தனிநபர்களும், சமூகமும் பின்தள்ளப்படுவதனை தவிர்க்க, உண்மையான ஆளுமை குறித்த விவேகானந்தரது சிந்தனைகள் முதன்மை கொடுத்து நோக்கப்பட வேண்டியவை. சிறந்த ஆளுமையினை வளர்த்துக் கொள்வதற்கு வழிகாட்டுகின்ற சிந்தனைகளாக அவை முன்மொழியப்பட வேண்டும். அதன் மூலம் தனிநபர்கள் தமது ஆளுமையினை சீரிய முறையில் வளர்த்துக்கொள்ள முடிவதோடு சமூகமும், நாடும் சிறப்பான முறையில் முன்னேற்றமடையும். இவ்வாறான உறுதியான ஆளுமையினை விருத்தி செய்வதற்கான சிந்தனைகள் இன்றைய உலகில் நிச்சயமாக மீள் வாசிப்புக்கு உட்படுத்தப்பட வேண்டியன. ஆளுமை உடல், உடை, அலங்காரங்களால் வெளிப்படுத்தப்படுவதாக தவறாக கருதப்படுகின்ற நிலையில் சமூகத்தின் கல்வி, கலை, சலாசார, பண்பாடு, பொருளாதாரம் போன்ற அனைத்தும் பின்னடைவினை எதிர்கொள்கின்றன. அதிலிருந்து மீண்டெழுவதற்கு உறுதியான ஆளுமையினை ஏற்படுத்த வல்ல விவேகானந்தரது சிந்தனைகள், பொன்மொழிகள் பெரிதும் உதவுவதாக உள்ளன.

உசாத்துணை நூல்கள்

  • Akbar, 2012, What is real personality by Swami Vivekananda
  • http://wingswebsolutions.in/health-care/what-is-real-personality-by-swami-vivekananda/
  • Avinashalingam, T.S, 1974 Educational philosophy of Swami Vivekananda, Coimbatore: Sri Ramakrishna Mission Vidyalaya.
  • Burke M.L., 1984, Swami Vivekananda in the West: new discoveries, 6 vols. Calcutta: Advaita Ashrama
  • Hossain M., 1980, Swami Vivekananda’s philosophy of education, Calcutta: Ratna Prakashan
  • psy.utexas.edu – Psychoanalytic Theory of Personality homepage.psy.utexas.edu/homepage/class/Psy301/…/301lecture.ppt
  • Maheshwari V.K., 2011, Vivekananda – Concept of Personality, India
  • http://www.vkmaheshwari.com/WP/?p=114
  • Sheeba Sreenivasan, 2009, Personality Development According to Swami Vivekananda
  • http://voices.yahoo.com/personality-development-according-swami-vivekanandahtml?cat=7
  • Toyne M., (1983) Involved in mankind: the life and message of Vivekananda, Bourne End, United
  • அவினாசிலிங்கம்.தி.சு (1949) ஸ்ரீமத் விவேகானந்த சுவாமிகள் அருளிய இந்தியப் பிரசங்கங்கள், சென்னை; ஸ்ரீராமகிருஷ்ண மடம்.
  • இ.எஸ்.டி, ஞானன்.செ (1999) தத்துவ தரிசனங்கள், சென்னை; மணிவாசகர் பதிப்பகம்.
  • சித்பவானந்தர் (1984) விவேகானந்த விபரணம், திருச்சி; ஸ்ரீராமகிருஷ்ண தபோவனம்.
  • …, 1997, சுவாமி விவேகானந்தரின் இலங்கை விஜயம், பருத்தித்துறை ஸ்ரீராமகிருஷ்ண சாரதா சேவாச்சிரமம்.
  • …, 1963, சுவாமி விவேகானந்தரின் ஞானதீபம் சுடர் 7, சென்னை; ஸ்ரீராமகிருஷ்ண மடம்.

…………….

தக்ஷ்ஷாயினி ராஜேந்திரன்
விரிவுரையாளர்
கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை.

[email protected]