நீண்ட நெடுங்காலமாகப் பனை ஓலை எழுதுபொருளாகப் பயன்பட்டு வந்தது.  எழுத்தாணி கொண்டு ஓலையில் கீறினர். பண்டை இலக்கியங்கள் எல்லாமே ஓலையிலிருந்து பிரதி செய்த வகையில் கிடைத்தவைகளே ஆம். அவ்வப்போது பல ஒப்பந்தங்கள் கல்லிலும் செம்பிலும் வெட்டப்பட்டன. ஊர் மக்கள் படித்துப் பயன்பெறும் பொது இடங்களில் அவை இருந்தன.

கால மாற்றங்களால் இன்று பனை ஓலையின் பயன்பாடு அருகிவிட்டது. இளைய தலைமுறை எழுத்தாணியைக் கண்டதில்லை. காகிதம், பேனா, தட்டச்சுப்பொறி, அச்சுப்பொறி, மோனா டைப், லைனோ டைப், எலக்ட்ரோ டைப், டெலிபிரிண்டர், கம்ப்யூட்டர், பிராட்மா பிரஸ் முதலான தற்கால சாதனங்களில் சிலவற்றை உயர் பதவிகளில் உள்ளவர்கள் கூடக் கேட்டதில்லை. ஆனால் அவற்றின் விளைவுகள் எங்கும் பரவியுள்ளன. பொதுமக்கள் அன்றாடம் துய்க்கும் வகையில் இடம் பிடித்துள்ளன.

எல்லாப் பணிகளும் முடிந்தபிறகு எழுதப்பட்ட காகிதமாகக் கைகளில் விழுவதால், அதன் செயல்முறை பற்றி எண்ணிப்பார்க்கத் தோன்றவில்லை. சுட்ட இட்டலியைத் தட்டிலே காணுவது போன்ற நிலை இதுவாகும். இட்டலி வேகும்போது அடுக்களையில் அன்னை படும்பாட்டை அறிவார் யார்?  சமையலறையில் வசதிகள் உள்ளனவா?  புகை சரியாகப் போகின்றதா?  நல்ல வெளிச்சம் உள்ளதா?  காற்றோட்டம் உள்ளதா?  ஏண்ணிப் பார்ப்போர் எத்தனைபேர்?  இட்டலி சுவையாக உள்ளது, அதனால் அங்கு எல்லா வசதிகளும் இருக்கும் என்று எண்ணிக்கொள்வது பொருந்துமா?

கல்வி அறிவு பெருக, அச்சுத்தொழிலின் இன்றியமையாமை வெள்ளிடைமலை. அதிலுறும் இடர் களைந்து, செலவைக் குறைத்தால் பொருளாதார வளம்பெருகும். தமிழ் மொழியில் செப்பங்களுக்குப் பரிந்துரைக்கப்படும் யோசனைகளைத் தமிழ் வளர்க்கும் தொண்டாகக் கருதாமல், தமிழ்நாட்டின், தமிழர்களின் பொருளாதார மேம்பாட்டு முயற்சியாகக் கருதுதலே முறை.

வரிவடிவம்

தமிழ் நெடுங்கணக்கில் ஒருசில மாறுதல்களைச் செய்து கொண்டால் நாட்டு வளர்ச்சியில் ஒரு முடக்கம் உண்டாகும். தற்போதுள்ள 247 எழுத்துக்களைத் தட்டச்சில் 65 வடிவங்களாகவும், அச்சில் 120 வடிவங்களாகவும் சுருக்கிக்கொண்டுள்ளோம். அவற்றை மேலும் சுருக்க இயலுமா?

எப்படிச் சுருக்கலாம்?

  1. பெரியார் புழங்கியபடி : லை, ளை, ணை, னா,ணா, றா (இதனால் ஏழு வடிவங்கள் மிச்சம். ஆகார, ஐகார உயிர் மெய் வரிசைகள் முழுக்கச் சீர்மை பெறுகின்றன.)
  2. உகர, ஊகார உயிர்மெய்களுக்குப் பக்கக்குறி சேர்த்தல் (இதனால் 36 எழுத்துக்கள் மிச்சம். இரண்டு வரிசைகள் சீர்மை பெறுகின்றன.)
  3. உயிர் நெடில்களுக்குக் கால் சேர்த்தல் : அா, இா, உா, எா, ஒா (இதனால் ஐந்து எழுத்துக்கள் மிச்சம்)

மேற்கண்ட மூன்று வகைச் செப்பங்களும் தட்டச்சிற்குப் போதுமானவை. அச்சு எந்திரங்களுக்கு மேலும் இரண்டு பரிந்துரைகள் உள்ளன. (1) இகர, ஈகாரக் கொக்கிகளை எழுத்தோடு ஒட்டாமல், சற்றே பிரித்துப் போடலாம். சுதேசமித்திரன் நாளோடு பல ஆண்டுகளாக இவ்வாறே அச்சிட்டு வந்தததை அறிவோம். (2)  மெய்யெழுத்தின் தலைப்புள்ளியை எழுத்தின் நேர் மேலே வைக்காமல் சற்றே தள்ளி வைக்கலாம். வெப்ப அளவைக் குறிக்கும் டிகிரிக் குறி வைப்பதுபோல வைக்கலாம். இங்குக் குறிப்பிட்ட இரண்டு செப்பங்களும் எந்த முயற்சியும் இன்றித் தானாகவே கையாளலாம். மாறுதல் மக்களிடையே வெளிப்படையாகத் தெரியாது.

உகர, ஊகாரப் பக்கக் குறிகள்

முதலில் கூறிய மூன்று பரிந்துரைகளும் நமக்கு ஏற்கனவே பழக்கமானவை. உகர, ஊகாரப் பக்கக் குறிகளுக்கான வடிவங்களை மட்டும் நிர்ணயித்துக் கொண்டால் போதும். அறிஞர்களின் பரிந்துரைகளை ஆராய்ந்து அரசாங்கம் ஏற்றுக் கொள்ளலாம்.

பரிந்துரைகள்

1: ு , ூ

இவ்விரண்டு குறிகளும் ஜுரம், என்றவாறு தமிழ்நாட்டு நூல்களில் இடம் பெற்றவை  (தமிழ் நூல் என்று சொல்லவில்லை).

  1. ു, ൂ

மேலே கூறிய குறிகளைப் படித நிலையிலிருந்து நட்ட நிலைக்கு மாற்றியுள்ளோம். கேரள அரசாங்கம் இந்தக் குறிகளை ஏற்றுக் கொண்டுள்ளது.

கருத்துக் கணிப்பில் இதனையும் சேர்த்துக்கொண்டோம்.  சுமார் 2000 பேரிடம் கருத்துக் கணிப்பு நடத்தினோம். அவர்களுடைய கையெழுத்துடன் கருத்தறி தாள் பெற்று வைத்துள்ளோம்.  அவர்களில் சுமார் 80 விழுக்காடு முதல் வகைக் குறியீடுகளையே தேர்ந்தெடுத்தனர். அதற்கான காரணம் கேட்டபோது “ஏற்கனவே அறிந்த குறிகள். ஜூன் ஜூலை என்று அடிக்கடி எழுதுகிறோம். முதல் வகுப்புத் தமிழ்ப்பாட நூலிலேயே இடம் பெற்றுள்ளன” என்றனர். எனினும் தமிழில் பிறமொழிச் சொற்களை எழுதுவதற்குப் பயன்படுகின்றதே என்ற களங்கம் அதற்குண்டு.

எழுத்துவாகு குறைவான இடம் ஆகியவை கருதி இரண்டாம் வகைக் குறியீடுகளையே இக்கட்டுரை ஆசிரியர் பரிந்துரைக்கின்றார்.

தமிழகப் புலவர் குழு

தமிழகப் புலவர் குழு எழுத்துச் சீர்மை பற்றி ஆராய்ந்தது. அதன் முன்னோடிக்குழு இரண்டு புதிய குறிகளை யாத்து அளித்தது. அவை : _, + எனினும்  புலவர்  குழுவின் பேரவைக் கூட்டத்தில் எழுத்துச் சீர்மை பற்றிய இறுதி முடிவு ஏதும் எடுக்கப்படவில்லை.

ஐ என்ற எழுத்தை மாற்ற வேண்டுவதில்லை. அய் என்று எழுதுவதால் ஒரே ஒரு எழுத்துத்தான் குறைகின்றது. எனவே அதனை மாற்றாமல் உள்ளபடியே வைத்துக்கொள்ளலாம்.

இலக்கணம்

வடிவ மாற்றங்களால் இலக்கணம் எந்த வகையிலும் இடர்படவில்லை.

மாறுதல் காலம்

தமிழில் எல்லா எழுத்துக்களின் அடிப்படை வடிவங்களும் தற்போது உள்ளபடியே வைத்துக் கொள்ளப்பட்டுள்ளன. உகர ஊகார வரிசை மட்டுமே மாறுகின்றன. எனவே மாறுதல் எளிது.  மிகச் சிறிய முயற்சியுடன் புதிய வடிவங்கள் பழக்கமாகிவிடும்.

மாறலாமா?

என்றுமுள்ள தென்தமிழ் எனப் புகழ்பெற்ற தமிழை எடுத்ததற்கெல்லாம் மாற்றலாமா?  என்போர் உண்டு. கூர்தலறம் என்பது மாந்தர் இனத்திற்கு மட்டுமல்ல, எழுத்து வடிவங்களுக்கும் பொருந்தும். திருவள்ளுவரும் தொல்காப்பியரும் எழுதியது இன்றைய வடிவில் அல்ல.  அக்காலத்தில் வெறும் கூட்டல் குறி போன்ற வடிவமே ‘க’ என்னும் எழுத்தைச் சுட்டியது. அதே எழுத்துத்தான் படிப்படியாக வளர்ந்து இன்றைய வடிவத்தை அடைந்துள்ளது. தமிழ் எழுத்துக்கள் உயிர்ப்பு உள்ள மக்களால் கடந்த மூவாயிரம் ஆண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன.  அதனால் காலங்கள் தோறும் சிறிது சிறிதே வளர்ந்து இன்றைய நிலையை அடைந்துள்ளன.  எனவே இன்றியமையாமைக் கருதி சிற்சில மாற்றங்களை ஏற்றுக்கொள்வதில் பிழையேனும் இல்லை.

 

முன்னோடிகள்

எழுத்து வடிவில் இதேபோன்று இடருற்ற கேரள அரசாங்கம் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு (1973 இல்)  மலையாள மொழியின் வரிவடிவைச் செப்பம் செய்துகொண்டது. உகர, ஊகாரப் பக்கக் குறிகளுக்குப் புதிய பக்கக் குறியை ஏற்றுக்கொண்டது. கூட்டு எழுத்துக்களை ஒழித்தது.

செயலாக்கம்

புதிய வடிவங்களைத் தமிழ் மக்களின் நன்மைக்காகவும் முன்னேற்றத்திற்காகவும் அறியமுகப்படுத்த விழைகின்றோம். எந்த மாற்றத்திற்கும் தமதுஎதிர்ப்பைக் காட்டுவதே மக்களின் குணம் ஆகும். மாறுதலை எளிதாகச் செய்யவேண்டும், முதல் ஒரு மாதம் செய்தித் தாள்களின் தலைப்பை மட்டும் புதிய எழுத்தில் போடலாம்.  பின்னர் உள் செய்திகளையும் மாற்றிவிடலாம்.

பழைய நூல்கள்

இதுவரை அச்சிட்ட நூல்களை என்ன செய்வது?  மறுபதிப்புப் போடமுடியாதவை பயனற்றுப் போய்விடலாம் என்று கருதுவர் சிலர். அந்த அச்சம் தேவையில்லை. எழுத்தின் அடிப்படை வடிவங்களில் மாற்றம் ஏதுமில்லையாதலால், புதிய எழுத்தில் கற்றோர் பழைய நூல்களை எளிதில் வாசிக்க இயலும். புதிய எழுத்துக்களுடன் பழைய வடிவங்களைக் காட்டும் அட்டவணை ஒன்றை வைத்துக்கொண்டால் போதும், அதனை ஒற்றைத் தாளில் அச்சடித்து ஒவ்வொரு பழைய புத்தகத்திலும் ஒட்டிவிடலாம்.

சட்டம் தேவையா?

தமிழ் எழுத்துக்கள் இப்படித்தான் இருக்கவேண்டும் என்கிற சட்டம் இதுவரை ஏதுமில்லை.  பரம்பரையாகப் பயன்படுத்துகின்ற மரபு உரிமை மட்டுமே உள்ளது. தந்தை பெரியார் தமக்குச் சரி எனப் பட்டதைச் செயல் வடிவில் காட்டி வந்தார். அவரைப் பின்பற்றிப் பல ஏடுகள் அவ்வடிவங்களைக் கையாண்டன. அண்மைக் காலத்தில் சென்னைப் பல்கலைக் கழக ஏடுகள் கூட சில பெரியார் எழுத்தில் வந்தன. அறிஞர்களின் நூல்கள் பலவும் இவ்வெழுத்தில் வந்துள்ளன. அண்மைக் காலத்தில் தினமலர் நாளேடு கூட ஒரு பக்கத்தைப் பெரியார் வகை எழுத்திற்கு ஒதுக்கியுள்ளது.

உகர, ஊகார ஒட்டுக்குறிகளுக்குப் பலர் பல பரிந்துரைகளைக் கூறக் கூடுமாதலால் அவற்றுள் சிறப்பான ஒன்றைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பை அரசு மேற்கொள்வது அவசியமாகின்றது. அரசின் பரிந்துரையேயாயினும் அதற்குச் சட்டம் இயற்றிப் பாதுகாப்புத் தருவது நல்லது.

அரசிற்கு எத்தனையோ பணிகள்! அதனிடையே இந்த முயற்சியை மேற்கொள்வது இயலாமல் போகலாம். அல்லது அளவு கடந்த காலதாமதம் ஏற்படலாம். அப்போது அரசின் சட்டத்தை எதிர்கொள்ளக் காத்திராமல், அறிஞர்கள் முடிவு செய்த வண்ணம் மக்களே மேற்கொள்ளலாம்.  தற்போதைய சட்டங்களின்படி அது பிழையல்ல.

ஆட்சி மொழி

தமிழ் நாட்டில் ஆட்சி மொழி எனச் சட்டம் இயற்றி ஆண்டுகள் பல ஓடிவிட்டன.  அரசு அலுவலகங்களில் அதனை நிறைவேற்ற முடியவில்லை. போதிய தட்டச்சுப்பொறி இல்லையென்பதையே, அதற்கான காரணமாகக் காட்டுவர். புதிய வரிவடிவைக் கொண்ட ஒரே தட்டச்சுப் பொறியில் ஆங்கிலம் தமிழ் இரண்டையும் அமைத்துக் கொள்ளலாம். (படம்)

கொடுமுடிப் பலகை

தற்போதைய ஆங்கிலப் பொறிகளையும் மிகக் குறைந்த செலவிலேயே இருமொழிப் பொறிகளாக மாற்றிக்கொள்ள இயலும். எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்றபடித் தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் சிறப்பாக அமலாகும்.

மின் தட்டச்சு, அச்சுக் கோர்ப்பு

தற்போது தட்டச்சுப் பொறிகள் மின்சாரத்தால் இயங்குகின்றன.  65 வடிவங்கள் கொண்ட மின் தட்டச்சு அமைப்பதை விட 33 வடிவங்கள் கொண்ட மின் தட்டச்சின் விலை பாதியாகக் குறைந்துவிடும்.

மோனோடைப், லைனோடைப் போன்ற பொறிகளுக்கு அச்சுக் கோர்ப்பது, தட்டச்சுச் செய்வது போன்றவை மிக எளிதான செயலாகும். எழுத்தாளரே அச்சுக் கோர்ப்பதற்கான எளிய வழிமுறைகள் உண்டு. அச்சுக் கோர்ப்பது ஓர் ஊரிலும் அச்சடிப்பது ஓர் ஊரிலும் நடைபெறலாம். எழுத்து எண்ணிக்கை குறையக் குறைய அச்சுச் செலவு குறையும். புத்தகங்களின் விலை மலிவாகும்.

தற்போது சிறிய அச்சகங்களில் சிறு பணிகள் அச்சிடுவதற்கான எழுத்துக்கள் வாங்கும்போது ஆங்கில எழுத்துக்கள் ஒரு எடை வாங்கினால் போதும். ஆனால் தமிழ் எழுத்துக்கள் இரண்டு எடை வாங்கியாக வேண்டும். எழுத்தெண்ணிக்கை குறையக் குறைய அச்சுப்பணி எளிதாகும்.

கம்ப்யூட்டர்

தற்போது பல்கலைக்கழகங்களும், தேர்வு வாரியங்களும் மாணவர்களின் மதிப்பெண்கள் பட்டியலை தட்டச்சுச் செய்து தருவதில்லை. கம்ப்யூட்டர் மூலமாகவே அச்சிட்டுத் தருகின்றன.  தற்போது கம்ப்யூட்டர்களின் அளவு குறைந்த தட்டச்சுப் பொறி அளவிலான பொறிகள் தயாரிக்கும் நிலையில் இந்தியா முன்னேறி விட்டது. தமிழகத்திலேயே அந்த முயற்சிகளும் நடைபெறுகின்றன. சிறுசிறு கடைகளும் பள்ளிகளும் கம்ப்யூட்டர் பயன்படுத்தும் நாள் நெருங்கிவிட்டது. எனவே கம்ப்யூட்டரில் தமிழ் இடம் பெறும் வகையில் தமிழ் வடிவம் சுருங்குவது அவசரமும் அவசியமுமாகும்.

எழுத்தெண்ணிக்கை கூடக் கூட மின் வட்டங்களின் எண்ணிக்கை கூடிப் பொறியியல் பணி மிகுந்து அதன் விலை கூடிவிடும். 125 வடிவம் கொண்ட தமிழ் 33 வடிவங்களாகக் குறைந்தால் கம்ப்யூட்டரின் விலை நான்கில் ஒரு பங்காகக் குறைந்துவிடும்.

ஒரு சொற்பொழிவாளரின் பேச்சை அல்லது இசைக் கலைஞரின் பாட்டைத் தற்போதைய கம்ப்யூட்டர் மொழியில் கொடுத்துவிட்டால், பின்னர் பேச்சாளரோ, பாடகரோ இல்லாத போதும், புதிய பேச்சையோ, பாட்டையோ கேட்க இயலும். சான்றாக, தியாகராச பாகவதரின் பாடல்களை வரிவடிவில் எழுதி இசையுடன் கற்பித்துவிடலாம். பின்னர் தற்போது கவிஞர் கண்ணதாசன் புனையும் பாடல் ஒன்றை வரிவடிவில் செலுத்தி அதனைப் பாகவதர் குரலில் கேட்க இயலும். இன்னும் நூறாண்டுகளுக்குப் பின்னர் எழுதப்படும் சொற்பொழிவை, அக்காலத் தமிழர் கி.ஆ.பெ.விசுவநாதம் குரலில் கேட்டு மகிழமுடியும். இதேபோலத் திருவள்ளுவர் குரலையோ, இளங்கோவடிகளின் குரலையோ கேட்க முடிந்தால் எத்தனை இன்பமாக இருக்கும்!  தற்போது ஆங்கில மொழியிலும், வேறுபல மொழிகளிலும் இது சாத்தியமாகிவிட்டது. தமிழில் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

மொழியாபொறியா?

மொழிக்காகப் பொறிகளா, பொறிகளுக்காக மொழியா?  நல்ல கேள்விதான். மொழியின் ஏவல் கேட்கத்தான் பொறிகளின் துணை தேடுகிறோம். ஒரோவழி பெருத்த நன்மை கருதி, மொழியின், வரிவடிவில் மிகச்சிறிய மாற்றங்களை ஏற்றுக் கொள்ளக்கூடாதா?  ஓலையிலிருந்த எழுத்துக்களை அச்சு எந்திரங்களுக்கு ஏற்பச் சில மாறுதல்களை வீரமாமுனிவர் மேற்கொண்டார்.  தற்போது பழைய ஓலை நிலைக்கே மாறுகிறோம் அவ்வளவுதான்.

அறிவியல் வளர்ச்சி வேகம்  அளவு கடந்த நிலையில் உள்ளது. அதோடு ஒத்துப்போக விரையவில்லையானால் என்றுமுள்ள தென்தமிழ் என்ற வாசகத்தைச் சற்றே மாற்றவேண்டி வந்து விடலாம். அட்லாண்டிக் பெருங்கடலைக் கட்டுமரத்தினாலும் கடக்கலாம், கன்கார்டே விமானத்திலும் கடக்கலாம்.  நாம் என்ன செய்யப்போகிறோம்?

புதிய வடிவங்கள்

உயிர்              :           6          அ இ உ எ ஐ ஒ

மெய்               :           18        க ங ச ஞ ட ண த ந ப ம ய ர ல வ ழ ள ற ன

உயிர்மெய்     :           8          ா, ி, ீ, ு, ூ, ெ, ே, ை

மெய்ப்புள்ளி  :           1          .

ஆய்த எழுத்து அறிவியல் வடிவு ஆகையால் (ஃ) என்பதில் வந்து விடுகின்றது.

முடிப்புரை

புதியன புகுதல் வழுவல. இலங்கையில் 1974 சனவரியில் நடைபெற்ற அனைத்துலகத் தமிழராய்ச்சி மாநாட்டில் எழுத்துச் சீர்மை பற்றி மூன்று கட்டுரைகள் இடம  அனைத்திந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மாநாடு புதுச்சேரித் தாகூர் கல்லூரியில் நடைபெற்ற கருத்தரங்கிலும் அதன் பின்னர் ஒவ்வொரு கருத்தரங்கிலும் இது பற்றிச் சிந்தித்து வருகின்றது. அதன் கட்டுரைத் தொகுப்பான ஆய்வுக்கோவையில் ஒரு கட்டுரை புதிய வடிவில் வெளிவந்து கொண்டிருந்தது. தமிழகப் புலவர் குழுவும் இதுபற்றி ஆராய்ந்தது. ஆனால் முடிவு ஏதும் செய்யவில்லை. எண்ணித் துணிதல் நல்லதுதான். துணிதல் எப்போது?

கொடுமுடி சண்முகம்

நன்றி! நன்றி!! நன்றி!!!

     இக்கட்டுரை சிதம்பரம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் வெளியிட்டு வந்த மொழியியல் சிறப்பிதழில் (தொகுதி – 2, எண் – 3,1979) வெளிவந்ததாகும். இவ்விதழின் பாதிப்பாசிரியர்களுள் ஒருவரான பேரா.செ.வை.சண்முகம் அவர்கள் இக்கட்டுரையை வெளியிட ஒப்புதல் அளித்தார்கள். அவர்களுக்கு இனம் இதழ் நன்றி நவில்கின்றது.