பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் குறித்த ஆய்வுகள் பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதி தொடங்கிப் பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்க கட்டங்களில் விரிவாக முன்னெடுக்கப் பட்டுள்ளன. இவ்வாராய்ச்சியை முன்னெடுத்ததில் சி.வை.தா., உ.வே.சா. நாராயண சரணர், ரா.இராகவையங்கார், திருமணம் செல்வகேசவராய முதலியார், கா.ர.கோவிந்தராச முதலியார் உள்ளிட்ட செவ்விலக்கியப் பதிப்பாசிரியர்களுக்குத் தனித்த இடம் உண்டு. இதன் தொடர்ச்சியில் பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் இவைதாம் என்ற தெளிவான கருத்து முடிவுகளை ஆராய்ச்சியாளர்கள் முன்வைத்துள்ளனர். சிலர் இம்முடிவுகளுக்கான தொடக்க முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். இவ்விரு நிலைப்பட்ட ஆய்வுப் புள்ளிகளை இணைத்து உரையாடுவதாக இக்கட்டுரை அமைகின்றது. குறிப்பாக இவ்விரு வகைப்பட்ட ஆராய்ச்சி முறையியலை முன்னெடுத்தவர்களாகத் திருவாரூர் சோமசுந்தர தேசிகர், துடிசை கிழார் அ.சிதம்பரனார், ச.வையாபுரிப்பிள்ளை, மயிலை சீனி.வேங்கடசாமி ஆகியோரைக் குறிப்பிடலாம். பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் குறித்த இவர்களது ஆய்வுகள் தொடக்ககால முயற்சிகளை அடியொற்றிச் சென்றாலும்  குறிப்பிடத்தக்க சில ஆய்வு முடிவுகளைக் கண்டறிந்துள்ளன. முந்தைய பதினெண் கீழ்க்கணக்கின் பதிப்பாசிரியர்கள் சிலரிடம் காணப்பட்ட கருத்தியல் ரீதியான குழப்பங்கள் இவர்களிடத்தும் காணப்படுகின்றன. அதாவது கைந்நிலையைப் பதினெண் கீழ்க்கணக்கில் ஒன்றாகச் சேர்ப்பதா, அல்லது இன்னிலையை ஏற்பதா?. இவ்வகையான விவாதங்களைச் சோமசுந்தர தேசிகர், துடிசை கிழார் அ.சிதம்பரனார் ஆகிய இருவரிடத்தும் காணலாம். இவ்விருவர்களில் சோமசுந்தர தேசிகர் இன்னிலையை ஏற்றுக்கொள்ளபவராக இருப்பதை அவரது கருத்துகள் தெளிவுபடுத்துகின்றன. இவர்கள் இருவரிலிருந்து சில தெளிவான முடிவுகளை முன்வைத்தவர்களாகச்  ச.வையாபுரிப்பிள்ளை, மயிலை சீனி.வேங்கடசாமி ஆகிய இருவரையும் அடையாளப்படுத்தலாம்.

பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் குறித்து 1940கள் வரை நடைபெற்ற விவாதங்களைத் தொகுத்து ஆராய்ந்தவர் ச.வையாபுரிப்பிள்ளை. இவர் அ.நாராயண சரணர், ரா.இராகவையங்கார், இ.வை.அனந்தராமையர் ஆகியோரின் கருத்துகளை வலியுறுத்தும் விதமாகக் கைந்நிலையைக் கீழ்க்கணக்கில் ஒன்றாகக் காட்டுகின்றார். ச.வையாபுரிப்பிள்ளை பாட்டும் தொகையும் (1940) நூலைப் பதிப்பித்த பிறகு கீழ்க்கணக்கைச் சார்ந்த இன்னா நாற்பது (1944), நான்மணிக்கடிகை (1944), திரிகடுகமும் சிறுபஞ்சமூலமும் (1944) ஆகிய நான்கு நூல்களைப் பதிப்பிக்கிறார். இவற்றில் திரிகடுகமும் சிறுபஞ்சமூலமும் என்னும் நூற்பதிப்பில் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் குறித்த தெளிவான கருத்துகளை முன்வைத்துள்ளார். இந்நூலின் முன்னுரை மூலம் பதினெண்கீழ்க்கணக்கின் பெயராட்சி, பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் குறித்து நடைபெற்றுள்ள விவாதங்கள் அதற்கான விடைகள், பதினெண்கீழ்க்கணக்கு நூல்களின் காலம், திரிகடுகம், சிறுபஞ்சமூலம் ஆகிய இரு நூல்கள் பற்றிய விரிவான குறிப்புகள் ஆகியவற்றைக் குறித்து அறிந்துகொள்ள முடிகின்றது. இங்குப் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் பற்றிய விவாதங்கள் மட்டும் கவனப்படுத்தப்படுகின்றது. இதைப் பின்வரும் நிலைகளில் பகுத்து நோக்கலாம்.

 • பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் குறித்த சி.வை.தாமோதரம் பிள்ளை முன்வைத்த கருத்துகளுக்குச் ச.வையாபுரிப்பிள்ளையின் விளக்கங்கள்.
 • கைந்நிலையைப் பதினெண்கீழ்க்கணக்கைச் சார்ந்த தனி நூல் என்று நிறுவுதற்கான அடிப்படைத் தரவுகள் மற்றும் அகச் சான்றுகள்.
 • சி.வை.தாமோதரம் பிள்ளையின் ஊகத்தை அடிப்படையாகக் கொண்டு த.சொர்ணம்பிள்ளை தேடிக் கொடுத்த ஏட்டின் வழி வ.உ.சிதம்பரம் பிள்ளை பதிப்பித்த இன்னிலையினைக் கற்பித நூல் என்று நிறுவும் சான்றுகள்.

ஐம்பது ஆண்டுகளுக்கும் (1885 – 1944) மேலாகப் பதினெண்கீழ்க்கணக்கைச் சார்ந்த நூல்கள் எவை என்பது குறித்த விவாதங்கள் விரிவாக நடைபெற்றுள்ளன. இவ்விவாதத்தைத் தொடங்கியவர்களில் முதன்மையானவர் சி.வை.தாமோதரம் பிள்ளை. இவர் கொண்ட கருத்தில் உள்ள முரண்களுக்குரிய விடைகள் பல இன்று கிடைத்துள்ளன. குறிப்பாக ‘நாலடி நான்மணி…’ என்னும் வெண்பாவில் உள்ள முப்பால் திருக்குறளைக் குறிக்காது என்று குறிப்பிட்டுள்ளார். இதை மறுக்கும் விதமாகச் ச.வையாபுரிப்பிள்ளையின் கருத்து அமைகின்றது. திருக்குறளின் புகழைப் பேசும் வகையில் அமைந்த திருவள்ளுவமாலையின் சில பாடல்கள், இலக்கண விளக்கப் பாட்டியலின் உரைக் குறிப்பு (நூ.57 உரை), திருக்குறளின் பெயரைக் குறிக்கும் பழைய செய்யுள், பேராசிரியர் நச்சினார்க்கினியரின் செய்யுளியல் உரைக் குறிப்புகள் (நூ.547), யாப்பருங்கலக்காரிகையின் (40) உரைக் குறிப்பு ஆகியவற்றின் மூலம் முப்பால் என்பது திருக்குறளையே குறிக்கின்றது. எனவே திருக்குறள் பற்றிச் சி.வை.தா. கொண்ட கருத்தின் பொருந்தாமையினை இதன்வழி உணர்ந்துகொள்ள முடிகின்றது என்கிறார் ச.வையாபுரிப்பிள்ளை.

அடுத்து இன்னிலை, இன்சொல் என இரண்டு நூல்கள் கீழ்க்கணக்கில் இருப்பதாகச் சி.வை.தா. உத்தேசமாகக் கலித்தொகையின் பதிப்புரையில் குறிப்பிட்டிருந்தார். பின்னர் வெளிவந்த திணைநூல்களின் பதிப்புகளால் இக்கருத்துத் தெளிவு பெற்றுள்ளது. இறுதியாகக் கைந்நிலையினைப் பதினெண் கீழ்க்கணக்கைச் சார்ந்த தனிநூல் என்றும், உரையோடு சுவடியில் காணப்படுகின்றது என்றும் நாலைந்திணை என எடுத்துத் திணை பற்றிய நான்கு நூல்களாகக் கொள்ளப்பட வேண்டும் என்றும் இவ்வாறு கொள்ளும்போது பதினெட்டு என்ற கணக்குச் சரியாகப் பொருந்துகின்றது என்றும் சி.வை.தா. அறிய வைத்தார். இக்கருத்தை உறுதிபடுத்தும் விதமாக ரா.இராகவையங்காரின் திணைமாலை நூற்றைம்பதின் (1903) முகவுரைப் பகுதி அமைந்துள்ளது. மேலும் உ.வே.சா. தனது ஐங்குறுநூற்றுப் (1903) பதிப்பின் முகவுரையில் கைந்நிலை என்ற நூலைக் குறிப்பிட்டு, அதன்கண் திணைகோர்த்து அமைந்துள்ள முறையைக் காட்டியுள்ளார். இதனைப் பின்பற்றி நாலைந்திணை என்று சுட்டாமல் ஐந்திணை என்றே கொண்டு ஐந்து தனிப்பட்ட திணைநூல்கள் உள என உ.வே.சா. கருதியுள்ளமை புலனாகும். இக்கருத்தை ரா.இராகவையங்கார் கொண்ட ‘நன்னிலையதாகும் கணக்கு’ என்ற பாடமும் ஐந்திணை என்பதற்கு ஐந்து திணைநூல்கள் எனத் தெளிவுபடுத்துகின்றது. இவற்றோடு அவர் கொண்ட இப்பாடத்துக்கு ‘ஐந்திணையைம்பது முதலிய நான்கும் கைந்நிலையுமாம்’ என்ற அடிக்குறிப்பும் தெளிவுறக் காட்டுகின்றது. இவர் கைந்நிலைதான் பதினெண்கீழ்க்கணக்கைச் சார்ந்தது என்பதற்கு மேலும் இரண்டு சான்றுகளைத் தருகின்றார்.

 1. கி.பி. 1849இல் வேம்பத்தூர் முத்துவேங்கட சுப்பபாரதியார் இயற்றிய பிரபந்த தீபிகை நூலில் இடம்பெற்றுள்ள 44ஆவது செய்யுளில் கைந்நிலை பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றெனவும் இதன்கண் 60 செய்யுட்கள் உள்ளன எனவும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளன.
 2. ஸ்ரீ இ.வை.அனந்தராமையர் 1931இல் கைந்நிலை என்ற நூலை வெளியிட்டுள்ளார். இப்பதிப்பின் இறுதியில் ‘இன்னிலைய காஞ்சியொ டேலாதி யென்பதூஉம்/கைந்நிலையு மாகுங் கணக்கு’ என்ற பாடத்தைத் தந்துள்ளார்.

மேற்குறிப்பிட்ட பிரபந்த தீபிகையின் செய்யுட் குறிப்பாலும், இ.வை.அனந்தராமையரின் கைந்நிலைப் பதிப்பில் உள்ள பாடவேறுபாட்டாலும் கீழ்க்கணக்கைச் சார்ந்தது கைந்நிலை எனத் தெளிவு பெறலாம்.

இவ்வாறு சி.வை.தாமோதரம் பிள்ளை, ரா.இராகவையங்கார், வேம்பத்தூர் முத்துவேங்கட சுப்பபாரதியார், இ.வை.அனந்தராமையர் உள்ளிட்ட அறிஞர்களின் கருத்துகள்வழிக் கைந்நிலையினைப் பதினெண்கீழ்க்கணக்கைச் சார்ந்த நூல்தான் என்று நிறுவுகின்றார். அதே நேரத்தில் இவர் இன்னிலை கீழ்க்கணக்கைச் சார்ந்த நூல் அன்று என்றும் மறுத்துள்ளார்.

‘இன்னிலைசொல் காஞ்சியோடு’ என்ற அடியைக் கொண்டு 1887இல் சி.வை.தா. ஊகமாகக் கருதி ‘இன்னிலை’ என்னும் பெயரில் ஒரு நூல் உண்டு என்று குறிப்பிட்டிருந்தார். இக்கருத்தை ஆதாரமாகக் கொண்டு த.மு.சொர்ணம் பிள்ளை ஏடு தேடும் முயற்சியில் ஈடுபட்டார். இவர் தனக்கு கிடைத்த இன்னிலை ஏட்டினை வ.உ.சிதம்பரம் பிள்ளையிடம் கொடுத்தார். இதை 1917இல் வ.உ.சி. பதிப்பித்து வெளியிட்டார். இப்பதிப்பில் பின்வரும் சில கருத்துகளை அவர் முன்வைத்துள்ளார்.

 • இவ்வரிய இன்னிலை நூலை இயற்றியவர் பொய்கையார்
 • இன்னிலையினைத் தொகுத்தவர் மதுரையாசிரியர்
 • கடவுள் வாழ்த்துச் செய்யுள் செய்தவர் பாரதம் பாடிய பெருந்தேவனார்
 • இன்னிலையின் செய்யுட்கள் பண்டைய இலக்கண நூல்களின் உரைகளில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன

மேற்சுட்டிய வ.உ.சி.யின் கருத்துகளில் உள்ள உண்மைத் தன்மையை ஆராய்ந்த ச.வையாபுரிப்பிள்ளை இன்னிலையினைக் ‘கற்பித நூல்’ என நிறுவுகின்றார். வ.உ.சி. முன்வைத்த இக்கருத்துகளுக்குச் ச.வையாபுரிப்பிள்ளையின் மறுப்புரைகள்:

 • பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் இயற்றியவர், தொகுத்தவர், கடவுள் வாழ்த்துப் பாடியவர் (பாரதம் பாடிய பெருந்தேவனார்) என மூவரைக் கூறும் சிறப்பு இன்னிலையைத் தவிர வேறு நூல்களுக்கு இல்லை.
 • இன்னிலையின் 5 செய்யுட்களை இளம்பூரணர் தனது உரையில் எடுத்தாண்டதாக வ.உ.சி. குறிப்பிடுகின்றார். இச்செய்யுட்கள் அனைத்தும் இன்று கிடைக்கும் இளம்பூரணரின் உரை ஏட்டுப் பிரதி, அச்சுப் பிரதி இரண்டிலும் இல்லை.
 • தொல்காப்பியச் செய்யுளியல் உரையில் பேராசிரியரும், நச்சினார்க்கினியரும் இன்னிலையின் செய்யுட்களை எடுத்துக்காட்டியதாக வ.உ.சி. குறிப்பிடுகின்றார். ஆனால் இவர் காட்டும் இரண்டு செய்யுட்களும் பூதத்தார் அவையடக்கு என்றே இவர்களது உரைகளில் காணப்படுகின்றன. இங்கு இன்னிலையைக் குறித்தோ, பொய்கையார் குறித்தோ எந்தக் குறிப்பும் இல்லை.
 • யாப்பருங்கல விருத்தியுரையில் இன்னிலையின் ஒரு செய்யுள் இடம்பெற்றுள்ளது என இறுதியாய் வ.உ.சி. குறிப்பிடுகின்றார். ஆனால் செய்யுள் ஔவையார் பாடியதாக அங்குக் குறிக்கப்பட்டிருகின்றது.

இவ்வாறு வ.உ.சி.யின் கருத்துகளை உரிய தரவுகளோடு வையாபுரிப்பிள்ளை மறுத்துள்ளார். இதை மேலும் சில கருத்துகளைக் கொண்டும் விளக்கியுள்ளார். இன்னிலையின் பாடல்களில் இடம்பெற்றுள்ள தொடர்களைக் கொண்டு இந்நூலைக் ‘கற்பித நூல்’ என்கின்றார். அவர்தம் கருத்து:

இன்னிலையில் உள்ள செய்யுட்கள் சில பண்டைத் தமிழிலக்கண நெறியினின்றும் வழுவினவாகக் காணப்படுகின்றன. உதாரணமாக ‘வேலற் றரீஇய விரிசடைப் பெம்மான்’என்ற கடவுள் வாழ்த்துச் செய்யுளில் தரீஇய என்பது தந்த எனப் பெயரெச்சமாக வந்துள்ளது.இங்ஙனம் வருதல் தமிழ் மரபேயன்று. இவ்வாறே தட்பம் என்பது பாசம் என்ற பொருளிலும், உழண்டை என்ற புதுப்பதம் துன்பம் என்ற பொருளிலும், தண்ணீர் என்பது அருள் என்ற பொருளிலும், பூயல் என்ற புதுப்பதம் பொருந்துதல் என்ற பொருளிலும், நாப்பண் என்பது சுவர்க்கம் என்ற பொருளிலும், வட்டல் என்பது திரட்டுதல் என்ற பொருளிலும் வந்துள்ளமை தமிழறிஞர்களுக்கு வியப்பாகவே இருக்கும். கீழ்க்கணக்கு நூல்களில் இவை போன்ற பிரயோகங்கள் காணப்படவில்லை. தமிழ்மொழிக்கே இவ்வழக்குகள் புதியனவாம். இக்காரணங்களால் இன்னிலை என்பது இக்காலத்து யாரோ ஒருவர் புதுவதாக இயற்றிச் சங்கப்புலவர் ஒருவரது தலையில் சுமத்திய கற்பித நூல் என்றே கொள்ளத்தக்கது. இப்பொய்ந்நூலை ஸ்ரீசெல்வக்கேசவராய முதலியார் அவர்கள் கூடத் தமது பழமொழிப் பதிப்பிலும், ஆசாரக்கோவைப் பதிப்பிலும் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றென வைத்து எண்ணி யெழுதியது பெருவியப்பே (1944:முன்னுரை).

மேலே முன்வைத்த கருத்துகளைக் கொண்டும், இளம்பூரணர், நச்சினார்க்கினியர், நாற்கவிராச நம்பி ஆகிய உரையாசிரியர்களால் எடுத்தாளப்பட்ட கைந்நிலைச் செய்யுட்களைக் கொண்டும் பதினெண்கீழ்க்கணக்கைச் சார்ந்தது இன்னிலை இல்லை; கைந்நிலைதான் என்று ச.வையாபுரிப்பிள்ளை தெளிவாகக் குறிப்பிடுகின்றார்.

இக்கருத்துகள் பின்னர் ச.வையாபுரிப்பிள்ளை எழுதிய இலக்கிய மணிமாலை (1957), இலக்கியச் சிந்தனைகள் தொகுதி – 1 (1989) ஆகிய இரு நூல்களிலும் இடம்பெற்றுள்ளன.

 • ··

மயிலை சீனி.வேங்கடசாமி தனது பத்தொன்பதாம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கியம் என்னும் நூலில் பதினெண்கீழ்க்கணக்கு குறித்த தனது கருத்துகளைத் தெளிவாகவும் அதேவேளையில் விரிவாகவும் பதிவுசெய்துள்ளார். இவரும் ச.வையாபுரிப்பிள்ளையினைப் போலவே தொடக்க காலம் முதல் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களின் தொகுப்புக் குறித்து முன்வைக்கப்பட்ட கருத்துகளைத் தொகுத்துத் தந்து அவற்றினைக் குறித்த தனது ஆழமான கருத்துகளைப் பதிவுசெய்துள்ளார். இலக்கணக் கொத்தின் உரையாசிரியர் சுவாமிநாத தேசிகர் புறச்சமய நூல்களைக் குறித்த தாக்கத்தைத் தனது உரையில் வெளிப்படுத்தியிருந்தார். இக்கருத்தே மயிலை சீனி.வேங்கடசாமியின் கீழ்க்கணக்கு நூல்கள் குறித்த ஆய்வின் தொடக்கப் புள்ளியாக அமைகின்றது.

18, 19 ஆம் நூற்றாண்டுகளிலே சங்க நூல்களையும் சங்கம் மருவிய நூல்களையும் படிக்கக்      கூடாது என்னும் கொள்கை படித்தவர்களிடையே பரவிற்று. சமயப் பற்றுக் காரணமாகத்       தோன்றிய இந்தக் கொள்கையினாலே, தமிழாசிரியர்கள் மாணவர்களுக்கு அந்த நூலைப்   பாடஞ் சொல்லாமல் விட்டனர். இதனால் அந்த, நூல்கள் மறக்கப்பட்டுக் கிடந்தன.      படிப்பாரற்றுக் கிடந்தமையால் அந்நூல்களின் பெயர்கூட மறக்கப் பட்டிருந்தன. சென்ற   19ஆம் நூற்றாண்டின் இறுதியில் கீழ்க்கணக்கு நூல்கள் எவை என்பது பற்றிப் படித்த        புலவர்களுக்குள்ளே ஐயங்களும் வாதப் பிரதி வாதங்களும் நடந்தன. கீழ்க்கணக்கு      நூல்கள் பதினெட்டின் பெயர்களைப் பற்றியதே அந்த ஆராய்ச்சி. அந்த ஆராய்ச்சி      ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகள் நடந்த பின்னர் ஓய்ந்தது. தமிழ் இலக்கிய வரலாற்றிலே இது ஒரு சுவையுள்ள கட்டம் (2012:229).

என்று கீழ்க்கணக்கு நூல்களின் ஆராய்ச்சி வரலாற்றை மயிலை சீனி.வேங்கடசாமி குறிப்பிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து பேராசிரியர் உரைக்குறிப்புகள் (தொல்.செய்.470, 547), மயிலைநாதரின் உரைக் குறிப்பு (நன்.387) ஆகியவற்றைக் கொண்டு கீழ்க்கணக்கு நூல்கள் பதினெட்டு என்பதை எண்ணிக்கையின் அடிப்படையில் நிறுவ முற்படுகின்றார். இதன் பின்னரே கீழ்க்கணக்கு நூல்களின் பெயர்களைக் கூறும் பழைய வெண்பாவைச் சான்றுகாட்டி இந்நூல்கள் குறித்த பெயர் விளக்கத்தைத் தருகின்றார்.

கீழ்க்கண்ட பழைய வெண்பா, கீழ்க்கணக்கு நூல்களின் பெயரைக் கூறுகின்றது.

நாலடி நான்மணி நானாற்ப தைந்திணைமுப்

பால்கடுகம் கோவை பழமொழி மாமூலம்

இன்னிலைசொல் காஞ்சியுடன் ஏலாதி யென்பவே

கைந்நிலைய வாங்கீழ்க் கணக்கு.

இந்தப் பழைய வெண்பாவில் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களின் சில பெயர்கள்        தெளிவாகத் தெரிகின்றன. சில பெயர்கள் துணித்துக் கூற முடியாதவையாக இருந்தன. நாலடி, நான்மணி(கடிகை), முப்பால், (திரி)கடுகம், (ஆசாரக்) கோவை, பழமொழி, சிறுபஞ்சமூலம், (முதுமொழிக்)காஞ்சி, ஏலாதி என்னும் நூற்பெயர்கள் தெளிவாகத் தெரிகின்றன. நானாற்பது, ஐந்திணை என்பன பற்றியும் இன்னிலை, கைந்நிலை என்பன      பற்றியும் சென்ற நூற்றாண்டிலே பலருக்கும் பலவித ஐயங்களை உண்டாக்கின. ஏன்? முப்பால், கோவை என்னும் பெயரிலுங்கூட ஐயம் நிகழ்ந்து வாதப் பிரதிவாதங்கள் நடந்தன.

இதற்குக் காரணம் இடைக்காலத்திலே இந்நூல்கள் சில தலைமுறையாகப் பயிலப்படாமல் போனதுதான் என்பதை முன்னரே கூறினோம்.

சென்ற நூற்றாண்டிலே நிகழ்ந்த பதினெண் கீழ்க்கணக்கு நூல்களின் பெயரைப் பற்றிய ஆராய்ச்சி இக்காலத்தவராகிய நமக்கு வியப்பாகவும் வேடிக்கையாகவும் தெரிகின்றது.      பதினெண் கீழ்க்கணக்கு நூல்களின் பெயரை அறிவதற்கே அக்காலத்தவர் எவ்வளவு முட்டுப்பட்டுத் துன்புற்றனர் என்பது அவர்கள் எழுதியவற்றிலிருந்து நமக்குத் தெரிகிறது.    சென்ற 19ஆம் நூற்றாண்டிலே வாழ்ந்து பல அரிய ஏட்டுச் சுவடிகளை அச்சுப் புத்தகமாகப் பதிப்பித்து வெளிப்படுத்திய பெரியார் சி.வை.தாமோதரம் பிள்ளையவர்கள் (2012:230,231).

கீழ்க்கணக்கு நூல்களைத் தொகுத்தளிக்கும் வெண்பாவின் மூலம் சில நூல்களின் பெயர்களைத் தெளிவாக அறிய முடிகின்றது. ஆனால் சில நூல்களைத் தொகுத்துச் சொல்லும் அடைமொழிகள் நூல்களின் பெயர்களைத் தெளிவாக அறிந்துகொள்ள முடியாததற்குக் காரணமாக அமைகின்றன என்பதை இவர்தம் கருத்துப் புலப்படுத்துகின்றது. இவை மட்டுமல்லாமல் குருகுலக் கல்வி முறையில் பயிற்றுவிக்கப்பட்ட நூல்களுள் கீழ்க்கணக்கு நூல்கள் இடம்பெறாமல் சில தலைமுறைகள் வரை புறக்கணிக்கப்பட்டிருந்ததையும் இவர்தம் கருத்து உறுதிப்படுத்துகின்றது. மேலும் கீழ்க்கணக்கு நூல்களின் பெயர்கள் குறித்த ஆய்வுகளைப் பார்க்கும்போது அது நமக்கு நகைப்பைக் கூட ஏற்படுத்தலாம். எனினும் கீழ்க்கணக்கு நூல்களின் பெயர்கள் குறித்த ஆய்வுகள் சுவையானவை. இவ்வாய்வு சி.வை.தா.வில் இருந்து தொடங்குகின்றது. அவரது கலித்தொகையின் பதிப்புரையில் (1887) கீழ்க்கணக்கின் நூல்கள் குறித்து விரிவான அளவில் எழுதியுள்ளார். சி.வை.தா.வின் கீழ்க்கணக்கு நூல்கள் குறித்த கருத்துகள் பலராலும் விரிவான அளவில் விவாதிக்கப்பட்டுள்ளன.

சி.வை.தா.வின் கலித்தொகை (1887), இலக்கண விளக்கம் (1889) ஆகிய இரு நூல்களில் முன்வைக்கப்பட்டுள்ள பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் குறித்த கருத்துகளை மயிலை சீனி.வேங்கடசாமி தொகுத்துத் தந்திருக்கின்றார். இக்கருத்துகள் 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் இன்னவை என்பதில் அறிஞர்களிடையே கருத்து வேறுபாடுகள் இருந்ததைத் தெளிவாக்குகின்றது. ஐந்திணை நூல்களைக் குறித்துச் சி.வை.தா., ஸ்ரீநிவாசராகவாசாரியார், த.கனகசுந்தரம் பிள்ளை உள்ளிட்ட அறிஞர்களின் கருத்துகளை மறுக்கும் விதத்தில் அமைந்த திருமணம் செல்வகேசவராய முதலியாரின் கருத்தையும் மயிலை சீனி.வேங்கடசாமி எடுத்து பதிவுசெய்கின்றார்.

ஐந்திணை என்றது திணைகளைப் பற்றிச் சொல்லும் ஐந்து நூல்கள். ஐந்திணை ஐம்பது முதலிய நான்கையும் போன்றது இன்னும் ஒன்று இருத்தல் வேண்டு என்ப ஒருதிறத்தர்.      இலக்கண விளக்க முடையார், ‘உரிப்பொரு  டோன்ற வொரைந்திணையும், தெரிப்பதைந்திணைச் செய்யுளாகும்’ என்றைந்திணைச் செய்யுளின் இலக்கணத்தைக்        கூறினாரல்லது, அவ்விலக்கணமுடைய நூல்களை இன்ன இத்துனைய என      வரையறுத்தாரில்லை. கீழ்க்கணக்கைப் பதினெட்டாகச் சரிவரக் காட்டுதற் பொருட்டு ஐந்திணைச் செய்யுட்கள் ஐந்தென்று கூறுவார்க்குப் பற்றுக் கோடாகின்ற ஆதாரம் இதுகாறும் ஒன்றுங் கிடைத்திலது (திருமணம் செல்வகேசவராய முதலியார்:1893:முகவுரை).

ஐந்திணை நூல்களின் பெயர்களைக் குறித்துச் சி.வை.தா., ஸ்ரீநிவாசராகவாசாரியார், த.கனகசுந்தரம் பிள்ளை ஆகியோர் குறிப்பிட்டுள்ளார். இவர்கள் ஐந்தாவது நூலாகக் கைந்நிலையைச் சுட்டிச் சென்றாலும் இந்நூல் கிடைக்காத நிலையில் அதை ஏற்றுக்கொள்ள முடியாது என்ற கருத்தைத் திருமணம் செல்வகேசவராய முதலியார் தனது ஆசாரக்கோவையின் பதிப்பில் முன்வைத்திருப்பதைப் பார்க்க முடிகின்றது. கீழ்க்கணக்கு நூல்கள் பயிலப்படாமல் இருந்ததற்கான காரணத்தைக் குறித்து மயிலை சீனி.வேங்கடசாமி முன்வைக்கும் கருத்து வருமாறு:

18,19ஆம் நூற்றாண்டுகளிலே சங்க நூல்களையும் வேறு சில நூல்களையும் பயிலக்      கூடாது என்னும் குறுகிய தவறான எண்ணம் இருந்த காரணத்தினாலே அந்நூல்கள்      பயிலப்படாமலும் அது காரணமாக அவை இன்னவை என்று அறியப் படாமலும் போயின.       அவற்றில் பதினெண்கீழ்க்கணக்கும் ஒன்று. நற்காலமாக வேம்பத்தூர் முத்து     வேங்கடசுப்ப பாரதியார் என்னும் புலவர் பதினெண்கீழ்கணக்கு நூல்களின் பெயரை ஒரு        செய்யுளில் கூறிவைத்தார். சென்ற 19ஆம் நூற்றாண்டிலே இருந்த அவர், 1849ஆம்     ஆண்டில் பிரபந்த தீபிகை என்னும் ஒரு நூல் இயற்றினார். அந்நூலின், பதினெண்        கீழ்க்கணக்கு நூல்கள் இன்னவை என்பதை செய்யுளில் அமைத்துப் பாடினார். அந்நூல்     அக்காலத்தில் அச்சிற் பதிப்பிக்கப்படாமையால் அக்காலத்திலிருந்து தாமோதரம் பிள்ளை   முதலிய அறிஞர்கள் அந்நூலை அறிய வாய்ப்பு ஏற்படவில்லை. ஆகவே, அவர்கள்        கீழ்க்கணக்கு நூல்கள் இன்னவை என்பதை உறுதியாக அறியாமல் மயங்கிப் பல        கருத்துகளை வெளியிட்டார்கள் (மயிலை சீனி.வேங்கடசாமி:2012:235).

பிரபந்த தீபிகை நூல் எழுதப்பட்ட காலத்திலோ அல்லது பிறகோ அச்சிடப்பட்டு வெளிவந்திருப்பின் பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் எவை என்பது போன்ற குழப்பங்கள் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை. காலம் கடந்து 20ஆம் நூற்றாண்டில் இந்நூல் பதிப்பிக்கப்பட்டதால் அதற்கு முன்னரே இவ்விவாதங்கள் ஏற்பட்டு மிகப் பெரிய அதிர்வலைகளை உண்டாக்கியிருக்கின்றன. பிரபந்த தீபிகை செய்யுளினால் பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் இன்னவை என்பதைத் தெளிவாக அறியலாம். செய்யுளில் கூறப்பட்டுள்ள பதினெட்டு நூல்களின் பெயர்கள் பின்வருமாறு: 1.நாலடியார், 2.நான்மணிக்கடிகை, 3.இன்னா நாற்பது, 4.இனியவை நாற்பது, 5.கார்நாற்பது, 6.களவழி நாற்பது, 7.ஐந்திணை ஐம்பது, 8.ஐந்திணை எழுபது, 9.திணை மாலை நூற்றைம்பது, 10.திணைமொழி ஐம்பது, 11.முப்பால், 12.திரிகடுகம், 13.ஆசாரக்கோவை, 14.பழமொழி நானூறு, 15.சிறு பஞ்சமூலம், 16.முதுமொழிக் காஞ்சி, 17.ஏலாதி, 18.கைந்நிலை.

முத்துவேங்கட சுப்பபாரதியாரின் பிரபந்த தீபிகையின் செய்யுளில் கீழ்க்கணக்கின் பதினெட்டு நூல்களின் பெயர்களையும் வரிசைப்படுத்திக் காட்டியுள்ளார். இப்பதினெட்டு நூல்களுள் கைந்நிலையும் ஒன்று என்று சான்றுகளோடு நிறுவுகின்றார் மயிலை சீனி.வேங்கடசாமி.

த.கனகசுந்தரம் பிள்ளை, சி.வை.தா. ஆகியோரின் கருத்துகளும் இ.வை.அனந்தராமையரின் கைந்நிலையின் பதிப்பும் (1931) கீழ்க்கணக்கைச் சார்ந்த பதினெட்டாவது நூல் கைந்நிலைதான் என்பதை உறுதிப்படுத்துகின்றன. இ.வை.அனந்தராமையர் 1931இல் கைந்நிலையினைப் பதிப்பிதற்கு முன்னர்க் கைந்நிலையின் சுவடிகள் த.கனகசுந்தரம் பிள்ளை, சி.வை.தா. ஆகிய இருவருக்கும் கிடைக்கவில்லை. த.கனகசுந்தரம் பிள்ளை தனக்குக் கிடைத்த பழைய ஏட்டுப் பிரதியில் பதினெண்கீழ்க்கணக்கைச் சார்ந்த நூல் கைந்நிலை என்று குறிப்பிடப்பட்டிருந்ததைக் கொண்டு கீழ்க்கணக்கைச் சார்ந்த நூல் கைந்நிலை என்று எழுதிச் சென்றுள்ளார். இக்கருத்தைச் சி.வை.தா.வும் தனது பதிப்புகளில் எடுத்துக்காட்டியிருக்கின்றார். இது மட்டுமல்லாமல் 19ஆம் நூற்றாண்டின் இறுதி வரை இந்நூல் கிடைக்காததால் திருமணம் செல்வகேசவராய முதலியாரும் இந்நூலை ஏற்றுக்கொள்ளவில்லை என்ற செய்தியையும் மயிலை சீனி.வேங்கடசாமி இணைத்துக் காட்டுகின்றார்.

இவ்வாறு சி.வை.தா. தொடங்கி திருமணம் செல்வகேசவராய முதலியார் வரையிலான பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் குறித்த கருத்துகளைத் தொகுத்து மயிலை சீனி.வேங்கடசாமி மதிப்பிட்டுள்ளார்.

கைந்நிலையின் பதிப்பைத் தமிழறிஞர்கள் பலரும் ஏற்றுக்கொண்டதைக் குறித்த மயிலை சீனி.வேங்கடசாமியின் கருத்து வருமாறு:

கைந்நிலை என்னும் கீழ்க்கணக்கு நூலின் ஏட்டுப் பிரதி 19ஆம் நூற்றாண்டின் இறுதிவரையிலும் கிடைக்கவில்லை. ஆகவே, அச்சிடப்படவில்லை. பிறகு, இந்த 20 ஆம்       நூற்றாண்டிலே 1931 ஆம் ஆண்டிலே கைந்நிலை ஏட்டுப் பிரதி கிடைத்து அச்சிடப்பட்டது. அதன் ஏட்டுப் பிரதியைப் பெற்று அச்சிட்டவர் திரு.அநந்தராமையரவர்கள். இது       வெளிவந்த பிறகு, கீழ்க்கணக்கைச் சேர்ந்த பழையநூல் இது என்பது உறுதியாயிற்று. பின்னர் 1936ஆம் ஆண்டில் வ.உ.சிதம்பரம்பிள்ளையவர்களும், எஸ்.வையாபுரிப்பிள்ளையவர்களும் சேர்ந்து பதிப்பித்த தொல்காப்பியம் பொருளதிகாரம் இளம்பூரணர் உரையிலே கைந்நிலைச் செய்யுட்கள் நான்கு இடங்களில் மேற்கொள்ள      காட்டப்பட்டுள்ளதைக் காண முடிந்தது. எனவே, கைந்நிலை பதினெண் கீழ்க்கணக்கு நூலைச் சேர்ந்தது என்பதும் அதன் செய்யுட்களை இளம்பூரண அடிகள் என்னும் உரையாசிரியரும் தமது உரையில் மேற்கோள் காட்டியுள்ளார் என்பதும் தெரியலாயின. கைந்நிலை அகப்பொருள் இலக்கிய நூல் (2012: 236,237).

பதினெண்கீழ்க்கணக்கைச் சார்ந்த 18ஆவது நூல் கைந்நிலை என்பதை இ.வை.அனந்தராமையரின் பதிப்பு உறுதிப்படுத்தியது. இளம்பூரணரின் தொல்காப்பியப் பொருளதிகார உரையில் கைந்நிலையின் பாடல்கள் மேற்கோள்காட்டப்பட்டுள்ளன. இதன்மூலம் இக்கருத்து மேலும் தெளிவுபடுத்தப்பட்டது. இன்னிலையினைப் பதிப்பித்த வ.உ.சி.யின் தொல்காப்பியப் பதிப்பே இதற்கு ஆதாரமாய்த் திகழ்கின்றது. இத்தகைய தெளிவான முடிவுகள் கிடைக்கப்பெறுவதற்கு முன்னும் பின்னும் கீழ்க்கணக்கைச் சார்ந்த பதினெட்டாவது நூல் இன்னிலைதான் என்பதை வலியுறுத்திப் பேசும் போக்கு தமிழ்ச் சூழலில் இருந்துள்ளது. அவற்றைக் குறித்த மயிலை சீனி.வேங்கடசாமியின் பதிவும் இங்குக் குறிப்பிடத்தக்கது.

(இன்னிலை) இப்பெயரையுடை நூல் ஒன்று அண்மைக்காலத்தில் வெளிவந்துள்ளது. இது       கீழ்க்கணக்கு நூல்கள் பதினெட்டில் ஒன்று என்று தவறாகக் கருதப்பட்டது. பிறகு, இது      கீழ்க்கணக்கைச் சேர்ந்த நூலன்று  என்றும் போலி நூலென்றும் அறியப்பட்டது. இன்றும் சிலர் இதனைக் கீழ்க்கணக்கு நூல் என்று உண்மையறியாமல் நம்புகின்றார்கள். ஆகவே,       இந்நூலைப் பற்றிய வரலாற்றைக் கூற வேண்டுவது முறையாகும் (2012:237).

என்று குறிப்பிடும் மயிலை சீனி.வேங்கடசாமி இன்னிலையைக் கீழ்க்கணக்கைச் சார்ந்ததாகக் கட்டமைக்க முயன்ற தரவுகளைக் குறித்துத் தனது விமர்சனப் பார்வையை முன்வைத்துள்ளார். இக்கருத்துகள் பெரும்பான்மையும் ச.வையாபுரிப்பிள்ளை திரிகடுகமும் சிறுபஞ்சமூலம் (1944) நூலின் முன்னுரை பகுதியில் குறிப்பிட்டுள்ள கருத்துகளோடு பெரிதும் ஒத்துச் செல்கின்றன. ச.வையாபுரிப்பிள்ளையின் கருத்தில் இடம்பெறாத நுட்பமான சில செய்திகள் மட்டும் இங்குப் பதிவு செய்யப்படுகின்றது. இதற்குக் காரணம் ச.வையாபுரிப்பிள்ளையின் கருத்துகள் இந்நூலின் இரண்டாம் பகுதியில் பெருமளவில் பதிவு செய்யப்பட்டு, விவாதிக்கப்பட்டுள்ளது. மயிலை சீனி. வேங்கடசாமியின் கருத்துகள் இங்குச் சுருக்கமாக முன்வைக்கப்படுகின்றன.

நாலடி நான்மணி’ எனத் தொடங்கும் வெண்பாவை எடுத்துக்காட்டி கலித்தொகையின் பதிப்புரையில் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களைக் குறிப்பிட்டுள்ளார் சி.வை.தா. இங்கு முதுமொழிக்காஞ்சிக்கு அடையாகிய இன்னிலை சொல் என்பதை இன்னிலை, இன்சொல் என்னும் பெயர்களில் உள்ள 2 நூல்கள் என்று கருதியுள்ளார்.

கைந்நிலை கீழ்க்கணக்கைச் சார்ந்த ஒரு நூல் என்று த.கனகசுந்தரம் பிள்ளை அறிவித்த பிறகு சி.வை.தா.வும் தனக்குக் கிடைத்த ஏட்டுச் சுவடியைக் கொண்டு அவர் கருத்தை உறுதிப்படுத்தினார். அவற்றோடு 1889இல் இவர் பதிப்பித்த இலக்கணவிளக்கப் பதிப்புரையிலும் இக்கருத்தை வலியுறுத்தியுள்ளார்.

 • பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் பதினேழு நூல்களின் பெயர்கள் இவை என்று ஐயமில்லாமல் தெரிந்தது. 19ஆம் நூற்றாண்டின் இறுதி வரை பதினெட்டாவது நூலைப் பற்றிய கருத்து வேற்றுமை தொடர்ந்து கொண்டே வந்தது.
 • இருபதாம் நூற்றாண்டில்தான் கைந்நிலை, இன்னிலையின் ஏட்டுச் சுவடிகள் கிடைத்தன.
 • 1915இல் இன்னிலையும், 1931இல் கைந்நிலையும் பதிப்பிக்கப்பட்டன. இன்னிலை சுவடியைத் த.மு.சொர்ணம் பிள்ளை தேடி எடுத்து வ.உ.சியிடம் கொடுத்து அச்சிற் பதிப்பித்தார். கைந்நிலையின் ஏட்டுச் சுவடியினை இ.வை.அனந்தராமையர் தேடி எடுத்துப் பதிப்பித்தார்.
 • இன்னிலையின் 40 வெண்பாக்களையும் அறப்பால், பொருட்பால், இன்பப்பால், வீட்டுப்பால் என நான்காகப் பகுத்து வ.உ.சி. பதிப்பித்தார்.
 • சுவடியில் ‘பொய்கையார் இன்னிலை’ என்றும், கடவுள் வாழ்த்துப் பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
 • இன்னிலையின் ஏட்டுச் சுவடியைப் பாதுகாத்து வந்த திருமேனி காரி இரத்தினக் கவிராயாரின் பரம்பரையிடம் இருந்து ஏட்டினைத் த.மு.சொர்ணம் பிள்ளை பதிப்பிக்கத் தன்னிடம் கொடுத்ததாக வ.உ.சி. ஏடு பெற்ற வரலாற்றை விரித்து எழுதியுள்ளார்.
 • இன்னிலையின் பொய்கையார் கடைச்சங்கப் புலவர்களுள் ஒருவர் என்று கூறும் வகையிலான சான்றுகளைப் பதிப்பாசிரியரும் உரையாசிரியருமான வ.உ.சி. எழுதிச் சென்றுள்ளார்.

மேற்சுட்டிய சான்றுகளை முன்வைத்து வரலாற்றுக் குறிப்புகளோடு ஒப்பிட்டு ஆராய்ந்துப் பார்த்தால், இன்னிலை நூல் ஒரு போலி நூல் என்பது தெளிவாகத் தெரிகின்றது என்கிறார் மயிலை சீனி.வேங்கடசாமி. மேலும் இன்னிலையின் தொகுப்பையும் கீழ்க்கணக்கு நூல்களின் தொகுப்பு வரலாற்றையும் ஆராய்ந்து பார்க்கும்போதும் இன்னிலை ஒரு பொய்ந்நூல் என்று தெரிகின்றது.

கீழ்க்கணக்கு நூல்களின் தொகுப்புக் குறித்தும், கடைச்சங்க காலத்தில் தோன்றியனவாகக் கூறும் கர்ணபரம்பரைச் செய்திகளும் ஏதும் இல்லை என்ற மயிலை சீனி.வேங்கடசாமியின் கருத்து வருமாறு:

கீழ்க்கணக்கு நூலைப் பதினெட்டாகத் தொகுத்தளித்தவர் யார் என்பது ஒருவருக்கும்    தெரியாது. அதுபற்றிக் கர்ணபரம்பரையாகவோ நூல் மூலமாகவோ யாதொரு செய்தியும்    கிடையாது. ஆனால், கடைச்சங்கப் புலவரான மதுரையாசிரியர் கீழ்க்கணக்கு நூல்களைத்    தொகுத்ததாக இன்னிலைப் பதிப்பாசிரியர் கூறுகிறார். கீழ்க்கணக்கு நூல்கள் பதினெட்டும்     கடைச்சங்க காலத்துக்கு முன்பு இயற்றப்பட்டவை அல்ல.கி.பி. முதல் நூற்றாண்டு    தொடங்கி கி.பி.8ஆம் நூற்றாண்டு வரையில் வெவ்வேறு காலத்தில் வெவ்வேறு       புலவர்களால் இயற்றப் பட்டவை கீழ்க்கணக்கு நூல்கள். நாலடி நானூறு கி.பி.8ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்டது. முப்பால் என்னும் திருக்குறள் கி.மு.முதல் நூற்றாண்டில் அல்லது கி.பி.முதல் நூற்றாண்டில் இயற்றப்பட்டது. எனவே, கீழ்க்கணக்கு நூல்கள்   கி.பி.8ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு தொகுக்கப்பட்டிருத்தல் வேண்டும். கடைச்சங்க        காலத்தில் (கி.பி. இரண்டாம் நூற்றாண்டில்) தொகுக்கப்பட்டிருத்தல் முடியாது. ஆனால்,      இன்னிலை பதிப்பாசிரியர் கடைச்சங்கப் புலவரான மதுரையாசிரியர் கீழ்க்கணக்கு   நூல்களைத் தொகுத்ததாக இன்னிலை ஏட்டுச் சுவடி கூறுகிறதென்று எழுதுகிறார்.    இதனைப் பகுத்தறிவுள்ளார் எவ்வாறு ஏற்றுக்கொள்ளமுடியும்? (2012:239)

கீழ்க்கணக்கின் பதினெட்டு நூல்களுள் திருக்குறளைத் தவிர பிற நூல்கள் அனைத்தும் கடைச்சங்க காலத்திற்குப் பிறகே தொகுக்கப்பட்டுள்ளன. கடைச்சங்க காலத்திலேயே இந்நூல்கள் தொகுக்கப்படவில்லை என்பதைத் தொல்காப்பியச் செய்யுளியியலின் பேராசிரியர் உரையைக் கொண்டு மயிலை சீனி.வேங்கடசாமி தெளிவுபடுத்த முயலுகின்றார். பேராசிரியர் செய்யுளியலின் 159ஆம் நூற்பாவிற்கான உரையில் பதினெண்கீழ்க்கணக்கின் ஆசிரியர்களைப் பிற்சான்றோர் என்று குறிப்பிடுகின்றார். இதன் மூலம் கீழ்க்கணக்கின் நூல்கள் கடைச்சங்க காலத்திற்குப் பின் தொகுக்கப்பட்டவை என்பது தெளிவுபெறுகின்றது. இக்கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு வ.உ.சி.யின் இன்னிலை நூல் குறித்த சில கருத்துகளையும் மயிலை சீனி.வேங்கடசாமி மறுக்கின்றார். இவரின் கருத்துகளைப் பின்வருமாறு தொகுத்துரைக்கலாம்.

 • கீழ்க்கணக்கு நூல்கள் பிற்காலத்தவை என்னும்போது அதில் ஒன்றாக வ.உ.சி. முன்வைக்கும் இன்னிலையை எப்படி முற்காலத்தைச் சார்ந்த புலவர் (கடைச்சங்கப் புலவர்) தொகுத்திருக்க முடியும்.
 • பிற்காலத்துச் சான்றோர் இயற்றிய நூல்களை முற்காலத்துச் சான்றோர் ஒருவர் தொகுத்தார் என்று கூறுவதும் பொருந்தாது. எனவே, இன்னிலை ஏட்டுச் சுவடியில் எழுதப்பட்டதாகக் கூறப்படுகிற, கீழ்க்கணக்கு நூல்களை மதுரையாசிரியர் என்னும் கடைச்சங்ககாலத்துப் புலவர் தொகுத்தார் என்னும் வ.உ.சி.யின் கூற்றுப் போலி என்பதும் தெளிவாகின்றது.
 • இன்னிலைக்குப் பாரதம் பாடிய பெருந்தேவனார் கடவுள் வாழ்த்துப் பாடினார் என்பதும் போலிக் கூற்று.
 • கீழ்க்கணக்கு நூல்கள் சிலவற்றிற்கு அந்தந்த நூலாசிரியர்களே கடவுள் வாழ்த்துப் பாடியிருக்கின்றனர். சில கீழ்க்கணக்கு நூல்களுக்குக் கடவுள் வாழ்த்துப் பாடல் இல்லை. ஆனால் கீழ்க்கணக்கு நூல்கள் எவற்றிற்கும் பாரதம் பாடிய பெருந்தேவனார் கடவுள் வாழ்த்துப் பாடவில்லை.
 • இன்னிலை நூலுக்கு மட்டும் பாரதம் பாடிய பெருந்தேவனார் கடவுள் வாழ்த்துப் பாடினார் என்று கூறப்படுகிறது; இது உண்மையில்லை.
 • இன்னிலை, கீழ்க்கணக்கு நூல்கள் பதினெட்டில் ஒன்றாக இருந்தால், இதற்கு மட்டும் பாரதம் பாடிய பெருந்தேவனார் ஏன் கடவுள் வாழ்த்துப் பாடவேண்டும்? ஏனைய பதினேழு நூல்களுக்கு ஏன் கடவுள் வாழ்த்து இவர் பாடவில்லை என்ற கேள்வி எழுவது இயல்பு.
 • தொகைநூல்கள் பதினெட்டில் பதினேழு நூல்களுக்குக் கடவுள் வாழ்த்தைப் பாடாமல் ஒரு நூலுக்கு மட்டும் பெருந்தேவனார் ஏன் பாடினார்? இல்லை கீழ்க்கணக்குத் தொகை நூல்கள் பதினெட்டுக்கும் சேர்த்து இக்கடவுள் வாழ்த்தைப் பாடினார் என்றால் அது பொருந்தாது. காரணம், ஏனைய கீழ்க்கணக்கு ஏட்டுச்சுவடிகள் ஒவ்வொன்றிலும் இந்தக் கடவுள் வாழ்த்துச் செய்யுள் இருக்க வேண்டும். அந்நூல்களில் பாரதம் பாடிய பெருந்தேவனாரின் கடவுள் வாழ்த்துப் பாடல் காணப்படாமல், இந்த இன்னிலை ஏட்டுச் சுவடியில் மட்டும் கடவுள் வாழ்த்துப் பாடினார் என்றால், இதனைப் பகுத்தறிவுள்ளவர்கள் யாரும் ஒப்புக் கொள்ளமாட்டார் என்று மயிலை சீனி.வேங்கடசாமி மறுக்கின்றார்.
 • இன்னிலைப் பதிப்பாசிரியர் வ.உ.சி. முன்னுரையிலும் ஆசிரியரைப் பற்றிக் கூறிய இடத்திலும், இன்னிலை கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றென்று கூறியது ஏற்கத்தக்கதன்று என்பதை மறுத்து தனது கருத்தை மீண்டும் வலியுறுத்துகின்றார் மயிலை சீனி.வேங்கடசாமி.
 • இளம்பூரணர் தமது தொல்காப்பியப் பொருளதிகாரத்தின் உரையில் இன்னிலையின் பாடல்களை மேற்கோள் காட்டியுள்ளதாக வ.உ.சி கூறுகின்றார் (கள.நூ.23, கற்.நூ.5, 12). இவ்விடங்களைத் தாம் பல பல முறை தேடிப் பார்த்தவிடத்து இன்னிலை என்ற ஒரு நூலின் பாடல்கள் அவ்விடத்தில் மேற்கோள்காட்டப்படவில்லை என்பது தெளிவாகின்றது. இக்கருத்தைச் ச.வையாபுரிப்பிள்ளையும் மறுத்து முன்னரே எழுதியுள்ளார் என்பதும் இங்கு இணைத்து நோக்குதற்குரியது.
 • இன்னிலையின் பாடல்களை இளம்பூரணர் தமது தொல்காப்பிய உரையில் மேற்கோள் காட்டியுள்ளார் என்று வ.உ.சிதம்பரம் பிள்ளை முகவுரையில் எழுதியிருப்பது தவறானது; உண்மைக்கு மாறானது என்பதும் புலப்படுகின்றது.
 • 1930இல் வ.உ.சி., எஸ்.வையாபுரிப்பிள்ளையுடன் சேர்ந்து தொல்காப்பியம், பொருளதிகாரம், இளம்பூரணர் உரை முழுவதையும் பதிப்பித்திருக்கிறார். இதில் முன்னர்தான் கொண்ட கருத்தைத் தவறு என்று நேரடியாய் ஒப்புக் கொள்ளாமல் மறைமுகமாக ஒத்துக்கொண்டுள்ளார்.

தொல்காப்பியம், பொருளதிகாரம், இளம்பூரணர் உரைப் பதிப்பில் இடம்பெற்ற வ.உ.சிதம்பரம் பிள்ளையின் கருத்து:

தமிழ்நாடு முழுவதிலும் பொருளதிகார இளம்பூரணருரை முற்றுமடங்கிய பிரதி ஒன்றேயுள்ளது. இப்போது அங்கங்கே ஒரு சிலரிடத்துள்ள பிரதிகளனைத்தும் இவ்வேட்டுப்    பிரதியைப் பார்த்தெழுதிக் கொண்ட கடிதப் பிரதிகளேயாகும். இக்கடிதப் பிரதிகள்   சிலவற்றில் ஒரு சிலவிடங்களில் ஏட்டுப் பிரதியிற் காணப்பெறாத விஷயங்கள் ஆதாரமின்றி நுழைத்தெழுதப்பட்டன. அவ்வாறு நுழைத்தெழுதியவற்றையெல்லாம் களைந்து ஏட்டுப் பிரதியிலுள்ளவாறே இப்பதிப்பு எனது நண்பர் வையாபுரிப்பிள்ளையவர்களாற் சித்தஞ் செய்யப்பட்டுள்ளது (வ.உ.சிதம்பரம் பிள்ளை, ச.வையாபுரிப்பிள்ளை:1936:முகவுரை).

இவ்வாறு 1936இல் வ.உ.சி. இளம்பூரணர் உரைப்பதிப்பில், இன்னிலை நூல் முன்னுரையில் எழுதிய கருத்துகள் ‘ஆதாரமின்றி நுழைத்தெழுதப்பட்டன’ என்ற வெளிப்படையாகக் கூறாமல் மறைமுகமாக ஒப்புக் கொள்கிறார்.

வ.உ.சி. பேராசிரியர், நச்சினார்க்கினியர், யாப்பருங்கல விருத்தியுரை ஆகியவற்றில் இன்னிலையின் செய்யுட்கள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன என்று குறிப்பிட்டுள்ளார். இக்கருத்தும் ஆதாரமின்றி நுழைத்தெழுதப்பட்ட உண்மைக்கு மாறானது என்று மயிலை சீனி.வேங்கடசாமி சுட்டுகின்றார். இது பற்றி எஸ்.வையாபுரிப்பிள்ளை கூறியிருப்பதும் இங்கு இணைத்துக் கருதத்தக்கது.

இச்சான்றுகள் மூலம் இன்னிலை என்னும் நூல் கீழ்க்கணக்கு நூலைச் சார்ந்தது அன்று என்பதும், அது ஒருபோலி நூல் என்பதும் தெளிவாகத் தெரிகின்றன. இ.வை.அனந்தராமையர் 1931ஆம் ஆண்டு கைந்நிலையைப் பதிப்பித்து வெளியிட்ட பிறகு, இன்னிலை போலிநூல் என்பது மேலும் தெளிவாகிவிட்டது என்று மயிலை சீனி.வேங்கடசாமி குறிப்பிட்டுள்ளார்.

 • ··

சோமசுந்தர தேசிகர் ‘பதினெண்கீழ்க்கணக்கு’ என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றைச் செந்தமிழ் இதழில் எழுதியுள்ளார். இதில் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் எவையென்பதைப் பற்றிப் பேசுகின்றார்.

பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் எவையென்பதே ஈண்டு ஆராயப் புகுந்ததாம்.   எற்றுக்கெனின், பலர் பலவாறு கூறுகின்றார்களாகலின் அந்நூல்கள் தாம் யாவையென   அறிதியிட வேண்டியதற்கென்க (1926:117).

என்று இலக்கண விளக்க ஆசிரியர் பரம்பரையைச் சேர்ந்த திருவாரூர் சோமசுந்தர தேசிகர் தனது கருத்தை முன்னிறுத்துகிறார். மேலும் இவர் சி.வை.தாமோதரம் பிள்ளை, கொ.சீனிவாசராக வாசாரியார், ஸ்ரீ த.கனசுந்தரம் பிள்ளை, திருமணம் செல்வகேசவராய முதலியார், சிவபாதம், வ.உ.சிதம்பரம் பிள்ளை, தி.நா.சுப்பிரமணிய ஐயர், ஞா.ச.துரைசாமிப் பிள்ளை ஆகியோரின் பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் குறித்த கருத்துகளையும் தொகுத்துத் தருகிறார். இவற்றோடு இக்கருத்துகளில் உள்ள உண்மைகளையும் ஆராய்ந்து உரைக்கின்றார். இவரது கருத்துகளைப் பின்வரும் நிலைகளில் தொகுத்து நோக்கலாம்.

 • சி.வை.தாமோதரம் பிள்ளை கலித்தொகை, இலக்கண விளக்கப் பதிப்புரைகளில் பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் இவை என்பது குறித்துப் பேசுகின்றார். அதன்பிறகு இந்நூல்களைப் பற்றி எக்கருத்தையும் அவர் தனது பதிப்புகளில் குறிப்பிடவில்லை.
 • திருமணம் செல்வகேசவராய முதலியார் மூன்று முறை ஆசாரக்கோவையினைப் (1893, 1898, 1916) பதிப்பித்துள்ளார். இவர் வெளியிட்ட 1916ஆம் பதிப்பில் பதினெண்கீழ்க்கணக்கு விளக்கம் என்ற தலைப்பின் கீழ்த் தொல்காப்பிய உரையாசிரியரான பேராசிரியரின் வனப்பு பற்றிய விளக்கத்தினை எடுத்துக்காட்டுகிறார். அதன்வழிப் பதினெண் கீழ்க்கணக்கின் பொருண்மை, அடிவரையறை ஆகிய கருத்துகளைப் பேராசிரியர் எடுத்துக்காட்டுகிறார். இவர் பதினெட்டு நூல்களின் பெயர்களைத் தரவில்லை. திருமணம் செல்வகேசவராய முதலியார் கீழ்க்கணக்கின் பதினெட்டு நூல்களையும் பட்டியலிடும்போது திருக்குறளை முப்பால் என்றும், பதினெட்டு நூல்களுள் ஒன்று இன்னிலை என்றும் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அவர் வெளியிட்ட 1893, 1898 ஆகிய பதிப்புகளில் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் 17 நூல்களை மட்டும் பட்டியலிட்டுள்ளார். இவற்றில் கைந்நிலையோ, இன்னிலையோ இடம்பெறவில்லை என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.

1916ஆம் செந்தமிழ் 15ஆம் தொகுதியில் (பக்.227 – 232) பதினெண்கீழ்க்கணக்கு நூல்களைப் பற்றி எழுதிய சிவபாதம்  ஐந்திணை நூல்களுள் ஒன்றாகத் ‘திணைமாலை’ என்ற பெயரிலான நூலைக் குறிப்பிடுகின்றார். மேலும் இவர் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களைச் சுட்டும் பழம்பாடலின் ஈற்றடியில் உள்ள பாட வேறுபாடுகளைக் கொண்டு பலரும் பலவாறாகக் கீழ்க்கணக்கு நூல்களைக் குறித்துக் கருத்து தெரிவித்துள்ளனர் என்று குறிப்பிட்டுச் செல்கின்றார்.

 • வ.உ.சிதம்பரம் பிள்ளை (1917 – 1918) ஆம் ஆண்டில் வெளியிட்ட இன்னிலையின் முகவுரையில் 18 நூல்கள் எவை என்பதைக் குறிக்கையில் பதினெட்டாவது நூலாக இன்னிலையைக் கூறியுள்ளார். கீழ்க்கணக்கு நூல்கள் எவை என்பதைக் கூறும் வெண்பாவை அடிப்படையாகக் கொண்டுதான் இன்னிலை என்ற நூலைக் குறிப்பிட்டதற்கான காரணத்தை முன்வைத்துள்ளார். கைந்நிலையை ஏற்காததற்கான காரணங்களையும் சிதம்பரம் பிள்ளை பதிவுசெய்துள்ளார்.
 • ஞா.ச.துரைசாமிப் பிள்ளை ‘தமிழ் இலக்கியம் – சங்க காலம்’ என்னும் நூலில் பதினெண்கீழ்க்கணக்கு என்ற தலைப்பின்கீழ்க் கடைச்சங்க காலத்தில் அரங்கேறிய நூல்களாகப் பதினெண்கீழ்க்கணக்கைச் சுட்டுகின்றார். மேலும் கணக்கு என்ற சொல் மேல்கணக்கு, கீழ்க்கணக்கு என்னும் பொருளைத் தரும் என்ற பன்னிருபாட்டியலின் நூற்பாக்களையும், நாலடி … கீழ்க்கணக்கு என்னும் வெண்பாவில் உள்ள பாடவேறுபாடுகளையும் எடுத்துத் தருகின்றார். இவற்றோடு அனைவராலும் ஒப்புக் கொள்ளப்பட்ட கீழ்க்கணக்கைச் சார்ந்த நூல்கள் 12 என்று பட்டியலிட்டுள்ளார் (நாலடி, 2.நான்மணிக்கடிகை, 3.இனியவை நாற்பது, 4.இன்னா நாற்பது, 5.கார்நாற்பது, 6.களவழி நாற்பது, 7.திரிகடுகம், 8.ஆசாரக்கோவை, 9.பழமொழி, 10.சிறுபஞ்சமூலம், 11.முதுமொழிக் காஞ்சி, 12.ஏலாதி). பின்னர் ஏனைய ஆறு நூல்களைப் பற்றிப் பல்வேறு விதமாகக் கருத்துகள் உள்ளன என்று குறிப்பிட்டுவிட்டுச் செல்கின்றார்.

மேற்சுட்டிய கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு பின்வரும் முடிவுகளைப் பெறமுடிகின்றது என்று சோமசுந்தர தேசிகர் பதிவு செய்கின்றார்.

 • சி.வை.தாமோதரம் பிள்ளையின் கலித்தொகை பதிப்புரை படி நாலடி, 2.நான்மணிக்கடிகை, 3.இனியவை நாற்பது, 4.இன்னா நாற்பது, 5.கார்நாற்பது, 6.களவழி நாற்பது, 7.திரிகடுகம், 8.ஆசாரக்கோவை, 9.பழமொழி, 10.சிறுபஞ்சமூலம், 11.முதுமொழிக்காஞ்சி, 12.ஏலாதி ஆகிய நூல்களோடு 13.ஐந்திணை, 14, 15, 16.மூன்று சிறுதரும நூல்கள், 17.இன்னிலை, 18.இன்சொல் என்னும் ஆறு நூல்களைச் சேர்க்க 18 நூல்கள்.
 • நால்நாற்பது போல் ஐந்திணை என்பதற்குத் திணைப் பொருளைக் குறிக்கும் 5 நூல்கள் என்றும் முப்பால் திருக்குறள் என்றும் மற்றொரு சாரார் கருத்து உரைக்கின்றனர். இதற்குரிய தக்கச் சான்றுகளையும் அவர்கள் முன்வைத்துள்ளனர். இதன்படி மேற்கூறிய 12 நூல்களோடு ஐந்திணையைம்பது, 14.திணமாலை நூற்றைம்பது, 15.திணைமொழியைம்பது, 16.ஐந்திணையெழுபது, 17.திணைமாலை, 18.திருக்குறள் என்னும் ஆறு நூல்களைச் சேர்க்க 18 நூல்கள்.
 • ‘நானாற்பது தைந்திணை’ என்பதை நாற்பதோடு மட்டுமன்றி ஐந்திணையோடும் சேர்த்து பொருள் கொள்ளும் மரபு ஒன்று உண்டு. இதன்படி மேற்கூறிய 12 நூல்களோடு நான்கு ஐந்திணையாவன: ஐந்திணையைம்பது, 14.ஐந்திணை யெழுபது, 15.திணைமாலை நூற்றைம்பது, 16.திணை மொழியைம்பது என்பன. 17.முப்பாலாகிய திருக்குறள், 18.இன்னிலை ஆகியன பதினெட்டு நூல்களாகும்.

இதுவே பதினெண்கீழ்க்கணக்கு நூல்களைப் பற்றிப் பலரும் கொண்டிருக்கக் கூடிய கருத்துகளாகும்.

சோமசுந்தர தேசிகர் இக்கட்டுரையில் சி.வை.தா., திருமணம் செல்வகேசவராய முதலியார், சிவபாதம், வ.உ.சிதம்பரம் பிள்ளை, ஞா.ச.துரைசாமிப் பிள்ளை ஆகியோரின் கொள்ளை படி பதினெட்டு நூல்களையும் தனித்தனியே அவரவர் கொண்ட கருத்துப்படி அட்டவணைப்படுத்தியுள்ளார். இதில் 18ஆவது நூல் எது என்ற முடிவில் மூன்று கருத்துகள் முன்னிறுத்தப்பட்டுள்ளன. சி.வை.தா. கைந்நிலையையும், திருமணம் செல்வகேசவராயர், வ.உ.சிதம்பரம் பிள்ளை, ஞா.ச.துரைசாமிப் பிள்ளை ஆகியோர் இன்னிலையையும், சிவபாதம் திணைமாலையையும் குறிப்பிட்டுள்ளனர். இவற்றில் சி.வை.தா.வின் இலக்கண விளக்கப்பதிப்புரையினை முழுமையாகப் பார்க்காத ஞா.ச.துரைசாமிப்பிள்ளை சி.வை.தா. கொண்ட பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் வேறெனக் காட்டியுள்ளார்.

பதினெண்கீழ்க்கணக்கு நூல்களின் காலத்தைப் பற்றிய சில கருத்துகளையும் சோமசுந்தர தேசிகர் தொகுத்துத் தருகின்றார். குறிப்பாகக் கீழ்க்கணக்கு நூல்கள் கடைச்சங்க காலத்தைச் சேர்ந்தது என்ற கருத்து பொதுவாக முன்வைக்கப்படுகின்றது. இதில் திருக்குறள் கடைச்சங்க காலத்திற்கு முற்பட்டது. நாலடி, களவழி நாற்பது போன்ற நூல்கள் கடைச்சங்க காலத்திற்குப் பிற்பட்டன என்று இந்நூல்களின் காலத்தைப் பற்றிய கருத்துகளை எடுத்துக்காட்டுகிறார். இறுதியாய்ப் பின்வரும் கருத்தைத் தருகின்றார்.

நாலடியைப் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களினின்று நீக்குவோமாயின், பதினெட்டு நூல்கள் தாம் யாவை யென்ற தடை யுண்டாகும். நானாற்பது என்பது நாற்பது பாக்களையுடைய நான்குநூல்களைக் கூறுவதுபோன்று ஐந்திணையென்பதற்கும் திணைகளைப்பற்றிக் கூறும் ஐந்துநூல்களென்றே கொள்ளுதல் சால அமைவுடைத்தாம். இவ்வாறு கொள்ளினும் பதினெட்டு நூல்களாகாது பதினேழு நூல்களேயாம். பதினெட்டாவது நூல் இன்னிலையா கைந்நிலையா வென்ற ஐயத்தைத் திருவாளர் வ.உ.சிதம்பரம் பிள்ளையவர்களும் திருவாளர் சிவபாதமும் அற நீக்கியுள்ளார்களென்றே கூறலாம். ஆயினும், ஐம்பது கீழெல்லையாக ஐந்நூறு மேலெல்லையாக வுடையதன்றோ கீழ்க்கணக்கின் பாற்படும்; இன்னிலையோ நாற்பத்தைந்து செய்யுட்களையுடையது; இதற்குமாறாகக் கைந்நிலை திணையொன்றுக்குப் பன்னிரண்டு செய்யுட்களையுடைய 60 பாக்கள்கொண்ட ஒரு     நூலாகும். எனின் இக்கூற்றுக்கு முரணாய் நிற்பன இரண்டு. அவற்றுள் ஒன்று ஏலாதியென்பவே என்னும் மூன்றாமடியின் நான்காஞ்சீரிலுள்ள ஏகாரம். பேராசிரியர் கார்நாற்பது களவழிநாற்பது முதலாயின வந்தவாறுங் கண்டுகொள்க என்பது மற்றொன்று. இவ்வேகாரத்தைப் பற்றித் திருவன் சிவபாதம் அதிகமெழுதியுள்ளபடியால் மேலுமெழுத வேண்டுவதில்லை. இக்கூற்றை யாவரும் ஒப்புவார்களென்பதில் ஐயமின்றாகலின் அடியேனும் அவ்வாறே கொள்வேன். ஆகவே, நூல்கள் பதினெட்டாயவாறு காண்க. அவையாவன: நான்கு அடிகளைப் பெரும்பான்மையாகவுடைய, நான்மணிக்கடிகை, நான்குநாற்பது, ஐந்திணை நூல்கள், முப்பால், கடுகம், கோவை, பழமொழி, மாமூலம், இன்னிலை, ஏலாதி என்பவே (பதினெண்கீழ்க்கணக்கு, செந்தமிழ் தொகுதி.24, பகுதி.3, சனவரி – பிப்ரவரி 1926, பக்.128, 129).

இக்கருத்தின் அடிப்படையில் நாலடியாரைப் பதினெண்கீழ்க் கணக்கில் ஒன்றாகச் சோமசுந்தர தேசிகர் கொள்ளவில்லை என்பது புலனாகின்றது. இதற்கு இவர் முன்வைக்கும் காரணங்கள் இரண்டு. நாலடியாரின் பாடல்களில் வரும் சரித்தரச் சான்று ஒன்று. மற்றொன்று இந்நூலின் ஆசிரியர்கள் புறச்சமயமான ஜைன சமயத்தைச் சேர்ந்திருப்பதுமாகும். ஐந்திணை நூல்களில் இவர் ஐந்தவதாகக் கொள்ளும் நூல் எதுவென்பதையும் அறியமுடியவில்லை. ஆனால் பதினெட்டாவது நூல் இன்னிலை என்று தெளிவாகப் பதிவுசெய்கின்றார். இதற்குரிய காரணம் கீழ்க்கணக்கின் பாடல்கள் 50ஐ கீழ் எல்லையாகவும் 500ஐ மேல் எல்லையாகவும் கொண்டு பாடப்பட வேண்டும். இக்கருத்தின் அடிப்படையில் பார்த்தால் இன்னிலையின் பாடல்கள் 45. ஆனால் கைந்நிலையின் பாடல்களோ திணைக்குப் பன்னிரண்டு பாடல்கள் வீதம் 60 பாடல்களைக் கொண்டிருக்கின்றது. எனவே முற்கூறிய வரையறைக்கு முரணாக இருக்கின்ற காரணத்தால் கைந்நிலையைக் கீழ்க்கணக்கைச் சேர்ந்ததாகக் கொள்ள முடியாது. மேலும் வ.உ.சிதம்பரம் பிள்ளை, சிவபாதம் இருவரும் பதினெட்டு நூல்களுள் ஒன்று இன்னிலைதான் என்று தெளிவுபடுத்தியுள்ளனர். எனவே பதினெட்டாவது நூல் இன்னிலையே என்ற முடிவுக்கு வரகின்றார் சோமசுந்தர தேசிகர். இக்கருத்து எல்லோராலும் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது என்றும் இவர் குறிப்பிடுகின்றார்.

 • ··

நாலடி நான்மணி…’என்னும் பழம் வெண்பாவில் வரும் ‘நால்’ என்பதற்கும் ‘ஐந்திணை’ என்பதற்கும் சரியான பொருள் கொள்ளும் அ.சிதம்பரனார் முப்பால் கடுகம் என்பதற்குச் சற்று மாறான பொருளைக் கொள்கின்றார். அதாவது ‘முப்பால் கடுகம்’ என்னும் தொடருக்கும் திருக்குறள், திரிகடுகம் என்று நோக்காமல், முப்பால் என்பதைக் கடுகத்திற்கு அடைமொழியாகக் கொள்ளும் வழக்கம் உண்டு. எனவே முப்பால் கடுகம் என்பது திரிகடுகம் என்று நிறுவுகின்றார். இக்கருத்தைப் பதினெண்கீழ்க்கணக்கு குறித்து ஆராய்ந்த ஆய்வாளர்கள் யாரும் குறிப்பிடவில்லை என்பது இங்குக் கவனத்தில் கொள்ளத்தக்கது. மேலும் இவ்வாறு கொள்ளும்போது கைந்நிலையும் இன்னிலையும் பதினெட்டு என்ற எண்ணிக்கையில் சரியாகப் பொருந்தும் என்றும் இவர் குறிப்பிடுகின்றார்.

தொகுப்பாக

இவ்வாறு பதினெண்கீழ்க்கணக்கு என்ற எண்ணிக்கை வரையறையில் உள்ள குழப்பமான முடிவுகளுக்குத் தெளிவுகள் காணப்பட்ட பின்பும், மீண்டும் தெளிவைத் தேடிக் குழப்பங்கள் உருப்பெற்று வருகின்றன. இவ்வகையான குழப்பங்களுக்கு வெகுசனத் தளத்தில் பதினெண்கீழ்க்கணக்கின் பதிப்புகளைக் கொண்டு சென்ற பதிப்பு நிறுவனங்களே காரணமாக அமைகின்றன. இவை தொடக்க காலத்தில் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களைத் தனித்தனியே பெரும் புலவர்களைக் கொண்டு உரையெழுதச் செய்து பதிப்பித்தன. பின்னர்ப் பொருண்மை வாரியாக இவற்றைத் தொகுத்துப் பதிப்பித்தன. அதன் பின்னர் ஒட்டுமொத்தமாக உரையோடு கூடிய பதிப்பு, மூலப் பதிப்பு எனப் பல நிலைப்பட்ட பதிப்பாக்க முயற்சியில் ஈடுபட்டன. இத்தகைய செயல்பாடுகளின் மூலம் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களை மக்களிடையே பரவலாகக் கொண்டு சேர்த்தன. இதுபோல் கல்வி நிறுவனங்களில் பயிலும் பாடமாகக் கீழ்க்கணக்கைச் சார்ந்த நூல்கள் தொடக்ககாலம் முதல் இடம்பெற்றிருந்தன. எளிய உரை நோக்கிய மாணவர்களின் செயல்களால் பதிப்பு நிறுவனங்கள் பலரையும் உரையெழுதச் செய்து அதை அச்சிட்டு வழங்கலாயின. இம்முயற்சிகளே பதினெண்கீழ்க்கணக்கைச் சார்ந்த நூல்கள் எவை என்பதை மறுவாசிப்பு செய்யக் காரணமாயின. இந்த வாசிப்பினால் தொடக்க காலப் பதிப்பாசிரியர்களும் ஆராய்ச்சியாளர்களும் முன்வைத்த கருத்துகளை இவர்கள் மீண்டும் புதியனவாகத் தாங்கள் முன்வைப்பதைப்போல் முன்வைத்து ஒரு மாயத் தோற்றத்தினைக் கட்டமைக்க முயன்றிருக்கின்றனர். இவ்வகையான முயற்சிகளில் கீழ்க்கணக்கைச் சார்ந்தது கைந்நிலையா? இன்னிலையா? திணைமாலையா? என்ற குழப்பம் மீண்டும் ஏற்பட்டுள்ளது.

சான்றாதார நூல்கள்

1887 நல்லந்துவனார் கலித்தொகை, மதுரை பாரத்துவாசி நச்சினார்க்கினியர் உரை,         பதிப்பாசிரியர்:சி.வை.தாமோதரம் பிள்ளை, Printed at the Scottish Press, by Graves, Cookson And Co, Madras.

1893 அறுகால் சிறுபறவை பெருவாயின் முள்ளியார் அருளிச் செய்த ஆசாரக்கோவை,      தி.செல்வகேசவராய முதலியார், இரண்டாம் பதிப்பு, மதராஸ் ரிப்பன் பிரஸ்.

1903 எட்டுத்தொகையில் மூன்றாவதாகிய ஐங்குறுநூறும் பழையவுரையும், பதிப்பாசிரியர்:    உ.வே.சாமிநாதையர், வைஜயந்தி அச்சுக்கூடம், சென்னப்பட்டணம்.

1924 சுவாமிநாத தேசிகர். இலக்கணக்கொத்து மூலமும் உரையும், பதிப்பாசிரியர்: தி.வே.கோபாலையர், சரசுவதி மகால் நூல்நிலையம், நான்காம் பதிப்பு, தஞ்சாவூர்,    (முதல்பதிப்பு 1864).

1926 செந்தமிழ் தொகுதி.24, பகுதி.3, சனவரி – பிப்ரவரி.

1931 ஐந்திணையெழுபதும் கைந்நிலையும் பழையவுரையுடன், பிரயோக விளக்கமும் பதிப்பும்:        இ.வை.அனந்தராமையர், நோபில் அச்சுக்கூடம், சென்னை.

1944 திரிகடுகமும் சிறுபஞ்சமூலமும் (பழையவுரையுடன்), பதிப்பாசிரியர்:ச.வையாபுரிப்பிள்ளை,       சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை.

1944 செந்தமிழ்ச் செல்வி, சிலம்பு 21, பரல் -3.

1957 எஸ்.வையாபுரிப்பிள்ளை, இலக்கிய மணிமாலை, தமிழ்ப் புத்தகாலயம், சென்னை,     முதற்பதிப்பு (இரண்டாம் பதிப்பு 1957, (மூன்றாம் பதிப்பு 1964).

1982 வேம்பத்தூர் முத்துவேங்கடசுப்ப பாரதியார் (1849), பிரபந்த தீபிகை, பதிப்பாசிரியர்கள்:        ச.வே.சுப்பிரமணியன், அன்னிதாமசு, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.

1992 எஸ்.வையாபுரிப்பிள்ளை, இலக்கியச் சிந்தனைகள் (முதல் தொகுதி),         வையாபுரிப்பிள்ளை        நூற்களஞ்சியம், இன்ஸ்டிடியூட் ஆப் சவுத் இண்டியன் ஸ்டடீஸ், இரண்டாம் பதிப்பு, சென்னை (முதல் பதிப்பு 1989).

2012 மயிலை சீனி.வேங்கடசாமி, பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியம் (1800-1910),      பரிசல் புத்தக நிலையம், சென்னை, முதல் பதிப்பு 1969.

முனைவர் ப.திருஞான சம்பந்தம்

முதுமுனைவர் பட்ட ஆய்வாளர்

மதுரை காமராசர் பல்கலைக்கழகம்,

மதுரை – 21.