எந்தவோர் இலக்கியமானாலும் அதற்கு மையமாக விளங்குவது கதைக்களன் எனலாம். அக்கதையானது ஏதேனும் உண்மைப் பொருளையோ, அறக்கருத்துக்களையோ அடிக்கருத்தாய்க் கொண்டு விளங்கும். அத்தகைய கதைகளில் படைப்பாளன் தன் அனுபவத்தினால் தான் வாழ்ந்த காலச்சூழலையும் அடிப்படையாகக்கொண்டு தனது படைப்பில் சிறந்த கருவினை அமைக்கிறான். கதைக் கருவினை வாசகனுக்கு உணர்த்த பல்வேறு நிகழ்ச்சிகளைக் கட்டமைத்து ஒரு படைப்பாக வெளியிடுகிறான். இத்தகைய படைப்புக்கள் காலந்தோறும் சிற்சில மாற்றங்களைப் பெற்று வருவது இயல்பு. அவ்வகையில் தமிழில் புகழேந்திப் புலவர் எழுதியுள்ள நளவெண்பா, வடமொழிக் காப்பியத்தை மொழிபெயர்த்து எழுதிய அதிவீரராம பாண்டியரின் நைடதம், மலையாள மொழியில் உன்னை வாரியர் (UNNAYI WARRIYAR) எழுதிய நளசரிதம் இன்றும் நடப்பில் உள்ள நளன்கதை ஆகியவற்றை ஒப்பியல் நோக்கில் ஆய்ந்து அக்கதைகளையும் கதை வடிவங்களையும் கண்டறியும் வகையில் இக்கட்டுரை அமைகிறது.

நளன்கதை பழமை

காப்பியக் கதை பொதுவாகக் கடந்த பல தலைமுறைகளில் வழங்கி வந்ததாக இருக்க வேண்டும். “காப்பியக் கதையென்பது நினைவு தெரிந்த காலத்திலிருந்து நெடுங்காலமாக செவிவழியாக வழங்கி வரும் வீரச்சிறப்பு வாய்ந்த கதை இதிகாசம் அல்லது காப்பியத்தின் பொருளாகும்” என்று எஸ். வையாபுரிப்பிள்ளை கூறுவதாகத் த.ஏ. ஞானமூர்த்தி கூறுவார். (இலக்கியத் திறனாய்வு ப.269).

தருமர் சூதாடி நாடு நகரங்களையெல்லாம் இழந்த நிலையினை நினைத்து வருந்தும்போது தருமனுக்கு அறிவுரை கூறுவது போல நளன்கதை இடம்பெறுகிறது. மகாபாரதத்திற்கும் முற்பட்ட கதையாக விளங்குகிறது. அவ்வகையில் நளன் கதை வேதகாலப் பழமையுடையது. இந்திய இதிகாசங்களில் ஒன்றான மகாபாரதத்தின் கிளைக்கதையாக வழங்கப்படுகிறது.

கதைச் சுருக்கம்

     நளவெண்பாவும் நைடதமும் நிடதநாட்டு மன்னன் நளன்கதையைக் கூறுகின்றன. நிடதநாட்டு மன்னன் நான்மாவிந்த நகரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆட்சிசெய்து வந்தான். ஒரு நாள் தடாகம் ஒன்றில் ஒரு பொன்சிறகையுடைய அரச அன்னத்தைக் கண்டான். அன்னமானது அச்சமுற்றது. நளன் அன்னத்தின் அச்சத்தைப் போக்கினான். அதனால் அன்னமானது வேந்தே, உனக்கு ஒரு நன்மை செய்ய நினைத்துள்ளேன் என்று கூறியது. பின்னர் வீமனின் மகள் தமயந்தியே உனக்கு ஏற்றவள், அவளை உன்னுடன் இணைப்பேன் என்று கூறியது. அவ்வன்னம் தமயந்தியிடம் தூது சென்று அவள் உடன்பாட்டினையும் பெற்றது. தமயந்தி நளனைப் பற்றி அறிந்து காதல் நோயால் வாடியதைக் கண்டோர் தமயந்தியின் நிலையை வீமனிடம் கூற வீமராசன் சுயம்வரத்திற்கு அழைப்பை விடுத்தான். பல நாட்டு மன்னர்களும், இந்திரன், வருணன், இயமன், அக்கினி முதலான தேவர்களும் வந்திருந்தனர்.

நளனைத் தமயந்தியிடம் தேவர்களுக்காகக் தூது அனுப்பினான். ஆனால் தமயந்தி மறுத்து நளனுருவில் உருமாறி வந்த தேவர்களைக் கண்டறிந்து  நளனுக்கு மாலை சூட்டினாள். தேவர்கள் வருத்தத்துடன் வருவதைக் கண்ட கலி, தமயந்தி நளனுக்கு மாலை சூட்டியதை அறிந்து கோபமுற்றான். தேவர்களை விடுத்து நளனுக்கு மாலையிட்ட தமயந்தியையும் நளனையும் கீழ்மைப்படுத்துகிறேனென்று சூளுரை செய்தான்.

கலி நளனைப் பற்றுவதற்காகக் காலம் பார்த்திருந்தான். நளனும் தமயந்தியும் இரு புதல்வர்களைப் பெற்றுப் பன்னிரண்டாண்டுகள் இன்பமாக வாழ்ந்தனர். ஒரு நாள் நளன் அதிகாலையில் சந்தியாவதனம் செய்யும்போது காலை நன்றாகக் கழுவாததால் கலி நளனைப் பற்றினான். புட்கரன் என்னும் மன்னனை நளனோடு சூதாடக் கலியானவன் ஏவினான். நளனும் அமைச்சர்களது அறிவுரையை நீக்கிச் சூதினை மேற்கொண்டு நாடுநகரத்தை இழந்தான். புட்கரனின் கட்டளையால் நாட்டைவிட்டுத் தன் மனைவி மக்களுடன் காடேகுகிறான்.

கலி காட்டில் பொற்பறவையாக வந்து அமர, நளனும் தமயந்தியும் அதனைப் பிடிக்க எண்ணி, ஒற்றைத் துகிலுடன் இருக்கின்றனர். கலியின் வலிமையால் நளன் தமயந்தியைப் பிரிக்கிறான். கார்க்கோடன் என்னும் பாம்பரசனால் கடியுண்டு உருவம் கருத்தான். பின்பு வாகுவன் என்ற பெயரோடு இருதுபன்னனிடம் தேர்த்தொழிலும் மடைத்தொழிலும் செய்துவந்தான். நளனைத் தேடிச்சென்ற அந்தணன் ஒருவன் நளன் இருதுபன்னனிடம் உள்ளமையைத் தமயந்தியிடம் கூறினான்.

தமயந்தி நளனை வரவழைக்க இரண்டாவது சுயம்வரத்தை அறிவித்தாள். இருதுபன்னனின் தேரோட்டியாக நளன் குண்டினபுரம் சென்றான். வாகுவன் நளன் என்பதைத் தமயந்தி அறிந்தாள். பின் வாகுவன் உருமாறி நளமன்னன் ஆனான். நளன் புட்கரனுடன் மீண்டும் சூதாடித் தன் நாடு நகரங்களை வென்றான்.

நளவெண்பாவும் நைடதமும்

பாரதக்கதையின் கிளைக்கதையான நளன் கதையைப் புகழேந்தியும் அதிவீரராம பாண்டியரும் காப்பியமாக அமைத்துத் தந்துள்ளனர். கி.பி. 12-ஆம் நூற்றாண்டு என்று கருதப்படும் புகழேந்தியார் வெண்பா யாப்பில் கடவுள் வாழ்த்து உட்பட 3 காண்டங்களையும் 427 பாடல்களையும் கொண்ட நளன் கதையைப் பாடியுள்ளார். இது தமிழ்ப் புலவரால் பாடப்பட்ட சிறுகாப்பியம் எனலாம்.

கி.பி.16-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அதிவீரராம பாண்டியர் விருத்த யாப்பில் – பெருங்காப்பியம் என்று கருதத்தக்க அளவில் பாயிரம் உட்பட 1172 பாடல்களால் நைடதம் என்ற தலைப்பில் காப்பியமாகப் பாடியுள்ளார்.  வியாசரால் எழுதப்பட்ட மகாபாரதத்தில் மூன்றாம் பருவமாகிய வனபருவத்தில் நளன் கதை நளோபாக்கியானம் என்ற பெயருடன் காணப்படுகிறது. இப்பருவமே நளவெண்பாவிற்கு முதல்நூலாக அமைந்தது. இரண்டு காப்பியங்களுமே சூதாட்டத்தினை மையமாக வைத்து எழுதப்பட்டுள்ளன.

நளசரிதம்

     மலையாளத்தில் உன்னை வாரியர் எழுதிய நளசரிதம், ‘ஆட்டக்கதா’ என்று வழங்கப்படுகிறது. நளசரிதம் கதகளிக்காக எழுதப்பட்ட இலக்கிய வடிவமாகும். மகாபாரதக் கதையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. 18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது.  நான்கு பகுதிகளை உடையது. நான்கு நாட்கள் இரவு முழுவதும் நடைபெறும். மலையாளத்தில் ரெங்கம் என்று அழைக்கப்படும் காட்சிகள் இடம்பெறும். மேலும் நளசரிதத்தின் வடிவம் ஆட்டத்தோடு சேர்ந்த கதைப்பாடலாகும். இதனைப் பதம் சுலோகம் என்பர்.  சுலோகம் சமஸ்கிருத வடிவத்தில் எழுதப்பட்டுள்ளது. ஆட்டம் தொடங்குவதற்கு முன்னதான காட்சிகளை உரையாடல் மூலம் விளக்குவது சுலோகம். சுலோகத்திற்கான ஆட்டம் ‘பதம்’ என்று வழங்கப்படுகிறது. இவை மலையாளமும் சமஸ்கிருதமும் கலந்த மணிப்பிரவாள நடையில் அமையும்.

முதல்நாள்          – 12 காட்சிகள் – 33 பதங்கள் 22 சுலோகங்கள்

இரண்டாம்நாள்      – 12 காட்சிகள் – 28 பதங்கள் 18 சுலோகங்கள்

மூன்றாம்நாள்  – 12 காட்சிகள் – 28 பதங்கள் 18 சுலோகங்கள்

நான்காம் நாள் – 12 காட்சிகள் – 23 பதங்கள் 12 சுலோகங்கள்

என நான்கு நாட்கள் நடைபெறும். இதில் மொத்தம் 48 காட்சிகள், 112 பதங்கள், 70 சுலோகங்களைக் கொண்டுள்ளது.

கதையமைப்பிலும் காட்சியமைப்பிலும் நளவெண்பா நைடதத்தை விட சற்றே மாறுபட்டுள்ளது. ஒவ்வொரு பாடலுக்கும் ஒவ்வொரு தாளத்தைக் கொண்டு இயற்றப்பட்டுள்ளது. பைரவி, பல்லவி, அனுபல்லவி, செம்படா  போன்ற பல இராகங்களில் பாடப்படுகிறது. உன்னைவாரியர் சிறந்த எழுத்தாளராக, இசையமைப்பாளராக, நடன இயக்குனராக எனப் பல்வேறு தோற்றத்தில் பரிணமிப்பதை நளசரிதத்தில் காணலாம். போர் பற்றிய செய்திகள் இதில் இடம்பெறவில்லை. கலியோடு கலிதுவாபரனும் இணைந்து நளனுக்குத் தீங்கு விளைவிக்கின்றனர். இச்செய்தி நளவெண்பா நைடதத்தில் இடம்பெறவில்லை.

இலக்கியங்களில் நளன் கதைக் குறிப்புகள்

  1. சிலம்பில் நளன்கதை

சிலப்பதிகாரக் காப்பியத்தில் ஊர்காண் காதையில்,

“வல்லாடயத்து மண்ணர சிழந்து

மெல்லிய றன்னுடன் வெங்காணடைந்தோன்

காதலிற்…………………

பிரியா வாழ்க்கை பெற்றனை யன்றோ”

(சிலம்பு. ஊர்காண் : 50-57)

என வரும் அடிகள் நளன் கதையினை நினைவூட்டுகின்றன.

  1. தேவாரத்தில் நளன்கதை

“விளங்கிழை மடந்தைமலை மங்கையொரு பாகத்து

ஊளங்கொள இருத்திய ஒருத்தன் இடம் என்பர்

வுளங்கெழுவு நாளும் வழிபாடு செய்நள்ளாறே”

(தேவாரம், தொகுதி-2,)

என்று திருஞானசம்பந்தர் தனது தேவாரத்தில் திருநள்ளாற்றுப் பதிகத்தில் நளன்கதையைக் குறிப்பிட்டுக் காட்டியுள்ளார்.

நாடக வடிவம்

இன்றும்கூட நளன் கதை நெல்லிவாசல்  திருப்பத்தூர் என்ற இடத்தில் நாடகமாக நடிக்கப்படுகிறது. இதில் சாதாரண மக்களும் பெரும்பாலும் விவசாயிகளும் நடிகர்களாக நடிப்பர். ஊர் மக்கள் கூடும் பொதுஇடத்தில் ஊர் பெரியவர்களால் பந்தல் போடப்பட்ட மண் தரையில் மூன்று நாட்கள் இரவு முழுவதும் நாடகம் நடத்தப்படுகிறது. கோவில் திருவிழாக்களின் போது நளன்கதை, மகாபாரதக்கதை போன்றவை நிகழ்த்தப்படுகின்றன. பாட்டு வாத்தியார் என்பவரே கதைப்பாடல், கதை ஆகியவற்றைத் தீர்மானிப்பார். இந்நாடகத்திற்கான கதைமூலம் முன்னோர்கள் வாய்வழியாகப் பாடப்பட்டது என்றும் கதைப்புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது என்றும் கூறுகின்றனர்.

முடிவுரை

கதைகளும் கதைமூலங்களும் நமது பண்பாட்டுக் கருவூலங்களாகும். அவற்றைப் பதிவுசெய்வதும் இன்றைய தலைமுறையினருக்குக் கொண்டுசெல்வதும் நம் கடமை.

பார்வை நூல்கள்

  • உன்னை வாரியர், 1993, நளசரிதம், எஸ்.பி.எஸ்.எஸ். பப்ளிகேசன்ஸ், கோட்டயம்.
  • ஞானமூர்த்தி தா.ஏ., 2006, இலக்கியத் திறனாய்வியல், ஐந்திணைப் பதிப்பகம், சென்னை.
  • …………………, 1961, நளவெண்பா, பாரி நிலையம், சென்னை.
  • …………………, 2005, நைடதம், பாரி நிலையம், சென்னை.

 

தகவலாளர்கள்

தேவேந்திரன், வயது  20, திருப்பத்தூர்.

பாட்டுவாத்தியார், வயது 45, திருப்பத்தூர்.

சுமிதா, வயது 38, சித்தூர்.

………….

முனைவர் வி.மல்லிகா

தமிழ் உதவிப்பேராசிரியர்

மொழித்துறை

இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி (த.)

கோயமுத்தூர் – 641 028