நூல் : ஒச்சாவும் ஒத்தக்காது ஆடும், ஆசிரியர் : மதுரை பாலன், பதிப்பு : ஓவியா பதிப்பகம், திண்டுக்கல், பதிப்பாண்டு : 2015(முதற்பதிப்பு), விலை : உரூபாய்120/-

மதுரை பாலன்அறிமுகம்

இவர் மதுரை மாவட்டம் திருமங்கலம் வட்டத்தில் நேசனேரி கிராமத்தில் 10.06.1954 இல் இருளப்பன், தீத்தம்மாள் தம்பதியினருக்குப் பிறந்தார். இவர் என் காதல் கண்மணி திரைப்படத்திற்குத் திரைக்கதை வசனம் எழுதியதன் மூலம் திரைத்துறைப் படைப்பாளராக அறிமுகமானார். முப்பத்தைந்து ஆண்டுகளாக வீதி நாடகங்கள் நிகழ்த்தி வருகிறார். இவரின் ‘முருக விஜயம்’ இன்றளவும் நாடக உலகினரால் கொண்டாடப்படும் நாடகமாகத் திகழ்கின்றது. மேலும், வழக்காடு மன்றம், இலக்கிய நிகழ்வுகள் மற்றும் சின்னத்திரையிலும் தனது தடத்தினை நீட்டிக்கொண்டே சென்று கொண்டிருக்கிறார்.

ஒச்சாவும் ஒத்தக்காது ஆடும்

‘ஒச்சாவும் ஒத்தக்காது ஆடும்’ என்னும் சிறுகதைத் தொகுப்பு இலங்கையில் நடைபெற்ற சர்வதேச சிறுகதைப் போட்டியில் முதல்பரிசு பெற்ற நூலாகும். இப்படைப்பினுள் இருபத்தொரு சிறுகதைகள் அமைந்துள்ளன. மதுரை பாலனின் படைப்புகளில் சமூகத்தில் நிலவும் எதார்த்த நிலைகளையெல்லாம் கதைக்கருவாக மாற்றியிருக்கக் கூடிய தன்மையினைக் காணமுடிகிறது. பெரும்பாலும் இவர் சமநிலைக்கோட்பாட்டினை முன்னெடுப்பதாகச் சிறுகதைகளை அமைத்துள்ளார்.

மதுரை பாலன் பெண்ணின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமல் இயங்கும் சமூகத்தினரைச் சாடுகிறார். பெண்ணியச் சிந்தனையைப் பெண்படைப்பாளரைப் போன்று உள்ளூர உணர்ந்து படைத்திருக்கும் பாங்கு வரவேற்கத்தக்கது.

ஏண்டி நான் என்ன கண்டவனுக் கெல்லாம் முந்தி விரிச்சுக்கிட்டு திரியறேனா.. இல்ல கண்ணுல மையப் பூசிக்கிட்டு, வாசல்ல ஒக்காந்துக்கிட்டு எவன் சிக்குவான்னு இளிச்சிக்கிட்ருக்கேனாஎனக்குப் புடிச்சிருக்கு அந்தக் கொத்தன வச்சிருக்கேன்.. மத்தவளுக்கு ஏன் பத்திக்கிட்டு எரியுதுங்கிறேன் (பஞ்சவர்ணம்: 38).

என்று பஞ்சவர்ணம் என்ற பாத்திரத்தின் நியாயமான கூற்றின்வழி விருப்பத்தின் பேரில் இயங்கும் சுதந்திரத்தினைச் சுட்டியுள்ளார்.

பெண்களை இச்சை தீர்க்கும் பொருளாக மட்டும் எண்ணுபவர்களைப் பற்றி மிகவும் அழுத்தமான எழுத்துக்களால் விமர்சனம் செய்யும் போக்குப் படைப்பாசிரியரிடம் காணப்படுகிறது. இதனை,

நீங்க ஒவ்வொருத்தனும் வருவீங்க, பொண்ணு பாப்பீங்க… நிச்சியதார்த்தம் பண்ணுவீங்க… ஒருநா படுக்க கூப்பிடுவீங்க… ஏதாவது பிரச்சனையாகி கல்யாணம் நின்னு போச்சின்னா… நீங்க ஒண்ணுமே நடக்காதது மாதிரி போயிருவீங்க… நாங்க அடுத்தடுத்து பொண்ணு பாக்க வர்றவன்கிட்டயெல்லாம்… இந்த உண்மையச் சொல்லிக்கிட்டே இருக்கணும் அப்படித்தானே..?

ஏகாரச் சொல்லை இட்டு துணிந்த முடிவாகப் பெண் கேள்வி கேட்பவளாகப் படைத்துள்ளார்.

தற்காலத்தில் திருமணத்தினை நிர்ணயிக்கும் சக்தியாக வரன் திகழ்கிறது. இவ்வரனின் மூலம் வாழ்விழந்த பெண்களின் கண்ணீர்க் கதைகள் தாராளம் உள்ளன. எனவே, பணம் பார்த்து திருமணம் புரியும் செயலினைக் கடிந்துரைத்துள்ளார். இதனை,

எட்டுப் பவுனு போடுறதாத்தான் பேச்சு பத்துப் பவுன் போடுறதா நான் சொல்லவே இல்லஇது நான் கும்புடுற மார்நாடு கருப்புமேல சத்தியம் என்று ஓங்கியடித்தார் மாடசாமி (இடி : 90).

என்பதன்வழி தங்களின் பிற்போக்கான செயல்பாட்டிற்குக் கடவுளையும் விட்டு வைக்கவில்லை என்று விமர்சனம் செய்துள்ளார்.

மக்கள் தாங்களின் தொலைந்து போன பொருட்களைக் கண்டுபிடித்துத்தர காவல்நிலையத்திற்குச் சென்று முறையிடுவர். ஆனால், அத்தகைய காவல் துறையினரில் காவலர் ஒருவர் தன் மகனைக் கண்டுபிடித்துத் தரச்சொல்லிக் கோடாங்கியிடம் முறையிடும் செயலினை விமர்சனம் செய்கின்றார். இவ்வாறு செயல்படும் காவலர்களால் துறையினருக்கு மக்கள் மத்தியில் அவப்பெயர் ஏற்படுவதனைக் கடியும் விதமாகவே இவ்வாறு படைத்துள்ளார்.

திருமங்கலம் இன்ஸ்பெக்டரே கோடாங்கியைத் தேடிவந்து காணாமல்போன தன் மகனை கண்டு பிடித்து தாருங்கள் என்று அவரின் காலில் விழுந்தார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன் (ஏற்றிவிட்ட ஏணியும், இறக்கிவிட்ட பாம்பும்: 82).

என்று கதையமைத்துள்ளார்.

சுழல் என்ற சிறுகதையில் தாய்மையின் உச்சத்தைக் காட்டியுள்ளார். பையனின் மருத்துவ சோதனைக்கு ஆறாயிரம் வரை செலவாகும் என்றும்; அரசு மருத்துவமனையிலும் சோதனை செய்யலாம். ஆனால், அதுவரையும் பையன் தாங்க மாட்டான் என்று மருத்துவர் கூற பணமில்லாத நிலையில்,

சேட்டின் படுக்கையறைக்குள் நுழைந்தாள் சுமதி. ஆடைகளை களைந்து படுக்கையில் விழுந்தாள். சேட் ஆற அமர பெக் போட்டுக் கொண்டிருந்தான். சுமதியின் தலைமாட்டிலிருந்த செல் அலறியது. எடுத்தாள். பையன் தொடர்ந்து அழுதுகொண்டிருப்பாதாக மாரி சொன்னான்       (சுழல்: 64).

இக்கதையில், தன் மகனின் உயிரைவிட எல்லோராலும் கொண்டாடப்படும் கற்பு என்பது பொருட்டல்ல என்று கற்பின் திரைச்சீலையைக் கிழித்தெறிந்து தாய்மையின் உச்சத்தைத் தூக்கிப்பிடித்துள்ளார் படைப்பாளி.

மூடநம்பிக்கை நம்மைச் சுற்றி இருப்பவர்களிடமும் பிரச்சினைகளை ஏற்படுத்தும் காரணியாகத் திகழ்கிறது என்பதைப் பதியவைக்க,

மதினி நீ கேட்ட மாதிரி புது சீல வாங்கிக் குடுத்திர்றேன். நீ யென் ஆட்டுக்கு மருந்து கிருந்து வச்சிருந்தீயின்னா எடுத்திரு மதினி என்று கூற ஏண்டா என்னய மருந்து மாயம் பண்ற சிறுக்கின்னு நெச்சியா. மரியாதையா ஓடிப்போயிரு.. இல்ல எம் புருசன் வரவும் ஒன்னைய கண்டம் துண்டமா வெட்டிப் போட்ற சொல்லிருவேன் (ஒச்சாவும் ஒத்தக் காது ஆடும்: 135).

என்று எழுதியிருப்பதன்வழி மக்களின் நம்பிக்கை பெருக மூடநம்பிக்கைகளைக் கடிந்துள்ளார்.

சமூகத்தில் உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்ற பாகுபாட்டினை நிலைபெறச் செய்யவதற்கு எப்படியெல்லாம் காரணம் கற்பிக்கின்றனர் என்பதனை,

அப்ப ஒன்னு செய்வோம். இந்தப் பிரச்சினையையே சொல்லாம வேற ஒரு காரணத்தைச் சொல்லி சாவடிக்கு வரக்கூடாதுன்னு சொல்லிருவோம் (தீண்டாமை: 32).

என்று யோசனை சொன்னார் ஊர்த் தலைவர். இதுபோன்று செயல்படுபவர்களைக் கண்டிக்கும் விதமாக,

முன்னால பொதுப்பாதையில நடக்கக் கூடாதுனாங்கெ, பொதுக் கெனத்துல தண்ணியெடுக்கக் கூடாதுன்னாங்கெபொதுச் சுடுகாட்டுல பொதைக்கக் கூடாதுன்னாங்கெ, இப்ப என்னடான்னா பொதுச் சாவடியில குசுப் போடக் கூடாதுங்கிறானுக. இப்படியே விட்டா மோள்றதுக்கும், பேள்றதுக்கும் எங்ககிட்டதான் பெர்மிசன் வாங்கனும் பாங்கே போலிருக்கே (தீண்டாமை: 33)

என்று ஒடுக்கப்பட்டவர்களின் குரலாகத் தீண்டாமை என்னும் சிறுகதையை அமைத்திருக்கிறார்.

ஆளுக்கொரு நீதி இங்கு. ஏழை மட்டும்தான் பரிதாப சாதி என்ற ஏளனநிலை சமூகத்தில் நிலவுவதைக் கதையாக்கியுள்ளார். இதனை,

ஆயிரம் இருந்தாலும் பெரிய சாதிக்காரன் பெரிய சாதிக்காரன்தான். நானாவது சாவடியில போட்டேன். அந்தாளு போட்டான் பாரு சர்க்காரு ஆபிசிலேயே (தீண்டாமை: 36)

என்று தன் நியாயத்தினைக் கருப்பையாவின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார். இதன்வழி, மனிதனுக்கு ஏற்படும் இயற்கை உபாதையான குசு உயர்ந்தோர் போட்டால் கேள்வி கிடையாது. தாழ்ந்தோர் போட்டால் பஞ்சாயத்து என்ற நிலையில் விமர்சனம் செய்து வாசிப்போரின் சிந்தனையைத் தூண்ட வைத்துள்ளார்.

இளம் வயதில் விதவையான தனது தாயார். தனது விருப்பத்தின் பேரில் ஓர் ஆடவரைத் துணையாகத் தேர்வு செய்து கொள்கிறாள். இதற்கு எதிராகச் செயல்படும் வித்யாவின் காதலனைத் தவிர்த்து, அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் செய்தியை வெளியிட்டு தனது தாயின் உணர்விற்கு மதிப்பளிப்பவளாக வித்யாவைப் படைத்துள்ளார். இதனை,

சந்துருவின் அப்பா ரங்கநாதன் நாளிதழ் ஒன்றை வாசித்துக் கொண்டிருந்தவர். ஒரு செய்தியை பார்த்து அலறிப் புடைத்துக் கொண்டு சந்துருவிடம் சென்று காட்டினார். சந்ரு அதை வாங்கிப் படித்தவன் திரும்ப அவரிடமே கொடுத்துவிட்டு அமைதியானான். அதில் இருந்தது இதுதான்.

பெயர் எஸ் வித்யா பி.இ வயது 23

வருமானம் நாற்பதாயிரம்

அம்மா பெயர் ரங்கநாயகி

மாற்றுத்தந்தை பெயர் ராஜதுரை

முகவரி 18 5 கஸ்தூரிரங்கன் சாலை, கொடம்பாக்கம், சென்னை-24

குறிப்பு விவகாரத்தானவர்களும் விண்ணப்பிக்கலாம் (அநாதையாக்கப்பட்ட நியாயம்: 89)

என்று நாளிதழில் செய்தி வெளியிட்டிருந்தார். காதலன் சமூகத்திற்காக தனது கட்டுப்பாட்டினைக் காதலியின் மீது திணித்ததால் இத்தகைய முடிவிற்கு ஆளாகிறாள் காதலி. தாயாக இருந்தாலும் அவளும் ஒரு பெண்தானே என்று தாயாரின் மனவுணர்வினை மனதில் கொண்டு செயல்படும் பாத்திரமாக வித்யாவைப் படைத்துள்ளதால் பெண்ணின் உணர்வினைப் பெண்ணால்தான் புரிந்து கொள்ள முடியும் என்ற நிலையில் பயன்படுத்தியுள்ளார். இத்தகு காதல் உணர்வினை,

“காதல் அடைதல் உயிர் இயற்கை”

என்று பாரதிதாசன் குறிப்பிடுகின்றார்.

சமநிலையை நோக்கிய சிந்தனையில் கதைகளை அமைத்துள்ளார். ஆண்பாத்திரத்தின் வழியாகவே ஆணுக்குப் பெண் சரிநிகர் என்பதை,

ஒரு விதவைப் பெண்ணைத் திருமணம் செய்வதா என்று கடுமையாக எதிர்த்த போது அதனால் என்ன தப்பு இவனும் ஒரு விதவை தானே (சமமற்ற சமன்பாடுகள்: 54)

என்று சுட்டுவதன் மூலம் மதுரை பாலனின் ஆதங்கம் தென்படுகிறது.

இச்சிறுகதைத் தொகுப்பினை வாசிக்கும்பொழுது அடக்கப்பட்டோருக்கு எதிராகத் தன் தரப்பு நியாயத்தை அடங்கிக் கிடந்தோரின் ஆன்மா நம்முடன் பேசுவதனைப் போன்ற உணர்வினைப் பெறமுடிகிறது. நீங்களும் பயன்பெற வேண்டுகின்றேன்.

முனைவர் .முத்துச்செல்வம்,

உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை,

தியாகராசர் கல்லூரி, மதுரை – 09.