புலம்பெயர்வு காரணமாக ஒரு நாட்டின் பண்பாட்டு அடையாளம் எவ்வாறு புலம்பெயரும் மக்களால் தம் கண்முன்னே இழப்புக்கு உள்ளாகின்றது என்பதைப் புலம்பெயர் ஈழத்தமிழ் மக்களின் வாழ்க்கை நிகழ்வு கொண்டு அடையாளப்படுத்துகின்றது இக்கட்டுரை.

புலம்பெயர்வு                                                       மனிதன் தனக்கு நேரும் பணிவாய்ப்பு மற்றும் தவிர்க்க இயலாத  காரணங்களால் தான் வாழும் புலத்திலிருந்து (இடம்) வேறு ஒரு புலத்திற்குப் பெயர்ந்து செல்லுதலைப் புலம்பெயர்வு என்று அழைக்கின்றோம். இப்புலம்பெயர்வானது பெரும்பான்மையாக

 • பொருளாதார ஆதாரமின்மை
 • இயற்கைச் சீற்றங்கள்
 • அரசியல் காரணங்கள் (மதம், சாதிக் கட்டுப்பாடுகள்)
 • படையெடுப்புக்கள்
 • சொந்த விருப்பு
 • பண்பாட்டு ஈர்ப்பு

என்பன போன்ற பல காரணங்களால் நிகழ்கின்றது. ஆனால் மேற்கூறிய காரணங்களால் மட்டுமின்றி, புலம்பெயர்தல் என்பது சில நாடுகளில் மக்களின் மேல் கட்டாயமாய்த் திணிக்கப்படுவதும் உண்டு.

அகதிகள்                                                          கட்டாயத் திணிப்பு நடத்தப்படும் நாடுகளில் முக்கிய இடம் வகிக்கும் நாடு என்று இலங்கையைக் குறிப்பிடலாம். இலங்கையைப் பொறுத்தவரை 1948இல் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடமிருந்து விடுதலை பெற்றது. அன்றிலிருந்தே தமிழர்  சிங்களவர் போராட்டமும் துளிர்க்கத் துவங்கியது. அந்தப் போராட்டம் 1983-ஆம் ஆண்டிற்குப் பின்னர் உள்நாட்டுப் போராக மாறியது. இப்போரின் காரணமாக ஈழத்தமிழர் பலர் ஈழத்தை விட்டு வெளியேறி இந்தியா, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளுக்குப் புலம்பெயர வேண்டிய நிலை உருவானது. ஏறத்தாழ ஈழத் தமிழரில் மூன்றில் ஒரு பங்கினர் ஈழத்தை விட்டு வெளியேறிப் பிறநாடுகளில் வாழ்கின்றனர். 8,00000க்கும் மேற்பட்ட எண்ணிக்கையினர் வெளிநாடுகளில் வாழ்வதாக “ஈழத் தமிழ்மக்கள்” எனும் விக்கிப்பீடியா வலைப்பதிவு தெரிவிக்கின்றது.

கனடா             –     300,000 (2007)

ஐக்கிய இராஜ்ஜியம்  –     120,000 (2007)

இந்தியா            –     100,000 (2005)

ஜெர்மனி           –       60,000 (2008)

பிரான்ஸ்           –       50,000 (2008)

ஆஸ்திரேலியா       –       50,000 (2007)

சுவிட்சர்லாந்து       –       50,000 (2008)

மலேசியா          –       20,000 (2008)

நார்வே            –       10,000 (2000)

டென்மார்க்         –         9,000 (2003)

என்று புலம்பெயர் தமிழீழ மக்களின் எண்ணிக்கை சுட்டப்படுகின்றது. எண்ணிக்கை எத்தனையாய் இருப்பினும், ஈழத்தில் ஒன்றாய் வாழ்ந்த தமிழ் மக்கள், இன்று உலகம் முழுவதும் சிதறுண்டு, நியூசிலாந்திலிருந்து கனடா வரை பல்வேறு நாடுகளில் வாழ்வதற்குச் சிங்களவரின் அரசியல் நிலை அடிப்படைக் காரணமாய் அமைகின்றது என்பதை மறுப்பதற்கில்லை.

பலர் உண்மையான விருப்பமின்றிக் கட்டாயத்தினால் ஈழத்தை விட்டு வெளியேறி அந்நிய நாடுகளில் வாழ வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். இவ்வாறு, விரும்பியோ விரும்பாமலோ வெளியேறிய தமிழர், தாம் புலம்பெயர்ந்த புதிய நாடுகளில் பல புதிய சவால்களை எதிர்நோக்க வேண்டி வந்தது. இதற்கு முன்னர் அனுபவித்தறியாத குளிர், இனவெறி, முன்னர் அறிந்திராத மொழி, வேற்றுப் பண்பாடு என்பன போன்ற பல இடர்ப்பாடுகள் இருப்பினும், அவர்கள் மத்தியில் இருக்கின்ற பெரியதொரு பிரச்சினை தம் இனக்குழுவிற்குப் புதிய நாட்டினர் கொடுத்த ‘அகதிகள்’ எனும் பெயரேயாகும்.

தான் அல்லது தாங்கள் இதுநாள்வரை வசித்த, நேசித்த மண்ணை விட்டுப் பிரிந்து, ஏறத்தாழ தங்களின் மண்ணுரிமையை இழந்து, அந்நிய நாட்டிற்குள் புகும் நிலையில், தாங்கள் தாங்கி நிற்கும் பெயர் ஏற்படுத்தும் மன அழுத்தத்தை ஈழக்கவிஞர் காசி ஆனந்தன் கூறுகையில்,

நான்

குடியிருக்கும்

வீடே

வாடகை வீடு

என்கிறாய்

பெருமூச்சோடு

உனக்குத்

தெரியுமா?

நான்

குடியிருக்கும்

நாடே

வாடகை நாடு (ஏதிலி, காசி ஆனந்தன் நறுக்குகள், ப.64)

என்று அழுத்தமாகப் பதிவு செய்வதன் மூலம் அகதி வாழ்க்கை ஒவ்வொரு புலம்பெயர் ஈழமக்களின் மனத்திலும் எத்தகையதொரு பாதிப்பை ஏற்படுத்தி இருக்கின்றது என்பதை உணரலாம்.

மொழி                                                            தமிழ்மொழிக்கென்று நீண்ட, நெடிய வரலாறு உண்டு. உயர்தனிச் செம்மொழி அங்கீகாரம் பெறும் முன்பிருந்தே தன் தாய்மொழியாம் தமிழை மாசறப் பேசியவர்களுள் மிக முக்கியமானவர்கள் ஈழ மக்கள். அம்மக்கள் தான் நினைத்தும் பார்த்திராத வேறு ஒரு அந்நிய நாட்டிற்குக் குடியேறும் நிலையில், தனக்கு முன் அறிமுகம் இல்லாத அல்லது அதிகம் தெரியாத இன்னொரு மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்படுகின்றது.

உதாரணமாக ஈழத்தமிழர் ரஷ்யாவில் வசிக்க நேர்கையில் ரஷ்யமொழியை முதலில் தான் படித்து, பின்னர் தம் குடும்பத்தினர்க்குக் கற்றுக் கொடுத்து, பின்னர் தன் பிள்ளைகளை ரஷ்யமொழிப் பள்ளிகளில் சேர்ப்பதால் தாய்மொழி மறக்கடிக்கப் படுகின்றது. தன் மொழியைத் தொலைத்தவன் ஏறத்தாழ தன் அடையாளத்தையும் தொலைத்தவன் ஆகின்றான். இரு மொழிகளுக்குள் சிக்கித் தவிக்கும் குழந்தைகள் தான் வாழும் நாட்டினர் பேசும் மொழியை மட்டுமே தாமும் பேச வேண்டிய சூழ்நிலையில் தன் தாய்மொழியை மறக்கின்றனர். இந்த மொழி இழப்பு பின்னாளில் இனக்கலப்பிற்கு வழிவகுக்கின்றது. தாய்மொழியின் அவசியம் பற்றிக் கூறும் மொழியியல் வல்லுநர்கள் நீங்கள் மொழியை இழந்தால் பின்னர் உங்கள் பண்பாட்டை எளிதில் இழப்பீர்கள் (If you lose your language: It is easy to lose your culture, too) என்கிறார்கள். புலம்பெயர்ந்த தமிழர்கள் தமிழைக் காப்பதன் முக்கியத்துவத்தைக் கூறும் கவிஞர் அம்பி “ஓடிடும் தமிழா” எனும் கவிதையில்,

ஓடிடும் தமிழா நில் நீ

ஒரு கணம் மனதைத் தட்டு

…………….…………….…

ஓர்தலை முறையின் பின்னே

உன்னடி உறவென் றேதும்

ஊரிலே அறியாப் பிள்ளை

உலகரங்கினில் யாரோ?

தாரணி மீதில் நானோர்

தமிழனென் றுறுதி செய்யின்

ஊர்பெயர் உடைகள் அல்ல

ஒண்டமிழ் மொழியே சாட்சி (ஓடிடும் தமிழா)

என்று எழுதுகிறார்.

இனக்கலப்பு                                                  மொழியிழப்பு வெறும் மொழியிழப்பாய் மட்டுமின்றி, தமிழ்ப் பண்பாட்டையும் பாதிக்கத் துவங்கியது. தன் நாட்டிலிருந்து அந்நிய நாட்டில் அகதிகளாய் வாழும் தமிழீழப் பிள்ளைகள் தான் வாழும் நாட்டின் பண்பாட்டு அம்சங்களை அதிகமாய் பின்பற்றும் சூழ்நிலை உருவாகின்றது. இதன் காரணமாய்த் தன்னை அறியாமலே தன் நாட்டின் பண்பாடுகளை அவர்கள் புறக்கணிக்கிறார்கள். தன் நாட்டைச் சார்ந்தவர் பேசும் மொழியை வைத்து நாம் ஒரே நாட்டினர் என்கிற அறிதலும் அவர்களுக்குள் இல்லாமல் போகின்றது. ஆணோ, பெண்ணோ தன் இல்வாழ்க்கைக்குத் துணை தேடுகின்ற பொழுது, தான் இதுவரையில் வாழ்ந்து பழக்கப்பட்ட கலாச்சாரப் பின்னணி உள்ள ஒரு இணையைத் தேடுகின்ற பொழுது வெகு சாதாரணமாக வேற்றினக் கலப்பு அவர்களுக்குள் ஏற்படுகின்றது. அவர்களின் பிள்ளைகளும், சந்ததிகளும் ஈழ மண்ணின் பிள்ளைகள் என்கிற தனித்துவ அடையாளத்தை இழக்கின்றனர். அதனால் சரியான புரிதல் இல்லா நிலையும் உருவாகின்றது. எனில் மொழி இழப்பு, இனக்கலப்பிற்கு வழிவகுத்து நாளடைவில் இன அழிப்பு முயற்சியில் தன் பயணத்தைத் திசை திருப்பிக் கொள்கின்றது.

பண்பாட்டுச் சிதைவு                                                 மொழி, இனம் என்பதைக் கடந்து புலம்பெயர் மக்கள் தங்களுடைய பண்பாடு தொடர்பான இடர்ப்பாடுகளையும் எதிர்கொள்ள வேண்டி இருக்கின்றது. தாம் இதுவரை மேற்கொண்டு வந்த சில பழக்கவழக்கங்களை அவர்கள் மாற்ற வேண்டியுள்ளது. இல்லையெனில் தாம் வாழும் நாட்டுப் பழக்கவழக்கங்களால் தம் பண்பாட்டுப் பழக்கங்களைக் கைவிடவும் நேர்கின்றது. அவற்றுள்,

 • பொட்டணிதல்
 • சேலை உடுத்தல்
 • பண்டிகை மற்றும் விழாக் கொண்டாட்டம்

என்பன போன்ற பழக்கவழக்கங்களில் நிறைய மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.

பொட்டணிதல்

நெற்றியில் பொட்டணிதல் என்பது ஆண்களுக்கும், பெண்களுக்கும் பொதுவான மரபு. ஆரம்பத்தில் இந்தியாவிலும், ஈழத்திலும் உள்ள பெண்கள் மட்டும் விரும்பி அணிந்த பொட்டு, ஈழ மக்களின் புலப்பெயர்விற்குப் பிறகு, பிற நாடுகளில் பரவத் துவங்கியது. இதன் காரணமாய்ப் பலருக்கு விருப்பப் பொருளாய்ப் பொட்டு அமையினும் சில நாடுகளில் அதனால் பிரச்சனைகளும் ஏற்பட்டது. அமெரிக்காவில் பல வருடங்களின் முன்னர், பொட்டு வைப்பவர்களுக்கு எதிரான இனவெறி இயக்கம் ஒன்று தோன்றியது. (Dot Buster) என்ற இந்த இயக்கம் பொட்டு வைத்தவர்களைத் தாக்குவதைக் குறிக்கோளாகக் கொண்டு இயங்கியது. இதுபோன்ற சில பயங்கரவாதத்தினால் தம் மரபு சார்ந்த  அடையாளத்தை ஈழ மக்கள் கைவிடும் அவலநிலை ஏற்பட்டது.

சேலை உடுத்தல்

சேலை, பண்பாட்டு ரீதியாகப் பல்வேறு மாநிலங்களில் வாழும் இந்தியப் பெண்களையும், ஈழப் பெண்களையும் இணைக்கிறது. அணியும் முறைகள் மாறினாலும், பெரும்பான்மையும் ஈழ, சிங்களப் பெண்கள் சேலை உடுத்துவதையே வழக்கமாக்கி இருந்தனர். அந்நிய நாடுகளில் சேலை அணிந்தவர்கள் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொள்கின்றபோது இருவரும் ஒத்த நாட்டைச் சார்ந்தவர்கள் என்பதை அறிய முடிகின்றது. ஆனால் ஈழ மக்கள் புலம்பெயர்ந்த நாடுகளில் அதிக புழக்கத்தில் உள்ள சுடிதார்(Chudidar) குர்தா(Kurta) பேண்ட்(Pant) போன்ற ஆடைகளின் செல்வாக்கு மிகுதியாய் உள்ளதால், சேலை அணிவது நாகரிகத்திற்கு எதிரானது என்றும், சமுதாயத்தில் தன் மரியாதை உயர அந்நாட்டு நவீன ரக, நாகரிக ஆடைகளை அணிய வேண்டும் என்கிற எண்ணமும் உருவாகின்றது. இன்னும் சிலர் தன் சுதந்திர ஆடையை அணிய முடியவில்லை என்கிற மனவருத்தத்திற்கும் உள்ளாகின்றனர். இதனால் ஒரு நாட்டின் பண்பாட்டு அடையாளம் சிதையும் வாய்ப்பும் உருவாகின்றது.

பொங்கல் பண்டிகை

தமிழர்களின் பண்டிகைகளில் மிக முக்கியமான பண்டிகை பொங்கல். ஏறத்தாழ தமிழர்களின் அடையாளமாகவே பொங்கல் பண்டிகை கருதப்படுகின்றது. ஈழத்தைப் பொறுத்தவரை ஈஸ்டர், வருடப் பிறப்பு எனப் பல பண்டிகைகள் கொண்டாடப்படினும், குடும்பம் முழுவதும் ஒன்றாக இணைந்து பங்குபெறும் ஒரு பண்டிகை என்றால் அது பொங்கல் பண்டிகை மட்டும்தான். இதனை ஈழ எழுத்தாளர் சந்திரலேகா வாமதேவா கூறுகையில்,

பொங்கலன்று பனிக்குளியல், விடியலில் எழுந்து குடும்பத்தினர் அனைவரும் நீராடிய பின், முற்றத்தைக் கழுவி அல்லது மெழுகி, உலக்கைகளை வைத்து நீள்சதுரமாகப் பொங்கல் செய்யப்படும் இடத்தை மாவினால் அடையாளப் படுத்துவார்கள். உள்ளே போய் வருவதற்கு வாசல்கள் நாற்புறமும் விடப்பட்டு, அவை கத்தி வடிவில் கீறப்படும். கிழக்குப் பார்த்த ஒரு மூலையில், நன்கு மெழுகப்பட்ட மூன்று கற்களை அடுக்கி, அடுப்பை அமைப்பார் வீட்டின் தலைவி. பிள்ளைகள் சரமாகத் தொடர்வெடி கொளுத்த, வீட்டின் தலைவர், நன்கு அலங்கரிக்கப்பட்ட பாலும் நீரும் கருப்பஞ்சாறும் நிறைக்கப்பட்ட பானையை அடுப்பேற்றுவார். அரிசியைப் போட்டு ஆண் பொங்கலைத் தயாரிக்க, பெண்கள் சமையலறையில் கறிகளையும், சம்பலையும் தயாரிப்பார்கள். பின் சூரியனுக்கு மூன்று இலைகளில் பொங்கல் படைக்கப்பட, குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக இணைந்து கொண்டாடுவர் (சுழலும் தமிழ் உலகம், ப.216)

ஈழத்துக் கவிஞர் காசி ஆனந்தன் தன் நாட்டில் நடைபெறும் விழாக்களைக் கூறுகையில்,

‘ஆர்த்தெழும் முரசொலி

சங்கொலி ஓர்புறம்

ஆடல் வல்லார்

கூத்துக்கள் கும்மிகள்

ஓர்புறம் காற்றினில்

குழைந்து மூச்சை

ஈர்த்திடும் சந்தனம்

பூமணம் ஓர்புறம்

நாவில் இன்பம்

தோய்த்திடும் தேன்கனி

ஓர்புறம் எனவிழாத்

தோய்வார் நாடு!

என்று ஏங்கி உரைக்கின்றார்.

ஆனால் இத்தகைய விழாக்களோ, பொங்கல் பண்டிகையோ தாம் புலம்பெயர்ந்த நாடுகளில் ஈழவர்கள் கொண்டாட முடியுமா? அல்லது கொண்டாடினால் அதே மகிழ்ச்சி, சுதந்திரம் கிடைக்குமா என்பது கேள்விக்குறியே!

நிறைவாக, புலம்பெயர் ஈழத்தமிழ் மக்கள்

‘செந்தமிழ் ஈழம் நான் போய்ச் சேரவேண்டும்

சிறுபிடிமண் அள்ளி அதைக் கொஞ்சவேண்டும்

…………………

தமிழீழச் சேவலைநான் கேட்க வேண்டும்!

தலைவாசல் செம்பருத்தி பார்க்க வேண்டும்

உமிழ்நீர்வாயால் உழுவை தின்ன வேண்டும்!

ஊர்வெளியில் காற்றாடி ஏற்ற வேண்டும்!

திமிரோடு தமிழீழ மண்ணில் என்றன்

தேசமிது தேசமெனத் திரிய வேண்டும்(தாயகம் தேடி, காசி ஆனந்தன்)

என்று காசி ஆனந்தன் தன் கவிதையில் குறிப்பிடுவதைப் போல் எண்ணிலடங்கா ஏக்கங்களை உள்ளடக்கி, போலி மாயையை நிலையென எண்ணி, அந்நிய நாட்டைத் தாம் புலம்பெயர்ந்த நாட்டை, தம் தற்காலிக நாடாய் எண்ணி, என்றைக்கு விடியுமோ என எண்ணி வாழ்வைக் கேள்விக்குறியோடு கழித்து வாழும் அவலநிலைக்கே தள்ளப்பட்டுள்ளனர் என்பதை உணர முடிகின்றது.

துணைநின்றவை

 • காசி ஆனந்தன்,1983, நறுக்குகள், இராமலிங்க நகர், பழைய மாமல்லபுரம் சாலை, கொட்டிவாக்கம், சென்னை.
 • …,2006, காசிஆனந்தன் கவிதைகள் (தொ.2), காசிஆனந்தன் குடில், இராமலிங்க நகர், பழைய மாமல்லபுரம் சாலை, கொட்டிவாக்கம், சென்னை.
 • சந்திரலேகா வாமதேவா, 2008, சுழலும் தமிழ் உலகம், காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோயில்.
 • புஷ்பராஜா சி., 2003, ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியங்கள், அடையாளம் பதிப்பகம், புத்தாநத்தம், திருச்சி.
 • …., (ஆண்டு விவரம் இல்லை), அக்கரைக்குப் போன அம்மாவுக்கு (31 கவிதைகளின் தொகுப்பு), தமிழியல் வெளியீடு, ஹம்சத்வனி, சென்னை.
 • (http://ta.m.wikipedia.org/wiki/)

சு.மோகனப்பிரியா

முனைவர் பட்ட ஆய்வாளர் (பகுதிநேரம்)

ஈ.வெ.ரா. கல்லூரி,

திருச்சிராப்பள்ளி – 23.