Abstract: The present paper aims to describe the Irular tribes life style, Irular tribes category, evaluated the city life of Irular and implemented the details of creature through Odiyan poem.

கவிதைத் தொகுப்பு : ஒடியன்

ஆசிரியர் : லட்சுமணன்

பதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை

பதிப்பு : பிப்ரவரி 2014

விலை: ரூபாய் 75

***

உலக அளவில் தொண்ணூறு நாடுகளில் பழங்குடிகள் வாழ்ந்து வருகின்றனர். அவர்களின் மொத்தத் தொகை 37 கோடி எனக் கணக்கிடப்பட்டுள்ளது. அதாவது, ஐந்து விழுக்காட்டினர்களாக இருந்தாலும், ஏழைகளில் பதினைந்து விழுக்காடாக உள்ளது.

உலகில் ஏழாயிரம் மொழிகள் பேசப்பட்டாலும் அதில் பெரும்பான்மையான மொழிகளைப் பழங்குடி மக்களே பேசி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

1981-ம் ஆண்டு நடத்தப்பட்ட மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் மொத்தம் 563 பழங்குடி இனங்கள் உள்ளன. மொத்த மக்கள் தொகை எண்ணிக்கை 5,16,28,638. இவர்களில் 2,21,000 பேர் இருளர்கள் (. குணசேகரன், 2008:99).

            இந்த எண்ணிக்கை கொண்ட இருளர்கள் இந்தியா மட்டுமின்றி உலக முழுவதும் பரவியுள்ளனர். அங்கே சமவெளியாளர் பேசும் மொழியின் முந்தைய குறையைப் பேசுகின்றனர். அவ்வாறே இந்தியாவில் வாழும் இருளப் பழங்குடியின் மொழியை அறிய முடிகின்றது. அதனைப் பின்வரும் கருத்து வெளிப்படுத்தும்.

… ஆங்காங்கு இவர்கள் வாழ்ந்தாலும் தங்களின் பழைமையான பண்பாட்டை இழக்காமல் பாதுகாத்துக் கொண்டனர். இருளர்கள் இதில் முதன்மையானவர்கள். பழங்குடிகள் பொதுவில் கொடுந்தமிழில்தான் தங்கள் தொடர்புகளை வளர்த்துக் கொண்டனர். காலப்போக்கில் உருவான தெலுங்கு மொழி வேங்கடமலை மற்றும் இன்றைய கோனேரிக் குடுப்பம் என வழங்கப்படும் முந்தைய தொண்டை மண்டலத்தின் எல்லையான வடபெண்ணையாறு வரை பரவி வாழ்ந்த இருளர்களிடமும் செல்வாக்குப் பெற்றது. அதனால் அவர்களின் உச்சரிப்பில் தெலுங்கு கலந்தது. அதேபோல்தான் கன்னடமும் பாலக்காட்டு(க்) கணவாயில் இருந்த காணிக்காரர் உள்ளிட்ட உச்சரிப்பைப் பழக்கப்படுத்திக் கொண்டனர். தமிழ் மொழி இலக்கியவளம் பெற்ற ஒரு மொழியாக உருவான கட்டத்தின் போதும் இருளரின் மொழி உச்சரிப்பு மாறவில்லை. இதனால் அவர்கள் தனிமைப்பட்டனர் (க.குணசேகரன், 2008:88).

இத்தகு இருளர் பழங்குடி மக்களின் வாழ்வையும், அவ்வினத்தின் உட்பிரிவுகளையும், அவர்கள் சமவெளியாளரை மதிப்பிட்டுப் பார்க்கும் முறைகளையும், உயிரினக் குறிப்புகளையும் ‘ஒடியன்’ கவிதைத் தொகுப்புவழி அறிமுகப்படுத்துகிறது இக்கட்டுரை.

ஒடியன் அறிமுகம்

ஒடியனின் ஆசிரியர் லட்சுமணன். இவர் இருபது ஆண்டுகாலமாக இருளர்களோடு வாழ்ந்து வருபவர். அதுமட்டுமன்றி, இருளரின் ஒலிவடிவத்தைத் தமிழ் வரிவடிவத்தைக் கொண்டு கவிதையாக்கித் தந்துள்ளார். இத்தன்மை பற்றி ஆசிரியர் கூறும் கருத்து வருமாறு:

மன்னிக்க முடியாத நுட்பமான துரோகங்களினால் மண்ணும் மலையும் நாறுகிற குழலில் ஆதிவாசிகளுக்கு ஏற்பட்டிருக்கிற உள்காயங்களின் வலியை(ப்) பதிவு செய்ய அவர்களோடு நெருங்கியிருந்த காலங்களில் எழுதிய கவிதைகளை(த்) தொகுத்து வெளியீடாகக் கொண்டுவர வேண்டும் என்னும் விவாதத்தில் தொடங்கிய இப்பணி அத்தோடு நில்லாது பல்வேறு காலகட்டங்களில் மாறுபட்ட சூழலில் எழுதிய சில கவிதைகளையும் தொகுப்பதில் முடிந்திருக்கிறது.

எனக்கு அறிமுகமான இருளர் பழங்குடி மக்கள் பற்றிய கவிதைகளை அவர்கள் மொழியான இருளர் மொழியிலேயே எழுதியிருப்பது வாசகனை சித்திரவதைப்படுத்தும் நோக்கத்திலல்ல, அவர்களிடம் கேட்டதை, கேட்டபடி, எழுத்து வடிவம் இல்லாத அவர்கள் மொழியிலேயே கொடுப்பதுதான் சரியாக இருக்கும் என்பதாலும்தான் கீழ்நாட்டு மொழிகளின் கலப்பால், கொஞ்சம் சிரத்தை மேற்கொண்டால், எளிதில் புரிந்துகொள்ளக் கூடிய அளவில்தான் அம்மொழி தற்போது இயங்கி வருகிறது(2014 : நுழையும் முன்…)

இத்தொகுப்பினுள் ஐம்பத்தாறு கவிதைகள் இடம்பெற்றுள்ளன. அவையனைத்தும் அவர்தம் மொழிச்சூழலை எடுத்தியம்புவன. சான்றாக, முதல் கவிதையைக் காட்டலாம். அக்கவிதை வருமாறு:

கூப்பு ரோட்லெ

கையில கெடாய்த்தூம்

இருளனெ வெலாக்கி

தூக்கி பெணாங்கி மெதிச்சா

எச்சாவே நிந்த

காண்ரீட்டுகாரென

ராஜா”             (ராஜா)

இந்தக் கவிதையில் உள்ள சொற்பயன்பாட்டை நோக்குவோம். இதில் கூப்பு, ரோடு, கை, கெடாய்த்தூம், தூக்கி, இருளன், வெலாக்கி, பெணாங்கி, மெதிச்சா, எச்சாவு, நிந்த, காண்ரீட்டுக்காரன், ராஜா ஆகிய சொற்பயன்பாடுகள் உள்ளன. இவற்றில் அறிந்த சொற்களாக ரோடு (சாலை), கை, தூக்கி (தூக்குதல்) ஆகியனவும்; கூப்பு (வனச்சாலை), பெணாங்கி (சபித்தல்), மெதிச்சா எச்சாவோ (எங்கேயோ) ஆகியன இருளர்களுக்கான தனிச்சொற்களாகவும்; கெடாய்த்தூம் (கிடைத்தும்), வெலாக்கி (விலக்கி), நிந்த (நின்ற) ஆகியன ஆகியன சில திரிபுகளைப் பெற்ற சிதைவுச் சொற்களாகவும் அமைந்துள்ளன. எப்படி இருப்பினும் மேலே கவிஞர் சொன்னது போன்று இவர்தம் மொழியைக் கூர்ந்து நோக்கினால் புரிந்துகொள்ள முடியும். இவ்வாறு இம்மொழி இருப்பதற்குத் தமிழின் சிதை மொழியாக அமைந்திருப்பது காரணமாகும். இதன் பெரும்பான்மையான சொற்கள் தமிழின் வட்டார மொழிச் சொற்களுடன் நெருங்கிய தொடர்புடையமை குறிப்பிடத்தக்கது. சொற்களில் மட்டுமின்றி, வழிபாட்டு முறைகளிலும் சமவெளியாளருடனான உறவைக் காண முடிகின்றது. அதனைப் பின்வரும் கருத்துச் சுட்டிக்காட்டும்.

இவர்கள் நீலகிரியால் வாழும் மலைச் சாதியினர். இருளர் என்பதற்கு இருண்ட நிறத்தினர் என்பது பொருள். இருளர் தமிழின் சிதைவாகிய மொழியைப் பேசுவர். இவர்களுள் ஆண்களும் பெண்களும் கணவன் மனைவியராக நிலைத்திருந்து வாழ்தல் பெண்களின் விருப்பத்தைப் பொறுத்தது. இறந்தவர்களின் உடல் சப்பாணி கட்டி இருக்கும் நிலையில் வைத்துப் புதைக்கப்படும். ஒவ்வொரு சமாதியின்மீதும் நீருள் இருந்து எடுக்கப்பட்ட கல் கொண்டுவந்து வைக்கப்படும். அக்கற்கள் தேவகோட்டக் கற்கள் எனப்படுகின்றன. இறகு களைத்த ஈசல்களை இவர்கள் உண்பர்; நோய்க் காலங்களில் மாரியம்மாவை விழிபடுவர்; ஏழு கன்னிமாரையும் ஏழு மண் விளக்கு வடிவில் விழிபடுவர்(.சி.கந்தையா பிள்ளை, 2015:18).

இருளர் உட்பிரில் சமவெளிச் சாதிய அடையாளங்கள்

இருளரை, ந.சி.கந்தையா பிள்ளை மலைச் சாதியினர் என்றும், அரு.பரமசிவன், ஆர்.பெரியாழ்வார் ஆகியோர் இருளப்பள்ளர் என்றும் பதிவு செய்துள்ளனர். அரு.பரமசிவத்தின் ‘தென்னிந்திய இன ஒப்புமையியல்’ நூலுள் இருளரை, இருளப் பள்ளர்கள் எனக் கூறும் கருத்து வருமாறு:

வெட்டக்காடு இருளப்பள்ளரின் ஆதி இடம் கோவை மாவட்டச் சிறுவாணி, வெள்ளியங்கிரி, சோழக்கரைப் பகுதி, அட்டப்பாடி (கேரளப் பகுதி) ஆகியன ஆகும். இவரிடம் குப்பெ (ஆனைகட்டி, கள்ளக்கறெ), சம்பெ (அட்டக்கல், தாணிக்கண்டி, வெள்ளபதி, புதுப்பதி, மாவுத்தம்பதி), தேவனெ (அட்டக்கல், ஆனைகட்டி), கரெட்டிக (நல்லூர்பதி, தாணிக்கண்டி, வெள்ளபதி, அட்டக்கல், ஆனைகட்டி, புதுப்பதி, மாவந்தம்பதி), கொடுவே (அட்டக்கல்), புங்கெ (ஆனைகட்டி, கள்ளக்கரெ, காரையூர்), குறுநகெ (அட்டக்கல், புதுப்பதி, ஆனைகட்டி), பேராதர (சீங்கப்பதி, அட்டக்கல், ஆனைகட்டி), கும்பிளி (அட்டக்கல், ஆனைகட்டி, தாணிக்கண்டி), உப்பிளி (தேக்கமுக்கெ), வெள்ளெ (அட்டக்கல், ஆனைகட்டி, புதுப்பதி), ஆறுகப்பு (அட்டக்கல், ஆனைகட்டி, கல்லார்பதி) எனும் புறமணக் குலங்கள் உள்ளன. இவை தாய்வழி மூலங்களைக் காட்டி நிற்கின்றன. இவரின் சம்பெ குலத்தில் முடுகச்சம்பெ, குறும்பச் சம்பெ, தொட்டி சம்பெ, கவுண்டச் சம்பெ எனவும், கரட்டிக(க்) குலத்தில் மண்டை சுத்தி காட்டிக், பூமாலைக் கரட்டிக, மந்தைவெளி கரட்டிக எனவும், பேராதர(க்) குலத்தில் சோழ பாட்டன், சாட பாட்டன், கணவ பாட்டன், துடிய பாட்டன், மண்டிலிங்க பாட்டன், சாத்த பாட்டன், கலங்க பாட்டன், மருத(ப்) பாட்டன், விருந்த பாட்டன், கஞ்சி பாட்டன் எனவும் உட்பிரிவுகள் உள்ளன (அரு.பரமசிவம், 2004:113 – 114).

இக்கருத்தை நோக்கும்போது சமவெளியைச் சார்ந்த ‘பள்ளர், கவுண்டர்’ ஆகிய சாதிய அடையாளங்களைக் காண முடிகின்றது. எனவே, இவர்களின் மூத்தகுடி இருளர்களாக இருக்கக்கூடும். ஏனெனில் இதே சாதியினரின் வழிபாட்டு முறைகளிலும் (.குணசேகரன், 2008:56), வாழ்வியல் முறைகளிலும் இருளப் பழங்குடியின் உறவு உள்ளமையை அறிய முடிகின்றது.

இருளர்கள் எப்படிப் பல தெய்வங்களைக் கும்பிட்டாலும் கன்னிமார் வழிபாட்டை ஒதுக்குவதில்லை. இது தாய்வழிச் சந்ததியினர் என்பதை வலியுறுத்துகிறது. அதனைப் போன்று சமவெளிச் சாதியினரும் கன்னிமார் வழிபாட்டை முதன்மையாக வலியுறுத்துகின்றனர். எனவே, சமவெளியாளர்களுக்கெல்லாம் தொல்குடி இருளர் என்பதைப் பல்வேறு முறைகளின் மூலம் அறியலாம். இங்கு க.குணசேகரனின் கருத்துச் சிந்திக்கத்தக்கது.

“…திராவிட இனத்தின் ஓர் அங்கமான இருளரினத்தின் வேரும் இவர்களிடம் இருந்துதான் உதிக்கிறது.

இருளர் இனத்தின் உறவுகள் உலகெங்கும் பரவியிருக்கின்றன. தமிழ்நாடு, கேரளம், ஆந்திரம், கர்நாடகம், கொங்கணப் பகுதிகளில் பரவி வாழும் காடர், கணிக்கார், குறும்பர், பள்ளிகள், பனியன், புலியன், ஊராளி, ஏனாதிகள், ஹோக்கள், ஒரவோன், கோண்டுகள், பிரார்கள், சந்தால்கள், நாகர்கள் போன்றோர் இருளர்களுடன் தொடர்புடையவர்கள்.

இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் தீவுகள், ஆஸ்திரேலியா, பாப்புவா நியூகினியா, தாய்லாந்து, மலேசியா போன்ற பகுதிகளில் பரவியுள்ள பல்வேறு வகையான பழங்குடிகள் இருளர்களுடன் தொடர்புள்ளவர்கள் (2008:70).

ஆகையால், இருளப் பழங்குடிக்கும் இச்சமவெளிச் சாதியினருக்கும் வேறு எவ்வெவ் வகைகளில் தொடர்பு உண்டு என நோக்குதல் வேண்டும். இதுபோன்ற குறிப்புகளை ஒடியனில் காண இயலவில்லை. அதற்குக் காரணம் அது அவர்களின் மன உளவியலைக் காட்டுவதில் முனைந்திருப்பதெனலாம். இருப்பினும் சமவெளியாளர்கள் பழங்குடி இனத்தாரிடமிருந்து பிரிந்து வந்தவர்கள் என்றாலும், அவர்களின் உறவை ஒப்பிட்டுக் கண்டறிதல் காலத்தின் தேவையுமாகும்.

இருளர் வாழ்விடங்களும் இருளரின உட்பிரிவுகளும்

இந்த இருளர்கள் தமிழகப் பழங்குடிகளில் இரண்டாவது பெரிய குடிகளாவர். இவர்கள் ஆங்காங்குத் தனித்தனிக் குழுக்களாக வாழ்ந்து வருகின்றனர். நீலகிரி, ஆனைமலை, மருதமலை, மேட்டுப்பாளையம், சிறுவாணி ஆகிய மலைப் பகுதிகளிலும், காஞ்சிபுரம், வேலூர், செங்கல்பட்டு, சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய சமவெளிப் பகுதிகளிலும் வாழ்ந்து வருகின்றனர் (சி.முருகன், 2014:15). ஆதலால், தமிழுக்கும் இவர்களின் மொழிக்குமான உறவு நெருக்கமானது. இவர்தம் மொழியில் பழந்தமிழ்ச் சொற்களும் காணப்படுகின்றமை அவர்தம் தொல்சமூக உறவை வலியுறுத்துகிறது.

இப்படி மலைப்பகுதிகளிலும் சமவெளிப் பகுதிகளிலும் வாழ்ந்து வரும் இவ்விடங்களை வைத்து, அவர்கள் பேசும் மொழியை மலையின இருளர், சமவெளி இருளர், மலையடிவார இருளர் என சு.சக்திவேல் வகைப்படுத்திக் காட்டுகிறார் (சி.முருகன், 2014:15).

இம்மூன்று வகைப் பிரிவிகளுக்குள் குப்பெ, சம்பெ, தேவனெ, கல்கட்டி, கொடுவே, புங்கெ, குறுநாக, பேராத ஆகிய எட்டுக் கால்வழிகள் உண்டென்கிறது வாழ்வியற் களஞ்சியம் (சி.முருகன் 2014:15). ஆனால் ஏழு குலங்கள் உண்டென ஒடியன் தொகுப்புச் சுட்டிக் காட்டுகிறது. அதனைக் காட்டும் கவிதை வரிகள் வருமாறு:

ஏழு உருப்படியூம் லெத்து

ஒண்டியாகி வருகேமு

ஒன்னா நிப்பாமா”    (ஒடியன்)

இவ்வரிகளில் ‘ஏழு உருப்படியூம் லெத்து’ என்ற முதல்வரி ஏழு குலங்கள் இருப்பதைக் காட்டுவதாகக் கவிதையின் குறிப்புரையில் (ப.57) இடம்பெற்றுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது. இவ்வாறான முரண்பாடுகள் இருந்தாலும், அவர்கள் தனித்தனிக் குழுக்களாக வாழ்ந்து வருகின்றமை வெளிப்படை. ஆக இத்தொகுப்பு குறுநகே, குப்பரு, புங்கெ, குரிச்சி, வெள்ளகே, குப்பிலிகா, தோடர், சம்பகா ஆகிய இருளப் பழங்குடிகளின் உட்பிரிவுகள் இருந்துள்ளமையைச் சுட்டிக் காட்டுகின்றது.

அதுமட்டுமின்றி ‘இணைப்பு’ என்ற கவிதையில் கோயம்புத்தூரைச் சுற்றி எட்டுக் குறுநாடுகள் இருந்துள்ளன என்பதையும், அது பின்பு ஊர்களாக மாறிவிட்டன என்பதையும் அறிய முடிகின்றது. அதனை,

“அவிரென

செவனெ

சூரெ

நடுவெ

மன்னி

இடியெ

துடியெ

கோவெ

பேரையெ

இச்சா

எத்து

மூப்பனெல்லா

கெப்பைதழெலா சத்தா…”

என்ற கவிதை வரிகள் காட்டும். இதற்கு லட்சுமணன் அளித்திருக்கும் விளக்கவுரை வருமாறு:

செவன மூப்பனின் ஊரை சேவூராக்கி, அவின மூப்பன் நாட்டை அவினாசியாக்கி, இடியன் வனத்தை இடிகரையாக்கி, மன்னி மூப்பன் நாட்டை அன்னூராக்கி, சூரபாட்டன் வனத்தை(ச்) சூளுராக்கி, துடிய பூட்டே ஊரை துடியலூராக்கி, கோவே பட்டேன் ஊரை கோயமுத்தூரக்கி எங்களை மலசனாக்கி சோம்பேறியாக்கி, காட்டு  மிராண்டியாக்கி உனக்கான வரலாறை நீ எழுதுகிறாய்(ஒடியன், பக்.68-69)

இவ்வரலாற்றுச் செல்நெறி கவனிக்கத்தக்கது. இதுபோன்றே ஒவ்வொரு நிலையிலும் பல்வேறு பரிணாமங்களைப் பெற்று மனித இனம் வளர்ந்துள்ளது எனக் கூறலாம். அந்த அடிப்படையிலே மேலே இருளர்கள் அனைவரின் தொல்குடியைச் சாரந்தவர் எனக் கூறப்பட்டது. ஒவ்வொரு சாதியினரும் தங்களது வரலாற்றை எங்கிருந்து தொடங்குகின்றனர் என்பதைக் கூர்ந்து நோக்கினால் இன்னும் பல செய்திகள் தெரிய வரும்.

இருளர் சமவெளியாளர்

இருளரைச் சமவெளியாளர் பிரித்துப் பார்க்கும் முறைமையை ‘எம்த்து நாடு’ எனும் கவிதை எடுத்துரைக்கிறது.

ஏன்னாதுக்குவெ

விதவிதமா பேரு வெத்தெ

மேல் நாட்டானுங்கெ

வெட்டக் காடானுங்கெ

கசவானுங்கே

 வில்லியனுங்கெ

மலையா இருளனங்கெ

தமிழா இருளனுங்கெ

என்னத்தே வெசா   

றாக்கி உட்டெ

நேமு எல்லாமு ஒந்நாளுதெ.

இக்கவிதையினுள் சமவெளியாளர் இருளரைப் பிரித்துப் பார்க்கும் முறைமையும், அதனை இருளர் மறுத்துப் பார்க்கும் பார்வையும் அமைந்துள்ளன. சவெளியாளர் இருளரை மேல்நாடு இருளன், வேட்டக்காடு இருளன், கசவன், ஊராளி, வில்லியன், சோளகன் எனப் பிரித்துப் பார்க்கின்றனர். இப்படிச் சமவெளியாளரின் பார்வை இருளர்மீது அமைந்திட, இருளர்களோ சமவெளியாளரைப் பின்வருமாறு மதிப்பிட்டுப் பார்க்கின்றனர்.

காந்தெவெறகெ

வெட்டினாந்து

புங்கிப்போகே கொடுவாளெ

குக்கே கடித்த

கூகனே நிந்துக்கெ

லெதுகே கேசே

லோகெ லாரிலெ

மொக்கேயே போய்த்து

நித்து ஆப்பிசிலே

கட்டே ஒந்தூ கட்டுகாலேயே

அது மை வெத்த போகூ

எனும் ‘நீதி நெலா நியாயோ’ கவிதை வெளிப்படுத்துகிறது. இது சமவெளியாளர் செய்யும் அரசியலை அப்பட்டமாகச் சுட்டிக்காட்டுகிறது. இதுபோன்று பல்வேறு மதிப்பீடுகளை இந்நூல் முழுமையும் காணமுடிகின்றது.

உயிரினக் குறிப்புகள்

சங்கக் கவிதை தொடங்கி இக்காலக் கவிதைகள் வரை அவை ஏதோ ஒருவகையில் உயிரினங்களின் குறிப்புகளைப் பதிவுசெய்துள்ளன. அதனை இத்தொகுப்பிலும் காண முடிகின்றது. இங்கு இதுகுறித்த விவாதம் தேவையா? தேவையே. இருளமொழி தமிழின் சிதைமொழி என மேலே கண்டோம். அத்தகு இம்மொழியில் உயிரினப் பெயர்கள் முறையை அறிவது, வரலாற்றுத் தொடர்ச்சியை உணர்வதற்கு வழிதரும். எனினும், இங்கு ஒடியன் தொகுப்பில் அமைந்த அனைத்து உயிரினங்களையும் தொகுத்துத் தரவோ, அதனை விரிவாக விளக்கவோ இங்கு முற்படவில்லை. மாறாக, இத்தொகுப்பில் காணப்பெறும் உயிரினங்களில் சிலவற்றை அறிமுகம் செய்வதோடு நிறுத்திக் கொள்கிறது.

சங்க இலக்கியத்தில் கேளையாடு என்ற விலங்கு இருந்ததை அறியலாம். அதுபோன்ற குறிப்பு இக்கவிதைத் தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. இருளர்கள் அதனைக் கேளயாடு என அழைக்கின்றனர். மேலும், இத்தொகுப்பில் இடம்பெறும் உயிரினக் குறிப்புகளை விலங்கு, மரம், செடி, பறவை, ஊர்வன என வகைப்படுத்தி அறிமுகம் செய்யப்படுகின்றது.

     விலங்கு

கரும (கருமான்), கூகன் (சருகுமான்), பந்தி (கேழல் – பன்றி), பரடு பந்தி (காட்டுப் பன்றி), விருக (உடும்பு), புசுகி (முசு – குரங்கு), சன்ன (அணில்), கேளயாடு (கேளையாடு – மான்), புலுகன் (புனுகுப் பூனை) போன்ற விலங்குகளின் பதிவுகள் காணப்பெறுகின்றன. ‘அண்டப் புலுகன் ஆகாசப் புலுகன்’ எனும் தொடரை ஊர்ப்புற மொழிகளில் காணலாம்.

     மரம்

பலா, சொக்கு மரம், வேலா போன்ற மரம் பற்றிய பதிவுகள் உள்ளன.

     செடி

சுண்டமுள், வெட்டு தழே (வெட்டியதை ஒட்ட வைக்கும் மூலிகை), மாகாளிக் கிழங்கு முலாம் (முலாம் பழச்செடி), கள்ளி, பூச்சே (சோப்புக்காய்) போல்வன செடிகள் குறித்த பதிவுகளாகும்.

     பறவை

தோல் பக்கி (வெளவால்), கிளி, குப்ளா (ஆந்தை), காமே பாரு (கரும் பருந்து), நாரை, கோகிலா (குயில்) போன்ற பறவைகள் பற்றிய குறிப்புகளையும் காணமுடிகின்றது.

     ஊர்வன

சதலு (சிதல் – கரையான்), பாம்பு, றெக்க (சிறகு – இறகு), ஓத்தி (ஓந்தி – ஓணான்) போன்ற குறிப்புகளும் காணக்கிடக்கின்றன.

 

நிறைவாக, இங்கு அறிமுகப்படுத்தப்பெற்ற ஒடியன் கவிதைத் தொகுப்பு மூலம் அதனுள் கிடக்கின்ற அரிய குறிப்புகளையும், இருளப் பழங்குடி வழிகால்களையும், அவர்கள் சமவெளியாளரை மதிப்பிடும் முறைகளையும் அறிய முடிகின்றது. கூடுதலாகத் தொல்காப்பியத்தில்,

சிதலு மெறும்பு மூவறி வினவே 

பிறவு முளவே அக்கிளைப் பிறப்பே     (தொல்.பொருள்.585)

எனச் சிதல் பற்றிய குறிப்புக் காணப்படுகின்றது. அச்சொல் இன்றும் இருளப் பழங்குடியினரிடத்தில் சதலு எனச் சிதைந்து வழங்கி வருவதையும் அறியமுடிகின்றது. ஆக, இக்கவிதைத்தொகுப்பை மேலும் நுண்ணாய்வுக்கு உட்படுத்தினால் இன்னும் கூடுதலான குறிப்புகள் கிடைத்திடும் என்பதில் ஐயமில்லை.

 

துணைநின்றவை

…..

.சத்தியராஜ்

தமிழ் உதவிப்பேராசிரியர்

இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி (தன்னாட்சி)

கோயமுத்தூர் – 641 028

neyakkoo27@gmail.com