செவ்வியல்  இலக்கியங்களில் ஒன்றான பத்துப்பாட்டும், எட்டுத்தொகையும் சங்கப் புலவர்களின் கவிக்கொடையால், பண்டைத் தமிழர்களின் மரபுசார்ந்த விழுமியங்களை எடுத்தியம்புகின்றன. நம் தமிழர்கள் உழவுத்தொழிலைக் கொண்டு உலகுக்கு உணவளித்ததோடு, சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கும்  வழிகோலினர் என்பதனை உயர்த்திக் கூறும் நோக்கில், ‘பத்துப்பாட்டில் பழந்தமிழரின் தொழிற்சிறப்பு’ என்னும் தலைப்பின் கீழ் ஆய்ந்து, பழந்தமிழர் இலக்கியத்தில் பயிர்த்தொழிலில்  ‘நெல்’ (தானியம்) இன்றியமையாதப் பயிராக இடம்பெறுவதைச் சுட்டிக்காட்டி, நெல்லின் தேவையையும், சிறப்பையும் எடுத்துரைப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

உழவின் இன்றியமையாமை

சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம்

            அதனால் உழந்தும் உழவே தலை (குறள்-1031)

என்ற குறட்பாவின் பொருளுக்கிணங்க, உலகத்தில் உள்ள உயிரினங்களின் அனைத்துச் சுழற்சியும் உணவினை மையமிட்டே இயங்குகிறது எனலாம். மனிதனின் பசிப்பிணியைப் போக்கும் உணவினைப் பகிர்ந்நதளிக்கும் ஒப்புயர்வு பெற்ற தொழில் உழவுத்தொழில். உணவின் தொழில் வெறும் பசியாறுதல் என்பதோடு நின்றுவிடாமல், நாட்டின் பொருளாதாரத்தைப் பாதிக்கும் இன்றியமையாத காரணிகளுள் முதலாவதாகும் (2007:32) எனக் குறிப்பிடும் ஆ.மணவழகனின் கருத்து இங்குப் பொருத்திப் பார்க்கத் தக்கது.

தொல்காப்பியம் சுட்டும் தொழில் வைப்புமுறை

பண்டைத் தமிழினம் அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் எனத் தொழில்முறையால் பாகுபாடு செய்யப் பெற்றிருந்ததைத் தொல்காப்பியம் சுட்டுகின்றது. தவிர, நால்வகை நிலங்களில் வாழும் மக்களின் தொழிற்கூறுகளைக் கருப்பொருட்களின் வாயிலாக விளக்குகின்றது.

தெய்வம் உணாவே மாமரம் புட்பறை

            செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ

            இவ்வகை பிறவும் கருவென மொழிப        (தொல்.அகத்.20)

இந்நூற்பாவில் செய்தி என்பது தொழில் எனும் பொருண்மையில் பயின்று வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. தொல்காப்பியம் குறிப்பிடுகின்ற நால்வகைத் தொழில் பாகுபாட்டில், வேளாளர்க்கான தொழிற்றிறனும் அவர்தம் செயலும் மரபியலில் சுட்டிக்காட்டப் பெற்றுள்ளது.

வேளாண் மாந்தர்க்கு உழுதூண் அல்லது

            இல்லென மொழிப பிறவகை நிகழ்ச்சி      (தொல்.மரபு.81)

 

வேந்துவிடு தொழிலிற் படையும் கண்ணியும்

            வாய்த்தனர் என்ப அவர்பெறும் பொருளே           (தொல்.மரபு.82)

எனும் நூற்பாக்கள் வேளாண் மாந்தர்க்கு உழுதுண்டு வாழ்வதே தொழில் என்பதனையும், அவர்கள் வேந்தனால் ஏவப்பட்ட தொழிலைச் செய்பவர்கள் என்பதனையும் குறிப்பிடுகின்றன.

பழந்தமிழர்களின் பயன்பாட்டில் நெல் (தானியம்)

பண்டைக்காலம் முதல் இன்றுவரை தமிழக உழவுத்தொழிலில் நெல் முதன்மையான இடத்தைப் பெற்று வருகின்றது. பத்துப்பாட்டிலும் நெல் பற்றிய குறிப்புக் காணப்பெறுகின்றது.

 1. சாலிஉயர்தர நெல்

பண்டைக்காலத்தில் சாலி எனும் உயர்தர நெல் இருந்ததனை மதுரைக்காஞ்சி குறிபிடுகின்றது.

சீர்சான்ற உயர்நெல்லின்

            ஊர்கொண்ட உயர்கொற்றவ         (மதுரைக்.87-88)

கடலை அரணாகக் கொண்டு வளம்கொழித்த சாலியூர் எனும் ஊர் சாலி எனும் நெல் விளைந்த வளத்தால் பெயர் பெற்ற வரலாற்றை இப்பாடலடிகளால் அறியலாம்.

 1. உழவும் ஓசையும்

உழவுக்கும் ஓசைக்கும் எண்ணற்ற தொடர்பு உண்டு. உழவில் நாற்று நடுதல் தொடங்கி அறுவடை செய்து விளைச்சலை இல்லம் கொண்டு சேர்க்கும்வரை பணிச்சோர்வு நீங்கப் பாடல் இசைப்பது உழவர்தம் செயலாக அமைந்துள்ளது; அமைந்து வருகின்றது.

வெள்ளம் மாறாது விளையுள் பெருக

            நெல்லின் ஓதை அரிநர் கம்பலை    (மதுரைக்.109-110)

மழையின் கொடையால் வயலில் விளைந்த நெல் காற்றடித்து அசைவதால் எழும் ஓசையும், நெற்கதிர்களை அறுப்பவர்களின் ஓசையும் எண்ணற்ற நிகழ்வுகளினால் எழும் ஓசையும், கொண்ட வளமான ஊர் முதுவெள்ளலை என்பதனை மதுரைக்காஞ்சிவழி அறிய முடிகின்றது.

 1. மருதநிலத்தின் செழுமை

மருத நிலத்தில் நெற்பயிரானது யானை நின்றாலும் மறையும் அளவிற்கு நெடிது வளர்ந்த தாளினைக் கொண்டிருந்தது என்பதனை,

களிறு மாய்க்கும் கதிர்க்கழனி        (மதுரைக்.247)

எனும் பாடலடியால் அறிய முடிகின்றது. தற்போதுள்ள சம்பா, பொன்னி நெல்வகைகளும் நெடிது வளர்வன என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது.

வயல்களில் நன்கு முற்றிய செந்நெல்லினை எருமையின் கன்று உண்ட மயக்கத்தில் நெற்கூடுகளில் படுத்து உறங்கும் வளமை வாய்ந்த சோழநாட்டின் சிறப்பினை

விளைவுஅறா வியன்கழனி (பட்டினப்.8)

எனும் பாடலடி அழகுற எடுத்துரைக்கின்றது. வெண்மையான பூக்களையுடைய கரும்பும் செந்நெல்லும் வளர்ந்து வளங்கொழிக்கும் மருதநிலத்தின் செழிப்பினைப் பட்டினப்பாலை(240) குறிப்பிடுகின்றது.

 1. மூங்கிலரிசி

குறிஞ்சி நிலத்தில் விளையக்கூடிய இன்றியமையாத தானியம் மூங்கிலரிசி. இதனை,

நெற்கொள் நெடுவெதிர்க்கு அணந்த யானை       (குறிஞ்சிப்.35)

எனும் பாடலடி குறிப்பிடுகின்றது. மூங்கிலரிசியைத் தின்ன வருகின்ற யானை என்பது இப்பாடலடியின் பொருள். யானை விரும்பி உண்ணும் மூங்கிலரிசியானது நன்கு முற்றி விளையப் பன்னிரண்டு ஆண்டு காலமாவதோடு, அவ்விடத்தேயுள்ள மூங்கில் மரம் அழிந்து புதியதாக இளந்தளிர் துளிர்க்கும் எனும் தகவல் இங்குக் குறிப்பிடத்தக்கது.

மூங்கில் நெல்லை அவலாகப் பக்குவப்படுத்தி உணவாகப் பயன்படுத்தியதையும் பெருமூங்கிலரிசியானது முற்றிய கதிராய் அசையாது நின்றதையும் மலைபடுகடாம்(121, 133) வாயிலாக அறியலாம்.

 1. குறிஞ்சிநில ஐவன வெண்ணெல்

குறிஞ்சிநில மக்கள் தம் மண்ணின் வளத்திற்கேற்ற நெல்வகையினைப் பயிரிட்டு உணவு உற்பத்தியைப் பெருக்கியுள்ளனர்.

நறுங்காழ் கொன்று கோட்டின் வித்திய

            குறுங்கதிர்த் தோரை நெடுங்கால் ஐயவி

            ஐவன வெண்ணெலொடு அரில்கொள்பு நீடி

            இஞ்சி மஞ்சள் பைங்கறி பிறவும்

            பல்வேறு தாரமொடு கல்லகத்து ஈண்டி     (மதுரைக்.286-290)

தோரை நெல், நெடிய தாளினையுடைய வெண்சிறு கடுகு, ஐவன வெண்ணெல் இவற்றோடு ஊடுபயிராக மஞ்சள், இஞ்சி, மிளகு எனப் பல பயிர்வகைகளைக் குறிஞ்சிவாழ் மக்கள் பயிரிட்டனர் என்பதை மேற்கண்ட பாடலடிகள் உணர்த்தி நிற்கின்றன. ஒரே விளைச்சலில் பருவப்பயிரோடு ஊடுபயிரை விளைவித்தல் பண்டைக்காலந்தொட்டே வழக்கில் உள்ள தமிழரின் தொழில்நுட்பம் ஆகும்.

 1. நெல்லைத் தூவி வழிபடுதல்

இல்லற மகளிர் மாலையில், ஞாயிறு மறையும் நேரத்தில் விளக்கேற்றி, நெல்லையும் மலரையும் தூவி இல்லுறை தெய்வத்தை வணங்கினர் என்பதை,

நெல்லும் மலரும் தூஉய்க் கைதொழுது

            மல்லல் ஆவண மாலை அயர         (நெடுநல்.43-44)

எனும் பாடலடிகள் எடுத்தியம்புகின்றன.

 1. பண்டமாற்றில் நெல்

நெய்தல் நிலத்தில் வாழ்கின்ற உமணர்கள் வெண்ணிறமுடைய உப்பினைப் படகில் உப்பங்கழி வழியே எடுத்துச்சென்று விலைகூறி விற்ற பணத்தில், வேற்றுநிலத்தில் விளையும் நெல்லினைப் பெற்று, தம் நாடு திரும்பினர் என்பதை,

வெள்ளை உப்பின் கொள்ளை சாற்றி

            நெல்லொடு வந்த வள்வாய்ப் பஃறி            (பட்டினப்.29-30)

எனும் பாடலடிகள் விளக்கி நிற்கின்றன. உமணர்கள் தங்கள் உணவுத் தேவையையும், பொருளாதாரத்தையும் சீர்படுத்தியமையைப் புலப்படுத்துகிறது. நெய்தல் நிலத்தில் வாழும் மக்களானப் பரதவர்களின் தொழில் மீன்பிடித்தல்  (பட்டி.29-30) எனவும், உமணர்களின் தொழில் உப்புவிளைவித்தல்  (பட்டி. 90-93) எனவும் தொழில் பகுப்பு முறையை பட்டினப்பாலைக் குறிப்பிடுகிறது.

          8.நெல் பாதுகாத்தல்

கூழுடைக் கொழு மஞ்சிகை

            தாழுடைத் தண் பணியத்து

            வால் அரிசிப் பலி சிதறி       (பட்டினப்.163-165)

நெல்லையும், அரிசியையும் “கூட்டில்’  பாதுகாப்பாக  வைத்து , நெல்லை வாங்க விழைவோர்  அடையாளம்  கண்டுக்கொள்வதற்குக் குறியீடாக  வெண்ணிறக் கொடியை நாட்டி, வாணிபம் செய்தனர்  வணிகர்கள் , என்பதனைப்  பட்டினப்பாலைப் பாடலடிகள் உணர்த்துகின்றன.

 1. அறக்கூழ்ச் சாலை

சங்க இலக்கியமானது மரபுக்கூறுகளோடு மனித அறநெறிகளையும் கட்டமைப்பாகக் கொண்டது. பண்டைக்காலத்தில் பசித்துன்பத்தைப் போக்கும் அறக்கூழ்ச்சாலை அமைக்கப்பட்டிருந்ததைப் பட்டினப்பாலை,

சோறு வாக்கிய கொழுங்கஞ்சி

            யாறு போலப் பரந்து ஒழுகி             (பட்டினப்.44-45)

எனும் பாடலடிகளின்வழி உணர்த்துகின்றது. இச்செய்தி, மனித இனத்திற்கு வரையாது             உணவளிக்கும் வளமான நாட்டையும் கொடையுள்ளத்தையும் கொண்டவர்கள் தமிழர்கள் எனும் பெருமித உணர்வைத் தருகிறது.

நிறைவுரை

பயிர்த்தொழிலில் நெல்லானது உணவுத்தேவைக்கான உற்பத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. “சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்” எனும் வள்ளுவரின் வாய்மொழிக்கேற்ப, அச்சீர்மிகு உழவுத்தொழில் திறம்பட, கழனிவாழ் உழவர்களின் உழைப்பின் மேன்மையைக் காலந்தோறும் பேணிப் போற்றுவதோடு, தமிழர் ஒவ்வொருவரும் அத்தொழிலைக் கைக்கொள்ள விழைந்திடுதல் சாலச் சிறந்தது.

துணைநின்றவை

 • அடிகளாசிரியர் (பதி.), 2008, தொல்காப்பியம்பொருளதிகாரம்இளம்பூரணர் உரை, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.
 • நாகராசன் வி. (உரை.), 2011, பத்துப்பாட்டு மூலமும் உரையும், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை.
 • மணவழகன் ஆ., 2007, சங்க இலக்கியத்தில் வேளாண் மேலாண்மை, மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம்.
 • ……………, 2010, திருக்குறள் பரிமேலழகர் உரை, பழனியப்பா பிரதர்ஸ், சென்னை.

கு. தனலட்சுமி

தமிழ் – முனைவர் பட்ட ஆய்வாளர்

பிஷப் ஹீபர் கல்லூரி

திருச்சிராப்பள்ளி – 17.