முன்னுரை

தொல்காப்பியம், சங்கநூல்கள் எனச் சுட்டப்படும் தமிழ்நூல்களின் உரைபற்றி அவ்வப்போது தமிழறிஞர் பலர் ஆராய்ந்து தத்தம் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். கல்வெட்டுக்கள் வழியும் மேனாட்டு ஆராய்ச்சிமுறைவழியும் தமிழின், தமிழரின் பெருமைகள் வெளிப்பட்டுவரும் இக்காலத்தில், கிடைக்கும் புதிய சான்றுகளைக் கொண்டு முன்னோர் முடிவுகளுடன் பொருத்தி இனங்காணுதலும் தேவையான ஆய்வுமுறைகளுள் ஒன்றாகும். அதேவேளை, இம்முறை பற்றி ஆராய்ந்த பெருமக்களின் முடிவுகளை நினைவுகூரலும் அவசியமான ஒன்றே! காலம் செல்லச் செல்ல, புதிய சான்றுகள் வெளிப்பட வெளிப்பட முன்னோர் முடிவுகளும் மாற்றம் பெறலாம். ஆராய்ச்சியானது முடிவிலித்தன்மை கொண்டது. அகத்திணை, புறத்திணை என்ற இருதிணை வாழ்வியலைப் பேசும் நூலாகத் தொல்காப்பியம் திணை வாழ்வியலை அகம் – புறம் என இரண்டாகப் பகுக்கின்றது. அவ்வாறு அகம் – புறம்எனஇரண்டாகப்பகுத்தாலும்அவற்றுக்கிடையேநிலவும்ஓர்ஓர்மையை, ஒருமித்த இழையோடும் பாங்கை இளம்பூரணர் உரையே நமக்குத் தனித்து அடையாளப்படுத்திக் காட்டுகின்றது. அவ்வடையாளத்தை அடையாளப்படுத்துவதாக இக்கட்டுரை அமைகிறது.

திணை

திணை என்பது பலபொருள் ஒருசொல் ஆகும். திணை என்பதற்கு ஒழுக்கம், இடம், குடி, குலம், நிலம், பொருள் ஆகிய பொருள்களை அகராதிகள் சுட்டுகின்றன. இவற்றுள் தொல்காப்பியர் சுட்டுவது ஒழுக்கம் எனும் பொருளினதாகும். திணையைத் தொல்காப்பியர் கைக்கிளை, அன்பின் ஐந்திணை, பெருந்திணை என மூவகையாக (தொல்.அகத்.1) எழுதிணையாகப் பாகுபடுத்துகின்றார். இத்திணையானது (ஒழுக்கமானது) முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் எனும் முப்பொருளை (தொல்.அகத்.3) உள்ளடக்கியதாக அமையும். திணையைத் தொல்காப்பியர் செய்யுள் உறுப்புகள் முப்பத்து நான்கனுள் ஒன்றாகவும் (தொல்.செய்யு.1) குறிக்கின்றமை குறிப்பிடத்தக்கது. தொல்காப்பியர் சுட்டும் மற்றொரு செய்யுள் உறுப்புதுறை என்பதாகும்.

 

 

தொல்காப்பியத்தில் திணைதுறை

தொல்காப்பியத்தில் அகத்திணையியல் செய்திகள் ஐம்பத்து ஐந்து நூற்பாக்களிலும், புறத்திணையியல்; செய்திகள் முப்பது நூற்பாக்களிலும் விளக்கப்பட்டுள்ளன. அகம், புறம் என்பவற்றிற்கான வரையறையைத் தொல்காப்பியர் சுட்டவில்லை. அப்பணியை உரையாசிரியரான இளம்பூரணரே செய்கின்றார். அவற்றை விரித்துரைக்குமிடத்துக் குறிப்பிட்ட பகுப்புமுறையைப் பின்பற்றுகின்றார் இளம்பூரணர். அவற்றின் முதற்பகுதி திணையின் இயல்பைச் சுட்டுகிறது. இரண்டாம் பகுதிதிணையின் இலக்கணத்தை வரையறுக்கிறது. மூன்றாம் பகுதி துறைகளை வகைப்படுத்தி விரித்துரைக்கிறது.

அகத்திணை மருங்கின் அரில்தப உணர்ந்தோர்

புறத்திணை இலக்கணம் திறப்படக் கிளப்பின் (தொல்.புறத்.-1)

அகத்திணை இலக்கணத்தைப் பிழையற நன்கறிந்தவர்களால் மட்டுமே புறத்திணை இலக்கணத்தைத் தெளிவுபடப் பகுத்துரைக்க இயலும் என்பதை மேற்கண்ட நூற்பா புலப்படுத்துகின்றது. மேலும் புறத்திணை ஒழுகலாறுகள், துறையின் செயல்வகைகளை அறியக் கீழ்க்காணும் நூற்பாக்கள் துணைசெய்கின்றன.

வெட்சி தானே குறிஞ்சியது புறனே        (புறத்.1)

வஞ்சி தானே முல்லையது புறனே         (புறத்.6)

உழிஞை தானே மருதத்துப் புறனே (புறத்.8)

தும்பை தானே நெய்தலதுப் புறனே       (புறத்.12)

வாகை தானே பாலையது புறனே         (புறத்.15)

காஞ்சி தானே பெருந்திணைப் புறனே     (புறத்.18)

பாடாண் பகுதி கைக்கிளைப் புறனே (புறத்.20)

குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்னும் அகத்திணை முதற் பொருள்களே புறத்திணைகளுக்கும் களமாக அமைகின்றன. முதற்பொருள், உரிப்பொருள், கருப்பொருள் எனும் அகப்பொருட்கூறுகளைப் புறத்திணைக் கூறுகளோடு ஒப்பிடும்போது அகம், புறம் இரண்டும் ஒரே நேர்ப்பண்பைப் பெற்றுள்ளதனை காணலாம். இதற்கு இளம்பூரணர் உரையே துணைசெய்கின்றது.

அகத்திணை புறத்திணைக் கூறுகளின் வைப்புமுறை

மேற்சொல்லப்பட்ட புறத்திணையின் திணை, துறைகள் அகத்திணைக்குப் புறமாக வைத்தமையை உரையாசிரியராகிய இளம்பூரணர்வழி நாம் தெளிவுபடுத்திக் கொள்ளலாம். ஒரு திணையை விளக்கவேண்டுமானால் அத்திணைக்குரிய முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருளை விளக்குதல் வேண்டும். இதனை இளம்பூரணர் பொருளதிகாரத்தின் தொடக்க உரையில் சிறப்பாகக் கையாண்டுள்ளார். இதனை ‘பிற்படகிளப்பது’, ‘முற்படக்கூறல்’ எனும் கருத்தியல்வழிச் சிறப்புற உணர்த்தியுள்ளார்.

முதல்எனப் படுவது நிலம்பொழு திரண்டின்

இயல்பென மொழிப இயல்புணர்ந் தோரே       (அகத்.4)

நிலம் – நிலத்திற்குக் காரணமாகிய நீரும், நீர்க்குக் காரணமாகிய தீயும், தீக்குக் காரணமாகிய காற்றும், காற்றிற்குக் காரணமாகிய ஆகாயம் ஆகியவற்றை ஐம்புலன்களாகிய ஊறு, சுவை, ஒளி, நாற்றம், ஓசை என்னும் உணர்ச்சியைப் போல் மண், புனல், தீ, காற்று, வான் என இளம்பூரணர் வரையறுத்துள்ளார்.

காலமாவது – மாத்திரை முதலாக நாழிகை, யாமம், பொழுது, நாள், பக்கம், திங்கள், இருது, அயநயம், ஆண்டு, உகம் எனப் பலவகைப்படும் என்கிறார்.

இங்குப் பொழுதினை நாம் எடுத்துக்கொள்வோம். “கருப்பொருள் – இடத்தும் காலத்தினும் தோற்றும் பொருள். ”தெய்வம் முதலாத் தொழில் ஈறாப் பதினான்கும் என இளம்பூரணர் குறிப்பிட்டுள்ளார். உரிப்பொருள் – மக்கட்கு உரிய பொருள். அஃது அகம், புறம் என இருவகைப்படும் எனும் தொல்காப்பியரின் கூற்றுவழி இளம்பூரணர் பொருளை உணர்ந்து உரையாத்துள்ளார். இனி அதனைப் பொருத்தும் விதத்தினைக்கீழ்க் கண்டவாறு அறியலாம்.

  1. வெட்சி
திணை வெட்சி குறிஞ்சி
நிலம்

பொழுது

பூ

மலையும் மலைசார்ந்த இடமும்

நள்ளிரவு (ஆநிரை கவர்தல்) வெட்சிப்பூ

மலையும் மலை சார்ந்த இடமும்

நள்ளிரவு

வெட்சிப்பூ

(நிலத்திற்குக் காரணமாகிய புனல்)

வெட்சி            –           மண்ணாசையின் திண்மையால் ஆநிரை கவர்கின்றான் மன்னன்.

குறிஞ்சி           –           பெண்ணாசையின் திண்மையால் களவு மேற்கொள்கிறான் தலைவன்.

(முற்பகுதியில் கூறப்பட்ட இளம்பூரணர் உரையைக் கருத்திற்கொண்டு மண் – குறிஞ்சி நிலமாகவும், தலைவியின் உடலாகவும் கொள்ளலாம்)

  1. வஞ்சி
திணை வஞ்சி முல்லை
நிலம்

பொழுது

பூ

காடும் காடு சார்ந்த இடமும்

வேனிற் காலம் (கார், மாலை) வஞ்சிப் பூ

காடும் காடு சார்ந்த இடமும்

வேனிற்காலம்

காட்டிடத்துப் பூ

வஞ்சி              –           முன்பு பகைநாட்டு அரசன் நட்புப் பூண்டிருந்தான், தற்போது பகை உணர்ச்சியுடன் இருக்கின்றான் என அரசன் ஆற்றி இருப்பான்.

முல்லை           –          போர்க்காலப் பிரிவில் தலைவனைப் பிரிந்த தலைவி ஆற்றியிருப்பாள்.

  1. உழிஞை
       திணை உழிஞை மருதம்
நிலம்

பொழுது

பூ

வயல் சார்ந்த இடம்

விடியல்

உழிஞை

வயல் சார்ந்த இடம்

விடியல்

மருதநிலத்துப் பூ

(நீருக்குக் காரணமாகிய தீ )

உழிஞை          –           பகைநாட்டு மன்னனையும் அவன் மதிலையும் கைப்பற்ற எண்ணி மதிலைக் கைப்பற்றல், அதனைக் காத்தல்.

மருதம்             –           பரத்தமைப் பிரிவை விடுத்து விடியற்காலை தலைவியிடம் (இல்லம்) வந்து வாயில் திறக்குமாறு வேண்டி நின்ற தலைவன், தலைவி வாயில் மறுத்தல்.

  1. தும்பை
       திணை தும்பை நெய்தல்
நிலம்

பொழுது

பூ

கடல் சார்ந்த இடம்

எற்பாடு

தும்பை

கடல் சார்ந்த இடம்

எற்பாடு

நெய்தற் பூ

(நீருக்குக்காரணமாகியகாற்றுநெய்தல்நிலத்தில்மிகுதி)

தும்பை            – போர்க்களத்தில் ஊக்கத்துடன் போர் புரிதல். வீழ்ச்சியின் காரணமாக இரங்கல்

நெய்தல்           –           தலைவனைப் பிரிந்து தலைவி இரங்கல்

  1. வாகை
       திணை வாகை பாலை
நிலம்

பொழுது

பூ

நானிலத்திற்கும் நடுப்பட்டவை

இளவேனில், நண்பகல்

வாகை

மணலும் மணல் சார்ந்தவை

இளவேனில், நண்பகல்

பாலைநிலப் பூ

(காற்றிற்குக் காரணமாகியவான்)

வாகை –           வெற்றிபெற்ற அரசன் வெற்றியைக் கொண்டாடிய பின் வேற்று அரசனைப் பிரிதல்.

பாலை –           உடன்போக்கின்கண் மகிழ்ச்சி அடைதல் (அல்லது) தலைவன் தலைவியைப் பிரிதல்.

பன்னிருபாட்டியல் பற்றி இளம்பூரணரின் கருத்து

தொல்காப்பியம் புறத்திணையை அகம்போல் ஏழெனவே மொழிய, பன்னிருபாட்டியல் புறத்திணையைப் பன்னிரண்டாகக் குறிப்பிடுகின்றது. இக்கருத்தில் உடன்பாடு கொள்ளாத இளம்பூரணர் இக்கருத்தைப் பின்வருமாறு மறுக்கின்றார்.

புறப்பொருள் பன்னிரண்டு வகைப்படக் கூறில், அகமும் பன்னிரண்டாகி மாட்டேறு பெறுதல் வேண்டும். அகத்திணை ஏழாகிப் புறத்திணை பன்னிரண்டாகில், ‘மொழிந்த பொருளோடு ஒன்றவைத்தல்’ (மரபு.112) என்னுந் தந்திர உத்திக்கும் பொருந்தாதாகி ‘மிகைபடக்கூறல்’ ‘தன்னான் ஒருபொருள் கருதிக் கூறல்’ (மரபு.110) என்னும் குற்றமும் பயக்கும் என்க.

பல்அமர் செய்து படையுள் தப்பிய

நல்லாண் மாக்கள் எல்லாரும் பெறுதலின்

திறப்பட மொழிந்து தெரிய விரித்து

முதற்பட எண்ணிய எழுதிணைக்கும் உரித்தே

எனத் தாமே கூறுகின்றாராதலின், மறத்திற்கு முதலாகிய வெட்சியின் எடுத்துக்கோடற்கண்ணும் கூறாமையானும், கைக்கிளையும் பெருந்திணையும் புறம் என்றாராயின் அகத்திணை ஏழ் என்னாது ஐந்து எனல் வேண்டுமாதலானும், பிரம்ம முதலாகச் சொல்லப்பட்ட மணம் எட்டனுள்ளும் யாழோர் கூட்டமாகிய மணத்தை ஒழித்து ஏனைய ஏழும் புறப்பொருளாதல் வேண்டுமாதலானும், முனைவன் நூலிற்கும் கலி முதலாகிய சான்றோர் செய்யுட்கும் உயர்ந்தோர் வழக்கிற்கும் பொருந்தாது என்க.

முடிவுரை

அகத்திணைகள் ஏழும் புறத்திணைகள் ஏழனுக்கும் களனாக அமையும் என்பது தொல்காப்பியர் தரும் குறிப்பு. ஆனால் அவை எவ்வாறு களனாக (புறமாக) அமையும் எனும் தன்மை பற்றித் தொல்காப்பியர் குறிப்பேதும் தரவில்லை. இந்நிலையில் இளம்பூரணரின் உரைக்குறிப்பே அத்தன்மையை வாசகனுக்கு உணர்த்தி நிற்கின்றது. அந்த வகையில் இளம்பூரணர் உரை முக்கியத்துவம் பெறுகின்றது.

துணைநூற்பட்டியல்

தொல்காப்பியம் – பொருளதிகாரம் இளம்பூரணம், கழக வெளியீடு, முதற்பதிப்பு  1959.

இரா.தமிழ்ச்செல்வன்

முனைவர்பட்ட ஆய்வாளர்

பிஷப் ஹீபர் கல்லூரி

திருச்சிராப்பள்ளி – 17.

பேசி: 98435 25325.

மின்னஞ்சல் : [email protected]