ஆய்வு அறிமுகம்

“மெய்யியல்” என்பது உண்மை பற்றிய தேடலாகும். இம்மெய்யியலானது  ஆய்வு செய்யும் விடயங்களின் இயல்புகள், நோக்கங்களின் அடிப்படையில் நான்கு பிரதான பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை பௌதீகவதீதம், அறிவாராய்ச்சியியல், ஒழுக்கவியல், அழகியல் ஆகியனவாகும். மெய்யியலின் விசேட பிரிவுகளில் ஒன்றாகவே  தமிழர் மெய்யியல் அமைந்துள்ளது. தமிழர் மெய்யியல் என்பது மெய்யியலின் பிரதான எண்ணக்கருக்கள் தமிழர்களது வாழ்வியலில் ஏற்படுத்தியுள்ள தாக்கம் தொடர்பாக ஆராயும் ஓர் அணுகுமுறையாகும். மெய்யியலின் பிரதான எண்ணக்கருக்கள் தமிழர்களது வாழ்வியலில் ஊடுருவியுள்ளனவா? அவை எவ்வாறு ஊடுருவியுள்ளன? முதலிய கருத்துக்களை ஆய்வு செய்வதாகவும்  தமிழர் மெய்யியல் விளங்குகிறது. அந்தவகையில் மெய்யியலின் பிரதான ஆய்வு விடயங்களான பௌதீகவதீதம், அறிவாராய்ச்சியியல், ஒழுக்கவியல், அழகியல் ஊடாகத் தமிழர்களின் மெய்யியல் சிந்தனைகளை இனம்கண்டு கொள்வதே இக்கட்டுரையின்  நோக்கமாகும்.

1.பௌதீகவதீத சிந்தனைகள்

மெய்யியல் விசாரணைகள் ஆரம்பத்தில் பிரபஞ்சத்தின் தோற்றம் தொடர்பாகப் பல ஆய்வுகளை மேற்கொண்டது. இதற்கு விடையிறுப்பதற்கு மேலைத்தேயத்தில் நான்கு மரபுகள் தோற்றம் பெற்று நீர், காற்று, அணுக்கள், அபய்ரோன் முதலியன பிரபஞ்சத் தோற்றத்திற்குக் காரணமானவை  எனப் பதிலளித்தது. இந்நிலைப்பாட்டினைத் தமிழர் சிந்தனையிலும் காணக்கூடியதாக உள்ளது. தமிழர் சிந்தனை மரபில் குறிப்பாகச் சங்க காலத்தில் இயற்கை இகந்த அதாவது பௌதீகவதீத சிந்தனைகள் குறித்து மக்கள் எத்தகைய நிலைப்பாட்டினைக் கொண்டிருந்தனர் என்பதனை நோக்குவதற்கு வாய்ப்பாக, பௌதீக உலகம் குறித்துச் சங்ககால மக்களது நிலைப்பாட்டை நோக்குவது மிக அவசியமானது. சடம் குறித்த இயற்கைவாத அடிப்படையிலான நிலைப்பாட்டினையும் பௌதீகவதீத அடிப்படையிலான நிலைப்பாட்டினையும், இவர்கள்  கொண்டிருந்தனர். எனினும் சிந்தனைகளைக் காட்டிலும், சடமே முதன்மை பெற்றிருந்தது.

புறநானூற்றுக் காலத்தில் இயற்கை இகந்த சக்திகள் குறித்த எதிர்மறையான நிலைப்பாட்டினைப் பல புலவர்கள் தமது தத்துவ சிந்தனைப் பாடல்களில் வெளிப்படுத்தியிருந்தனர். ஓர் அதீத ஒழுக்கமயப்பட்ட வாழ்வானது உயர் விழுமியங்களின் கடைப்பிடிப்புடன் ஒழுகப் பெறின் அவ்வாழ்வு ஒருவனைச் சுவர்க்க வாழ்வினுள் கொண்டு சென்று விடும் என்றும், மீண்டும் பிறவாமையை உறுதிப்படுத்தும் என்றவாறானதுமான கருத்தாக்கங்கள் பரவலாக இக்காலச் சிந்தனையாளர்களால் மறுதலிக்கப்பட்டன. புலன் அனுபவங்களுக்குக் கிடைக்கக்கூடியதும், விளக்கம் காணப்படக்கூடிய பொருட்களை மட்டுமே ஏற்றுக்கொள்ளக்கூடிய மனப்பாங்கே இக்கால மக்களிடம் நிலவின.

சங்ககால நூல்களில் ஒன்றான  புறநானூறு, இறையின் இருப்பினையும், இயல்பினையும் பிரதிபலிக்கின்றது. இந்நூலில் காணப்படும் கருத்தமைவுகள், சோழர் காலத்தில் நிறுவனமயப்படுத்தப்பட்ட சைவசித்தாந்தம் உள்வாங்கிக் கொண்டிருக்கும் கற்பிதங்களுக்கு முன்னோடியாகவும், உடன்பாடானவையாகவும் காணப்படுகிறது.

புறநானூறு இறையிருப்பை ஏற்று இறைவனே உலகத் தோற்றத்திற்குக் காரணமானவன் என்பதையும் ஏற்றுக்கொள்கிறது. மேலும் இறைவனே படைத்தல், காத்தல், அருளல் ஆகிய மூன்றையும்  ஆற்றுபவன் எனவும் குறிப்பிடப்படுகிறது. சிவன், திருமால், முருகன் முதலான பல கடவுளரையும் குறித்துப் புறநானூற்றுச் செய்யுள்கள் குறிப்பிட்டிருந்தாலும் ஓர் இறைவனை யாவற்றுக்கும் மேலானவன் என்ற செய்தியையும் இது வெளியிடுகின்றது. இவரே இறைமையுள்ள கடவுளராவார், இவரைக் குறித்துக் குறிப்பிட்டிருக்கின்ற செய்யுள் வாக்கியங்கள் அறுதியாய்ச் சிவனையே படம்பிடித்துக் காட்டுவதாய் அமைகிறது.  “நன்றாய்ந்த நீள்நிமிர் சடை முதுமுதல்வன்” (புறநானூறு 166ஆம் பாடல்)

இதிலிருந்து சிவனே மாற்றமற்ற உச்ச உயர் குறிக்கோள், அறமுறை இறுதியிலக்கணம். இந்த மேலான சிவன் அழிவில்லாதவன், மாற்றமில்லாதவன், மட்டுப்படுத்தப்பட்ட நிபந்தனைகளுக்கு அப்பாற்பட்டவன் எனப் புறநானூற்றில் பாராட்டப்படுகிறது. தொல்காப்பியத்தில்  இவ்வுலகம் ஐந்து மூலக்கூறுகளால் ஆனது எனக் குறிப்பிடப்படுகிறது. அவை முறையே நிலம், நீர், வளி, ஆகாயம், தீ ஆகும். இந்தப் பஞ்சபூத சேர்க்கைகளினாலான உலகம் அழிந்து போவதற்கான சாத்தியக்கூறுகளையும் கொண்டுள்ளது. இத்தகைய உலகப்படைப்பின் மூலகாரணி இறைவன் எனத் தொல்காப்பியம் குறிப்பிடுகின்றது. மேலும் இறைவன் விருப்பாலே உலகம் படைக்கப்படுகிறது. அவரின் விருப்பாலே அது அழிக்கப்படுகிறது. இதனால் இறைவனே உலகத் தோற்றத்தின் சடக்காரணியாகவும் துணைக்காரணியாகவும் விளங்குகிறார். ஆகாயத்தில் இயல்பாகச் சப்தத்தை இறைவன் ஏற்படுத்தியுள்ளான். ஆகவே மொழியினுடைய உருவாக்கமும் இறைவனால் ஆனது. இதற்குத் தொல்காப்பியம் சான்று பகர்கிறது.  இதிலிருந்து கடவுள் இலக்கணத்திற்கும் இலக்கியத்திற்கும் காரணமானவர் என்பது புலனாகிறது. அதனைத்  தொல்காப்பியம் “முனைவன் கண்டது முதல்நூ லாகும்” எனக் குறிப்பிடுகின்றது.

சைவசித்தாந்தத்தின் இறுதி இலக்கான சுவர்க்கப்பேறு பற்றிய கருத்தமைவுகள் தமிழர் சிந்தனை மரபில் காணப்படுகின்றன. சங்கப்பாடல்களில் வரும் “செய்குவம் கொல்லோ நல்வினை” (புறநானூறு-214) என்கின்ற பாடல் சுயபலியீடு செய்வதன் ஊடாக சுவர்க்கத்தை அடைய முடியாதென்றும், இலட்சியவாழ்வு வாழ்வதன் மூலமே சுவர்க்கத்தை அடையமுடியும்” என்ற கருத்தாக்கம் காணப்படுகின்றது. இக்கருத்தமைவைச் சங்கமருவிய காலத்து நூலான திருக்குறள் வலியுறுத்தி நிற்கின்றது.

“தன்னுயிர்தான் அறப் பெற்றானை ஏனைய

மண்ணுயி ரெல்லாம் தொழும்” (குறள். 268)

புறநானூற்றுக் கால தத்துவச் செய்யுட்கள் மிகவும் தீர்க்கமான மெய்யியல் கருத்துக்களைத் தனித்தனியாக, தனித்துவமாக வெளியிட்டிருந்தன.  உடல், உயிர் வேறுபாடு, மறுபிறப்பு வாழ்க்கையின் பெறுமதி, சமூக அரசியல் தளைகளில் அகப்படாமல் இருத்தல் குறித்த எண்ணக்கருக்களைத் தெளிவாக எடுத்துக் கூறுகின்றன. அத்துடன் இறைவனே உலகத்திற்கான வழி, காட்சியை விடவும் அறிவைக் கண்டு கொள்வதற்கான வழிகளும் உண்டு எனக் கூறுகின்றன.

2.ஒழுக்கவியல் சிந்தனைகள்

மெய்யியலின் பிரதான எண்ணக்கருக்களில் ஒன்றாக ஒழுக்கவியல் விளங்குகிறது.  இது சீரான மனித நடத்தைக்கும் செம்மையான மனித வாழ்விற்கும் ஆதாரமான அடிப்படை நெறிகளுள் ஒன்றாக விளங்குகின்றது. மனித வாழ்க்கையின் இயல்புகளைப் பற்றியும் பிரச்சினைகளைப் பற்றியும் மனிதன் ஆழ்ந்து சிந்திக்கத் தொடங்கியதில் இருந்து ஒழுக்கவியலும் அதனோடு தொடர்பான பிரச்சினைகளும் தோற்றம் பெற்றது. இத்தோற்றமானது நன்மை, தீமை, சரி, பிழை போன்ற எண்ணக் கருக்களினூடாக வளர்ச்சியடையத் தொடங்கியது.

ஒழுக்கவியலானது மனித செயல் பற்றியும் நடத்தையின் தரம் பற்றியும் ஆய்வு செய்கிறது. சாதாரணமாக நாம் பேசும்போது பயன்படுத்தும் சொற்களான நன்மை, தீமை, நல்லது, தீயது, ஒழுக்க செயல், ஒழுக்க ரீதியற்ற செயல், கட்டாயம் அதைச் செய்ய வேண்டும், கடமை, கடப்பாடு போன்ற சொற்களுக்கு உண்மையான அர்த்தம் என்ன? என்ற வினாவுக்கு விடையளிக்கவும் அவற்றுக்கு இடையே காணப்படும் வேறுபாடுகளை தெளிவாக்கவும் ஒழுக்கவியல் முனைகிறது. ஒழுக்கவியல் பயன்பாட்டை மூன்று வகையாகப் பிரித்து நோக்கலாம். அவையாவன,

 • வாழ்க்கைமுறை அல்லது வாழ்க்கைத் தொகுப்பாகக் காணப்படும் ஒழுக்கம்
 • நடத்தை அல்லது நடத்தை பற்றிய விதித் தொகுப்பு
 • வாழ்வின் முறை பற்றியதும் நடத்தை விதி பற்றியதுமான கோட்பாடு அல்லது விசாரணை

தமிழர் சிந்தனை மரபில் அறவழிப்பட்ட வாழ்வினை நிலைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டே ஒழுக்கவியல் பேசப்படுகிறது. ஒழுக்கம் சமூதாய ஒழுங்கமைவை, சமச்சீர்மையை நிலைப்படுத்துவதாய், இவ்வுலக வாழ்வின் பின்னராய் மனிதனது நிலை குறித்து நிலைப்படுத்தும், நிர்ணயப்படுத்தும், ஒன்றாகவும் அறம் கருதப்படுகிறது. இக்கருத்தமைவைத் திருக்குறளில் காணலாம்.

“அறன்எனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்

பிறன்பழிப்பது இல்லாயின் நன்று”  ( குறள்;- 49)

தமிழர் சிந்தனை வரலாற்றில் அறம் என்னும் எண்ணக்கரு “ஏற்ற கைமாற்றாமை யென்னும் தாம் வரையாது ஆற்றாதார்க்கு ஈவதாம் ஆண்கடன்” எனும் நாலடியார் பாடலில், அதாவது இங்கு  அறம் செய்தல் ஓர் அறவிதியாகவும், செய்வினையாகவும், மேலும் மரபுவழியாக நல்லனவற்றைப் பின்பற்றி ஒழுகுக என்றும் கூறுவதனூடாக விதியாகவும், செயற்பாடாகவும், நியம விதியாகவும் அமைவதைக் கண்டு கொள்ளலாம்.

அரசன் அறவழிப்பட்டவனாக வாழ்ந்தால் குடிகளும் அவ்வாறே வாழ்வார்கள். இதனால் அறத்தைப் போற்ற வேண்டிய முதற்கடன்  அரசனுக்கே உரியது எனப் புறநானூற்றுப் பாடலில் கூறப்படுகிறது. “அறநெறி முதற்றே அரசின் கொற்றம்”,

“ அறம் புரிந்தென்ன செங்கோல் நாட்டம்” ( புறநானூறு 55ஆம்பாடல்)

எனும் பாடல் அடிகள் உணர்த்துகின்றன. அரசன் தனது ஆட்சியில் வேண்டுவோர், வேண்டாதோர் என வகைப்படுத்தித் தண்டனை வழங்காது அனைவரையும் ஒரே அளவுகோல் கொண்டு மதிப்பிடலே சிறந்த அறம் என்று புறநானூற்றுச் செய்யுள் ஒன்றில் கவிஞர் மருதனிள நாகனார் கூற்றாக வருகிறது.

தமிழர் சிந்தனை மரபில் அறம் முதன்மைப்படுத்தப்படுகின்றது. அறம் என்பதன் வழிப்பட்டே மனிதனுக்குத் தேவையான பொருள் தேடப்பட வேண்டும். அப்போதுதான் அது அர்த்தப்பாடுடையதாக இருக்கும். இதனைப் புறநானூறு 131ஆம் பாடல்

“சிறப்புடை மரபின் பொருளும் இன்பமும்

அறத்து வழிப்படூஉம்”

என்கிறது. அறம், பொருள், இன்பம் எனும் மூன்றும் தமிழில் புருடார்த்தங்கள் என்றும் இவை அடைவதற்குரிய நோக்குகள் என்றும் சங்கப்பனுவல்கள் குறிப்பிடுகின்றன.

“அறனும் பொருளும் இன்பமும் மூன்றும் ஆற்றும்

பெரும்நின் செல்வம்”

மனிதன் அறம் செய்யக் கடமைப்பட்டவன். ஏனெனில் அவனுக்கு மட்டுமே ஆறறிவு உண்டு. விலங்கினத்துக்கு அது இல்லை. எனவே மானிடப்பிறப்பே உயர்பிறப்பு, சிந்தித்துச் செயலாற்றும் துணிவு மனிதனுக்கு மட்டுமே உண்டு. சிந்தனையின் வெளிப்பாடாய் அறம் போன்ற நல்ல செயல்களை ஆற்ற முடியும். இதனைத் தொல்காப்பியம் “மக்கள் தாமே ஆறறி வுயிரே…”  எனும் சூத்திரத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

சமண தத்துவம், பௌத்த தத்துவம் கூறுகின்ற “வாழ்வானது மாயம் அது மண்ணாவது திண்ணம்” என்கின்ற கருத்தமைவைச் சங்கநூல் பாக்கள் முதன்மைப்படுத்தவில்லை. உலக வாழ்வு இன்பம், துன்பம் நிறைந்தது. இரவும் பகலும் மாறிமாறி வருவது போன்று இவ்வுலகமும் இவ்வுலக வாழ்க்கையும் இறப்பும் பிறப்பும் தன்னிச்சையாக இடம்பெறுவது. புணர்வும், பிரிவும் உடையது. இந்நிலைமைகள் யதார்த்தமானவை ஆனாலும் உலக வாழ்வானது நல்லது, இனியது எனவே உலகியல் வாழ்வில் அழுந்தி, தீயவற்றை ஒழித்து, நல்லனவற்றைச் செய்து வாழ்க எனக் கருத்துரைக்கிறது.

“நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்

அல்லது செய்தல் ஒம்புமின்”

எனும் பாடலடிகள் மூலம் அறிந்து கொள்ளலாம்.

 1. அழகியல் சிந்தனைகள்

மெய்யியலில் கலைகளானது கலை கலையை வெளிப்படுத்தல், கலை உணர்ச்சியை வெளிப்படுத்தல், கலை அறத்தை வெளிப்படுத்தல்,  கலை சமூக மாற்றத்தை வெளிப்படுத்தல்  என்ற வகைப்பாடுகளுக்கு ஏற்ப கோட்பாடுகள் ரீதியாக வளர்க்கப்பட்டன. ஆனால் தமிழர் சிந்தனை மரபில் கலையும், அழகியலும் கோட்பாடுகள் ரீதியாக வளர்க்கப்படாமல் மக்களின் வாழ்வியலையும், வாழ்வியல் கூறுகளையும், அதில் நிகழும் தவறுகளையும் சுட்டிக்காட்டுவதாக வளர்க்கப்பட்டன.

கலை என்பது ஒருவரது உள்ளத்தில் தோன்றும் எண்ணமானது பிறிதொருவரின் ரசனைக்கு விருந்தாக அமைவதனைக் குறிக்கும். தமிழர் சிந்தனை மரபில் கலை மனிதனை மையப்படுத்தியவாறாகவே அமைந்திருந்தது. மனிதனது மேன்மையை நோக்கி முன்நகர்த்த வேண்டும் என்பதனையே தமிழர்களின் கலை மையமாகக் கொண்டு காணப்பட்டது.

சங்ககாலத்தில் கலையும், கலை ஆற்றுகையும் மக்களைக் கவர்ந்து அவர்களது அழகியல் நுகர்ச்சிக்கு விருந்தாய் அமைந்தன. சங்ககாலக் கவிதைகள் யாவும் சொற்சுருக்கமும், பொருள் விரிவும், கவித்துவச் செறிவும் கொண்டதாக அமைவதோடு சொல்லலங்காரம் மிக்க பல்வேறு அழகியல் அம்சங்களைக் கொண்டதாக உள்ளன. இதனடிப்படையில் சங்கத் தமிழர் அழகியலை,

1.தொல்காப்பியத்தின் பொருளதிகாரத்தில் வகுக்கப்பட்ட மெய்ப்பாடுகள்

2.சங்ககால திணைக் கோட்பாடுகளின் வகைப்பாடுகள்

ஆகியவற்றின் ஊடாகவும் விளங்கிக் கொள்ளலாம்.

1.தொல்காப்பியப் பொருளதிகாரத்தில் வகுக்கப்பட்ட மெய்ப்பாடுகள்

தொல்காப்பியத்தின் பொருளதிகாரத்தில் எட்டு வகையான மெய்ப்பாடுகள் கூறப்பட்டுள்ளன.  அவை நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை. இவ் எட்டுவகையான சுவைகளும் 32 வகையான காரணிகளால் தோற்றுவிக்கப்படுகின்றன.

2.சங்ககாலத் திணைக் கோட்பாடுகளின் வகைப்பாடுகள்

சங்ககாலத்தில்  ஐந்நில மக்களின் நிலஅமைப்பு வேறுபாடுகளுக்கு ஏற்ப அன்பின் ஐந்திணையான குறிஞ்சி – புணர்தல், முல்லை – இருத்தல், மருதம் – ஊடல், நெய்தல் – இரங்கல், பாலை – பிரிதல் எனும் ஒழுக்கங்களைத் தீர்மானிப்பதற்கு  இயற்கையின் அழகியல் அம்சங்கள் பயன்படுத்தப்பட்டன. உதாரணம் மலையும் மலை சார்ந்த இடமான குறிஞ்சி நிலத்தில் வாழும் வேடுவ மக்களின் காதல் ஒழுக்கத்தைப் புணர்தல் என்பர். இதனைப் பாடுவதற்கு கருப்பொருட்களாக

விலங்குகள்: புலி, யானை, பன்றி, சிங்கம், மான்

பறவைகள்: கிளி, மயில்,

இசைக்கருவி: குறிஞ்சி யாழ்

நீர்நிலைகள்: அருவி, சுனை

தாவரம்: குறிஞ்சி, வேங்கை, குவளை, அகில், மூங்கில்

பூ : குறிஞ்சி

ஆகியன பயன்பட்டன. சங்கத் தமிழரின் வாழ்வியலின் ஒவ்வொரு கூறும் கலையம்சம் நிறைந்ததாக இருந்தமையால் இவர்கள் கலை குறித்த இரசனையிலும், தேடலிலும் அதிக அக்கறைப்பாட்டினைக் கொண்டிருந்தார்கள். சங்ககாலச் செய்யுள்களில் கலை என்ற சொல் பல பெயர்களில் அழைக்கப்பட்டது. உதாரணம் “குரங்கு” – 18 இடங்கள், “மான்”- 25 இடங்கள், “மேகலை”- ஓரிடம்

தமிழரின் கலை வாழ்வினை

1.இயற்கை – புலவர்களின் கற்பனைத்திறன்

2.இசைக்கலைஞர்கள்

3.இசைக்கருவிகள்

4.ஆடல் கலைகள்

முதலியவற்றினூடாக விளங்கிக் கொள்ளலாம்.

1.இயற்கைபுலவர்களின் கற்பனைத்திறன்

புலவர்கள் செய்யுள்களைப் பாடும்போது இயற்கையில் நிகழும் சம்பவங்களை உள்ளுறை  உவமையாகக் கையாண்டமையின் ஊடாக அகத்திணை, புறத்திணைப் பாடல்களில் இயற்கை செல்வாக்குப் பெற்றிருப்பதைக் காணலாம்.

“மையற விளங்கிய மணிநிற விசும்பிற்

கானலங் கொண்கன் தந்த………”

2.இசைக்கலைஞர்கள்

சங்க காலத்தில் பாணர், பாடினியர், கூத்தர் முதலிய  இசைக்கலைஞர்கள் கலைத்துறையினைச் சார்ந்தோராக விளங்கினர். தமிழிலக்கிய வரலாற்றில் தொல்காப்பியக் காலத்திற்கு முற்பட்ட பழங்காலத்தில் இருந்து சங்ககாலம் வரையிலும் இசை, கூத்து ஆகிய இரு கலைகளின் மரபினைப் போற்றி வளர்த்த பெருமை பாணரையும், பாடினியரையும் சேரும்.

பண்ணிசைப்பவர்கள் பாணர் என அழைக்கப்பட்டனர். இவர்கள் பாடல்களைப் பாடுவதிலும், யாழ் இசைப்பதிலும் கூத்து, கலை நிகழ்ச்சிகளிலும் தேர்ச்சி பெற்று விளங்கினர். மேலும் சங்ககாலத்தின் கலையம்சத்தினை வளர்த்த பெருமை இசைப்பாணர், யாழ்ப்பாணர், மண்டைப்பாணர் என மூவகைப்பட்ட பாணர்களைச் சேரும். இசைப்பாணரைப் பாடற்பாணர், அம்பனவர் என்றும், யாழ்ப்பாணரை யாழிசைத்துப் பாடுபவர் என்றும் அழைப்பர். பேரியாழ், மகர யாழ், சகோடயாழ், செங்கோட்டியாழ் என்பன யாழ்ப்பாணர்கள் வாசித்தவற்றுள் சிறப்பானவையாகும்.

இதில் பேரியாழ் வாசித்த பாணரைப் பெரும்பாணர் என்றும், செங்கோட்டியாழாகிய சீறியாழை வாசித்த பாணரைச் சிறுபாணர் எனவும் அழைப்பர். அத்துடன் சங்ககால ஆற்றுப்படை நூல்களுள் பெரும்பாணாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை என்ற நூல்கள் இவர்களையே சிறப்பித்துக் கூறுகின்றன.

இவர்கள் மன்னர்களைப் பாடுவதனால் அவர்களால் பொருள் கொடுத்துக் கௌரவிக்கப்பட்டனர். சூழலுக்கு ஏற்பவும், காலத்திற்கு ஏற்பவும் பண்களை வகுக்கும் திறன்களையுடைய இவர்கள் மன்னர்கள் போருக்கும் செல்லும்போது உடனிருந்து பல்வேறு பாடல்களைப் பாடியுள்ளனர்.

“கூத்தரும் பாணரும் பொருணரும் விறலியு

மாற்றிடைக் காட்சி யுறழத் தோன்றி…..” (தொல்.புறத்திணை 93)

3.இசைக்கருவிகள்

இயற்கையின் அசைவுகளின் ஊடாகத் தோன்றும் ஓசைகளைச் சங்கத் தமிழர்கள் இசைக்கருவிகளினால் பிறப்பிக்கப்படும் ஒலிகளுக்கு ஒப்பிட்டுள்ளனர். உதாரணம் வண்டுகளால் துளையிடப்பட்ட மூங்கிலின் மேற்புறத்தில் காற்றுப் படும்போது எழும் ஒலியைப் புல்லாங்குழல் ஓசை  எனவும், பூக்களில் வண்டுகளால் தேன் நுகரப்படும் போது  எழும் ஓசை யாழிசையாகவும்,  அருவிகளில் எழும்  நீரின்  ஒசை மத்தளத்தின் ஒலியாகவும், கலைமான்கள் ஓடும் போது பிறப்பிக்கப்படும் ஒலிகள்  தாள ஒலியாகவும் கருதினர். சங்ககால இசைக்கலைஞர்கள் பல்வகைப்பட்ட இசைக்கருவிகளைப் பயன்படுத்தினர்.

“தெய்வ முணாவே மாமரம் புட்பறை”

“வாத்தியம் வாசிப்போர் வகைப்படுத்து மாற்றை ……”  (புறத்திணை 335)

சங்ககாலத்தில் 103 பண்களை இசைக்கும் 27 நரம்புகள் கொண்ட பேரியாழ் மீட்டுபவர்கள் பெரும்பாணர்கள் என்றும், 103 பண்களிலும் குறைந்த பண்களை மீட்டுபவரும்,  செங்கோட்டியாழை மீட்டுபவரும் சிறுபாணர்கள் என்றும் அழைக்கப்பட்டனர்.

“தேஎந் தீந்தொடைச் சீறியாழ் பாண.”  (புறநானூறு 70)

4.ஆடற் கலைகள்

சங்ககாலத்தில் பல்வேறுபட்ட  ஆடல்கலைகள் நிகழ்ந்துள்ளன.  தைந்நீராடல், வீரன் வெறியாடல் (கிராமிய வழிபாட்டின் போது கூத்தர்கள் சென்று ஆடுவது), பிற ஆடல் கலைகளும்  இடம்பெற்றன. சங்ககாலக் கலை மரபில் ஆடல், பாடல், கூத்துக் கலைகளில்  ஈடுபட்ட பெண்களை விறலியர், பாடினியர் என அழைத்தனர்.

 1. அறிவாராய்ச்சியியல் சிந்தனைகள்

மேலைத்தேய மெய்யியல் வரலாற்றில் நவீன காலம் “அறிவாராய்ச்சியியல் யுகம்” என அழைக்கப்பட்டது.  அறிவு என்றால் என்ன? அறிவின் மூலங்கள் எவை? அறிவுக்கும் நம்பிக்கைக்கும் இடையில் ஏதாவது தொடர்பு உண்டா? ஏற்புடைய அறிவை எவ்வாறு பெறுவது? அறிவின் ஆக்கத்திற்குச் சிந்தனைத் திறன் முக்கியமா? அல்லது அனுபவம் முக்கியமா? என்பன பற்றியும் புற உலகினின்று புலன்கள் வாயிலாகப் புகுகின்ற காட்சிகளின்றி அறிவாற்றல் தொழிற்பட இயலுமா? அறிவாற்றல் அனுபவமின்றிப் பயன்பெறுதல் எவ்வாறு? அறிவாற்றல் தனித்தன்மையைக் காணவல்லதா? சிந்திக்கும் திறன் இல்லையேல் புறக்காட்சிகள் தொழிற்படுதல் எங்ஙனம்? இவ்விரண்டும் தேவை எனில் எதன் பங்கு பெரிது? என்றவாறாக அறிவு தொடர்பாகப் பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டன. இதற்கு விடையளிக்கும் நோக்கில் இரு வேறு சிந்தனாக்கூடங்கள் தோற்றம் பெற்று (அறிவுமுதல் வாதம், அனுபவமுதல் வாதம்) எனத் தத்தமது சிந்தனையை வளர்த்துச் சென்றது.

தமிழர் சிந்தனை மரபில் அறிவாராய்ச்சியியல் தொடர்பாக மக்களது நிலைப்பாட்டினை நோக்கும் போது தமிழர்கள் அறிவைப் பெறுவதற்கு ஒரு முறையியலை முன்வைத்திருந்தனர். இது வடமொழியில் பிரமாணங்கள் என அழைக்கப்படுகிறது. அந்தவகையில் பத்து வகையான அறிவைப் பெறும் வாயில்களைத் தமிழியல் சிந்தனையாளர்கள் சுட்டிக்காட்டி அவற்றைக் காட்சி, கருதல், உரை என்ற மூன்றினுள் அடக்கிவிடலாம் என்றும் கூறுகின்றனர்.

மேலைத்தேயத்தில் உலகத்தோற்றத்திற்கான காரணங்களை ஆராய்ந்த மெய்யியலாளர்கள் நீர், நெருப்பு, அணுக்கள், அபைரோன், காற்று, எண்கள், இருப்பு, இருப்பின்மை என்றவாறாக தமது கருத்துக்களை முன்வைத்தனர். இத்தகைய நிலைப்பாட்டினைத் தமிழர் சிந்தனையிலும் கண்டு கொள்ளலாம். இது அவர்களுடைய  அறிவு வளர்ச்சியினை எடுத்துக் காட்டுகிறது.

உலகம் தொடர்பான கருத்துக்களைத் தொல்காப்பியத்தில் கண்டுகொள்ளலாம்.

உதாரணம் “நிலம், தீ, நீர், வளி, விசும்போடைந்தும்

கலந்த மயக்கம் உலகம்”  (தொல்காப்பியம் :635)

நீர்நிலம் தீவளி விசும்போ டைந்தும்

அளந்துகடை அறியினும் அளப்பருங் குறையை

செஞ்ஞாயிற்றுச் செலவும் (பதிற்.30: 1-5)

எனும் பாடலடிகள் தொல்காப்பியத்தை அடியொற்றி உலகம் பற்றிய வரையறைகளைக் கூறியுள்ளன.

முடிவுரை

செம்மொழி பேசும் தமிழர்கள் தமது வாழ்வியலில் மெய்யியலின் முதன்மையான  எண்ணக் கருக்களான பௌதீக அதீதம், அழகியல், ஒழுக்கவியல், அறிவாராய்ச்சியியல் முதலிய சிந்தனைகளைப் பயன்படுத்தியுள்ளனர் என்பதனையும் இதனூடாக மெய்யியலில் மதீப்பீடுகளை மேற்கொள்ளுதல், (பொருள் சார்ந்த மதிப்பீடுகளை மேற்கொள்ளாது எண்ணக்கரு சார்ந்த மதீப்பீட்டினையே மேற்கொள்ளுதல்), பகுப்பாய்வை மேற்கொள்ளுதல், நியமம் கூறுகின்ற தன்மை போன்றவற்றில் தமிழர்கள் எத்தகையதொரு நிலைப்பாட்டினைக் கொண்டிருந்தனர் என்பதனையும் இக்கட்டுரையின் வாயிலாக  அறிந்துகொள்ளலாம்.

உசாவியவை

 • அம்மன்கிளி முருகதாஸ், 2006, “சங்கக் கவிதையாக்கம் : மரபும் மாற்றமும்”, குமரன் புத்தக இல்லம், கொழும்பு.
 • அருணாசலம் மு, 1969, “தமிழ் இலக்கிய வரலாறு”, ஆம் நூற்றாண்டு, தஞ்சை
 • அனஸ் எம்.எஸ்.எம், 2003,”மெய்யியல் அறிமுக உரைகள்”, கலாசார பண்பாட்டு வட்டம், அஸ்மினா கொம்பியூட்டர் என்டர்பிரைசஸ், பேராதனை.
 • கிருஸ்ணராஜா சோ, 2000, “இருபதாம் நூற்றாண்டின் ஒழுக்கவியற் கொள்கைகள் – ஓர் அறிமுகம்” பண்பாடு – இலங்கை, இந்துக் கலாசார அலுவல்கள் திணைக்களம்.
 • சிவானந்தமூர்த்தி க, 2012, “ஒழுக்க நியமங்களும் அதன் நடைமுறைகளும்”, லங்கா புத்தக சாலை, கொழும்பு -12
 • பாலசுப்பிரமணியன் கு.வெ, & பரிமணம் அ.மா., (உ.ஆ.), 2004, “பத்துப்பாட்டு, மூலமும் உரையும்”, நியூ செஞ்சுரி புக்ஹவுஸ், சென்னை.
 • பிரேம்குமார் இ, 2013, “மேலைநாட்டு அழகியல்” (பிளேட்டோ முதல் நீட்ஷே வரை), குமரன் புத்தக இல்லம், கொழும்பு.
 • வில்லியம் லில்லி, 1996, “அறவியல் ஓர் அறிமுகம்”, தமிழ் வெளியீட்டுக் கழகம், தமிழ்நாடு இந்தியா.
 • ஜமாகிர் பீ.எம், 2012, “ஒழுக்கவியல் ஓர் அறிமுகம்”, ஈஸ்வரன் புத்தகாலயம்.
 • “சங்க இலக்கியமும் சமூகமும்”, 2007, இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம்.
 • “இந்து கலைக்களஞ்சியம்” தொகுதி-10, (ப-பௌ), 2009, இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம்.
 • Nilacharal.com / karuvoolam / தமிழர் கலைகள்
 • https:// ta.m.wikipedia.org/wiki/ சங்க காலம்
 • https:// ta.m.wikipedia.org /wiki / சங்ககாலக் கலைகள்
 • Vjpremalatha.blogspot.com /புறநானூறு
 • ytamizh.com/Tirukulal/kural-1330
 • https://ta.m.wikisorce.org/wiki/உரைநூல்-மேற்கோள்-பாடல்கள்

திரவியராசா நிரஞ்சினி

உதவி விரிவுரையாளர்

(தத்துவவியல் மற்றும் விழுமியக் கற்கைகள் துறை)

கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை, [email protected]