முன்னுரை

வ.சுப. மாணிக்கனார் ஆற்றிய தமிழ்த்தொண்டு அளவிடற்கரியது. தன்னைத் தோற்றுவித்த மொழிக்கு மூதறிஞர் என்று அழைக்கப்படும் வ.சுப. மாணிக்கனார் அன்போடு தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டவர். தமிழ்ப் புலமையின் மீதும்இ புலவர்களின் மீதும் கொண்ட விருப்பமே “தமிழ்க் காதல்” என்னும் நூலாக வடிவம் பெற்றுள்ளது. அகத்திணை ஆராய்ச்சியை மேற்கொண்ட அவர்இ தமிழ் இலக்கியத்தில் தோய்ந்துஇ மூழ்கி வெளிக் கொண்டுவந்துள்ள கருத்துக்கள்இ அனுபவங்கள் ஏராளமாய்க் கொட்டிக் கிடக்கும் கருத்துக் குவியல்களே “தமிழ்க்காதல்“ என்னும் நூல். தமிழ் அறிஞர்களுக்கும்இ ஆர்வலர்களுக்கும்இ மாணிக்கனாரை நாம் அடையாளம் காட்டத் தேவையில்லை. அவ்வாறு இவரைச் செய்யப் புகுவோமானால் அது குன்றின் மேலிட்ட விளக்கைக் கைவிளக்கால் சுட்டிக் காட்டுவது போல் முடியும். வ.சுப. மாணிக்கனாரின் ”தமிழ்க் காதல்” என்னும் நூலில் அவரின் ஆளுமைத்திறனை விளக்குவதாக இக்கட்டுரை அமைகிறது.

நூல் பெயர்

தாகம் கொண்ட மனிதனே தண்ணீர் தேட முனைவான். வேட்கை கொண்டவனே தேடித் திரிவான். அதுபோல் வ.சுப. மாணிக்கனாரின் ஆர்வமும் அமைந்துள்ளது. சங்கப் பாடல்கள் என்கின்ற பொற்குவியல் எங்கே பரவிக் கிடக்கிறது என்று ஆராய்ந்துள்ளார். அதன்படி அவரின்,

“சங்க இலக்கியமாவது எட்டுத்தொகையும்இ பத்துப்பாட்டுமேயாம். இது பலர் ஒப்பிய முடிவு. இப்பதினெட்டுந்தாம் காலக் கூற்றுவனின் தமிழ்ப் பசிக்கு இரையாகாது தப்பிவந்த பழந்தமிழ் இலக்கியப் படைப்புகள் சங்கத் தனிப்பாடல்களின் தொகை 2381 என்ப” (ப-5).

இக்கூற்றை நோக்குங்கால் அவர் தமிழ்மொழியின் மீதும் தமிழ் கூறும் நல்லறிவு வெளிப்பாட்டின் மீதும் அவருக்கு இருந்த விருப்பத்தைக் “காதல்” என்று கூறுதல்தான் பொருந்தும்.

பிறருடைய கருத்தை மதித்தல்

புலவர்கள் சிறந்த ஆற்றலும்இ அறிவு ஊற்றும் கொண்டவர்கள். தனக்கே உரிய ஞானச்செருக்கு அவர்களிடம் மிளிர்ந்து கிடக்கும். பிறரை மதிக்கின்ற நல்ல குணமும் பிறரின் கருத்தை ஏற்றுக்கொள்கின்ற நல்ல அறிவும் வ.சுப. மாணிக்கத்தின் ஆளுமைப் பண்பைக் காட்டுகின்றது.

“புலவனுக்கு மதம் எனப்படுவது ஆண்இ பெண் காதலே. அக்காதல் இலக்கியத்தின் வற்றா ஊற்றிடங்களுள் ஒன்று. கவிதையெண்ணத்தை உருவாக்கும் சார்புகளுள் ஒன்று எனக் கவிஞனுக்கும் காதலுக்கும் அமைந்த நட்பினை எடுத்து மொழிவர் ஆங்கிலப் பேராசிரியர் ஆர்போர்டு” (ப-5) என்று ஆர்போர்டின் கருத்தை ஏற்றுக் கொள்கிறார்.

“காதற்பாட்டு மரபுக்கும் உரிமைக்கும் இடைப்பட்ட மெல்லிய ஒரு சமநிலையை  வேண்டிநிற்கும்.  இச்சமநிலை ஒருபாற் கோடினாலும் அப்பாட்டிற்கு நல்லுருத் தோன்றாது என மணமும் அறங்களும் என்ற நூலாசிரியர் பெத்தரண் ரசல்  மொழிகுவர். இம்மொழிவு தமிழ் அகச் செய்யுட்களுக்கு நல்விளக்கமாம்” (ப-20) என்பார். பெத்தரண் ரசல் அவர்களின் அறிவினைஇ தன் அறிவால் ஏற்றுக் கொள்கின்ற பண்பை இக்குறிப்பு உணர்த்துகிறது.

மேற்கோள் காட்டுதல்

ஆசிரியரின் புலமை ஆழத்தை அவரது மேற்கோள்களே நமக்கு எடுத்துக்காட்டுகின்றன.

தொல்காப்பியம்:

“எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது

தானமர்ந்து வரூஉம்  மேவற்றாகும்” (தொல்.1168)

திருக்குறள்:

திருக்குறள் என்னும் இரண்டடியை எடுத்துக்காட்டாத அறிஞர்களே இல்லை எனலாம்.

“கண்ணொடு கண்ணினை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்

என்னும் பயனும் இல.”

இக்குறளை (காமத்துப்பால்) அகத்திணைக்கு உரிப்பொருள் அடிப்படையில் இந்நூலாசிரியர் பயன்படுத்திய நோக்கு புலப்படுகிறது.

திருக்கோவை:

“ஒண் தீந்தமிழின்துறை வாய் நுழைந்தனையோ” என்று அகத்திணைக்கு மறு பெயர் தமிழ் என்னும் கருத்தை விளக்கத் திருக்கோவையை மேற்கோள் காட்டுகிறார்.

சிலப்பதிகாரம்:

பாலைக்கு விளக்கம் தருகின்றபொழுது சிலப்பதிகாரத்தை மேற்கோள் காட்டுகிறார்.

“வேலைங் கிழவனொடு வெங்கதிர் வேந்தன்

தானலந் திருகத் தன்மையிற் குன்றி

முல்லையும் குறிஞ்சியும் முறைமையிற் றிரிந்து

பாலை யென்பதோர் படிவங் கொள்ளும்”             (சிலப் – 1595-9)

இயல்பு மாறித்தோன்றும் நிலச் செயற்கையே பாலைத் திணைக்கு இடமாம்.

கிரேக்க இலக்கியம்

ஆன்லிச்சு என்னும் அறிஞனின்இ “பண்டைக் கிரேக்க நாட்டின் பால் வாழ்க்கை” என்னும் நூலிலிருந்து அகத்திணை இலக்கியத்திற்கு மேற்கோள் காட்டும் விதம் வியப்பிற்குரியது.

வழிகாட்டுதல்

கற்றுத் துறைபோகியவர்கள் தங்களின் அறிவால் சமுதாயத்தைப் பற்றி அளந்து கூறுகின்றனர். அவ்வளவே நின்றுவிடாமல் ஒவ்வொரு மனிதனுக்கும் நோக்கமும்இ சிந்தனை ஆற்றலும் வேறுபடும் என்பதாலும்இ அதனையும் தமிழுலகம் பெற்றுத் திகழ வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தால் எதிர்கால சந்ததிகளுக்கு வழிகாட்டுகின்றனர். வ.சுப. மாணிக்கனாரும்இ

“சங்க இலக்கியத்தில் அகத்திணைப்பொருள் பெற்றிருக்கும் மேம்பாட்டினை மட்டுமோ அறிகின்றோம்? சங்க காலப் பண்பை ஆராய்குநர் முதற்கண் ஆராய வேண்டுவது அகத்திணை என்பதும்இ அகத்திணையைக் கற்று ஓர்ந்து நுணுகி ஒரு தெளிவு பெற்றாலல்லதுஇ பண்டைப் பெருந்தமிழினத்தின் நாகரிகச் சால்பிணை நாம் கண்டவர்கள் ஆகோம் என்பதும் புலனாகவில்லையா?” (ப-8) என்று கேட்பதன் மூலம் வருங்கால ஆய்வாளர்களுக்கு வழிகாட்டுகிறார் என்பது புலனாகிறது.

தொகை வகைப் பாகுபாடு

“அகநானூறுஇ நற்றிணைஇ குறுந்தொகை என்ற முதன் மூன்று தொகைகளும்இ தொகை முறையில் ஒன்று போல்வனவே. இவற்றுள் அடங்கிய பாட்டுக்களைப் பாடினோரும் பலர். அவர் பாடிய அகத்துறைகளும் பல. இங்ஙனம் ஒத்த அமைப்புடையவை ஒரு தொகையாகாது. மூன்று தொகைகள் ஆயதற்குக் காரணம் அடிக்கணக்கே என்பது அறிந்த செய்தி. பாடினோர் அடிக்கணக்கை மனத்தில் வைத்துப் பாடவில்லை என்பதும் அடியெல்லை வகுத்துக் கொண்ட திறம் தொகுத்தோர்க்கு உரியது என்பதும் நாம் நினைவிற் கொள்ள வேண்டும். கடலால்இ கறையானால்இ அயல் நாகரிகத்தால் தமிழ் மக்களின் பேணா பெரும் பேதைமையால்இ ஐயகோ! அழிந்து போய நூல்கள் அளவிலவே! எஞ்சிய சில நூற்றுப் பாடல்களையேனும் தேடித் தொகுக்க  வேண்டும். தொகுத்துக் காக்க வேண்டும் என்னும் துடிப்பு அன்றொரு நாள் எழுந்தபோது இத்தொகை நூல்கள் உருவாகின. சிதறிக்கிடந்த தனிப்பாக்களுக்கு நூல் வடிவருளிய நன்மக்கள் அனைத்துப் பாடல்களையும் ஒரு தொகையாக்கின் பெரிதாய் விரிந்து பரவலற்று மீண்டும் அழியினும் அழியும் அன்று அஞ்சிய நல்லச்சமேஇ தொகை பலவாயதற்குக் காரணம் என்று கருதலாம்“ (ப.8-9)

என்று தொகை நூல்களின் வகைக்கும் காரணம் கூறும் பாங்கு அவரது நுண்ணறிவுத்திறனை வெளிப்படுத்துகிறது.

உத்திமுறைகள்

படைப்பாளர்கள் பெரும்பாலும் கடிதமுறைஇ உவமைஇ எடுத்துக்காட்டுஇ உரையாடல் தன்மைஇ வருணனைஇ ஆசிரியர் கூற்று போன்ற பலவகையான முறைகளைக் கையாண்டு தாம் கூறவரும் கருத்தை நகர்த்திச் செல்வர். இதனுடன் வ.சுப.மாணிக்கனார் தம் அகத்தினை ஆய்வுக்கு வினா-விடை முறையையும் கையாள்கிறார்.

பலவகை ஐய வினாக்களை அடுக்கி அவற்றிற்கு விடை காணும் விதமாய் ஆய்வினைக் கொண்டு செல்கிறார்.

”அகத்திணை குறித்து ஐய வினாக்களை அடுக்கிச் சொல்லுதலோ எளிது. அறிவொக்கும் விடைத் தெளிவு காண்பது அத்துணை எளிதன்றேனும்இ காண முயல்வதும்இ முயல்விப்பதும் இவ்வாராய்ச்சியின் பாடாகும்” (ப-23)

அகத்திணை இலக்கணம் யாது? அகத்திணை எழுவகைப்படும் என்ற பாகுபாடு இசையுமா? தமிழ் மொழிக்கண் அகத்திணை நூல் பிறத்தற்கு உதவிய சூழ்நிலைகள் யாவை? அகத்திணைக்கு விதிகள் வகுத்தவர் யாவர்? போன்ற பல வினாக்களை எழுப்பி விடை தருகின்றார்.

தனித்தன்மை

இவர் கையாள்கின்ற சொற்கள் தனித்தன்மை உடையவை ”உறழ்கூற்று” என மாறுபட்ட கருத்து என்பதைப் புதிய சொல் கொண்டு வெளிப்படுத்தும் பாங்கும் சிறப்பு.

தொல்காப்பியருக்குஇ “அகத்திணைத் தொல்லாசிரியர்” என்று பெயர் கூறுகிறார்.

“ஒப்புப” – “காதற் பறையை” “சொற்பெய்தல்” “மொழிப்புண்” போன்ற சொற்கள் அவரது தனித்தன்மையைக் காட்டுகின்றன. கண்ணகியைக் கூறும் பொழுது – “உணர்ந்து அடங்கிய அறிஞள்” என்று குறிப்பிடுகின்றார்.

உவமை

புலமையாளர்களைப் பிறரிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுவது அவர்கள் கையாளும் உவமை முறை என்பது தெளிவு.

“நிலையா நீரீல்லா நிலத்திலிருந்து நீடித்து நிலைக்கும் பன்னூறு பாலைப் பாடல்களை விளைவித்துக் கொண்ட சங்க காலச் சொல்லேருழவர்களின் இலக்கிய உழவு அறிவின் கொழுமுனைக்கு ஓர் எடுத்துக்காட்டு” (பக்-24-25)

நிலத்தை உழவன் ஏர் (கலப்பை) கொண்டு உழுது பண்படுத்துதல் தொழில். அதனைக் கவிஞன் சொல் கொண்டு பிறர் மனதைப் பண்படுத்துகிறான்இ என்பதை இவ்வாறு வெளிப்படுத்தியுள்ளார்.

உரைத்திறம்

சங்ககாலம் பற்றிய சிந்தனை உயர்வைஇ சங்க காலப் புலவர்களின் நற்பண்புகளைக் கூறுமிடத்து ஆசிரியரது உரை மிளிர்கின்றது.

“இடைக்காலத்தவரும்இ இன்றுள்ளவரும் களவுக்காமம் பாடுவதற்கு ஒப்புவரோ! வீண் என்று கருதார்கொல்!

சங்க காலம் இயற்கைக் காலம். இவ்வுலக வாழ்வை மதித்துப் போற்றிய இன்பக்காலம். ஆதலின் காதல் பாடுவதை வாழ்வு பாடுவதாகவும்இ காதற் பெண்களைப் பாடுவதை நல்ல இல்லறத் தாயார்களைப் பாடுவதாகவும்  சங்கச் சான்றோர் கருதினார்” என்று சங்க இலக்கிய அகத்திணைப் பாடல்களுக்கும்இ பாடிய புலவர்களுக்கும் சிறப்பினைக் கூட்டுகின்றது அவரது உரைவிளக்கம்.

“தமிழ்க் காதல்” என்னும் நூலில் வ.சுப. மாணக்கனாரின் சிறந்த உரைத்திறத்தை அறியமுடிகிறது.

உரையாசிரியரின் கூற்றையும் விட தெளிவுடையதாக அமைகிறது. படிப்பவருக்கு எளிதில் புரியும் விதமாக உரையாற்றுகின்ற நிலையைக் காணமுடிகிறது.

“பரத்தமை தாங்கலோ இலனென வறிது நீ

புலத்தல் ஒல்லுமா மனைகெழு மடந்தை”              (அகம்-36)

இப்பாடலுக்கு விளக்க உரை தரும் விதம் இவரது ஆளுமையைப் புலப்படுத்துகிறது.

”தலைமகனது புறப்போக்குத் தாங்க இயலவில்லையே என்று ஒரு தலைவி மிக வருந்துகின்றாள். எவ்வாற்றானும் அவள் மனம் இசையவில்லை. இதன் விளைவு என்னாம்? குடும்பம் வறுமைப்படும்? குழந்தைகள் மெலிவெய்தும்இ இல்லறம் வற்றிப்போம். ஆதலின் அறிவுடைத் தோழி பிடிவாதத் தலைவியை இடித்துரைக்கின்றாள். பொறுக்க அறியாமையினால் கெட்ட குடிகளைக் காணாயோ என்று எடுத்துக் காட்டுகின்றனள். பொறுப்பதே மனைவியின் பொறுப்பு என்பது தோழியின் நல்லுரை. இல்லறப் பிணிப்பிற்குப் பொருட்பிணிப்பு ஒரு காரணம்” என்பதை எடுத்துரைக்கிறார்.

வ.சுப. மாணிக்கனார் தமிழ் இலக்கியங்களின் மீது கொண்ட விருப்பமே தமிழ்க்காதல் என்னும்  நூலாய் உருவானது. இவர் எழுத்தாளுமைப் பண்புகள்இ கருத்தாளுமைப் பண்புகள் எனப் பலவிதமான பரிமாணங்களைக் கொண்ட சிறந்த ஆளுமைத்திறன் உடையவர் என்பதைத் தமிழ் கூறும் நல்லுலகம் மறுக்காது.

முனைவர் சு.நாகரத்தினம்

உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை

பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரி (தன்னாட்சி),

புதுச்சேரி – 03