ஒரு மொழி பன்னெடுங்காலமாகப் பலரால் பேசப்படும் நிலையில் வட்டாரம், சமூகம் சார்ந்து மொழிக்குள் வேறுபாடுகள் சில அமைவதுண்டு. ஒரு மொழியில் ஏற்படும்  இத்தகைய வழக்கு வேறுபாடுகள் கிளைமொழிகள் எனப்படுகின்றன. வட்டாரம், சமூகம், இனம், பால், வயது முதலியவற்றின் அடிப்படையில் ஒரு மொழியில் கிளைமொழிகள் அமைவதை மொழியியல் அறிஞர்கள் விளக்கியுள்ளனர். தமிழ்ச்சூழலில் வட்டாரம், சமூகம் சார்ந்த கிளைமொழிகள் தெளிவாக அமைந்துள்ளன. அதாவது, சென்னையில் பேசப்படும் தமிழுக்கும் நாஞ்சில் நாட்டில் பேசப்படும் தமிழுக்கும் காவிரி டெல்டா பகுதியில் பேசப்படும் தமிழுக்கும் கொங்கு தமிழுக்கும் வேறுபாடுகள் உள்ளன. இத்தகைய வேறுபாடுகளை அடிப்படையாகக் கொண்டு கிளைமொழி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தொடக்கத்தில் கிளைமொழி ஆய்வு வட்டார வழக்கு ஆய்வையே குறிப்பதாக விளங்கியது. பின்பு மொழியியலில் ஏற்பட்ட வளர்ச்சியில் வட்டாரக் கிளைமொழி ஆய்வு கிளைமொழியின் ஒரு பகுதியானது. அவ்வாறு வட்டாரக் கிளைமொழி ஆய்வின் மூலம் அவ்வட்டாரத்திற்கே உரிய வழக்குச் சொற்கள் சேகரிக்கப்பட்டு வட்டார வழக்குச் சொல்லகராதிகள் உருவக்கப்பட்டன. அவ்வாறு தமிழ்ப் புலமை மரபில் உருவாக்கப்பட்ட வட்டார வழக்குச் சொல்லகராதிகளைப் பற்றி இக்கட்டுரை ஆய்கின்றது.

 

வழக்காறுகள் விளக்கம்

வழக்காறுகள் என்பதற்கு மக்களின் வாழ்க்கையில் காலம் காலமாக எல்லோராலும் பகிர்ந்து கொள்ளப்பட்டு நடைமுறையில் வழங்கி வருபவை (க்ரியாவின் தற்காலத்தமிழகராதி,2001:907) எனப் பொருள் கூறப்பட்டுள்ளது. மட்டுமன்றி, உலகில் வழங்கி வரும் வழி (கழகத் தமிழகராதி,2004:824) என்றும் பொருள் கூறப்பட்டுள்ளன. வாழ்வியல் களஞ்சியம் வழக்காறு என்பதற்கு, இது ஒரு மொழியுள் சொல்லும் பொருளும் வழங்கி வரும் தன்மையாகும் (தொகுதி14:373) என்றும் பொருள் கூறுகிறது. மக்களின் வாழ்க்கையில் காலம் காலமாக எல்லோராலும் பகிர்ந்து கொள்ளப்பட்டு, நடைமுறையில் வழங்கிவருபவை வழக்காறு (செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகராதி, 416) என்றும் பொருள் கூறுகிறது. ஆக, மனிதர்களால் தொன்றுதொட்டு வழங்கி வருவது வழக்காறு என்பது தெளிவாகிறது.

 

வட்டார வழக்காறுகள் விளக்கம்

மொழி காலத்திற்கேற்ப மாறுவதோடு நில்லாமல் இடத்திற்கேற்பவும் (Regional Dialect) சமுதாயத்திற்கேற்பவும் (Communal Dialect) மனிதனின் வாழ்வியல் போக்குகளுக்கேற்பவும் மாறுபடுகின்றது. இவ்வாறு மாறுபடும் ஒரே மொழியின் பல்வேறு வடிவங்களை வட்டார வழக்குகள் எனலாம்.

வட்டார வழக்காறுகளின் களமான வட்டாரம் என்பது ஒரு பெரும் நிலப்பரப்புக்குள் அடங்கிய சிறு பகுதியாகும். ஒத்த விரிந்த ஒரு பெரிய நாட்டில் எல்லாப் பகுதிகளுமே பரந்த தன்மையனவாய் இருப்பதில்லை. அப்பகுதிகள் ஒவ்வொன்றும் அங்கே வசிக்கின்ற மக்களின் பண்புகள், பழக்க வழக்கங்கள், சமய நம்பிக்கைகள், அப்பகுதியின் தட்பவெப்ப நிலைகள் ஆகியவற்றால் ஒன்றிலிருந்து மற்றொன்று மாறுபடுகின்றன. இவற்றிலெல்லாம் ஒத்த தன்மைகளைக் கொண்ட கிராமம் அல்லது பகுதிதான் வட்டாரம் (Indu Prakash Pandey, 1977:1). எனவே மக்களுடைய பொதுவான வாழ்க்கைப் பின்னணியாலும் தட்பவெட்ப நிலைகளாலும் ஒத்த தன்மையுடைய ஒரு நிலப்பரப்பே வட்டாரம் எனப்படுகிறது. உலகின் எப்பகுதியாயினும், தட்பவெட்ப நிலைகளாலும், பிற புவியியல் தன்மைகளாலும் ஒத்திருக்கும் பகுதியே வட்டாரம் (Rubert B.Vance, 1950:123). என்று புவியியல் அறிஞர்கள் இலக்கணம் வகுக்கின்றனர். பல இன மக்கள் வாழ்ந்தாலும் அம்மக்களிடையே ஒரு பொதுத்தன்மை இழையோடும். பொருளாதாரம், சமுதாய நெறி, பண்பாடு இவற்றில் ஒற்றுமைக்கூறுகள் காணப்படும். இப்பண்புகளுடன் மக்கள் தங்களுக்குள் ஒருவரை ஒருவர் சார்ந்து ஒன்றுபட்டு வாழும் பகுதியே வட்டாரம் (Rubert B.Vance, 1950:123) என்பது சமூகவியலார் கூறும் வரையறையாகும். எனவே, ஒரு பகுதியின் நீர்வளம், நிலவளம், அங்கு பயிரிடப்படும் பயிர்கள், அங்கு வாழும் மக்களின் உணவு முறை, உடை, பண்பாடு, மொழி ஆகியவற்றில் ஒற்றுமைக் காணப்படின் அதுவே வட்டாரம்  என்பது தெளிவாகிறது.

 

வட்டார வழக்குச் சொல்லகராதிகள் உருவாக்கம்

மேலைநாடுகளில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலும், இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் பல ஆய்வுகள் நிகழ்த்தப்பட்டன. வட்டாரங்களை அடிப்படையாகக்கொண்டு அங்கு வழங்கும் கிளை மொழிகளை ஆராய்ந்தனர். நம் நாட்டிலும் இவ்வகை ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பதினெட்டாம் நூற்றாண்டில் வட்டார வழக்குத் தொடர்பான ஆய்வுகள் தொடங்கி இருக்கலாம். ஏனெனில் முதன் முதலில் வட்டார வழக்குத் தமிழகராதியை, பெஸ்கி தொகுத்ததாக தெரிகிறது. ஆனால், அது குறித்து ஏதும் அறிய இயலவில்லை. எனினும், இவர் தொகுத்த வட்டார வழக்குத் தமிழ்ச்சொற்களுக்கு இலத்தின் மொழியில் பொருள் கூறும் தமிழ் – இலத்தின் அகராதி ஒன்று 1882 இல் பதிப்பிக்கப்பட்டது (ச.மகாலட்சுமி,2003:9) எனக் கூறப்படுகிறது.

கஸ்ட் (Cust) என்பவர் முயற்சியின் பேரில், இந்தியாவில் ஜி.எ.கிரியர்சன் 1972 ஆம் ஆண்டு இந்திய மொழிகளின் ஆய்வு (Linguistic survey of India) என்ற நூலை வெளியிட்டார். அதில் தமிழ் நாட்டுக் கிளைமொழிகள் ஒன்றும் ஆராயப்படவில்லை (கோ.சீனிவாச வர்மா,1986:76). 1957-இல் தெலுங்கு மொழியில் உள்ள பயிர்த்தொழில் கலைச்சொற்களைத் திரட்ட, சாகித்ய அகாதமி சார்பில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் முயற்சி மேற்கொண்டார். 1958-இல் ஆய்வுத் தொடங்கப்பட்டு 1962-இல்பயிர்த்தொழில் கலைச்சொல் அகராதி வெளியானது. இது மொழியியலாளருக்கு மிகுந்த பயனுடைய நூலாக விளங்கியது. கள ஆய்வில் 9000 பயிர்த் தொழிற்சொற்கள் தொகுக்கப்பட்டன (ந.கலைவாணி,2011:10) என்பதை அறிய முடிகிறது. மேலும், 1982 – இல் கி.ராஜநாராயணன் அவர்கள் வழக்கிழந்து மறைந்துபோகும் நிலையில் இருந்த  வழக்குச் சொற்களைத் தொகுத்து, அன்னம் வெளியீடாக ‘வட்டார வழக்குச் சொல்லகராதி’ எனும் பொருண்மையில் நெல்லை வட்டார வழக்குச் சொல்லகராதியை வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து பல வட்டார வழக்குச் சொல்லகராதிகள் வெளிவந்தன. அவைகளின் தொகுப்பு பின்வருமாறு.

 ‘கொங்கு வட்டாரச் சொல்லகராதிஎன்னும் பெயரில் பெருமாள் முருகன் வழக்குச் சொல்லகராதி வெளியிட்டுள்ளார். (குருத்து வெளியீடு, ஈரோடு, 2000). கொங்கு வட்டம் என வழங்கும் கோவை, ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களை முழுமையாகவும் அண்டை மாவட்டங்களில் குறிப்பிட்ட இடங்களையும் சேர்ந்த பகுதியில் வழங்கும் சொற்களைச் சேகரித்து வெளியிட்டுள்ளார். இவ்வகராதி பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், பெயரடை, வினையடை எனப் பகுத்து, சொற்களுக்குத் தொடரமைப்பின் மூலம் விளக்கம் கொடுத்து வெளியிடப்பட்டுள்ளது.

நெல்லை வட்டார வழக்குச் சொல்லகராதி என்னும் பெயரில் ப.முருகையா வழக்குச் சொல்லகராதி வெளியிட்டுள்ளார் (அமுதா பதிப்பகம், சென்னை, 2004). இதில் திருநெல்வேலி வட்டாரத்தில் வழங்கப்பெறும் சுமார் 5,000 சொற்களைத் தொகுத்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. சொற்களை இடைச்சொல், பெயர்ச்சொல், பெயரடைச்சொல், வினைச்சொல், வினையடைச்சொல் எனப் பகுத்து வெளியிட்டுள்ளார். அகராதியின் இறுதியில் சொலவடைகளையும் தொகுத்துத் தந்துள்ளதோடு, உடல் உறுப்புகள், உணவு தானியங்கள், கருவிகள் எனவும் பிரித்து தொடரமைப்பின் மூலம் விளக்கம் தந்துள்ளார்.

கொங்கு நாட்டுத் தமிழ் (Kongu Thamiz Dialect with Etymological Notes)’ என்னும் பெயரில் புலவர் மணியன் வழக்குச் சொல்லகராதி வெளியிட்டுள்ளார் (வேம் அச்சகம், கோவை, 2004). இதில் கோவை, ஈரோடு, கரூர், குளித்தலை, ஓமலூர், சேலம், நாமக்கல், பழனி, திண்டுக்கல், திருச்செங்கோடு ஆகிய பகுதிகளில் வழங்கப்படும் சொற்கள் தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. சொற்கள், அவற்றின் பொருள், அவை பிறந்த வழி, மூலம் ஆகியன எடுத்துக்காட்டுடன் தரப்பட்டுள்ளன.

நாஞ்சில் வட்டார வழக்குச் சொல்லகராதிஎன்னும் பொருண்மையில் அ.கா. பெருமாள் வட்டார வழக்குச் சொல்லகராதி வெளியிட்டுள்ளார் (தமிழினி பதிப்பகம், சென்னை, 2004). இதில் நாஞ்சில் நாட்டில் பேசப்படும் சொற்களை அகரவரிசைப்படுத்திக் கொடுத்துள்ளார். இதில் 3424 சொற்கள் உள்ளன.

செட்டிநாட்டு வட்டார வழக்குச் சொல்லகராதி எனும் பொருண்மையில் பழநியப்பா சுப்பிரமணியன் வழக்குச் சொல்லகராதி வெளியிட்டுள்ளார். இதில் செட்டிநாடு என அழைக்கப்படுகின்ற சிவகங்கை மாவட்டத்தின் காரைக்குடி, திருப்பத்தூர், திருவாடானை ஆகிய பகுதிகளிலும் புதுக்கோட்டை மாவட்டத்தின் திருமயம், பொன்னமராவதி, அறந்தாங்கி ஆகிய பகுதிகளிலும் வழங்கப்படுகின்ற வழக்குச்சொற்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

வழக்குச் சொல் அகராதிஎன்னும் அகராதியினை பி.தமிழகன் வெளியிட்டுள்ளார் (இளந்தமிழ்ப் பதிப்பகம், திருச்சிராப்பள்ளி, 2009). இதில் இலால்குடி, திருவரங்கம், குளித்தலை, முசிறி, உடையார்பாளையம், மணற்பாறை, துறையூர், பெரம்பலூர் ஆகிய வட்டங்களிலுள்ள 106 ஊர்களில் சேகரிக்கப்பட்ட சொற்கள் தொடரமைப்புச் சான்றுகளுடன் கொடுக்கப்பட்டுள்ளன.

நெல்லை வட்டார வழக்குச் சொல் தொகை என்னும் நூலினை வெள் உவன்’ வெளியிட்டுள்ளார் (தமிழினி பதிப்பகம், சென்னை, 2012). இதில் திருநெல்வேலி நகரம் மற்றும் அதனையொட்டிய நாங்குனேரி வட்டம் ஆகிய பகுதிகளில் பேசப்படும் சொற்களைத் தொகுத்து அச்சொற்களுக்குத் தொடரமைப்பின் மூலம் சான்றுகள் தந்துள்ளார். மேலும், அப்பகுதியில் வழங்கப்படுகின்ற 228 பழமொழிகளையும் இணைத்துத் தந்துள்ளார்.

 ‘தென்குமரி வட்டார வழக்குகள்என்னும் நூலினை பொன்னீலன் என்பவர் வெளியிட்டுள்ளார் (நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை, 2013). இதில் குமரி தென்பகுதியில் வழங்கப்பெறும் வட்டாரச் சொற்கள், பாடல்கள், பழமொழிகள், விடுகதைகள் போன்றவை அம்மாவட்ட பேச்சு வழக்கிலேயே பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவைத் தவிர வட்டாரச் சொற்களும் விளக்கங்களும் எனும் வழக்குச் சொல்லகராதியை லேனா தமிழ்வாணனும்(மணிமேகலைப் பிரசுரம், சென்னை, 1987), செட்டிநாட்டில் செந்தமிழ் வழக்கு எனும் வழக்குச் சொல்லகராதியை சுப.சண்முகமும்(சென்னை, காவேரி தெரு, 1990) கொங்குத் தமிழ் எனும் சொல்லகராதியை டி.எம்.காளியப்பாவும்(தேவி பதிப்பகம், கோயமுத்தூர், 1991) ஜீவா தொகுத்த வழக்குச் சொல்லகராதியை திரு.கே.ஜீவபாரதி & வே.எழில்முத்துவும் (ராஜேஷ்வரி பதிப்பகம், சென்னை, 2001) கோவை மாவட்ட வழக்குச் சொல்லகராதியை தி.மகாலட்சுமியும் (தி பார்க்கர், சென்னை 2003) புதுச்சேரி கிராமிய தமிழகராதியை எ.மு.ராசன் அவர்களும்(புதுச்சேரி கூட்டுறவு புத்தகச் சங்கம், 2004) நடுநாட்டுச் சொல்லகராதியை கண்மணி குணசேகரனும்(தமிழினி வெளியீடு, 2007) கொங்கு வட்டார வழக்குச் சொல்லகராதியை இரா.இரவிக்குமாரும் (கொங்கு மண்டல ஆய்வு மையம் வெளியீடு, 2008), அறந்தாங்கி வட்டார வழக்குச் சொல்லகராதியை பெரி.சே.இளங்கோவனும் (அகநி வெளியீடு வந்தவாசி, 2011) வெளியிட்டுள்ளனர் என்பதை அறியமுடிகிறது.

மேற்சுட்டப்பெற்ற வட்டார வழக்குச் சொல்லகராதிகள் எவ்வித நிறுவன முயற்சியும் நிதியுதவியும் இன்றித் தனிமனித முயற்சிகளாகவே வெளிவந்துள்ளமையை அறியமுடிகிறது. மேலும் தென்மாவட்டங்களைக் காட்டிலும் வட மாவட்டங்களில் வழக்குச் சொல்லகராதி உருவாக்கம் குறைந்துள்ளமையைக் காணமுடிகிறது.

மேலும், இன்றைய சூழலில் நவீனமயமாக்கம், நகரமயமாதல், கல்வி, இடப்பெயர்வு போன்ற காரணிகளால் வட்டார வழக்குச்சொற்கள் பெரும்பாலும் வழக்கொழிந்து வரும் நிலையில், அதனைக் காத்தும் வழக்கொழிந்த சொற்களை மீட்டுருவாக்கம் செய்தும் அடுத்த தலைமுறையினருக்குக் கொண்டுசேர்க்க வேண்டிய நிலையில் தமிழ்ச்சமூகம் உள்ளமையை உணரமுடிகிறது.

இதுவரை வெளிவந்துள்ள வட்டார வழக்குச் சொல்லகராதிகளின் தொகுப்பு

 1. கொங்கு வட்டாரச் சொல்லகராதி – பெருமாள் முருகன்
 2. நெல்லை வட்டார வழக்குச் சொல்லகராதி – கவிஞர்.ப.முருகையா
 3. கொங்கு நாட்டுத் தமிழ் (Kongu Thamiz Dialect with Etymological Notes) – புலவர் மணியன்
 4. நாஞ்சில் வட்டார வழக்குச் சொல்லகராதி – அ.கா. பெருமாள்
 5. செட்டிநாட்டு வட்டார வழக்குச் சொல்லகராதி – பழநியப்பா சுப்பிரமணியன்
 6. வழக்குச் சொல் அகராதி – முனைவர் பி. தமிழகன்
 7. நெல்லை வட்டார வழக்குச் சொல் தொகை வெள் உவன்
 8. தென்குமரி வட்டார வழக்குகள் – பொன்னீலன்
 9. வட்டாரச் சொற்களும் விளக்கங்களும் – லேனா தமிழ்வாணன்
 10. செட்டிநாட்டில் செந்தமிழ் வழக்கு – சுப.சண்முகம்
 11. கொங்குத் தமிழ் – டி.எம்.காளியப்பா
 12. ஜீவா தொகுத்த வழக்குச் சொல்லகராதி – கே.ஜீவபாரதி & வே.எழில்முத்து
 13. கோவை மாவட்ட வழக்குச் சொல்லகராதி – தி.மகாலட்சுமி
 14. புதுச்சேரி கிராமிய தமிழகராதி – எ.மு.ராசன்
 15. நடுநாட்டுச் சொல்லகராதி’யை திரு.கண்மணி குணசேகரன்
 16. கொங்கு வட்டார வழக்குச் சொல்லகராதி – இரா.இரவிக்குமார்
 17. அறந்தாங்கி வட்டார வழக்குச் சொல்லகராதி – பெரி.சே.இளங்கோவன்

துணையன்கள்

 • கலைவாணி,ந., (2011) பழந்தமிழரும் கிளைமொழிகளும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை
 • கழகப் புலவர் குழு, (1964) கழகத் தமிழகராதி, கழக வெளியீடு, சென்னை
 • சீனிவாச வர்மா கே., (1940) கிளைமொழியியல், அனைத்திந்தியத் தமிழ் மொழியியற் கழகம், அண்ணாமலைநகர், சிதம்பரம்.
 • பதிப்புக்குழு (2001) க்ரியாவின் தற்காலத் தமிழகராதி, க்ரியா வெளியீடு, சென்னை 41
 • பதிப்புக்குழு, (2007) செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகராதி, தொகுதி 8, செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலித் திட்ட இயக்ககம், சென்னை.
 • பதிப்புக்குழு, (1992) வாழ்வியல் களஞ்சியம், தொகுதி 14, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.
 • மகாலட்சுமி, ச., (2003) கோவைத் தமிழ் இலக்கணம், பாடுமீன் பதிப்பகம், சென்னை
 • Indu Prakash Pandey, (1977) Regionalism in Hindi Novels, Heldelberg University, Germany.
 • Robert Vance, B., (1950) Regionalism in America, Heldelberg University, Germany.

முனைவர் நா.பிரபு

உதவிப் பேராசிரியர்

முதுகலை (ம) தமிழாய்வுத்துறை

சண்முகா தொழிற்சாலை கலை அறிவியல் கல்லூரி

திருவண்ணாமலை 606 603

drnprabu@gmail.com