தமிழ்மொழியின் தொன்மையையும், தமிழ்மக்களின் பண்பாட்டு மரபையும் உலகறியச் செய்ததோடு, உலகத்தார் கவனத்தையும் ஈர்த்து, பரந்துபட்ட ஆய்வுக் களங்களைக் கற்போருக்கு வழங்கும் சிறப்பிற்குரிய இலக்கியமாகத் தமிழ்ச் செவ்வியல் இலக்கியங்கள் திகழ்கின்றன.

தமிழரின் வாழ்வானது உயர்ந்த நற்சிந்தனை, வாழ்வறம், வீரம், கொடை, விருந்தோம்பல், உயர் ஒழுக்கத்தின் ஊற்று, போர் மறம் என்பன போன்ற எண்ணற்ற ஒழுகலாறுகளைக் கொண்டது. இத்தகைய நெறிசார் வரலாற்றைப் பறைசாற்றும் விதமாகப் ‘பாட்டும் தொகையும்’ விளங்குகின்றது.

எட்டுத்தொகை என்பது தொகைநிலைச் செய்யுளாகவும், பத்துப்பாட்டு என்பது தொடர்நிலைச் செய்யுளாகவும் அமைக்கப்பட்டுள்ளது. எட்டுத்தொகையில் அகம், புறம் சார்ந்து மக்களின் காதல், வீரம், பிரிவாற்றாமை, கையறுநிலை, நிலையாமை, மன்னர்களின் போர்த்திறம், படைச்சிறப்பு போன்ற பண்டையத் தமிழரின் வாழ்க்கை நிகழ்வுகளைப் புலவர்கள் தங்களின் பாடல் அடிகளில் வெளிப்படுத்தியுள்ளனர். தொகை இலக்கியமானது பல்வேறு புலவர்களால் பல்வேறு காலச் சூழலில் பாடப்பட்ட தனிப்பாடலின் தொகுப்பு ஆகும்.

பத்துப்பாட்டு அமைப்புமுறை

பத்துப்பாட்டு தொடர்நிலைச் செய்யுள் ஆகும். நூறடிச் சிறுமையும் ஆயிரமடிப் பெருமையும் கொண்டது பத்துப்பாட்டு என்பதைப் ‘பன்னிருபாட்டியல்’ என்னும் இலக்கண நூல் இலக்கணமாய் வகுத்துள்ளது. பத்துப்பாட்டில் ஒவ்வொரு பாடலையும் ஒருவரே இயற்றியிருப்பதால், நாடகப் பாங்கோடு திகழ்கின்றது. பக்தி நெறி, ஆற்றுப்படுத்துதல், பிரிவாற்றாமை, திணைசார்ந்த நிலங்களின் சிறப்பு, இயற்கை வளம் போன்ற அமைப்பு முறைகளை நம் கண்முன்னே காட்சி நிகழ்வுகளாக விரித்துக்காட்டி, இன்பமடையச் செய்யும் புலவர்களின் கவித்துவம் எண்ணி வியக்கும் வண்ணம் அமைந்துள்ளது.

‘பத்துப்பாட்டு’ சங்ககால மக்களின் செழிப்பான வாழ்க்கை, தன்மானம், தொழில் மேம்பாடு, நாகரிகத்தின் உச்சநிலை போன்ற நல்லறங்களின் விளைநிலம் என்பதைக் கற்றுணர வைத்துள்ளது.

பொருநராற்றுப்படை சுட்டும் சோழ நாட்டின் வளம்

சோழநாட்டு மக்கள் வறுமையின் தாக்கமின்றி இன்பமொன்றையே நுகர்ந்து வாழ்ந்துள்ளனர். சோழநாடு இயற்கை எழிலோடும், விளைந்த நிலப்பரப்போடும், வற்றாத நீர் வளத்தோடும் பரந்துபட்ட நிலப்பரப்பைக் கொண்டு காட்சியளித்துள்ளது. பண்டைய சோழநாட்டோடு தற்காலச் சோழநாட்டை ஒப்பிட்டுக் காணும் போது, பொறாமையும் ஏக்கமும் மேலோங்குவதை வெளிக்காட்டாமல் இருக்க முடியவில்லை. என்னதான் நவநாகரிகத்தின் வளர்ச்சியில் நம் தலைமுறை பயனித்தாலும் இயற்கையை அழித்து, நம் அடுத்த தலைமுறையின் வாழ்வாதாரத்தை இழக்க வைத்துக் கொண்டிருக்கிறோம்.

மாமாவின் வயின்வயின் நெல்

தாழ்தாழைத் தன் தண்டலை

கூடு கெழீஇய, குடிவயினான்

செஞ்சோற்ற பசி மாந்திய

கருங்காக்கை கவவு முனையின் (பொருந. 180-184)

கரிகாற்வளவனின் சோழநாட்டில் மருதநிலத்தின் மாநிலத்தில் தாழ்ந்த தெங்கினை உடைய குளிர்ந்த மருத மரச்சோலைகளும், அவற்றிற்கிடையே நெற்கூடுகளும் நிரம்பியிருக்கும். மருதநில மக்கள் காக்கைக்கு உதிரத்தோடு கலந்த சோற்றை உணவாக அளித்தனர். எனினும் அச்சோற்றை விரும்பாது நெய்தல் நிலத்தில் உணவுதேடும் காக்கைகள் எனப் பாடல் அடிகள் விளம்புகின்றன. இதனை நோக்கும் போது சோழநாட்டின் வளம் மட்டுமல்லாது, பிற உயிரினங்களுக்கு உணவளித்து உண்ணும் வழக்கம் நம் முன்னோர்களின் மரபாக விளங்கியதை அறிய முடிகின்றது.

காக்கைக்குச் சோறு இடுதல் இன்றைக்கும் காணப்படும் நம் தமிழரின் மரபாகும். இதற்குக் குறுந்தொகைப் பாடல் அடிகள் சான்றாக விளங்குகின்றன.

வெண்ணெல் வெஞ்சோறு எழுகலத் தேத்தினும்

சிறிதென் தோழி

விருந்துவரக் கரைந்த காக்கையது பலியே (குறு.210:3-6)

இத்தகைய சீர்மிகு சோழ நாட்டையாளும் கரிகால் வளவனிடம் பொருள் பெற்றுத் தன் வறுமையைப் போக்கிக் கொள்ளலாமென ஒரு பொருநன் மற்றொரு பொருநனை ஆற்றுப்படுத்துவதே பொருநராற்றுப்படையின் அடிப்படையாகும்.

கொடை அளி செங்கோல் குடியோம்பல் நான்கும்

உடையானாம் வேந்தர்க்கு ஒளி (குறள் 890)

என்ற குறளடிக்குச் சான்றாக, தன் நாட்டைத் தன் இனத்தை வளப்படுத்தியதோடு, சிறந்த ஆட்சியாளனாகவும் திகழ்ந்துள்ளான் கரிகாற்சோழன். இவனால் கட்டப்பட்ட கல்லணை நீர்த் தேக்க முறைக்கு முன்மாதிரியாகத் திகழ்வதோடு, காலத்தையும் கடந்து வரலாற்று சின்னமாகக் காட்சியளிப்பதை எண்ணித் தமிழர் அனைவரும் பெருமிதம் கொள்ளலாம்.

சிறுபாணாற்றுப்படை காட்டும் வறுமைத் துயர்

பண் என்ற சொல்லுக்குப் பாட்டு, இசை, யாழ் எனப் பொருள்படும். இசைத் தமிழைப் போற்றி வளர்த்தவர்கள் பாணர்கள். சிறுபாணாற்றுப் படையில் குறிப்பிடப்படுபவன் யாழ் இசைக்கும் பாணன்.

‘இவ்வழிச் சென்று இன்னோனை அடைவீராக’ என்று குறுநில மன்னனிடம் பரிசில் பெற்ற பாணன், தன்னை ஒத்த மற்றொரு பாணனை ஆற்றுப்படுத்துவதாகச் சிறுபாணாற்றுப்படை புலவனால் எடுத்துரைக்கப்படுகின்றது.

வறுமைத் துயரில் வாடும் பாணனின் இல்லத்தில் குட்டிகளை ஈன்ற நாயானது, தனது மார்பில் பாலற்றுக் குட்டிகளின் பசியைப் போக்கத் தவிக்கிறது. இதேபோன்று பாணனது மனைவி தனது மக்களுக்கு உணவளிக்க இயலாமல் வறுமைத் துன்பத்தை அனுபவிக்கும் குடும்பச் சூழலை விரித்துரைக்கிறது. இவ்வாற்றுப்படைப் பாடல் அடிகள்.

திறவாக் கண்ண சாய்செவிக் குருளை

கறவாப் பால்முலை கவர்தல் நோனாது (சிறுபாண். 130-131)

விழிக்காத கண்ணையும், சாய்ந்த செவியையும் உடைய குட்டிகள், நாயினது மார்பில் பாலருந்த எத்தனிக்கும். எனினும் பாலற்ற மார்போடு வலியால் நாய் குரைக்கின்றது என்ற பாடலின் பொருள் நெஞ்சை நெகிழ்விக்கின்றது.

வளக்கை கிணைமகள் வள்உகிர்க் குறைத்த

குப்பை வேலை உப்புஇலி வெந்ததை

மடவோர் காட்சி நாணி, கடை அடைத்து,

இரும்பேர் ஒக்கலோடு ஒருங்குஉடன் மிசையும்

அழிபசி வருத்தம் வீட (சிறுபாண். 135-139)

சிறுபாணாற்றுப்படைப் புலவர் பாணனின் இல்லத்தைக் குறிப்பிடுகிறார். கழிகளற்ற மேற்கூரை, சோறாக்கிப் பல மாதங்களாக வெறுமையில் கிடக்கும் அடுக்களை, காளான் பூத்துப் பாசி படர்ந்து கறையான் அரித்த சுவர், உடல் மெலிந்த பாணனின் மனைவி எனப் புலவர் விளக்கும்போது, பாணனின் இயலாமை பற்றியும், தன் குடும்பத்தைக் காக்கப் பிற தொழிலை நாடாமல் இருக்கக் காரணம் என்ன என்பது பற்றியும் வினா எழுகிறது.

குப்பையில் முளைக்கின்ற, பிறர் பயனற்றது என்று எண்ணுகின்ற கீரைச்செடியான வேளைக்கீரையை (குப்பைமேனிக் கீரை) புல்லென் அடுப்பில் உப்பின்றி ஆக்கி, பிறர் பார்க்க, தன்மானம் கெடும் என்ற மான உணர்வு மேலிடக் கதவடைத்து உண்ணும் துயரைப் படித்தறியும் போது, வறுமை கொடிதிலும் கொடியது என்று ஒளவை கூறியதை நினைக்கச் செய்கின்றது.

தான் வாழ பிறர் அழிய வேண்டும் என எண்ணும் தற்கால மனிதர்களிடையே, பண்டைய கால மனிதர்கள் தான் பெற்ற பெருவளத்தைப் பெறாதவர்களுக்கு அறிவுறுத்தி இன்னலைத் தீர்த்து இன்பமடையச் செய்வது, சங்ககாலச் சமூகத்தின் மனிதப் பண்பை முன்னிறுத்துகின்றது.

“எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும்

இல்லாமை இல்லாத நிலை வேண்டும்”

என்ற புரட்சிக் கவிஞரின் பாடல்வரிகளைச் சுட்டிக்காட்ட வழிவகுக்கின்றன சிறுபாணாற்றுப்படைப் புலவரின் சிந்தனை மிகு மனிதநேயப் பாடல் அடிகள். பசித் துயரமானது அனைத்து உயிருக்கும் ஒன்றே! நாயானால் என்ன? மனிதனானால் என்ன? எல்லா உயிரினங்களையும் ஒரே நேர்கோட்டிலேயே நிலைநிறுத்திவிடுகிறது வறுமை அளவுகோல்.

முல்லைப்பாட்டு வாயிலாக வெளிப்படும் யானையின் சிறப்பு

முல்லைப்பாட்டு இருத்தலும் இருத்தல் நிமித்தமும் என்ற உரிப்பொருளைக் கொண்டது.

“வஞ்சி தானே முல்லையது புறனே” – (தொல். புற. 6)

எனத் தொல்காப்பியம் கூறுவதற்கேற்ப, முல்லைப்பாட்டானது முல்லை நிலத்தின் இயல்புகளை மட்டுமல்லாது அதற்குப் புறமான வஞ்சித்திணையின் இயல்பினையும் விரித்துக் கூறுகின்றது.

தலைவன் போர் அல்லது பொருள் தேடுவதன் காரணமாகப் பிரியும்போது, தலைவி கார்காலம் வரை பிரிவாற்றியிருத்தல் முல்லை ஒழுக்கம் எனலாம். தன் நாட்டிற்கும் அடுத்த நாட்டிற்கும் இடைப்பட்ட நிலத்தைத் தனதாக்க எண்ணி வரும் மாற்று நாட்டு அரசனை வெல்வதற்குப் படையெடுத்துச் செல்லுதல் வஞ்சித் திணை ஆகும்.

எஞ்சா மண்ணசை வேந்தனை வேந்தன்

அஞ்சுதகத் தலைசென்று அடல்குறித் தன்றே (தொல்.புற.62)

என்ற தொல்காப்பியம் நூற்பா வஞ்சித்திணையின் இலக்கணத்தை நுவலுகிறது.

கவலை முற்றம் காவல் நின்ற

தேம்படு கவுள சிறுகண் யானை

ஓங்குநிலைக் கரும்போடு, கதிர்மிடைந்து யாத்த,

வயல்விளை இன்குளகு உண்ணாது நுதல்துடைத்து  (முல்லைப். 30-33)

முல்லை நிலத்தின் ஒழுங்குபட்ட தெருக்களின் நாற்சந்தியின் முற்றத்தில் யானைகள் நிறுத்தப்பட்டுள்ளன. யானைகள் விரும்பி உண்ணுகின்ற செழிப்புடைய தீங்கரும்பு, நெற்கதிர்க்கட்டு, அதிமதுரத்தழை ஆகியவை முன்னால் இருந்தும் உண்ணாமல், அத்தாள்களைக் கொண்டு தன் நெற்றியைத் துடைத்துக் கொண்டிருக்கிறது. இதையறியாத பாகன் உணவுக் கவளத்தினை யானையின் வாயில் தின்னும்படி திணிக்கிறான் என்பதை பாடல் வரிகள் வெளிப்படுத்துகின்றன.

‘யானையைக் கட்டித் தீனி போட முடியாது’ என்பது முதுமொழி. அதன் மறுதலையாக முல்லைப்பாட்டில் குறிப்பிடப்படும் யானைகள் பசிக்காமல், உணவு உண்ணாமல் இருப்பதிலிருந்து முல்லை நிலத்தின் செழிப்பான வளத்தைக் காணமுடிகிறது.

மற்ற விலங்குகளைவிட யானை உருவத்திலும், பலத்திலும் உயர்ந்தது. போரில் யானையைக் கொன்றவனையே சிறந்த வீரனாவான் எனச் சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.

பெரு நல்யானை போர்க்களத்து ஒழிய

விழுமிய விழுந்த குரிசிலர் (மதுரைக். 735-6)

என்ற மதுரைக்காஞ்சியின் பாடல் அடிகள் போரிலே யானையை வீழ்த்துபவனே சிறந்த வீரன் எனக் குறிப்பிடுகின்றன.

தன் இனத்தோடு கூடிவாழும் ஒற்றுமைப் பண்பும், ஆழ்ந்த நினைவாற்றல் திறனும், நீர்நிலைகளைக் கண்டறிந்து பிற உயிரினங்களுக்கு வழிகாட்டும் நுண்ணறிவும் உடைய உயிரினம் யானை மட்டுமே!

நிறைவுரை

‘பத்துப்பாட்டில் உயிரினங்கள்’ என்ற கட்டுரைப் பொருண்மையின் வாயிலாக, உலக வாழ்வில் உயிரினங்களின் பங்களிப்பையும், பரந்துபட்ட இந்நிலப்பரப்பில் ஒவ்வொரு உயிரினத்திற்கும் ஒரு பண்புநலன் உண்டு என்பதையும் அறிந்துகொள்ள முடிகின்றது.

பூமியில் உருவான தாவரங்கள், விலங்குகள், மனிதர்கள் அனைத்துமே உயிரினங்களில் தான் அடங்கும்; எனினும் அவற்றின் வாழ்வாதாரமும் வாழ்க்கை களங்களும் மாறுபடுகின்றன.

இலக்கியங்களில் உயிரினங்கள் நாட்டின் இயற்கை வளங்களாக வறுமையின் இன்னலை வெளிப்படுத்தும் ஊடகமாக, கைவினை குடியிருப்பாக, வாழ்வாதாரத் தொழிலுக்காக மனிதர்களின் வாழ்வில் பங்களிக்கின்றன. பூமியில் முதலில் தோன்றிய தாவரங்களும், விலங்கினங்களும் மண்ணின் வளத்தைச் செம்மைப்படுத்திக் கொண்டிருக்கின்றன. ஆனால் இப்பூமியில் கடைசியில் தோன்றிய மனித இனமோ இயற்கை வளத்தை அழிப்பதோடு மனிதநேயத்தையும் அழித்து வாழ்கின்றது.

என்னதான் மனிதன் ஐம்பூதத்தையும் அடக்கியாள்வதாக எண்ணி, நெஞ்சை நிமிர்த்தி, புருவம் உயர்த்தி மல்யுத்த வீரனைப் போல் நின்றாலும், இயற்கைப் பேரிடரை எதிர்கொள்ள முடியாமல் மண்புழுவாகிறான். ஒரு மனிதன் அழிந்தால் அங்கே மற்றொரு மனிதன் தோன்றுவதில்லை. ஆனால் ஒரு புல் அழிந்தால் அதே விதையில் மற்றொரு புல் தோன்றும் என்ற தத்துவத்தை உணர்ந்து மற்ற உயிரினங்களைப் போல், தன் இனத்தை இவ்வுலகில் அடையாளம் காட்ட பிறருக்கு உதவியும், இன்னல் தராமலும் தான் வாழ்ந்து பிறரையும் வாழ வைக்கும் மாண்பைப் பெற வேண்டும்.

துணைநின்றவை

  • அடிகளாசிரியர்(பதி.), 2008, தொல்காப்பியம் (பொருளதிகாரம் – இளம்பூரணர் உரை), தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்-10.
  • நாகராசன் வி.(உரை.), 2011 (நா.ப.), பத்துப்பாட்டு மூலமும் உரையும், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை – 98.
  • நாகராசன் வி.(உரை.), 2004, குறுந்தொகை மூலமும் உரையும், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை – 98.
  • …, 2008, திருக்குறள் – பரிமேலழகர் உரையுடன், சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை.

கு.தனலட்சுமி

முழுநேர முனைவர் பட்ட ஆய்வாளர்

தமிழாய்வுத் துறை, பிஷப் ஹீபர் கல்லூரி (த.)

திருச்சிராப்பள்ளி -17.