‘உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்’ என்ற பாரதியாரின் கவிதை வரிகளுக்கு இணங்க உழவைப் போற்றி வளர்த்த நாடு தமிழ்நாடு. சங்கநூல்களுள் ஒன்றான பதிற்றுப்பத்து சேர அரசர்களைப் பற்றியது என்றாலும் வீரம் சார்ந்தது என்றாலும் உழவு சார்ந்த வேளாண்மைக் கருத்துக்களை அதிகம் கொண்டுள்ளது. பதிற்றுப்பத்தில் நான்கில் ஒரு பங்கு உழவைப் பற்றி மட்டுமே கூறுகிறது. பதிற்றுப்பத்தில் இடம்பெற்றுள்ள உழவு குறித்தும், உழவர் குறித்தும் எடுத்துரைப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும். உழத்திப்பாட்டு, பள்ளு, ஏர் பரணி, ஏர் எழுபது (எண் செய்யுள்) திருக்கை வழக்கம், நெல் விடு தூது முதலான உழவை மையமிட்ட சிற்றிலக்கியங்களுக்கான வேர் சங்க இலக்கியத்தில் இருந்துதான் வந்திருக்க முடியும்.

வயற்களம் அமைத்தல்

“கோடு உறழ்ந்து எடுத்த கொடுங்கண் இஞ்சி

நாடுகண் டன்ன கணைதுஞ்சு விலங்கல்”           (பதிற்.16:1-2)

அக்காலத்தில் அகமதில், இடைமதில், புறமதில் ஆகிய மூன்று மதில்களைக் கட்டி வைத்திருந்தனர். மலைகளே மதில்களாகச் செயல்படும் என்ற காரணத்திற்காக மலைகளுக்கு நடுவில் வயற்களங்களை அமைத்துள்ளனர்.

ஏர் பூட்டுதல்

ஏர் என்பது உழவுத்தொழிலில் அடி ஆதாரமாக விளங்குகிறது. ஏர் இல்லாமல் உழவு இல்லை என்பதனைப் பின்வரும் பழம்பாடலும் கூறுவதை அறியலாம்.

“ஏர்முனைக்கு நேர்இங்கு எதுவு மில்லை” (பழம்பாடல்)

இவ்வுலகில் எந்தத் தொழிலும் ஏர்த்தொழிலின் முன் நிற்க முடியாது. உழவுத்தொழிலே அனைத்துத் தொழில்களுக்கும் தலைமை என்பதனை வள்ளுவம் “சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்” எனக் கூறுகிறது.

புதிய ஏரைப் பயன்படுத்தும் காலத்தை விழாவாகக் கொண்டாடும் மரபும் பன்னெடுங்காலம் முன்பே தமிழ்மண்ணில் இருந்துள்ளது மழை இல்லாத காலத்தில் அருவி நீர் வராத காலத்தில் பேராற்றுக் கரைகளை உடைத்துப் புதிய ஏர் பூட்டி நிலத்தை உழுவர். கார்காலத்தில் பூத்த கொன்றைப்பூவைச் சூடிப் பாணர், கூத்தர் முதலிய கலைஞர்களையும் அழைத்து மன்னனோடு உழவர்கள் ஏர்விழாவினைக் கொண்டாடுவர்.

புதுஏர் பூட்டுதல் மட்டுமின்றி ஏரின் பயன்பாடு குறித்தும் பதிற்றுப்பத்து விளக்குகிறது.

மண்ணில் நீர் விட்டு மேடுபள்ளமின்றிப் பண்படுத்தி, நடுவதற்கு ஏற்பப் பயிர்கள் முறையே வளர்ச்சி கொள்வதற்கேற்ப நிலத்தைச் செப்பமிடுவர். இதனைப் பறம்பு அடித்தல் என்று தற்கால வழக்கில் கூறுவர். நிலத்தை மேடு பள்ளமின்றி மண்ணைப் பரப்புதல் என்பது இதன் பொருளாகும்.

“புன்புலம் வித்தும் வன்கை வினைஞர்

சீர்உடைப் பல்பக(டு) ஒலிப்பப் பூட்டி

நாஞ்சில் அடிய கொழுவழி மருங்கின்”      (பதிற்.58:15-17)

விதைகளை விதைக்க வலிய கைகளை உடைய உழவர்கள் மாடுகள் ஒலிக்கும்படி நுகத்தில் பூட்டி உழுவர். கலப்பைகள் உழுத கொழுவினது படைச்சாலின் பக்கத்தே அசைகின்ற ஒளியையுடைய அழகிய மணியைப் பெறுதற்கு இடமான அகன்ற இடத்தையுடைய ஊர் என்று கூறும் பாடலடிகளின்வழி, இடத்துப் பின்புலத்தில் ஏர் ஓட்டுதலை அறிய முடிகிறது.

 

வயல் களங்களைப் பாதுகாத்தல் – நீர்த்தேக்கம்

நீர் இன்றியமையாது உலகு. நீர் ஆதாரம் விளைச்சலுக்கு மிகவும் முக்கியம். பண்டைக் காலத்தில் நீர்த்துறைகளாகவும், நீர்த்தேக்கங்களாகவும் அமைத்துப் பாசனத்திற்குத் தேவையான நீரை எடுத்துக் கொண்டனர்.

“தேம்பாய் மருதம் முதல்படக் கொன்று

வெண்தலைச் செம்புனல் பரந்துவாய் மிகுக்கும்

பலசூழ்ப் பதப்பர் பரிய வெள்ளத்துச்

சிறைகொள் பூசலின் மூபுகன்ற ஆயம்”      (பதிற்.30:16-19)

ஊரில் புதுவெள்ளளம் ஏற்படும் போது வைக்கோல் புரிகளால் மணல் மூட்டைகளை அமைத்து அவ்வெள்ளளத்தினை தடுத்துள்ளனர். இந்நிகழ்வே அணைக்கட்டின் ஆரம்பமாக இருந்திருக்க வாய்ப்புண்டு. வெள்ளளமாக ஓடும் நீரை நீர்த் தேக்கம் அமைத்து வருங்காலத்தில் பயன்படுத்தியமையை இப்பாடல்வழி அறிய முடிகிறது. உரிய காலத்தில் மழை வராவிடினும் தேக்கி வைத்த தேக்கத்தில் இருந்து நீரை எடுத்துப் பயன்படுத்திக் கொள்வர்.

வயலுக்கு வலிமை (உரம்) ஊட்டுதல்

“தொறுத்த வயல் ஆரல் பிறழ்நவும்

ஏறுபொருத செறு உழாது வித்தநவும்

கரும்பின் பாத்திரப் பூத்த நெய்தல்”   (பதிற்.13:1-3)

ஆட்டிக்கிடையை வயற்களங்களில் அமைக்க வேண்டிய காரணத்தைப் பற்றிச் சிந்திக்கும் போது நிலத்திற்கு உரம் ஊட்ட வேண்டியே இச்செயல் நிகழ்ந்துள்ளமையை உணர முடிகிறது. ஆட்டின் எச்சங்கள் வயலுக்கு நல்ல இயற்கை உரமாகும் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே!

பறவைகளிடம் இருந்து பயிர்களைப் பாதுகாத்தல்

“கழனி உழவர் தண்ணுமை இசைப்பின்

பழன மஞ்ஞை மழைசெத்து ஆலும்” (பதிற்.90:41-42)

வயலில் உள்ள உழவர்கள் பறவைகளை விரட்டும் பொருட்டுத் தண்ணுமைப் பறையை முழக்குவர். ஆனால் அதனைக் கேட்டு மயில்கள் ஆடும் என்கிறது மேற்காணும் பாடல்.

நெற்கதிர் அரிநர் – கரும்பு அறைநர்

“நெல்லின் செறுவில் நெய்தல் பூப்ப

அரிநர் கொய்வாள் மடங்க அறைநர்

தீம்பிழி எந்திரம் பத்தல் வருந்த”           (பதிற்.19:21-23)

எனும்  இப்பாடல் வரிகளில் இருந்து அக்காலத்தில் நெற்கதிர்களை அறுக்க அரிவாள் பயன்பட்டிருக்கிறது. நெற்கதிர்களை அறுப்பவரை ‘அரிநர்’ என்று அழைத்திருக்கின்றனர் என அறிய முடிகின்றது. நெற்கதிர் அறுப்பதற்கும் கரும்பினை வெட்டுதற்கும் உள்ள வேறுபாட்டினை உணர்த்தவே வேறுவேறு சொல்லாட்சிகளைப் பயன்படுத்தியுள்ளனர். அதாவது, நெற்கதிர்களை அறுப்பவரை ‘அரிநர்’ என்றும் கரும்பினை வெட்டி அறைபவரை ‘அறைஞர்’ என்றும் அழைத்துள்ளனர். கூடுதல் செய்தியாக, கரும்பினை வெட்டிச் சாறு பிழியப் பயன்படுத்தப்படும் எந்திரத்தை ‘எந்திரம்’ என்ற சொல்லாட்சியாலேயே குறித்துள்ளனர் என்பதையும் உணர முடிகிறது.

நெற்களத்தில் போரடித்தல்

“அறாஅ யாணர் அகன்கண் செறுவின்

அருவி ஆம்பல் நெய்தலொடு அரிந்து

செறுவினை மகளிர் மலிந்த வெக்கைப்

பரூஉப் பகடுஉதிர்த்த மென்செந் நெல்லின்”   (பதிற்.71:1-4)

வயலில் விளைந்த நெற்கதிர்களைப் பலவிதமான பூக்கள் சூடியுள்ள மகளிர் அறுப்பர். அறுத்த நெற்கதிர்களைக் கட்டுக்கட்டிப் போரடிக்கும் நெற்களத்தில் கொண்டு சேர்ப்பர். நெற்களத்தில் (வெக்கை) மாடுகளைக் (பகடு) கொண்டு உதிர்ப்பர் தற்காலத்தில் இந்நிகழ்வு ‘பிணையல் அடித்தல்’ என அழைக்கப்படுகின்றது. உதிர்த்த நெல்லினை மரக்காலால் அளப்பதற்காகக் குவித்து வைப்பர். இவ்வாறாக வயலில் விளைந்த நெல் நெற்களம் வந்து சேர்கிறது என்பதனை மேற்கண்ட பாடலடிகள் விளக்குகின்றன.

நெல்லைக் குவித்தல்

அறுத்த நெல்லை அரிசியாக்கும் வேலையினை நெல்குத்தும் மகளிர் செய்கின்றனர். உரலில் நெல்லை இட்டு அதனை உலக்கை கொண்டு குத்துவதன்வழி அரிசியாக்கப்படுகின்றதனை அறிய முடிகின்றது. வள்ளை மகளிர் உலக்கையால் அவல் குற்றிய செய்தியினையும் அம்மகளிர் நெல்வயல்களில் நாரைகளை ஓட்டிய செய்தியினையும் அறிய நேரிடுகிறது.

விளைபொருட்களை மாட்டுவண்டி கொண்டு ஏற்றிச் செல்லுதல்

வயல்களில் விளைந்த பொருட்களைச் சந்தைக்கு ஏற்றிச் செல்ல மாட்டு வண்டியின் தேவை மிக முக்கியமானது.

“வல்வாய் உருளி கதுமென மண்ட

அள்ளல் பட்டுத் துள்ளுபு துரப்ப”    (பதிற்.27:11-12)

எனும் பாடலடிகளில் வயல்களில் விளைந்த பொருட்களை வண்டிகளின் மூலம் ஏற்றிச் சென்றதனை அறிய முடிகின்றது.

முடிவுரை

பதிற்றுப்பத்தில் வயற்களம் அமைத்தல், ஏர் கொண்டு உழுதல், எருவை உரமாக்குதல், விளைநிலங்களைக் காத்தல், நெற்கதிர்களை அறுத்தல், களத்தில் போரடித்தல், கரும்பு வெட்டுதல், எந்திரங்களைக் கொண்டு சாறு பிழிதல், விளைபொருட்களை வண்டிமாடுகளில் ஏற்றிச் செல்லுதல் முதலான உழவுசார் செய்திகள் இடம்பெற்றுள்ளன. சங்க நூல்களுள் ஒன்றான பதிற்றுப்பத்தானது  சேரமன்னர்களின் போர், போர்க்களம், கொடைச்சிறப்பு ஆகியவற்றைப் பற்றிப் பாடுவது மட்டுமின்றி, சேரநாட்டு ஏர், ஏர்க்களம், விளைநிலங்களின் சிறப்பு ஆகியவற்றையும் பாடுவதனை முதன்மை நோக்கமாகக் கொண்டு திட்டமிட்டுப் பாடப்பெற்ற நூல் எனும் முடிவுக்கு வரலாம்.

பார்வை நூல்கள்

  • கௌமாரீஸ்வரி எஸ்.(பதி.), 2009, திருக்குறள் பரிமேலழகர் உரை, சாரதா பதிப்பகம், சென்னை.
  • சாமிநாதய்யர் உ.வே. (ப.ஆ), 1957, பதிற்றுப்பத்து மூலமும் உரையும், உ.வே.சா பதிப்பகம், சென்னை.
  • பாலுச்சாமி, எ., 2011, மருதத்தில் மக்கள் வாழ்வியல், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.

இரா.வைதேகி

முனைவர் பட்ட ஆய்வாளர்

பாரதிதாசன் உயராய்வு மையம்

பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி -24.