பக்தி இயக்கக் காலத்தில் உருப்பெற்ற சைவ இலக்கியங்கள் பன்னிரு திருமுறைகளாகத் தொகுக்கப்பெற்றுள்ளன. அவற்றுள் பதினோராம் திருமுறையானது காலத்தால் முதலேழு திருமுறைகளுக்கு(தேவாரம்) முற்பட்டு அமைந்த இலக்கியங்களையும், காலத்தால் மிகவும் பிற்பட்ட (பன்னிரு திருமுறைகளைத் தொகுத்த நம்பியாண்டார் நம்பி இயற்றிய இலக்கியங்கள் உட்பட) இலக்கியங்களின் தொகுப்பாகவும் அமைந்துள்ளது. சங்ககாலத்தைச் சார்ந்தவராகக் கருதப்படும் திருமுருகாற்றுப்படை நக்கீரர், நக்கீர தேவநாயனாராக மாறி இலக்கியங்கள் படைத்திருப்பதும் இத்திருமுறையில்தான். யாப்பியலைப் பொறுத்தவரை பதினோராம் திருமுறையில் பல பழமை வாய்ந்த யாப்பு வடிவங்களைக் காணமுடிகின்றது. மேலும் பிற்காலத்தில் உருப்பெற்ற பல இலக்கிய வகைமைகளுக்கான முன்னோடித் தன்மையினையும் கொண்டதாகவும் பதினோராந் திருமுறை அமைந்துள்ளது.

திருவாலவாயுடையார், காரைக்காலம்மையார், ஐயடிகள் காடவர்கோன் நாயனார், சேரமான் பெருமாள் நாயனார், நக்கீர தேவ நாயனார், கல்லாட தேவ நாயனார், கபில தேவ நாயனார், பரணதேவ நாயனார், இளம்பெருமானடிகள், அதிராவடிகள், பட்டினத்துப் பிள்ளையார், நம்பியாண்டார் நம்பி ஆகிய பன்னிரு ஆசிரியர்களின் பாடல் தொகுப்பாகப் பதினோராம் திருமுறை உள்ளது. ஆனால் திருமுருகாற்றுப்படை இயற்றிய நக்கீரர் வேறு, இதில் பத்துப்பிரபந்தங்கள் பாடிய நக்கீரர் வேறு என்பதால் பதினோராந்திருமுறை ஆசிரியர் தொகை 12 அன்று 13 என்று மு.அருணாசலம் குறிப்பிடுகிறார் (1972:265). இதுவரை வெளியாகியுள்ள திருமுறைப் பதிப்புகள் அனைத்திலும் நக்கீரதேவநாயனார் மட்டுமே இடம்பெற்றுள்ளார் என்பதும் கருதத்தக்கது. இது குறித்த விவாதங்கள் ஆய்வு எல்லைக்கு அப்பாற்பட்டது. பதினோராம் திருமுறை யாப்பியலின் சில கூறுகள் மட்டும் இங்கு விளக்கப்படுகிறது. கீழ்க்கண்ட நிலைகளில் இவ்வியாப்பு மரபினைப் புரிந்து கொள்ளலாம்.

 • காலத்தால் மிகவும் முந்தையவராகக் கருதப்படும் காரைக்காலம்மையாரின் பாடல் வடிவங்களும், பண்ணமைதியும்
 • சம்பந்தரின் தேவாரப்பாடல்களில் காணப்படும் காரைக்காலம்மையார் பயன்படுத்திய வடிவங்களின் தாக்கமும், பண்ணமைதியின் பயன்பாடும்
 • பிரபந்த இலக்கிய வகைமையின் தொடக்கம்
 • பாக்களின் புதுமைகளும் இனவினங்களும்
 • பதிப்பியல் மாறுபாடுகளும் யாப்பியல் முரண்களும்
 • காரைக்காலம்மையார் பாடல் வடிவங்களும் சம்பந்தரின் பாடல்களும்

காரைக்காலம்மையார் (கி.பி.5ஆம் நூற்றாண்டு) சம்பந்தரைவிட ஏறத்தாழ இரண்டு நூற்றாண்டுகள் முற்பட்டவர். இவரது பாடல்களின் வடிவங்களும் பண்ணமைதிகளுமே சம்பந்தரின் பாடல்களுக்கு வழிகாட்டியாக அமைந்துள்ளன. இவர் பாடியனவாகக் கட்டளைக் கலிப்பாவும், ஆசிரிய விருத்தமாகவும் அமைந்த திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்கள் – 2, கட்டளைக் கலித்துறையும் வெண்பாவுமாக அமைந்த திருஇரட்டை மணிமாலை, வெண்பாவினாலாகிய திருஅற்புதத் திருவந்தாதி ஆகியன பதினோராம் திருமுறையில் இடம்பெற்றுள்ளன. இவற்றுள் திருஅற்புதத் திருவந்தாதியின் யாப்பமைப்பினைக் குறித்து, சோ.ந.கந்தசாமி

…101 நேரிசை வெண்பாக்கள் இந்நூலில் அந்தாதி அமைப்பில் விளங்குதல் காணலாம்…சைவத் திருமுறைப் பாடல்களில் காலப் பழமை படைத்த வெண்பாக்கள் அம்மையார் பாடியவை எனலாம். அந்தாதி என்னும் பிரபந்தத்திற்கும் அம்மையாரின் அருளிச் செயல் முழுமை முதல் இலக்கியமாகக் கொள்ளுதற்கு உரியது. இந்நூல் ‘பிறந்து மொழிபயின்ற பின்னெல்லாம்’ எனத் தொடங்கி இறுதி வெண்பாவின் இறுதியடி, ‘பேராத காதல் பிறந்து’ என்று இறுவதால் மண்டலித்து முடிந்த மாலையாகும்… (1989:702,703)

என்று பதிவு செய்துள்ளார். காரைக்காலம்மையார் மூத்த திருப்பதிகங்கள் இரண்டையும் முறையே நட்டபாடை, இந்தளம் ஆகிய பண்களில் பாடியுள்ளார். இவற்றுள் முதல் பதிகத்தின் யாப்புவடிவம் கட்டளைக் கலிப்பா. இக்கட்டளைக் கலிப்பாவிற்கான வரையறை முற்கால இலக்கணப் பனுவல்களில் வரையறுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  நேர் 10 நிரை 11 என்ற கட்டளை பெற்று அமைந்த பாடல் வருமாறு:

கொங்கை திரங்கி நரம்பெழுந்து

                        குண்டுகண் வெண்பற் குழிவயிற்றுப்

                  பங்கி சிவந்திரு பற்கள்நீண்டு

                        பரடுயர் நீள்கணைக் காலோர்பெண்பேய்

                  தங்கி யலறி யுலறுகாட்டில்

                        தாழ்சடை எட்டுத் திசையும்வீசி

                  அங்கங் குளிர்ந்தன லாடும்எங்கள்

                        அப்ப னிடந்திரு வாலங்காடே. (மூத்த.திருப்.1-1)

திருவாலங்காட்டு இறைவனின் நடனக்காட்சிக்குரிய இப்பாடல் நட்டபாடைப் பண்ணில் பாடப்பட்டது. முதலிரு சீர்களும் வெண்டளையால் பிணைக்கப்பட்டு நேரசையில் தொடங்கி 10 எழுத்துக்களையும் நிரையசையில் தொடங்கி 11 எழுத்துக்களையும் கொண்டதாக அமைந்திருக்கின்றது. அரையடிகளுக்கு மோனைத் தொடையும் அடிகளுக்கிடையில் எதுகைத் தொடையும் ஒன்றி அமைந்துள்ளன. இவருக்குப் பின்தோன்றிய சம்பந்தர் அம்மையாரின் நட்டபாடைப் பண்ணிலேயே தமது முதல் திருப்பதிகமான பிரமாபுரத் திருப்பதிகத்தைப் பாடியுள்ளார். ஆனால் அதன் யாப்பமைப்பு வேறு.

தோடுடைய செவியன் விடையேறியோர்

                        தூவெண் மதிசூடிக்

                  காடுடைய சுடலைப் பொடிபூசியென்

                        னுள்ளங்கவர் கள்வன்

                  ஏடுடைய மலரான் முனைநாட்பணிந்

                        தேத்த வருள்செய்த

                  பீடுடைய பிரமா புரமேவிய

                        பெம்மா னிவனன்றே.  (1:1:1)

அடிதோறும் ஐந்து சீர்களைப் பெற்று நேரசையில் தொடங்கின் 18 எழுத்துக்களையும் நிரையசையில் தொடங்கின் 19 எழுத்துக்களையும் பெற்ற கட்டளைக் கலித்துறைவடிவமாக இப்பாடல் அமைந்துள்ளது. முதல் மற்றும் மூன்றாம் சீர்கள் மோனை பெற்றும் அடிதோறும் எதுகை பெற்றும் கலித்தளை விரவியும் உள்ளது. ஆனால் முதல் திருமுறையில் இதே பண்ணில் பாடப்பெற்றுள்ள ஏழாம் பதிகத்தின் பாடல்கள் இந்த யாப்பு வடிவத்தினை உடையனவாக உள்ளன.

பணியுடை மாலும் மலரி னோனும்

                        பன்றியும் வென்றிப் பறவை யாயும்

                  நணுகல ரியநள் ளாறு டைய

                        நம்பெரு மானிது வென்கொல் சொல்லாய்

                  மணியொலி சங்கொலி யோடு மற்றை

                        மாமுர சின்னொலி யென்று மோவா

                  தணிகிளர் வேந்தர் புகுதுங் கூடல்

                        ஆலவா யின்க ணமர்ந்த வாறே. (தேவாரம்: 1:7:9)

காரைக்காலம்மையாரின் இரண்டாவது மூத்த திருப்பதிகம் இந்தளப் பண்ணினால் பாடப் பட்டுள்ளது. ஐந்து மாச்சீர்களைத் தொடர்ந்த காய்ச்சீரினைப் பெற்ற அறுசீர் ஆசிரிய விருத்தமாக அப்பாடலின் யாப்பு வடிவம் காணப்படுகின்றது.

நிணந்தான் உருகி நிலந்தான்

                        நனைப்ப நெடும்பற் குழிகட்பேய்

                  துணங்கை யெறிந்து சூழும்

                        நோக்கிச் சுடலை நவிழ்த்தெங்கும்

                  கணங்கள் கூடிப் பிணங்கள்

                        மாந்திக் களித்த மனத்தவாய்

                  அணங்கு காட்டில் அனல்கை

                        யேந்தி அழகன் ஆடுமே (மூத்த.திருப்.2:2)

சம்பந்தரின் இரண்டாம் திருமுறையின் முதல் பதிகம் இப்பண்ணமைதியினால் பாடப் பெற்றதே. ஆனால் அப்பதிகமானது யாப்பு அடிப்படையில் நேர் 14 நிரை 15 என்ற கட்டளை பெற்ற ஐஞ்சீரடிகளால் ஆன கட்டளைக் கலித்துறை. இதன்மூலம் பண்ணமைதிக்கும் யாப்பிற்குமான தொடர்பானது வரையறைகளுக்கு உட்பட்டதன்று என்பது தெளிவாகிறது.

சம்பந்தர் பாடிய பாடல்களின் பண்ணமைப்பானது எவ்வாறு காரைக்காலம்மையாரின் பண்ணமைப்பினை அடிப்படையாகக் கொண்டமைந்ததோ அவ்வாறே சில யாப்பு அமைப்புகளுக்கும் அம்மையாரே முன்னோடியாக இருக்கின்றார். இது குறித்து அ.சண்முகதாஸ் குறிப்பிடுகையில்,

கலிநிலைத்துறை கட்டளைக் கலித்துறை ஆகியனவற்றை வரலாற்றடிப்படையில் நோக்கும்போது அவற்றுள் கட்டளைக் கலித்துறையே முதலில் எழுந்ததெனக் கூறலாம். ஏனெனில் பத்திப்பாடல் பாடியவர்களுக்கு வழிகாட்டியாக அமைந்த காரைக்காலம்மையார் இத்துறையில் பாடியிருப்பதேயாகும். அம்மையார் பாடிய கட்டளைக் கலித்துறைக்குத் தோற்றுவாயாகக் கலித்தொகையிலோ சிலப்பதிகாரத்திலோ செய்யுள் வடிவங்கள் இல்லை… தொல்காப்பியருடைய கொச்சகக் கலிவடிவத்தை முன்மாதிரியாக வைத்து அம்மையார் இப்புதிய செய்யுள் வடிவத்தை அமைத்திருக்க வேண்டும். இதற்குக் கட்டளைக் கலித்துறைக்கு கூறப்பட்ட இலக்கணம் சான்றாக அமைகின்றது… (1997:61)

என்கிறார். அறுசீர் விருத்த அமைப்பிற்கு காரைக்காலம்மையாரே முன்னோடியாகத் திகழ்கிறார். இவர் பாடிய மூத்ததிருப்பதிகம் இரண்டில் இடம் பெற்றுள்ள வடிவத்தினை ஒத்து சம்பந்தர் பாடிய பாடல்,

வேத மோதி வெண்ணூல் பூண்டு வெள்ளை யெருதேறிப்

பூதஞ் சூழப் பொலிய வருவார் புலியி னுரிதோலர்

நாதா வெனவு நக்கா வெனவு நம்பா வெனநின்று

பாதந் தொழுவார் பாவந் தீர்ப்பார் பழன நகராரே. (1:67:1)

தேவார ஆசிரியர்களுக்கு வழிகாட்டியாக அமைந்த யாப்பு வடிவங்களையும் பண்ணமைப்புகளையும் பாடிய காரைக்காலம்மையாரின் பாடல்கள் பதினோராம் திருமுறை திருமுகப்பாசுரத்தை அடுத்து வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பிரபந்த இலக்கிய வகைமைகளின் தொடக்கம்

பதினோராம் திருமுறையில் பல்வேறு பிரபந்தங்கள் பாடப்பெற்றுள்ளன. இவை பிற்காலத்தில் பிரபந்த இலக்கியக்காலம் என்று காலரீதியிலான இலக்கிய எழுச்சிக்கு ஆதாரமாக அமைந்துள்ளன. இத்தன்மையினால் பிரபந்த மாலை என்ற சிறப்புப் பெயரும் பதினோராம் திருமுறைக்கு வழங்கப்பட்டது. பிரபந்தங்களின் விவரங்கள் வருமாறு,

அந்தாதி 8          மும்மணிக்கோவை 7        இரட்டை மணிமாலை 4

மாலை 2           விருத்தம் 2               திருமறம் 2

நான்மணிமாலை1    உலா 1                  ஆற்றுப்படை 1

வெண்பா 1         கலிவெண்பா 1            திருஎழுகூற்றிருக்கை 1

பெருந்தேவ பாணி1  கோபப்பிரசாதம் 1         ஒருபாஒருபஃது 1

கார் எட்டு 1        ஆற்றுப்படை 1            கலம்பகம் 1

திருத்தொகை 1

40 இலக்கியங்களுள் 38 இலக்கியங்கள் பிற்காலப் பிரபந்தங்களுக்கு முன்னோடியாக அமைந்துள்ளன. ஏனைய இரண்டும் (திருமுகப் பாசுரம், திருஈங்கோய் மலை எழுபது) அவ்வாறான வளர்ச்சியினைப் பெறவில்லை. இப்பிரபந்த வகைமைகளின் அடிப்படையில் பதினோராம் திருமுறை யாப்பியல் குறித்த சில கருத்துகள் வருமாறு:

 • முழுவதும் வெண்பாவாலாகிய பிரபந்தங்களினை மிகுந்த அளவில் பாடியவர் நக்கீர தேவநாயனார்
 • முழுவதும் ஆசிரியப்பாவாலாகிய பிரபந்தங்களினை மிகுந்த அளவில் பாடியவர் நக்கீர தேவநாயனார்
 • முழுவதும் கட்டளைக் கலித்துறையாலாகிய பிரபந்தங்களினை மிகுந்த அளவில் பாடியவர் நம்பியாண்டார் நம்பி
 • முழுவதும் ஆசிரிய, சந்த விருத்தங்களினாலாகிய பிரபந்தங்களினை மிகுந்த அளவில் பாடியவர் நம்பியாண்டார் நம்பி
 • பதினோராம் திருமுறையில் முழுவதும் வெண்பாவால் பாடப்பட்ட இலக்கியங்கள் மிகுதியாக உள்ளன.
 • பதினோராம் திருமுறையில் அதிக அளவில் உள்ள பிரபந்தங்கள் அந்தாதி (7), மும்மணிக்கோவை (7)

பிற பாவடிவங்களைவிட வெண்பாவின் ஆட்சி பதினோராம் திருமுறையில் மிகுந்துள்ளது. காரைக்காலம்மையார் வெண்பா வடிவத்தினைக் கையாண்டுள்ளது குறித்து அ.சண்முகதாஸ்,

இயற்றமிழ்ப்பாக்களுள் வெண்பாவே பல்லவர் கால இலக்கியங்களிற் பெரிதும் கையாளப்பட்டுள்ளது. இக்காலத்துப் பெரும்பான்மையான இலக்கியங்களாகிய பத்திப் பாடல்களுக்குத் தோற்றுவா யமைத்தவர்களாகிய காரைக்காலம்மையாரும் முதல்மூன்று ஆழ்வார்களும் வெண்பா யாப்பிற் பாடல்கள் பாடியுள்ளனர். சங்கமருவிய காலத்தை அடுத்து வாழ்ந்த இந்நால்வரும் இப்பாவினைக் கையாண்டதற்கு ஒரு காரணங்கூறலாம். அதாவது சங்கமருவிய காலத்தில் எழுந்த பெரும்பான்மையான இலக்கியங்கள் வெண்பா யாப்பிலேயே அமைந்தன. சங்க காலத்தில் அகவலிற் பாடப்பட்ட அகப்பொருள் புறப்பொருள் ஆகியனவும் இக்காலத்தில் வெண்பாவிலேயே பாடப்பட்டன. ஆகவே இத்தகையதொரு காலத்திலே வாழ்ந்த அம்மையாரும் ஆழ்வார்களும் காலத்தின் கோலத்திற்கேற்ப வெண்பா யாப்பினையே தம் பத்தியுணர்வினைப் புலப்படுத்தவும் கையாண்டனர். ‘பத்தியனுபவத்தை வெளிப்படுத்த உதவாத வெண்பா யாப்பினைக் காரைக்காலம்மையார் அமைத்துக் கொண்டது, அவர் காலத்தில் அது பெருவழக்காயிருந்த காரணமே’ யென வி.செல்வநாயகம் கூறியுள்ளார். (1997:59)

என்று கருத்துரைத்துள்ளார்.

பாவடிவப் புதுமைகளும் இனவினங்களும்

மரபான பாவடிவங்களில் பல இலக்கியங்கள் பதினோராம் திருமுறையில் பாடப்பெற்றுள்ளன. அவற்றுள்ளும் வெண்பா மிகப் பெரிய இடத்தினை வகிக்கின்றது. அவை சொல் விளையாட்டுகளாக யமகம், திரிபு, அந்தாதி அமைப்புகளில் அமைந்துள்ளன.  மரபான பாவடிவங்களிலும் சில புதுமைகளைச் செய்திருப்பது கவனிக்கத்தக்கது. அடிதோறும் கூன் பெற்று வந்த ஆசிரியப்பா ஒன்று அதிராவடிகளின் மூத்தபிள்ளையார் திருமும்மணிக்கோவையில் இடம்பெற்றுள்ளது.

சிரமே, விசும்புபோ தஉயரி இரண்டசும்பு பொழியும்மே

கரமே, வரைத்திரண் முரணிய விரைத்து விழும்மே

புயமே, திசைவிளிம்பு கிழியச் சென்று செறிக்கும்மே

அடியே, இடுந்தோறும் இவ்வுலகம் பெயரும்மே

ஆயினும், அஞ்சுடர்ப் பிழம்பு தழீஇ

நெஞ்சகத் தொடுங்குமோ நெடும்பணைச் சூரே. (திருமும்மணி.22)

ஓசை நயமிக்க வெண்பாக்கள் முதலிரண்டடி ஒரே தன்மையதாகவும் அடுத்த இரண்டடிகள் வேறுபட்ட ஒரே தன்மையதாகவும் அமைந்திருப்பதையும் காணமுடிகிறது. கபில தேவநாயனாரின் பாடல் ஒன்று,

காக்கைவளை என்பார்ப்பார்க் கன்பாப்பா னையாதே

காக்கைவளை யென்பார்ப்பான் ஊர்குரக்குக்காக்கைவளை

ஆடானை ஈருரியன் ஆண்பெண் அவிர்சடையன்

ஆடானை யான தமைவு.(சிவபெருமான்.திருவந்.67)

இவ்வாறு மரபான பாக்களை ஆளுமிடத்தும் அவை சில புதுமைகளைக் கொண்டு கையாளப்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக இனவினங்கள்

பாவினங்களின் அடிப்படையில் தோன்றித் தமக்கெனத் தனித்த அடையாளங்களோடு வளர்ச்சி பெற்றுள்ள சில பாவடிவங்கள் இனத்தின் இனம் எனும் பொருள்தரும் ‘இனவினம்’ எனும் பெயரால் வகைப்படுத்தப்படுகின்றன. இனவினம் எனும் சொற்படைப்பைத் தந்து ‘தாழிசை துறை விருத்தம் என்றும் நாம் கொள்ளும் இனங்களுள்ளும் எத்துனையோ இனவினங்கள் பெருகின’ என இனவினங்கள் தோன்றியுள்ளமையைக் குறிப்பிடுவார் வ.சுப.மாணிக்கம்.(2001:92)

என்று இனவினம் குறித்த கருத்துக்களை ய.மணிகண்டன் பதிவு செய்கிறார். இந்த இனவினங்களும் வண்ணம், சந்தம், கும்மி, உருப்படி, மேல் வைப்பு ஆகியன அடங்கும். வண்ணங்களின் தொடக்கம் தொல்காப்பியத்தினின்று அடையாளம் காணப்படுகின்றது. செய்யுள்களின் ஓசை நலத்தைச் சார்ந்தே வண்ணமும் சந்தமும் வரையறை பெறுகின்றன. திருஅராகம் என்ற பெயரில் சம்பந்தர் சில பதிகங்களைப் பாடியுள்ளார். அவை அனைத்தும் முடுகியலாக அமைந்த உருட்டு வண்ண அமைப்பை ஒத்தவை. சந்த கலிவிருத்தங்களும் இவர் தம் பாடல்களில் இடம்பெற்றுள்ளன. பதினோராம் திருமுறையில் இனவினங்களின் பயன்பாடுகள் கணிசமாக உள்ளன. அவற்றுள் பட்டினத்துப் பிள்ளையின் பாடல்கள் குறிப்பிடத்தக்கன.

நெறிதரு குழலை அறலென்பர்கள்

            நிழலெழு மதியம் நுதலென்பர்கள்

      நிலவினும் வெளிது நகையென்பர்கள்

            நிறம்வரு கலசம் முலையென்பர்கள்

      அறிகுவ தரிதிவ் விடையென்பர்கள்

            அடியிணை கமல மலரென்பர்கள்

      அவயவம் இனைய மடமங்கையர்

            அழகியர் அமையும் அவரென்செய

      மறிமழு வுடைய கரனென்கிலர்

            மறலியை முனியும் அரனென்கிலர்

      மதிபொதி சடில தரனென்கிலர்

            மலைமகள் மருவு புயனென்கிலர்

      செறிபொழில் நிலவு திலையென்கிலர்

            திருநடம் நவிலும் இறையென்கிலர்

      சிவகதி அருளும் அரசென்கிலர்

            சிலர்நர குறுவர் அறிவின்றியே. (கோயின்.நான்மணி.15)

இப்பாடல் தந்த தனதன தந்த தனதன என்கிற சந்த வாய்ப்பாட்டினைப் பெற்று இரட்டை ஆசிரியச் சந்தவிருத்தமாக உள்ளது கவனிக்கத்தக்கது. இவ்வாறு சில பாடல்கள் அமைந்துள்ளன.

பதிப்பு மாறுபாடுகளும் யாப்பு முரண்களும்

பதினோராம் திருமுறையானது தனித்தனி ஆளுமைகளின் பதிப்பு, தொகுப்பான பதிப்பு என்ற இரண்டு நிலைகளில் பதிப்புகளைப் பெற்றமைந்துள்ளது.  இதுவரையிலான பதிப்புகளில் அவற்றின் யாப்புவடிவங்கள் சில பதிப்புகளில் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளன. கழக வெளியீடு, திருப்பனந்தாள் மடப்பதிப்பு, தருமபுரப் பதிப்பு, ஆகியன இவற்றுள் குறிப்பிடத்தக்கன. சோ.ந.கந்தசாமி தனது தமிழ் யாப்பியலின் தோற்றமும் வளர்ச்சியும் என்ற ஆய்வு நூலுள் நக்கீர தேவ நாயனாரின் கயிலைபாதி காளத்தி பாதி அந்தாதி பற்றிக் குறிப்பிடும்போது,

‘இசையும்தன்’ என்ற பாடலின் (90) கடைசி அடி, ‘கூட்டுமேல் கூடலே கூட’ என்று பதிப்பிக்கப்பெற்றுள்ளது. இதன் இறுதிச்சீர் கூட என்பது தேமா என்ற வாய்பாட்டுக்குரிய ஈரசைச் சீராகும். ‘காசு’ என்னும் வாய்பாட்டினால் முடிதலே இலக்கணம் எனின், நக்கீர தேவர் தேமா வாய்பாட்டுச் சீரினால் முடித்தது யாப்பியலில் ஒரு புதுமையே. (1989:705)

என்று கூறுகிறார். இதற்காக இவர் பயன்படுத்திய பதிப்பு திருப்பனந்தாள் காசிமடப் பதிப்பு 1972. ஆனால் திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தால் 1971 இல் வெளியிடப்பட்ட பதினோராந்திருமுறைப் பதிப்பில் ‘கூட்டுமேல் கூடலே கூடு’ என்று சரியான இலக்கணத்தில் அச்சிடப் பெற்றுள்ளது. மேலும் 1997 இல் வெளியிடப்பெற்ற திருப்பனந்தாள் காசிமடப் பதிப்பில் கூடு என்று சரிசெய்யப்பட்டு அச்சிடப்பட்டுள்ளது. முன்பின் பதிப்புகளை ஒப்புநோக்கிக் கண்ணுறாது நக்கீரர் புதுமை செய்துள்ளார் என்று சோ.ந.கந்தசாமி குறிப்பிடுவது மாறுபாட்டுக்குரியது. இவ்வாறே, பரண தேவநாயனாரின் சிவபெருமான் திருவந்தாதி பாடல் ஒன்று,

நீயேயா ளாவாயும் நின்மலற்கு நன்னெஞ்சே

நீயேயா ளாவாயும் நீள்வாளின்நீயே

ஏறூர் புனற்சடையா எங்கள் இடைமருதா

ஏறூர் புனற்சடையா என்று. (சிவபெருமான்.திருவந்.4)

என்று கழகப் பதிப்பு, திருப்பனந்தாள் பதிப்பு இரண்டிலும் பதிப்பிக்கப் பெற்றுள்ளது. இரண்டாம் அடியின் தனிச்சொல் மூன்றாம் அடியின் முதற் சொல்லுடன் வெண்டளையில் பொருந்தவில்லை. ஏறத்தாழ ஆறு பதிப்புகளில் இவ்வாறே அச்சிடப்பெற்றுள்ளது. ஆனால் தருமபுரப் பதிப்பில் பதினோராம் திருமுறையின் பாடல்களைக் காணும்போது

நீயேயா ளாவாயும் நின்மலற்கு நன்னெஞ்சே

நீயேயா ளாவாயும் நீள்வாளின்நீயேயேய்

ஏறூர் புனற்சடையா எங்கள் இடைமருதா

ஏறூர் புனற்சடையா என்று (சிவபெருமான்.திருவந்.4)

என்று வெளியிடப்பெற்றுள்ளது. ஆனால் இப்பாடலின் சரியான வடிவம் இவ்வாறே அமைந்திருக்க வேண்டும்.

இவ்வாறு யாப்பியலானது சரியான பதிப்பையும் பாடத்தையும் அடையாளங்காணப் பயன்படுகின்றது.

துணைநின்ற நூல்கள்

 • அருணாசலம் மு., 2005, தமிழ் இலக்கிய வரலாறு – பத்தாம் நூற்றாண்டு, தி பார்க்கர், சென்னை.
 • இராமசாமிப்புலவர்,சு.அ.,(கு.ஆ.), 1971, பன்னிரு அருளாளர்கள் பாடியருளிய பதினொராந் திருமுறை (நாற்பது நூல்கள் அடங்கியது), கழகம், சென்னை.
 • கந்தசாமி சோ.ந., 1989, தமிழ் யாப்பியலின் தோற்றமும் வளர்ச்சியும் முதற்பாகம் – முதல் பகுதி, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.
 • சண்முகதாஸ்அ., 1997, தமிழின் பா வடிவங்கள், குமரன் புத்தக இல்லம், சென்னை.
 • மணிகண்டன் ய., 2001, தமிழில் யாப்பிலக்கண வளர்ச்சி, விழிகள் பதிப்பகம், சென்னை.
 • ………………………….., திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரப் பதிகங்கள், திருமுறை (1,2,3), 1973, கயப்பாக்கம் சதாசிவசெட்டியாரால் பார்வையிடப்பெற்றன, கழகம், சென்னை.

முனைவர் .மோகனா

உதவிப்பேராசிரியர்

தமிழ்த்துறை

தியாகராசர் கல்லூரி

மதுரை – 09