குறிஞ்சி – முல்லை – மருதம் எனத் தமிழ்மக்களின் பரிணாம வளர்ச்சி நிகழ்ந்ததாக வரலாற்றாய்வாளர்கள் கருதுவர். இம்மருதநில மக்களே படிப்படியான வளர்ச்சி பெற்று உணவு தேடும் வாழ்க்கையிலிருந்து மானிட சமூகத்தை உணவு உற்பத்திக்கு மாற்றியவர்கள். வர்க்கப்பிரிவுகள் தோன்றினும் வேளாண் உற்பத்தி நிலைபெறச் செய்தது இந்நிலப்பரப்பில்தான். காட்டைத் திருத்திக் கழனியாக்கி, ஆற்றைத் திருப்பி நீரைத்தேக்கி குடும்பம் என்ற அமைப்பு உருவாகக் காரணமானதும்  அரசு உருவாகக் காரணமாக இருந்ததும் இந்நிலப்பகுதியில்தான். அப்படிப்பட்ட மருதநிலத்தில் எத்தனை வகையான மக்கள் வாழ்ந்தார்கள் என்பதை நிகண்டுகள், இலக்கணநூல்களில் குறிப்பிடப்பட்டுள்ள மருதநில மக்கள் பற்றிய குறிப்புக்களை இலக்கியத்தோடு பொருத்திக்காட்டி விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கம்.

இலக்கணத்தில் மருதநிலமக்கள்

தமிழ் இலக்கணத்தில் முதன்மையாகக் கருதப்படுவது தொல்காப்பியம். மருதநிலத்தில் வாழ்கின்ற மக்களெனத் தனியாகக் குறிப்பிடாமல்

“ஏனோர் பாங்கினும் எண்ணுங் காலை

ஆனா வகைய திணைநிலைப் பெயரே” (தொல்.பொருள்-968)

என்று அந்தந்த நிலத்திற்குரிய, நிலப்பெயர் அடிப்படையில் மக்கட்பெயர் பகுக்கப்பட்டிருக்கும் என்று தொல்காப்பியர் கூறுவதிலிருந்து ஒவ்வொரு நிலத்திற்கும், அந்நிலத்தில் வாழ்கின்ற மக்கட்பெயரினைச் சுட்டிக்காட்டும் மரபு உள்ளதனை அறிய முடிகின்றது. நிகண்டினைப் போலவே ஏறத்தாழ அதே காலகட்டத்தில் (கி.பி. 9- ஆம் நூ.) தோன்றியதெனக் கருதப்படும் நாற்கவிராச நம்பியின் அகப்பொருள் விளக்கம்

‘உழவர் உழத்தியர் கடையர் கடைசியர்’ (நம்பி. 23)

என்ற நூற்பாவில் மருதநில மக்களை உழவு செய்கின்றவர;கள் என்ற அளவிலேயே அந்நில மக்களைப் பற்றியதான குறிப்பைத் தருகிறது. புறப்பொருள் வெண்பாமாலையின் சான்றுப்பாடலும்,

களமர் கதிர்மணி காலோகம் செம்பொன்

வளமனை பாழாக வாரிக்கொளன்மலிந்து

கண்ணார் சிலையார் கவர்ந்தார் கழல்வேந்தன்

நண்ணார் கிளையலற நாடு (புறப்.15)

இவ்வாறு  இலக்கணநூல்களில் குறிப்பிடப்பட்டுள்ள உழவர், உழத்தியர், கடையர், கடைசியர், ஊரன், மகிழன், களமர்  போன்ற ஒரு சில பெயர்களில்  மருதநில மக்கள்   அழைக்கப்பட்டமையை அறிய முடிகிறது.

தமிழ் நிகண்டுகளில் மருதநிலமக்கள்

தமிழ்நிகண்டுகளில் மருதநில வேளாண் மக்களாக உழவர், வினைஞர், மள்ளர், கம்பளர், தொழுமர், களமர் என்று பல நிலைகளில் மருதநிலத்து மக்களைப் பற்றிக் குறிப்புக் காணப்படுகிறது. இதனைச் சேந்தன் திவாகர நிகண்டு,

“களமர் தொழுவர் மள்ளர் கம்பளர்

வினைஞர் உழவர் கடைஞர் இளைஞர் (என்று அனையவை)

கழனிக் கடைந்தவர் (பெயரே)” (திவாகரம்.130)

என்று குறிப்பிடுகிறது. இதனைப் போன்றே பிங்கல நிகண்டு,

“களமர் உழவர் கடைஞர் சிலதர்

மள்ளர் மேழியர் மருதமாக்கள்” (பிங்கலம்.132)

என்று மருதநில மக்களை ஆறு பிரிவினராகவும், மருதநில மக்கள்

“களமரே தொழுமரே மள்ளர்

கம்பளர் உழவரொடு

வினைஞர் கடைஞர்” (சூடாமணி.71)

என்ற ஏழு வகைப் பிரிவினர் என்று சூடாமணி நிகண்டும் கூறுகின்றன. இவை யாவும் பிற்காலத்தவரின் பாகுபாடு.

மேற்கண்ட நிகண்டுகளும், இலக்கணநூல்களும் மருத நிலமக்கள் உழவு செய்கின்றவர்கள் என்றளவிலே ‘உழவர்’ என்ற பெயர்ச்சொல்லைக் குறிப்பிடத் தவறவில்லை. இருப்பினும் மருதநில மக்கள் அக்கால வழக்கப்படி

 1. களமர் 2. கம்பளர் 3. கடைஞர் 4. மேழியர் 5. தொழுவர்  6. வினைஞர்  7. கிளைஞர்  8. மள்ளர்   9. உழவர்     10. சிலதர்

எனப் பத்துவகையான பெயரைக் கொண்டு அழைக்கப்பட்டிருக்கின்றனர; என்பது தெரியவருகின்றது.

உழவர்    

உழவுத் தொழில் செய்தவர்களைத் தனி இனமாக உழவர் என்ற பெயரிலேயே அழைக்கப்பட்டிருக்கின்றனர். முல்லை நிலத்திலும், குறிஞ்சி நிலத்திலுமே மேட்டு நிலங்களில் உழவு மேற்கொண்டு தினை விதைத்திருந்தாலும், உழவன் என்றவன் மருதநிலத்தில் வயல்சார்ந்த சூழலில் வளமான விளைச்சலை விளைவித்தவர்களைக் குறிக்கும் ஓர் இனச் சொல்லாகவே இருந்திருக்கின்றது. இதனை,

“ கழனி உழவர் குற்ற குவளையும்” (அகம்.216)

என்ற அகநானூற்றுப் பாடலடி விளக்குகின்றது.

உழவு செய்து வாழ்ந்த மக்களைப் பற்றித் தொல்காப்பியர; வேளாண்மாந்தர; என்பதாகக் குறிப்பிடுகின்றார்.

“ வேளாண் மாந்தர்க்கு உழுதூண் அல்லது

இல்லென மொழிப பிறவகை நிகழ்ச்சி” (தொல்.1581)

என்ற தொல்காப்பிய நூற்பாவில் உழவு செய்தவர;களுக்கு வேளாண்மை செய்தவர் என்ற பெயர்ச்சொல் அமைந்தமையையும், உழவுத்தொழிலை வேளாண்மைத் தொழில் என்ற சொல்லால் அழைத்தமையையும் விளக்குகிறது. அதனடிப்படையில் உழவர் என்பது ஓர் இனமல்ல உழவு செய்கின்ற அனைவருக்கும் உண்டான பொதுச்சொல்லாகவே இருக்க வேண்டும்.

களமர்

களமர் என்பது ஓர் இனப் பெயர்ச்சொல். சங்கப்பாடல்களில் ‘உழவர்’ என்ற பெயர்ச்சொல்லைப் போன்று பெரும்பான்மையாகப் பயன்படுத்த வில்லையானாலும், சிறுபான்மையாகப் பயன்படுத்தியிருக்கின்றனர். களமரின மக்களைப் பற்றிக் குறிப்பிடும் புறப்பொருள் வெண்பாமாலையின் சான்றுப்பாடலான

“களமர் கதிர்மணி காலோகம் செம்பொன்

வளமனை பாழாக வாரிக் – கொளன்மலிந்து

கண்ணார் சிலையார் கவர்ந்தார் கழல்வேந்தன்

நண்ணார் கிளையலற நாடு” (புறப்.15)

மேற்கண்ட பாடலில் களமர் என்ற சொல்லிற்கு அடியார்கள் என்ற பொருளில் விளக்கம் தருகின்றது. இதனைப் போன்றே

“அள்ளல் தங்கிய பகடூஉறு விழுமம்

கள்ஆர் களமர் பெயர்க்கும் ஆர்ப்பே” (மதுரைக்.259-260)

“கள்ஆர் களமர் இருஞ்செரு மயக்கமும்” (மதுரைக்காஞ்சி-393)

என்ற மதுரைக்காஞ்சி அடிகளிலும், களமர் என்ற ஓரின மக்கள் உழவு மேற்கொண்டவராகவும், மதுரை மாநகரின் தெருக்களில் தொழில் புரிந்தவர்களாகவும், செய்தி கிடைக்கின்றமையால், இம்மக்கள் உழவுத்தொழிலை மேற்கொண்ட மருதநிலமக்களாக இருந்தாலும், மருதநில மக்களுக்குள்ளேயே பொருளாதார நிலையில் குன்றியவர்களாகவும், பெருநிலக்கிழாரிடையே அடிமை வேலைகளைச் செய்தவர்களாகவும் இருந்திருக்க வேண்டுமென மேற்கண்ட சான்றுகளால் உணர முடிகின்றது.

தொழுவர்

மருதநிலத்திலேயே வாழ்கின்ற மற்றொரு வகையின மக்கள் தொழுவர். இத்தொழுவ் என்ற சொல்லிற்கு ‘தொழில் புரிவோர்’ என்று பொருள் தருகின்றது. இருப்பினும்

“பொய்கை நாரை போர்வில் சேர்க்கும்

நெய்தலம் கழனி நெல்அரி தொழுவர்

கம்புவிடு மென்பிணி அவிழ்ந்த ஆம்பல்

அகல்அடை அரியல் மாந்தி” (புறம்.9:1-5)

என்ற புறநானூற்றுப் பாடலில் ‘தொழுவர்’ என்ற சொல் உழவர் என்ற பொருளில் வருகிறது. வயலில் நெல்லை அறுக்கும் உழவர் (தொழுவர்) முகையவிழ்கின்ற மென்மையான ஆம்பலின் அகன்ற இலையில் மதுவை உண்பர் என்று கூறுவதில் தொழுவர் நெய்தல் நிலத்தோருமுள்ள மருத நிலத்தில் நெல் விளைவித்தவர்களாகக் குறிப்பிட்டமையால் இவர்கள் மருதநிலத்தில் வேளாண்மையும் செய்து வாழ்ந்தவர்கள் என்பது தெரியவருகின்றது. இதனைப் போன்றே

“ நெல்அரியும் இருந்தொழுவர்

செஞ்ஞாயிற்று வெயில்முனையின்

தென்கடல் திரைமிசைப் பாய்ந்து” (புறம்.24:1-3)

என்ற மற்றொரு புறநானூற்றுப் பாடலில், பட்டினச் சிறப்பை விளக்குவதாக அமையும் இப்பாடலில் கடற்கரையையொட்டிய மருதநிலத்தில் ‘நெல்லரியும்’ பெரும் உழவர்கள்(தொழுவர்கள்) செம்மையான கதிரவனின் வெயிலால் வெறுப்புற்றுத் தெளிந்த கடல் அலையில் நீராடியவராய் இருந்தனர்  என்று கூறுவதாலும், மேலே குறிப்பிட்ட புறநானூற்றுச் செய்திகளையும் உற்று நோக்குகையில் இரண்டு பாடல்களும் தொழுவர் வாழ்ந்த பகுதி கடலோரம் ஒட்டிய மருதநிலப்பகுதி என்பதை உணரமுடிகிறது. நெய்தல் நிலத்து ஒட்டிய மருதநிலப்பகுதியாக இருந்தாலும், அவர்கள் மருதநிலத்திற்குரிய வேளாண்மையே செய்தார்கள் என்ற நிலையில் ‘தொழுவர்’ என்ற ஓர் இனமக்கள் உழவுத்தொழில் செய்தவர்கள் என்பதை அறியமுடிகிறது.

வினைஞர்

களமர், தொழுவர் என்ற இனங்களைப் போன்றே வினைஞர்  என்ற ஓர் இனமக்களும்  மருத நிலத்தில் வாழ்ந்திருக்கின்றனர். வினைஞர் என்ற சொல்லைப் பற்றி Tamil Lexicon கூறுகையில் ‘தொழில் வல்லோர்’ என்று குறிப்பிடுகின்றது. வினைஞரும் களமரும் சேர்ந்து பேரொலி எழுப்பியதை

“கருங்கை வினைஞரும் களமரும் கூடி

ஒருங்கு நின்று ஆர்க்கும் ஒலியே”

என்ற சிலப்பதிகார அடிகளிலும்,

“ஒலிந்த பகன்றை விளைந்த கழனி

வன்கை வினைஞர் அரிபறை இன்குரல்”

என்ற மதுரைக்காஞ்சி அடிகளிலும் காண முடிகின்றது. வினைஞர் என்ற ஓர் இனமக்கள் மருதநிலத்தில் உழவு மேற்கொண்டு பெரு நிலக்கிழாராக வாழ்ந்தவர்கள் என்ற குறிப்பு சங்கப்பாடல்களில் கிடைக்காத நிலையில், இம்மக்கள் மருதநிலத்தில் வாழ்ந்த ஏழ்மையான மக்கள் என்று கருத இடமளிக்கிறது.

கிளைஞர்                                                                                                   கிளைஞர் என்ற ஓர் இனப் பெயர்ச்சொல்லைப் பற்றிக் கழகத் தமிழ் அகராதி உறவோர், தோழர், மருத நிலமக்கள், நட்பினர், உழவர், கூட்டத்தார் என்று பலபொருள் தருகின்றது ( ப.341). அகராதி கூறும் உறவினர் என்ற கூற்றிற்கு இணங்க

“ முகைபுணர் விரலின் கண்ணீர் துடையா

யாம் அவன் கிளைஞரேம் அல்லேம்” (புறம்.144:9-10)

“ எந்தை திமில்இது நுந்தை திமில்என

வளைநீர; வேட்டம் போகிய கிளைஞர்

திண்திமில் எண்ணும் தண்கடற் சேர்ப்ப” ( நற்.331:6-8)

என்று குறிப்பிடுகின்றன சங்கப் பாடல்கள்.

 

கடைஞர்

கடைஞர், கடைசியர் என்னும் சொற்கள்   புறநானூற்றில் ‘களை பறிக்கும் வேலை பார்ப்பவர்’ என்ற பொருளில் இடம்பெற்றுள்ளன.

“கொண்டைக் கூழைத் தண்தழைக் கடைசியர்

சிறுமாண் நெய்தல் ஆம்பலொடு கட்கும்

மலங்கு மிளிர;” (புறம்.61:1-3)

இதன்வழி, களமர் களத்து வேலைகளைச் செய்ததைப் போன்றே களைபறிக்கும் ஓரினமாக இருந்திருக்கின்றனர். களை பறிக்கும் தொழிலை மேற்கொண்டதால் ‘களைஞர்’ என்ற சொல்லே  ‘கடைஞர்’ என்று கூடத் திரித்து வழங்கப்பட்டிருக்கலாம் என எண்ணத் தோன்றுகிறது.

மள்ளர்

‘மள்ளர்’ என்ற சொல்லிற்குச் சூடாமணி நிகண்டு ‘திண்மையானவர்’  என்றும், ‘படைத்தலைவன்’ என்று திவாகர நிகண்டும்,  ‘மருதநிலத்தில் வாழ்வோன்’  என்று பிங்கல நிகண்டும் பொருள் தருகின்றன. மேலும்;                                                                      “அருந்திறல் வீரர்க்கும் பெருந்திற லுழவர;க்கும்

வருந்தகைத் தாகும் மள்ளர்எனும் பெயர்”

என்று திவாகரநிகண்டு குறிப்பிடுகின்றது.

“செருமலை வீரரும் திண்ணி யோரும்

மருதநில மக்களும் மள்ளர் என்ப”

என்று பிங்கல நிகண்டு குறிப்பிடுகின்றது.

‘மள்ளர் குலத்தில் வரினும் இரு

பள்ளியர்க் கோன்

பள்ளர்க் கணவன்’

என்று முக்கூடற்பள்ளு பாடல் 13 இல் குறிப்பிடுகிறது.

இதனைப் போன்றே ‘கம்பளர்’ ‘சிலதர்’ ‘மேழியர்’ ஆகியோர் உழவு(ஏர்) ஓட்டுபவராக இருந்திருக்கலாம். உழுகருவிக்கு ‘மேழி’ என்ற பெயர் உண்டு. கம்பளர் என்ற சொல் கொங்கு நாட்டுப்பகுதியில் கம்மாளர் என்று வழங்கப்படுகின்றது. இச்சொல்லால் குறிப்பிடப்படும் இம்மக்கள் (ஆசாரியர்கள்) உழவுக்குத் தேவையான கலப்பை, வண்டி செய்து கொடுக்கும் தொழில் செய்து வருகின்றனர்.

‘கம்பளர்’ ‘சிலதர்’ ‘மேழியர்’ ஆகிய இனக்குழுப் பெயர்ச் சொற்களும் மருதநிலத்தில் வாழ்ந்த மக்களாக, பிற்கால இலக்கண நூலார; குறிப்பிட்டிருந்தாலும், இவ்வினங்களைப் பற்றியதான குறிப்புகள் எவற்றையும் இலக்கியங்களில் அறிய இயலவில்லை. இருப்பினும் இவ்வின மக்களும் மேற்குறிப்பிட்ட இனத்தாரைப் போன்றே மருதம் சார;ந்த நிலத்தில் வாழ்ந்தவர;களாக இருந்திருக்க வேண்டும்.

முடிவுகள்

மேற்கண்ட சான்றுகளின் அடிப்படையில் இலக்கணங்களில் கூறப்பட்ட மருதநிலமக்கள் உழவர், உழத்தியர், கடையர், கடைசியர், ஊரன், மகிழன், களமர்  போன்ற ஒரு சில பெயர்களில் குறிப்பிட்டு வந்தமைமையை அறிய முடிகிறது.  அதன்பின் வந்த நிகண்டுகளிலும், இலக்கியங்களிலும் தொழுவர், மள்ளர், கம்பளர், வினைஞர், இளைஞர், சிலதர், மேழியர், பள்ளர் போன்ற குலமக்கள் எண்ணற்;ற பிரிவினராக  வளர்ச்சி பெற்றிருப்பதையும்  காணமுடிகிறது. இவர்களே சமுதாயத்தின் உற்பத்தி சக்திகளாகத் திகழ்ந்த காரணத்தால் சமூக வளர்ச்சியிலும், மாற்றத்திலும் இவர்களின் பங்களிப்பு முக்கியமானது என்பதை மறந்து விடுவதற்கில்லை. மேலும் இவர்களைப் பற்றிய ஆய்வுகள் அவசியம்.

துணையன்கள்

 1. ஆறுமுகநாவலர் (ப.ஆ),1969 , சூடாமணி நிகண்டு (மூலமும் உரையும்),    திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்,சென்னை-18
 2. கதிர்மகாதேவன்  (உ.ஆ.), 2003 (மு.ப), நற்றிணை, கோவிலூர் மடாலயம், கோவிலூர்.
 3. சண்முகம்பிள்ளை.மு (ப.ஆ),1995 , தொல்காப்பியம் பொருளதிகாரம், இளம்பூரணர் உரை, முல்லை நிலையம், சென்னை.
 4. சுப்பிரமணியன்.ச.வே. (உ.ஆ.), 2003(மு.ப), பத்துப்பாட்டு, கோவிலூர் மடாலயம், கோவிலூர்.
 5. புலியூர்க்கேசிகன்(உ.ஆ.), 2004(ம.ப), புறநானூறு (தெளிவுரை) பாரிநிலையம், சென்னை.
 6. செயபால்.இரா. (உ.ஆ.), 2007, அகநானூறு (மூலமும் உரையும்,  நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை.
 7. கோவிந்தராச முதலியார் (உ.ஆ.), 1998,  நம்பி அகப்பொருள் விளக்கம், திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்,சென்னை-18.
 8. சோமசுந்தரனார் பொ.வே. (உ.ஆ.),  2002,2004, புறப்பொருள் வெண்பாமாலை, திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்,சென்னை-18
 9. — 2004, நிகண்டுகள் (தொகுப்பு), சாந்தி சாதனா பதிப்பகம், சென்னை.
 10. —1994, திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்,சென்னை-18
 11. — 1934, தமிழ் லெக்சிகன், சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை.

 .பெட்ரிக் ஜெபராஜ்,

தமிழ் – முனைவர் பட்ட ஆய்வாளர்,

பிஷப் ஹீபர் கல்லூரி,

திருச்சிராப்பள்ளி – 17.