முன்னுரை

எண்ணரிய பிறவிதனில் மானிடப் பிறவிதான்

யாதினும் அரிது அரிதுகாண்

இப்பிறவி தப்பினால் எப்பிறவி வாய்க்குமோ

ஏதுவருமோ அறிகிலேன்                 (தாயுமானவர், சித்தர்கணம்:4)

எனும் பாடல் அடிகள் மனிதப் பிறவியின் முக்கியத்துவத்தை வெளிக்காட்டுகின்றன. நன்மையையும் தீமையையும் பகுத்தறிந்து ஒற்றுமையைப் பேணி வாழ வழிவகுக்கும் நல்ல அறிவைத் தருவது கல்வி. அதனை முழுமையாகச் செயல்படுத்த உதவுவது இலக்கியக் கல்வி. இக்கல்வியே மக்களிடம் புதைந்து கிடக்கும் மனிதநேயத்தை வெளிக்கொண்டு வருகிறது. ஒரு சமூகத்தின் அங்கங்களாகக் குடும்பம், கல்வி, அரசு முதலான சமூக நிறுவனங்கள் உள்ளன. அவற்றுள் கல்வி என்பது ஒரு சமூகத்தின் இளைய தலைமுறையினர் தன் மூத்த தலைமுறையினரிடமிருந்து பெறும் மரபுகள், பழக்கவழக்கங்கள் பண்பாடு போன்றவற்றை அதன் இயல்பு மாறாமல் கற்றுக்கொள்வதை உணர்த்துகிறது. கல்விவழிப் பெறப்படும் அறிவே தனிமனித பொருளாதார நிலையையும் நாட்டின் பொருளாதார நிலையையும் நிர்ணயித்து வருகிறது. பல்வேறு தொழில் நிறுவனங்களில் பணியாற்றத்தக்க கல்வியாளர்களை உருவாக்கும் உற்பத்திக் கருவியாகவும் கல்வித்துறை செயல்பட்டு வருகிறது. இன்றைய மாணவர்களின் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான பல்வேறு வசதிகளைப் படைத்துத் தருவது இன்றைய நவீனக் கல்விமுறை. ஆனால் இன்றைய மாணவர்கள் பொருளையே முதன்மையாகக் கருதிக் கல்வி கற்கின்றனர். இன்றைய நவீனக் கல்விமுறையில் பணம் மட்டுமே கல்வியின் தரத்தையும் ஒருவனின் வாழ்வையும் நிர்ணயிக்கிறதே தவிர மனிதநேயமும் பழம்பெருமையும் அழிந்து வருகின்றன. இதனை மாற்றுவதற்கு இன்றைய மாணவர்களிடையே மனிதநேயக் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்ட இலக்கியத்தை கற்றுக் கொடுப்பதனால் மட்டுமே அழிவின் விளிம்பில் இருந்து அவர்களைக் காப்பாற்ற முடியும்.

“ஒரு பெரிய மரத்துக்கு எத்தனைக் கிளைகள் இருந்தாலும் அதன் ஆணிவேரின் மூலம் கிடைக்கின்ற ஊட்டம் கிளைகள் அனைத்துக்கும் ஊட்டமாக அமைகிறது. வேரின் நலனே கிளைகளின் நலனாகவும் இலை, தலை, பூ கனிகளின் நலனாகவும் வந்து விரிகிறது. ஒருகிளையின் ஒரு தளிரில் வாட்டம் தென்படுகிறது என்றால் அந்த மரத்தின் வேரில் ஏதோ குறை ஏற்பட்டிருக்கிறது என்பது பொருள்” (சாலினி இளந்திரையன்:57).

இதனைப் போன்றே ஒரு சமுதாயத்தில் களவு, கொலை, கொள்ளை போன்ற குற்றங்கள் அதிகமாக நடக்கிறது என்றால் அச்சமுதாயத்தில் மனிதநேய உணர்ச்சி இல்லாமல் போனதே அதற்குக் காரணம். அதனால்தான் வாழ்க்கை இலக்கியங்களுக்கெல்லாம் அடிப்படை இலக்கணமாகவும் அவைகளில் ஒவ்வொன்றுக்கும் ஊட்டமாகவும் மனிதநேயத்தை வலியுறுத்துகிறார்கள் தமிழர்கள். எனவே, மனிதன் மனிதநேயத்துடன் வாழவேண்டிய தேவை ஏற்படுகின்றது. கற்பித்தல் நிலையில் அதனை வலியுறுத்தும் பொழுதான், மனிதநேயம் வளரும் என்பதை இக்கட்டுரை பேசுகிறது.

கற்றல் கற்பித்தல்

கற்றல் என்பது அறிமுகப்படுத்தப்பட்ட பாடங்களை உணர்ந்து வாசித்து மனதில் பதியவைத்துக் கொள்வதாகும். கற்றல் மாணவர்கள் மனதில் பல்வேறு நடத்தை மாற்றங்களுக்கு வழிவகுக்கும். இந்தக் கற்றல் அனுபவங்கள் முயற்சி, பயிற்சியின் விளைவாக மேம்படக் கூடியவை. இவை சிந்தனையை வளர்க்கவும் தானாகக் கற்கவும் தூண்டக் கூடியவை. கற்பித்தல் என்பது பாடப்பொருளை மாணவர்களிடம் அறிமுகப்படுத்துவது. பாடப்பொருளின் இயல்பு, பண்பாடு போன்றவற்றை மாணவர்களின் மனதில் பதிய வைப்பது. மேலும், ஆழமாக நிலை நிறுத்துவது என்ற நடைமுறைகளைக் கொண்டதாகும். மாணவர்களின் கற்றல்முறை தேவைகளைக் கருத்தில் கொண்டு கற்பித்தல் திட்டமிடப்பட வேண்டும். இன்றைய சூழ்நிலையில் கல்விநிலைக்கு ஏற்றவாறு பாடங்கள்,

எளிதிலிருந்து                        கடினத்திற்கு

தெரிந்ததிலிருந்து                 தெரியாததற்கு

புரிந்ததிலிருந்து                    புரியாததற்கு

என அமைக்கப்பட வேண்டும். அப்போதுதான் கற்பதும், கற்பிப்பதும் முறையாகவும் எளிமையாகவும் அமையும். நமது கல்விநிலையை,

 1. தொடக்கக்கல்வி
 2. நடுநிலைக்கல்வி
 3. உயர்நிலைக்கல்வி
 4. மேல்நிலைக்கல்வி
 5. இளங்கலைப் பட்டபடிப்பு நிலை
 6. முதுகலைப் பட்டப்படிப்பு நிலை
 7. ஆய்வு நிலை

எனப் பகுக்கலாம். பாடத்திட்டம் என்பது கற்பித்தலின் நோக்கம், கற்றலின் குறிக்கோள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு வகுக்கப்பட வேண்டும். வகுப்புத்தோறும் கற்பிக்கப்பட வேண்டிய பாடங்கள் பற்றி விரிவாக எடுத்துக் கூறவேண்டும். ஒவ்வொரு கல்வி நிலைக்கும் பாடத்திட்டங்கள் வகுக்கப்படும்போது முதலில் பயிற்றுவிக்க வேண்டிய பாடம் எதுவெனத் தெளிவாக வரையறுக்க வேண்டும். பாடத்திட்டத்தின் குறிக்கோள்களை ஒவ்வொரு வகுப்புக்கும் கற்பிக்க வேண்டும். மேலும் பாடத்திட்டம் எவ்வாறு அமைய வேண்டும், எந்த வகையான சொற்களைப் பயன்படுத்த வேண்டும். சமூகத்தின் தேவைக்கேற்பக் கல்வியின் நோக்கங்கள் மாறிக்கொண்டே வரும் சூழ்நிலையில் அதற்கு ஏற்றார்போல் கல்வியின் தேவைகளும் பாடத்திட்டங்களும் தொடக்கநிலையிலிருந்து உயர்நிலை வரை மாணவர்களைப் பண்படுத்தி மனிதநேயமிக்க மனிதனாக வாழ்வதற்கு வழிவகை செய்யவேண்டும்.

மொழிக்கல்வி

பொதுவாக மொழிகற்றல் என்பது முற்காலத்தில் இலக்கியம் கற்பதாக இருந்தது. சமுதாய வளர்ச்சி, அதற்கேற்ற தேவைகள், மொழிப்பயன்பாடு போன்றவை மொழி கற்பித்தலில் பல மாற்றங்களை ஏற்படுத்தின. இலக்கியத்தைக் கற்பது போலவே இலக்கணத்தைக் கற்பதும் இன்றியமையாதது. இன்று மொழிக்கல்வி தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப வளர்ந்து வருகிறது. மொழிக் கல்வியில் ஒவ்வொரு கல்வி நிலைக்கும் ஏற்றவகையில் மொழியை இலக்கியத்தை, இலக்கணத்தைக் கற்பதும், கற்பிப்பதும் மிகவும் முக்கியமானது. மொழியின் அமைப்பு ஒவ்வொரு கல்வி நிலைக்கும் எவ்வளவு தேவை, அவற்றை எவ்வாறு பங்கிடுவது என்பதைப் பற்றிய தெளிவான திட்டமிடுதல், மொழியின் அடிப்படைத் தன்மைகளான கேட்டல், பேசுதல் எழுதுதல், வாசித்தல் போன்றவற்றில் தேர்ச்சி பெறுவதற்கான பயிற்சிகளையும் முயற்சிகளையும் இவற்றோடு இணைத்துக் கொள்வது மிகவும் தேவையாகும். இந்தத் திட்டமிடல் ஒவ்வொரு கல்விநிலையின் மொழிக்கற்பித்தல், நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு தொடக்க நிலையிலிருந்து ஆய்வுநிலை வரை அமையவேண்டும். எனவே, அதற்கேற்ற வகையில் குறிக்கோள்களையும் நோக்கங்களையும் வகைப்படுத்திக் கொள்வது மிகவும் அவசியமாகும். தொடக்கக் கல்வியில் இலக்கிய அறிமுகம், இலக்கிய நுகர்வு, இலக்கியமரபு என்று தொடங்கும் இலக்கியக்கல்வி உயர்கல்வியில் இலக்கியங்களின் மொழிவளம் அவற்றின் பயன்பாட்டை நோக்கமாகக் கொண்டு இலக்கியங்களைப் படைத்தல், திறனாய்வு செய்தல் என்ற நிலைக்கு மாறவேண்டும். தங்கள் கருத்துக்களைப் பிழையின்றி எழுதவும், பேசவும் துறைசார்ந்த கருத்துக்களையும் பொதுவான சிந்தனைகளையும் தெளிவாக  வெளிப்படுத்தும் விதமாகவும் பிறதுறை அறிவைப் பயன்படுத்தும் நிலைக்கு மாணவர்களைப் படிப்படியாக உயர்த்த வேண்டும். அப்பொழுதுதான் ஒரு கல்வி முழுமை பெறும்.

இலக்கியக்கல்வி

“உலகை நீங்கள் மாற்றிவிடுவதற்குக் கல்வி என்ற சக்திவாய்ந்த ஆயுதத்தை விட வேறு சிறந்தது எதுவுமில்லை” (பொன்மொழிகள், ப.75)

என நெல்சன் மண்டேலா கூறுவது கவனிக்கத்தக்கது. மாணவர்களுக்கும் அவர்கள் வாழும் சமுதாயத்திற்கும் பயனுள்ள விரும்பத்தக்க பல நடத்தை மாற்றங்களைத் தோற்றுவிப்பதே உண்மையான இலக்கியக் கல்வி. கல் என்றால் தோண்டி எடுத்தல் எனப் பொருள். மனிதனுக்குள் புதைந்து இருக்கும் திறமையை வெளிக்கொண்டு வரும் தீவிர முயற்சியே கல்வியாகும். இதனை

கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு

மாடல்ல மற்றவை யாவை           (குறள்.400)

என்றார் வள்ளுவர். “கல்வி என்பது ஓடிவரும் வெள்ளத்தினாலும் அழிக்க முடியாது. வெந்து சாம்பலாகும் தீயினாலும் பற்றமுடியாது. வேந்தனாலும் கவரமுடியாது. கொடுக்க கொடுக்க நிறையுமே தவிர ஒருபோதும் குறையாது. காத்து வளர்ப்பதற்கு மிக எளிதானது என்று பட்டினத்துப்பிள்ளை கல்விச் செல்வத்தின் அழியாத் தன்மையைத் தெளிவுபடுத்துகிறார்” (சித்தர் பாடல்கள்:33-35). கல்விச் செல்வத்தின் புகழ் காலத்தால் மாறாதது அத்தகைய சிறப்பு வாய்ந்த கல்வியின் பெருமையை

வேற்றுமை தெரிந்த நாற்பால் உள்ளும்

கீழ்ப்பால் ஒருவன் கற்பின்

மேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே   (புறம்.183)

என்ற புறநானூற்றுப்பாடல் கல்வி ஒன்றுதான் மனிதனை மனிதனுக்கு நிகராக மதிக்கும் பண்பை வளர்க்கும் எனத் தெளிவுபடுத்துகின்றது. இந்தப் பாடலின் மூலம் எதிர்காலத்தை உருவாக்கும் நிலையில் உள்ள மாணவர்களுக்குக்  கல்வியின் நன்மையை எடுத்துக்கூறி கல்வியினால் நாட்டையும் வீட்டையும் வளமைப்படுத்தலாம். கல்வி காலத்தாலும் மொழியாலும் பண்பாலும் பழக்கவழக்கத்தாலும் மனிதனை உலகிற்கு அடையாளம் காட்டும். கல்வியே நிலையான அழியாத செல்வம் கல்வி இல்லாவிட்டால் வேறு என்ன செல்வம் இருந்தாலும் அதனைக் காப்பாற்ற முடியாது. எனவே, மாணவர்களின் உள்ளத்தில் மனிதநேயத்தை வளர்க்கும் மொழியின் சிறப்பையும் இலக்கியத்தின் சிறப்பையும் பற்றி எடுத்துக்கூற வேண்டும்.

தமிழ் இலக்கியங்களைக் கற்பிக்கும்போது பண்டைய இலக்கியங்கள், இடைக்கால இலக்கியங்கள், பக்தி இலக்கியங்கள், தற்கால இலக்கியங்களைக் கற்பிக்க வேண்டும். இவற்றைப் போன்று செய்யுள் கற்பிக்கும் போது ஓசைநயம், சொற்சுவை, பொருள்சுவை, எழில்சுவை இவற்றில் குறிப்பிடப்பட்டிருக்கிற பண்பாடு அறநெறி போன்றவற்றையும் எடுத்துரைக்க வேண்டும், இவற்றோடு இலக்கியப்பற்று, ஆய்வுச் சிந்தனை, படைப்பாற்றல் போன்ற பண்புகள் மேலோங்கும் வகையில் கற்பிக்க வேண்டும். ஏனெனில் இலக்கியங்கள் மக்களின் மொழி, சமுதாயம், அரசியல், பண்பாட்டுத் தகவல்களை வழங்குவதில் முக்கியத்துவம் பெறுபவை. இத்தகு இலக்கியங்களை மாணவர்களே நேரடியாகப் படித்து உணரும் அனுபவத்தையும் அறிவையும் இலக்கியக் கல்வி தரும் வகையில் மாற்ற வேண்டும். அதற்கேற்ற வகையில் மாணவர்களை அனுபவமிக்கவர்களாக, பன்முகப் பார்வை கொண்டவர்களாக, முழுமையானவர்களாக மாற்றும் நடவடிக்கைகள் ஆகியவற்றை உயர்கல்விச் செயல்பாட்டில் கொண்டுவரப்பட வேண்டும். அதனுள் நுண்ணிய ஆய்வுப்பார்வையை மாணவர்கள் பெறும் வகையில் அவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும். அதற்கேற்ற வகையில் நமது  பாடத்திட்டங்கள் பாடநூல்கள் மாற்றப்பட வேண்டும். இவற்றை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டால்,

 1. முன்னோர்களின் வாழ்க்கைநெறியைப் புரிந்து கொள்ளுதல்
 2. பண்பாடு, கலாச்சாரத்தை அறிந்து கொள்ளுதல்
 3. தனிமனிதனின் பண்பை அறிதல்
 4. உலக அறிவைப் பெறுதல்
 5. படைப்பாற்றலைப் பெறுதல்

ஆகியன இயல்பாக மாறும்.

“உலகம் போரின்றி வாழவும் உலகமக்களிடையே அன்பு தழைக்கவும் ஏற்றத்தாழ்வுகள் இல்லாது ஒழிந்து ஒப்புரவு நிலைக்கவும் வழிவகுக்கும் ஓர் உயரிய கோட்பாடே மனிதநேயம்” (பொன்மொழிகள், ப.76)

என இரா.சக்குபாய் கூறுகிறார். இதன்வழி மனிதனிடத்தில் அவசியம் இருக்கவேண்டிய பண்புகளில் மிக முக்கியமான பண்பு மனிதநேயம். இக்குணத்தை இறைவன் சிலரிடத்தில் இயற்கையாகவே அமைத்திருப்பதால் மனிதநேயம் அற்றவர்கள் செய்யும் கொடுமைகளின்போது மனிதநேயம் உள்ளவர்கள் பாதிக்கப்பட்டவர்க்கு உதவியாக இருந்து அவர்கள் இந்த உலகில் வாழ்வதற்கு ஆதாரமாக இருக்கிறார்கள். உலகத்தில் அனைவரிடமும் மனிதநேயம் இல்லாமல் போனால் மனித மனம் என்றோ அழிந்திருக்கும். நாகரிக வளர்ச்சியில் பின்தங்கிய காலத்தில் மலர்ந்த மனிதநேயப் பண்பைவிட இக்காலச் சூழலில் மனிதன் மற்ற உயிர்களையும் தன்னையும் நேசிக்கும் பண்பைக் குறைத்துக் கொண்டே வருகிறான். தொய்வடையும் மனிதநேயப் பண்பை, சட்டத்தையும் அதிகாரத்தையும் பணபலத்தையும் கொண்டு வலுப்பெறச்செய்ய முடியாது. தற்போது பல பிரச்சினைகளைச் சந்தித்துக் கொண்டிருப்பது காதல். காதல் என்ற ஒன்று இல்லையென்றால் மனிதமனம் என்றோ மீண்டும் விலங்கின் தன்மைக்கே சென்றிருக்கும். காதல் என்கின்ற சொல் குறுகிய வட்டத்திற்குள் சிக்கிக்கொள்ளும்போதுதான் தவறானதாகவும் இழிவானதாகவும் கருத்தில் கொள்ளப்படுகிறது.

மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன்

செவ்வி தலைப்படு வார்   (குறள்.1289)

எனும் குறள் மனமே மனிதநேயத்திற்கு அடிப்படை என்கிறது. இருப்பினும் அடுத்த அறிவைத் தேடும்போது மனது தன்சுயத்தை முழுமையாக மெல்ல மெல்ல தனக்குத் தெரியாமலே இழந்து கொண்டிருக்கிறது. இதனை மாற்றுவதற்கு இலக்கியத்தில் இருக்கும் மனிதநேயமிக்க கருத்துக்களை எடுத்துக்கூற வேண்டும்.

யாதும் ஊரே யாவரும் கேளிர்

தீதும் நன்றும் பிறர்தர வாரா (புறம்.192)

எனக் கணியன் பூங்குன்றனாரும்,

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் (திருவ.3471)

என இராமலிங்க வள்ளலாரும்,

வயிற்க்குச் சோறிட வேண்டும் – இங்கு

வாழும் மனிதருக்கெல்லாம் (பாரதியார் கவிதைகள்:249)

எனப் பாரதியாரும் உலக மக்களிடையே ஒற்றுமை உணர்வு ஓங்கவும் மனிதநேயம் வளரவும் மனிதநேயத்தோடு வாழ வேண்டும் என வலியுறுத்துகின்றனர். இல்லையென்றால் உலகம் போரினால் அழிந்துவிடும். சங்க இலக்கியங்களும் மனிதநேயத்தைப் படம்பிடித்துக் காண்பிக்கின்றன.. அவற்றுள் சில கருத்தியல்கள் வருமாறு:

முல்லைக்கொடிக்கு தேர் கொடுத்த பாரி மன்னன் அடர்ந்த சோலை வழியாகத் தேரில் சென்று கொண்டிருந்தான். அப்போது அவனது தேர் செல்லும் வழியை ஒரு முல்லைக்கொடி வழிமறித்துப் படர்ந்திருந்தது. அதனால் தனது தேரை முல்லைக்கொடி விரும்பியதாகக் கருதி அதற்கு தனது பெரியதேரை விட்டுச் சென்றான் மன்னன்.  தான் நெடுவழிதூரம் நடந்து செல்லவேண்டும் என்பதையும் பொருட்படுத்தாமல் ஒரு முல்லைக்கொடியின் விருப்பத்தை நிறைவேற்றினான் என்று நச்சினார்க்கினியர் தன் உரையில் குறிப்பிட்டுள்ளார் (பத்துப்பாட்டு மூலமும் உரையும், ப.161).

மயில் குளிரில் நடுங்குவதைக் கண்டு அதற்குப் போர்வை தந்த மன்னன் பேகன் பிற உயிர்களிடத்தும் மனிதன் எப்படி மனிதநேயத்தோடு நடத்துகொள்ள வேண்டும் என்ற கொள்கையை ஆற்றுப்படை (சிறுபாண்:85) சுட்டுகிறது.

தமிழர்களின் போர்நெறி என்றைக்குமே எதிர்பாராமல் தாக்குவதையோ, எதிரியை ஏமாற்றித் திசைதிருப்பி விட்டுத் தாக்குவதையோ அனுமதிக்கவில்லை.  தமிழர்களுக்குப் போர் அறம் வகுத்த முன்னோர்கள் அதை ஏழு பிரிவுகளாக வகுத்து வைத்தார்கள். அவைகளில் முதலாவது பிரிவு வெட்சித்திணை என்று குறிக்கப்படுகிறது. எதிரியின் மீது போர்த்தொடுக்க ஆயத்தமாகிறோம் என்பதை அந்த எதிரிக்குத் தெரிவிக்கின்ற முறையில் அவனுடைய ஆடுமாடுகளைக் கவர்ந்து செல்லும் நிகழ்ச்சி நடைபெறும். இந்த நிகழ்ச்சியை முதன்மைப்படுத்தி வலியுறுத்துவதன் மூலம் முன்னரிவிப்பு இல்லாமல் எதிரியின் மீது போர்த்தொடுக்கக் கூடாது என்பதை வலியுறுத்துகிறது புறநானூறு.

இராமாயணம், மகாபாரதம் ஆகியவற்றில் மாலை நேரங்களில் போர் செய்வது தவிர்க்கப்பட்டது. பெண்கள், குழந்தைகள் மீது போர் புரிவது தவிர்க்ப்பட்டது. நிராயுதபாணியாகப் போர்க்களத்தில் நின்ற தனது எதிரியான இராவணனைக் கூட இராமன் இன்று போய் நாளை வா என்று கூறுவதிலிருந்து போரிலும் மனிதநேயம் மதிக்கப்பட்டதை அறியமுடிகிறது.

பொருளைத் தேடிச் செல்வதே தானும் தன்னுடன் இருப்பவர்களும் உறவினர்களும் சேர்ந்து மகிழ்ச்சியாக வாழத் தான் என்று இலக்கணம் வகுத்துக் கொண்டவர்கள் பழந்தமிழர்கள். உழைத்துத் தேடிய பொருள், பரிசாகப் பெற்று வந்த பொருள் என்கிற வேறுபாடு இல்லாமல் கிடைத்த பொருளை ஒவ்வொருவரும் பகிர்ந்து கொடுக்கும் நெறி சங்கத் தழிழர்களின் வாழ்க்கையில் இருந்தது. இது மனிதநேயமிக்க நெறிகளில் முதன்மையான ஒன்றாக இருந்திருக்கிறது. குமண வள்ளலிடம் பெரும் பொருளைப் பரிசாகப் பெற்று வந்தார் புலவர் பெருஞ்சித்திரனார். இந்தப் பரிசைப் பெறுவதற்கு முன்பு அவருடைய வீட்டை வறுமை வாட்டி எடுத்தது. அவரின் வாழ்க்கை ஒருநேர உணவிற்குக்கூட வழியில்லாத நிலையில் இருந்தது. இந்நிலையில் அவர் பெற்றுவந்த பொருளைப் பலருக்கும் பங்கிட்டுக் கொடுத்துள்ளார். இதனை,

இன்னோர்க்கு என்னாது எண்ணொடும் சூழாது

வல்லாங்கு வாழ்வதும் என்னாது நீயும்,

எல்லோருக்கும் கொடுமதி – மனைகிழ வோயே

பழம்தூங்கு முதிரத்துக் கிழவன்

திருந்துவேல் குமணன் நல்கிய வளனே     (புறம்.163)

எனும் பாடல் காட்டும். மனிதநேயம் படைத்த மனிதனாக மனைவியை உற்சாகமாக அழைத்துக் கொடு கொடு, எல்லோருக்கும் கொடு, உற்றார் உறவினர்க்கும் கொடு, நம்முடைய வறுமைக்காலத்தில் நமக்குத் தந்து உதவியவருக்கும் கொடு, யாருக்குக் கொடுப்பது என்று யோசிக்க வேண்டாம். எல்லோருக்கும் கொடுத்து மகிழ்ச்சிகொள் என்கிறார். மனிதநேயமிக்க மனிதன் ஒருவன் மற்றவர்களுக்கு இன்பம் குவிப்பவனாக வாழ்வதற்கு அவனிடம் பெரும்பொருள் இருந்தாக வேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்பதை அழுத்தம் திருத்தமாக எடுத்துச் சொல்கிறது. இப்புலவரின் வாழ்க்கை. மனிதநேயம் என்பது எந்த நிலையிலும் மற்ற உயிர்களின் துன்பத்தைப் போக்கி அவர்களின் முகத்தில் இன்பத்தை ஏற்படுத்துவது என்ற கருத்தை மாணவர்களுக்குக் கற்பிப்பதன் மூலம் மாணவர்களிடம் மற்றவர்களுக்குக் கொடுக்கும் பண்பை வளர்க்க முடியும்.

மனிதநேயம்

மனிதநேயம் என்றால் தனக்கு விரும்பும் நன்மைகளைப் பிறருக்குத் தர விரும்புவது, தான் விரும்பாததைப் பிறருக்குத் தர விரும்பாமல் இருப்பதுமாகும். இப்பண்பு இல்லாவிட்டால் மனிதன் மிருகத்தைவிட மோசமான நிலையை அடைவதை அன்றாட வாழ்வில் அதிகமாகக் கண்டுவருகிறோம். இறைவன் மனிதனுக்குப் பயன்படக்கூடிய உறுப்புக்களை தந்து உடலாக மட்டும் அவனைப் படைக்கவில்லை உலகம் இயங்க வேண்டும் என்பதற்காக உடலுடன் பல நல்ல குணங்களையும் தன்மைகளையும் சேர்த்தே மனிதனை உருவாக்கியுள்ளான். மேலும் அன்பையும் அருளையும் கொடுத்து நேசிக்கும் பண்பைக் கொண்டவனாகப் படைத்துள்ளான். மனிதன் மற்ற உயிர்களின் மீதும் அன்பு செலுத்தும் மனப்பக்குவம்தான் இன்னும் மனிதனைத் தன் நிலையிலிருந்து மாறாமல் மனிதனாகவே அடையாளப்படுத்துகிறது. மனிதநேயம் என்பது பிறர் துன்பத்தைக் கண்டு அவருக்கு உதவுவது. பிறருக்காக வாழ்தல், நாடு, இனம், மொழி, வேறுபாடு கருதாது அனைவருக்கும் பொதுவாக வாழும் வாழ்வே மனிதநேயமிக்க வாழ்க்கையாகும். மனிதநேயம் என்ற சொல் மனிதர்களிடையே காணப்படும் நேயத்தைச் சுட்டும். நேயம் என்ற சொல் தற்காலத்தில் நேசம் என்று வழங்கப்படுகிறது. நேயம், நேசம் என்ற சொல்லுக்கு அன்பு என்று தமிழ்ப் பேரகராதி பொருள் தருகிறது (ப.687). இயற்கையோடு வாழ்ந்து நேசித்த மனிதன் தன்னையும் தன்னைப் போன்ற பிற உயிர்களையும் நேசித்ததால் நேயப்பண்பு வலுப்பெற்றிருக்க வேண்டும். மனிதநேயம் தொடர்புடைய பலம்வாய்ந்த குணங்களாக அன்பு, கருணை, இரக்கம் மற்றும் சமூக உணர்வு ஆகியவற்றோடு சகமனிதர்களிடம் அன்பு காட்டுவதை மனிதநேயம் எனக் கூறலாம். இதில் இரக்கப்பண்பு என்பது மனிதநேயத்தில் முக்கிய இடம் வகிக்கிறது. “விவேகானந்தர் 1893-ல் அமெரிக்காவின் சிகாகோ நகரில் நடைபெற்ற உலக மதங்களின் மாநாட்டில் அனைவரையும் சகோதர சகோதரிகளே என்று உரையாற்றி உலக மக்களிடையே மனிதநேயத்தை எடுத்துரைத்தார். இந்தக் கருத்தை மாணவனுக்குக் கற்றுக்கொடுப்பதனால் சகமாணவனிடம் மனிதத் தன்மையோடும்; சகோதரத் தன்மையோடும் பழகும் பண்பைப் பெறுவான். அதுமட்டுமின்றி அவர் சென்னைக்கு வந்த போது ஊக்கம் மிக்க அர்ப்பணிப்பு உணர்வோடு வேலை செய்யக்கூடிய நூறு இளைஞர்களைக் கொடுங்கள் உலகையே மாற்றிக் காட்டுகிறேன் என்று விடுத்த சவால் தாரகமந்திரமாக உலகெங்கிலும் ஒலித்தது. அவரும் இளைஞர்களாகிய மாணவர்களைத் தான் கேட்டார். அவர்களிடம் இந்த உலகத்தை மாற்றக் கூடிய விதையைத் தூவினால் மட்டுமே உலகத்தை மாற்ற முடியும் என நம்பினார் இப்படி மனிதநேயமிக்க மனிதர்களின் கருத்துக்களை மாணவர்களுக்கு கற்றுக் கொடுப்பதனால் மட்டுமே இந்த உலகத்தை மாற்றமுடியும் என்பது இன்றைய சூழ்நிலையில் மாணவர்களிடம் முக்கியமாக எடுத்துக் கூற வேண்டிய கருத்து.

தகவல் தொழில்நுட்பத்தின் வழி மனிதநேயக் கல்வி

இன்றைய உலகில் கல்வி என்பது ஒரு மனிதனின் அடையாளமாக மட்டுமல்லாது வாழ்வாதாரமாகவும் விளங்கி வருகிறது. மனிதன் தன்னை ஒரு சமூக விலங்காகவும் நாகரிகம் மிக்கவனாகவும் மாற்றுவதற்கு கல்வி மிகவும் அவசியமாகும். ஒரு மனிதன் தன் தாயிடமிருந்து கற்றுக்கொள்ள ஆரம்பித்து பல்வேறு கல்விக் கூடங்களிலும் நிறுவனங்களிலும் தன்னுடைய கல்வியறிவினை அதிகரித்துக் கொள்கிறான். நவீன உலகின் அனைத்து வசதி வாய்ப்புகளும் கல்வியினாலும் அதன் பரிணாம வளர்ச்சியினாலும் உருவாக்கப்பட்டவை. இன்றைய கல்வியின் அபரிதமான வளர்ச்சி உலகின் அனைத்துக் கனவுகளையும் மெய்ப்படச் செய்து வருகிறது. குருகுலவாசமாக இருந்த கல்வி இன்று இணையதளம் மூலம் இல்லங்களிலும் உள்ளங்களிலும் தவிர்க்கமுடியாத அங்கமாகிவிட்டது.

மனிதவாழ்க்கை என்பது தலைமுறைகள் ஒன்றையொன்று தொடர்ந்துவரும் நெடுங்கதை, நெடுங்கதையின் தொடக்கம் போகப்போக வளர்ந்து விரிந்து முழுமை பெறுவதுபோல மனித இனத்தின் ஒவ்வொரு தலைமுறையும் முந்தைய தலைமுறையைவிட வளர்ச்சி பெற்றதாகவும் உயர்வு பெற்றதாகவும் விளக்க வேண்டும். வளர்ச்சியையே நோக்கமாகக் கொண்ட மனிதனின் வாழ்க்கை வரலாற்றில் முன்னோர்கள் தேடி வைத்த பொருள், புகழ் போன்றவைகளை அழித்துவிடாமல் மேன்மைப்படுத்தி மிகுதிப்படுத்துவதே சிறந்த வாழ்க்கை. இதுபோன்ற பொறுப்புடைய வாழ்க்கையில் சில நல்ல மன ஓட்டங்களையும் மனிதர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும். அவ்வாறே சங்ககாலத்தில் வாழ்ந்த அதியமான் என்னும் மன்னனுக்கு அரியவகை நெல்லிக்கனி கிடைத்தது.  அந்த நெல்லிக்கனியை சாப்பிடுகிறவர்கள் நெடுங்காலம் வாழ்வார்கள் என்பதை அறிந்தும் தான் உண்ணாமல் தன் அவைக்கலப் புலவலவரான ஔவையார் நெடுங்காலம் வாழவேண்டும். அவரது புலமை நெடுங்காலம் வாழ்வதற்கு அரிய நெல்லிக்கனியைக் கொடுத்தான் மன்னன். அத்தகைய செயல்கள் தான் இன்றைய நிலையில் ஒருபடி மேலே உயர்ந்து தொழில்நுட்பம் வளர்ந்த நிலையில் ஒருவரின் உயிர்போகும் நிலையிலும் அவரது உடல் உறுப்புக்களைக் கொடுத்து உயிர் கொடுக்கும் மனித நேயத்தை வளர்ந்துள்ளது. உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத்தோரே என்கிறது மணிமேகலை. ஆனால் இன்று உடல் உறுப்புக்களைத் தானம் கொடுப்பவர்களே உயிர்கொடுப்பவர்களாவர். தானம் கொடுப்பவர்கள், பெறுபவர்கள் தொடர்பு கொள்வதற்கும் உறுப்புக்களை கொண்டு செல்வதற்கும் தொழில்நுட்பம் உதவுகின்றது. அதனால் உரிய நேரத்தில் பல உயிர்கள் உயிர்ப்பு பெறுகின்றன.  இதுபோன்ற கருத்துக்களை மாணவர்களுக்குக் கற்றுக் கொடுப்பதனால் தொழில்நுட்பத்தோடு மனித நேயத்தையும் வளர்க்கமுடியும்.

எனினும் தகவல் தொழில்நுட்பத்தின் மூலம் கல்விசார்ந்த தகவல்களைத் திரட்டவும், சேமிக்கவும் முடியும். இணையவழியில் ஆசிரியர், மாணவர்கள் எல்லா தகவல்களையும் எப்போது வேண்டுமானாலும் தங்களுடைய இடங்களிலிருந்து பெறமுடியும். கணிணி, தகவல் தொழில்நுட்பத்தின் மூலம் பாடங்களையும் பாடங்கள் சார்ந்த விசயங்களையும் மாணவர்களே சுயமாக கற்றுக்கொள்ளும் பொருட்டு தொழில்நுட்பம் அமைதல் வேண்டும்.  இன்று கல்வியாளர்கள் மத்தியிலும், சில கல்வி நிறுவனங்களை நடத்துபவர்கள் மத்தியிலும் ஒருவாதப் பொருளாக மாறியிருக்கின்றது மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கை. இக்கொள்கை மாணவர்களை உலகத்தரத்திற்கு ஏற்பவும் வாழும் முறைக்கு ஏற்பவும் நமது மாணவர்களைத் தயார் செய்து, அவர்களை எல்லோருடனும் சமமாக வாழ்வதற்கு அடிப்படையாக வடிவமைக்கப்பட வேண்டும். அப்படி செய்வதினால் மட்டுமே அடிப்படை கல்விநிலையிலிருந்து ஆராய்ச்சிக் கல்வி வரை சமமான கல்விமுறையையும் மனியநேயமிக்க மாணவர்களையும் உருவாக்க முடியும்.

முடிவுரை

கல்வி எப்படி ஒரு மனிதனுக்கு முதுகெலும்பாகவும் மூலதனமாகவும் அமைகிறதோ அதைப் போன்றே தகவல் தொழில்நுட்பமும் கல்வியில் தவிர்க்க முடியாத ஒன்றாக விளங்கி வருகிறது. நவீன உலகின் அனைத்துச் செயல்களும் நவீனமயமாக்கப்பட்டு வருவதைப் போன்றே கல்வித்துறையிலும் தகவல் தொழில்நுட்பம் இரண்டறக் கலந்துள்ளது. இன்றைய கல்விமுறை மரபுவழிக் கற்றல் கற்பித்தல் முறையிலிருந்து முற்றிலும் மாறுபட்டுத் தகவல் தொழில்நுட்ப உதவியுடன் பல்லூடகக் கல்வியாக வளர்ந்துள்ளதைக் கல்வியின் புரட்சி என்றே கூறலாம். மேலும் எதிர்காலத்தில் தகவல் தொழில்நுட்பத்தின் உதவியுடன் வகுப்பறையின்றி, ஆசிரியரின்றி, எவ்விதக் கட்டுப்பாடுமின்றி மாணவர்கள் கல்வியைக் கற்கும் நிலை ஏற்படலாம். இத்தகைய மாற்றம் மாணவர்களின் தேடலுக்கும் அறிவு விசாலத்திற்கும் வேலை வாய்ப்பிற்கும் வேண்டுமானால் பயன் தரலாம். ஆனால் ஒழுக்கம் சார்ந்த சமூக அக்கறையுள்ள மனிதநேயமிக்க ஒரு மாணவனை ஆசிரியர் துணையுடன் கூடிய மரபு வழியில் இலக்கியத்தைக் கற்பதனால் மட்டுமே பெற முடியும்.

துணை நூற்பட்டியல்

 1. இராமலிங்க அடிகள், 1987, திருவருட்பா – ஆறாம் திருமுறை, இராமலிங்கர் பணிமன்றம், சென்னை.
 2. இராமலிங்கம் பிள்ளை (உ.ஆ.), 2000, திருக்குறள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை.
 3. சாலினி இளந்திரையன், 1995, சங்கத்தமிழரின் மனிதநேய மணிநெறிகள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.
 4. சுப்பிரமணியக் கவிராயர் சே.நா., 1923, தமிழ்ச்சொல் அகராதி, மதுரைத் தமிழ்ச்சங்கம், மதுரை.
 5. சொக்கலிங்கம். சு.ந., 2009, தாயுமானவர் பாடல் தொகுப்பு, பழனியப்பா பிரதர்ஸ், சென்னை.
 6. திருமலை மா.சு., 1998, தமிழ் கற்பித்தல், மணிவாசகர் பதிப்பகம், சென்னை.
 7. நவீன்குமார் (தொகுப்பு), 1994, உலக அறிஞர்களின் பொன்மொழிகள் 500, நர்மதா பதிப்பகம், சென்னை.
 8. பரிமணம் அ.மா., & பாலசுப்பிரமணியன் கு.வெ.(பதி.), 2004, சிறுபாணாற்றுப்படை, நியூ செஞ்சுரி புக்ஹவுஸ் (பி) லிட், சென்னை.
 9. மெய்யப்பன் ச.(பதி.), 2001, பாரதியார் கவிதைகள், தென்றல் நிலையம், சிதம்பரம்.
 10. ஜீன் லாரன்ஸ் செ., & பகவதி கு., (பதி.), 1998, தொல்காப்பிய இலக்கியக் கோட்பாடுகள், உலகத் தழிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.

முனைவர் ப.சண்முகராணி

முனைவர்பட்ட மேலாய்வாளர்

ஏ.பி.சி.மகாலட்சுமி மகளிர் கல்லூரி

தூத்துக்குடி