சமுதாயத்தில் மக்கள் பலவிதமான பிரச்சினைகளையும் சிக்கல்களையும் சந்திக்கின்றனர் என்றாலும் பெண்களின் உரிமைப் போராட்டமும் சமுதாயத்தில் முக்கிய பிரச்சினையாக அமைகின்றது. ஆதிகால சமுதாயத்தில் பெண்கள் அடிமைப் பட்டவர்களாக வாழ்ந்தனர். எனினும், அன்றைய அடிமைத்தனத்தைப் போக்க இன்றைய பெண்கள் விழிப்புணர்வுடன் சிந்திக்கத் தொடங்கி உள்ளனர். அவ்வகையில், பெண்கள் சமுதாயத்தில் எவ்வாறு ஆட்படுத்தப்படுகின்றனர் என்பதை ரமணிசந்திரனின் ‘தீக்குள் விரலை வைத்தேன்’ என்ற புதினத்தின் மூலம் விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

பெண் வளர்ப்பு

“உலகம் ஆண்-பெண் என்னும் இருபாலராலும் ஆக்கப்பட்டிருக்கிறது. இரண்டும் சேர்ந்த ஒன்றே உலகம் என்பது. இருபாலரும் ஒன்றி இயங்கினாலன்றி உலகம் நல்வழியில் நடைபெறாது” என்று ஆண் – பெண் நிலைப்பாட்டினைத் திரு.வி.க. குறிப்பிடுகின்றார். குடும்பத்தில் பிள்ளைகளை வளர்ப்பதில் தாய் தந்தை இருவருக்குமே சமபங்கு இருக்க வேண்டும். பிள்ளைகளைச் சிறந்தவர்களாக உருவாக்க வேண்டுமென்றால் அவர்களின்மீது இருவரும் அன்பும், கண்டிப்பும் காட்டி வளர்க்க வேண்டும். இப்புதினத்தில் வரும் பராசரன் தன் மனைவி தனலட்சுமியை மகள் மகிமாவைக் கண்டிப்பாக வளர்க்கவில்லை என்று குறை கூறக்கூடிய கதாப்பாத்திரமாக ரமணிசந்திரன் படைத்திருக்கிறார். இதனை,

யாருடீ இவள்? உன் மகள்தானே? இதுவே ஆண்பிள்ளை என்றால், நான் பார்த்து வளர்த்திருப்பேன். ஆனால், பெண்ணைப் பெற்றுப் போட்டதோடு எல்லாம் தீர்ந்ததா? பெற்றவளாக இருந்து, அதை ஒழுங்காக வளர்க்க வேண்டாம்? இருபது வயதானால், மகளுக்குக் கௌரவமாக ஒரு கல்யாணம், காட்சி செய்து பார்க்கனுமே என்று, கொஞ்சமாவது பொறுப்பு வேண்டாம்   (ப.14)

என்று கூறுவதிலிருந்து பெண் பிள்ளையை வளர்ப்பதில் தனக்குப் பொறுப்பில்லாதது போன்றும் மனைவிக்கே அதிக பொறுப்புண்டு என்றும் பராசரன் செயல்படுவதைப் புதின ஆசிரியர் புலப்படுத்துகிறார்.

பெண்ணின் பொறுமை குணம்

          சமுதாயத்தில் பெண்கள் மென்மையுடையவர்களாகக் கருதப்படுகின்றனர். அம்மென்மைக் குணம் உடைய பெண்களுக்கு ஆண்கள் பலவிதமான இன்னல்களைச் செய்கின்றனர். ஒரு பெண் கணவனை எஜமானாக மட்டுமல்ல தெய்வமாகவும் மதிக்கின்றாள். கணவன் மனைவியைத் திட்டினாலும் அடித்தாலும் அவள் பொறுத்துக் கொள்வதோடு அவன் குடி, சூதாட்டம், ஒழுக்கக்கேடு ஆகியவைகளைக் கொண்டிருந்தாலும் எதிர்த்துக் கேட்கும் திறனின்றி அவனுக்கு ஆட்பட்டு வாழ வேண்டிய சூழலில் பெண் காணப்படுகிறாள்.

இத்தகைய பெண்ணடிமைத்தனம் இருபதாம் நூற்றாண்டிலும் நடைமுறையில் இருப்பதை, பெண் மக்களை இன்று ஆண் மக்கள் நடத்தும் மாதிரியானது மேல்சாதிக்காரன் கீழ்சாதிக்காரனை நடத்துவதை விட பணக்காரன் ஏழையை நடத்துவதை விட எசமான் அடிமையை நடத்துவதை விட மோசமானதாகும்என்ற பெரியார் கூற்று உறுதிப்படுத்துகின்றது.

ரமணிசந்திரனின் ‘தீக்குள் விரலை வைத்தேன்’ என்ற நாவலின் வாயிலாகப் பெண் எவ்வளவு பிரச்சனைகளைச் சந்தித்தாலும் எவ்வாறு பொறுமையுடன் இருக்கிறாள் என்பதைப் பதிவு செய்துள்ளார். இதனை,

பகலெல்லாம் உடல் ஓய உழைப்பதும் கொஞ்சம் குடித்துவிட்டு வந்து படுப்பதும் பொதுவாக அவர்களுள் தவறாகக் கருதப்படுவது இல்லை. குடி கொஞ்சம் கூடி விடும் போது தான் தகராறு. (ப.60)

என்றும்,

“பாவம்மா உடம்பு அலுப்பாகக் குடித்தது கொஞ்சம் கூடிப் போச்சுது போல!’’(ப.60)

என்றும் மகிமாவின் வீட்டில் சுற்று வேலை செய்கிற சரோஜா தன் கணவர் குடித்து விட்டு அடிப்பதைக்கூட பொறுத்துக்கொள்ளும் பண்புடையவளாகக் காணப்படுகிறாள். இதேபோன்று தனலட்சுமியும் தன் கணவருக்கு உணவளிக்கும்பொழுது, குறைவாக உணவளிக்கிறாள் எனக் கருதி,

எதற்கு இந்தக் கஞ்சப் பிசுநாரித்தனம்? உன் அப்பன் வீட்டில் இருந்து கொணர்ந்ததா? நான் சம்பாதித்ததுதானே (ப.122)

என்று தனது ஊதியத்தில் உணவு பெறப்படுகிறது என்றும் உன் தந்தை வீட்டிலிருந்து கொண்டு வந்தாயா என்றும் கணவன் தன்னை இழிவாகப் பேசுகிறான் என்பதை அறிந்தும் தனலட்சுமி பொறுமையாக இருக்கிறாள் என்பதை இப்புதின ஆசிரியர் எடுத்துரைக்கிறார்.

பெண் கட்டுப்படுத்தப்படுதல்

சமுதாயத்தில் பெண் அடிப்படைக் கல்வி பெறுவதென்பது இன்று எளிதாகிவிட்ட ஒன்று. ஆனால் பழங்காலத்தில் பெண்களுக்குக் கல்வி மறுக்கப்பட்டு அவர்கள் வீட்டினுள்ளே முடக்கப்பட்டனர். பெண்கல்வி பற்றிப் பாரதியாரும் பாரதிதாசனும் பெரியாரும் நிரம்பக் கூறியுள்ளனர். பாரதியார் கூறுகையில்,

பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்

             பாரினிற் பெண்கள் நடத்த வந்தோம்

என்றும், பாரதிதாசன் கூறுகையில்,

கல்வியில்லாப் பெண்கள் களர்நிலம்

என்றும் கூறுவதன்மூலம் இவர்களின் சிந்தனை வெளிப்பாட்டினை அறிந்து கொள்ள முடிகிறது. இன்றைய காலத்தில் பெண்கள் பலர் கல்வியறிவு பெற்றுள்ளனர். இருப்பினும் ஒருசில அதிகார வர்க்கத்தில் பெண்கள் கௌரவத்திற்காக உயர்கல்வி வரை பயிலலாம். ஆனால், வேலைக்குச் செல்வதன் மூலம் தங்களின் குடும்ப கௌரவம் குறைந்து விடுமென்றெண்ணிப் பெண்கள் வேலைக்குச் செல்வதற்கு மறுப்பு தெரிவிக்கப்படுகின்றது. இதனை,

நீ போய், ஒருவரிடம் கை கட்டி வேலை செய்வதோ? கை நீட்டி அவர்களிடம் சம்பளம் வாங்குவதோ, நடக்காதக் காரியம். யாரிடமும் உன்னை வேலைக்கு நான் அனுப்பப் போவது கிடையாது (ப.5)

என்று பராசரன் தன் மகள் மகிமாவிடம் கூறுவதிலிருந்து பெண் கட்டுப்படுத்தப்படுகிறாள் என்பதைத் தம் புதினத்தின்வழி ரமணிசந்திரன் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

குடும்பத்தில் பெண்களின் நிலை

கணவன் மனைவி இருவரும் சேர்ந்து வாழும் ஓர் அமைப்பே குடும்பம் எனப்படுகிறது. இதில் கணவன் என்றால் உயர்ந்தவன் என்றும் மனைவி என்றால் தாழ்ந்தவள் என்றும் ஒருசில ஆண்கள் கருதுகின்றனர். கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருசன் என்ற பழமொழிக்கேற்ப வாழக்கூடியவர்கள் பெண்கள். இப்புதினத்தில் வரும் சந்தானத்தின் மனைவி மஞ்சரி என்பவள் தன் கணவனின் சொற்கேட்டு நடக்கக் கூடியவளாகவும், பராசரனின் மனைவி தனலட்சுமி கணவனின் தவறைத் தட்டிக் கேட்கக் கூடியவளாகவும் நாவலாசிரியர் படைத்திருக்கிறார். இதனை,

ரொம்ப ரோஷம் பார்க்கிறார்கள், ஆன்ட்டி. கணவரிடமிருந்து வந்தது. உயிர் போகிற நிலையில் கூட, அடுத்தவர் உதவியை மாமா நாடவில்லை. அதேபோல ஆன்ட்டியும் அடுத்தவர் உதவியை ஏற்பதில்லை. தன் காலிலேயே நிற்கிறார்கள். எங்களிடம் உதவியை மறுக்கிறார்கள்(ப.150)

என்று நிகிலன் மகிமாவிடம் கூறுவதிலிருந்தும்,

தனலட்சுமியைச் சதானந்தத்திற்கு நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. அப்பொழுது சதானந்தம் காதல் திருமணம் செய்து கொண்டதால், பராசரனைத் தன் பிள்ளை எனக்கூறி சதானந்தத்தின் தந்தை தனலட்சுமியைப் பராசரனுக்கு மணம் முடித்து வைத்தார். பராசரன் அம்முதியவரின் சொத்துக்கள் அனைத்தையும் ஏமாற்றி வாங்கியபோது தனலட்சுமி அவனை எதிர்த்துக் கேட்கும் பொழுது,

ஏன் சொந்த மாமியார், மாமனாராக மனதில் வரித்திருந்தாயோ? வேண்டுமானால், கூடவே போய்ப் பணிவிடை செய்யேன்”     (ப.140)

என்று பராசரன் தனலட்சுமியிடம் கூறுவதிலிருந்தும் நாவலாசிரியர் குடும்பத்தில் பெண்கள் ஆண்களுக்குக் கட்டுப்பட்டே நடக்கின்றனர் என்று பெண்ணின் நிலைப்பாட்டினைக் குறிப்பிடுகிறார்.

பெண்ணின் துணிவு

பழங்காலந்தொட்டே பெண் என்பவள் ஆண்களுக்குக் கட்டுப்பட்டு, அவர்களின் கீழ்நிலையிலேயே வைத்து எண்ணுவது மரபு. நாகரிக வளர்ச்சியின் காரணமாக ஆண் – பெண் சமம் என்ற நிலை பரவலாகக் காணப்படுகிறது. இன்றைய நிலையில் ஆண்கள் செய்யக்கூடிய தவறுகளைச் சுட்டிக்காட்டித் திருத்தும் அளவிற்குப் பெண்களின் நிலை சற்று உயர்ந்திருக்கிறது என்று கூறலாம்.

‘தீக்குள் விரலை வைத்தேன்’ புதினத்தில் மகிமா தன் தந்தை தவறான வழியில் சொத்துக்கள் அனைத்தையும் சேர்த்துள்ளார் என்பதையறிந்தவுடன் தந்தையைக் கண்டிக்கிறாள். சொத்துக்கள் அனைத்தையும் சதானந்தத்தின் மனைவி மஞ்சரியிடம் ஒப்படைக்க வேண்டுமென்றும் இல்லையென்றால் வீட்டைவிட்டு வெளியேறுவதாகவும் கூறுகிறாள். இதனை,

அதெப்படிப்பா? நீங்கள் ஏமாற்றி அடையவில்லை என்றே வைத்துக்கொள்வோம். கீழேக் கிடந்து எடுத்த பொருள் என்றாலும், உடையவர் யார் என்று அறிந்து தெரிந்து கொடுத்துவிட வேண்டாமா? பதின்மூன்று ஆண்டுகள் கழித்து வந்த பாண்டவர்களிடம் அவர்களது சொத்தைத் துரியோதனன் ஒப்படைக்காததால் தானே, மகாபாரத யுத்தமே நடந்தது? அதை விடுங்கள் மனிதாபிமான நிலையில் பாருங்கள்(ப.130-131)

என்பதிலிருந்து தந்தை செய்யும் தவறினைத் தட்டிக்கேட்டு மகாபாரதக் கதையை எடுத்துக்காட்டாகக் கூறி, தன் தந்தையிடம் துணிவாகப் பேசக்கூடியக் கதாப்பாத்திரமாகப் புதின ஆசிரியர் மகிமாவைப் படைத்திருக்கிறார். மேலும்,

இந்தப் பாவச் சொத்தில் ஒருபிடி சோறு கூட இனிநான் உண்ண மாட்டேன் இந்த வீட்டை விட்டே வெளியேறிப் போய் அவர்களுக்கு என்னாலான உதவியைச் செய்வேன்(ப.35)

என்று தன் தந்தையிடம் நேரடியாகவே தவறைத் திருத்திக் கொள்ளாவிட்டால் நான் வீட்டை விட்டு வெளியேறிவிடுவேன் என்று கூறுவதன் மூலம்  பெண்கள் துணிவுடன் சமுதாயத்தில் காணப்பட வேண்டும் என்னும் நம்பிக்கை உணர்வை வெளிப்படுத்துகின்றார்  புதின ஆசிரியர்.

பழிவாங்கும் கருவியாகப் பெண்

பெண் என்பவள் ஆண்களின் ஆசை உணர்வுகளுக்குப் பயன்படும் போகப்பொருளாகக் காணப்படுகின்றாள். பெற்றோர்கள் செய்கின்ற பாவம் பிள்ளைகளைத்தான் வந்து சேரும் என்று முன்னோர்கள் கூறுவர். பராசரனைப் பழிவாங்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட நிகிலன் மகிமாவிடம்,

அந்த மானம் கெட்ட வாழ்வு வாழ்ந்து அவனுக்குத் தண்டனை கொடு. பிறர் அறிய திருமணமில்லாமல் எவனோடாவது நீ அசிங்கமாக வாழ்ந்துக்காட்டுவது மட்டும் தான் அசுரனுக்கு உரிய தண்டனை. அந்தக் கேவலத்தை நீ மட்டும் தானே அவனுக்குக் கொடுக்க முடியும்? என்ன இந்தத் தண்டனையை உன் தகப்பனுக்குக் கொடுப்பாயா?” (ப.180)

என்று வினவுவதிலிருந்து பெற்றோரைப் பழிவாங்க வேண்டும் என்பதற்காகப் பெண்ணைத் தவறான வழியில் வழிநடத்தும் மனப்போக்கு உடையவர்களாக ஆண்கள் திகழ்கின்றனர் என்பதை இப்புதினம் காட்டுகின்றது.

முடிவுரை

பெண்ணானவள் ஆண்கள் தங்களுக்கு எவ்வளவு இன்னல்களை இழைத்தாலும் அவர்கள் செய்யும் செயல்களைப் பொறுத்துக் கொண்டு வாழும் மனப்பாங்கு உடையவர்களாகத் திகழ்கின்றனர்.

பிள்ளைகளை வளர்ப்பதில் ஆண் பெண் இருவருக்கும் சமபங்கு இருத்தல் வேண்டுமென்பதையும் கணவன் மனைவி எனும் பாகுபாடின்றி இருபால் பிள்ளைகளையும் வளர்க்க வேண்டுமென்பதையும் தம் புதினத்தின்வழி ரமணிசந்திரன் எடுத்தியம்புகிறார்.

பெண்ணுக்கு வேலைவாய்ப்பு மறுக்கப்படுதலையும் குடும்ப நிலையில் மனைவி என்பவள் கணவனுக்குக் கட்டுப்பட்டும், கணவன் செய்யும் தவறினைத் தட்டிக் கேட்கும் பாங்கினையும் இப்புதினம் வெளிப்படுத்துகின்றது.

பெண் துணிவுடன் தந்தையைத் திருத்துவதற்காக வீட்டைவிட்டு வெளியேறுவதாகவும் பெண்ணைப் போகப்பொருளாக எண்ணும் ஆண்களின் மனப்போக்கினையும் புதின ஆசிரியர் குறிப்பிட்டிருப்பது நோக்கத்தக்கதாகும்.

துணைநின்றவை

  • கல்யாணசுந்தரனார் திரு.வி., 2008, பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத்துணை, சாரதா பதிப்பகம், சென்னை.
  • பெரியார், 2012, பெண் ஏன் அடிமையானாள்? பாரதி புத்தகாலயம், சென்னை.
  • ரமணிசந்திரன், 2010, தீக்குள் விரலை வைத்தேன், அருணோதயம், சென்னை.
  • ………………..…, 2007, பாரதியார் கவிதைகள், பூம்புகார் பதிப்பகம், பிராட்வே, சென்னை.
  • ……………..……, 2010, பாரதிதாசன் கவிதைகள், மணிவாசகர் பதிப்பகம், சென்னை.

ப. புவனேஸ்வரி

தமிழ் – முனைவர் பட்ட ஆய்வாளர்

பாரதிதாசன் பல்கலைக்கழகம்

திருச்சிராப்பள்ளி – 24