முன்னுரை

கொடுமையும் துயரமும் நிறைந்தது பாலை. இப்பாலைநிலத்தில் வாழும் அஃறிணை உயிர்களின் வழியே புலவர்கள் மனித வாழ்வின் இன்றியமையாக் கூறான அன்பை உளவியல் நோக்கில் சித்திரித்துக் காட்டியுள்ளனர். அத்தகைய அன்பு  தலைவன் தலைவியர் வாழ்வில் எவ்விதம் பொருந்தி உள்ளது என்பதை இக்கட்டுரை விளக்க முற்படுகிறது. யானை, அணில், மான், புறா, பல்லி முதலான அஃறிணை உயிர்கள்வழி அன்புறு காட்சிகள் காட்சிப்படுத்தப் பெற்றாலும் பல்லி என்ற அஃறிணை உயிரே இக்கட்டுரையில் பெரிதும் பேசப்படுகிறது.

 

வினை முற்றியதைப் பல்லி அறிவிக்குமோ என நெஞ்சுக்குக் கூறியது

முன்னியது முடித்தனம் ஆயின் நன்னுதல்

வருவம் என்னும் பருவரல் தீர

பழும்கொல் வாழி நெடுஞ்சுவர்ப் பல்லி (நற்.169)

தலைவன் தலைவியை விட்டு வினைவயிற் பிரிந்து சென்றபோது, எப்போது வருவீர் எனத் தலைவி வினவினாள். தான் சென்று நினைத்ததை முடித்த அன்றே திரும்பி வருவதாகத் தலைவன் கூறியவுடன் அவள் பெரிதும் துன்புற்றாள். தலைவன் சென்ற வழியானது சிற்றூர்கள் நிறைந்த பாலை நிலத்தில் கிச்சிலிப் பறவையின் தலையைப் போலக் கள்ளிகள் வளர்ந்துள்ளன. அவற்றின் மேலே படர்ந்த முல்லையில் மலர்கள் பூத்துள்ளன. ஆடும் தலையை உடைய ஆட்டு மந்தையை மேய்க்கச் செல்லும் வலிய கையுடைய இடையன் முல்லை மலரையும் பனங்குருத்தின் நறுக்குகளையும் சேர்த்துக் கட்டிய மாலையை அணிந்து செல்லும்போது மாலையின் நறுமணம் தெருவெங்கும் கமழ்கிறது. மாலைப் பொழுதில் சிறுகுடிகள் நிறைந்த பக்கத்திலுள்ள பெரும் மாளிகைச் சுவரில் இருக்கும் பல்லி அப்போது ஒலியெழுப்பியது. உடனே ஒரு வேளை தலைவனின் வருகையைத் தனக்கு அறிவிப்பதாக ஒலியெழுப்புகிறதோ என எண்ணினாள் தலைவி. பல்லி எழுப்பும் ஓசையைச் சகுனமாகக் கருதும் நம்பிக்கை  இதனால் தெரிய வருகிறது.

இல்லத்தில் பல்லி ஒலித்தது

வினையின் காரணமாகப் பிரிந்து சென்ற தலைவன் வீட்டிற்கு விரைந்து வருவான் என்பதைத் தோழி தலைவிக்குச் சொல்லுகின்றாள். அவள் சொல்லியதற்கு ஏற்ப, மனையிடத்துப் பல்லி நல்ல இடத்தில் ஒலித்ததையும் தனது இடது கண் துடித்ததையும் கூறுகின்றாள். இந்நிகழ்ச்சியைப் பாலை பாடிய பெருங்கடுங்கோ,

இனைநல முடைய கானஞ் சென்றோர்

புனைநலம் வாட்டுநர் அல்லர் மனையின்

பல்லியும் பாங்கொத் திசைத்தன

நல்எழில் உண்கணும் ஆடுமால் இடனே (கலி.11)

என்ற பாடல்வழி விளக்குகிறார். சில வீடுகளில் சிறிய இடங்களில் இன்ன மூலையில் பல்லி ஒலித்தால் இன்ன இன்ன பலன் உண்டாகும் என்பதை வழிவழியாக அறிந்து கூறுவது உண்டு. அம்முரையே விருந்தினர் வருகையை உணர்த்தும் இடத்தில் பல்லி ஒலியெழுப்பியது. எனவே பல்லியும் பாங்கொத்திசைத்தன என்றாள். தலைவியைப் பிரிந்து செல்லும் ஒரு தலைவன் இல்லத்தில் இருக்கும் மனைவியை நினைத்து நெஞ்சிற்குச் சொல்கின்றவன் மாலைக்காலத்தில் பல்லி ஒலிக்குந்தோறும் அதனை எண்ணி நல்ல வாக்கு காலத்தில் ஏற்படும் துன்பத்தோடு தலைவி போராடிக் கொண்டு இருப்பாளோ என்ற கருத்தமைய,

பகுவாய்ப் பல்லி படுதொறும் பரவி

நல்ல கூறென நடுங்கி

புல்லென் மாலையொடு பொரும்கொல் தானே  (அகம்.289)

எனக் கூறுகின்றதாக எயினந்தை மகன் இளங்கீரனார் கூறுகின்றார். இதனால் பல்லியின் வாய் பிளந்ததைப் போன்று இருக்கும் என்பதும் அறியலாகிறது. மற்றொரு பாடலில் வினைமுற்றி மனைக்குத் திரும்பும் தலைவன் தலைவியின் நிலையை மனக்கண்ணால் கண்டு,

வருந்துதோட் பூசல் களையும் மருந்தென

உள்ளுதொறு படூஉம் பல்லி

புள்ளுத் தொழுதுஉறைவி செவிமுத லானே?    (அகம்.351)

என்று கூறுகின்றாள். தலைவி தன்னை நினைக்குந்தோறும் பிரிவால் வருந்திய அவள் தோளின் துன்பத்தை நீக்கும் மருந்தாகவும் தன் வரகைச் சொல்லும் பல்லி நிமித்தத்தைத் தொழுது கொண்டு தங்கியிருப்பவள் என்பது பொருள்.

பசுவின் தனிமைத் துயர் வெளிப்படுத்தும் தலைவியின் மனநிலை

மீளிப் பெரும்பதுமனார் என்னும் புலவர் பாலை நிலத்தில் பிரிவால் இருக்கும் தலைவி கூறிய கூற்றில்,

ஒன்றுதும் என்ற தொன்றுபடு நட்பின்

காதலர் அகன்றெனக் கலங்கிப் பேதுற்று

அன்ன வோஇந் நன்னுதல் நிலைஎன

                  …இம்மென

இரைக்கும் வாடை இருள்கூர் பொழுதில்

துளியுடைத் தொழுவின் துணிதல் அற்றத்து

உச்சிக் கட்டிய கூழை ஆவின்

 உலமர கழியும் இப்பகல்மடி பொழுதே!      (நற்.109)

பழமையான நட்பையுடைய நம் காதலர் உன்னைப் பிரியாமல் எப்போதும் சேர்ந்திருப்பேன் என்று கூறிப் பிரிந்து விட்டார். அதனால் கலங்கும் மயங்கிய நல்ல நெற்றியை உடைய இவளின் நிலைமை என்னவாகுமோ என வினவுகின்ற அணிகளை அணிந்தவளே! நான் கூறுவதைக் கேட்பாயாக என்று கூறி, வாடைக் காற்று வீசுகின்றது, வாடைக்காற்று ஏற்கனவே தலைவிக்குச் சோகத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளது. பசுவானது கட்டப்பட வேண்டிய இடத்தில் கட்டப்படாமலும் அது அமர வேண்டிய இடத்தில் அமராமலும் அலைக்கழிக்கப்படுகிறது. அதாவது தலைவியைத் தலைவன் நினைந்து நிலை கொள்ளாமல் தடுமாறி உள்ள சூழல் இப்பாடல்வழி விளக்கப்படுகிறது. தன் தலைவன் அருகில் இல்லாததால் மனம் அலைக்கழிக்கப்படுவதாக உரைக்கும் தலைவியின் கூற்றில் இருந்து பிரிவின் பின்புலமாகப் பசுவும் காற்றும் இப்பாடலில் குறிப்பிடப்படுகிறது.

அழைப்பொலிபல்லி

பெருங்கடுங்கோ பாலை பாடல் ஒன்றில் பிரிந்த தலைமகனை எண்ணி ஆற்றாத தலைவியைக் கண்டு தோழி கூறும் விதமாக அமைவது பின்வரும் பாடல்.

உள்ளார் கொல்லோ தோழீ! கள்வர்

பொன்புனை பகழி செப்பம் கொண்மார்

உகிர்நுதி புரட்டும் ஓசை போலச்

செங்காற் பல்லி தன்துணை பயிரும்

அங்காற் கள்ளிஅம் காடுஇறந் தோரே(குறுந். 16)

காட்டைக் கடந்து செல்லும் கள்வர்கள் தங்கள் நகங்களால் வில்லில் உள்ள அம்பின் நுனியை நெருடி பார்க்கிறார்கள். அப்போது எழும் ஓசைபோல் ஆண் பல்லி ஒலியெழுப்பிக் கொண்டு தன் துணையை நோக்கி ஓடியது. இதைப் பார்த்த தலைவனும் தன் தலைவியை அடைய வேண்டும் என்ற நோக்கோடு விரைந்து வருவான் என்பது இதன் உட்பொருளாகும். சுருங்கக் கூறின் பிரிந்து சென்ற தலைவன் அன்பின் மிகுதியால் எழுகின்றபோது தலைவியும் வரவேற்பாள் என்பது இப்பாடலின் மறுதலை. இவ்வாறு இக்கருத்தை உள்வாங்கிய தோழி தலைவியை ஆற்றுப்படுத்தினாள். இவ்வாறு பல்லியின் ஓசை தலைவன் தலைவியது வாழ்வில் உளவியல் பூர்வமாக அவர்கள் தம் அன்பை வெளிப்படுத்துவதாகப் படைக்கப் பெற்றுள்ளது.

தலைவி நலன் அழிதல்

பிரிதல் தன் நலம் அழிந்த தலைவி வெம்மைமிக்க சுரத்தில் செல்லும் தலைவனை நினைத்தபடி இருப்பாள். அவள் உள்ளத்தே தோன்றும் துயரினை நினைக்க வேண்டி நெஞ்சிடம் கூறினான் தலைவன். வெம்மை மிகுந்த இப்பாலை வழியைக் கடந்து தலைவி சென்றாலும் வந்தாலும் இனி தலைவியைப் பிரிந்து மீளவும் செல்லச் செலுத்தும் நினைவைத் தன் நெஞ்சை விட்டு அகல வேண்டுவதாக் கூறினான். இதனை,

வெந்துக ளாகிய வெயிற்கடம் நீந்தி

வந்தனம் ஆயினும் ஒழிகஇனிச் செலவே!

அழுத கண்ணள் ஆய்நலம் சிதையக்

கதிர்தெறு வஞ்சுரம் நினைக்கும்

அவிர்கொல் ஆய்தொடி உள்ளத்துப் படரே    (ஐங். 330)

என்ற பாடல் அடிகள் உணர்த்துகின்றன. பாலைநிலக் கொடுமையைக் காட்டிலும் தலைவியின் வருத்தம் மிகுதி என்பதை இப்பாடலை எழுதிய புலவர் அறியச் செய்துள்ளார். தலைவனின் பிரிவை நினைந்து ஏங்கும் ஏக்கம் கொண்ட மகளிர்க்குரியதாக இப்பாடல்களைக் கொள்ள முடியும். ஆடவர்க்குத் துணிவு மிகுதியும் வினைமேற் செல்லும் உணர்வு மிகுதியும் உளவாலின் அவர்தம் உளக்காதலைப் புறத்தே காட்டாதவாறு அடக்கி வினைமேற் பிரிதலையே நாடுவர் என்னும் உண்மையை இதன்வழி அறிய முடிகின்றது.

முடிவுரை

இவ்வாறாக அஃறிணை உயிரான பல்லியின் ஓசை அகம் பாடிய சங்கப் புலவர்களால் எடுத்தாளப்பட்டு, மானுட வாழ்வின் அடிப்படைக் கூறான அன்பைச் சுட்டுவதாக அமைந்துள்ளது. இவையே அன்றி வேறு பல உயிர்களும் அன்பைப் புலப்படுத்தும் காரணிகளாக அமைகின்றமையைச் சங்கப் பாடல்கள்வழி அறிந்து கொள்ள முடிகின்றது.

துணைநின்றவை

  • சுப்பிரமணியன் ச.வே. (பதி.), 2008, சங்க இலக்கியம் மூலம் முழுவதும், மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம்.
  • சுப்பிரமணியன் நா., 2004, சங்க கால வாழ்வியல், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை.
  • மாதையன் பெ., 2004, சங்க இலக்கியத்தில் குடும்பம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை.

கா.அறிவரசு

முனைவர் பட்ட ஆய்வாளர்

தமிழாய்வுத் துறை, பிஷப் ஹீபர் கல்லூரி

திருச்சிராப்பள்ளி – 17.