1. ஆய்வு அறிமுகம்

‘மெய்யியல்’ என்பது உண்மை பற்றிய தேடலாகும். இம்மெய்யியலானது  ஆய்வு செய்யும் விடயங்களின் இயல்புகள், நோக்கங்களின் அடிப்படையில் நான்கு பிரதான பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை பௌதீக அதீதம், அறிவாராய்ச்சியியல், ஒழுக்கவியல், அழகியல், போன்றனவாகும். மெய்யியலின் விசேட பிரிவுகளில் ஒன்றாகவே தமிழர் மெய்யியல் அமைந்துள்ளது. தமிழர் மெய்யியல் என்பது மெய்யியலின் பிரதான எண்ணக்கருக்கள்  தமிழர்களது வாழ்வியலில் எவ்வாறான தாக்கத்தை  ஏற்படுத்தியுள்ளது என்பது பற்றிய அணுகு முறையாகும். மேற்குத்தேயத்தில் கலைகளானது கலை கலையை வெளிப்படுத்தல், கலை உணர்ச்சியை வெளிப்படுத்தல், கலை அறத்தை வெளிப்படுத்தல்,  கலை சமூக மாற்றத்தை வெளிப்படுத்தல்  என்ற வகைப்பாடுகளுக்கு ஏற்ப கோட்பாடுகள் ரீதியாக வளர்க்கப்பட்டன. ஆனால் தமிழர் சிந்தனை மரபில் கலையும், அழகியலும் கோட்பாடுகள் ரீதியாக வளர்க்கப்படாமல் மக்களின் வாழ்வியலையும், வாழ்வியல் கூறுகளையும், அதில் நிகழும் தவறுகளையும் சுட்டிக் காட்டுவதாக வளர்க்கப்பட்டது. “வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல்லுலகம்” என பனம் பாரனாரால் எல்லை வகுக்கப்பட்ட தமிழகத்தின் அழகியல் அம்சங்களை கலை ரசனையோடு சங்க இலக்கியங்களே வெளிப்படுத்தி நிற்கின்றன.

சங்ககாலத்தில் வாழ்ந்த தமிழரின் கலை, அழகியல் சார்ந்த அம்சங்களை மெய்யியல் நோக்கில் ஆராய்வதாக இவ் ஆய்வு அமைந்துள்ளது.

 1. சங்கத் தமிழர் அழகியல்

சங்ககால கவிதைகள் யாவும் சொற்சுருக்கமும், பொருள் விரிவும், கவித்துவ செறிவும் கொண்டதாக அமைவதோடு சொல்லலங்காரம் மிக்க பல்வேறு அழகியல் அம்சங்களை கொண்டதாக உள்ளன. இதனடிப்படையில் சங்கத் தமிழர் அழகியலை

2.1  தொல்காப்பியத்தின் பொருளதிகாரத்தில் வகுக்கப்பட்ட மெய்ப்பாடுகள்

2.2 அகத்திணை பாடல்களின் ஊடாக வெளிப்படுத்தப்படும் சங்ககால தலைவியின் 24 வகையான

மெய்ப்பாடுகள்

2.3 சங்ககால திணைக் கோட்பாடுகளின் வகைப்பாடுகள்  ஊடாகவும் விளங்கிக் கொள்ளலாம்.

2.1 தொல்காப்பியத்தின் பொருளதிகாரத்தில் வகுக்கப்பட்ட மெய்ப்பாடுகள்

தொல்காப்பியத்தின் பொருளதிகாரத்தில் எட்டு வகையான மெய்ப்பாடுகள் கூறப்பட்டுள்ளன.  அவையாவன நகை, அழுகை, அச்சம், இழிவரல், உவகை, வெகுளி, பெருமிதம், மருட்கை. இவ் எட்டுவகையான சுவைகளும் முப்பத்திரெண்டு வகையான கரணிகளால் தோற்றுவிக்கப்படுகின்றது. அவற்றை பின்வருமாறு கூறலாம்.

 1. எள்ளல், இளமை, மடமை, பேதை :  நகை
 2. இழிவு, இழத்தல், அசைதல், வறுமை : அழுகை
 3. அணங்கு, விலங்கு, கள்வர், இறை : அச்சம்
 4. மூப்பு, பிணி, வருத்தம், மென்மை :  இழிவரல்
 5. புதுமை, பெருமை, சிறுமை ஆக்கம் : உவகை
 6. உறுப்பறை, குடிகோளவைத்தல் : வெகுளி
 7. கல்வி, தறுகண்மை, இசைனம், கொடை : பெருமிதம்
 8. செல்வநுகர்ச்சி, ஐம்புல நுகர்ச்சி, மகளிரோடு புணர்தல், சோலை ஆறு என்பனவற்றில் புகுந்து

விளையாடுதல் :   மருட்கை

2.2 அகத்திணைப் பாடல்களின் ஊடாக வெளிப்படுத்தப்படும் சங்ககாலத் தலைவியின் 24 வகையான

மெய்ப்பாடுகள்

 1. தலைவனும் தலைவியும் ஒருவரை ஒருவர் நோக்குதல்
  • தலைவனும் தலைவியும் ஒருவரை ஒருவர் நோக்குதல்
  • தலைவன் முகத்தை முதன்முதலில் பார்த்த தலைவி வெட்கப்படல்.
  • தலைவன் கூறுவதைக் கேட்டு புலனாகாது மறைத்தல்
 • தலைவனிடத்தில் தன் மனம் அலைதலைப் பிறருக்கு தெரியாதவாறு தவிர்க்கும் நிலை
 1. 2. தலைவியின் செயற்பாடுகளால் தலைவனை தன்பக்கம் ஈர்த்தல்
 • கூந்தலைக் கலைத்தல்
 • காதில் அணிந்திருந்த தோட்டை விழப்பண்ணி தேடுவது போல நிற்றல்
 • அணிந்திருக்கும் ஆபரணங்களை கையினால் அங்கும் இங்குமாக அசைத்தல்
 • ஆடையைக் குலைத்து உடுத்தல்
 1. தலைவனின் விருப்பத்திற்கு இசைந்தமையால்  தலைவி வெளிப்படுத்தும்   மெய்ப்பாடுகள்
 • மேலாடை திருத்துதல்
 • அணிந்திருந்த ஆபரணங்களை திருத்துதல்
 • விருப்பம் இல்லாதவர் போல் தன் நிலையை மாற்றிக்கொள்ளல்
 • தலைவி தன் வார்த்தைகளால் மறுத்தாலும் சைகளால் தன் உடன்பாட்டை வெளிப்படுத்தல்
 1. தலைவன் தலைவி சந்திப்பால் வெளிப்படும் உளநிலை பாங்கு
 • மனதினால் தலைவனைப் வாழ்த்துதல்
 • பாங்கர் கூட்டத்தினர் தலைவனுடனான தனது காதலை தெரிந்து கொண்டமையால்  தலைவி நாணுதல்
 • தலைவனால் வழங்கப்பட்டதை விரும்புதல்
 • வேட்கை நிலைக்கு உள்ளாதல்
 1. காதல் வயப்பட்ட பின்னர் தலைவன் தலைவியின் மெய்ப்பாடுகள்
 • தலைவியின் வளர்ப்புத் தாயான செவிலிக்கும், தோழியர் கூட்டத்திற்கும் தலைவனுடனான காதலை தெரியப்படுத்தல்.
 • தலைவனைக் கண்ட தலைவி விருப்பம் கொள்ளுதல்
 • தலைவனோடு திளைத்தமையால் அச்சங் கொள்ளுதல்
 • பெண்களின் இயல்பான அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்பன வெளிப்படல்
 1. தலைவனின் பிரிவால் ஏங்கும் தலைவியின் நிலை
 • தன் உடல் அலங்காரத்தை தவிர்த்தல்
 • பொலிவிழந்து காட்சியளித்தல்
 • நிலை தடுமாறி உரையாடுதல்
 • தலைவியானவள் தனது துன்ப நிலையை  பிறர்  அறிந்து கொள்ளாத படி நடத்தல்.

சங்ககால அகத்திணைப்பாடல்களின் ஊடாக வெளிப்படுத்தப்படும் தலைவியின் 24 வகையான மெய்ப்பாடுகளும் சங்கத்தமிழரின் அழகியலை வெளிப்படுத்துகிறது. தலைவனும்> தலைவியும் ஒருவரை ஒருவர் நோக்குதல் தொடங்கி இறுதியில் தலைவனின் பிரிவால் ஏங்கும் தலைவியின் நிலை வரைக்குமான 24மெய்ப்பாடுகளும், அதனூடாக வெளிப்படும் முகபாவங்கள்> உடலசைவுகள்> உணர்வினைவெளிப்படுத்தும் செயற்பாடுகள் முதலியவைகளை சங்கத்தமிழர்கள் அழகியலாகவே  காண்கின்றனர்.

 • சங்ககால திணைக் கோட்பாடுகளின் வகைப்பாடுகள்

இயற்கை நெறிக்காலம் என்று சிறப்பித்துக் கூறப்படும் சங்க காலத்தில் ஐந்நில மக்களின் நில அமைப்பு வேறுபாடுகளுக்கு ஏற்ப அன்பின் ஐந்திணையான குறிஞ்சி – புணர்தல், முல்லை – இருத்தல், மருதம் – ஊடல் , நெய்தல் – இரங்கல், பாலை – பிரிதல் எனும் ஒழுக்கங்களை தீர்மானிப்பதற்கு  இயற்கையின் அழகியல் அம்சங்கள் பயன்படுத்தப்பட்டன. இதனையே  கருப் பொருள் என்பர்.  இது சங்க கால அகத்திணை பொருள் மரபில் ஒன்றாகும். புணர்தல், இருத்தல், ஊடல், இரங்கல், பிரிதல், முதலிய உரிப்பொருளான ஒழுக்கங்களைப் பாடுவதற்கு பயன்பட்ட விலங்கு, பறவை, இசைக்கருவி, நீர் நிலைகள், தாவரம், பூக்கள் முதலியன கருப்பொருளுள் அடங்கும். இக் கருப்பொருளானது நிலக்கூறுகளுக்கு ஏற்ப மாறுபடும்  தன்மையினை கொண்டது.

மலையும் மலை சார்ந்த இடமான குறிஞ்சி நிலத்தில் வாழும் வேடுவ மக்களின் காதல் ஒழுக்கத்தைப் புணர்தல் என்பர். இதனைப் பாடுவதற்குக் கருப் பொருட்களாக,

விலங்குகள்: புலி, யானை, பன்றி, சிங்கம், மான்

பறவைகள்: கிளி, மயில்,

இசைக்கருவி: குறிஞ்சி யாழ்

நீர்நிலைகள்: அருவி, சுனை

தாவரம்: குறிஞ்சி, வேங்கை, குவளை, அகில், மூங்கில்

பூக்கள் : குறிஞ்சி

பயன்பட்டன.

காடும் காடு சார்ந்த இடமான முல்லை நிலத்தில் வாழும் இடையர்களின் காதல் ஒழுக்கத்தை இருத்தல் என்பர். இதனைப் பாடுவதற்குக் கருப்பொருட்களாக,

விலங்கு: எருது, முயல், மான்

பறவைகள்: காட்டுக்கோழி, தாரை

இசைக்கருவி: பறை, முரசு

நீர்நிலைகள்: காட்டாறு

தாவரம்: முல்லை, கொன்றை, குருத்து, சந்தணம்

பூக்கள்: முல்லை

பயன்பட்டன.

வயலும் வயல் சார்ந்த இடமான மருத நிலத்தில் வாழும் உழவர்களின்  காதல் ஒழுக்கத்தை ஊடல் என்பர். இதனைப் பாடுவதற்குக் கருப்பொருட்களாக,

விலங்குகள்: எருது, நீர்நாய்

பறவைகள்: நீர்க்கோழி, தாரா

இசைக்கருவி: மருத யாழ்

நீர்நிலைகள்: ஆறு, கிணறு, பொய்கை

தாவரம்: மருதம்

பயன்பட்டன.

கடலும் கடல் சார்ந்த இடமான நெய்தல் நிலத்தில் வாழும் மீனவ மக்களின் காதல் ஒழுக்கத்தை இரங்கல் என்பர். இதனைப் பாடுவதற்குக் கருப் பொருட்களாக,

விலங்குகள்: மீன், நீர்க்காகம், எருது

பறவைகள்: அன்னம்

இசைக்கருவி: விளரி யாழ்

நீர்நிலைகள்: உவர் புழி, மணற்கிணறு

தாவரம்: கண்டல், தாழை, புன்னை

பயன்பட்டன.

மணலும் மணல் சார்ந்த இடமான பாலை நிலத்தில் வாழும் மறவர் மக்களின் காதல் ஒழுக்கத்தைப் பிரிதல் என்பர். இதனைப் பாடுவதற்குக் கருப்பொருட்களாக

விலங்குகள்: புலி, யானை, செந்நாய்

பறவைகள்: கழுகு, பருந்து

இசைக்கருவி: பறை

நீர்நிலைகள்: கூவல்

தாவரம்: இலுப்பை, மாந்தாவரம், முண்டகம், பாலை

பூக்கள்: பாதிரிப்பூ, மராம்பூ

பயன்பட்டன.

அன்பின் ஐந்திணையில் நிலஅமைப்புக்களுக்கேற்ப வகுக்கப்பட்ட கருப்பொருட்களை சங்கத் தமிழர்கள் அழகியல் அம்சங்களாகவே காண்கின்றனர். ஐந்நிலங்களில் பயன்படுத்தப்படும் இசைக்கருவிகள் சங்கத்தமிழரின் கலையை வெளிப்படுத்துகின்றன..

உதாரணம் : குறிஞ்சி> மருத யாழ்> பறை> முரசு

மேலும் ஐந்நிலங்களின் இயற்கைக் காட்சிகள்> நீர் நிலைகள். தாவரங்கள்> பூக்கள் முதலியனவற்றினூடாக சங்ககால தமிழர்களின் அழகியல் அம்சங்கள் வெளிப்படுவதனைக் காணலாம்.

உதாரணம் : குறிஞ்சி> முல்லை> பாதிரிப்பூக்கள்>  அருவி> சுனை> மணற்கிணறு> நீர் நிலைகள் போன்றனவற்றைக் குறிப்பிடலாம்.

 1. சங்கத் தமிழரின் கலைகள்

கலை என்பது ஒருவரது உள்ளத்தில் தோன்றும் எண்ணமானது பிறிதொருவரின் ரசனைக்கு விருந்தாக அமைவதனைக் குறிக்கும். சங்கத் தமிழரின் வாழ்வியலின் ஒவ்வொரு கூறும் கலையம்சம் நிறைந்ததாக இருந்தமையால் இவர்கள்  கலை குறித்த இரசனையியலும், தேடலிலும் அதிக அக்கறைப்பாட்டினைக் கொண்டிருந்தார்கள். சங்ககால செய்யுள்களில் கலை என்ற சொல் பல பெயர்களில் அழைக்கப்பட்டது. உதாரணம் “குரங்கு-18 இடங்கள்,  “மான்”- 25   இடங்கள், “மேகலை”- ஓரிடம் . சங்கத் தமிழரின் கலை வாழ்வினை

   3.1 இயற்கை- புலவர்களின் கற்பனைத்திறன்

   3.2 இசைக்கலைஞர்கள்

   3.3 இசைக்கருவிகள்

   3.4 ஆடல் கலைகள் முதலியவற்றினூடாக விளங்கிக் கொள்ளலாம்.

3.1 இயற்கைபுலவர்களின் கற்பனைத்திறன்

சங்கப்புலவர்கள் செய்யுள்களைப் பாடும்போது இயற்கையில் நிகழும் நிகழ்வுகளை உள்ளுறை உவமையாகக் கையாண்டமையின் ஊடாக அகத்திணை, புறத்திணைப் பாடல்களில் இயற்கை செல்வாக்குப் பெற்றிருப்பதைக் காணலாம்.

3.2 இசைக்கலைஞர்கள்

சங்ககாலத்தில் பாணர், பாடினியர், கூத்தர், முதலிய  இசைக்கலைஞர்கள் கலைத்துறையினைச் சார்ந்தோராக விளங்கினர். தமிழிலக்கிய வரலாற்றில் தொல்காப்பியக் காலத்திற்கு முற்பட்ட பழங்காலத்தில் இருந்து சங்ககாலம் வரையிலும் இசை, கூத்து ஆகிய இரு கலைகளின் மரபினைப் போற்றி வளர்த்த பெருமை பாணரையும், பாடினியரையும் சேரும்.

பண்ணிசைப்பவர்கள் பாணர் என அழைக்கப்பட்டனர். இவர்கள் பாடல்களைப் பாடுவதிலும், யாழ் இசைப்பதிலும், கூத்து, கலை நிகழ்ச்சிகளிலும் தேர்ச்சி பெற்று விளங்கினர்.

மேலும் சங்ககாலத்தின் கலையம்சத்தினை வளர்த்த பெருமை இசைப்பாணர், யாழ்ப்பாணர், மண்டைப்பாணர் என மூவகைப்பட்ட பாணர்களைச் சேரும். இசைப்பாணரைப் பாடற்பாணர், அம்பனவர் என்றும், யாழ்ப்பாணரை யாழிசைத்துப் பாடுபவர் என்றும் அழைப்பர். பேரியாழ், மகர யாழ், சகோடயாழ், செங்கோட்டியாழ் என்பன யாழ்ப்பாணர்கள் வாசித்தவற்றுள் சிறப்பானவையாகும். இதில் பேரியாழ் வாசித்த பாணரைப் பெரும்பாணர் என்றும், செங்கோட்டியாழாகிய சீறியாழை வாசித்த பாணரை சிறு பாணர் எனவும் அழைப்பர், அத்துடன் சங்ககால ஆற்றுப்படை நூல்களுள் பெரும்பாணாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை என்ற நூல்கள் இவர்களையே சிறப்பித்துக் கூறுகின்றன.

இவர்கள் மன்னர்களைப் பாடுவதனால் அவர்களால் பொருள் கொடுத்துக் கௌரவிக்கப்பட்டனர். சூழலுக்கு ஏற்பவும், காலத்திற்கு ஏற்பவும் பண்களை வகுக்கும் திறன்களையுடைய இவர்கள் மன்னர்கள் போருக்குச் செல்லும்போது உடனிருந்து பல்வேறு பாடல்களைப் பாடியுள்ளனர்.

“கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியு

மாற்றிடைக் காட்சி யுறழத் தோன்றி…” ( தொல்.புறத். 93)

3.3 இசைக்கருவிகள்

இயற்கையின் அசைவுகளின் ஊடாகத் தோன்றும் ஓசைகளைச் சங்கத் தமிழர்கள் இசைக் கருவிகளினால் பிறப்பிக்கப்படும் ஒலிகளுக்கு ஒப்பிட்டுள்ளனர். உதாரணம் – வண்டுகளால் துளையிடப்பட்ட மூங்கிலின் மேற்புறத்தில் காற்றுப் படும்போது எழும் ஒலியைப் புல்லாங்குழல் ஓசை  எனவும், பூக்களில் வண்டுகளால் தேன் நுகரப்படும்போது  எழும் ஓசை யாழிசையாகவும்,  அருவிகளில் எழும் நீரின் ஒசை மத்தளத்தின் ஒலியாகவும், கலை மான்கள் ஓடும் போது பிறப்பிக்கப்படும் ஒலிகள்  தாள ஒலியாகவும் கருதினர்.

சங்ககால  இசைக்கலைஞர்கள்  பல்வகைப்பட்ட  இசைக்கருவிகளைப்  பயன்படுத்தினர்.

“தெய்வ முணாவே மாமரம் புட்பறை

செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ”  (335ம் பாடல்)

சங்ககாலத்தில் 103 பண்களை இசைக்கும் 27 நரம்புகள் கொண்ட பேரியாழ் மீட்டுபவர்கள் பெரும்பாணர்கள் என்றும், 103 பண்களிலும் குறைந்த பண்களை மீட்டுபவரும்,  செங்கோட்டியாழை மீட்டுபவரும் சிறுபாணர்கள்  என்றும் அழைக்கப்பட்டனர்.

“தேஎந் தீந்தொடைச் சீறியாழ்ப் பாண…….”

3.4   ஆடல் கலைகள்

சங்ககாலத்தில் பல்வேறுபட்ட  ஆடல்கலைகள் நிகழ்ந்துள்ளன.  தைந்நீராடல், வெறியாடல் (கிராமிய வழிபாட்டின்போது கூத்தர்கள் சென்று ஆடுவது), பிற ஆடல் கலைகளும்  இடம்பெற்றன. சங்ககாலக் கலை மரபில் ஆடல், பாடல், கூத்துக் கலைகளில்  ஈடுபட்ட பெண்களை விறலியர், பாடினியர் என அழைத்தனர். சங்ககால நீர் விளையாட்டுக்களில் ஒன்றான  தைந்நீராடல் என்பது  தமிழ்நாட்டுப் பருவ காலத்தில் ஆற்றுநீரும், குளத்துநீரும் வெதுவெதுப்பாக இருக்கும் மாலை வேளையில் மகளிரால்  ஆடப்படும் நீர் விளையாட்டினைக் குறிக்கும்.

“வைஎயிற் றவர் நாப்பண் வகைஅணிப் பொலிந்துநீ

தையில்நீ ராடிய தவம்தலைப் படுவையோ”  (கலி.59)

 1. முடிவுரை

தமிழர் மெய்யியலானது மெய்யியலின் பிரதான எண்ணக்கருக்களுள் ஒன்றான அழகியலைத் தன்னுள் உள்ளடக்கியதோடு அவற்றைச் சங்ககாலத் தமிழர்களின் அன்றாட வாழ்வில் பயன்படுத்தியுள்ளமையைக் காணலாம். சங்ககாலத் தமிழரின்  நாகரிக, பண்பாட்டு முதுமையை அறிந்து கொள்ள உதவும் அளவீட்டுக் கருவியான அழகியல், கலை என்பன இயற்கையின் பெரும்பங்களிப்புடன் கூத்து, நாடகம், இசை, பாடல், இசைக்கருவிகள்  என வளர்ச்சி பெற்றன. மேலும் சங்ககால மக்கள் கலையைத் தம் வாழ்க்கையாகக் கொண்டிருந்தமையை, அக, புற இலக்கியங்களில் அக்கலைகளைப் பாடிய புலவனின் புலமைவழி அறிய முடிகின்றது.

துணைநின்றவை

 • அம்மன்கிளி முருகதாஸ், 2006, சங்கக் கவிதையாக்கம் மரபும் மாற்றமும், குமரன் புத்தக இல்லம், கொழும்பு.
 • அருணாசலம், மு, 1969, தமிழ் இலக்கிய வரலாறு, (15ஆம் நூற்றாண்டு), தஞ்சை.
 • சிவத்தம்பி கா., 2007, சங்க இலக்கியமும் சமூகமும், இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம், கொழும்பு.
 • பிரேம்குமார்.இ, 2013, மேலைநாட்டு அழகியல் (பிளேட்டோ முதல் நீட்ஷே வரை), குமரன் புத்தக இல்லம், கொழும்பு.
 • பாலசுப்பிரமணியம், கு.வெ, & பரிமணம், அ.மா. (உரை.), 2004, பத்துப்பாட்டு மூலமும் உரையும், நியு செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை.
 • ………, இந்து கலைக்களஞ்சியம், தொகுதி-10, (ப-பௌ), 2009, இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம், கொழும்பு.
 • Nilacharal.com / karuvoolam / தமிழர் கலைகள்
 • https:// ta.m.wikipedia.org/wiki/ சங்ககாலம்
 • https:// ta.m.wikipedia.org /wiki / சங்ககாலக் கலைகள்
 • Vjpremalatha.blogspot.com புறநானூறு

செல்வி. திரவியராசா நிரஞ்சினி

முதுகலைமாணி மாணவி

(பேராதனைப் பல்கலைக்கழகம்)

இலங்கை.

[email protected]