பெருங்கற்காலம் என்பது கி.மு.1000 – கி.மு.300 வரையிலான காலக்கட்டம். இவ்விடைப்பட்டதான காலக்கட்டத்தில் உலகெங்கிலும் ஒரே விதமான பண்பாடு நிலவியதெனத் தொல்லியல் அறிஞர்கள் தரவுகளை எடுத்துக்காட்டி நிறுவியுள்ளனர்.  தகவல் தொடர்புகளற்ற காலக்கட்டத்தில் கண்டங்கள் தாண்டி இப்பண்பாடு ஓர்மையுடையதாய் அமைந்திருந்தது என்பது வரலாற்றின் வியப்புக் குறியீடு. இனக்குழுப்போர், ஆநிரைகாத்தல், எல்லைப்போர், விலங்குகளோடு சண்டையிடல் என ஏதோவொரு காரணம் கருதி மாண்டு போன ஒருவனுக்கு (வீரன்) அல்லது வயது முதிர்ந்து இயற்கை மரணம் கொண்ட ஓர் இனக்குழுத் தலைவனுக்கு (Tribal leader) அமைக்கப் பெற்ற ஈமச்சின்னங்களாகவே பெருங்கற்காலத் தரவுகள் நமக்குக் கிடைக்கப் பெறுகின்றன.  ஒரு சில தரவுகள் மட்டுமே ஈமச்சின்னங்கள் அல்லாத தரவுகளாகக் கிடைக்கின்றன. பெருங்கற்களால் அமைக்கப் பெற்ற கற்பதுக்கை (cist), கற்குவை (cairn), பரல்உயர் பதுக்கை (cairn circle), கற்கிடை (dolmen), நெடுநிலைக்கல் (menhir), குடைக்கல் (umbrella stone), நடுகல் (Hero stone), முதுமக்கள் தாழிகள் (urns) முதலியனவற்றைப் பெருங்கற்கால ஈமச்சின்னங்களாகத் தொல்லியல் அறிஞர்கள் வகைப்படுத்தியுள்ளனர்.  இப்பெருங்கற்கால நீத்தோர் சின்னங்கள் அமைவிடங்களையொட்டி அமைந்த சில குடியிருப்புப் பகுதிகளும் கண்டறியப் பெற்றுள்ளன. அவற்றிலிருந்து அகழாய்வு செய்யப்பெற்றுக் கொணரப் பெற்ற புழங்கு பொருட்களும் பெருங்கற்காலத் தரவுகளாகக் கருதப்பெறுகின்றன.  அப்பொருட்களில் எழுதப்பெற்றுள்ள எழுத்துப் பொறிப்புகள், கீறல் குறியீடுகள், முத்திரைக் குறியீடுகள் இவற்றைக் கொண்டே அச்சமூகத்தின் வரலாறும், தொன்மையும் கண்டறிந்து எழுதப் பெறுகின்றன. அதனூடாக அவ்வினக்குழுவினரின் இலக்கியப் பிரதிகளும் ஆய்விற்குட்படுத்தப் பெற்றுப் பண்பாட்டு அடையாளங்கள் மீட்டெடுக்கப் பெறுகின்றன. அத்தகைய பெருங்கற்காலத் தொல்லியல் தரவுகளையும் இலக்கியப் பிரதிகளில் அமைந்த தரவுகளையும் ஒப்பிட்டு நோக்கித் தமிழ்ச் சமூகப் பண்பாட்டின் தொன்மையினையும் உண்மை நிலைப்பாட்டினையும் ஆய்வு செய்யும் முகமாக இக்கட்டுரை அமைகிறது.  இவ்வாய்விற்குக் கொடுமணல் தொல்லியல் களமும் அங்குக் களஆய்வு செய்யப் பெற்றுக் கிடைக்கப்பெற்ற தரவுகளும் முதன்மைச் சான்றுகளாக அமைகின்றன.

தமிழ்ப்பிராமி (தமிழி) எழுத்துகளின் காலத்தைக் கி.மு.2ஆம் நூற்றாண்டிற்கு உட்பட்டு வரையறை செய்த ஐராவதம் மகாதேவன் அவர்களுடைய கருத்துக்கணிப்பினை முற்றிலும் மறுத்துச் சரியான தொல்லியல் தரவுகளுடன் நிறுவியுள்ளார் கா.ராஜன். அசோகர் பிராமியிலிருந்தே தமிழ்ப்பிராமி தோற்றம் பெற்றது என்ற கருத்தாக்கத்தினைத் தனது கொடுமணல் தொல்லியல் ஆய்வுக்களம் வழிக்கண்டறியப் பெற்ற தரவுகளின் வழி மறுத்துரைத்துள்ளார். இவரைத் தவிர்த்து கே.வி.இரமேஷ், கே.வி.இராமன், நடன.காசிநாதன், சு.இராசவேலு ஆகியோரும் தமது கருத்துக்கள் வழி ஐராவதம் மகாதேவன் கருத்தினை மறுத்துரைத்துள்ளனர்.  கா.ராஜன் அவர்களுடைய தொல்லியல் ஆய்வு முடிவுகளிலிருந்து இக்கட்டுரையைத் தொடங்கலாம்.  அவர் ஆய்வு முடிவுகள் வருமாறு:

அசோகர் – பிராமியிலிருந்து தமிழ்ப் பிராமி தோன்றியது என்பதை ஆய்விற்கு எடுத்துக் கொள்பவர்கள் அசோகர் எங்கிருந்து அவற்றை எடுத்துக்கொண்டார் என்பதற்கான விளக்கத்தினைத் தரவில்லை. அசோகர் காலத்தில் நன்கு புழக்கத்திற்கு வந்துவிட்ட இவ்வரிவடிவம் அதற்கு முன்பாக இந்தியாவில் இருந்திருக்க வேண்டும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. ஆனால் அதற்கான போதிய சான்றுகள் வட இந்தியாவில் கிடைக்கவில்லை. பிப்ரவா, மகஸ்தான் போன்ற இடங்களில் கிடைத்த சான்றுகள் அசோகர் காலத்திற்குச் சிறிது முற்பட்டவை எனக் கருதுகின்றனர். மேலும், வடஇந்தியாவில் அசோகர் கல்வெட்டுகள் நீங்கலாகப் பார்த்தால் அங்குக் கிடைக்கும் சான்றுகள் மிகமிகக் குறைவு.  தமிழகத்தைத் தவிர்த்து இந்தியாவில் கிடைக்கும் அனைத்துக் கல்வெட்டுகளும் மன்னனின் ஆணையின் பேரில் உருவாக்கப்பட்டவை.  அதாவது கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் பெரும்பாலும் இவை அரசின் ஆவணமாகத் திகழ்துள்ளன.  சமூகத்தின் பிற படிநிலைகளில் வாழும் சாதரண மக்களின் பயன்பாட்டில் இவை எத்துணை தூரம் பரவியிருந்தன என்பதற்குப் போதிய சான்றுகள் வடஇந்தியாவில் இல்லை.  இந்தியா முழுவதும் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளில் கிடைத்த பிராமி எழுத்துப் பொறிப்புப் பெற்ற பானை ஓடுகளின் மொத்த எண்ணிக்கை தமிழகத்தில் கொடுமணலில் கிடைத்த எண்ணிக்கைக்கு ஈடாகாது. கொடுமணலில் மட்டும் இருநூற்றுக்கும் மேற்பட்ட தமிழ்ப் பிராமிப் பொறிப்புப் பெற்ற மட்பாண்டங்கள் கிடைத்துள்ளன.  இவை ஒரு சதவீதத்திற்கும் குறைவான அளவில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் கிடைத்தவை.  கொடுமணல் முழுவதையும் அகழ்ந்து பார்த்தால் மீதமுள்ள 99% எழுத்துப் பொறிப்புகள் வெளிப்படும். இவை அங்கு வாழ்ந்த மக்களின் கல்வியறிவை அறிவதுடன் சமூகத்தின் பல்வேறு கூறுகளை அறியப் பெரிதும் உதவும் என்பது திண்ணம்.  மேலும் இந்தியாவின் பிற பகுதிகளில் இவை பெரும்பாலும் கல்வெட்டுகளிலேயே காணப்படுகின்றன. அங்ஙனம் கல்வெட்டுகளில் மட்டுமல்லாது பரவலாகத் தமிழகத்தில் காலத்தால் அழியாத பிறபொருட்களான நாணயங்களிலும், ஆபரணங்களிலும், பானை ஓடுகளிலும் இவை பொறிக்கப்பட்டுள்ளன. பொறிக்கப்பட்ட கல்வெட்டுகளில் கூடப் பெரும்பான்மையானவை மன்னர்களால் உருவாக்கப்படவில்லை என்பதனை இங்கு நினைவில் கொள்ளவேண்டும். இதைத் தவிர எளிதில் அழிந்து போகக் கூடிய ஓலைச் சுவடிகளில் எழுதப்பட்டிருக்க வேண்டும் (கா.ராஜன், பக்கம் 70-71).

கொடுமணல் தொல்லியல் களத்தில் தமிழ் இலக்கிய மாணவர்களின் உதவியோடு 10 நாட்கள் கள ஆய்வு செய்யப்பெற்றது. அக்கள ஆய்வில், கறுப்பு சிவப்பு மண்பாண்டங்கள் (உட்புறம் கறுப்பு), பளபளப்பான கறுப்பு சிவப்பு மண்பாண்டங்கள் சில்லுகள், கீறல் குறியீடு இடப்பெற்றுச் சுடப்பெற்ற மண்பாண்டங்கள், தமிழி பிராமி (தமிழி) எழுத்துப் பொறிப்புகள் உள்ள பானை ஓடு ஒன்று, வட்டமாகச் செதுக்கப் பெற்ற குவார்ட்ஸ் படிகக்கற்கள், உருக்கிய நிலையில் உறைந்த இரும்புக் கட்டிகள், சுடுமண் நூல்தக்களிகள், மணிகள் வைத்து அறுக்கப்பயன்படும் கருங்கற்கள், வளையல் (தொடி) செய்யப்பயன்படும் சங்குகள், வட்ட வடிவில் வழுவழுப்பாக்கப் பெற்ற குவார்ட்ஸ் கல், இரும்பை உருக்கப் பயன் கொண்ட மண்குழாய், உருளை வடிவில் உள்ள பெரிய கூழாங்கல், சிறிய துளைகள் உள்ள பிறைவடிவச்சுட்ட செங்கல் ஆகிய பொருட்கள்  இத்தொல்லியல் களத்தில் செய்யப் பெற்ற மேற்பரப்பாய்வில் கண்டறியப் பெற்றுள்ளன.  இப்பொருட்கள் யாவும் நிலத்தில் இருந்து அகழ்ந்து எடுக்கப்பெறவில்லை.  மாறாக, சாலைச் சீரமைப்புப் பணிக்காகத் தோண்டப் பெற்ற பள்ளங்களில் இருந்தும் வயல் சரிவுகளில் இருந்தும் சேகரிக்கப் பெற்றவையாகும். மேற்கூறிய பொருட்களில் உள்ளவற்றோடு இன்னும் சில பொருட்களைக் கா.ராஜன் தனது அகழ்வாய்வின் மூலம் முறைப்படி வெளிக்கொணர்ந்து ஆய்வு முடிபுகளைத் தொல்லியல் துறைக்கு வழங்கியுள்ளார்.

மேற்பரப்பாய்வில் கிடைக்கப்பெற்ற ‘தமிழ்ப்பிராமி’ எழுத்துப் பொறிப்புள்ள பானை ஓடு இங்குக் கவனத்திற்குரியது. பானையின் ஒரு பகுதி மட்டும் முழுமையாகக் கிடைத்துள்ளது. ஏனைய பகுதிகள் நன்கு சிதைவடைந்து விட்டன. அவற்றை ஒருங்கிணைத்துப் பார்க்க இயலவில்லை.  பானை ஓடு பளப்பளப்பான நிலையில் அமைந்து, அதன் மீது கீறல் முறையில் எழுத்துக்கள் பொறிக்கப் பெற்றுள்ளன. அவ்வெழுத்துக்களை எழுதக் கூர்மையான ஆணி போன்ற பொருள் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும். வழுவழுப்பான பொருள் மீது எழுதுவதென்பது கூரிய உலோகத்தால் மட்டுமே சாத்தியம். இப்பானையின் மீது இரு எழுத்துக்கள் எழுதப் பெற்றுள்ளன.  அவற்றில் இரண்டாவது எழுத்து தமிழ்ப்பிராமி முறையில் அமைந்த ‘தி’ என்ற எழுத்து. முதலாவது எழுத்து தமிழ்ப்பிராமி உயிரெழுத்து மெய்யெழுத்து வரிசைகளில் இல்லாத எழுத்து வடிவமாகும். சிந்துவெளி எழுத்து வடிவமாக இருப்பதற்கு வாய்ப்பு உண்டு. சிந்துவெளி எழுத்து வடிவங்களில் இருந்து வளர்ச்சிபெற்ற எழுத்துக்களாகத் தமிழி (தமிழ்ப்பிராமி) வரிவடிவம் அமைந்துள்ளது என்ற கருதுகோளை ஏற்றுப் பல தொல்லியல் அறிஞர்கள் நிறுவியுள்ளனர். சிந்துவெளியில் இருந்து தமிழி வடிவமாக மாறிக்கொண்டிருந்த காலக்கட்டத்தில் எழுதப்பெற்ற ஒரு சான்று (தமிழி வரிவடிவம்) நமக்கு முன்பு கிடைத்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் மருங்கூரில் கண்டறியப்பெற்ற முதுமக்கள் தாழி ஒன்றில் கண்டறியப்பெற்றுள்ளது.  அத்தாழியில் ‘அம்மூவன்’ எனத் தெளிவாகப் பொறிக்கப்பெற்றுள்ளது. அதில் அமைந்த முதல் இரு எழுத்துக்களான ‘அம்’ என்பது தென்பிராமியான தமிழி எழுத்துக்களாலும் அடுத்ததாக அமைந்த ‘மூவன்’ என்பது சிந்துவெளி எழுத்துக்களாலும் பொறிக்கப் பெற்றுள்ளன. இவ்விரண்டு சொற்களையும் சேர்த்து ‘அம்மூவன்’ எனப் படித்தறிதல் வேண்டும்.

‘சிந்துவெளி எழுத்திலிருந்து தென்பிராமி எனும் தமிழ் எழுத்து உருவாக்கப்பெற்ற பிறகு பழைய எழுத்து முறையை உடனே மாற்றிக் கொள்ள முடியாதவர்கள் இருவகை எழுத்துக்களையும் கலந்து எழுதிய கலப்பு எழுத்துமுறை (mixed type)  எழுத்துச் சான்றுகள் தமிழ்நாட்டில் கிடைத்துள்ளன என்பர் இரா.மதிவாணன். இக்கலப்பு எழுத்து முறையில் எழுதப் பெற்ற சொல்லாகவே கொடுமணல் களஆய்வில் கிடைத்த இவ்வெழுத்துப் பொறிப்பையும் கருதமுடியும். சிந்துவெளி எழுத்து எனக் கருதப்பெறும் இவ்வெழுத்தின் அடியில் கோட்டு வடிவிலான மீன் போன்ற வடிவமும் இணைக்கப் பெற்றுள்ளது குறிக்கத்தக்கது. அதற்குக் கீழே ஒரு நீளமான குறியீடும் அமைந்துள்ளது. அது மீனின் உடலில் அமைந்த முள் போன்று வரிவரியாகவும் நீண்டதாகவும் கீறப் பெற்றுள்ளது. கொடுமணல் தொல்லியல் தளம் நொய்யல் ஆற்றங்கரையில் அமைந்துள்ளதால் இக்குறியீட்டினை ஆற்றுப் படுகையைக் குறிக்கும் குறியீடு எனக் கொள்ளலாம். பானை ஓட்டின் இடது ஓரத்தில் இன்னும் சில குறியீடுகள் அமைந்துள்ளன.  ஆனால் அக்குறியீட்டின் ஒரு பகுதி சிதிலமடைந்த பகுதியில் காணாமல் போய்விட்டது.

மேற்பரப்பாய்வில் கிடைத்த மற்றுமொரு பானை ஓடும் கவனத்திற்குரியது. இப்பானை ஓடு சுடப்படுவதற்கு முன்பு கூரிய உலோகத்தால் கீறப்பெற்றுப் பின்பு சுடப்பெற்றுள்ளது.  இவ்வகையில் அமைந்த சான்றுகள் கிடைப்பது அரிது. இதனை ஓவிய வடிவில் அமைந்த குறியீடாகக் கருதலாம். இக்குறியீடு காண்பதற்கு மயிலின் தலையில் அமைந்த தூவி (கொண்டை) போன்று ஐந்து கோடுகளைக் கொண்டு அமைந்துள்ளது. இதனை எண்ணிக்கையைக் குறிக்கும் எண்குறியீடுகளாகவும் கருதலாம். இதுபோன்ற குறியீடுகள் கோட்டு வடிவில் அமைந்து கருத்துகளை உணர்த்தும் கருத்தெழுத்துகளாகவும் (ideography) கருதப்பெறுகின்றன.  இத்தன்மை கொண்ட தரவுகள் ‘அரப்பன்’ எழுத்து முறையில் மிகுதியாகக் கிடைத்துள்ளன. இப்பானை ஓட்டின் சிதிலமடைந்த பகுதியில் மேடு போன்ற கீறல் குறியீட்டின் அடையாளம் காணப் பெறுகின்றது. அதனை ஒருமலை முகடு போலக் கருதலாம். அதன்மேல் ஐந்து கோடுகளும் கோடுகளின் முடிவில் சுழியமும் அமைந்துள்ளது. இதனை மற்றொரு கோணத்தில் படவெழுத்தாகவும் (pictography) கருதமுடியும். மேற்கூறிய தரவுகளைச் செவ்விலக்கியங்களில் அமைந்த தரவுகளோடு ஒப்பிட்டு நோக்கமுடியும். தொல்தமிழ் வரிவடிவங்களின் தன்மை குறித்தும் வடிவம் குறித்தும் தொல்காப்பியமும், சங்கஇலக்கியமும் சான்றுகள் பகர்கின்றன.

பெயரும் பீடும் எழுதிஅதர் தொறும் பீலிசூட்டிய (அகம்.67)

விழுத்தொடை மறவர் வில் இடவீழ்ந்தோர்

எழுத்துடை நடுகல்  (அகம்.53)

எழுத்துடை நடுகல்  (ஐங்.352)

அணிமயில் பீலிசூட்டி

பெயர் பொறித்து இனிநட்டனரே கல்லும்  (புறம்.264)

கூர் உளிகுயின்ற கோடுமாய் எழுத்து (அகம்.343)

பெயர்பெயம் படரத்தோன்று குயில் எழுத்து (அகம்.297)

உட்பெறு புள்ளி உருவாகும்மே (தொல்.14)

இச்சான்றுகள் தொல்தமிழ் எழுத்துகளின் வரிவடிவம் அமைந்த நடுகற்கள் குறித்த செய்திகளைத் தருகின்றன. தொல்காப்பியர் குறிப்பிடும் மகரக்குறுக்கத்தின் வடிவம் குறித்த கருத்து முக்கியத்துவம் வாய்ந்தது. குறுகிய மகரமெய்க்கு உரிய வரிவடிவத்திற்குள்ளே புள்ளி ஒன்று அமையும் எனத் தொல்காப்பியர் விதி வகுத்துள்ளார். இம்முறையில் புள்ளி அமைந்த எழுத்து ஒன்று ஆண்டிப்பட்டி புதையல் நாணயத்தில் கிடைத்துள்ளது. அகம்.343, 297 ஆகிய இரு பாடல்களிலும் எழுத்து அமைந்த தன்மையினை ‘கோடுமாய் எழுத்து’, ‘குயில் எழுத்து’ எனக் குறித்துள்ள பதிவு மிகமுக்கியமான பதிவுகளாகும். அவ்வாறே ‘பெயரும் பீடும் எழுதி அதர் தொறும் பீலி சூட்டிய‘ (அகம்.67) என்ற பாடலில் அமைந்த ‘பெயரும் எழுதி’ என்ற சொற்கள் எழுத்து எழுதிய முறையைக் குறிக்கவில்லை என்றும் அது போரில் மாண்ட வீரனின் உருவம் வரையப் பெற்றமையைக் குறித்து அமைகிறது, என்றும் தொல்லியல் அறிஞர்கள் கருதுகின்றனர்.  அது எழுத்தாக அமையினும் அல்லது ஓவியமாக அமையினும் மிகமுக்கியமான தொல்லியல் தரவுகளை வெளிப்படுத்தும் இலக்கியத் தரவுகளாக அமைகின்றன. இவ்வகையில் நோக்கும் பொழுது கொடுமணல் கள ஆய்வில் கிடைத்த கீறல் ஓவியம் கொண்ட பானை ஓடு முக்கியத்துவம் பெறுகிறது. கா.ராஜன் ‘தொல்லியல் நோக்கில் சங்ககாலம்’ என்ற தனது நூலில் ‘குறியீடுகள்’ என்ற தலைப்பில்  குறியீடுகளின் அட்டவணைகளைத் தொகுத்தளித்துள்ளார். அதில் அட்டவணை – 4, அட்டவணை – 8 ஆகியனவற்றில் குறித்துள்ள உடுக்கைக் குறியீடு போன்ற குறியீட்டின் தலைகீழ் வடிவமாக அமைந்த குறியீடே இக்கட்டுரையாசிரியரின் களஆய்வில் கிடைத்துள்ளமை குறிக்கத்தக்கது. அவரது அட்டவணையில் தரப்பெற்றுள்ள குறியீடுகளில் இவ் ‘உடுக்கை’ போன்ற குறியீடே அதிக எண்ணிக்கையில் காணப்பெறுகின்றது. இக்குறியீட்டின் அடிப்பகுதியில் கோட்டு உருவத்தில் அமைந்த மீன் வடிவம் ஒரு கருத்தினை உணர்த்துவதற்காகக் கீறப் பெற்றிருக்கலாம். மேலும் ஆற்றுப் படுகையினைக் குறிக்கும் நீளமான குறியீட்டையும் கோட்டுருவ மீன் குறியீட்டையும் பொருண்மை நோக்கில் தொடர்புபடுத்திப் பார்க்கமுடியும்.  உலகின் தொடக்ககால நாகரிகங்கள் ஆற்றங்கரையோர நாகரிகமாக அமைந்துள்ளமை ஆய்வுலகம் அறிந்த ஒன்று. கொடுமணலில் அமைந்துள்ள ஆறு நொய்யல் ஆற்றின் கிளையாறாகும். அதன் ஆற்றுப்படுகை நாகரிகமாகக் கொடுமணல் நாகரிகத்தைக் கொள்ள வேண்டும். மீன் என்பதும் ஆற்றுப்படுகை என்பதும் மனிதனின் அடிப்படை வேளாண் மற்றும் உணவு உற்பத்தியின் குறியீடாகக் கொள்ள முடியும். இக்கோட்டுருவ மீன் குறியீடுகளே சங்ககாலப் பாண்டியர் நாணயங்களில் முதன்மைக் குறியீடாக அமைந்துள்ளமையும் ஒப்புநோக்கத்தக்கதாகும்.

கொடுமணல் என்ற தொல்லியல் களத்தில் ஒரு சமூகத்தின் ஒட்டுமொத்த அடையாளங்களுக்குத் தேவையான அனைத்துத் தரவுகளும் ஒருசேரக் கிடைப்பது தொல்லியல் அறிஞர்களுக்குப் பெரும் வியப்பை ஏற்படுத்துவதாக அமைகிறது. கற்பதுக்கை (கல்வட்டம்), நெடுநிலைக்கல், நடுகல், பிற்கால வட்டெழுத்து நடுகல், முதுமக்கள் தாழிகள், கறுப்பு சிவப்புப் பளபளப்பான பானை ஓடுகள், முத்திரைகள், குறியீடுகள், தமிழ்ப்பிராமி (தமிழி) எழுத்துப் பொறிப்புகள் இவை மட்டுமல்லாது தொழில்துறை வளர்ச்சி பெற்ற நகரமாகவும் விளங்கியுள்ளமையினைக் கா.ராஜன் தனது அகழாய்வின் வழி வெளிக்கொணர்ந்து உள்ளார்.  அரிய கல் மணிகள் பட்டை தீட்டும் தொழில்நுட்பம், இரும்பு உருக்கி எடுக்கும் தொழில்நுட்பம், பருத்தியாடைகள் நெசவு செய்யும் நுட்பம் என அத்தனை நாகரிக வளர்ச்சியும் இருந்தமைக்கான தரவுகள் ஒருசேரக் கிடைத்திருப்பது உலகின் பார்வையை நம் பக்கம் திருப்பியுள்ளது.  இவ்விடத்தில் ஏறத்தாழ 4000 ஆண்டுகள் மனித இனக்குழுக்கள் வாழ்ந்தமைக்கான தரவுகள் வெளிப்படையாகக் கிடைக்கின்றன. கொடுமணல் என்ற இவ்விடம் பற்றிய குறிப்பு சங்கஇலக்கியத்தில் அமைந்துள்ளது. கொடுமணல் எனத் தற்பொழுது வழங்கப் பெறும் இந்நிலம் சங்க இலக்கியத்தில் ‘கொடுமணம்’ என வழங்கப் பெறுகின்றது.

‘கொடுமணம் பட்ட வினைமான் அருங்கலம்’ (பதிற்.74)

‘கொடுமணம் பட்ட … நன்கலம்’   (பதிற்.67)

கொடுமணம் என்ற இடத்தில் செய்யப்பெற்ற நல்ல பொருட்கள் என்பது அதன் பொருளாகும்.  பெரும்பாலும் விலையுயர்ந்த கலைநுணுக்கம் செய்யப்பெற்ற பொருட்களாகவே அமைந்திருக்கும் என்பதைக் குறிக்கவே ‘வினைமான்நன்கலம்’ ‘அருங்கலம்’ என்ற சொல்லாட்சிகள் கையாளப் பெற்றுள்ளன. இலக்கியப் பிரதிகள் குறிக்கும் தரவுகள் தொல்லியல் அகழாய்வின்வழிக் கண்டறியப் பெறுதல் என்பது அச்சமூகத்தினரின் உண்மையான வாழ்வியலை அப்பிரதிகள் தொடர்ந்து கடத்தி வந்துள்ளமையினை உணர்த்துகிறது. ஆக சங்க இலக்கியப் பிரதிகளின் உண்மைத் தன்மையும் இதன்வழிப் புலப்படுகின்றது.

கொடுமணலில் கண்டறியப் பெற்ற பொருட்களில் பெரும்பாலானவை புழங்கு பொருட்களாகும். புழங்கு பொருட்களின் மீதே பெரும்பாலான தமிழ்ப்பிராமி எழுத்துப் பொறிப்புகள் காணப்படுகின்றன. சாதாரண அடித்தட்டு மக்களும் இத்தொன்மையான எழுத்து முறையைப் பயன்படுத்தி வந்துள்ளனர். வீடுகளில் தாங்கள் புழங்கும் பொருட்களில் பெயர்களை எழுதிவைக்கும் வழக்கம் இன்றும் தொன்று தொட்டு நம்மிடையே இருந்து வரும் பண்பாட்டு எச்சங்களில் ஒன்றாகும். குறிப்பாக உணவு உண்ணும் வட்டில்களின் (தட்டு) வாய்ப் பகுதியில் (விளம்பு) பெயர்களை வெட்டிவைக்கும் மரபானது பெருங்கற்காலத்திலிருந்தே தொடர்ந்து வருகின்றது எனலாம். ஏனெனில் தமிழ்ப்பிராமி எழுத்துப் பொறிப்புகளில் பல மண்வட்டில்களின் வாய்ப்பகுதியிலும், கழுத்துப் பகுதியிலும் காணப்பெறுவது குறிக்கத்தக்கது. பெருங்கற்காலத் தமிழ்ச் சமூகம் நன்கு கல்வி கற்ற சமூகமாகவும் இருந்துள்ளமை இதன்வழிப் புலப்படுகின்றது.

கொடுமணலில் மேற்கொள்ளப்பெற்ற மேற்பரப்பாய்வில் மட்டும் இவ்வளவு அரிய தொல்பொருட்கள் கிடைக்கப் பெறுகின்றன. கா.ராஜன் குறிப்பிடுவது போல் இத்தொல்லியல் களத்தின் ஒரு சதவிகிதம் மட்டுமே ஆய்விற்குட்படுத்தப் பெற்றுள்ளது.  அதில் மட்டும் 200-ற்கும் மேற்பட்ட தமிழ்ப்பிராமி எழுத்துப் பொறிப்புகள் கிடைக்கப் பெறுகின்றன. அது இந்திய அளவில் கிடைக்கப்பெற்ற எழுத்துப் பொறிப்புகளில் முக்கால் பங்கு கொண்டுள்ளது. பெருங்கற்காலத் தமிழ்ச் சமூகம் என்பது விலையுயர்ந்த பொருட்களையும், சாதனங்களையும் பயன்படுத்தும் சமூகமாக மட்டுமன்றி அவற்றை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்யும் வணிகப் பண்பாடு கொண்ட நாகரிக சமூகமாகவும் விளங்கியுள்ளது. இம்மக்கள் பயன்படுத்தும் மொழியின் வரிவடிவம் தொன்மையான சிந்துவெளி வரிவடிவத்திலிருந்து வளர்ச்சி பெற்ற தொல்வடிவம் என்பதும் இத்தொல்லியல் தரவுகள் மூலம் புலப்படுகிறது.

 துணை நின்றவை

  1. இராசமாணிக்கனார் மா., 2008 (மு.ப.), கல்வெட்டுகளும் தமிழ்ச்சமூக வரலாறும், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை.
  2. இராசவேலு.சு., 2008 (மு.ப.), தொல்லியல் சுடர்கள், சேகர் பதிப்பகம், சென்னை.
  3. இராசவேலு.சு., 2010, “அரிக்கமேடு அகழ்வாய்வு”, உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு (மலர்), தமிழ்நாடு அரசு, கோவை.
  4. இளங்கோ சி., “பெருங்கற்காலத் தமிழ்ச்சமூகம் தொல்லியல் தரவுகளை முன்வைத்து”, புதிய பனுவல் (தொகுதி : 03), சென்னை.
  5. குருமூர்த்தி, செ., 2010, “பழம்பானைக் குறியீடுகளும் தமிழர் பண்பாடும்”. உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு, தமிழ்நாடு அரசு, கோவை.
  6. மதிவாணன் இரா., “சிந்துவெளித் தமிழ் எழுத்துக்கள்”, உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு, தமிழ்நாடு அரசு, கோவை.
  7. ராஜன் கா., 2010 (மு.ப.), தொல்லியல் நோக்கில் சங்ககாலம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.
  8. விசய வேணுகோபால் கோ., “தமிழகத்தின் எழுத்து வழக்கம் அசோகன் காலத்திற்கும் முந்தையது”, மணற்கேணி, சென்னை.
  9. ஸ்ரீதர் தி., (ப.ஆ.), தமிழ்ப்பிராமி கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை, சென்னை.

                               முனைவர் க.பாலாஜி

தமிழ் – உதவிப்பேராசிரியர்

ஸ்ரீகிருஷ்ணா ஆதித்யா கலை அறிவியல் கல்லூரி

கோவைப்புதூர் – 641 042