தொல்காப்பியம், வீரசோழியம், நேமிநாதம், நன்னூல், இலக்கண விளக்கம், தொன்னூல் விளக்கம், முத்துவீரியம், சுவாமிநாதம், அறுவகை இலக்கணம், தமிழ்நூல், தென்னூல் ஆகிய இலக்கண நூல்கள் எல்லாம் தத்தமது இலக்கணக் கோட்பாடுகளைக் காலமாற்றம், வளர்ச்சி என்பவற்றின் அடிப்படையில் கட்டமைத்துச் செல்வதோடு, தொல்காப்பியத்தையோ, நன்னூலையோ பின்பற்றி இலக்கணம் வகுத்துள்ளன. மார்த்தாண்டம், நந்தன்காடு என்ற பகுதியிலுள்ள மீ.காசுமான் என்பவர் எழுதிய தற்கால இலக்கண நூலான தமிழ்க் காப்பு இயத்தின் வினைக் கோட்பாட்டு உருவாக்கத்தினையும் கட்டமைப்பினையும் எடுத்துரைப்பதாக இக்கட்டுரை அமைகின்றது.

தெரிநிலை வினை

தொல்காப்பியம் (தொல்.201), வினையைக் குறிப்புவினை என்றும் தெரிநிலைவினை என்றும் பாகுபடுத்துகிறது. வினையினை வினை, வினைக்குறிப்பு என்று குறிப்பிடுகிறார் தொல்காப்பியர். வீரசோழியத்தில் குறிப்புவினை என்ற சொல்லாட்சி இடம்பெறுகிறது. ஆனால் தொரிநிலை பற்றியச் செய்திகள் இடம்பெறவில்லை. நேமிநாதம் (நேமி.62), முக்காலங்களையும் ஏற்றுவருவது வினை என்று குறிப்பிடுகிறது. உரையாசிரியர் இதனைத் தொரிநிலைவினை என்று குறிப்பிடுகிறார். நன்னூல் (நன்.320), செய்பவன், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள் ஆறும் தருவது தொரிநிலை வினை என்கிறது.

இலக்கணவிளக்கம் (இல.வி.249), தொன்னூல் விளக்கம், முத்துவீரியம் ஆகிய இலக்கண நூற்கள் தொரிநிலை வினையை வினை என்ற சொல்லிலே கையாளுகின்றன. தொன்னூல் விளக்கம் (தொ.வி.104), பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என்ற ஆறினைப் பயனிலையாகக் கொண்டு முடிவது வினை என்கிறது. முத்துவீரியம் (மு.வீ.596), இறப்பு, நிகழ்வு, எதிர்வு என்ற மூன்று காலத்தையும் வெளிப்படையாகக் காட்டுவது வினை என்கிறது. சுவாமிநாதம் (சு.நா.48), தொரிநிலை வினையைத் தொடர்வினையின் ஒருவகையாகச் சுட்டுகிறது. ஆயின் தொரிநிலை வினை என்பதற்கான இலக்கணத்தைக் குறிப்பிடவில்லை. அறுவகை இலக்கணத்தில் வினைக்கான பகுப்புகள் இடம்பெறவில்லை.

தமிழ்நூல் (தமிழ்.86), ஒரு வினை நிகழ்ச்சி தன்பொருளில் முற்றுப்பெற்று ஐந்தொகையான திணை, பால், எண், இடம், காலம் கொண்டு முடிவதாவது முற்று என்கிறது. இது தொரிநிலை வினைக்குப் பொருந்தி வருவதால் இதனைத் தொரிநிலை வினை என்று கூறலாம் என்கின்றார் உரையாசிரியர்.

வினைத்தன்மை, அதனை நிகழ்த்தும் வினைமுதல், செயற்படுபொருள், கருவி, காலம், இடம், இன்னதற்கு இதுபயன் என்றும் எட்டனுள் ஏற்பன அடிப்படையாக நுண்மையும் பருமையும் ஆகிய உள்பொருள், இல்பொருள் காட்சிப்பொருள், கருத்துப்பொருள்களின் புடைப்பெயர்ச்சியைத் தொரிவுறுக்கும் காலம் தெற்றென விளங்கத் திகழ்வன தொரிநிலை வினைச்சொல்லாகும் என்கிறது தென்னூல் (தென்.105).

தமிழ்க்காப்பு இயம் (த.கா.இ.154,156), செய்பவன், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள் என்ற ஆறினோடு இன்னதற்கு, இதுபயன் என்ற இரண்டினையும் கூட்டி எட்டினையும் உணர்த்த வருகின்ற பயனிலையாகிய வினைச்சொல்லே தொரிநிலை வினையாகும் என்கிறது. செயப்படுபொருள் குன்றியவினை, செயப்படுபொருள் குன்றாவினை என்ற இரண்டும் தொரிநிலை வினையின் பாற்படும் என்கிறார் காசுமான்.

குறிப்பு வினை

அது என்னும் ஆறாம் வேற்றுமையின் உடைமைப் பொருளின் கண்ணும், கண் என்னும் ஏழாம் வேற்றுமையது நிலப்பொருட்கண்ணும், ஒப்பு, பண்பு, அண்மை, இன்மை, உண்மை, வன்மை என்னும் பொருள்பற்றி வருவன எல்லாம் உயர்திணைக் குறிப்பு வினைமுற்றாகும். இன்று, இல, உடைய, அன்று, உடைத்து, அல்ல, உள என்பவை எல்லாம் அஃறிணை குறிப்பு வினைமுற்றாகும். இன்மை செப்பல், இல்லை, இல், வேறு என்பவை எல்லாம் விரவுத்திணைக் குறிப்புவினையாகும் என்கிறது தொல்காப்பியம் (தொல்.214-222). எவன் என்னும் குறிப்பு வினைச்சொல் அஃறிணையில் இரண்டு பாலுக்கும் உரியதாகும் என்கிறது.

வீரசோழியத்தில் திணை அடிப்படையிலான குறிப்பு வினைப் பாகுபாடுகள் இடம்பெறவில்லை. அன், இயன், ஈனன், இகன், ஏயன், வான், வதி, அம், இவன், , , ஆன், ஆளன், மான், அகன், சு என்பவை யெல்லாம் குறிப்பு வினையின் ஈறுகளாக வரப்பெறும் ஆண்பால் பெயர்கள் என்கிறது. வலையன், வேதியன், கொந்தவன், மருத்துவன், கூத்தன், சோதிடவன், ஆதித்தியன், வைநதேயன், காங்கேயன், கௌரவன், பௌத்தன், செம்பியன், சைவன், பாசுபதன், சிங்களவன், வடுகன், துளுவன், மதிமான், கள்ளன், கௌங்குமம், ஆரிடம், பார்ப்பு போன்ற சான்றுகளைச் சுட்டுகிறது (சொல்.தத்திதப்படலம்,1-5). மேலும், மை (வலிமை), அம் (நீளம்), பு (அலிப்பு), து(வலிது), வு (மெலிவு), கம் (குறுக்கம்), வல் (இளவல்), அளவு (தண்ணளவு) என்னும் ஈறுகள் எல்லாம் வலி, நெடு, குறு, கரு, பசு, வெளு, கெடு, இள, தண், வெம், அரி, எளி, பெரு, சிறு, பரு, தேர், மலி என்னும் பொருண்மையுடைய சொல்லை முதலாகக் கொண்டு வரப்பெறும். அச்சி (பறைச்சி), ஆட்டி (வெள்ளாட்டி), அனி (பார்ப்பனி), ஆத்தி (வண்ணாத்தி), அத்தி (நட்டுவத்தி,), தி (குறத்தி), ஆள் (நல்லாள்), அள் (தீயள்), (சாத்தி, கொற்றி), இச் (கள்ளிச்சி,), சி (பேய்ச்சி) முதலான ஈறுகளையுடைய பெண்பால் குறிப்பு வினைச்சொற்களைக் குறிப்பிடுகிறது.

நேமிநாதம் (நேமி.71-72), குறிப்பு வினையை உயர்திணை மற்றும் அஃறிணை என்று இரண்டு வகையாகப் பிரிக்கிறது. நெடியன், உடையன், நிலத்தன், இளையன், கடியன், மகத்தன், காரியன், தொடியன், நெடியள், உடையள், நிலத்தள், இளையள், கடியள், மகத்தள், காரியள், தொடியள், நெடியர், உடையர், நிலத்தா;, இளையர், கடியர், மகத்தா;, காரியர், தொடியர் என்பவையெல்லாம் உயர்திணைக் குறிப்பு வினைமுற்றுக்களாகும் என்கிறது. காரிது, காரிய, அரிது, அரிய, தீது, தீய, கடிது, கடிய, நெடிது, நெடிய, பொரிது, பொரிய, உடைத்து, உடைய, வெய்து, வெய்ய, பிறிது, பிற இவையனைத்தும் அஃறிணைக் குறிப்பு வினைமுற்றுக்களாகும் என்கிறது.

நன்னூல் (நன்.321,339), பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என்னும் ஆறினையும் அடிப்படையாகக் கொண்டு அவற்றின் இடத்தே பிறந்து, செய்பவன், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள் என்ற ஆறினுள் ஒன்றையுமே விளக்குவது குறிப்பு வினை என்று நன்னூல் சுட்டுகிறது. வேறு, இல்லை, உண்டு என்பதையும் குறிப்பு வினைகள் என்று குறிப்பிடுகிறது. இலக்கண விளக்கம் (இல.வி. 233, 235, 236, 240), யாரென்னும் வினைப்பொருளைக் உணர்த்தும் குறிப்பு வினைச்சொல் உயர்திணையில் மூன்று பாலிற்கும் உரியதாகும் எனவும், எவன் என்னும் சொல் அஃறிணையை உணர்த்தும் குறிப்பு வினைச்சொல் எனவும், வேறு, உண்டு, இல்லை, இல் என்பவையெல்லாம் விரவுதிணையில் இடம்பெறும் குறிப்பு வினைச்சொற்கள் எனவும் குறிப்பிடுகின்றது.

தொன்னூல் விளக்கம் (தொ.வி. 103, 123-126), வினைச்சொல் அல்லவாயினும் வினையைப் போல் நடந்து குறிப்பினால் வினையியல் தொழிலைக் காட்டும் வினைக்குறிப்பு என்கிறது. வினைக்குறிப்பு வினைபோன்று விகுதி பெற்று இடம் பால் உணர்த்தும் என்றும், அதன் பகுபதப் பகுதி பெயராக அமையும் என்றும், குறிப்புவினையில் ஒன்றல்பாலுக்கு துவும், பலவின்பாலுக்கு அவும் விகுதியாக அமையும் என்றும், குறிப்புவினையானது எச்ச விகுதியைப் பெற்றுவரும் என்றும், அகரம் இதன் விகுதியாக வரப்பெறும் எனவும் குறிப்பிடுகின்றது. முத்துவீரியம் (மு.வீ.610-616), காலத்தைக் குறிப்பாக உணர்த்துவது குறிப்பு வினை என்கிறது. உண்மை, இன்மை, வன்மை, அன்மை இவையெல்லாம் காலத்தைக் குறிப்பாக உணர்த்துவது எனவும், மேலும், காரியன், காரியான், காரியள், காரியாள், காரியர், காரியார், காரியம், காரியாம், காரியேம், காரியென், காரியேன் இவையெல்லாம் உயர்திணைக் குறிப்பு வினைச்சொற்களாகும் எனவும், இன்று, இல, உடைய, அன்று, உடைத்து, அல்ல, எவன் என்னும் சொற்கள் அஃறிணைக் குறிப்பு வினைச்சொற்கள் என்றும் விளக்குகின்றது. வேறு என்னும் சொல் விரவுத்திணையில் இடம்பெறும் குறிப்பு வினைச்சொல்லாகும் என்கிறது.

சுவாமிநாதம் (சு.நா.48), குறிப்புவினைக்கான இலக்கணத்தைச் சுட்டவில்லை. தனிவினை மற்றும் தொடர்வினை என்று இரண்டாகப் பிரிக்கிறது. இவற்றில் தொடர்வினையின் ஒருபிரிவாகத் தொரியா நிலை வினையே குறிப்புவினை என்கிறது. அறுவகை இலக்கணத்தில் வினைக்கான பகுப்புகள் இடம்பெறவில்லை. தமிழ்நூல் (தமிழ்.352-354), குறிப்பாய் காலத்தைக் காட்டுவதால் குறி;ப்புவினையாகும். பெயாரினியல்பே போல் ஆறுகூறான பெயர்களின் பின் மூவிடத்திற்கும் உரிய இறுதிநிலைகள் ஏறிவரும் ஒருவகைச் சொற்களைக் குறிப்பாகக் காலங்காட்டுவதாகக் கொண்டு குறிப்பு வினை என்று தொன்மைச் சான்றோர் வகுத்துரைப்பர் என்று இலக்கணம் வகுக்கிறது. ஆறாம் வேற்றுமையின் உடைமைப் பொருளில் உருபு விரியுமாறும், ஏழாம் வேற்றுமையின் இடப்பொருளில் உருபு விரியுமாறும், ஆறுவகைப் பெயர்களில் ஏறிவரும் ஐம்பால் இறுதிகளும் அன்மை, இன்மை, உண்மை ஆகிய பொருளுடைய அன்று, இல்லை, உண்டெனும் சொற்களும், வன்மை முதலிய தன்மை குறிக்கும் சொற்களும், ஒப்புரைக்கும் சொற்களும், என் என்னும் வினாவும், கண் என்னும் உருபும் மேற்கொளும் இறுதிகளும் குறிப்பு வினைச்சொல்லின் அமைப்பாகும் என்கிறது. மேலும் இக்குறிப்புவினைகள் பெயருக்குப் பின்னே வருகிறதே எனின் அவ்விடத்துப் பெயர்ப் பயனிலையாகும் என்கிறது.

பொருளினது பண்பு, வடிவு, ஒப்பு, உடைமை, தன்மை, இடத்தொடர்பு முதலான மனத்தொடு பொறிகட்குப்புலனாக அறுவகைப் பெயரடிப் படையாக முக்காலமும் குறிப்பான் விளங்க நெறியோடு வருவது குறிப்பு வினை என்கிறது தென்னூல் (தென்.106). யார் என்னும் சொல் உயர்திணைக்குரியதாகும் எனவும், டு, , து, று என்ற ஈறுகள் அஃறிணையில் குறிப்பு வினைக்கு வரும் எனவும், வேறு, இல்லை, உண்டு என்னும் சொற்கள் விரவுத்திணையில் குறிப்பு வினைச் சொற்களாகவும் வரப்பெறும் என்கிறது (தென்.113-117).

தமிழ்க் காப்பு இயம் (.கா..158-161,176), குறிப்பு வினைமுற்று பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என்னும் ஆறின் அடியாகத் தோன்றிச் செய்பவனை மட்டும் விளக்கச் செய்யும் என்கிறது. அது என்னும் ஆறாம் வேற்றுமையின் உடைமைப்பொருளிலும், இல் என்னும் ஏழாம்வேற்றுமையின் இடப்பொருளிலும், ஓப்புமைப் படுத்துமிடத்தும், பண்பின் கண்ணும், குறிப்பு வினைமுற்று வரும் எனவும், அண்மை, இன்மை, உண்மை, வன்மை இவையெல்லாம் உயர்திணைக் குறிப்பு வினைமுற்றுச் சொற்களாகும் என்றம் குறிப்பிடுகின்றது. இன்று, இல, உளது, உள, அன்று, அல, உடைய, உடைத்து முதலான சொற்கள் அஃறிணைக் குறிப்பு வினைச்சொற்கள்கள் எனவும், வேறு, இல்லை, உண்டு என்பவை ஐம்பால் மூவிடத்திற்குரிய குறிப்புவினை முற்றுச் சொற்கள் எனவும் தமிழ்க் காப்பு இயம் விளக்குகின்றது.

தன்மை ஒருமை வினைமுற்று விகுதிகள்

தொல்காப்பியம் (தொல்.205), நேமிநாதம் (நேமி.64), முத்துவீரியம் (மு.வீ.602), தென்னூல் (தென்.109) ஆகியன கு, டு, து, று, என், ஏன், அல் என்ற ஏழினைத் தன்மை ஒருமை விகுதிகளாகச் சுட்டுகின்றன. நன்னூல் (நன்.331), இலக்கண விளக்கம் (இல.வி.237), தொன்னூல் விளக்கம் (தொ.வி.111), சுவாமிநாதம் (சு.நா.50) ஆகிய இலக்கணநூற்கள் கு, டு, து, று, என், ஏன், அல் என்பதுடன் அன் என்பதை இணைத்து எட்டினைக் குறிப்பிடுகின்றன. தமிழ்நூல் (தமிழ்.92-95), ஏன் என்னும் இறுதி தன்மை ஒருமையைக் குறிக்கும் எனவும், அல், என் என்பவை தொன்மையான இறுதி என்றும், அன் என்பது இடைக்காலத்து இறுதி என்றும் சுட்டுகிறது. மேலும், கு, டு, து, று என்பவை பழமை வழக்காகும் என்கிறது. ஆக ஏன், அல், என், அன், கு, டு, து, று என்ற எட்டு விகுதிகளைச் சுட்டுகிறது. அறுவகை இலக்கணம் (அறு.சொல்.61,105), ஏன் என்னும் தன்மை ஒருமை விகுதியை மட்டும் குறிப்பிடுகின்றது.

தமிழக் காப்பு இயம், என், ஏன் அன், அல், கு, டு, து, று என்பவை எட்டும் தன்மை ஒருமை வினைமுற்றுக்களாகும் எனவும், அவற்றுள் கு, டு, து, று என்பவை பழங்கால வழக்கில் வருபவை என்றும் குறிப்பிடுகின்றது.

தன்மைப் பன்மை வினைமுற்று விகுதிகள்

தொல்காப்பியம் (தொல்.202), நேமிநாதம் (நேமி.64), முத்துவீரியம் (மு.வீ.568-571), தென்னூல் (தென்.107) ஆகிய இலக்கண நூற்கள் அம், ஆம், எம், ஏம், கும், டும், தும், றும் என்ற எட்டினைத் தன்மை பன்மை விகுதிகளாகக் குறிப்பிடுகின்றன. நன்னூல் (நன்.332), அம், ஆம் முன்னிலையாரையும், எம், ஏம், ஓம் இவை படர்க்கையாரையும், கும், டும், தும், றும் என்பவை முன்னிலை, படர்க்கை என்ற ஈரிடத்தாரையும் தன்னுடன் கூட்டும் உளப்பாட்டுத் தன்மை பன்மை வினைமுற்றாகும் என்கிறது. இந்நூல் தொல்காப்பியம் சுட்டிய எட்டோடு ஓம் என்பதை இணைத்து ஒன்பதினைச் சுட்டுகின்றது. நன்னூலினைப் பின்பற்றி இலக்கண விளக்கம் (.வி.237), தொன்னூல் விளக்கம் (தொ.வி.106), சுவாமிநாதம் (சு.நா.50), தமிழ்நூல் (தமிழ்.93,95) ஆகிய இலக்கண நூற்கள் விகுதிகளாக ஒன்பதினைக் குறிப்பிடுகின்றன.

இலக்கண விளக்கம் (இல.வி.237), அம், ஆம், எம், ஏம், ஓம் என்பவை மூன்று காலம் காட்டும் எனவும், மற்ற ஐந்தும் எதிர்காலத்தைக் காட்டும் எனவும் கூறுகிறது. முத்துவீரியம், தென்னூல் ஆகியன அம், ஆம், எம், ஏம், கும், டும், தும், றும் என்ற எட்டினுள் அம், ஆம் என்பவை முன்னிலையாரையும், எம், ஏம் என்பவை படர்க்கையாரையும், கும், டும், தும், றும் என்பவை முன்னிலை மற்றும் படர்க்கையாரையும் உளப்படுத்தும் என்கின்றன. அறுவகை இலக்கணம் (அறு.61,105), ஏம், ஒம், ஆம், உம், அம் என்ற ஐந்து விகுதிகளைக் குறிப்பிடுகின்றது.

தமிழ்க் காப்பு இயம் (.கா..166-17), அம், ஆம் என்பவை முன்னலையாரையும், எம், ஏம், ஓம் படர்க்கையாரையும் உளப்படுத்துகிற தன்மைப் பன்மை விகுதிகள் என்றும், கும், டும், தும், றும் என்பவை பழங்கால விகுதிகள் எனவும் குறிப்பிடுகிறது.

முன்னிலை ஒருமை வினைமுற்று விகுதிகள்

தொல்காப்பியம் (தொல்.223), தொன்னூல் விளக்கம் (தொ.வி.105), முத்துவீரியம்; (மு.வீ.617,618), தென்னூல் (தென்.121), ஆகிய இலக்கணநூற்கள் இ, , ஆய் என்பனவற்றை முன்னிலை ஒருமை விகுதிகளாகக் குறிப்பிடுகின்றன. நேமிநாதம் (நேமி.67), , , ஆய் என்பவற்றுடன், உண், சோ;, பொரு என்பனவற்றைப் புதியதாக இணைக்கின்றது.

நன்னூல் (நன்.335), , , ஆய் என்ற மூன்றும் முன்னிலை ஒருமை வினைமுற்றாகும் என்கிறது. மேலும், ஏவலின் வரும் எல்லா ஈற்று மொழிகளும் முன்னிலை ஒருமை வினைமுற்றாகும் எனவும் குறிப்பிடுகின்றது. இலக்கண விளக்கம் (இல.வி.238), சுவாமிநாதம் (சு.நா.25, 50), , ஆய், , அல், ஆல், ஏல், காண் விகுதிகளுடன் ஏவலில் வரும் இருபத்திமூன்று ஈறுகளும் விகுதிகளாகும் என்று குறிப்பிடுகின்றன. இலக்கண விளக்கம் ஐ, ஆய் மூன்று காலமும், இகரம் க, , , ற ஊர்ந்து எதிர்காலம் காட்டும் என்றும் குறிப்பிடுகிறது. அறுவகை இலக்கணத்தில் முன்னிலை ஒருமை வினைமுற்றுகள் குறித்த செய்திகள் இடம்பெறவில்லை.

தமிழ்நூல் (தமிழ்.96-97), , ஆய், செய் என்னும் வாய்பாட்டு ஏவல் விகுதியும், பழமையான வழக்கில் இடம்பெறும் இகர இறுதியும், உம் இறுதியும் முன்னிலை ஒருமை வினைமுற்றாகும் என்கிறது. தமிழ்க் காப்பு இயம் (.கா..168) தொல்காப்பியம் குறிப்பிடும் இ, , ஆய் என்ற மூன்று விகுதிகளையே சுட்டிச் செல்கின்றது.

 முன்னிலைப் பன்மை வினைமுற்று விகுதி

தொல்காப்பியம் (தொல்.224), முத்துவீரியம் (மு.வீ.619), நேமிநாதம் (நேமி.67), நன்னூல் (நன்.337) இர், ஈர், மின் என்பனவற்றை முன்னிலைப் பன்மை விகுதிகளாகக் குறிப்பிடுகின்றன. நன்னூல், இர், ஈர் என்பதனை முன்னிலைப் பன்மை வினைமுற்று என்றும், மின் என்பதை முன்னிலைப் பன்மை ஏவல் வினைமுற்று என்றும் கூறுகிறது. இலக்கண விளக்கம் (இல.வி.238), சுவாமிநாதம் (சு.நா.50) இர், ஈர், மின், உம் என்ற விகுதிகளைச் சுட்டுகின்றன. இர், ஈர் என்பன முன்னிலைப் பன்மை வினைமுற்று விகுதிகள் எனவும், மின், உம் என்பன ஏவல் முன்னிலைப் பன்மை வினைமுற்று விகுதிகள் எனவும் குறிப்பிடுகின்றன.

தொன்னூல் விளக்கம் (தொ.வி.105), இர், ஈர் என்ற இரண்டினை மட்டுமே குறிப்பிடுகின்றது. அறுவகை இலக்கணத்தில் முன்னிலைப் பன்மை விகுதிகள் குறித்த செய்திகள் இடம்பெறவில்லை. தமிழ்நூல் (தமிழ்.97-98), இர், ஈர் முன்னிலைப் பன்மை வினைமுற்று என்கிறது. மின் ஏவல் முன்னிலைப் பன்மை வினைமுற்று எனக் குறிப்பிடுவதோடு, உங்கள் என்பதையும் புதிய வினைமுற்றாகத் தமிழ்நூல் விளக்குகின்றது.

தமிழ்க் காப்பு இயம் (.கா..169-170), இர், ஈர் என்பனவற்றைக் குறிப்பிடுகிறது. மேலும், நீங்கள் என்னும் இரட்டைப் பன்மை முன்னிலைப் பெயர்ச்சொல் கள் ஈற்றுடன் பொருந்தி வரப்பெறும் என்கிறது.

படர்க்கை ஆண்பால் வினைமுற்று விகுதிகள்

தொல்காப்பியம் (தொல்.207), நேமிநாதம் (நேமி.65), நன்னூல் (நன்.325), இலக்கண விளக்கம் (இல.வி.23), தொன்னூல் விளக்கம் (தொ.வி.105), முத்துவீரியம் (மு.வீ.604), சுவாமிநாதம் (சு.நா.25,30), அறுவகை இலக்கணம் (அறு.106), தமிழ்நூல் (தமிழ்.87), தென்னூல் (தென்.110), ஆகியன ஆண்பால் விகுதிகளாக அன், ஆன் என்ற இரண்டினைக் குறிப்பிடுகின்றன. வீரசோழியம் (நூ.கிரியாப்படலம்,3-4), படர்க்கை விகுதிகளைக் காலத்துடன் இணைத்துக் கூறுகிறது. இறந்தகால ஆண்பால் விகுதிகளாகத் தான், ஆன் என்பதும், நிகழ்கால ஆண்பால் விகுதிகளாக நின்றான், கிறான் என்பதும், எதிர்கால ஆண்பால் விகுதிகளாக உறங்குவான், உண்பான் என்ற விகுதிகளையும் குறிப்பிடுகிறது. தொல்காப்பியம் (தொல்.213), முத்துவீரியம் (மு.வீ.608) ஆகிய இலக்கணநூற்கள் அன், ஆன் விகுதி செய்யுளில் ஒன், ஓன் என்றாகி வருமெனக் குறிப்பிடுகின்றன. தமிழ்க்காப்பு இயம் (.கா..162) தொல்காப்பியத்தைப் பின்பற்றி இலக்கணம் வகுத்துள்ளது.

படர்க்கைப் பெண்பால் வினைமுற்று விகுதிகள்

தொல்காப்பியம் (தொல்.207), நேமிநாதம் (நேமி.65), நன்னூல் (நன்.236), இலக்கண விளக்கம் (இல.வி.232), தொன்னூல் விளக்கம் (தொ.வி.105), முத்துவீரியம் (மு.வீ.604), சுவாமிநாதம் (சு.நா.25,30), அறுவகை இலக்கணம் (அறு.106), தமிழ்நூல் (தமிழ்.88), தென்னூல் (தென்.110), ஆகிய இலக்கணநூற்கள் பெண்பால் விகுதிகளாக அள், ஆள் என்ற இரண்டினைக் குறிப்பிடுகின்றன. வீரசோழியம் (நூ.கிரியாப்படலம்,3-4), இறந்தகாலப் பெண்பால் விகுதிகளாகத் தாள், ஆள் என்பதும், நிகழ்கால பெண்பால் விகுதிகளாக நின்றாள்;, கிறாள் என்பதும், எதிர்காலப் பெண்பால் விகுதிகளாக உறங்குவாள், உண்பாள் என்ற விகுதிகளையும் குறிப்பிடுகிறது தொல்காப்பியம் (நூ.213), முத்துவீரியம் (நூ.608) ஆள் விகுதி செய்யுளிடத்து ஓள் எனத்திரிந்து வருமெனச் சுட்டுகின்றன. தமிழ்க் காப்பு இயம் (.கா..162) அள், ஆள் என்ற விகுதிகளையே விளக்குகிறது.

படர்க்கைப் பலர்பால் வினைமுற்று விகுதிகள்

தொல்காப்பியம் (தொல்.208), நன்னூல் (நன்.327), இலக்கண விளக்கம் (இல.வி.323), முத்துவீரியம் (மு.வீ.605), சுவாமிநாதம் (சு.நா.25,50) ஆகிய இலக்கண நூற்கள் அர், ஆர், , மார் என்பதை விகுதிகளாகச் சுட்டுகின்றன நேமிநாதம் (நேமி.65) அர், ஆர், ப என்ற மூன்று விகுதிகளைக் குறிப்பிடுகின்றது. வீரசோழியம் (கிரியாப்படலம்.நூ.3-4), இறந்தகாலப் பலர்பால் விகுதிகளாகத் தார், ஆர், தார்கள், ஆர்கள் என்பனவும், நிகழ்கால பலர்பால் விகுதிகளாக நின்றார், கிறார், நின்றார்கள், கிறார்கள் என்பனவும், எதிர்கால பலர்பால் விகுதிகளாக உறங்குவார், உறங்குவார்கள், உண்பார், உண்பார்கள் என்பனவற்றையும் விகுதிகளாகக் குறிப்பிடுகிறது. தொன்னூல் விளக்கம் (தொ.வி.105, 111) அர், ஆர், , மார், மரும், மனார், கள் என்ற விகுதிகளைக் குறிப்பிடுகின்றது. தென்னூல் (தென்.110), தமிழ்நூல் (தமிழ்.89), அர், ஆர், , மார், கள் என்ற ஐந்து விகுதிகளைக் குறிப்பிடுகின்றது. தமிழ்க் காப்பு இயம் (.கா..162) மேலே சொன்ன ஐந்துடன் உம் என்பதை இணைத்து ஆறு விகுதிகளைக் குறிப்பிடுகின்றது. அறுவகை இலக்கணத்தில் பலர்பால் விகுதிகள் குறித்த செய்திகள் இடம்பெறவில்லை.

படர்க்கை ஒன்றன்பால் வினைமுற்று விகுதிகள்

தொல்காப்பியம் (தொல்.217), நேமிநாதம் (நேமி.66), நன்னூல் (நன்.328), இலக்கண விளக்கம் (இல.வி.234), முத்துவீரியம் (மு.வீ.613), சுவாமிநாதம் (சு.நா.50), தென்னூல் (தென்.114) ஆகிய இலக்கண நூற்கள் து, று, டு என்ற விகுதிகளைக் கூறுகின்றன. நன்னூலும், இலக்கண விளக்கமும் து, று, டு ஆகிய மூன்றும் டு குறிப்பின் பொருட்டு வரும் என்கின்றன. வீரசோழியம் (கிரியாப்படலம்,நூ.3-4), இறந்தகால ஒன்றன்பால் விகுதிகளாக தது, அது என்பதும், நிகழ்கால ஒன்றன்;பால் விகுதிகளாக நின்றது, கின்றது என்பதும், எதிர்கால ஒன்றன்பால் விகுதிகளாக உறங்குவது, உண்பது என்ற விகுதிகளையும் குறிப்பிடுகிறது. தமிழ்நூல் (தமிழ்.91) து, று என்னும் இரு விகுதிகளை மட்டும் குறிப்பிடுகின்றது. தொன்னூல் விளக்கம் (தென்.105) உகர விகுதியை மட்டும் கூறுகின்றது. அறுவகை இலக்கணத்தில் பலவின்பால் குறித்த செய்திகள் இடம்பெறவில்லை. தமிழ்க் காப்பு இயம் (.கா..162) து, டு, று என்ற விகுதிகளையே குறிப்பிடுகின்றது.

படர்க்கைப் பலவின்பால் வினைமுற்று விகுதிகள்

தொல்காப்பியம் (தொல்.218), நேமிநாதம் (நேமி.66), முத்துவீரியம் (மு.வீ.612), தென்னூல் (தென்.114) ஆகிய இலக்கண நூற்கள் அ, , வ என்ற மூன்றினைப் பலவின்பால் விகுதிகளாகக் குறிப்பிடுகின்றன. வீரசோழியம் (கிரியாப்படலம்,நூ.3-4), இறந்த காலப் பலவின்பால் விகுதிகளாகத் தன, அன என்பதும், நிகழ்கால பலவின்பால் விகுதிகளாக நின்றன, கின்றன என்பதும், எதிர்காலப் பலவின்பால் விகுதிகளாக உறங்குவன, உண்பன என்ற விகுதிகளையும் குறிப்பிடுகிறது. நன்னூல் (நன்.329), இலக்கண விளக்கம் (இல.வி.234) , ஆ என்ற இரண்டு விகுதிகளை மட்டும் குறிப்பிடுகின்றன. நன்னூல், தென்னூல், இலக்கண விளக்கம் ஆகியன ஆ எதிர்மறைப் பொருளில் வரும என்கின்றன. அறுவகை இலக்கணத்தில் பலவின்பால் குறித்த செய்திகள் இடம்பெறவில்லைதொன்னூல் விளக்கம் (தொ.வி.125) ஆகாரம் ஒன்றினை மட்டும் விகுதியாகச் சுட்டுகின்றது. சுவாமிநாதம் (சு.நா.25,50) , அ விகுதிகளைப் பலவின்பால் விகுதிகளாகக் குறிப்பிடுகின்றது. தமிழ்நூல் (தமிழ்.90) , வை, கள் என்னும் மூன்று விகுதிகள் படர்க்கைப் பலவின்பாலை உணர்த்தும் என்கிறது. தமிழ்க் காப்பு இயம் (.கா..162) தொல்காப்பியத்தைப் பின்பற்றி இலக்கணம் வகுக்கின்றது.

வியங்கோள் வினை

தொல்காப்பியம், எழுத்ததிகாரத்தில் உயிர்மயங்கியலிலும் (நூ.210,211), சொல்லதிகாரத்திலும் (தொல். 45, 66, 224, 227, 228, 275) வியங்கோள் பற்றிக் குறிப்பிடுகிறது. எழுத்ததிகாரத்தில் ஏவல் கண்ணிய வியங்கோட்கிளவி எனக் குறிப்பிடுவதால் வியங்கோள் ஏவல் கண்ணிய வினையேயாகும் எனக் கருதுகிறார் எனலாம். தொல்காப்பியர் வியங்கோள் வினை படர்க்கைக்கு மட்டும் உரியது என்கிறது (தொல்.226). ஆனால் உரையாசிரியர்கள் சிறுபான்மை என்று வருவதால் முன்னிலையிலும், தன்மையிலும் வருதலை எடுத்துக் காட்டுகின்றனா;. வீரசோழியம், நேமிநாதம் ஆகிய இலக்கணநூற்களில் வியங்கோள் பற்றிய செய்திகள் இடம்பெறவில்லை.

நன்னூல் (நன்.338), , , ர் என்ற மூன்றும்; விகுதிகளைச் சுட்டுகிறது. இவை ஐம்பாலிலும் மூவிடத்திலும் வரப்பெறும் என்கிறது. இலக்கண விளக்கம் (இல.வி.239), , , ர், அல், ஆல், உம், மார், ஐ என்ற எட்டு விகுதிகள் ஐம்பாலிலும் மூவிடத்திலும் வரப்பெறும் என்கிறது. தொன்னூல் விளக்கம் (தொ.வி.116), ஐம்பாலிலும் மூவிடத்திலும் க, , ர் என்பதை விகுதியாகப் பெற்று வரும் என்கிறது. முத்துவீரியம் (மு.வீ.621), புதுமையாக விகுதிகளைச் சுட்டாமல் படர்க்கையில் மட்டும் வரும் என்கிறது.

சுவாமிநாதம் (சு.நா.51), , , ர என்ற வியங்கோள் விகுதிகளைக் குறிப்பிடுகின்றது. அறுவகை இலக்கணம் சொல்லதிகாரத்தில் வியங்கோள் வினைகள் பற்றியச் செய்திகள் இல்லை. ஏழாமிலக்கணத்தில் வியங்கோள் விகுதிகளாகக் க, ய என்பதைச் சுட்டுவதோடு இவை தன்மை, முன்னிலை, படர்க்கை என்னும் மூன்று இடத்தில் வரப்பெறும் என்கிறது. தமிழ்நூல் (தமிழ்.99-100), , அல் என்பன வியங்கோள் விகுதிகள் என்று சுட்டுகிறது. ய என்னும் இறுதி சிலசமயம் சில சொல் வழக்குகளில் வரும் என்றும், தன்மை, முன்னிலை, படர்க்கை என்னும் மூவிடத்திலும் கட்டனை, வசை, வாழ்த்தல், விதித்தல், வேண்டல் ஆகிய பெருள்களில் வரும் என்றும் இலக்கணம் கூறுகின்றது. தென்னூல் (தென்.128), , இய, இயர், அல் என்னும் விகுதிகள் வாழ்த்தல், வைதல், விதித்தல், வேண்டல் என்னும் பொருள்களில் ஐம்பால் மூவிடத்திலும் பொருள் செய்யும்போது படர்க்கை முற்றாகவும் வரப்பெறும் என்கிறது.

தமிழ்க் காப்பு இயம் (.கா..174-175), ஐம்பால், மூவிடத்திலும் க, , இய, அல் விகுதிகள் வரப்பெறும் எனவும், இயர் என்னும் விகுதி மூவிடங்களில் பலர்பாலில் மட்டும் வரும் எனவும் குறிப்பிடுகின்றது.

பெயரெச்சம்

தொல்காப்பியம் பெயரெச்சத்திற்கான இலக்கணத்தைக் குறிப்பிடாவிடினும், செய்யும், செய்த என்னும் இரு பெயரெச்ச வாய்ப்பாடுகளைக் குறிப்பிடுகின்றார். இவ்வாய்ப்;பாடுகள் நிலன், பொருள், காலம், கருவி, வினைமுதற்கிளவி, வினை என்ற ஆறனுள் ஒன்றினைக் கொண்டு முடியும் என்கிறார் (தொல்.234). செய்யும் வாய்ப்பாட்டுச் சொற்கள் செய்ம் என்று வழங்குவதையும் தொல்காப்பியர் குறிப்பிடுகின்றார் (தொல்.240). இதற்குச் சான்றாகத், தொல்காப்பியர் இடையியலில் உம் உந்தாகும் இடனுமார் உண்டே என்ற விதியினைக் கூறுகின்றார் (தொல்.294). வீரசோழியத்தில் பெயரெச்சம் குறித்த செய்திகள் இடம்பெறவில்லை.

நேமிநாதம் (நேமி.69), நிலம், பொருள், காலம், கருவி, வினைமுதல், வினை என்றும் ஆறிடத்தும் நடக்கும் பெயரெச்சம் செய்யும், செய்த என்ற இரண்டாக அமையும் என்கிறது. பெயரெச்சமும் வினையெச்சமும் ஒருசொல்லின் பின் முற்றாதே பலசொல் உடன் அடுக்கி வந்து முற்றவும் பெறும். அவை இரண்டும் எதிர்மறுத்துச் சொன்னாலும் பெயரெச்சமும் வினையெச்சமுமாகத் தன்மை திரியாது தமக்கேற்ற சொல் இடை வந்துநிற்க முடியவும் பெறும் என்று பெயரெச்ச, வினையெச்சத்திற்குச் சிறப்பிலக்கணம் வகுத்துள்ளது நேமிநாதம் (நேமி.70).

பெயரெச்சத்திற்கான இலக்கணத்தை முதன் முதல் நன்னூலே தருகிறது. செய்த, செய்கின்ற, செய்யும் என்று சொல்லப்படும் மூவகை வாய்பாட்டுச் சொற்களிலும் மூன்று காலங்களிலும் தொழிலும் வெளிப்படையாகத் தோன்றி வினை முற்றுவதற்கு வேண்டும் பாலொன்று தோன்றாமல் அப்பாலுடனே அறுவகைப் பொருட்பெயர்களும் எஞ்சும்படி நிற்பன பெரெச்சம் என்கிறது நன்னூல் (நன்.340-341). இலக்கண விளக்கம் (இல.வி.243), நன்னூலைப் பின்பற்றி இலக்கணம் வகுக்கின்றது. பெயரெச்சம், வினையெச்சம் தொரிநிலையாகவும், குறிப்பாகவும் அமையுமிடத்து ஐம்பால், மூவிடத்திற்கும் உரியதாகும். அவை பிறிதோர் சொற்பற்றியல்லாது நிற்றலாற்றாது குறைபட நிற்கும் தன்மையை உடையது என்கிறது (இல.வி.242,244).

தொன்னூல் விளக்கம், தொழிலும் காலமும் காட்டி இடமும் பாலும் காட்டாமல் வருவது எச்சமாகும். இவ் எச்சத்துள் பெயரைக் கொண்டு முடிவது பெயரெச்சமாகும் என்கிறது (தொ.வி.117-118). பெயரெச்சத்திற்கான விளக்கத்தைத் தரும் தொன்னூல் விளக்கம் பெயரெச்சம் எவையென்பதைக் குறிப்பிடவில்லை. செய்த, செய்கின்ற, செய்யும் என்னும் மூவகை மொழிகளிலே முக்காலமும் தொழிலும் தோன்றிச் செய்பவன் முதலியவைகள் ஒழிய நிற்பன பெயரெச்சமாகும். அப்பெயரெச்சம் காலம், பொருள், நிலம், கருவி, வினைமுதல், வினை என்னும் அறுவகைப் பொருட்கு உரிமையாகும் என்கிறது முத்துவீரியம் (மு.வீ.629-630).

முற்றாக இல்லாமல் முடிப்பதற்குப் பிற சொல்லை எதிர்பார்ப்பது எச்சமாகும். செய் என்னும் வாய்பாட்டின் இறுதியில் சேய்மைச் சுட்டைக் குறிக்கும் அகரமும் நடுவில் கால இடைநிலையும் எதிர்காலத்திற்கு எம் ஈறும் பெற்று வருவது பெயரெச்சம். அது, செய்த, செய்கின்ற, செய்யும் என மூவகை வாய்பாட்டில் வரும். வினை, செய்பொருள், வினைமுதல், நிலம், கருவி, காலம் ஆகியவற்றைக் குறிக்கும் பெயரைக் கொண்டு முடிவதே பெயரெச்சம் என்கிறது சுவாமிநாதம் (சு.நா.52).  அறுவகை இலக்கணம் (அறு.45-47), பெயரெச்சத்தை மூன்று காலமாகப் பகுத்து, முக்காலத்தைச் சார்ந்து வருவது பெயரெச்சம் என்கிறார். மேலும், பெயரெச்சத்தை வினைமுற்று என்ற சொல்லிலே கையாளுகிறார்.

தமிழ்நூல் (தமிழ்.111-112), முற்றுவினைபோல ஐந்தொகை காட்டாது வினை முதனிலையோடு காலம்காட்டிப் பிற நான்கையும் உணர்த்த மற்றொரு பெயரைப் பொருந்தி நிற்பது பெயரெச்சமாகும் என்கிறது. பெயரெச்ச வினை முக்காலப் பிரிவினால் முறையே செய்த, செய்கின்ற, செய்யும் என்ற மூன்றாகும். செய்கின்ற செய்கிற என்பதையும் உட்படுத்தும் என்கிறது. தென்னூல் (தென்.139-140), பெயரெச்சத்தைப் பெயரெஞ்சுக்கிளவிஎன்று குறிப்பிடுகின்றது. தொரிநிலையும் குறிப்புமாகிய வினையாலணையும் பெயாரிறுகள் குன்றிய குறைச்சொற்கள் பெயரெஞ்சுக் கிளவிகளாகும். பெயரெச்சம் திணை, பாலிடங்களுக்குப் பொதுவாய்ச் செய்த செய்கின்ற செய்யும் என்னும் காலமுணர்த்தும் வாய்பாடுகளான் அமைந்து நிலம் பொருள் காலம் கருவி வினை முதல் தொழில் ஏற்பது நீக்கம் ஆகிய எண்வகைப் பொருளுக்குரியனவாக வரும் அவை பொருள் முதலாய அறுவகைப் பெயரையும் ஓரோவழி குறிப்பு வினைப்பெயரையும் கொண்டு முடியும் என்கிறது.

தமிழ்க் காப்பு இயம் (.கா..201-204), இடமும் பாலுங் காட்டும் விகுதிகளை ஏற்காது வினையுங் காலமுந் தோன்றுமாறு முற்றுப் பெறாத வினையாக வருஞ்சொல், வினைமுற்றைக் கொண்டு முடிந்தால் வினை எச்சம் எனவும், பெயர்ச்சொல்லைச் சார்ந்து அதன் இயல்பை உணர்த்தின் பெயரெச்சமாகும் எனவும் உணர்த்துகிறது.

 1. செய்த, செய்கின்ற, செய்யும் என்னும் வாய்ப்பாட்டில் பெயருக்கு அடையாக வரும் எச்சமே தொரிநிலைப் பெயரெச்சம் ஆகும்.
 2. செய்யாத, செய்யா என்னும் வாய்ப்பாட்டில் எதிர்மறைப் பொருளைத் தரத் தொரிநிலைப் பெயரெச்சம் பெயரொடு வரும்.
 3. குறிப்பு வினைமுற்றின் இறுதியில் வரும் பாலீற்;றை நீக்கி அகரத்தை இறுதியிற் பெற்றுப் பெயாரின் பண்பை விளக்கி வருகின்ற பண்படையான சொற்களெல்லாம் குறிப்புப் பெயரெச்சமாகும் என்கிறது.

வினையெச்சம்

தொல்காப்பியர் (தொல்.228), செய்து, செய்யூ, செய்பு, செய்தென, செய்யியர், செய்யிய, செயின், செய, செயற்கு என்ற ஒன்பதினை வினையெச்ச வாய்பாடுகளாகக் கூறுகிறார். மேலும், பின், முன், கால், கடை, வழி, இடத்து போன்ற சொற்களும் வினையெச்சங்களாக வருவதையும் பின்வரும் நூற்பாக்கள் எடுத்துரைக்கின்றன (தொல்.229-233). வீரசோழியம் (நூ.தாதுப்படம்,8-9), பொருட்டு, , பான், தற்கு, வான், , ,இட்டு, து, , இ என்ற வினையெச்ச வாய்பாடுகளைச் சுட்டுகிறது. மேரிநாதம் (நேமி.68,73), செய்து, செய, செய்யா, செய்யிய, செய்தென, செய்பு, செயின், செயற்கு, பின், முன், பாக்கு என்ற பதினோரு வினையெச்ச வாய்பாடுகளை விளக்குகின்றது.

நன்னூல் (நன்.342-347), வினையெச்சம் என்பதற்கான வரையறையை முதன் முதல் எடுத்துரைக்கின்றது. வினைமுற்றுவதற்குத் தேவையான தொழிலும், காலமும் தோன்றி, வினைமுற்றுவதற்குத் தேவையான பாலும் வினையும் எஞ்ச நிற்பது வினையெச்சம் எனப்படும் என்கிறது. செய்து, செய்பு, செய்யா, செய்யூ, செய்தென, செய, செயின், செய்யிய, செய்யியர், வான், பான், பாக்கு என்ற பன்னிரெண்டு வாய்ப்பாடுகளைச் சுட்டுகின்றது. மேலும், இவை உணர்த்தும் காலங்களையும் வெளிப்படுத்துகின்றது. இலக்கண விளக்கம் (இல.வி.246-250), நன்னூலைப் பின்பற்றி இலக்கணம் வகுக்கிறது. செய்து மற்றும் செய்யூ ஆகிய வினையெச்சங்கள் தன்வினையாகவும் பிறவினையாகவும் முடிவுபெறும் என்கிறது. மேலும், செய்து, செய்பு என்பன இறந்த காலம் மற்றும் நிகழ்காலத்திலும், செய்யூ, செய்தென, செய்யா என்பன இறந்த காலத்திலும், செய்யியர், செய்யிய, செயின், செயற்கு, செய்வான், செய்பான், செய்பாக்கு என்பன எதிர்காலத்திலும் வரப்பெறும் என்கிறது.

தொன்னூல் விளக்கம் (தொ.வி.117-121), தொழிலும் காலமும் காட்டி, இடமும் பாலும் காட்டாது வருவன எச்சமாகும். இவ்வெச்சத்துள் வினை சோ;ந்து இயல்வன வினையெச்சமாகும் என்கிறது. , , என, , பு, ஆ என்பன இறந்தகால, அ நிகழ்கால, இல், இன், இய, இயர், வான், பான், பாக்கு என்பன எதிர்கால, ஆமல், ஆது, ஆமை, ஆ என்பன எதிர்மறை வினையெச்ச விகுதிகள் என்கிறது. முத்துவீரியம், செய்து, செய்யூ, செய்பு, செய்தென, செய்யியர், செய்யிய, செயின், செய, செயற்கு, பின், முன், கால், கடை, வான், பான் என்ற வினையெச்ச வாய்ப்பாடுகளைச் சுட்டுகின்றது (மு.வீ.623-624). சுவாமிநாதம், வினை கொண்டு முடிவது வினையெச்சமாகும். வினைமுற்று வினையெச்சமாகவும் வரப்பெறும் என்கிறது. செய்து, செய்பு, செய்யா, செய்யூ  என்ற வாய்ப்பாடுகள் இறந்த காலத்தையும் செய்ய, செய்யிய, செய்யியர், செய்வான், உண்பான், செய்பாக்கு என்ற வாய்ப்பாடுகள் எதிர்காலத்தையும் உணர்த்தும் என்கிறது. அன்றி, இன்றி, ஏல், ஆல் என்பனவற்றையும் வினையெச்ச விகுதியாகக் கொள்கிறார் தேசிகர். இதனைப் பின்வரும் நூற்பா விளக்குகின்றது.

அறுவகை இலக்கணம், வினைமுற்றுச் சொற்கள் தம் பொருளினை முற்றுவிக்க வேறு ஒரு வினைச்சொல்லினை வேண்டி நிற்பது வினையெச்சம் என்கிறது. (நின்று, வந்து), (சொல்லி) போன்ற வினையெச்ச வாய்ப்பாடுகளைக் குறிப்பிடுகிறது இந்நூல் (அறு.48). தமிழ்நூல் (தமிழ்.108110), முற்றுவினை போல ஐந்தொகைகாட்டாது வினை முதனிலையோடு காலங்காட்டிப் பிறநான்கினையும் காட்ட வேண்டி மற்றொரு முற்றுவினையை நாடி நிற்பது வினையெச்சமாகும். செய்து, செய்ய, செய்யின் என்பவை முக்காலத்தையும் காட்டும். அவற்றுள் செய்து என்பது தன்வினையானும், செய்ய, செயின் தன்வினை மற்றும் பிறவினையாலும் அமையும் என்கிறது.

தென்னூல் (தென்.132-134), ஒரு வினைமுதலின் பிறவினைகளொடு தொடர்ந்து செல்லும் நிலைகருதியவிடத்து முற்றிநின்றதொருவினை பாலிடங்காட்டும் விகுதியை விட்டுக்குறையாகி நிற்கும் சொல் வினையெஞ்சு கிளவியாகும் என வினையெச்சத்திற்கு இலக்கணம் வகுக்கிறது. செய்து, செய்பு, செய்யூஉ, செய்யா, செய்தென, செய்யியர், செய்யிய, செயின், செய, செயற்கு என்ற பத்துவகை வாய்பாடுடன் பின், முன், கால், கடை, வான், பான், இடத்து என்னும் காலக் குறிப்பினைக் கருதிய விகுதிகளும் வரப்பெறும் என்கிறது. இவற்றில் செய்து, செய்பு, செய்யூஉ, செய்யா என்பவை தன்வினையாலும், ஏனையவை தன்வினை மற்றும் பிறவினையாலும் வரப்பெறும் என்கிறது.

இடமும் பாலும் காட்டும் விகுதிகளை ஏற்;காது வினையும் காலமும் தோன்றுமாறு முற்றுப் பெறாத வினையாக வரும் சொல், வினைமுற்றைக்கொண்டு முடிந்தால் வினையெச்சமாகும் என்கிறது தமிழ்க் காப்பு இயம் (.கா..201). செய்து, செய்யூ, செய்தென என்பன இறந்த காலத்திலும், செயற்கு, செய என்பன நிகழ்காலத்திலும், செயின் எதிர்காலத்திலும் வரும் வினையெச்சங்களாகும் என்கிறது இந்நூல். மேலும், பின், முன், கால், கடை, வழி, இடத்து என்னும் உருபுகளையும் வினையெச்ச விகுதிகளாகக் குறிப்பிடுகிறது. இவற்றுள் முன் உருபு செய்யா, செய்யும் என்பதனுடனும், பின் உருபு செய்த என்பதனுடனும், ஏனையவை செய்த, செய்யா, செய்யும் என்பதனுடனும் ஈறாக வரப்பெறும் எனவும் குறிப்பிடுகின்றது.

செய்யாமல், செய்யாமை, செய்யாது என்ற வாய்ப்பாடுகள் எதிர்மறை வினையெச்சத்தைக் காட்டும் என்கிறது (.கா..210). பால், இடம் காட்டாத எச்சக்கிளவி வினையைக் கொண்டு முடியும் போது அவ்வினையின் பண்பை விளக்கினால் அது குறிப்பெச்சமாகும் என்கிறது (.கா..211). இவ்வாறு பண்பைக் கொண்டு வருகின்ற குறிப்பு வினை எச்சம் உகர, எனவென் ஈற்றையும் சிறப்பு ஈறாக ஏற்று வரப்பெறும் (.கா..212), அன்றி, இன்றி என்பன குறிப்பு எதிர்மறை வினையெச்சத்தினை உணர்த்தும் என்கிறது (.கா..213).

இக்கால இலக்கண நூலான தமிழ்க் காப்பு இயம் பல இலக்கணக் கோட்பாடுகளைத் தொல்காப்பியத்தைப் பின்பற்றி இலக்கணம் வகுத்துள்ளமையை அறியலாம். இருப்;பினும் காலமாற்றம், வளர்ச்சி என்ற அடிப்படையில் தொரிநிலை வினையில் செய்பவன், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள் என்ற ஆறினோடு இன்னதற்கு, இதுபயன் என்பதை இணைத்தும், தன்மை ஒருமை வினைமுற்றில் உள்ள கு, டு, து, று என்பவனற்றை பழங்கால வழக்கில் வருவன என்றும், தற்கால வழக்கில் இவை வழக்கிழந்தவை என்றும், தன்மைப் பன்மை வினைமுற்றில் ஓம் என்ற புதிய விகுதியினையும், முன்னிலைப் பன்மை வினைமுற்றில் மின் விகுதியினைத் தவிர்த்தும், படர்க்கைப் பலர்பால் வினைமுற்று விகுதிகளில் உம் என்பதைப் புதியதாக இணைத்தும், வியங்கோள் வினை ஐம்பால், மூவிடத்திலும் க, , இய, அல் என்ற விகுதிகள் வரப்பெறும் எனவும், இயர் என்னும் விகுதி மூவிடங்களில் பலர்பாலில் மட்டும் வரும் என்றும் பல மாற்றங்களைப் பதிவு செய்துள்ளது. தொல்காப்பியர் உருவாக்கிய இவ்விலக்கணக் கோட்பாடுகளை அப்படியே பின்பற்றாமல் மாறிவரும் காலச் சூழலுக்கு ஏற்ப அக்கோட்பாடுகளை மாற்றியமைத்து அதற்கேற்ப இலக்கணக் கோட்பாடுகளை உருவாக்குவது தான் இலக்கண வளர்ச்சிக்கு அடித்தளமாகும். அவ்வகையில் எழுதப்பட்ட இந்நூலினை இன்னும் பல்வேறு ஆய்வுகளுக்கு உட்படுத்தினால் தற்கால மொழியின் இலக்கணக் கோட்பாடுகளைக் கண்டறிவதோடு தற்காலத் தமிழின் மொழி நிலையினையும் அறிந்து கொள்ள உதவும். மேலும், இலக்கணம், மொழியியல் தொடர்பான ஆய்வுகளுக்குப் பெரிதும் பயன்படும் என்பதை இக்கட்டுரை எடுத்துரைக்கின்றது.

துணைநின்றவை

 • தமிழ் மரபிலக்கண நூல்களும் அவற்றுக்கான உரைகளும்
 • அழகேசன்,சு., (தொ.ஆ.,), 2012, தொல்காப்பியக் கொள்கைகளும் தமிழ் இலக்கண வளர்ச்சியும், காவ்யா பதிப்பகம், சென்னை.
 • இன்னாசி,சூ., 2009, சொல்லியல், பாரி புத்தகப் பண்ணை, சென்னை.
 • காசுமான்,மீ. 1998, தமிழ்த்தாய் சொல்லிலக்கணம், காசுமான் பதிப்பகம், நந்தன்காடு, மார்த்தாண்டம்.
 • காசுமான்.மீ, 2005 தமிழ்க் காப்பு இயம், காசுமான் பதிப்பகம், மார்த்தாண்டம்.
 • சண்முகம்,செ.வை., 1984, சொல்லிலக்கணக் கோட்பாடு, தொல்காப்பியம் – 1, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.
 • சண்முகம்,செ.வை., 1986, சொல்லிலக்கணக் கோட்பாடு, தொல்காப்பியம் – 2, அனைத்திந்திய தமிழ் மொழியியற் கழகம், அண்ணாமலைநகர்.
 • சண்முகம்,செ.வை., 1992, சொல்லிலக்கணக் கோட்பாடு, தொல்காப்பியம் – 3, மணிவாசகர் பதிப்பகம், சென்னை.

முனைவர் கி.சங்கர நாராயணன்

உதவிப் பேராசிரியர்,

தமிழ் மேம்பாட்டுச் சங்கப்பலகைத் துறை

சென்னைப் பல்கலைக்கழகம், மெரினா வளாகம், சென்னை 5