சங்க காலத்தில் வீரம் முதன்மையாகப் போற்றப் பெற்றது. ஆடவரும், மகளிரும் இயற்கையிலேயே மறப்பண்பு மிக்கவராய் விளங்கினர். இதனால் இவர் ‘மறவர்’, ‘மறக்குடி மகளிர்’ என அழைக்கப் பெற்றனர். ஒவ்வொருவருக்கும் வகுக்கப்பட்ட கடமைகள் போரோடு தொடர்புடையனவாகவே அமைந்திருந்தன. சங்க காலத்தில் மறமே மிகுந்திருந்ததனால் எண்ணற்ற போர்கள் நடைபெற்றன என்பதனை இலக்கியங்கள்வழி அறிய முடிகிறது. போரானது பல்வேறு காரணங்களுக்காக நிகழ்ந்துள்ளது. அவ்வகையில் சங்க காலத்தில் வீரம் முதன்மையாகப் போற்றப்பட்டது. ஒரு சமுதாயத்தைப் பாதுகாக்கும் பொறுப்பினைஅரசன் கொண்டிருந்தான். அந்தச் சமுதாயம் அரசனையே  நம்பி வாழ்ந்தது. அவ்வாறு நம்பி வாழ்கின்ற மக்களின் வாழ்க்கை வளமாக அமைய வேண்டும் என்று நினைத்த அரசன் அதற்காகத் தன்னுடைய படையைக் கொண்டு பிறநாட்டுடன் போர் மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. எனவே போருக்குச் செல்லும் வீரம் மிக்கவர்களே சிறப்பிற்குரியவர்களாகக் கருதப்பட்டனர்.

ஈன்று புறந்தருதருதல் எம்தலைக் கடனே

சான்றோ னாக்குதல் தந்தைக்குக் கடனே

வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே

நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே

ஒளிறுவாள் அருஞ்சமம் முறுக்கிக்

களிறெறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே        (புறம்.312)

எனும் புறநானூற்றுப் பாடல் பழந்தமிழரின் கடமைகளுள் சிலவற்றைக் குறிப்பிடுகின்றது. இப்பாடலில் குறிப்பிடப்பெறும் பெரும்பாலானோரின் கடமைகள் போரொடு தொடர்புடையனவாகவே அமைந்துள்ளமை இங்குக் குறிப்பிடத்தக்கது.

வீரமும் போர்ப்பண்பும் ஆடவர்க்குரிய இன்றியமையாப் பண்புகளெனச் சங்ககாலம் கருதியது. வீரநிலைக் காலத்தில் நிலவிய போர் விருப்பச் சமூகம் சங்ககாலத்திலும் நிலவியது. (2007:107)

என்று கூறும் கு.வெ.பாலசுப்பிரமணியனின் கருத்து இங்கு உடன்வைத்து எண்ணத்தக்கது.

பழந்தமிழரின் பழக்கவழக்கங்கள், தொழில், விளையாட்டு ஆகியன யாவும் மறப்பண்புடன் திகழ்ந்துள்ளன. இதனை நோக்குங்கால் பழந்தமிழர் இயற்கையாகவே போர்க்குணம் படைத்தவராக விளங்கியிருக்கின்றனர் என்பதை அறிய முடிகின்றது. இவ்வாறு இயல்பாகவே மறத்தன்மை மிக்க பழந்தமிழர்கள் போர்களைப் பல முறைகளில் மேற்கொண்டுள்ளனர். அவற்றுள் குறிப்பிடத்தக்க நிகழ்வுகள் பின்வரும் பகுதியில் விளக்கப்பெறுகின்றன.

நிரை கவர்தலும் நிரை மீட்டலும்

ஒரு நாட்டு அரசன் தன் அண்டை நாட்டுடன் போர் மேற்கொள்ளக் கருதினால் பகைவர் நாட்டின் ஆநிரைகளைக் கவர வேண்டும் என எண்ணுவான். ஒவ்வொரு நாட்டவரும் தங்களின் எல்லையைப் பாதுகாக்கக் காவலர்களாகப் பலரை நியமித்திருந்தனர். அக்காவற்படைஞர் ஏராளமாக ஆடுமாடுகளை வளர்த்து வருவர். அவர்கள் ஆநிரைகளைப் பெருஞ்செல்வமாக நினைத்தனர். எனவே அவர்கள் செல்வமாக நினைக்கின்ற ஆநரைகளைத் தங்களுடைய மறவர்களை ஏவிக் களவு செய்து ஓட்டிக்கொண்டு வரச் செய்வர்.

வேந்துவிடு முனைஞர் வேற்றுப்புலக் களவின்

            ஆதந்து ஓம்பல் மேவற்று ஆகும்     (தொல்.புறத்.60)

இவ்வாறு ஆநிரைகளைக் கவர்வதால் இருநாட்டினர்க்கும் போர் ஏற்படும். இதனை வெட்சிப்போர் என்பர். ஆநிரைகளுக்குரியோர் அவற்றை மீட்க வரும்பொழுது அவர்களோடு போருக்குச் செல்வர். இவ்வாறு நிரைமீட்கப் போரிடுவது கரந்தைப் போர் ஆகும். இவ்வாறு ஆநிரைகளைக் கவர்தலையும் மீட்டலையும் போருக்குரிய ஒரு காரணியாகக் கொண்டிருந்தனர் பண்டைத் தமிழர்கள்.

எல்லை விரிவாக்கம்

பழங்காலத்தில் தமிழகத்தே இரு நாட்டிற்கும் இடையே எல்லையாகப் பெரிய நிலப்பரப்பில் மரம், செடி, கொடிகள் நிறைந்து காடுகளாக இருந்துள்ளன. தம் நாட்டு மக்கள் சிறப்பாக வாழ வேண்டும் என்றால் தம் நாடு பெரிதாகப் பரந்து காணப்பட்டால் சிறப்பாக இருக்கும் என நினைத்த வேந்தன் தம் அண்டை நாட்டின் செழிப்பான நிலப்பரப்பைத் தனதாக்கிக் கொள்ள எண்ணி, அந்நாட்டின் மீது போர் தொடுக்கத் தக்க காலம் பார்த்திருப்பான். அதற்கான காலம் வாய்க்கும்போது அந்நாட்டின்மீது தன்னுடைய படையைக் கொண்டு போர் மேற்கொள்வான். இவ்வாறு ஒருவன் மண்ணாசையால் பிற நாட்டின் மீது படையெடுத்துச் செல்லின், அந்நாட்டரசனும் தம் மண்ணை இழக்காமல் காத்தற்கு வருவான். இவ்வாறு அவ்விருவரும் மண்ணாசை காரணமாகப் போரிடுவது வஞ்சிப் போர் என்று கூறப்படுகின்றது. இதனை,

எஞ்சா மண்ணசை வேந்தனை வேந்தன்

அஞ்சுதகத் தலைச்சென்று அடல்குறித் தன்றே      (தொல்.புறத்.64)

எனத் தொல்காப்பியர் குறிப்பிடுகின்றார்.

அரண் முற்றுகை

ஓர் அரசன் ஒரு நாட்டின்மீது படையெடுத்துச் சென்றால், எதிர்நிற்க இயலாத அந்நாட்டு மன்னன் தன் கோட்டைக் கதவுகளையடைத்து அதனுள் பாதுகாப்பாக இருந்து கொள்வான். படையெடுத்துச் சென்ற மன்னன் அந்நாட்டுக் காட்டையை முற்றுகையிடுவான். இதனை,

முழுமுதல் அரணம் முற்றலும் கோடலும்

அனைநெறி மரபிற்று ஆகும் என்ப             (தொல்.புறத்.66)

என்று உழிஞைப் போராகக் குறிப்பிடுவார் தொல்காப்பியர்.

பகைநாட்டு மன்னன் அஞ்சித் தன்னிடம் வந்து பணிந்து தனக்குக் கீழ் இருக்க வேண்டும் என்றால் அவனுடைய கோட்டையைக் கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணம் கொண்டு மன்னர்கள் இத்தகைய போர்முறையை மேற்கொண்டனர்.

இவ்வாறு பிற மன்னர்கள் தம் கோட்டையைக் கைப்பற்றிவிடக் கூடாது என்று மன்னர்கள் தம் கோட்டையைச் சுற்றி மதில்கள் அமைத்துப் பாதுகாத்து வருவர்.

கோடுறழ்ந் தெடுத்த கொடுங்கள் இஞ்சி    (பதிற்.16.:1)

என்று கோட்டையைச் சுற்றி மதில்கள் அமைத்திருப்பதைப் பதிற்றுப்பத்துக் குறிப்பிடுகின்றது.

மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்

            காடும் உடையது அரண்     (குறள்.742)

மதிலுடன் கூடிய, கருநிறம் கொண்ட நீர்நிலையாகிய அகழியும் பரந்த வெளியும் உயர்ந்த மலைகளும் மரங்களடர்ந்த காடும் ஒரு நாட்டைப் பாதுகாக்கும் சிறந்த அரண்களாகும் என்று திருவள்ளுவர் கூறுவதன்மூலம் மன்னர்கள் அரண் அமைத்துத் தங்களின் கோட்டையைப் பாதுகாத்தனர் என்பதனை உணர முடிகின்றது.

வலிமையை நிலைநாட்டல்

தமது வலிமையினை உலகம் புகழ்தலையே பெருமபொருளாக எண்ணுகின்ற இரு மன்னர்கள் எதிர்த்து ஓரிடத்தில் களம் குறித்துப் போரிடுவர். இதனைத் தும்பைத்திணை என்பர்.

மைந்து பொருளாக வந்த வேந்தனைச்

            சென்றுதலை அழிக்கும் சிறப்பிற் றென்ப  (தொல்.புறத்.76)

ஒத்த வலிமையுடைய இரு மன்னர்கள் போரிடுவதை இந்நூற்பாவானது குறிப்பிடுகின்றது. வலிமை மிக்க இரு மன்னர்கள் போரிடுவதால் இந்தப் பாரானது கடுமையான போராகக் கருதப்பெற்றது. இரு நாட்டு வளங்களும் அழிவைச் சந்திக்கின்றன.

திசையிரு நான்கும் உற்கம் உற்கவும்

            பெருமரத்து இலையில் நெடுங்கோடு பற்றவும்    (புறம்.4:4-5)

எட்டுத் திசையிலும் எரியும் கொள்ளியால் நெருப்புப் பற்றி எரிகின்றது. அதனால் பச்சை மரங்கள் பட்டுச் செழிப்பற்றுப் போயிருப்பது பற்றி இப்புறநானூற்றுப் பாடலடிகள் குறிப்பிடுகின்றன.

கடற்போர்

கடலில் கலம் செலுத்துவதில் மிகுந்த தேர்ச்சி பெற்றிருந்தனர் தமிழர்கள். வணிகத்திற்காகக் கட்டப்பட்ட கலங்கள் பின்னர்ப் போர்களுக்கும் பயன்படுத்தப் பெற்றன. சோழன் கரிகாற் பெருவளத்தானின் முன்னோர் கடற்போர் நிகழ்த்தியதை

நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி

            வளிதொழில் ஆண்ட உரவோன் மருக      (புறம்.66:1-2)

என வெண்ணிக்குயத்தியார் புறநானூற்றில் குறிப்பிடுகின்றார்.

கோடுநரல் பௌவம் கலங்க வேலிட்டு

            உடைதிரைப் பரப்பில் படுகட லோட்டிய             (பதிற்.46:11-12)

சங்குகள் ஒலிக்கும் கடல் கலங்கும்படி வேற்படையைச் செலுத்திப் பெரிய அலைகளைக் கொண்ட கடலை இடமாகக் கொண்டு போர் மேற்கொண்டு எதிரிகளை ஓடச் செய்து வெற்றி கொண்டவன் சேரன் செங்குட்டுவன் என்று பதிற்றுப்பத்துக் குறிப்பிடுகின்றது.

மேற்காண் இலக்கியங்கள் கூறும் சான்றினைப் பார்க்கும்பொழுது சங்க காலத்தில் கடற்போர் மேற்கொண்டு கடல் கடந்த நாடுகளைத் தமிழ்மன்னர் வெற்றி கொண்டுள்ளனர் எனத் தெரிகின்றது. சங்ககாலத்து மன்னர்கள் தரையில் களம் அமைத்துப் பாரிடுவது போன்று கடலிலும் சென்று போர் மேற்கொண்டுள்ளனர். சங்ககாலத்துப் போர்முறைகளுள் கடற்போரும் ஒன்றாக இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நிறைவுரை

பண்டைத் தமிழர்கள் காதலையும் வீரத்தையும் இரு கண்களென மதித்துச் செயலாற்றியுள்ளனர். இயல்பிலேயே வீரம்(மறம்) மிக்குத் திகழ்ந்துள்ளவர்  மறவர் எனப் பெயர் பெற்றுள்ளனர். பகைநாட்டு மன்னனுடன் போரிடக் கருதிய சூழலில் எவ்விதமான காரணமுமின்றி, முன்னறிவிப்பின்றிப் போர் செய்யும் செயலைப் பண்டைத் தமிழ் மன்னர்கள் மேற்கொள்ளவில்லை. மாறாக, பகைநாட்டு ஆநிரைகளைக் கவர்தல், பகைநாட்டு அரணை முற்றுகையிடல் என்பன போன்ற முன்நிகழ்வுகளைச் செய்துள்ளனர். அவையே வெட்சி, கரந்தை, நொச்சி, உழிஞை… என இலக்கணப்படுத்தப் பெற்றுள்ளன. கடல் கடந்தும் பண்டைத் தமிழ் மன்னர்கள் போரிட்டு வெற்றிக்கொடி நாட்டியதனைப் புறநானூறு உள்ளிட்ட இலக்கியங்கள் பதிவு செய்துள்ளன.

துணைநூற்பட்டியல்

  • கௌமாரீஸ்வரி எஸ்.(பதி.), 2014(13ஆம் பதிப்பு), தொல்காப்பியம் – பொருளதிகாரம் – இளம்பூரணர் உரை, சாரதா பதிப்பகம், சென்னை.
  • பகலவன் ப.(உரை.), 2007(மு.ப.), திருக்குறள் உரை, கற்பகம் புத்தகாலயம், சென்னை.
  • பாலசுப்பிரமணியன் கு.வெ., 2007, சங்க இலக்கியத்தில் புறப்பொருள், மெய்யப்பன் பதிப்பகம், சென்னை.
  • மாணிக்கம் அ.(உரை.), 2012(மு.ப.), பதிற்றுப்பத்து, அறிஞர் அண்ணா நூற்பதிப்புக் கழகம், சென்னை.
  • மாணிக்கவாசகன் (உரை.), 2012(ஆ.ப.), புறநானூறு, உமா பதிப்பகம், சென்னை.

அ.பிரீதா

தமிழ் – முனைவர் பட்ட ஆய்வாளர்

பிஷப் ஹீபர் கல்லூரி

திருச்சிராப்பள்ளி – 17.