ஐம்பூதங்களுள் தலையாயது இந்த மண்ணே. அதனால்தான் மண்திணிந்த நிலம் என்று மண்ணையே முதலில் கூறினான் புலவன். அத்துடன் மண்செறிந்த இந்த பூமி விசித்திரமானது. அவ்வாறு கூறுவதற்கான முதற் காரணம் ஒரு வித்து மண்ணில் விழும்பொழுது அது மண்ணால் அழியாது உறக்க நிலையிலிருந்து, குறித்த காலம் வந்தவுடன் தன்னைப் பாதுகாத்த மண்ணைப் பிளந்துகொண்டு வெளிப்படுவதற்கு மண்ணே முக்கியக் காரணியாக விளங்குகின்றது. அதேபோன்று ஒருமனிதன் அம்மண்ணிலே வி(வீ)ழும் பொழுது ஒரு விதைபோன்று அவன் மீண்டும் உயிர்த்தெழாதவாறு அம்மண்ணே அவனைச் சிதைத்து விடுகிறது. ஆக, இயற்கையானது மனிதனுக்குச் சற்று முரண்பட்டே இருக்கின்றது. இப்பேசாமுரண் மண்ணோடு மனிதனிடத்திலும் உள்ளது. அதனால்தான் மண்ணிற்கும் மண்ணையே நம்பி உயிர்க்கும் அனைத்து உயிர்கட்கும் அவன் துன்பத்தையே விளைவிக்கின்றான். இத்துன்பம் இடையறாத துன்பம். காலம் தன்பேரேட்டைப் புரட்டிப் போட்டுக்கொண்டிருந்தாலும்ர் கூட வெவ்வேறு வகைகளில் வெவ்வேறு வழிகளில் மண்ணை முதலாகக் கொண்ர்ட மனிதன் இயற்கையைச் சிதைத்துக் கொண்டிருப்பவனாகவே விளங்குகின்றான்.

‘மரம்சா மருந்தும் கொள்ளார் மாந்தர்’ எனக் கூறிய சங்ககாலம் இயற்கையைத் தன்வாழ்வியலோடு பிணைத்துக்கொண்ட காலம். தன்காதலின் இயல்பைச் சொல்லும்ர் உயர்நிலையிலும், மன, உடல் உறுதியைக்கூறும் திண்ணிய நிலையிலும், தலைவியின் அழகுநலனை எடுத்துரைக்கும் இன்பநிலையிலும், இம்மரம் எமக்குத் தங்கைபோன்றது என இயற்கையைப் பின்னிப்பிணைத்துக் கூறும் உறவுநிலையிலும், தலைவன் பிரியும்பொழுது தான் வைத்த முல்லையானது மலரும்காலத்தே வந்துநிற்பேன் எனத் தலைவியிடம் கூறும் உறுதியை மொழிகின்ற நிலையிலும், மழைபொழியும் கார்காலத்தே வந்துசேர்வேன் எனப் பொழுதை முன்னிறுத்தும் நிலையிலும், அங்கு மலரும் தளிரும், பொழுதும் பருவமும் மட்டுமே முன்னிறுத்தப்பட்டிருக்கின்றன. அகத்துடன் மட்டுமின்றி புறத்திலும் வாள், தோள் வலிமையைக்கொண்ட வரைமார்பார்கள் கூட, போருக்குச் செல்லும் முன்பாக உன்ன மரத்தைப் பார்த்துச் செல்லும் வழக்கத்தைக் கொண்டிருந்தனார் என்பதைப் புறநானூறு பதிவுசெய்துள்ளது. எனவே, வாழ்வின் பிரதிபலிப்பாக விளங்கியிருந்த அகத்திலும், புறத்திலும் இயற்கையே முன்னிறுத்தப்பட்டிருக்கின்றது. ஆனால் முக்கியத்துவப்பட்டிருக்கின்றதா? என்ற வினாவினைக் கேட்கும்பொழுது விடையேதும் இல்லாத வினாவே நம்மைக் கேள்வி கேட்கின்றது.

புறப்பாடல்களில் வீரத்தை முன்னிறுத்திச் செய்திகள் புனையப்பட்டிருப்பினும் அவ்வீரத்தின் ஊடே பிறார் நாடுகளை, குறிப்பாக இயற்கை வளங்கள் சூறையாடப்பட்டுள்ள செய்தியை அறியலாகின்றது. முரண்பட்ட மன்னார்களை அழிப்பதை விடுத்து அவார்களின் இயற்கைவளங்களை அழிப்பதுதான் வீரத்திர்ன் அடையாளமா? அவ்வாறு அழிக்கும்பொழுது அறநெறி கூறிய, குறிப்பாக செவியறிவுறூஉ துறையையும், பாடாண்திணையையும் பாடிய புலவார்கள் என்செய்தார்கள்? பிறநாட்டின் இயற்கையை அழிக்கும் அவ்வேளையில் மட்டும் இயற்கை குறித்த அறிவு மன்னார்களுக்கும், புலவார்களுக்கும்ர் நினைவு தப்பியிருக்குமோ? என்ற வினாக்கள் எழுகின்றன. இயற்கை அழித்தலை மன்னன் மேற்கொள்ளும் பொழுது அவனின் அடாத செயல் குறித்துப் புகழ்ந்து பாடுவதைத்தவிர வேறில்லை என்ற விளிம்புநிலைக்குப் புலவார்கள் தள்ளப்பட்டனரா? என்று எண்ணவேண்டியுள்ளது. இவ்வனைத்து வினாக்களுக்கும் விடைதேடும் முயற்சியில் இக்கட்டுரை நகர்கின்றது.

நாடு, ஊரினை எரியூட்டல்

சேர நாடு வேழமுடைத்து, சோழ நாடு சோறுடைத்து, பாண்டிய நாடு முத்துடைத்து என மூவேந்தர்கள் தங்களுக்குரிய பெருமையான உடைமைப்பொருளை முன்னிறுத்திப் பெருமைப்பட, தொண்டை நாடோ சான்றோர் உடைத்து எனப் பெருமை கொண்ட நிகழ்வும் இலக்கிய வரலாற்றில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. எனவே நல்நாடும் ஊரும் பிறார்ர்போற்றும்படித் திகழவேண்டும் எனில் நற்சான்றோர்கள் இந்த அவனியில் இருத்தல் வேண்டும். அதுவே சிறந்த வளம். இதைமறந்த மன்னார்கள் ‘செல்வத்தாபத்தை நெஞ்சினில் வளார்த்திடல் மன்னார் சாத்திரத்தே முதற்சூத்திரம்’ என்ற பாரதியின் வார்த்தைகளுக்கிணங்க பிறார்நாட்டைக் கொள்ளையிடக் கருதியிருக்கும் நிலையில் மன்னனோடு உறைந்துள்ள புலவார்கள் அவனுக்கு அறத்தை வலியுறுத்துவதை விடுத்துப் போர்வெறி ஊட்டியதை இறைவனே! நின் மாலை பகைவர்தம் நாடுகளை எரிப்பதனாலும் பரவும் புகை வீசுவதாலும் வாடட்டும் என்பதை,

வாடுக!இறைவ நின் கண்ணி – ஒன்னார்

நாடுசுடுகமழ்ர்புகை எறித்தலானே    (புறம் 6:21-22)

என்றஅடிகளால் உணரமுடிகின்றது.

இருபெரும் வேந்தார்கள் முரண்பட்ட காரணத்தால் அவ்வேந்தர்களுக்கு உட்பட்ட நாட்டைச் சேர்ந்த அனைத்து உயிர்களும் போர்காரணமாகத் துன்புறும். ஆகவே போர் என்பது அழிவைத்தரும் சக்தியாக இருக்கின்றது. போரினை நடக்கவிடாது சந்துசெய்வித்தலே புலவார்களுக்கு அழகு. ஆனால் இதற்கு மாறுபட்டவகையில் நீர்நிலைகளில் வளரும் வல்லை, ஆம்பல், கொன்றை, பாகல் செடிகளைக் கொண்டதும் கரும்பு அல்லாது வேறுகாட்டை அறியாததுமான மருதநிலம் பாழாகுமாறு கடிநாட்டைத் தீயில் எரிக்கப்பட்டதை,

கரும்பு அல்லது காடுஅறியா

பெருந்தண் பணை பாழ் ஆக

ஏம நல் நாடு ஔர்எரி ஊட்டினை         (புறம் 16:14-16)

என்று புகழ்கிறார். இது தகுமா? ஊண்தரும் விளைவயலை அழித்தல் முறையா? எனக் கேள்வி கேட்காது அவன் செயல் குறித்துப் புகழ்ந்தது மட்டுமின்றி அதனினும் உச்சமாக, மன்னனே! நீ அச்சம் தரத்தக்க நல்ல போரைச் செய்தாய் என்பதைப் புகழும் ‘நாமநல்அமார்’ (புறம்-16:17) என்ற அடியில் அழிவைத்தரும் போரை ‘நற்போர்’ என்று போற்றும் விந்தையைக் காணமுடிகின்றது. ஒரு புலவனிடத்தில் உமக்கு நரைதிரை வாராமைக்கான காரணம் எது எனக் கேட்க ‘நல்மனைவி மக்களோடு எம்மூரில் சான்றோர் பலார் உள்ளனர். அதனால் நரைதிரை வரவில்லை’ என்றானாம். ஆக ஊர் என்பது குடியிருப்புகளால் நிறைந்தது அல்ல, அது சான்றோர்களால் நிறையப்பட்டதாக இருக்கவேண்டும். அப்படி இருப்பின் ஊர்களும் ஊர்களை உள்ளடக்கிய  நாடுகளும் மனிதவளம் பெறும். ஆனால் பொருள் வெறி கொண்ட மன்னனும் அதை ஊக்குவிக்கும் புலவார்களும் இருப்பின் பிறநாடுகள் எந்நிலை அடையும் என்பதற்குப் புறப்பாடல்களே சான்றாகின்றன.

மண்ணால் அடைக்காது மீனால் அடைக்கும் நீர்வருவாயை உடைய ஊர்களைக் கொண்டு எதிரி நாடுகள் விளங்கும். நீகொள்ளையை விரும்பினை ஆகையால் அந்நாடுகள் நல்ல பொருள்கள் இல்லாது அமையும் என்பதை,

பகைவார்

ஊர்சுடு விளக்கத்து அழுவிளிக் கம்பலைக்

கொள்ளை மேவலை        (புறம் 7:7-9)

என்ற அடிகளில் மன்னனது விருப்பமும், அதை உணார்ந்த புலவார்களின் உணர்வும் புலப்படுகின்றது. ஆகவே  ஊரும் ஊரை ஆதாரமாகக் கொண்ட நாடும் இல்லாது போயின் மனிதவாழ்வு எப்படி நிகழும்? “தேருடன்  முல்லைக்கு  ஈத்த” (புறம்-201:2-3) வாழ்ந்த இப்பூமியில் இயற்கையை அழிப்பதனாலேயே பகை நாட்டைக் கைப்பற்ற முடியும் என்ற எண்ணம் கொண்ட மன்னனால் மக்களை எவ்வாறு வாழ்விக்கமுடியும்? என்ற எண்ணம் எழுகின்றது. தன் செந்நாவால் பொய்கூறேன் எனத் தீர்க்கமாகக் கூறிய புலவர்கள் இயற்கையை அழிக்கும் மன்னனை இடித்துரைக்காது ஏன் புகழ்ந்தார்கள்? அவர்கள் பாடிய அறநெறி அன்றைய பொழுதுக்கும் அந்தந்தச் சூழலுக்கும் மட்டுமே பாடப்பட்டதா? என்ற வினாக்களே மேலெழும்புகின்றன. அவ்வாறெனில் அழிக்கப்பட்ட நாடுகளைச் சார்ந்த சான்றோர்களும் மக்களும் அப்புலவன் பாடிய அறநெறி குறித்த வேறொரு பாடலைப் படிப்பின் எக்கண்ணோட்டத்தில் கண்டிருப்பார்? என்று நினைக்கும் பொழுது அப்புலவனின் எழுத்துக்கு, அவன் கூறிய அறிநெறிக்கு இழிவான சிரிப்பையே பரிசாகத் தந்திருப்பார் என எண்ணவேண்டியுள்ளது.

நீரியல் மேலாண்மை

‘நீரின்றி அமையா உலகு’  ‘பருகுவோர்க்குத் தானும் ஒர் உணவாக இருப்பது நீர்’ ‘நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும்’ என்பதை வள்ளுவன் வார்த்தைகள் உணார்த்தும். இக்கருத்துகளுக்கு உச்சமாகக் குடபுலவனார் என்னும் புலவர் நீரின் மேன்மை குறித்துக் கூறும்பொழுது உணவு எனப்படுவது நிலத்துடன் நீரும் ஆகும். நிலத்தையும் நீரையும் ஒன்று சேர்த்தவர் இவ்வுலகில் உடலையும் உயிரையும் கூட்டிப் படைத்தவர் ஆவர் என உழவனையும் இயற்கை ஆர்வலர்களையும் கடவுள் நிலைக்கு இட்டுச் செல்வதை,

நீரும் நிலனும் புணாரியோர் ஈண்டு

உடம்பும் உயிரும் படைத்திசினோரே (புறம் 18:22-23)

என்ற சத்தியவாக்கினை அழுத்தமாகக் கூறியுள்ளார். இந்நிலையை உணர்ந்தும் நீர்நிலைகளின் அவசியத்தை உணராது பகைவர் நிலத்தைக் கழுதையைப்  பூட்டிப் பாழ் செய்தும் விளைவயலில் குதிரையின் குளம்புகள் படியுமாறு தேரைச் செலுத்தியும் யானைகளை நீர்நிலைகளில் படியச்செய்தும் கலக்கியுள்ள செய்திகளை,

ஒளிறுமறுப்பின் களிறு அவர

காப்பு உடைய கயம் படியினை           (புறம் 15:9-10)

என்ற பாடலடிகளோடு

களிறு படிந்து உண்டென கலங்கிய துறை (புறம் 23:2)

என்ற பாடலடியும்

ஆறு ஊரானால் என்ன அக்கரைக்காரன் பாழானால் என்ன

என்ற பழமொழியும் அன்றைய காலத்திலும் நீரியல் மேலாண்மை இல்லாமையை உணார்த்துகின்றது. அத்துடன் கூர்மையான நல்ல அம்புடன் வளைந்த வில்லுடைய வீரர்கள் எதிரி நாட்டில் கைக்கொள்ளும் அளவு கொண்டபின் எஞ்சிய பொருளைப் பகைவர்கள் கொண்டு உணவாக்காதவாறு விளைநிலங்கள் அழிக்கப்பட்டதையும் கோடரி பாய்தலால் ஊர்தோறும் சோலைகளில் உள்ள காவல் மரங்கள் நிலைகுலைந்ததையும் வீடுகளை எரியூட்டியமையையும் அறியலாகின்றது (புறம்.23). இதில் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று உள்ளது. அது என்னவெனில் மரங்களை அழிக்கும்பொழுது பகைவீரர்கள் ஊர்தோறும் சென்று முழுவதும் அழித்ததை,

ஊர்தொறும்

கடிமரம் துளங்கிய காவும்    (புறம் 23:8-9)

எனும் அடிகளில் உணார்த்தியுள்ளார் கல்லாடனார். மழைக்குக் காரணமான மரத்தையும் அம்மரத்தால் பொழியும் நீரையும் காக்கும் மேலாண்மை அறிவைப் பெற்றிருக்கவில்லை என்பதுடன், வெவ்வேறு மலைகளில் வாழ்ந்த புலவார்கள் வற்கடம் காரணமாக மதுரை வந்தனர் என்றும், மீண்டும் மழைபெற தன்இருப்பிடம் செல்லும் பொருட்டு தனைக்காத்த பாண்டியனிடம் கூறாது ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாடல்வீதம் எழுதி விட்டுச் சென்றனர் என்றும், அதையறிந்த பாண்டியன் அப்பாடல்களை ஆற்றில்விட அந்நீரை எதிர்த்து வந்த பாடல்களே நாலடியார்  என்பதைச் செவிவழிச் செய்தியால் அறியமுடிகின்றது. ஆக இயற்கையைப் பாதுகாக்காது வற்கடத்தால் எழுந்த இலக்கியம் நாலடியார் என்பதும் இங்கு சிந்திக்கத்தக்கதுடன் சங்கம்மருவிய காலத்திலும் இயற்கையைப் பாதுகாக்காத தொடார்ச்சியையும் பொருத்திப் பார்க்க வேண்டும். நீராதார அழிவுகுறித்துக் கூறுகின்ற அதே வேளையில்,

நிலன் நெளி மருங்கில் நீர்நிலை பெருகத்

தட்டோர் அம்ம,  இவண் தட்டோரே

தள்ளாதோர் இவண் தள்ளாதோரே (புறம்  18:28-30)

என்ற வரிகளில் குடபுலவியனார்   நிலம் குழிந்த இடங்கள் தோறும்  நீர்நிலை பெருகச்செய்தல் வேண்டும் அவ்வாறு நிலத்துடன் நீரைக்கட்டியோர் இவ்வுலகில் நிலைக்குமாறு நற்பெயரை உலகுள்ளவரை நிலைத்த புகழை அடைவர். அவ்வாறு செய்யாதவர் புகழ் அடையார் என்று கூறியுள்ளார். இவ்வாறு ஒரு புலவர் நீரின் நிலத்தின் அவசியத்தைக் கூற, மற்ற புலவர்களோ அதற்கு முரண்பட்டு பிறர் பகைப்புலத்திற்குச் சென்று நீர்நிலையை அழித்தலாலேயே அவன் புகழ்பெறுவதாகக் கூறி, மன்னனிடம் இருக்கின்ற குறைந்த அளவு இயற்கை அறிவினையும்  இயற்கையைச் சிதைக்கின்ற பான்மையையும் பயன்படுத்திக் கொண்டு அவர்களுக்குப் போர் வெறியூட்டியுள்ளனர் என்பதுடன் அவ்வவ்வேளையில் ஏற்படும் பசியெனும் வயிற்றுத்தீயை அவிக்கவே நீராதாரத்தை அழிக்கும் மன்னனின் ‘வீரத்தை’ப் புகழ்ந்து பாடியமையை அவ்வப்புலவார்களின் பாடல்கள் மூலம் உணரமுடிகின்றது.

ஓரறிவு குறித்த மேலாண்மை

மன்னனுக்கு இணையாக அவன் வளார்த்த காவல்மரங்கள் பாதுகாக்கப்பட்டன. அவற்றிற்கு ஏதாவது ஊறுசெய்யின் அவர்களுக்குத் தண்டனை கிடைக்கும் என்பதோடு அதனுடைய பயனை மன்னன் தவிர்த்த பிறர் அனுபவிப்பின் அவர்களின் உயிர் பறிக்கப்படும் என்பதைப் பெண்கொலை புரிந்த நன்னனின் வரலாற்றின் மூலம் உணரலாம். மரத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்த அக்கால மன்னர்கள் வேப்பம் பூ மாலையையும் பனம்பூவையும் ஆத்திமாலையையும் அணிந்ததோடு போரில் ஈடுபடும் வீரர்களுக்கும் புறத்திணைகளுக்கும் பூவினையே அடையாளப்படுத்தியுள்ளனர். இதனுடைய எச்சம் இன்றளவும் உள்ளதை நம்மாநில மரமாகப் பனையையும் தேசிய மரமாக ஆலமரத்தையும் வைத்துள்ளதன் மூலம் உணரலாம்.

மாறுபட்ட மன்னனோடு போரிட விரும்பிய மன்னன் முதலில் அவன் ஊரின் மரங்களை வீழ்த்த நினைத்து அதனைச் செயல்படுத்துகின்றான். அவ்வாறு வெட்டும்பொழுது மானமுடைய மன்னன் மரத்தின் மீது விழும் கோடரி தன்மீது பட்டது போன்று தன்மானம் கொண்டு போர் செய்ய வருவான்; வரவேண்டும். அவ்வாறு வாராது இருப்பின் அவன் மானம் இழந்தவனாகக் கருதப்படுவான் என்பதோடு அம்மரத்தை வெட்டிய மன்னனுக்கும் பழி ஏற்படும்.

கடிமரம் தடியும் ஓசை தன்ஊர்…..

நெடுமதில் வரைப்பின் கடிமனை இயம்ப

ஆங்கு இனிது இருந்த வேந்தனொடு

மலைத்தனை என்பது நாணுத்தகவு உடைத்தே     (புறம் 36:9-11,13)

என்ற அடிகள் பகைவர் சினத்தை மிகுவிப்பதற்காக காவல்மரத்தை வெட்டிய செய்தியை உணர்த்துகின்றது. ஓர்அரசனுக்குப் பெண்தராது இருப்பின் அவனுடைய நாட்டில் உள்ள பருத்த அடிகளைக் கொண்ட மரத்தில் பெண்கேட்ட மன்னன் தன் யானையைக்கட்டி அக்காவல் மரத்தை அசைக்கச்செய்து அங்குள்ள மக்களை உளவியல் அடிப்படையில் துன்புறுத்திய செய்தியைக் கபிலர்,

வினைநவில் யானை பிணிப்ப

வோர் துளங்கின நம் ஊருள் மரனே       (புறம் 347:11-12)

என்னும் பாஅடிகளில் உணார்த்தியுள்ளார். இவ்வாறு தன்மானத்தின் அடையாளமாக மரத்தை வைத்ததற்கான காரணம் யாது? உண்மையாகவே மரத்தை மக்கள் நேசித்தனரா? என ஆராயும்பொழுது அகழியையும் காவற்காட்டையும் காத்து இறந்த வீரருடைய வெற்றியைச் சொல்லும் செய்தியில் நொச்சி மரத்தைக் காதல் மரமாகக் குறித்துள்ளார் பெயர் தெரியாப் புலவர். அவ்வாறு கூறுவதற்கான காரணத்தை அவர் விளக்கும் பொழுது நொச்சி இலைகள் இளமகளிரின் ஆடையாகவும் மதிலுள் வரும் எதிரி வீரர்களைத் தடுத்து நிறுத்தும் வீரனின் பெருமை பொருந்திய தலையில் அணியப்படும் அணியாகவும் இருக்கின்றது என்ற செய்தியை,

தொடியுடை மகளிர் அல்குறும் கிடத்தி

ஊர்ப் புறங்கொடாஅ நெடுந்தகை

பீடுகெழு சென்னிக் கிழமையும் நினதே    (புறம் 272:5,7-8)

என்ற புறநானூற்று அடிகளில் பதிவுசெய்துள்ளார். ஆக மரங்களை அதன் தளிர்களை  மனிதர்கள் தன்னுயிர்போல் நேசித்திருக்கிறார்கள் என்பதுடன் தனக்குப் பயன்படாத செடிகளையும் கொடிகளையும் ‘பூடு’ என்ற சொல்லால் ஒதுக்கி வைத்துள்ளனர். ஆனால் அனைத்து உலகும் தொழும் தெய்வங்களோ அனைவரும் விரும்பாத எருக்கம்பூ மாலையைச் சூட்டினும் அதை வெறுத்து ஒதுக்கவில்லை என்பதை,

நல்லவும் தீயவும் அல்ல குவி இணார்ப்

புல்இலை எருக்கம் ஆயினும் உடையவை

கடவுள் பேணேம் என்னா                 (புறம் 106:1-3)

என்ற அடிகளால் உணார்த்தியுள்ளர். மனிதன் இப்பூமியில் வாழ்வதற்கு எவ்வளவு உரிமை உள்ளதோ அவ்வளவு உரிமை இப்பூமியில் தோன்றும் அனைத்து உயிர்களுக்கும் உண்டு என்பதை மேற்கண்ட அடிகள் உணர்த்துவதாயினும் மரங்களை அழிப்பதையும் அதன்மூலம், அம்மரத்திற்கு உரிமையுடைய மன்னர்களின் மானமும் அம்மரம்போல வீழ்வதாகவும் கொண்டு அழிந்த செய்தியுடன்,

சீர்இயல் வெண்குடைக் காம்பு நனிகொண்டு

கண் இடைநவமணி ஒழுக்கி        (சிலம்பு. புகார். அரங். 115-116)

என்ற சிலப்பதிகார அடியில் மன்னனின் கொற்றக்குடையைத் தாங்குவது மரக்கோல். எதிரியின் அம்மரக்கோலை புனித நீராட்டி தலைக்கோல் பட்டம் அளித்தசெய்தி மூலம் மரத்தில் மறமும் தன்மானமும் பொதிந்திருப்பதோடு “புல்லும் மரனும் ஓரறிவினவே” (தொல்.மரபு.1527) என்ற தொல்காப்பியரின் கூற்றுப்படி ஓரறிவினதான மரத்தைக் காப்பாற்றாதவன் எப்படி ஆறறிவினதான மனிதனைக்காப்பான் என்ற கருத்தமைவுடன் ஒருமன்னனின் காவல்மரத்தை அழிக்கும்பொழுது அது அம்மன்னன் தோற்றுப்போனதாகவோ, தன்மானம் இழந்தவனாகவோ கருதப்படுவான் என உளவியல் அடிப்படையில் உணரமுடிகின்றது.

மலைவளம்

மலைதோறும் குன்றுதோறும் குமரக்கடவுளை வைத்து வழிபடல் வைதீகமரபு. வளம் இருக்கும் இடத்தில் இறை உருவம் வைக்கப்படும் பொழுது அங்கு வாழும் மாந்தார்களுக்கு மனமகிழ்ச்சி ஏற்பட்டு அதன்வழி உடல்நலம் சீர்பெறும் என்பதைக் கருத்தில் கொண்டே அவ்வாறு அமைத்துள்ளனர். அத்துடன் மலைகளில்தான் நீரானது சீவ ஊற்றாகப் பெருகி உலகை நனைக்கும் ஆறாகப் பெருகுகிறது. ஆக மலையில் பல்வளம் உள்ளது என்பதையும் தேடுதலில்லாத உணவு கிடைக்கும் என்பதையும் கபிலர்,

உழவார் உழாதன நான்கு பயன் உடைத்தே

ஒன்றே சிறியிலை வெதிரின் நெல் விளையும்மே

இரண்டே தீம்சுளைப் பலவின் பழம் ஊழ்க்கும்மே

மூன்றே கொழுங்கொடி வள்ளிக்கிழங்கு வீழ்க்கும்மே

நான்கே அணிநிற ஓரிபாய்தலின் மீது அழிர்ந்து

திணிநெடுங் குன்றம் தேன் சொரியும்மே   (புறம்ர்-109:4-9)

என்ற புறப்பாடல் மூலம் கபிலர் காலத்திய மலைவளத்தை உணரமுடிகின்றது. மூவேந்தர்களால் பாரி இறந்துபட திக்கற்ற அவனின் மகள்களைக் காப்பாற்றப் பொறுப்பேற்றுக் கொள்கிறார் கபிலர். பாரியை இழந்த துயரம் ஒருபுறம் இருப்பினும் பாரி மகளிரின் பேதைமைக் குணத்தை நினைத்து ஏற்படும் துயர் மற்றொரு புறம் இருப்பினும் என்றும் வற்றாத வளம் கொண்ட பாரியின் பறம்புமலையை விடுத்துச் செல்லும் ஏக்கநிலையே அவர்தம் பாடல்களில் ஓங்கி ஒலிப்பதைக் காணலாகின்றது. கடையெழு வள்ளல்களில் பாரி புகழப்படுவதற்குக் காரணம் அவனின் இயல்பான கொடைத்தன்மையே. எனினும் அக்கொடைத் தன்மைக்கு ஊற்றுக்கண்ணாக இருந்தது அப்பறம்பு மலைதானோ? என்ற நினைவு எழுகின்றது. மழை இல்லாது போய்விடின் தானம் இல்லாது போய்விடும் என்ற வள்ளுவனின் வாக்கிற்கொப்ப பறம்பின் வளம் இல்லாது போயிருப்பின் அவனின் கொடைத்தன்மையும் இல்லாது போயிருக்குமோ? என எண்ணமுடிகின்றது. எனவே பறம்புமலையை விட்டுப் பாரிமகளிரை அழைத்து வரும்பொழுது தம் கையறுநிலையை நினைத்து வருந்தியதைவிட பாரியின் வளம்மிகுந்த மலை பறிபோனதை நினைத்தே கழிவிரக்கம் கொள்வதை, பாரியை நாடிச் செல்லும் பாணர்களே! நகரை எரித்தலால் ஏற்படும் புகைபோன்று மேகங்களால் சூழப்பட்ட மலையைக் கொண்ட பறம்புமலையினைப் போய்ச் சேருவீராக என்பதை “முனைசுட எழுந்த மங்குல் மாப் புகை, மலைசூழ் மஞ்சின்” (புறம் 103: 6-7) என்ற அடிகளாலும், மது இருந்த சாடியை வாய்திறப்பவும் ஆட்டினை வெட்டிச் சமைத்த கொழுந்துவையையும் ஊன் சோற்றையும் விரும்பியவாறே அளித்தும் செல்வத்தால் நிறைந்தும் எம்மொடு நட்புச்செய்தாய் (புறம் 113) எனப் பறம்புமலையைப் பார்த்துப் பரிதவித்துக் கூறுமிடத்தும், யானை மென்றுபோட்ட சக்கைபோல மதுப்பிழிந்து போட்ட சக்கையிலிருந்து மதுச்சேறு ஒழுகும் முற்றத்தையும் தேர்வழங்கும் இருப்பையும் உடையது பறம்புமலை (புறம் 114) என்று அம்மலையின் உயர்வினைக் கூறுமிடத்தும் பறம்பின் வளத்தை உணரலாம்.

கலையும் கொள்ளாவாக, பலவும்

காலம் அன்றியும் மரம் பயம்  பகரும்

யாணார் அறாஅ வியல்மலை அற்றே (புறம் 116:12-14)

என்னும் வரிகளில் பழங்களை உண்ணும் விருப்பத்தையுடைய குரங்கும் பழத்தை வெறுத்ததோடு மட்டுமின்றி உரிய காலமன்றியும் காயும் பழமும் விளைவித்துக் கொடுக்கும் புதுவருவாய் ஒழியாத அகன்றமலை பறம்புமலை என்பதனால் வளத்தின் உச்சத்தைப் பறம்பு பெற்றிருந்ததை உணரமுடிகிறது. அவ்வாறு வளமுடைய பறம்பினை மூவேந்தர்கள் கொண்ட பொழுது பாதுகாத்தனரா? பாடலில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றதா? என்ற வினாவிற்கு புறப்பாடல்களில் விடைகாண முடியவில்லை. மேலும் “வானத்து, மீன்கண் அற்று, அதன் சுனையே” (புறம் 109:9-10) என்ற அடியில் பாரியின் பறம்புமலையில் வானத்து விண்மீன்கள் போன்று எண்ணிலடங்காச் சுனைகள் இருந்ததைப் பதிவு செய்துள்ளமையையும், அவைகள் பேரரசர்களின் மண்ணாசைக்கு ஈடுகொடுக்க முடியாமல் சிதைக்கப்பட்டிருக்கலாம் என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும்.  அம்மலைவளம் மட்டுமின்றி அதைச் சார்ந்த பிற நிலத்தின் வளத்தைப் பாதுகாத்த அறிவுநிலையைப் பெற்றிருந்தனரா? என நோக்கும்பொழுது இயற்கையைக் காத்தலைவிட அதை அழிக்கச் செய்வதிலேயே அதிக ஆர்வம் கொண்டிருந்தனர் என்பதைக் காரிக்கண்ணனார் தம் பாடலில் தெளிவாக்கியுள்ளார். நீ பகைவர் நாடுகளைக் கொள்ளும்பொழுது அவர்களின் வயலை நின்வீரர் கொள்ளையிடட்டும், பெரிய ஊரினைத் தீயிட்டு எரிக்கட்டும் நின் பகைவர்களை அழிக்கட்டும் என்பதனை,

இறங்கு கதிர்க் கழனி நின் இளையரும் கவார்க

நனந்தலைப் போர்ஊர் எரியும் நைக்க

மின்னு நிமிர்ந்தன்ன நின்ஒளிறு இலங்கு நெடுவேல்

ஒன்னார் செகுப்பினும் செகுக்க     (புறம் 57:6-9)

என்ற  பாடலடிகளால் உறுதிப்படுத்துகிறார். மருதன் இளநாகனாரோ இதை மேலும் உறுதிப்படுத்தும் விதத்தில் வழுதியிடம் போர் செய்ய வருவோரின் ஊர் நீர்வருவாயிலிருந்து நீங்கும், தெய்வங்கள் தாம் உறைந்த இடங்களிலிருந்து அகன்று, பலிபெறும் இடங்களை மாற்றிக்கொள்ளும். அப்பாழான இடங்களில் சூதாடுகையினால் இடம் குழியும். அவ்விடத்தில் கானக்கோழி முட்டையிடும் காடாகிக் கெட்டழியும் என்ற கருத்தமைவை,

காடுஆகி விளியும் நாடு உடையோரே(புறம் 52:17)

என்று எதிரி நாட்டுக்கு இரங்குவதைக் காணலாகின்றது. ஔவையும் அதியனைப் புகழும் இடத்து நெற்கதிர்கள் சுழலும் வயல்களுடன் மிகுதியான நீர்ப்பரப்பை உடைய அப்பகைவர் தம் நாடுகள் இரங்கி வருந்துமளவு அழிவனவே (புறம் 98) எனப்பதிவு செய்துள்ளார். இயற்கையின் வளத்தினை முரண்பட்ட மன்னர்கள் இடையறாது அழிப்பின் அது வளமற்றுப் போவதுடன் உண்ண உணவு கிடைக்காது போய்விடும்.  எனவே, இயற்கையின் முக்கியத்துவத்தை,

விரகு இன்மையின் வித்து அட்டு உண்டனை (புறம் 227:2)

என்ற ஆடுதுறை மாசாத்தனாரின் கூற்றாலும், “வாழ்தலின் வரூஉம் வயல்வளன் அறியான், வீழ்குடி உழவன் வித்து உண்டா அங்கு” (புறம் 230:12-13) என்ற அரிசில்கிழாரின் வாக்காலும் இயற்கை எனும் வித்தினை உண்டு அடுத்த வேளைக்கான உணவின்றித் திண்டாடும் அறிவிலிக் கூட்டமாய், இயற்கைப் பாதுகாப்பையும், பல்லுயிர்ப் பெருக்கத்தையும் அறியமாட்டாதவார்களாய் அறியினும் அதைக்கருத்தில் கொள்ளாதவார்களாய்ப் புலவர்கள் பாடும் புகழ்மயக்கத்தால் அரசர்கள் அன்றைய பொழுதுக்கு மட்டும் செவிக்கு இன்பத்தையும் புலவர்கள் தன்வயிற்றுப் பாட்டுக்கான உணவையும் பெறப்பட்டவார்களாகவே வாழ்ந்திருக்கின்றனர் என்பதை அறிய முடிகின்றது.

இயற்கையின் ஆற்றல்

எண்ணும் எண்ணங்கள் எங்குமே பாயும் என்பது மனித சிந்தைக்குக் கூறப்பட்ட நற்சான்று. ஆனால் மனிதன் எவ்வளவு அறிவு கொண்டவனாக இருப்பினும் அவனுக்கு ஆற்றல் கொடுப்பதாக விளங்குவது இயற்கையே. இயற்கை இல்லையேல் மனிதவாழ்வு தொலைந்து போயிருக்கும். இதை உறுதிப்படுத்தும் முகத்தான் ஊன்பொதி பசுங்குடையார் எனும் புலவர்,

கழிந்தது பொழிந்தது’ என வான்கண் மாறினும்,

தொல்லாது விளைந்தது’ என நிலம் வளம் கரப்பினும்,

எல்லா உயிர்க்கும் இல்லால் வாழ்க்கை  (புறம் 203:1-3)

எனும் அடிகள் கடந்த காலத்தில் பெய்தேன் எனக்கருதி பெய்யாது விட்டாலும், முன்பு விளைந்து விட்டேன் எனக் கூறி நிலம் விளையாது போயினும் இவ்வுலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் உயிர்வாழ்க்கை இல்லை என்ற பொருள் விளக்கத்தால் மேகம் நீராகவும், நீர் ஆறாகவும், ஆறால் நாகாரிக உருவாக்கமும் பெற்றமனிதன் இயற்கையை முற்றிலுமாகச் சிதைத்தான். பின்னார் நாகாரிகத்திலிருந்து தன்னை முற்றிலுமாக விடுவித்துக் கொண்டு மீண்டும் இயற்கைவளம் உள்ள இடத்தை நாடிச்செல்லும் கால்நடையாகவே மாறும்காலம் விரைவில்வரும் என்பதற்கு இன்றைய இயற்கைப் பேரிடர் நிகழ்வே கட்டியம் கூறுகின்றது. அத்துடன் நாடானது வளமும் நலமும் பெறுவதற்குச் செல்வமும் படைக்கலன்களும் தோள்வலிமையும் பாதுகாப்பு அரணும் வருமுன் பகையழிக்கும் திறனும் சூழ்ச்சியும் தேவை. இவையனைத்தும் எதிரி மன்னனிடமிருந்து பாதுகாத்துக்கொள்வதற்கான வழிவகையே. இவ்வாறு வரும்  புறப்பகையை இனங்கண்டு எளிதில் அழித்துவிடலாம். ஆனால் உட்பகையை அதுவும் மக்கள் பகையை இனங்கண்டு அவர்களை அழிப்பதென்பது இயலாத காரியம். ஆக தன்நாட்டு மக்களின் உட்பகையையும் எதிரிகளின் சூழ்ச்சியையும் எவ்வாறு தடுப்பது எனச் சிந்திக்கும் பொழுது வெள்ளைக்குடி நாகனார் என்னும் புலவார்,

பகடு புறந்தருநார் பாரம்ர் ஓம்பி

குடி புறந்தருகுவை ஆயின், நின்

அடி புறந்தருகுவார் அடங்காதோரே         (புறம் 35:32-34)

என்னும் அடிகளில் ஏரைப் பாதுகாத்து உழவு புரிவோர்தம் குடியைக் காத்தும் அதனால் நின் குடிமக்களையும் காத்துவருவாய். அவ்வாறாயின் நின் பகைவரும் நின் அடியைப் போற்றி வணங்குவார் என்னும் பொருளில் உழவையும் உழவோடு தொடர்புடைய இயற்கையையும் பாதுகாப்பின், உலகானது ஆட்சிசெய்பவனின் கையில் நிலைத்து நிற்கும் என்பதுடன் இயற்கையே எல்லாம் வல்லது என மெய்ப்பிப்பதை உணரமுடிகின்றது.

குறிப்பாகச் சில

புறநானூற்றில் பாடப்பட்டுள்ள பாட்டுடைத் தலைவர்களில் பெருமன்னர்களை விடக் குறுநிலத்தலைவர்களே மிகுதி. ஆயினும் நாட்டை எரியூட்டுதல், நீர்நிலைகளைக் கலங்கச்செய்தல், காவல்மரத்தை வீழ்த்துதலுமாகிய செயல்களை பெருநிலமன்னர்களே செய்திருக்கின்றனர் என்பதைப் புறநானூறு பதிவுசெய்துள்ளது.

முரசுகட்டிலில் படுத்துறங்கிய புலவனுக்கு மன்னன் கவரி வீசினான் என்ற ஒருசெய்தி பதிவாகியிருப்பினும் புலவனை எதிரிநாட்டு ஒற்றன் எனச் சந்தேகித்த செய்தியும், புலவர்களின் வரிசையறியாது பரிசில் நல்கும் பண்பும், பரிசு கொடுப்பினும் அதைக் காலம் தாழ்த்திக் கொடுக்கின்ற செய்தியும், மீண்டும் மீண்டும் வறுமை எய்தி மன்னனிடமே யாசிக்கும் வாழ்வும், புலமை கொண்டு வறுமை வெல்வதற்கான போராட்டமும் எனப் புறநானூற்றுப் பாக்களில் புலவர்களின் துயர் பரவலாக இடம்பெற்றுள்ளது. எனவே தன்வாழ்வு கருதி, தன் குடும்பம் கருதி இயற்கையைச் சிதைக்கும் மன்னனை இடித்துரை செய்யாது அச்செயலையே புகழ்ந்துபாடும் விளிம்புநிலை மாந்தார்களாகவே புலவர்கள் இருந்துள்ளனர் என்பதை உணரமுடிகின்றது.

“யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற வைரவரிகளின்படி போர்வெறியும் மண்ணாசையும்  கொண்ட மன்னர்கள் அனைத்து ஊரும் தனது ஊரே எனக் கொண்டாலும்  அங்கு வாழ்ந்த மக்களை கேளிராகக் கொள்ளாது அவர்களின் வீடு மற்றும் ஊர்களுக்கு எரியூட்டி அங்குள்ள மரத்தையும் நீர்நிலைகளையும் சிதைத்து இருப்பதன்மூலம் அவ்வைர வரிகளை மறுபரிசீலனை செய்யவேண்டிய நிலைக்கு மன்னர்கள் ஆளாக்கியுள்ளதை உணர முடிவதோடு அவ்வாறு இருக்கவேண்டும் எனக் கனவு காணும் துயரத்தின் குரலாக ஒலித்திருக்குமோ? என ஐயம்கொள்ள வேண்டியுள்ளது.

துணைசெய்த நூல்கள்

  1. சுப்பிரமணியன் கு.வெ. (உ.ஆ), புறநானூறு. நியூசெஞ்சுரி புக்ஹவுஸ் (பி) லிட்.,      சென்னை.
  2. மாணிக்கவாசகன் ஞா. (உ.ஆ), சிலப்பதிகாரம், உமா பதிப்பகம், சென்னை.
  3. சுப்பிரமணியம் ச.வே. (உ.ஆ), தொல்காப்பியம் தெளிவுரை, மணிவாசகர் பதிப்பகம்,
  4. சென்னை.
  5. பாரதியார் கவிதைகள், பாப்புலார் பப்ளிகேசன்ஸ், சென்னை.

முனைவர் நா.பரமசிவம்

உதவிப்பேராசிரியர்

 தமிழ்த்துறை

டாக்டர் என்.ஜி.பி கலை அறிவியல் கல்லூரி (தன்னாட்சி)

 கோவை – 641 048.