முன்னுரை

“கடல் போல ஆழ்ந்தகன்ற கல்வியாளர்!

கதிர்மணிக்குப் புகழ்மிகுந்த தலைமாணாக்கர்!

கொடை அண்ணாமலை வள்ளல் அழகப்பர் பல்

கலைக்கழகம் மொழிவளர்த்த தமிழ்ப் பேராசான்

படிப்படியாய் முன்னேறித் துணைவேந்தரானார்!

பைந்தமிழ் உலகத்தின் தனிவேந்தரானார்!

மடிந்தாராம் மாணிக்கம்! ஐயோ! இல்லை!

மூதறிஞர் பயின்றமிழாய் வாழ்கின்றாரே”  (வ.சுப.மாணிக்கனாரின் சிந்தனைகள், ப.104)

என்று அவரது மாணாக்கர் பேராசிரியர் பழ. முத்துவீரப்பனாரால் புகழப்படுகின்ற பெருந்தகையாளர் மூதறிஞர் வ.சுப.மாணிக்கனார். பேராசிரியரின் பார்வையில் திறனாய்வுச் சிந்தனைகள் குறித்து இனங்காண்பதாய் இக்கட்டுரை அமைகின்றது.

வாழ்வும் பணியும்

பேராசிரியர் வ.சுப.மாணிக்கனார் 1917ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 14ஆம் நாள் புதுக்கோட்டை மாவட்டம் மேலைச்சிவபுரியில் பிறந்தவர். ஆறு வயது நிறைவடைவதற்குள்ளாகவே தாய் தந்தையரை இழந்திருந்தார். எனினும் பொய் சொல்லா மாணிக்கமாக வாழ்ந்த பெருமைக்குரியவர். வித்துவான், பி.ஓ.எல், எம்.ஏ, எம்.ஓ.எல், முனைவர் பட்டங்கள் பெற்றவர்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராகவும் புலமுதன்மையராகவும், காரைக்குடி அழகப்பா கல்லூரியில் முதல்வராகவும் பதவி வகித்தவர். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராகவும் விளங்கியவர்.

மேலும் படைப்பிலக்கியம், கடித இலக்கியம், உரை எனத் தமிழிலும் ஆங்கிலத்திலுமாகச் சுமார் இருபத்தைந்து நூல்களை வெளிக்கொணர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கனவாகும்.

ஆய்வு நூல்கள்

வள்ளுவம் (1953), தமிழ்க்காதல் (1962), கம்பர் (1965), தொல்காப்பியப் புதுமை (1958), எந்தச்சிலம்பு? (1964), இலக்கிய விளக்கம் (1972), சிந்தனைக் களங்கள் (1975), ஒப்பியல் நோக்கு (1978), தொல்காப்பியத்திறன் (1984), இரட்டைக் காப்பியங்கள் (1958), நகரத்தார் அறப்பட்டயங்கள் (1961), The Tamil Concept of Love, A Study of Tamil Verbs, Collected Papers Tamilology.

கவிதை நூல்கள்

கொடைவிளக்கு (1957), மாமலர்கள் (1978), மாணிக்கக் குறள் (1991).

நாடக நூல்கள்

மனைவியின் உரிமை (1947), நெல்லிக்கனி (1962), உப்பங்கழி (1972), ஒரு நொடியில் (1972).

கடித இலக்கியம்

தலைவர்களுக்கு (1965)

உரை நூல்கள்

எழுத்ததிகாரம் நூன்மரபும் மொழிமரபும் மாணிக்கவுரை (1989), திருக்குறள் தெளிவுரை (1991), நீதி நூல்கள் உரை (1991).

ஆக இவை அனைத்தும் இவரின் கடின உழைப்பையும், வளர்ச்சியையும்  அடையாளம் காணும் இவர் குறித்த வாழ்வியல் வரலாறாய் அமைகின்றன.

சமூகச் சிந்தனை

பேராசிரியர், ஆராய்ச்சியாளர், எழுத்தாளர், தமிழ்ப்பற்றாளர், சமூகச் சிந்தனையாளர் என்பதாய்ப் பன்முகப் பரிணாமங்களோடு ஒளிரும் வ.சுப.மாணிக்கனார் சமூகத்தின் மீது ஆழ்ந்த கரிசனம் மிக்கவராகத் திகழ்ந்தவர். சமூகத்தின் உயிர்நாடியான மக்கள், மொழி, ஆசிரியர், எழுத்தாளர் குறித்து நிரம்ப எழுதியும் பேசியும் உள்ளார். அண்ணாமலை நகரில் 23.3.1987 அன்று நடைபெற்ற தமிழ் எழுத்தாளர் மாநாட்டில் முதன்மையுரை ஆற்றிய பேராசிரியர் வ.சுப.மா எழுத்தாளர்களை எழுது குலத்தோராகிய நாம் (இலக்கியச் சாறு, ப.11) என்று ஒரு குலமாக அங்கீகரிப்பதும், அவர்களை மொழித் தொழிலாளர்கள்(இலக்கியச் சாறு, ப.13) என்று குறிப்பிடுவதும் கவனத்தில் கொள்ளத்தக்கது. மட்டுமல்லாது எழுத்தாளர்களின் வாழ்வு வளமானதாக அமைய வேண்டும் என்பதை அவர் வலியுறுத்தும் பாங்கு இன்றும் கூட யாராலும் சுட்டமுடியாத ஒன்றாகும்.

“தமிழ் எழுத்தாளர்கள் பொருளாதாரத்திலும் நல்ல தலையெழுத்து உடையோராக, வறுமைக் கோட்டிற்குக் கீழே தாழாமல் வாழ்வுக் கோட்டிற்கு மேலே இருப்பவர்களாக வாழ வேண்டும் என்பது என் முதற்சிந்தனை. எங்கள் முன்னோர்களை வேறு வகையில் எல்லாம் பின்பற்ற நாங்கள் ஆயத்தமாக இருக்கின்றோம். பெருஞ்சித்திரனார், பாரதியார், வ.உ.சி., அரசஞ்சண்முகனார் போன்ற பல பெருமக்கள் வறுமையில் உழன்று கன்னித்தமிழைக் காத்தனர். நாங்கள் அந்த ஒரு வழியைப் பின்பற்ற விரும்பவில்லை. அது முடியரசுக் காலம், இது குடியரசுக் காலம். எழுத்தாளர்கட்கும் வாக்குரிமையுண்டன்றோ?.

நமக்குத் தொழில் கவிதைஎன்ற பாரதியார் வாக்கின்படி எழுத்தாளர்களும் மொழித் தொழிலாளர்களே. அவர்கள் தங்கள் சிந்தனைத் தொழில் எழுது தொழிலுக்குத் தக்க வருவாய் பெற்றுத் தம் பொருட்காலில் நிற்க வேண்டும். அப்போதுதான் சந்தை நோக்கமும் தொழுநோயுமின்றிச் சிந்தனையுரிமையோடு எழுத்துப் பிறக்கும் (இலக்கியச்சாறு, ப.13)

என்று குறிப்பிடுகின்றார்.

மேலும் தொடர்சிந்தனையாக வீட்டு நூலகம் அமைப்பது குறித்தும், குடும்ப நலத்திட்டம் உள்ளிட்ட பல திட்டங்களுக்கு விளம்பரப்படுத்துகின்ற அரசு, மக்கள் புத்தகம் வாங்குவது தொடர்பாகவும் பல அறிவிப்புகளை, விளம்பரங்களை வெளியிட வற்புறுத்துகின்றார். சான்றாக வீட்டுக்கு ஒரு நூலகம், புத்தகம் வாங்கிப் புத்தகம் பெறுக…, ஏடுகள் வாங்கின் கேடுகள் நீங்கும் (இலக்கியச்சாறு, ப.14) போன்ற வாசகங்களை அவர் முன்வைக்கின்றார். அத்துடன் நூல்கள் விற்பது வாங்குவது குறித்த அரசின் பங்களிப்புப் பற்றி பேசும் அவர், கைத்தறி முதலானவற்றிற்கு அரசு தள்ளுபடி வழங்குவது போல மத்திய, மாநில அரசுகள் புத்தகங்களுக்கு நிதிநிலையில் ஐந்து சதமாவது ஒதுக்கீடு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால்தான் பாரதி கூற்று போல வெள்ளம் போல் கலைப்பெருக்கும், கல்விப் பெருக்கும் உயரும், அறியாமைப் பள்ளத்தில் விழுந்திருக்கும் உயர்திணைக் குருடரெல்லாம் அறிவு பெறுவர் என்று குறிப்பிடுவதும் பேராசிரியரின் எழுத்து – எழுத்தாளர் – சமூக ஈடுபாட்டைப் புலப்படுத்துவதாய் உள்ளன.

ஒரு சமூகம் மேம்பட அந்தச் சமூகம் தன் மொழியில் செழுமையுற்றிருக்க வேண்டும். மொழி ஒரு ஊடகம். அது அறிவை, உணர்வினைப் பகிர்ந்து கொள்ளுகின்ற ஒரு கருவி என்பதை நாம் அறிவோம். அந்த வகையில் தாய்மொழியாம் தமிழ்மொழியின் மீது அளவற்ற பற்றுடையவராக வ.சுப.மா திகழ்ந்துள்ளார். அவரின் தமிழுணர்வைப் பறைசாற்றும் இரா.மோகன்,

தமிழ்நாடு, தமிழ்மொழி, தமிழ் இனம் பற்றிய சிந்தனைகள் வ.சுப.மாவின் நூல்களில் அங்கிங்கு எனாதபடி எங்கும் நீக்கமற நிறைந்திருக்கக் காணலாம் (வ.சுப.மாணிக்கம், ப.98)

என்று பதிவுசெய்கின்றார். மேலும் தாய்மொழிக்கல்வியின் அவசியத்தை வலியுறுத்தும் வ.சுப.மா.,

“மொழியியல் கற்க முயலுமுன் உன்தாய்

மொழிதமிழ் கற்பாய் முதல்”         (மாணிக்கக் குறள், 45)

என்று தாய்மொழி கற்க வலியுறுத்துகின்றார். அதுமட்டுமல்லாது மொழிக் கலப்பினால் தாய்மொழியாம் தமிழ்மொழிக்குக் கேடு விளையும் என்பதை நன்கு உணர்ந்திருந்தார். எழுத்துச் சீர்திருத்தத்தையும் பெரிதும் ஏற்றுக் கொண்டிராததை அவரது பாடல்வரிகள் மூலமாக நாம் உணர்ந்துகொள்ள முடிகிறது.

“ஒழிகெனக் கத்துதற்கோ இந்திமொழியும்

ஒழியும் தமிழை உயர்த்து”          (மாணிக்கக் குறள். 66)

“மொழித்தூய்மை காட்டித் தலைக் காக்கை கற்பு” (மாணிக்கக் குறள்.371)

“களை அயலொலி, காண்க தமிழ்ச்சொல்” (மாணிக்கக் குறள்.167)

“எழுத்துத் திருத்தம் இயல்போ தமிழைக்

கழித்துச் சுழிக்கும் கதை”   (மாணிக்கக் குறள்.156)

குழந்தை பெற்றுக்கொள்வது பற்றிப் பேசுகின்றபோது பொருளாதாரத்தோடும், தமிழோடும் தொடர்புபடுத்தும் விதமும் பேராசிரியரின் ஆழ்ந்தகன்ற அறிவுப்பூர்வச் சிந்தனையின் அடையாளமாகவே தொழிற்படுகின்றது.

“பெறுக குழந்தை பெறுவருவாய்க் கேற்ப

உறுக தமிழ்ப்பேர் ஒலி”                 (மாணிக்கக் குறள்.216)

திறனாய்வாளர்

பேராசிரியர் சிறந்த ஒரு திறனாய்வாளர் என்பதற்கு அவரது தமிழ்க் காதலும் கம்பன் உள்ளிட்ட பல நூலாக்கங்களும் சான்றாகத் திகழ்கின்றன. படைப்பியம், கம்பனியம், இலக்கியக் கலை, இலக்கியத்தளம், இலக்கிய உத்தி போன்ற அவரின் சொல்லாடல்களின் பயன்பாடு அவரின் உலக இலக்கிய மற்றும் திறனாய்வு நூல்களின் வாசிப்புத் தளத்தின் வெளிப்பாடாக நாம் எண்ணிப் பார்க்க முடியும்.

பேராசிரியர் தனது ‘கம்பர்’ நூலில் ஓர் இலக்கியத்தை அல்லது ஒரு காப்பியத்தை எவ்வாறு புரிந்து கொள்ள வேண்டும் என்பதை விளக்குகின்றபோது ஒப்புமை முறை, முழுப்பார்வை, துண்டுப்பார்வை, தொடர்பழகு, சங்கிலிப்பார்வை, தனிப்பார்வை, உலகப்பார்வை என்பதாக விவரிப்பன அவரின் திறனாய்வுப் பார்வையினை இனங்காட்டுவதாய் உள்ளது. திறனாய்வு பற்றிக் குறிப்பிடுகின்ற போது,

திறனாய்வு என்பது ஒப்பாய்வன்று, உள்ளாய்வு. புறனாய்வன்று அகனாய்வு. இராமாயணப் பெருங்காப்பியம் வடிக்க முனைந்த கம்பர் தம் காப்பியத்தில் என்னென்ன கூறுகள் எவ்வாறு எவ்விடத்து அமைய வேண்டுமென்று கருதினார். அவர் காட்டுகின்ற காப்பிய இலக்கணங்கள் என்ன என்று அந்நூலுக்கு உரிய தனியளவுகோலைக் கண்டுபிடித்து உலகிற்குக் காட்டுவதே நம் நோக்கமாதல் வேண்டும் (கம்பர், ப.21)

என்று திறனாய்வுப் பார்வையின் அவசியத்தை வலியுறுத்துகிறார்.

வ.சுப.மாணிக்கனார் திறனாய்வாளர் மட்டுமல்ல,  படைப்பாளியும் ஆவார். எனவேதான் அவர் ஒரு படைப்பைச் சிதைக்காமலும் அதேநேரத்தில் நுட்பமாகப் புரிந்துகொள்ளவும் விளைகின்றார். படைப்புக்கும், படைக்கும் படைப்பாளிக்கும்  பெருத்த வேறுபாடும் அதே நேரத்தில் தனித்த நோக்கும் இருக்கும் என்பதைப் புரிந்து கொண்டமையால்தான் அவர் அகனாய்வுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை நம்மால் எளிதாக உணர முடிகின்றது. அதுபோலவே துண்டுப்பார்வை காப்பியம் போன்ற ஒரு பெரும்படைப்பை மதிப்பீடு செய்வதற்கோ, விமர்சிப்பதற்கோ சரியான அளவுகோலாக இருக்காது என்பதைத் தீர்க்கமாக முன்வைக்கின்றார். மட்டுமல்லாது முழுப்பார்வை, தொடர்பழகு, சங்கிலிப் பார்வை போன்றவையே படைப்பைச் சரியாக விமர்சிப்பதற்கு ஏற்புடைய அணுகுமுறையாக இருக்கும் என்பதை வலியுறுத்துவதும் அவரின் திறனாய்வு அணுகுமுறைக்கான சான்றாகவே கொள்ளத்தக்கது.

வ.சுப.மாவைப் பற்றி, அவரின் நூல்களைப் பற்றிப் பேசுகின்றபோது அவரின் தமிழ்க்காதலைப் பற்றி நாம் சொல்லாமலிருக்க முடியாது. சங்க அகப்பாடல்கள் குறித்த ஆய்வாக அமையும் இந்நூல் அகஉணர்வு, அகச்செயல்பாடு, அகஇலக்கியம் குறித்துத் திறந்த நிலையில் பேசக்கூடிய ஒரு நல்உரையாக அமைகின்றது. தொல்காப்பியம், தமிழர் வாழ்வியல் நெறிமுறைகளுக்கு உட்படுத்தியும், தமிழர் நிலத்திற்கு உட்படுத்தியும், சில இடங்களில் மானுடவியலோடு தொடர்புபடுத்தியும் பார்த்திருப்பதைக் காணலாம். ஆய்வுப் பொருளின் தன்மைக்கேற்ற பொருத்தப்பாடுடைய ஆய்வியல் அணுகுமுறையினை அவர் இங்குக் கைக் கொண்டிருப்பது சிறப்புக்குரியது.

தொல்காப்பியரை ஓரிடத்தில் சுட்டுமிடத்து “பாலியலறிஞன்” (ப.14) எனச் சுட்டுவதும், காமம் பற்றிப் பேசுமிடத்தில் “உலகம் நீடு வாழ உயிர்க்கொடை செய்யும் காமம்” என்றும் (ப.14) அகத்திணையின் தோற்றம் பற்றிப் பதிவு செய்யுமிடத்து “சமுதாயவியல் மானுடவியல் தொல்தமிழகத்தின் உளவியல் என்னும் முக்கூற்றுத் தன்மைகளை(ச்) சார்ந்து நிற்பது” (ப.93) எனக் குறிப்பிடுவதும், மேலும் அகத்திணை இலக்கியத்தைப் பெண்ணிலக்கியமாக,   (ப.377) கற்பிலக்கியமாக, (ப.378) பாலியற்கல்வி தரும் இலக்கியமாக (ப.379)  எல்லாம் பார்க்கும் விதம் அவரின் தனித்த, புதிய, நுட்பமான அதேநேரம் தமிழனின்  பண்பாட்டோடு கூடிய ஆய்வாக நாம் எண்ணிப் பார்க்கத்தக்கன.

“அகத்திணை ஓர் பாலிலக்கியம், பெயரில்லாதார் வாழ்க்கையிலிருந்து காம நுணுக்கங்களைக் கற்றுக் கொள்கின்றோம். காமம் பற்றிய ஆணுடல் பெண்ணுடலின் கூறுகளையும், இயற்கை, செயற்கைத் திரிபு ஆகிய மனக்கூறுகளையும் தரவின்றிப் பட்டாங்காய்ச் சொல்வது” ( ப.379)

எனப் பாலியல் நூலாக இனங்காணும் அவர், அக இலக்கியத்தைச் சொல்வதில் எத்தகைய பொறுப்புணர்வு, கட்டுப்பாடுகள் தேவை என்பதையும் அடையாளப்படுத்தத் தவறவில்லை. அவர் கூறுகின்றபோது,

“அகத்திணையில் பொருளுக்கு மட்டும் வரம்பன்று, பொருளைச் சொல்லும் முறைக்கும் வரம்பு உண்டு என்பது கற்கத்தகும். வரம்பிட்ட பாற் பொருளும், வடித்திட்ட இலக்கிய முறையும் இரண்டறக் கலந்த ஒருமைப் பண்பே அகம்” (தமிழ்க் காதல், ப.28) எனச் சுட்டித் தெளிவுபடுத்துகின்றார்.

முடிவுரை

பேராசிரியர் வ.சுப.மா அவர்களின் படைப்பும், பேச்சும், சிந்தனைச் செயல்பாடும் தமிழ் மக்களின் மொழி, பண்பாட்டைப் பிரதிபலிக்கின்ற சமூகக் கரிசனம் மிக்கதாக அமைகின்றன. இவரது திறனாய்வுப் பார்வையைப் பொறுத்தமட்டில் புதிய, தனித்தன்மை வாய்ந்த, நுட்பமான, அதே நேரம் இலக்கியம் உருவான நிலம்சார்ந்த பண்பாட்டோடு கூடிய பார்வை முறையினை அடையாளப்படுத்துவதாய் விளங்குகின்றது.

துணைநூற்பட்டியல்

  1. இரா. சாரங்கபாணி – மாணிக்கச்செம்மல், மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம், முதல் பதிப்பு – 1997
  2. வ.சுப.மாணிக்கம் – தமிழ்க்காதல், மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம், முதல் பதிப்பு – டிசம்பர்-2012
  3. வ.சுப.மாணிக்கம் – கம்பர், மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம், முதல் பதிப்பு – 1990.
  4. வ.சுப.மாணிக்கம் – இலக்கிய விளக்கம், மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம், முதல் பதிப்பு – 1972,
  5. வ.சுப.மாணிக்கம் – சிந்தனைக் களங்கள், மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம்,  முதல் பதிப்பு – 1975.
  6. வ.சுப.மாணிக்கம் – மாணிக்கக் குறள், மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம், முதல் பதிப்பு – 1991.
  7. வ.சுப.மாணிக்கனாரின் சிந்தனைகள், மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம்.

முனைவர் சு.செல்வகுமாரன்

உதவிப் பேராசிரியர்,

தமிழ்ப்பிரிவு,

தொலைதூரக்கல்வி இயக்ககம்

அண்ணாமலைப் பல்கலைக்கழகம்,

கைபேசி – 9442365680, [email protected]