வள்ளுவர் தமிழ்ச் சமூகத்தில் நிகழும் குற்றங்களைக் கடிந்துரைத்தார். இது, கி.பி. முதல் நூற்றாண்டில் நிகழ்ந்த மாபெரும் புரட்சியாகும். அப்புரட்சியை ஒத்த புரட்சிப் பிற்காலத்தே தோன்றியதோ எனின் தோன்றவில்லை என்றே கூற முடியும். அதற்காக நற்கருத்துக்கள் அடங்கிய புரட்சிச் சிந்தனைகளை இலக்கிய அறிஞர்கள் கூறவில்லை என்பது பொருளன்று. திருவள்ளுவர் சிந்தித்த அளவிற்குச் சமுதாயத்தைப் பரந்துபட்ட நோக்குடனும் தொலைநோக்குடனும் சிந்தித்ததாகத் தெரியவில்லை. ஏனெனின் மாந்தன் பகுத்தறிவு உடையவனாக வாழ்ந்து காட்டுவதற்கு அறம் வேண்டும் என்கிறார். அவ்வறத்தினைத் திறம்பட செய்வதற்குப் பொருள் வேண்டும். அப்பொருள் நல்வழியில் ஈட்டினால்தான் நல்லறமாக அமையும் என்பதை அடுத்து முன்வைக்கின்றார். அறம் புரிவதற்குப் பொருளாதாரம் மட்டும் போதாது. அதனை முறைப்படிச் செய்வதற்கு இல்வாழ்க்கையே அடிப்படை என்கிறார், இறுதியாக. ஆக ஒரு மாந்தனுக்கு அறம், பொருள், இல்வாழ்வு இம்மூன்றும் அடிப்படையானவை என உலகுக்கு எடுத்துக் கூறியவர் திருவள்ளுவரே. இவரது சிந்தனைகளைப் போன்றே பல்வேறு மொழி இலக்கியக் கலைஞர்களும் முன்வைத்துள்ளனர். அவ்வரிசையில் வரக்கூடிய ஒருவரே இந்திக் கவிஞர் கபீர். இவரும் மாந்தன் பின்பற்ற வேண்டிய சமுதாய அறங்களை எடுத்துக் கூறுகின்றார். இவர் பொறுத்துக் கொள்ளும் பண்பைக் கூறுமிடத்து திருவள்ளுவரிடமிருந்து எங்ஙனம் வேறுபட்டு நிற்கின்றார் என்பதை முன்வைக்கின்றது இக்கட்டுரை.

சங்க இலக்கியங்களில் பொறுத்தல்  எனும் கருத்தியல் பெண்டிருக்கே தேவை என்கிறது. அவ்வாறெனின் பெண்டிர்கள் பொறுத்திருக்கும் பண்பை இழந்திருந்தனரா? ஆடவருக்குத் தேவையில்லையா? என வினவ இடம் ஏற்படுகின்றது.

பெண்டிர் பொறுக்கும் பண்பு குறைந்து காணப்பட்டனரா? எனின் பொறுத்திருக்கும் பண்பை மிகுதியாகக் கொண்டனர் எனலாம். அவர்கள் பொறுத்திருக்க வேண்டும். ஏனெனின் அவர்கள் குடும்பத்தை நல்வழியில் நடத்திச் செல்ல வேண்டிய கடப்பாடு மிக்கிருந்தமையேயாம். அதனாலே பெண் நாசம் குலநாசம் என்பர். இதனைச் சங்க இலக்கியங்களின் பொறுக்கல்லா (கலி.58-21), பொறுக்குநர் (புறம்.63-8), பொறுக்கும் (புறம்.43-18), பொறுத்தல் (நற்.99-7, 354-13, கலி.132-14, புறம்.27), பொறுத்தார் (பரி.தி.1-75), பொறுத்து (குறு.287-3, அகம்.34-3, புறம்.58-3), பொறுத்தேன் (கலி.142-55), பொறுப்ப (பதி.41-2), பொறுப்பர் (கலி.105-59) என்ற சொல்லாட்சிகள் புலப்படுத்துகின்றன. காட்டாக,

பொறுத்தல் செல்லா திறுத்தன்று வண்பெயல்                       – நற்.99:7

தான்அது பொறுத்தல் யாவது வேனல்                                   – நற்.354:1

பொறை எனப்படுவது போற்றாரைப் பொறுத்தல்                  – கலி.132:14

போற்றார்ப் பொறுத்தலுஞ் சூழ்ச்சிய தகலமும்                      – புறம்.2:7

எனவரும் அடிகள் சுட்டப்படுகின்றன. இவ்வடிகள் சங்க இலக்கியத் தலைவனின் பிரிவையும், தலைவன் மீது நிகழ்ந்த காதல் ஏற்பட்ட அலரையும் தலைவியானவள் பொறுக்க வேணடும் எனவும், பகைவர் செய்யக் கூடிய பிழைகளை மன்னன் பொறுக்க வேணடும் எனவும் அறைகூவுகின்றன. இது மாந்தனின் தலையாயக் கடமை என்கின்றது. அக்கடமையைக் காதல் வாழ்வுடனும், போர்க்கள வாழவுடனும் இணைத்துப்பேசின சங்கப்பாடல்கள். ஆனால், அற இலக்கியங்கள் அதனைத் தனித்து நோக்குவதின் அவசியம் என்ன? என்பதை உணர்ந்தால் இவ்விரு (வள்ளுவர், கபீர்) புலவர்களும் பொறு எனும் கருத்தியலை வலியுறுத்துவதின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ளமுடியும்.

அப்படி அந்தச் சொல்லில் என்னதான் இருக்கிறது? அச்சொல்லைச் சொல்வதினால் என்ன பயன்? இதனால் ஏற்படக் கூடிய மாற்றம் தான் என்ன? என வினாக்களைத் தொடுத்துக் கொண்டே செல்ல இயலும். இதனையும் ஈண்டு நோக்க முற்படுகின்றது. இச்சொல் ஒரு மாயச் சொல்லே. இதனை ஆங்கிலத்தில் Sorry எனக் கூறுவர். அச்சொல் புரிந்தவுடன் மாந்தனிடம் சிறுமாற்றம் தென்படுகின்றது. அது மன அழுத்தத்தை வெகுவாக குறைத்து விடுகின்றது. இதனால் நற்பயனே மாந்தனுக்கு விளைகின்றது. எனவே பல்வேறு மொழி இலக்கிய அறிஞர்கள் பொறுத்திருத்தலையே தவறாமல் வலியுறுத்துவதில் இருந்து விலகி நிற்பதில்லை. இதனை,

மறைவழி பிறழ்தல், இடையூறுகளால் துன்புறுதல், வெளிச்சொல்ல முடியாத வேதனைகள், பொறுத்துக்கொள்ள இயலாத துன்பங்கள், ரகசியங்கள் அறியாமை – ஆகிய இவை ஒருவர்க்கு ஊழினால் ஏற்படுகின்றன                 – வஜ்ஜாலக்கம்:121

தலைவர்கட்கு மென்மையும், மடந்தையர்க்குக் கற்பும், ஆற்றலுடையவர்கட்குப் பொறுமையும், தெரிந்ததைச் சொல்வதும், தெரியாதபோது மௌனமாக இருப்பதும் மாந்தர்கட்கு அழகாகும்                                                                    – வஜ்ஜாலக்கம்:147

எனவரும் பிராகிருத மொழியின் வைரப்பேழைக் கருத்துகள் நினைவூட்டுகின்றன. ஆக, பொறுக்கும் பண்பை வலியுறுத்திய இலக்கியங்கள் எண்ணிறந்தன.

வள்ளுவத்தில் இடம்பெறும் பொறையுடைமை எனும் அதிகாரத் தலைப்பிடல் போன்று நாலடியார், திருமந்திரம் ஆகிய இலக்கியங்களிலும் காணப்பெறுகின்றமை கவனிக்கற்பாலது. திருமந்திரம்

பொறுமையை உயிரினும் சிறப்பாகக் கைக் கொள்ளுதல் வேண்டும் (512)

பொறுமையைச் சிறப்பாக வீட்டிலும் நாட்டிலும் கடைப்பிடித்தால் நற்பயன் நல்கும் (524)

எனக் கூறுகின்றது. ஆக, ஒரு மாந்தனுக்குப் பொறுமை மிகமிக முக்கியத்துவம் வாய்ந்தது என்பதைப் புரிந்து கொள்ள முடிகின்றது.

பொறுமை என்பது வெகுளி(கோபம்)யின்மையைக் குறிக்கும். அஃதாவது, பிறர் தம்மீது கோபம் வரத்தக்க குற்றங்களைச் செய்தாலும், அவர் மீது கோபப்படாமல் அறிவால்  மீட்கலாம் (1990:194) என்பதாம். நாலடியார்

 • அறிவில்லாதவர் வெகுளியினால் கூறும் கடுஞ்சொற்களைப் பொறுத்தல் வேண்டும் (66).
 • அறிவில்லாதவர் கூறும் தகாத சொற்களைப் பொறுத்தல் வேண்டும் (71).
 • தமக்கு இணையில்லாதவர் மொழியும் நீர்மையற்ற சொற்களைப் பொறுத்தல் வேண்டும். இது ஒருவரின் தகுதியை நிலைநாட்டும் (72).
 • தன் சுற்றத்தார் கூறும் கடுஞ்சொல்லைப் பொறுத்தல் வேண்டும் (73)
 • நட்பில் அறிவின்மையில் வரும் தீய ஒழுக்கங்களைப் பொறுத்தல் வேண்டும் (75).
 • நட்புடையார் செய்யும் பிழைகளைப் பொறுத்தல் வேண்டும் (76).
 • பெரியாரே பொறுப்பர். அறிவில்லாதவர் பொறுப்பது கிடையாது (77).
 • மேற்கொண்ட நற்செயலுக்கு இடையூறு வராது பொறுத்தல் வேண்டும் (78).
 • தான் கெட்டாலும் தன்னைக் கெடுக்க நினைப்பவர் மீது வெகுளி கொள்ளல் கூடாது (80).
 • நண்பரது குணத்தைக் கருதிக் குற்றத்தைப் பொறுத்தல் வேண்டும் (221).
 • நட்பினர் பிழையைப் பொறுத்தல் வேண்டும் (223).
 • கைவிடத் தகாத நண்பர் எவ்வளவு துன்பம் செய்யினும் அதனைக் கருதுதல் நன்றன்று (225).
 • நட்பினர் அறியாமல் செய்த பிழையைப் பொறுத்தல் வேண்டும் (226).
 • நண்பரது குற்றத்தைப் பொறுத்தல் வேண்டும் (226).

எனக் குறிப்பிடுகின்றது. ஆக, சமணமுனிவர்கள் அறிவிலார் செய்யக்கூடிய பிழைகளைப் பொறுத்தல் அவசியம் என்கின்றனர். பிழை புரிவது அறியாமையால் நிகழ்வது. அதனைப் பொறுத்தாற்றுவதே அதற்குரிய மருந்து என்பதை இதுவரை நோக்கப் பெற்ற கருத்துகள் புலப்படுத்தின.

திருக்குறள் – கபீர் அருள்வாக்கு பொதுமரபுகள்

இனி, அவ்விரு புலவர்களின் (வள்ளுவர், கபீர்) பொறையுடைமை பற்றிய கருத்துக்களை அறிவதற்கு முன்பு, அவர்கள்தம் பொதுவான சிந்தனைகளை (அமைப்புமுறைகளை) அறிவது இன்றியமையாதது. வள்ளுவரின் கருத்துக்களை அறம், பொருள், இன்பம் என மூன்றாகப் பாவித்துப் பார்க்க முடிந்தது. அவற்றுள் அறம் பாயிரவியல்(4), இல்லறம்(20), துறவறம்(14) என்பனவாகவும்; பொருள் அரசியல்(25), அங்கவியல்(10), பொருளியல்(22), ஒழிபியல்(13) என்பனவாகவும்; இன்பம் களவியல்(7), கற்பியல்(18) என்பனவாகவும் அமைந்துள்ளன.

கபீரின் சிந்தனைகளை இந்திப் பதிப்பு சாகி, பதாவளி, ரமைணி என மூன்றாகப் பாவிக்கின்றது. தமிழில் மொழியாக்கம் செய்த தி.சேசாத்திரி என்பார் இரண்டு காண்டங்களாகப் பாவிக்கிறார். அவ்விரு காண்டங்களிலும் இருநூற்று ஐம்பொத்தொரு உட்தலைப்புகள் கொண்ட கருத்தமைவுகள் உள்ளன. அவை வருமாறு: முதல் காண்டத்தில் கர்த்தா நிருணயம், வலியுடைமை, பரந்து நிற்கும் தன்மை, சப்தம், பெயர், பரிச்சயம், அனுபவம், சாரம் கிரஹித்தல், சமநோக்கு, பக்தி, பிரேமை, ஸ்மரணம், நம்பிக்கை, விரஹிணி, வினியம், சூட்சமமான வழி, சோதிப்பவன், அறிய வேண்டும் என்று ஆசையுள்ளவன், ஐயநிலை, சொல்லும் செய்கையும், சகஜபாவம், மௌன நிலை, முழுகி எழுந்தவன், நல்வழி, சூரன் நெறி, கற்பு, சற்குரு, அசத்குரு, சாது சனங்கள், சத்சங்கம், கெட்ட சேர்க்கை, ஊழியனும் தாசனும், எச்சரிக்கை, உபதேசம், காமம், குரோதம், பற்றுணர்வு, மோகம், அகங்காரம், வஞ்சனை, ஆசை, திருஷ்ணை, நித்திரை, நிந்தனை, மாயை, பொன்னும் பெண்ணும், லாகிரிப் பொருள்கள், சீலம், பொறையுடைமை, உதாரத் தன்மை, போதுமென்ற மனம், பதற்றமில்லாத தன்மை, பணிவு, தயை, சத்தியம், பேச்சளவில் அறிவு, விசாரணை, விவேகம், நல்ல புத்தியும் கெட்ட புத்தியும், சாப்பாடு, உலக உற்பத்தி, மனம், பொது ஆகியனவும்; இரண்டாம் காண்டத்தில், கர்த்தா நிரூபணம், ஆண்டவன் பெருமை, கர்த்தா யுகம், சத்திய லோகம், கர்த்தாவின் இடம், படைத்தவனை அடைய வழி, ராம நாமத்தின் பெருமை, சப்த மகிமை, மாயப் பிரபஞ்சம், ஜகத்தின் உற்பத்தி, மனத்தின் பெருமை, நிர்வாணபதம், சற்குரு மகிமையும் இலக்கணமும், சந்தர்கள் இலக்கணம், வேதாந்த வாதம், சாம்ய வாதம், பக்தியுணர்ச்சிப் பெருக்கு, பிரிவாற்றமைப் பேச்சு, இல்துறவு, கருமகதி – ஊழ், மோகத்தின் மகிமை, விழிப்பு, உபதேசமும் எச்சரிக்கையும், சங்கோசமும் சிட்சையும், பொய் நடத்தை, உலகத்தின் சாரமற்ற தன்மை, இறுதிக்காட்சி, அகம்பாவம், பதினாறு வகை உபசாரங்கள் ஆகியனவும் அமைந்துள்ளன. இவைகளைத் திருக்குறள் போன்று அறம், பொருள், இல்வாழ்வு என்ற கோட்பாடுகளாக நிலைத்தப் பாகுபாடுகளாக வைத்துக் காண்பது என்பது சற்றுக் கடினமே.

திருவள்ளுவர்ஒவ்வொரு கருத்துக்களையும் விளக்குவதற்குப் பத்துப் பத்துச் சிந்தனைகளை முன்வைக்கின்றார். இத்தன்மையைக் கபீரின் சிந்தனைகளில் காண இயலவில்லை. இனி, பொறையுடைமைச் சிந்தனைகளை விளக்குவதில் இருவரும் ஒத்தும் வேறுபட்டும் நிற்கும் தன்மைகளைப் பின்வருமாறு விளக்கப்படுகின்றது. அஃதாவது அவ்விரு புலவர்களும் அவமதிப்பாரைப் பொறுக்கின்ற இடத்திலும், தீயோரது சொல்லைப் பற்றிக் கூறுமிடத்தும் ஒத்த சிந்தனையுடையவர்களாக அமைந்துள்ளனர். அவற்றைப் பின்வருமாறு விளக்குதும்.

அவமதிப்பாரைப் பொறுத்தல்

ஒரு மாந்தன் இன்னொரு மாந்தனைக் கெடுப்பதிலே குறிக்கோள் உடையவனாக விளங்குகின்றான். இவர்களைப் போன்றோர் மாந்தர்களாய்ப் பிறப்பதை விடக் கட்டைகளாகப் பிறப்பதே மேல் என்பது சமூக சீர்த்திருத்த அறிஞர்களின் எண்ணம். ஆனால், தவிர்க்க முடியாத சூழ்நிலையில் மாந்தன் நல்லவனாகவும், தீயவர்களாகவும் அடையாளப் படுத்தப்பட்டு விடுகின்றனர். தீயவர்களாக அடையாளப் படுத்தப்பட்டவர்கள், நல்லவர்களுக்குத் தொல்லைகள் கொடுத்தாலும், மன உளைச்சல் தரும்படி நடந்து கொண்டாலும் பொறுத்திருத்தலே சிறந்தது. அது, நிலத்தை மாந்தன் எவ்வளவு தோண்டினாலும், நிலம் அவனுக்குத் தீங்கு செய்வதில்லை; அதுபோன்று மாந்தனிடமும் பொறுக்கும் பண்பு அமைய வேண்டும் என இருமொழிக் கவிஞர்களும் முன்வைத்துள்ளமை ஒத்த சிந்தனையாம்.

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை

இகழ்வார்ப் பொறுத்த றலை                          – குறள்.151

தோண்டித் தொளைத்தலைப் பூமிதான் பொறுத்துக் கொள்ள முடியும். வெட்டுதலையும் இடித்தலையும் காடுகள்தான் சகித்துக்கொள்ள முடியும். தீய (கடுஞ்) சொற்களைச் சாதுக்கள்தான் சகித்துக் கொள்ள முடியும். மற்றவரால் பொறுத்துக் கொள்ள முடியாது.                        – கபீர்.அரு.572

இவ்விரு ஒத்த சிந்தனைகளுள் சிற்சில வேறுபாடுகள் நிலவத்தான் செய்கின்றன. அவைகளைப் பின்வரும் கருத்தியல்கள் துலக்கும்.

நிலம், காடு, முனிவர் முதலானோருக்குப் பொறுக்கும் தன்மை இருக்கும் என வரையறை செய்வதில் கபீரே முதன்மை பெறுகின்றார்.

நிலம் போன்று பொறுக்கும் தன்மை வேறு எவற்றுக்கும் கிடையாது என்பது வள்ளுவரின் எண்ணம்.

கோட்பாட்டுச் சிந்தனை வள்ளுவனுடையது. பொறுத்தலின் அடையாளங்களைச் சுட்டும் தன்மை கபீருடையது.

கடுஞ்சொல் புரிதல் கூடாது

கடுஞ்சொற்களைக் கூறுவது மாந்தருக்கு அழகன்று. அச்சொற்களைப் பொறுப்பவர் முனிவர் என்பது அவ்விருவரின் ஒத்த எண்ணம். இதனைப் பின்வரும் கருத்துக்கள் துலக்கும்.

உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லு

மின்னாச்சொ னோற்பாரிற் பின்                                            –  குறள்.160

இடிபோன்றன தீயோர் சொற்கள் சாதுக்கள் அவற்றைத் தள்ளிவிடுவர். கடலில் இடி விழுந்தால் எதையும் எரித்தா விட முடியும்              –  கபீர்.அரு.571

தோண்டித் துளைத்தலைப் பூமிதான் பொறுத்துக் கொள்ள முடியும். வெட்டுதலையும் இடித்தலையும் காடுகள்தான் சகித்துக் கொள்ள முடியும். தீய (கடுஞ்) சொற்களைச் சாதுக்கள் தான் சகித்துக்கொள்ள முடியும். மற்றவரால் பொறுத்துக் கொள்ள முடியாது                                                 – கபீர்.அரு.572

சிறப்புத் தன்மைகள்

இதுவரை ஒத்த கருத்துக்களிடையேயான வேற்றுமைகள் நோக்கப்பட்டன. இனி, வேறுபட்ட சிந்தனைகளுள் உள்ள சிறப்புத் தன்மைகளைக் காணுதும். திருவள்ளுவர்,

 • பிறர் செய்த துன்பத்தையும் அவரையும் மறத்தல் வேண்டும்.
 • அறிவில்லாரின் அறிவில்லாச் செயல்களைப் பொறுத்தல் வேண்டும்.
 • நிறைய குணங்கள் நீங்காதிருக்கப் பொறுத்தல் வேண்டும்.
 • பிறர் செய்த தீமைகளைப் பொறுத்தல் வேண்டும். அவ்வாறு பொறுப்பவர் என்றும் புகழுடன் விளங்குவர். அதுமட்டுமின்றி அவர்கள் துறவிகளை விடத் தூய்மையானவர்என்பதும் குறிப்பிடத்தக்கது.
 • ஒருவர்தீமை செய்யினும், அதே தீமையை அவருக்குச் செய்யாதிருத்தல் வேண்டும்.
 • செருக்கு, செல்வம், அதிகாரம் ஆகியன கொண்டு தமக்குக் கொடுமை செய்வாரைத் தாம் காட்டும் பொறுமையினால் வென்றுவிடுதல் வேண்டும்.

ஆகிய சிறப்புத் தன்மைகளையும்; கபீர்,

பெரியவர்களிடம் சிறியவர்கள் தரும் தொல்லையைப் பொறுத்துக் கொள்ளும் குணம் வேண்டும். பிருகு முனிவர் திருமாலை உதைத்தாரே. விஷ்ணுவுக்கு என்ன குறைந்து விட்டது?                                                                                  – கபீர்.அருள்.569

தயை இருக்கும் இடத்தில் அறம் இருக்கிறது. பேராசை இருக்கும் இடத்தில் பாவம் இருக்கிறது. வெகுளி இருக்கும் இடத்தில் எமன் இருக்கிறான். பொறுமை இருக்கும் இடத்தில்தானே (ஈசுவரனே) இருக்கிறான்.                                    – கபீர்.அருள்.570

ஆகிய சிறப்புத் தன்மைகளையும் முன்வைத்துள்ளனர். இவை வேறுபட்ட அவ்விருவரின் தனித்திறன்களை அடையாளம் காட்டுபவை. அஃதாவது மாந்தனுக்கு இருக்க வேண்டிய பொறுத்திருக்கும் பண்பை மாந்தன் செய்யக்கூடிய அறியாமையைச் சுட்டிக்காட்டி விளக்குவது வள்ளுவரின் தனித்தன்மையாக அமைய, புராணம், இதிகாசம், அஃறிணைப் பொருட்கள் ஆகியவற்றில் அமைந்து கிடக்கும் பொறுத்திருக்கும் பண்பைச் சுட்டிக்காட்டி விளக்கும் தனித்தன்மையாக கபீரிடத்து அமைந்துள்ளது.

இதுகாறும் விளக்கப்பெற்ற கருத்தியல்களின் அடிப்படையில் நோக்கும் பொழுது இருமொழிப் புலவர்களும் மாந்தனாய்ப் பிறந்த ஒவ்வொருவரும் பொறுக்கும் பண்புடன் திகழ வேண்டும் என்று கூறியுள்ளமையை அறிய முடிகின்றது. அதுவே வாழ்க்கையைப் புரிதலுடன் நகர்த்துவதற்கு உறுதுணை நிற்கும்; மன அழுத்தங்களைக் குறைத்து நீடுழி வாழத் துணைநிற்கும்.

துணைநின்றன

அறவாணன் க.ப., 2007, திருக்குறள் : தெளிவுரை, சிறப்புரை, விளக்கம், கருத்து, தமிழ்க் கோட்டம், சென்னை.

சக்திதாசன் சுப்பிரமணியன், 2008, கலித்தொகை, தமிழ்மண் அறக்கட்டளை, சென்னை.

சேஷாத்ரி தி.(மொ.ஆ.)., 1992, கபீர் அருள் வாக்கு, சாகித்திய அக்காதெமி, புதுதில்லி.

தேவநேயப் பாவாணர் ஞா., 2009, திருக்குறள் தமிழ் மரபுரை (அறத்துப்பால்), தமிழ்மண் அறக்கட்டளை, சென்னை.

துரைசாமிப்பிள்ளை ஔவை சு., 2008, நற்றிணை (1, 4), தமிழ்மண் அறக்கட்டளை, சென்னை.

……………………………., 2008, புறநானூறு (1), தமிழ்மண் அறக்கட்டளை, சென்னை.

நீலாம்பிகையம்மையார், 1938, வடசொல் தமிழ் அகர வரிசைச் சுருக்கம், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், திருநெல்வேலி.

மாதையன் பெ., 2007, சங்க இலக்கியச் சொல்லடைவு, தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்.

முத்துரத்ன முதலியார் S., 1990, நாலடியார் உரைவளம் (1,2), சரசுவதி மகால் நூலகம், தஞ்சாவூர்.

ஜகந்நாதராஜா மு.கு., 2005, வஜ்ஜாலக்கம் (வைரப்பேழை), தமிழினி பதிப்பகம், சென்னை.

//www.muthukamalam.com/muthukamalam_katturai_special1.14.htm

//sirippu.wordpress.com/2013/03/17/porumai/

//thannambikkai.org/2014/03/03/18714/

//www.valaitamil.com/naaladiyar-poraiyudamai_3145.html

//www.tamilvu.org/slet/l41A0/l4130son.jsp?subid=2424

முனைவர் த.சத்தியராஜ்

தமிழ் – உதவிப் பேராசியர்

இந்துஸ்தான் கலை & அறிவியல் கல்லூரி

கோவை, தமிழ்நாடு, இந்தியா

9600370671

inameditor@gmail.com

www.meyveendu.blogspot.in