இந்தியாவின் அண்டை நாடான தாய்லாந்தின் வடக்கு மாகாணங்களில் ஒன்றாக ‘ச்சிங்மாய்’ (Chiang Mai) அமைந்துள்ளது. இம்மாகாணத்தில் Wat Phra Thart Dai Suthep என்னும் கோயில் உள்ளது. இக்கோயில் உருவானமுறை, அமைப்பு, அங்குக் கற்பிக்கப்பெறும் கல்விமுறைகள் ஆகியனவற்றைக் களஆய்வின் அடிப்படையில் இக்கட்டுரை முன்வைக்கின்றது.

ச்சிங்மாய் – உருவாக்கம்

பிங் (Ping) ஆற்றங்கரையில் / ஆற்றுப்படுகையில் ச்சிங்மாய் நகரம் அமைந்துள்ளது.இந்நகரம்கி.பி.1296ஆம் ஆண்டு மெங்ராய் (Mengrai) அரசனால் புதிய தலைநகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டது. ச்சிங்மாய் என்றால் ‘புதிய நகரம்’ என்பது பொருள். தற்போது, இதன் வயது ஏறக்குறைய எழுநூறு ஆண்டுகள். கி.பி.1259 – 1317ஆம் ஆண்டுகளில் வாழ்ந்த மெங்ராய் அரசனே, ச்சிங்ராய் (Chiang Rai) என்ற இடத்திலிருந்து ச்சிங்மாய்க்குத் தலைநகரை மாற்றினான். வடக்குத் தாய்லாந்து நாட்டின் தலைநகராக இருந்தது ச்சிங்மாய். வடதாய்லாந்தானது லானா (Lanna) என அழைக்கப்பட்டது. மேலும், தாய்லாந்து, சியாம் (Siam) என்ற பெயரிலும் அழைக்கப்பட்டது.

ச்சிங்மாய் நகரானது பல படையெடுப்புகளைக் கடந்து வந்துள்ளது. உதாரணமாக, 1558ஆம் ஆண்டு பிரின்நாங் (Burengnong) என்னும் பர்மிய மன்னரால் கைப்பற்றப்பட்டு முப்பத்தெட்டு ஆண்டுகள் ஆளப்பட்டதைக் குறிப்பிடலாம். பின் நரீசன் (Naresuan) என்னும் தாய் மன்னன் மீட்டு இருபது ஆண்டுகள் ஆன நிலையில் மீண்டும் பர்மிய ஆதிக்கம் வந்தது. இறுதியாக கி.பி.1774ஆம் ஆண்டு ச்சிங்மாய் தாய்லாந்துடன் இணைந்தது. இதற்காக நான்கு ஆண்டுகள் (1767 – 1774) தாய் – பர்மா போர் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. இன்றிலிருந்து எண்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு (1933) ச்சிங்மாய் மாகாணமாக ஆக்கப்பட்டது. இன்று அம்மாகாணம் தாய் அரசின்கீழ்ச் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது (ChiangMai Province).

வாட் டாய் சுதீப் (WatDoiSuthep) – அமைப்பு

          தாய்லாந்து மக்களில் தொண்ணூறு விழுக்காட்டினர் புத்த மதத்தைச் சார்ந்தே உள்ளனர். ஆகையால் ஆயிரக்கணக்கான பௌத்தக் கோயில்கள் நாடு முழுவதும் பரவி உள்ளன. ச்சிங்மாயில் மட்டும் சுமார் முந்நூறு புத்த கோயில்கள் உள்ளன. அவற்றில் மிக முக்கியமாகக் கருதப்படுவது வாட் டாய் சுதீப் என அழைக்கப்படும் வாட் பரா தாட் டாய் சுதீப் (Wat Phra Thart Dai Suthep) ஆகும்.

பௌத்தத் துறவியான சுமணா (Monk Sumana) ஒரு எலும்புத்துண்டைக் குயினா (Kuena) என்னும் அரசனிடம் கொடுத்தார். அது புத்தரின் முதுகெலும்பின் ஒரு பகுதி எனக் கருதப்படுகின்றது. அதனைப் பாதுகாத்து வழிபடுதல் வேண்டும் என விரும்பிய அரசன் கி.பி.1386ஆம் ஆண்டு வாட் டாய் சுதீப் கோயிலைச் சுதீப் மலையின் மீது கட்டினான். இக்கோயிலுக்கான இடத்தினைத் தேர்வு செய்யும் பொறுப்பை ஓர் வெள்ளை யானையிடம் கொடுத்ததாகவும், அந்த யானையின் முதுகில் எலும்புத் துண்டை வைத்துக் கட்டி அதன் போக்கில் விடப்பட்டதாகவும், அந்த யானையானது சுமார் 3542 அடிகள் உயரம் உள்ள சுதீப் மலைப்பகுதிக்குச் சென்று மூன்று முறை பிளிறிவிட்டு, மூன்று முறை ஓர் இடத்தை வட்டமிட்டுக் கீழே விழுந்து உயிர் துறந்ததாகக் கூறப்படுகின்றது. இவ்வாறு யானை தேர்ந்தெடுத்த சுதீப் மலையில்தான் வாட் டாய் சுதீப் கோயில் நிறுவப்பட்டது.

கோயிலின் முகப்புப் படிக்கட்டு இருபுறமும் நாகங்கள் பாதுகாப்பது போன்று அமைக்கப்பட்டுள்ளது. இதில் முந்நூற்றுஆறுபடிகள் உள்ளன. இந்தப்படிக்கட்டமைப்பு நாகவாசல் என்றே (Naga Staircase) அழைக்கப்படுகின்றது. இதனைக் காட்டும் படங்கள் வருமாறு:

(படம்: 1, 2  வாட் டாய் சுதீப் கோயிலின் நாகவாசல் படிக்கட்டுகள்)

முதன்மை வாசலைக் கடந்து உள்ளே சென்றால், நம் வலப்பக்கமாகப் புத்தத் துறவி சுமணாவின் சிலை, இந்துக் கடவுளான பிரம்மாவின் சிலை, சிறிய மணி மண்டபம், இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட போதி மரம் போன்றவை அமைந்துள்ளன. மேலும், ஒரு வெள்ளை யானையின் சிலையும், அரசன் குயினாவின் சிலையும் நிறுவப்பட்டுள்ளன.

(படம்:3பௌத்தத் துறவியின் சிலை)

(படம்:4, 4.1.மணிமண்டபமும் மணிகளும்)

(படம்:5 போதி மரம்)

(படம்:6 அரசன் குயினாவின் கோயில்)

(படம்:7 அரசன் குயினாவின் யானை)

(படம்:8 பிரம்மாவின் கோயில்)

அடுத்த தளத்திற்குச் செல்லும்போது அங்கே பெரிய, சிறிய கோயில்கள் அமைந்துள்ளன. அதில் புத்தர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. அந்த அறையில் பௌத்தத் துறவிகள் மந்திரங்களையும், மதபோதனைகளையும் மக்களுக்கு வழங்கிக் கொண்டு இருப்பார்கள். அதன் சுவர்களில் புத்தரின் வாழ்வினைச் சித்திரிக்கும் வகையில் நாற்பத்தியேழு சுவர் ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. முக்கியமாக, புத்தரின் ஆரம்ப வாழ்க்கையையும் முக்தி நிலைகளையும் (Nirvana) சித்திரிக்கும் வகையில் அவை அமைந்திருக்கின்றன.

(படம்:9 கோயிலின் சுவர் ஓவியம்)

கோயில் வளாகத்தின் மையத்தில் தங்கக் கோபுரம் (Golden Pagoda)அமைந்துள்ளது. அக்கோபுரத்தின் அடியில்தான் புத்தரின் முதுகெலும்பெனக் கருதப்படும் எலும்பானது பாதுகாக்கப்பட்டு வருகின்றது. இக்கோபுரம் தங்க மூலம் பூசப்பட்டுச் சூரிய ஒளியில் மின்னுவதைக் காண்பதற்கு மிகவும் அற்புதமாக உள்ளது. அப்படங்கள் வருமாறு:

(படம்:10, 11 தங்கக் கோபுரம்)

(படம்:12 சுற்றுப்பாதை – தங்கக் கோபுரம்)

இந்த டாய் சுதீப் கோயிலானது இரண்டு பெரிய நிலநடுக்கங்களை எதிர்கொண்டுள்ளது. நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பெருத்த இழப்பிற்கு உள்ளானது. அதன் பின்னர் மறுசீரமைப்புப் பணிகள் செய்யப்பட்டது. அச்சமயத்தில் தங்கக் கோபுரத்தின் மீது தங்கத்தினாலான தாமரை பொருத்தப்பட்டது. இக்காலகட்டத்தில்தான் அனைத்து மக்களும் எளிதில் கோயிலுக்குச் செல்லும் வகையில் சுதீப் மலைப்பகுதிக்குத் தார்ச்சாலை அமைக்கப்பட்டது.

(படம்:13, 14 டாய் கோயிலுக்குச் செல்லும் பாதை)

இதற்கு முன்புவரை, ஒரு வரையறுக்கப்பட்ட சாலை வசதி இல்லாமல் காட்டுவழிப் பயணமாகவே மக்கள் நடந்து சென்று வழிபட்டு வந்தனர்.

கற்பித்தலும் கல்விமுறையும்

கோயிலின் சுற்றுப் பகுதிகளில் பல இடங்களில் சிறியதும் பெரியதும்ஆன மணிகள் தொங்கவிடப்பட்டுள்ளன. அம்மணிகளைப் பொதுமக்கள் அடித்துச் செல்கின்றனர். இவ்வாறுசெய்வது புனிதச்செயல் என்றும், இவ்வாறு செய்வதால் நன்மை கிட்டும் எனவும் நம்பப்படுகின்றது. கோயில் வளாகத்திற்குள்ளேயே பௌத்தத் துறவிகளுக்கான பள்ளிக்கூடம் அமைந்துள்ளது. சிறுகுழந்தைகள் புத்தமதக் கொள்கைகளை, மத நூல்களைப் படிக்கின்றனர். அதுமட்டுமின்றி அவர்கள் விரும்பும் துறையிலும் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. ஆக, மத நூல்களை மட்டும் கற்காமல் உலக அறிவையும், அவர்களின் தனித்திறன் சார்ந்த துறைகளில் வளரவும் கல்விமுறை அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முடிப்பாக, வாட் டாய் சுதீப் மட்டுமல்லாது பல பௌத்தக் கோயில்களில் இந்து மதத்தினைச் சார்ந்த செயல்பாடுகளும், பிரம்மா, கணபதி போன்ற இந்துக் கடவுள்களின் சிலைகளும் காணப்படுகின்றமை இவ்வுலகம் கூர்ந்து நோக்கத்தவை.

துணைநின்றவை

  1. http://www.chiangmai-chiangmai.com/wat-phra-thart-doi-suthep.htmil
  2. lanna.com
  3. thaiwaysmagazine.com

முனைவர் ப.சிவமாருதி

முனைவர்பட்ட மேலாய்வாளர்

மருந்தியல் துறை

தாய்லாந்து.