இயற்கைப் பாதுகாப்பு என்பது மிகவும் இன்றியமையாததாகும். இன்று இயற்கைப் பாதுகாப்பிற்குப் பதிலாக இயற்கையை அழிக்கத் தொடங்கி விட்டோம். ஆறு, குளம், ஏரி என எல்லாவற்றையும் அழித்து நவீன குடியிருப்புகளாக ஆக்கிரமிப்புச் செய்து கொண்டிருக்கிறோம். ஆனால் பழந்தமிழ்ச் சமூகத்தில் இயற்கைசார் சுற்றுச்சூழல் குறித்த பாதுகாப்பு உணா்வு மேலோங்கியிருந்ததைத் தமிழ் இலக்கியங்கள் எடுத்துரைக்கின்றன. பழந்தமிழரிடையே காடு கொன்று  நாடாக்கி வாழ்வது  நாகரிகமாகக் கருதப்பட்டது. இருப்பினும் அவா்கள் அழித்த காடுகளுக்குப் பதிலாகக் குளம் வெட்டி அதனைப் பாதுகாத்தனா் என்ற செய்தியையும் அறிய முடிகிறது. ஐம்பூதங்களில் ஒன்றான நீரின் மேலாண்மையை உணா்ந்து “நீரின்றி அமையாது உலகு” (குறள்-20) என்று நீரின் மேலாண்மையைக் குறள் எடுத்துரைக்கின்றது. அதுபோல, தமிழர்கள்  குளம் வெட்டி, நீரைப் பாதுகாத்தனா், கடலோரங்களிலும், ஆற்றங்கரை ஓரங்களிலும் பேரழிவைத் தாங்கக்கூடிய மரங்களை நட்டு அதனைப் பாதுகாத்துள்ளனா். தற்கால மனிதனைப் போல் இயற்கையை அழிக்காமல், அதனைப் பாதுகாத்துள்ளனா். இதுகுறித்து அறிமுக நிலையில் விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

ஐம்பூதங்கள்

மண் திணிந்த நிலனும்

      நிலம் ஏந்திய விசும்பும்

      விசும்பு தைவரு வளியும்

      வளித்தலைஇய தீயும்

      தீமுரணிய நீரும் என்றாங்கு

      ஐம்பெரும் பூதத்து இயற்கை போல (புறம்.2)

என்ற புறநானூற்றுப் பாடல் ஐம்பூதங்களும் மானுடத்தின் தேவைக்குப் பயன்பட வேண்டும் என்பதை எடுத்துரைக்கின்றது. தீமுரணிய நீரும் என்ற அடியில் நீரலைகளைப் பெருக்கினால் புவி வெப்பமடைவதைத் தடுக்கலாம் என்கிறது. நீரைத் தேக்கும் வழிமுறைகள் பற்றிய குறிப்புகளும் தமிழ் இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளன.

குளம் அமைத்தல்

 குழித்துழி  நிற்பது       ( நாலடி.31)

என்பதனால், நீரைக் குழிகள் (குளம்) அமைத்துத் தேக்க வேண்டும் என்றும்,

நிலன்நெளி மருங்கில் நீர்நிலை பெருகத்

      தட்டோர் அம்ம இவண் தட்டோரே     (புறம்.18:28-30)

 

மடு, குளம் (பெரும்பாண்.288, மதுரைக்.710, குறிஞ்சிப்.63, மலைபடு.47)

 

அறையும் பொறையும் மணந்தலைய எண்நாள் திங்கள்

      அணைய கொடுங்கரை தெண்ணீர்ச் சிறுகுளம்    (புறம்.118:1-3)

என்ற பாடல் பாறைகளையும், சிறுமலைகளையும் இடைஇடையே இணைத்து பிறை வடிவில் ஏரிகளுக்கும் கரையமைக்கும் முறை பழந்தமிழரிடத்து இருந்திருக்கிறது. எட்டாம் நாள் தோன்றும் பிறை போன்ற வளைந்த தோற்றமுடைய குளம் கட்டப்பட்டு வேளாண்மைக்குப் பயன்படுத்தியுள்ளனா் என்றும், நீர் மிகுதியாக நிரம்பும் காலத்து அதன் கரை உடையாதவாறு காவல் இருந்து பாதுகாத்துள்ளனர் என்பதையும் இப்பாடல்  எடுத்துரைக்கின்றது.

நீர் அறம் நன்று நிழல் நன்று     (சிறுபஞ்ச.63)

காவொடு அறக்குளம் தொட்டல் மிக இனிது    (இனியவை.23)

என்ற பாடலடிகளின்வழி, குளம் அமைப்பதோடு சுற்றிலும் மரங்கள் நட்டு, சோலைகளை அமைத்து இயற்கையைப் பாதுகாத்தனர்  என்ற செய்தியும்  புலனாகிறது.

நீரான் அறிப மடுவினை   (நான்மணி.80)

என்ற பாடலடி குளம் அமைத்துத் தேக்கும் நீர் ஓர் ஆறு உள்ளடங்கும் அளவிற்கு இருக்க வேண்டும் என்றும் (நான்மணி.54) நீரைக் காக்க வேண்டிய வழிமுறைகள் பற்றியும் கூறுகின்றன. இதன்மூலம் பழந்தமிழர், குளம் வெட்டி நீர்வளத்தைப் பெருக்கும் பணியில் ஈடுபட்டு இயற்கையைப் பாதுகாத்துள்ளனா் என்பதைத் தெளிவாக அறிய முடிகிறது.

மரங்களைப் பாதுகாத்தல்

மரங்கள் பாதுகாக்கப்பட்டால் மாரி பொய்க்காது என்பதைப் பழந்தமிழர்கள் உணர்ந்திருந்தனர். இதனை,

சந்தனம், வகுளம், அகில், வேங்கை, விசை, சுரபுன்னை போன்ற மரங்கள் மட்டுமே பயிர்த்தொழிலில் வேளாண்மை செய்ய அழிக்கப்பட்டுள்ளன. சந்தன மரங்களைத் தினைப்புனக் காவலின் போது வெயிலில் நின்று பறவைகளை விரட்ட வேண்டிய சூழலில் வெப்பம் தவிர்க்க உடலில் தடவிக்கொள்ளப் பயன்படுத்தி உள்ளனர் என்பதை,

சாந்தம் எறிந்து சாரல் சிறுதினைச்

      சாந்தம் எறிந்த இதண்மிசைச் சாந்தம்

      கமழக் கிளி கடியும்       (திணைமாலை.3:1-3)

எனும் பாடற்குறிப்பு வெளிப்படுத்துகின்றது. இதைத்தவிர்த்து, தன்நலத்திற்காக பிற மரங்களை வெட்டி, அவ்விடத்தில் பயிர்த்தொழில் செய்பவா்களின் வீட்டில் பெண் எடுக்கவும் தயங்கியுள்ளனா் என்பதை,

நறுந்தண் தகரம் வகுளம்

      இவற்றை வெறும்புதல் போல் வேண்டாது (திணைமாலை.24)

என்ற பாடலடிகள் எடுத்துரைக்கின்றன. மரங்களை வெட்டுவது மட்டுமின்றி மரங்களின் நுனியைக் கிழிப்பதைக்கூட அறமன்று எனக் கருதியுள்ளனா். இதனை, “எம் நாட்டில் அறநெறி தவறி நடப்பவா்கள் எவரும் இல்லையாதலால் கண்டல் சோலைகளில் உள்ள தாழை மரங்களின் நுனிப்பகுதிகள் முறிந்த காட்சியைக் கூட எங்கும் காண முடியாது” எனத் தோழியொருத்தி தலைவனிடம் தன் நாட்டின் சிறப்பினை எடுத்துக் கூறுகிறாள். இதனை,

நெறிதிரிவார் இன்மையால் இல்லை முறிதிரிந்த

      கண்டல்அம் தண்டு       (திணைமாலை.61)

என்று கூறுவதிலிருந்து பழந்தமிழர் மரக்கிளைகளின் நுனியைக்கூட கிழிப்பதை அறமற்ற செயலாகக் கருதியுள்ளனர் என்பதையும் அறியலாம். தமிழர் நீா் வளம் பெற்றுச் சிறப்போடு வாழும் வாழ்வையே போற்றியுள்ளனா் என்றும், மரங்களை, நீர்நிலைகளைப் பேணிப்பாதுகாத்துள்ளனர் என்றும் இதன்வழி அறிய முடிகிறது.

மழைநீரின் பயன்பாடு

தமிழர்கள் மழைநீரைச் சேமிக்க குளங்கள் வெட்டினர். அந்நீரைச் சேமித்து விவசாயமும் செய்துள்ளனா். மழைநீரைப் பயன்படுத்தி, பருவ காலத்திற்கேற்பப்  பயிர் செய்ததை,

பல்மர உயா்சினை மின்மினி விளக்கத்து

செல்மழை விளக்கம் காணும்      (நற்.44)

என்ற பாடலில், மேகம் வருவதைக் கண்டு மழை பொழியும் எனக் கருதி அதற்கேற்பப் பயிர்த்தொழிலைச் செய்திருக்கின்றனா். மழைநீா் மட்டுமின்றி அருவி, சுனை, ஆறு போன்ற நீா்நிலைகளிலிருந்து கிடைக்கும் நீரையும் வேளாண்மைத்தொழிலுக்குப் பயன்படுத்தியுள்ளனா். இதனை,

மைபடு சிலம்பின் ஐவனம் வித்தி அருவியின் விளைக்கும் (குறுந்.370) என்ற பாடலடியானது மழையை நம்பி விதைத்த விதையானது அருவி நீரால் வளா்ந்தது என்று கூறப்படுகின்றது. மேலும், வாய்க்கால் அமைத்து அருவி மற்றும் சுனையில் உள்ள நீரானது முறையாகப் பயன்படுத்தப்பட்டு விவசாயம் செய்ததை,

அகல்வாய்ப் பைஞ்சுனை பயிர்க்கால் யாப்ப     (நற்.5)

என்ற பாடலடியின்வழி, மலைகளில் உள்ள மரங்கள் முதலான செடிகொடிகள் தழைக்கவும், அகன்ற இடத்தை உடைய குளிர்ந்த சுனையில் நீர் நிறைந்து அங்குள்ள பயிர்கள் நெருங்கி வளரவும், குறவர்கள் சுனைகளைப் பாதுகாத்துள்ளனர் என்பதை அறிய முடிகிறது. மேலும்,

இட்ட வெல்லாம் பெட்டாங்கு விளைய

மகுளி பாயாது மலிதுளி தழாலின்,

 அகளத் தன்ன நிறை சுனைப்புறவின்     (மலைபடு.98-104)

என்ற பாடலடிகளில் விதைகள் விதைக்கப்பட்ட கொல்லையின் பக்கத்தில் நீர் இறைக்கும் ‘சால்’ போன்ற வடிவத்தையுடைய நீா் நிறைந்த சுனைகள் இருந்தன என்பதை  எடுத்துரைக்கின்றன. இதன்மூலம் மழைநீர், ஆற்று நீா், சுனை, அருவிநீரைப் பயன்படுத்தி விவசாயம் செய்து, நீரைப் பாதுகாத்துள்ளனர் என்பதையும் அறிய முடிகிறது.

பேரிடர் பாதுகாப்பு

நிலஅதிர்வினால் ஏற்படும் கடல்சீற்றம், புயல் போன்றவற்றினால் ஏற்படும் கடல் சீற்றம் என்பன போன்றவற்றிலிருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்ள முடியும் என்பதைப் பழந்தமிழா் அறிந்திருந்தனர். இலக்கிய இலக்கணத்தைப் போற்றி வளர்த்தது போல் உலகைக் காக்க சூழல் பாதுகாப்பிலும் கவனம் செலுத்தியுள்ளனர் தமிழ்ர்கள். இதனை,

கடலும் கானலும் போல புல்லிய சொல்லும் பொருளும் (பரி.15.11-12) என்ற அடியில், பொருளில்லாத சொல் பயனற்று, மொழிவளத்தைப் பாதித்து விடுவதைப் போல கடற்கரைச் சோலைகளில்லாத கடலும் பயனற்று ஊர்களின் வளத்திற்குப் பாதிப்பைத் தரும் என்கிறது ஒரு பாடல்.

தொன்றுஉறை கடவுள் சேர்ந்த பராரை

மன்றப் பெண்ணை வாங்குமடற் குடம்பை (நற்றிணை.303.3-4)

என்ற இப்பாடல் பழந்தமிழர் மரங்களைக் கடவுளாக வழிபட்டுப் போற்றிப் பாதுகாத்தனா் என்பதை எடுத்துரைக்கின்றது. கடற்கரைச் சோலைகளில் தாழை (கைதை, கண்டல்), நெய்தல், ஞாழல், புன்னை, பனை, அடப்பங்கொடிகள் போன்றவை ஒன்றோடொன்று பின்னி வளரக்கூடியவை. இவை இவ்வாறு நெருங்கி வளர்வதால் அப்பகுதி முழுவதும் கரிய சோலை போல் காட்சி தரும். இதனை,

தாழை மணந்து ஞாழலொடு

கெழீஇ படப்பை நின்ற முடத்தாட் புன்னை      (அகம்.180.12-13)

 

தெரிஇணர் ஞாழலும் தேம்கமழ் புன்னையும்

 புரிஅவிழ் பூவின கைதையும்           (கலி .127.1-2)

போன்ற பாடல்கள் கடற்கரைச் சோலைகளில் புன்னை மரங்களோடு, அடப்பங்கொடிகளும், தாழை மரங்களும் எப்பொழுதும் இணைந்தே வளர்ந்திருக்கும் என்கின்றன. ஆழிப் பேரலையினால் சிறிதும் பாதிக்கப்படாத பல அழியா ஊர்களைப் பற்றிச் சங்க இலக்கியங்கள் எடுத்துரைக்கின்றன. ஆழிப் பேரலையின் தாக்கத்திலிருந்து கடற்கரைகளையும், ஊர்களையும் காக்க, பழந்தமிழர்கள் தாழை முதலான மரங்களின் தன்மையறிந்து அவற்றை வளர்த்துள்ளனா்.

‘கண்டவாயில்’ என்னும் ஊர் ஒன்று நற்றிணைப் பாடலொன்றில் வெகுவாகச் சிறப்பிக்கப்படுகின்றது. இதனுடைய சிறப்பே ஆழிப்பேரலையிலிருந்து தப்பித்ததுதான். இவ்வூர் உப்பங்கழி சூழ்ந்த தோட்டங்களை உடையது. இதன் கடற்கரையில் முற்றிய பனைமரங்கள் வெளிரிய மணல்மேட்டில் முள்வேலி அமைத்தது போல் காட்சி தரும். இதனை உணர்த்தும் பாடலடிகள் வருமாறு,

புதுமணற் கானல் புன்னை நுண்தாது

கொண்டல் அசைவளி தூக்குதொறும் குருகின்

வெண்புறம் மொசிய வார்க்கும் தெண்கடல்

கண்டல் வேலிய ஊா்      (நற்.74:7-10)

பனைமரங்களோடு இணைந்த ஞாழல், தாழை, புன்னை மரங்களும் சேர்ந்து கரிய சோலையோ என்று எண்ணும்படி அடர்ந்திருக்கும். மணற்குன்றுகள் சூழ்ந்த இச்சோலைகளே கண்டல் வேலிகள் எனவும் அழைக்கப்பட்டிருகின்றன. இவற்றுள் வணங்கும் தன்மையுடைய தாழையே சிறப்பாக பேரலைகளைத் தாக்குப்பிடிக்க வல்லது. அதனால்தான் தாழை சூழ்ந்த சோலைகளை நாட்டுவேலி, பெருநீர்வேலி, கண்டல்வேலி எனப் பல பெயா்களில் அழைத்துள்ளனா்.

பரிபாடல் குறிப்பிடும் வையை ஆற்று வருணனையில் வையை கடலோடு ஒப்பிடப்படுகிறது. வையை ஆறானது பெருகி, ஊருக்குள் நுழைந்து பேரழிவை ஏற்படுத்திவிடும் என்பதால் ஆற்றங்கரைகளில் ஞாழல், புன்னை, தாழை முதலான மரங்களை வளா்த்துள்ளனர். இம்மரங்களில் ஞாழல்மரம் வலுவானதன்று. வெள்ளநீரின் வேகத்திற்குத் தாக்குப்பிடிக்க முடியாது. ஆனால், புன்னை, தாழை போன்ற மரங்கள் உறுதியானவை. பேரலைகளைத் தாங்கக்கூடியவை. அதனால் கடற்கரை சார்ந்த பகுதிகளிலும், ஆற்றங்கரை ஓரங்களிலும் இத்தகைய மரங்களே வளா்க்கப்பட வேண்டும். இதனை,

ஒளிதிகழ் உத்தி உருகெழு நாகம்,

அகருவழை ஞெமை ஆரம்இனைய

தகரமும் ஞாழலும் தாரமும் தாங்கி

நளிகடல் முன்னியது போலும்     (பரி.12:4-7)

என்ற பாடலடிகள் எடுத்துரைக்கின்றன.

தாழையின் சிறப்பு

வளைந்த தாழையைக் ‘கண்டல்’ என நற்றிணைப்பாடல் கூறுகிறது. தாழை மரங்களுடன் புன்னை, ஞாழல் மரங்களும் இணைந்து வளர்ந்து நெய்தல் சார்ந்த ஊர்களைக் காத்து நிற்பதால் இவற்றைக் கண்டல் வேலிகள் என பழந்தமிழர் குறித்துள்ளனர். இதனால் தாழை மரத்தின் சிறப்பையும், அதன் உறுதியையும் அறிய முடிகிறது.

இவ்வாறாக, பழந்தமிழர்கள் இயற்கையைப்  போற்றிப் பாதுகாத்துள்ளனா். மழைபெய்யும் பருவகாலங்களை அறிந்து அதற்கேற்ற வகையில் வேளாண்மை செய்துள்ளனா். வேளாண்மைத் தொழிலுக்கு நீா் மிக இன்றியமையாத ஒன்றாக இருப்பதால் நீா்த்தேக்கங்களான குளம், அணை ஆகியவற்றை அமைத்து அதனைப் பாதுகாத்தனா் என்பதையும் அறிய முடிகிறது. கடற்கரை ஓரங்களில் வலுவான தாழை, புன்னை போன்ற மரங்களை வளர்த்து, ஆழிப் பேரலை உள்ளிட்ட இயற்கைப் பேரிடா்களிலிருந்து தம் இருப்பிடத்தைப் பாதுகாத்துள்ளனா் என்பதையும் அறிந்து கொள்ள முடிகிறது.

பார்வை நூல்கள்

  • ……………, சிலப்பதிகாரம் உரையுடன், பாரி நிலையம், சென்னை. முதற்பதிப்பு – 1944.
  • சுப்பிரமணியன் ச.வே.(உ.ஆ), பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் மூலமும் தெளிவுரையும், மணிவாசகர் பதிப்பகம், சென்னை. முதற்பதிப்பு – 2009.
  • பாலசுப்பிரமணியம் கு.வெ.(உ.ஆ.), நற்றிணை, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை.

முனைவர் மா. உமா மகேஸ்வரி

தமிழ் – உதவிப்பேராசிரியா்

தியாகராசர் கல்லூரி

மதுரை – 09

[email protected]