‘பெரியபுராணம்’ என வழங்கப்பெறும் ‘திருத்தொண்டர் புராணம்’ தமிழ்மொழிக்கு உயரிய தரத்தை வழங்கக்கூடியது. அதனால்தான் ‘தொண்டர்புராணம் தொகை சித்தி ஓராறுந் தண்டமிழின் மேலாந்தரம்’1 என்ற தனிப்பாடல் பெரியபுராணத்தைப் போற்றிச் செல்கிறது.

பெரியபுராணம் என வழங்கப்பெறும் ‘திருத்தொண்டர் புராணம்’ தமிழ் இலக்கிய உலகில் மட்டுமல்லாது தமிழக மக்களின் வாழ்க்கை வரலாற்றோடு மிகவும் நெருங்கிய தொடர்புடையது. பெரியபுராணத்தில் சேக்கிழாரால் சுட்டப்பெறும் அறுபத்து மூன்று நாயன்மார்களும் தமிழகத்தில் தோன்றி வாழ்ந்தவர்கள் ஆவர். இவ்வடியார்களின் வரலாற்றைச் சேக்கிழார் களஆய்வு மூலமாகவே மிகவும் முயன்று, கேட்டு, ஆய்ந்து இயற்றியுள்ளார்.

சேக்கிழார்

வள்ளுவர்நூல் அன்பர்மொழி வாசகம் தொல்காப்பியமே

தெள்ளுபரி மேலழகர் செய்தவுரை – ஒள்ளியசீர்த்

தொண்டர்புராணம் தொகுசித்தி ஓர்ஆறும்

தண்டமிழின் மேலாம் தரம்

என உமாபதிசிவனார் பாடுகின்றார்.

தமிழ்மொழியில் சிறந்தனவாகக் கூறப்பெறும் ஆறு நூல்களின் பெயர்களை இப்பாடல் காட்டுகிறது. இவ்ஆறு நூல்களில் சேக்கிழார் அருளிய “திருத்தொண்டர் புராணம்” என்னும் நூலும் ஒன்றாகும். மேற்கண்ட பாடல் தொடரின் மூலம் சேக்கிழாரின் பெரும்புகழ் நன்கு புலப்படும்.

‘உலகெலாம் எனத் தொடங்கி உலகெலாம்’2 எனப் புராணத்தைப் பாடி முடிக்கிறார். இதன் மூலம் சேக்கிழாரின் ஓருலகக் கோட்பாட்டைக் காணலாம்.

சேக்கிழார் பாடல்கள் அனைத்தும் தெய்வமனம் கமழும் தன்மையுடையன. எனவேதான், மீனாட்சி சுந்தரனார், ‘பக்திச் சுவை நனிசொட்டச் சொட்டப் பாடிய கவி வலவ’3 எனச் சேக்கிழார் பெருமானைப் புகழ்ந்துரைத்துள்ளார். உலகம், உயிர், கடவுள் ஆகிய மூன்றையும் ஒருங்கே காட்டும் காவியந்தான், ‘பெரியபுராணம்’ என்பார் திரு.வி.கலியாண சுந்தரனார்’4

பெரியபுராணத்தை அருளியவர் சேக்கிழார். இவர், தற்போதைய காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள குன்றத்தூரில் பிறந்தவர். இவரது இயற்பெயர் அருண்மொழித்தேவர், இவர் அநபாய சோழனிடம் தலைமை அமைச்சராய்த் திகழ்ந்தவர். இவர், உத்தம சோழப் பல்லவர் என்றும் பட்டம் பெற்றவர்5. இவரைத் தெய்வச்சேக்கிழார் என்றும் தொண்டர்சீர் பரவுவார் என்றும் போற்றுவர். இவரது காலம் கி.பி 12ஆம் நூற்றாண்டு ஆகும்.

சைவம்

சைவம் என்பதற்குச் ‘சிவபெருமானை முழுமுதற் கடவுளாகக் கொண்ட சமயம் என்பது பொருளாகும்.’6 சேக்கிழார் தமது காப்பியத்தில் சிவபெருமானை வழிபடும் அடியார்களையும், சிவபெருமானை வழிபடும் அடியார்களை வணங்கும் அடியார்களையும் காட்டுகிறார். சைவத்தின் அடிநாதம் ‘அன்பு’, ‘அன்பே சிவம்’ என்கிறார் திருமூலர்7.

அன்பும் சிவமும் இரண்டுஎன்பர் அறிவிலார்

அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்

அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்

அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே8

சமயம் என்பது

சமயம் என்பது ஒரு வாழ்க்கைமுறை. அதாவது “மனிதனை நெறிப்படுத்தி அவன் உள்ளத்தைப் பக்குவப்படுத்தும் சாதனம்” சமயம் என்கிறார்9 குன்றக்குடி அடிகளார்.

உயிரின் குறை நீக்கத்திற்கும் நிறைநலப் பேற்றுக்கும் இன்றியமையாது வேண்டப்படுவது சமயம். சமயம் மனிதரை நெறிப்படுத்துவது; முறைப்படுத்துவது. சமயம் ஒரு தூய்மையான வாழ்க்கை முறை; சமய வாழ்க்கையில் புலன்கள் தூய்மையடையும்; பொறிகள் இன்ப வைப்புகளாக மாறும்; இதயம் விரியும்; ஈரஅன்பு பெருகி வளரும்; வேறுபாடுகள் மறையும்; ஒருமை தோன்றும்; ஓருலகம் மலரும் இதுவே சமயத்தின் பயன் என்கிறார் குன்றக்குடி அடிகளார்10.

“தமிழரின் அறிவில் முகிழ்த்த ஒப்பற்ற சமய நெறி சித்தாந்தம்” என்று பாராட்டுகிறார் ஜி.யு.போப்11.

சமயம் என்பது மனிதனை நன்னெறிக்கு அழைத்து நன்னெறியில் அன்பின் வழியில் செயல்பட வைப்பது, ஏனெனில் அன்பின் வழியே தான் கருணை பிறக்கிறது. இதனை வள்ளுவர் “அருளென்னும் அன்பீன் குழவி”12 என்கிறார். God is Love என்பர் மேனாட்டார். அன்பே தம் சமயம்13. இதனையே சேக்கிழார் தனது திருத்தொண்டர் புராணத்தில் செவ்வனே எடுத்தியம்புகிறார்.

“கூடும் அன்பினில் கும்பிட லேயன்றி

வீடும் வேண்டா விறலின் விளங்கினார்”14          (திருக்கூட்டச்  சிறப்பு)

திருநாவுக்கரசரின் தொண்டு

தொண்டு என்பது தம்மால் இயன்றவரை எதிர்பார்ப்பின்றி பிறருக்குச் செய்வது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகக் தொண்டு செய்வது இயல்பு. பெரியபுராணத்தில் 63 நாயன்மார்களில் ஒரு சில நாயன்மார்கள் ஒரே விதமாகவும், ஒரு சில நாயன்மார்கள் வெவ்வேறு விதமாகவும் தொண்டு செய்துள்ளதைச் சேக்கிழார் நன்கு விளக்கிச் செல்கிறார். அவ்வடியார்களுள் திருநாவுக்கரசர்

“எய்துற்ற தியானம் அறாவுணர்வும்

ஈறின்றி எழுந்திரு வாசகமும்

கையில்திக ழும்உழ வாரமுடன்” 15

என சேக்கிழார்அறிமுகப்படுத்துகிறார்.

திருநாவுக்கரசருக்கு “மனம், வாக்கு, காயம் என்னும் திரிகரணங்களாலும் தொண்டு செய்தல் வேண்டும் என்னும் பேரவா எழுந்தது. அவர் மனத்தால் ஆண்டவனைத் தியானித்தும் வாயால் அவன் புகழைப் பாடியும், கையால் உழவாரத் தொண்டு செய்தும் வரலானார்” என்று திரு.வி.கலியாண சுந்தரனார் கூறுகிறார்.

சேக்கிழார் அப்பரை அறிமுகம் செய்தல்

திருநின்ற செம்மையே செம்மையாகக் கொண்ட

திருநாவுக் கரையன்றன் அடியார்க்கும் அடியேன்16   சுந்தரர் (திருத்தொண்டத்தொகை)

துற்று னாமூரில் நாவுக்கரசெனுந் தூமணியே!

நம்மியாண்டார் நம்பி17                                           (திருத்தொண்டர் திருவந்தாதி)

“திருநாவுக் கரசுவளர் திருத்தொண்டின் நெறிவாழ”18

எனவும்,

“உலகில்வரும் இருள்நீக்கி ஒளிவிளங்கு கதிற்போல்பின்

மலருமரு ணீக்கியார்வந்தவதா ரஞ்செய்தார்”19

என்றும் திருநாவுக்கரசரை சேக்கிழார் அறிமுகப்படுத்துவதிலிருந்து அவரின் தொண்டு நன்கு புலப்படும்.

 

அப்பர் இறைவனை,

“காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி” என திருஞானசம்பந்தர் கூறுவதைப் போல் கண்ணீர் சிந்தி இறைவனை வேண்டுவார். இதனைச் சேக்கிழாரும் ,

“வார்ந்து சொரியுங் கண்ணருவி

மயிர்க்கால் தோறும் வரும்புளகம்

ஆர்ந்த மேனிப் புறம்பலைப்ப

அன்பு கரைந்தென் புள்ளலைப்பச்

சேர்ந்த நயனப் பயன்பெற்றுத்

திளைப்ப திருவே கம்பர்தமை

நேர்ந்த மனத்தில் உற வைத்து

நீடும் பதிகம் பாடுவார்” 20

இப்பாடல் மூலம் அப்பரின் அன்பு வழிபாட்டைக் கூறுகிறார்.

“மெய்தான் அரும்பி விதிர்விதிர்த்து உன்விரை யார்கழற்கென்

கைதான் தலைவைத்துக் கண்ணீர்ததும்பி வெதும்பிஉள்ளம்

பொய்தான் தவிர்ந்துன்னைப் போற்றி சயசய போற்றிஎன்னும்

கைதான் நெகிழ விடேன்உடை யாய்என்னைக் கண்டுகொள்ளே” 21

என மாணிக்கவாசகர் திருவாசகத்தில் இறைவனை வழிபடுவதைப் போன்று அப்பர் இறைவன் மீது அன்பு கொண்டு திருத்தொண்டால் இறையருள் ஞானம் பெற்றவர்.

சமுதாயத் தொண்டு

சாதி மறுப்பு

திருநாவுக்கரசர் இறைவன் எம்பெருமான் சிவனைத் தவிர வேறு எப்பற்றையும் பற்றாதவர். அவர் காலத்தில் சாதி மறுப்பைச் சாதிய ஒழிப்பை முன்னிறுத்தியவர் ஆவர். ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்பதற்கிணங்க வாழ்ந்தவர். மனிதரில் உயர்வு தாழ்வு இல்லை என்றும், அனைவரும் சமம் என்பதையும் தனது சாதி மறுப்புப் பாடலில் பதிவு செய்துள்ளார்.

“சாத்திரம் பல பேசும் சழக்கர்காள்

கோத்திரமும் குலமும் கொண்டு என்செய்வீர்” 22

என வீறுகொண்டு பேசுகிறார்.

சமயப் புரட்சி

திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும் சமயப் புரட்சியில் முதன்மையானவர்களாவர். திருநாவுக்கரசர் சமயப்பு ரட்சிக்காக எந்த வன்முறையிலும் இறங்கிலர். வன்முறையை அப்பர் மென்முறையாகத் தன் சொன்முறையால் சமயப்புரட்சி செய்தவர் ஆவார். சமணர்களின் சூழ்ச்சிகளால் அவர் துவண்டு விடவில்லை. அநீதிக்கு எதிராக அவர் காலத்தில் மனித உரிமைக்கு முதன்முதலாகக் குரல் எழுப்பியவர் என்பதை அப்பரின்

“நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்”

என்னும் தேவாரப் பாடல் சுட்டுகிறது.

ஈகையும் விருந்தும்

திருநாவுக்கரசர் மக்கள் நலமுடன் வாழ, மக்கள் சிறந்து விளங்க, மக்களின் வாழ்வு சிறக்க ஈகைத் தொண்டு செய்தார்  எனச் சேக்கிழார் பாடுகிறார்.

“காவளர்த்தும் குளந்தொட்டும் கடப்பாடு வழுவாமல்

மேவினார்க்கு வேண்டுவன மகிழ்ந்தளித்தும் விருந்தளித்தும்

நாவலர்க்கு வளம்பெறுக நல்கியும் நானிலத்துள்ளோர்

யாவருக்குந் தவிராத ஈகைவினைத் துறைநின்றார்”23

என்றும்

“ஆசில்அறச் சாலைகளும் தண்ணீர்ப்பந்தரும் அமைப்பார்” 24

எனவும் சேக்கிழார் பாடுகிறார்.

மக்களின் நலன் ஒன்றே இறைவனுக்குச் செய்யும் தொண்டு என்று தொண்டு செய்து வாழ்ந்துயர்ந்தவராக அப்பரைச் சேக்கிழார் காட்டுவதன் வாயிலாக அப்பரின் தொண்டை அளவிட முடியாது என்பது திண்ணம்.

வறுமை நீக்கல்

அப்பர் உலக வாழ்வின் சிறப்பை உணர்ந்தவர். மக்களின் வறுமை ஒழிப்புத் தொண்டில் சிறந்திருந்தார் என்பதனைச் சேக்கிழார் தனது திருத்தொண்டர் புராணத்தில் திருவீழிமிழலைப்பதியில் சிவபெருமான் கொடுத்த படிக்காசுகளை அப்பர் பெற்றார். அப்படிக்காசுக்களைச் சைவ அடியார்களுக்குக் கொடுத்து அவ்வூர் மக்களின் வறுமையைப் போக்கினார் என்பதை,

“ஞாலம் அறியப் படிக்காசு வைத்தார்மிழலை நாயகனார்” 25

இவ்வடி மூலம் சேக்கிழார் தெளிவாகக் காட்டுகிறார்.

கோயில் கதவு, மடம் திறத்தல்

திருமறைக்காட்டில் பூட்டிக் கிடந்த கோயில் கதவைத் திறக்கப் பாடுமாறு சம்மந்தர் வேண்டியவுடன் அப்பர் பாடுகிறார். உடனே கோயில் கதவு திறந்துவிடுகிறது. இதன் மூலம் அப்பர் அக்கால மக்களுக்கு அளவிடமுடியாப் பெருந்தொண்டு செய்துள்ளார். இறைவனும் கோயிலும் மக்கள் அனைவருக்கும் பொது எனப் புதுவிதி கண்டவர் என்றே கூறவேண்டும். அப்பாடல் வரி,

“உம்பர் பிரானை உள்புக்குத்

தேங்கா திருவோம் நேர்இறைஞ்சத்

திருமுன் கதவந் திருக்காப்பு

நீங்கப்பாடும் அப்பர் என

நீடுந் திருநாவுக்கரசர்”26

ஒவ்வொரு சிவாலயத்திற்கும் நடந்தே சென்று தனது திருத்தொண்டை அப்பர் செய்து வந்தார். திருப்பூந்துருத்தியில் சிலகாலம் தங்கியிருக்க வேண்டும் என்னும் நிலைமையைப் பெறும் உட்குறிப்புடன் அப்பதியில் உழவாரப் பணி செய்து அங்கே ஒரு மடம் திறந்தார். இதன் மூலம் அடியார்களுக்கும் மக்களுக்கும் தொண்டு செய்தார். அப்பாடல் வரி,

“திங்களும் ஞாயிறும் தோயும்

திருமடம் ஆங்கொன்று செய்தார்”27

பாடல்வழித் தொண்டு

“எனக்கு அர்ச்சனைப் பாட்டேயாகும்” என ஞானசம்பந்தரிடம் இறைவன் கூறுவதைப் போல் அப்பரும் பாடலால் இறைவனைப் பாடி பாடல்வழித் தமிழ் மொழிக்கும் தொண்டு செய்தார். அப்பர் தாண்டகம் பாடுவதில் வல்லவர் ஆவார். தாண்டக வேந்தர் என்றே அழைக்கப்படுகிறார். அப்பர் தான் வாழ்ந்த காலத்தில் இறைவனுக்கும் மக்களுக்கும் தொண்டு செய்யத் தமிழ்மொழியே அவருக்குத் துணை வந்தது. தனது பாவால் இறைவனையே தன்னிடம் சரண் அடைய வைத்தவர் அப்பர் என்று கூறவது மிகையாகாது. பல்வேறு தலங்களுக்கும் சென்று தொண்டு செய்து வருகையில் இறைவன் மீது அன்பு கரைந்தோடுமாறு பாடுவார். அப்பாடல்கள் மூலம் தமிழ் மொழியைக் காலத்தால் நிலைத்து நிற்கச் செய்தார். இறைவன் மீது அன்பு கொண்டு,

“வார்ந்து சொரியுங் கண்ணருவி

மயிர்க்கால் தோறும் வரும்புளகம்

ஆர்ந்தமேனிப் புறம்பலைப்ப

அன்பு கரைந்தென் புள்ளலைப்பச்

சேர்ந்த நயனப் பயன்பெற்றுத்

திளைப்பத் திருவே கம்பர்தமை

நேர்ந்த மனத்தல் உற வைத்து

நீடும் பதிகம் பாடுவார்”28

“நின்றதிருத் தாண்டகமும் நீடுதனித் தாண்டகமும்

மண்றுறைவார்வாழ்பதிகள் வழுத்துதிருத் தாண்டகமும்

கொன்றைமலர்ச் சடையார்பால் குறைந்த திருநேரிசையும்

துன்றுதனி நேரிசையும் முதலான தொடுத்தமைத்தார்”29

எனச் சேக்கிழார் கூறுவதிலிருந்து அப்பர் தனது வாழ்நாளில் இறைவனுக்கு பாடிய பாடல் வழி மொழித்தொண்டும் செய்துள்ளார்என்பதை அறிய முடிகிறது.

உழவாரத் தொண்டு

திருநாவுக்கரசர் அடிமை மார்க்கம் எனக் கூறும் தசமார்க்க வழி நிற்பவர். அவர் கடன் பணி செய்வதே என்று அப்பரே கூறுகிறார்.

“என் கடன் பணிசெய்து கிடப்பதே”

சமண சமயம் விட்டு சைவ சமயம் அடைந்த போது அப்பரின் சூலை நோய் முற்றறுக்கப்படும் முன்பே அப்பரின் உழவாரப்பணி தனது தமக்கை திலகவதியார் மூலம் தொடங்குகிறது.

“பற்றறுப்பார் தமைப்பணிந்து பணிசெய்வீர் எனப்பணித்தார்”30

எனச் சேக்கிழார் அப்பரின் உழவாரப் பணியின் தொடக்கத்தைக் கூறுகிறார். அப்பர் சிவபெருமான் ஒருவரைத் தவிர வேறு எவ்விதப் பற்றுகளும் இல்லாதவர் என்று சேக்கிழார் கூறுகிறார். ஓட்டையும் பொன்னையும் ஒன்றாகவே எண்ணக் கூடியவர் என்றும் கூறுகிறார்.

“புல்லொடும் கல்லோடும் பொன்னோடும் மணியோடும்

சொல்லோடும் வேறுபா டிலாநிலைமை துணிந்திடுத்த” 31

அப்பரின் உழவாரப்பணி விளக்கும் பாடல்வரிகள்

“சீறடியார்திருவலகுந் திமெழுக்குந் தோண்டியும் கொண்டு”32

“கைகலந்த திருத்தொண்டு செய்து பெருங் காதலுடன்”33

“கையார்ந்த திருத்தொண்டு கழியமிகுங் காதலொடுஞ்”34

“சார்வான திருமணமும் உழவாரத் தனிப்படையும் தாமும்ஆகிப்

பார்வாழத் திருவீதிப் பணிசெய்து பணிந்தேத்திப் பரிவிச்செல்வார்” 35

எனச் சேக்கிழார் மொழிவதிலிருந்து அப்பரின் உழவாரத் தொண்டு நன்கு புலப்படுகிறது. அப்பர் தொண்டு ஒன்றையே இறையன்பாகக் கொண்டவர். அத்தொண்டு நெறியிலிருந்து வேறு பற்றுதல் இன்றி வாழ்ந்தவர் என்பதை

“ஆடுவார் பாடுவார் அலர்மாரி மேற்பொழிவார்

கூடுவார் போன்றணை வார்குழல் அவிழ இடைநுடங்க

ஓடுவார் மாரவே ளுடன்மீள்வார் ஒளிபெருக

நீடுவார்துகில்அசைய நிற்பாரும் ஆயினார்” 36

“மெய்த்தன்மை உணர்வுடைய விழுத்தவத்து மேலோர்தம்

சித்தநிலை திரியாது செய்பணியின் தலைநின்றார்” 37

என்ற பாடல்கள் காட்டும். மேலும், இவ்வுலக மாயைகள் அனைத்தும் திருநாவுக்கரசரை எப்படியாவது வேறொன்றின் மீது பற்று வைத்துவிட வேண்டும் எனப் போராடி, பின்பு அம்முயற்சி இயலாமையால் திருநாவுக்கரசரின் இறைத்தொண்டிடம் தோற்றுப் போனதாகச் சேக்கிழார் மொழிகிறார்.

“யாதும்ஒரு செயலில்லா மையில்இறைஞ்சி எதிர்அகன்றார்” 38

இவ்வாறு திருநாவுக்கரசர் தொண்டுநெறி வழுவாது வாழ்ந்தமையைச் சேக்கிழார்வழித் திருத்தொண்டர் புராணத்தில் காணமுடிகிறது.

அப்பூதியடிகளின் தொண்டு

திங்களுரில் பிறந்தவர் அப்பூதி அடிகளார். அவர் திருநாவுக்கரசர் மீது அளவு கடந்த அன்பு வைத்திருந்தார். இதன் காரணமாக அப்பூதி அடிகளார் தமது வீட்டில் உள்ள பசு, நிறைகோல், கிணறு போன்றவற்றிற்கும், தாம் அமைத்த தண்ணீர்ப் பந்தர்க்கும், தனது குழந்தைகளுக்கும் திருநாவுக்கரசரின் பெயரையே வைத்து வாழ்ந்து வந்தார். அப்பர் மீதும், அவரின் திருத்தொண்டின் மீதும் அளவற்ற அன்பும் கொண்டவராகலின் அப்பரையே தாம் வணங்கும் இறைவனாக ஏற்று வாழ்ந்தவர். அதனால்தான் திருநாவுக்கரசர்வழி அறிந்த அன்பு, தொண்டு என்பதை நினைவில் இருத்தி அப்பூதியடிகளாரும் தனது ஊரில் தண்ணீர்ப் பந்தர்வைத்தும் சிவனடியார்களுக்கு விருந்தோம்பல் செய்தும் வந்தார். அடியவர்களுக்குச் செய்யும் தொண்டே ஆண்டவனுக்குச் செய்யும் தொண்டாக நினைத்து அதன்படியே வாழ்ந்தவர். அடியார்களுக்குச் செய்யும் தொண்டில் சிறிதும் வழுவாது செய்து வருபவர் அப்பூதி அடிகள். இதற்குச் சான்றாக, திருநாவுக்கரசர் அப்பூதியடிகளின் இல்லத்திற்கு விருந்துண்ண வந்த வேளையில் அப்பூதியடிகளின் மூத்தமகன் மூத்த திருநாவுக்கரவு வாழைக்குருத்தை அரியும்போது பாம்பு தீண்டி இறந்து விடுகிறான். இதனை அப்பூதியடிகள் அறிந்து வெளியில் கூறினால் அப்பருக்குச் செய்யும் விருந்தோம்பல் தொண்டு தடைபட்டு விடுமே என எண்ணி வெளியே கூறாது தானும் தன் மனைவியுமாகச் சேர்ந்து இறந்த மகனை ஒரு பாயில் சுருட்டி வைத்துவிட்டு அப்பருக்கு அமுது செய்ய விழைகின்றனர். இத்தருணத்தில் நாவுக்கரசர் விருந்துண்ண வருகிறார். வந்தவர் தாம் அனைவருடனும் சேர்ந்துண்ண விரும்பி அப்பூதியடிகளின் மூத்த திருநாவுக்கரசுவிற்குத் திருநீறு வழங்க அழைக்கிறார். அவ்வேளையில் அப்பூதி சிறிதும் கலங்காது “இப்போது, இங்கு அவன் உதவான்” என்றார்.

பின்பு நடந்ததை வினவி இறந்த அப்பூதியடிகளின் மூத்த திருநாவுக்கரசுவை அப்பர் உயிர்ப்பித்தார். மகன் உயிர்த்தெழுந்தானே என மகிழ்ச்சி அடையாமல் விருந்து படைக்கக் காலம் தாழ்த்தினானே என அப்பூதியாரும் அவர் மனைவியும் வருந்துகின்றனர். இதனை,

“அன்பர் அமுது செய்த ருளுவதற்குச்

சிறிதிடை யூறு செய்தான் இவன்”39

எனச் சேக்கிழார் கூறுகின்றார்.

இவ்வுலகில் மனிதன் பிறப்பு முதல் இறப்பு வரை இயங்கும் தன்மை பெறுகிறான். இவ்வியக்கத்தில் நல்வினை, தீவினை என்ற இரு வினைகள் நிகழும். இவ்வினையால்தான் மறுபிறப்பு உண்டு. இப்பிறப்பில் இருந்து விடுபட்டு ‘வீடுபேறு’ என்ற முக்தியை உயிர்கள் அடைய வேண்டும். இதுவே சைவ சமயத்தின் நோக்கமாகும். இவ்வீடுபேற்றை அடைய மக்கள் தங்கள் வாழ்க்கையில் உயர்ந்த கொள்கைகளையும், நெறிகளையும் கடைபிடிக்க வேண்டும். பண்பாடு, இல்லறம், விருந்தோம்பல், பணிவு, தொண்டு, சமயம், அரசியல், சமயப்புரட்சி, பாடல்வழித் தொண்டு, வறுமை ஒழிப்பு, இறையன்பு என்று திருத்தொண்டர் புராணத்தில் சேக்கிழார் பல்வேறு அடியார்களின் வாழ்க்கை வரலாறுகள் மூலம் சைவநெறி அன்பு ஒன்றையே மூலமாய்க் கொண்டுள்ளது என்பதைத் தெளிவாக நிறுவியுள்ளார் என்பதை அறிய முடிகிறது.

சேக்கிழார் தனது திருத்தொண்டர் புராணத்தில் இறைவன் “உலகெலாம்” என அடியெடுத்துக் கொடுக்க உலகெலாம் எனத் தொடங்கி,

“என்றும் இன்பம் பெருகும் இயல்பினால்

ஒன்று காதலித் துள்ளமும் ஓங்கிட

மன்று ளாரடி யாரவர் வான்புகழ்

நின்ற தெங்கும் நிலவி உலகெலாம்”40

எனப் பாடி முடித்துள்ளார். இவ்வாறு பாடல் வைப்பு முறையிலேயே சேக்கிழாரின் தூயபெரு சைவ நன்னெறியும், ‘யாதும் ஊரே யாவருங் கேளிர்’ என்ற ஓருலக ஒருமைப்பாட்டுத் தூய அன்பையே சைவமும் பெருநெறியாகச் சுட்டுகிறது என்பதையும் சேக்கிழார் தெளிவாக நிறுவியுள்ளார்.

அடிக்குறிப்பு

 1. திருத்தொண்டர் புராணத்தில் சிவனடியார் பண்பாடு, வெ.புவனேஸ்வரி ப-9
 2. பெரியபுராணம் பாயிரம்-1
 3. தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம், ப-111
 4. தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம், ப-111
 5. தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம், ப-111
 6. கழகத் தமிழ் அகராதி, ப-496
 7. திருமூலர் திருமந்திரம்
 8. திருமூலர் திருமந்திரம்
 9. நமது நிலையில் சமயம் சமுதாயம், குன்றக்குடி அடிகளார், ப-12
 10. நமது நிலையில் சமயம் சமுதாயம், குன்றக்குடி அடிகளார், ப-13
 11. நமது நிலையில் சமயம் சமுதாயம், குன்றக்குடி அடிகளார், ப-16
 12. குறள் – 757
 13. தமிழர் நாகரிகமும் பண்பாடும், அ.தட்சிணாமூர்த்தி, ப-389
 14. பெரியபுராணம், திருக்கூட்டச் சிறப்பு பாடல் – 143
 15. பெரியபுராணம் – திருநாவுக்கரசர் புராணம் பாடல் – 1342
 16. நாயன்மார் வரலாறு, திரு.வி.க, ப-126
 17. நாயன்மார் வரலாறு, திரு.வி.க, ப-126
 18. பெரியபுராணம் – திருநாவுக்கரசர் புராணம் பாடல் – 1266
 19. பெரியபுராணம் – திருநாவுக்கரசர் புராணம் பாடல் – 1283
 20. பெரியபுராணம் – திருநாவுக்கரசர் புராணம் பாடல் – 1588
 21. திருவாசகம் – திருச்சதகம் பாடல் – 1
 22. தேவாரம் – அப்பர்
 23. பெரியபுராணம் – திருநாவுக்கரசர் புராணம் பாடல் – 1301
 24. பெரியபுராணம் – திருநாவுக்கரசர் புராணம் பாடல் – 1300
 25. பெரியபுராணம் – திருநாவுக்கரசர் புராணம் பாடல் – 1522
 26. பெரியபுராணம் – திருநாவுக்கரசர் புராணம் பாடல் – 1535
 27. பெரியபுராணம் – திருநாவுக்கரசர் புராணம் பாடல் – 1654
 28. பெரியபுராணம் – திருநாவுக்கரசர் புராணம் பாடல் – 1588
 29. பெரியபுராணம் – திருநாவுக்கரசர் புராணம் பாடல் – 1679
 30. பெரியபுராணம் – திருநாவுக்கரசர் புராணம் பாடல் – 1330
 31. பெரியபுராணம் – திருநாவுக்கரசர் புராணம் பாடல் – 1683
 32. பெரியபுராணம் – திருநாவுக்கரசர் புராணம் பாடல் – 1333
 33. பெரியபுராணம் – திருநாவுக்கரசர் புராணம் பாடல் – 1678
 34. பெரியபுராணம் – திருநாவுக்கரசர் புராணம் பாடல் – 1590
 35. பெரியபுராணம் – திருநாவுக்கரசர் புராணம் பாடல் – 1490
 36. பெரியபுராணம் – திருநாவுக்கரசர் புராணம் பாடல் – 1686
 37. பெரியபுராணம் – திருநாவுக்கரசர் புராணம் பாடல் – 1687
 38. பெரியபுராணம் – திருநாவுக்கரசர் புராணம் பாடல் – 1689
 39. பெரியபுராணம் – அப்பூதியடிகள் புராணம் பாடல் – 1819
 40. வெள்ளானைச் சருக்கம் பாடல் – 4281

சி.ஞானமணி

பகுதிநேர முனைவர்பட்ட ஆய்வாளர்

கணேசர் கலை அறிவியல் கல்லூரி,

மேலைச்சிவபுரி – 622403