அறிமுகம்

பண்டமாற்றுப் பொருளாதார முறைமைக்குள் முடங்கிக் கிடந்த பொருளாதாரச் செயற்பாடுகள், பணப்பரிவர்த்தனை பொருளாதார உருவாக்கத்தின் பின்னர் ஒரு புதிய உத்வேகத்தில் வீறுநடை போடத் தொடங்கிவிட்டன. இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொரு சமூகமுமே பலவகையான சமூகப் பிரச்சினைகளுடன் பின்னிப் பிணைந்திருக்கிறது. சமூகத்தில் ஏற்படுகின்ற மாற்றங்கள் முன்னேற்றகரமானதாகவோ அல்லது பின்னடைவானதாகவோ காணப்படுகின்றன. அந்த வகையில் சமூகத்தினது முன்னேற்றத்தினை அடிப்படையாகக் கொண்டு எழுகின்ற மாற்றங்கள் சிலவேளைகளில் பல தாக்க விளைவுகளினை ஏற்படுத்தக்கூடும்.

அந்தவகையில் நலிவுற்ற மக்களது வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்துவதற்கு அறிமுகப்படுத்தப்பட்ட திட்டங்களில் நுண்கடன் திட்டம் மிக முக்கியமானதாகும். இவ் முன்னேற்றகரமான நுண்கடன் திட்டமானது இலங்கை, இந்தியா உட்பட பல உலகநாடுகளில் பல்வேறு அரசு மற்றும் அரசுசார்பற்ற நிறுவனங்களின் உதவியுடன் முன்னெடுக்கப் படுகின்றமையினைக் காணலாம். பல முன்னேற்றகரமான குறிக்கோள்களை அடிப்படையாகக் கொண்டு நுண்கடன் கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெறுகின்றன. இதன்மூலம் நாட்டின் பொருளாதாரத்திலும், சமூகத்திலும் பல சாதாகமான விளைவுகள் ஏற்பட்ட போதிலும் மறுபுறம் பல்வேறு பாதகமான விளைவுகளுக்கும் வழிவகுக்கின்றது.

நுண்கடன்கள்

நுண்கடன் என்பது அரசு அல்லது தனியார் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களினால் வாடிக்கையாளருக்கு வழங்கப்படும் சிறியளவான பணத்தொகையைக் குறிக்கின்றது. மைக்ரோ கிரடிட் (Micro Credit) என்னும் ஆங்கிலச் சொற்பதத்தினை அடிப்படடையாகக் கொண்டு நுண்கடனுக்கான பிரயோக அர்த்தம் வரைவிலக்கணப்படுத்தப்படுகின்றது. மைக்ரோ (Micro) என்பது துல்லிய, நுண்பாக, நுண்ணிய என்கின்ற அர்த்தங்களினையும், கிரடிட் (Credit) என்பது மீள்செலுத்த வேண்டிய கடன்தொகை என்ற அர்த்தத்தினையும் வெளிப்படுத்தி நிற்கின்றன. இந்த நுண்கடனானது, சிறுகடன், சிறுமுதலீட்டுக் கடன், சிறுதொழில் முயற்சிக் கடன், வாழ்வாதாரச் சிறுகடன், இடருதவிக் கடன் எனப் பலவாறும் அழைக்கப்படுகின்றது.

பொதுவாக எல்லா நுண்கடன்களுக்குமான பொதுப் பெயராக மைக்ரோ கிரடிட் (Micro Credit) என்னும் ஆங்கிலப்பதம் உலகளாவிய ரீதியில் ஆரம்பத்தில் பயன்படுத்தப்பட்டு வந்ததாக் முகமட் யூனிஸ் குறிப்பிடுகிறார்.(Premarathna S.P, (2001), Network, Resourse And Small Business Growth: The Experience In Srilanka, Journal Of Small Business Management P363) விவசாயக் கடன், கூட்டுறவுக் கடன், சேமிப்பு வங்கிக் கடன், கிராமியக் கடன், வியாபாரக் கடன், முதலான மூலங்களால் வழங்கப்படும் குறைந்த தொகை அடிப்படையிலான கடன்கள் நுண்கடன் என்னும் பகுதிக்குள் உள்ளடக்கப்படுகின்றன. இவற்றிற்கும் மேலாக நுகர்வுக் கடன், விழா முற்பணம், இடருதவிக் கடன் முதலானவையும் நுண்கடனாக வழங்கப்படுகின்றன.

நிதி உதவி செய்வதில் பிரதானமாக உள்ள வங்கித் துறையானது சமீப காலம் வரை வாடிக்கையாளர்களின் பணவைப்புக்களைக் கையாள்வதிலேயே கூடிய கவனத்தைச் செலுத்தியது. வாடிக்கையாளர்களிடம் இருந்து அவர்களின் சேமிப்புப் பணத்தினைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்வதும், வாடிக்கையாளர்கள் திருப்பிக் கேட்டவுடனேயே அல்லது ஏற்கனவே உடன்பட்டுள்ள வட்டியுடனேயே திருப்பிக் கொடுப்பதாகவும் உடன்படிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வைப்புக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. அவ்வாறு ஏற்றுக்கொள்ளப்பட்ட வைப்புக்களில் ஒரு சிறு விகிதமே எந்த நேரத்திலும் வாடிக்கையாளரால் மீளப்பெறப்படுகிறது என்பதை அனுபவ ரீதியாகக் கண்டுகொண்டு தங்களிடமுள்ள தேங்கி நிற்கும் வைப்புக்களை, தனது பணவைப்புச் செய்தவர்கள் உட்பட வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் வியாபாரம், கைத்தொழில், விவசாயம், கல்வி மற்றும் வீட்டு நிர்மாணம் ஆகிய நோக்கங்களுக்காகக் கடனாகக் கொடுத்து அதன்மூலம் பெறும் வட்டியே வங்கிகளில் இலாபமாக அமைந்தது. எனவே நுண்கடன் திட்டத்தின் நோக்கம் மக்களை பொருளாதார ரீதியில் வலுப்படுத்துவதாகக் காணப்படுகின்றது.

அவ்வாறு கொடுக்கப்பட்ட கடன்களுக்குப் பொறுப்பாக அசையும் அல்லது அசையா ஆதன அடகு மற்றும் சட்ட ரீதியான கட்டுப்பாடு உட்பட ஆட்பிணைகள் ஆகியனவும் வங்கிகளால் பெற்றுக்கொள்ளப்பட்டன. மேலும் வங்கிகள் ஒருவருக்குக் கடன் கொடுக்கலாமா? இல்லையா எனத் தீர்மானிக்கும்போது கடன் நிதிகளை உபயோகப்படுத்தும் நோக்கத்தின் இலாபத் தன்மை ஆகியவற்றிலும் பார்க்க சமர்ப்பிக்கப்படும் சொத்துக்களின் பெறுமதிக்கே கூடுதலான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இவ்வகையான பெறுமதிமிக்கச் சொத்துக்களைப் பொருளாதாரத்தில் கீழ்மட்டத்தில் உள்ளவர்களால் சமர்ப்பிக்க முடியாதுள்ளது.

அதேவேளை வங்கிகள் அவ்வகையான கடனாளிகள் கடன்களை மீளளிப்பதில் தவறும்போது ஏற்படுகின்ற சிரமங்களையும் மற்றும் நட்டங்களினையும் விரும்பாமையினால் அவ்வகையானவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்வதற்கு தேவைப்படும் மூலதனத்தை வங்கியிடம் இருந்து பெறமுடியாதிருந்தது. இவ்வகையான மக்களின் வாழ்க்கைத் தரத்தினை படிப்படியாக உயர்த்திக் கொள்வதற்கு ஆர்வமுள்ள கடனாளிகளுக்கு நிதிவழங்கும் நிறுவனங்களினால் உதவி செய்திடல் வேண்டும் என்ற சிந்தனை மாற்றத்தில் உருவானதே நுண்கடன் திட்டமாகும். ஐக்கிய நாடுகள் சபையானது ‘மிலேனியம்’ இலக்கினை எய்துவதில் சிறுகடன் திட்டத்தினைப் பிரதான கருவியாகப் பரிந்துரை செய்தது.

நியூயோர்க் நகரில் 1997இல் நடைபெற்ற சிறுகடன் தொடர்பான சர்வதேச மாநாட்டில் (Micro Credit Summit 1997) வறுமைப்பட்டோரின் தொழில் முயற்சியை மேம்படுத்துவதற்கான பிரதான உத்தியாக நுண்கடன் சேவையானது முன்மொழியப்பட்டிருந்தது. ‘லயான்டர் ஸ்பூன்சர்’(Lyandar Spoonser) என்பவரே சிறுகடனின் தந்தை என அழைக்கப்படுகின்றார். ஐரீஸ் நிதியம் ஆரம்பிக்கப்பட்டு ஒரு தசாப்தங்களின் பின்னர் 1830இல் ஐரிஸ் பாரளுமன்றம் நுண்கடன் வழங்கும் நடவடிக்கையைத் தேசிய சட்டமாகவும், தேசிய வறுமைத் தணிப்பிற்கான தந்திரோபாயமாகவும் அங்கீகரித்திருந்தது. இச்சட்டமானது சிறுகடனை நெறிப்படுத்த தோற்றம் பெற்ற முதலாவது சட்டமாக விளங்குகிறது.

நுண்கடன்களின் பிரயோகத் தன்மை

பணம் இன்றி எதையுமே நுகரமுடியாத நிலையில்தான் உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. பணத்தினை எவ்விதம் உழைக்கலாம், வருமானத்தினை எவ்விதம் பெற்றுக்கொள்ளலாம் என்பதே ஒவ்வொரு உழைக்கும் தனிமனிதர்களது எதிர்பார்ப்பாக உள்ளது. பணம் என்பது ஒரு மூலதனத்திற்கான கருவியாகப் பயன்படுகின்றது. பொருளாதாரச் சமூகத்தின் தேவைகள் என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டுதான் செல்கின்றன. மக்கள் உழைக்கும் பணத்தினைக் கொண்டோ அல்லது சேமிப்புக்களினைக் கொண்டோ அல்லது கடன்களை பெற்றாவது நுகர முற்படுகின்றனர். பணத்தினைக் கொண்டு பெற்றுக்கொள்ள முடியாத விடயங்களே இல்லை எனலாம். அந்த வகையில் நுண்கடன்கள் பல நன்மைகளை பெற்றுத்தருகின்றன.

நுண்கடனினைப் பெற்றுக்கொள்ளும் கடனாளி தாம் எந்த நோக்கத்திற்காக நுண்கடனினைப் பெற்றுக்கொள்கின்றாரோ அத்தகைய அவரது நோக்கம் நிறைவு செய்யப்படும். தமக்கு இருக்கின்ற தேவைகளினை நிறைவுசெய்து கொள்வதற்குத் தம்மிடம் போதிய அளவு பணம் இல்லாத நிலையில் தமது தேவைகளை நிறைவுசெய்ய மக்கள் கடன்களினைப் பெற்றுக் கொள்கின்றனர். எனவேதான் ஏதோ ஓர் அளவில் தனிமனிதனது பணத்துடன் தொடர்புடைய தேவைகள் இவ் நுண்கடன்கள் மூலம் நிறைவுசெய்யப்படுவதனைக் காணலாம்.

வறுமை ஒழிப்புத் திட்டமாகச் சிறுகடன் திட்டங்கள் முன்மொழியப்பட்டுள்ளதுடன் அதன் அடிப்படையில் இவை ஏழைகளின் வருமான மட்டத்தினை அதிகரிப்பதாகவுள்ளது. கடனாளிகள் மிகையான நேரத்தினைப் பயன்படுத்திப் பணம் ஈட்டக் கூடியதாகவுள்ளது. இதனால் மக்களது நுகர்வு அளவானது அதிகரித்துள்ளது. அதன் காரணமாக உற்பத்தி பெருக்க நிலைமையானது உருவாகியுள்ளமையினைக் காணலாம். மக்களிடையே காணப்படுகின்ற வருமான ஏற்றத்தாழ்வுகள் மற்றும் அந்தஸ்து நிலைகள் என்பன ஓரளவுக்குச் சரிசெய்யப்பட்டுள்ளமையினைக் காணலாம்.

அண்மைக் காலத்தினை எடுத்து நோக்கும்போது சுயதொழில் என்பது புதியதொழில் வாய்ப்பிற்கான ஆதாரமாகக் காணப்படுகின்ற போதிலும் பொருளாதார ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகக் காணப்படுகின்றது. முதலீடுகள் குறைவாக இருப்பதனாலும், உற்பத்தி மட்டங்களும், தொழிலாக்க நடவடிக்கைகளும் குறைவாக இருப்பதனாலும் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் வேலையின்மை உயர்வாகக் காணப்படுகிறது.

சமூகத் தேவைகளுக்கு ஏற்ப பொருளாதார, சமூகக் கீழ்கட்டுமான வசதிகள் பரவலாகக் கிராமிய துறைகளுக்கு விரிவுபடுத்தப்படாமை என்பதினாலும் பொருளாதாரத்தின் கிராமிய துறை மிகவும் தாழ்ந்த மட்ட அபிவிருத்தியைக் கொண்டிருக்கிறது.

மூலதன பற்றாக்குறை, பிரதேசங்களில் காணப்படும் அரசியல் செல்வாக்கு, நிதி வழங்கும் நிறுவனங்களின் அதிக வட்டி வீதம் என்பவற்றைக் கருத்திற்கொண்டு சுயதொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் முகமாக அரசு மற்றும் அரசு சார்பற்ற நிறுவனங்கள் சுயதொழில் முயற்சியாளர்களுக்கு நுண்கடன் மூலம் உதவிக் கடன்களை வழங்கின. சுயதொழிலுக்கான நுண்கடன்கள் வழங்கப்பட்டதன் பின்னர் வறியவர்கள் வறுமையில் இருந்து வெளியேறவும், சிறுதொழில்கள் தொடங்கவும், தமது வருமானத்தைப் பெருக்கிக் கொள்ளவும் காத்திரமான பங்களிப்பினை வழங்கி வருகின்றது.

நுண்கடன்களினைப் பொறுத்த வரையில் அது எந்த விதமான ஒரு செயற்பாடுகளுமின்றி எமக்கு இலகுவில் கிடைக்கக் கூடியதாகவிருக்கின்றது. எனவே இத்தகைய நுண்கடனானது கடனினைப் பெற்றுக் கொள்ளும் பயனாளிக்கு நன்மையினை பெற்றுத் தருகின்றமைக்கு அப்பாலும் நாட்டின் பொருளாதார வளர்ச்சி அபிவிருத்தி, வேலைவாய்ப்பிற்கான சிந்தனையினை தோற்றுவித்தல், முதலீட்டுத் தேவையுடையவர்களுக்கு உதவி புரிதல் எனப் பல எண்ணற்ற பலன்களினைப் பெற்றுத் தருகின்றமையினைக் காணலாம்.

நுண்கடன்களினால் ஏற்படும் பிரச்சினைகள்

நுண்கடன் என்பது நுண்நிதியின் ஒரு அங்கமாகக் காணப்படுகின்றது. அதிகளவான நுண்நிதி நிறுவனங்களினாலேயே நுண்கடன் சேவைகள் வழங்கப்படுகின்றன. எனினும் நுண்நிதி நிறுவனங்களில் காணப்படும் ஒழுங்கற்ற நிதியியல் நடைமுறைகள் காரணமாக இன்று நுண்நிதியியல் நிறுவனங்களும் நுண்கடன்களைப் பெற்றுக்கொள்ளும் மக்களும் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கவேண்டிய நிலை ஏற்படுகின்றது. சிறுகடன்கள் சமூகக் கட்டமைப்பில் மிகப் பாதகமானத் தாக்கத்தினை ஏற்படுத்தும் ஒரு விடயமாக மாறியுள்ளது. நுண்கடன் திட்டங்களானது சமூக, பொருளாதார, உளவியல் ரீதியாக பல தாக்கங்களினை ஏற்படுத்தி விடுகின்றது.ஏதோ ஒரு தேவை கருதி நுண்கடன்களினைப் பெற்றுக்கொள்ளும்போது கடனாளி தாம் பெற்றுக்கொள்ளும் கடனைச் சரியான விதத்தில் கட்டி முடிக்க முடியாத நிலையில் சிக்கலான சூழ்நிலை உருவாக ஆரம்பிக்கின்றது.

சமூகப் பிரச்சினைகள் என்னும்போது நுண்கடன் நிறுவனங்களுக்குக் கடனாளிகளான குடும்பங்களில் காணப்படும் பிள்ளைகளின் கல்வி நிலையானது பாதிக்கப்படுகின்றது. பெண்கள் ஆண்களுக்குக் கீழேதான் வேலை செய்கின்றார்கள். இந்தச் சூழ்நிலையில் குடும்பப் பொறுப்பு முழுவதுமாக இவர்களின் மீதே சுமத்தப்படுகின்றது. இவர்களும் சிறுகடன் திட்டங்களுக்கு வெளியேயான வேலைகளைச் செய்யும்போது வீட்டு வேலைகளைக் குடும்பத்தில் பெண் பிள்ளைகளின் மீது சுமத்துகிறார்கள். இதனால் பெண் பிள்ளைகளினுடைய கல்வி நிலையானது பாதிக்கப்படுகின்றது. இதனைவிடவும் கடன்களினை உரிய திகதியில் செலுத்த வேண்டும் என்பதற்காகவும் பணத்தினைப் பெற்றுக்கொள்ளும் மாற்று வழிமுறையாகவும் ஆண் பிள்ளைகளின் மீது வருமானம் பெறும் சுமையானது சுமத்தப்படுகின்றது. இதனால் ஆண் பிள்ளைகளினது கல்வி நடவடிக்கையானது பாதிக்கப்படுகின்றது.

இன்று சிறுகடன்கள் மூலம் துஷ்பிரயோக செயல்கள் தூண்டப்படுவதனைக் காணலாம். சிறுகடன் திட்டங்களைச் செயற்படுத்தும் முகவர்கள் மூலமாகப் பல்வேறு துஷ்பிரயோகங்கள் இடம்பெறுகின்றன. இன்று வீடுகளுக்கே நேரடியாகச் சென்று கடன்தொகையை அறவிடும் இம் முகவர்கள் கடனாளி கடனை மீள்செலுத்த முடியாத நிலையில் பாலியல் ரீதியாக லஞ்சம் கோரும் விடயங்களில் ஈடுபடுகின்றனர். இது தொடர்பில் இலங்கையின் ஈ.பி.டி.பி செயலாளர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் 2016.11.28ஆம் திகதி பாரளுமன்றத்தில் உரையாற்றும் போது; இலங்கையின் வடக்கு மாகாணத்தில் பெண்கள் இவ்வாறான நிலையினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதற்கு அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தார். மேலும் தற்கொலை என்னும் உயிரினை மாய்த்துக் கொள்ளும் செயலுக்கும் நுண்கடன்கள் காரணமாக அமைகின்றன. தற்போது அதிகமான வங்கிகள் கடனாளி கடனுக்கு விண்ணப்பித்த சிறிது காலத்திற்குள்ளேயே உடனடியாக கடனைக் கொடுத்த விடுகின்றனர். நிறுவன உத்தியோகத்தருக்கும் எவ்வளவு கடன்களைக் கொடுக்க முடியுமோ அவ்வளவு கடன்களைக் கொடுக்கும்படி அழுத்தம் கொடுக்கப்படுகின்றன.

கடன்களினை வழங்கும் நிறுவனங்களுக்கு மக்கள்மீது கவலை இல்லை. இலாபத்தில் மாத்திரமே கவனமுண்டு. பலர் வட்டி மற்றும் கடனைத் திருப்பிக்கொடுக்க முடியாமல் போகும்போது தங்கள் கடமையினைத் தவறிவிட்ட உணர்விலும் நெருக்குதல்கள் ஏற்படும்போது அதற்கு முகங்கொடுக்க முடியாமலும் குழம்பிப்போய் தற்கொலை செய்துகொள்கின்றனர். இதனால் இறந்தவரின் குடும்பம் கவலையுறும். பிள்ளைகளும் பெற்றோர்களினது இச்செயலினால் மிகவும் பாதிக்கப்பட்டு ஆதரவு அற்றவர்களாகச் சமூகத்தில் தூக்கி வீசப்படும் நிலை உருவாகும்.

“சிறுகடன் திட்டங்கள் உண்மையாக வறிய மக்களுக்கு உதவுகிறதா? தலைமைத்தவ நிகழ்ச்சித் திட்டங்கள் மூலமான புதிய சான்று” (Does Microfinance really help the poor? new Evidence from Flagship Programs in Bangladesh) என்ற தலைப்பில் ஐனதன் மோர்டுச் (Jonathan Morduch) அவர்களினால் 1998இல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவினை நோக்குமிடத்து கிராமிய வங்கியானது வறுமையினை இல்லாமல் செய்வதற்கும், வீட்டுத்துறை வருமானத்தை அதிகரிப்பதையும் தனது நோக்கமாகக் கொண்டிருந்த போதும் இத்திட்டமானது வறுமையினை இல்லாமல் செய்யவில்லை. ஏழ்மை நிலைக்கு ஏதுவான நலிவுற்ற தன்மையினைக் ஏற்படுத்திவிடுகின்றது என்பது முடிவாக பெற்றுக்கொள்ளப்பட்டது.( Does Microfinance really Help the poor?, http;//www.cgap.org/blog/does-microcredit-really-help-poor-people 12.12.2017, 4.50 pm)

கடன்களினைப் பெற்றுக்கொள்ள முற்படும்போது கடனாளிகள் பல இடர்களை எதிர் நோக்குகின்றனர். நுண்கடன்களை வழங்கும் நிறுவனங்கள் கடன்களுக்காக விதிக்கும் நிபந்தனைகளைச் சில மக்களால் பூர்த்தி செய்யமுடியாத நிலை காணப்படுகின்றது. எனவே இவர்களினால் கடன் தொகையினைப் பெறமுடியாத நிலை காணப்படுகின்றது. எனவே இவர்கள் தமது தேவையினை நிறைவுசெய்ய முடியாதநிலை ஏற்படுகின்றது. வங்கிகள் வழங்கும் அதி கூடிய வட்டிவீதமும் மற்றும் அதனை செலுத்துவதற்கான தவணைக் காலமும் குறைவாகக் காணப்படுவதனால் கடனைத் திருப்பிச் செலுத்தவதற்காக மீண்டும் வேறுமொரு நிதிநிறுவனத்தில் கடனைப் பெற்றுக்கொள்ளும் நிலையினை உருவாக்கிக் கொடுக்கின்றது. இத்தகைய நிலை கடனாளியை மேலும் கடன் வலைக்குள் சிக்கவைக்கின்றது.

நுண்கடன்கள் பணவீக்க நிலைமைகளினை ஏற்படுத்துவதில் முக்கிய காரணியாகத் திகழ்கின்றன. பணவீக்கம் என்பது நாட்டின் பொதுவிலை மட்டத்தில் ஏற்படுகின்ற தொடர்ச்சியான அதிகரிப்பினைச் சுட்டி நிற்கின்றது. அரசாங்கம் மட்டுமன்றி பொதுமக்களும் பணவீக்கத்தில் அக்கறை கொண்டுள்ளனர். அரசாங்கம் பொதுவாக பணவீக்கத்தினைத் தாழ்நிலையில் வைத்திருக்கவே விரும்புகின்றன. மக்கள் இப்பணவீக்கத்தினால் தமது கொள்வனவு சக்தியில் பாதிப்பு வருமோ என அச்சம் கொள்கின்றனர். பணத்தின் பெறுமதி பணவீக்கத்தினால் குறைவடையும்போது பணத்தினை வைத்திருக்கும் எவரும் பாதிக்கவே செய்வார்கள். பணவீக்கமானது சங்கிலித் தொடர்போல பல பிரச்சினைகளைத் தொடர்ச்சியாக உண்டு பண்ணும். இது செலவுகளை உயர்த்துவதுடன் ஏற்றுமதிகளின் போட்டித் திறனை நலிவடையச் செய்து இறக்குமதிகளின் அளவினைக் கூட்டுகின்றது. இவை இலாபங்கள், முதலீடு மற்றும் வெளியீடு போன்றவற்றிலும் வேலைவாய்ப்பு ஆகிய அனைத்திலும் பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றது.

நுண்கடன்கள் பல உளவியல் ரீதியான மன அழுத்தத்திற்கும் காரணமாக அமைகின்றன. இன்றைய அவசர உலகில் எந்த ஒரு தனிமனிதனும் தன்னை மன அழுத்தத்திலிருந்து விடுவித்துக் கொள்ள முடியாமல் சிக்கித் தவிக்கின்றனர். தாம் ஒரு கடனாளி என்ற உணர்வு தினம் தினம் கடனாளியை வாட்டி எடுக்கின்றது. கடன் தொகையையைக் கட்டி முடித்துவிட வேண்டும் என்ற சிந்தனை நாளுக்கு நாள் கடனாளிக்கு மன அழுத்தத்தைக் கொடுக்கும் போது நாளடைவில் கடனாளியின் உடல்நிலையும் பாதிப்புக்கு உள்ளாகும் நிலைக்கு நுண்கடன்களானது தள்ளி விடுகின்றது.

முரண்பாட்டு நிலையினை தோற்றுவிப்பதாகவும் இவ் நுண்கடன்கள் காணப்படுவதனைக் காணலாம். அந்த வகையில் கடன் வழங்குகின்றவர் மற்றும் கடனினைப் பெற்றுக் கொள்கின்றவர்களுக்கு இடையில் முரண்பாட்டு நிலையினைத் தோற்றுவிக்கின்றது. சிறுகடனை வழங்கும் நிதி நிறுவன முகவர்கள் கடன் தொகையை மீள் பெற்றுக்கொள்ளுதல் என்னும் விடயத்தில் கவனம் செலுத்தவதனையும் கடனாளியின் குடும்பத்தின் நிலைமையினையோஇ அவர்களின் சந்தர்ப்ப சூழ்நிலையினையோ கருத்திற்கொள்ள தவறுகின்ற நிலையில் கடன் தொகையினைக் கட்ட முகவர்கள் இறுக்கமான முறையில் செயற்படுவதானாலும் கடனாளி கடனைக் கட்ட முடியாத நிலையிலும் இருவருக்கிடையிலும் முரண்பாடானது ஏற்படுகின்றது.

மேலும் குடும்ப உறுப்பினர்களுக்கு இடையிலும் முரண்பாடு தோன்றுகின்றது. குறிப்பாகக் கணவன் மனைவிக்கு இடையிலே முரண்பாடு உருவாகின்றது. அதாவது நுண்கடன் நிறுவனங்களுக்கு அதிகளவில் கடனாளிகளாக மாறுகின்றவர்கள் ஒப்பீட்டளவில் பெண்களாகத்தான் காணப்படுகின்றார்கள். எனவே பெண்கள் கடனைப்பெற்று ஏதோ ஒரு தேவைக்காக அதனைப் பயன்படுத்தியிருப்பர். கடன்தொகை கட்ட ஆரம்பித்த பின்னர் அந்த கடன் தொகைக்கான பணத்தினைச்செலுத்துவதற்கு மனைவி கணவனிடம் பணம் கேட்கும்போது கணவனிடம் பணம் இல்லாத நிலையில் இருவருக்கிடையிலும் முறிவு ஏற்படத் தொடங்குகின்றது. சில வேளைகளில் கணவனுக்குத் தெரியாமல் மனைவி கடன்பெறல் அல்லது மனைவி வேறு ஒரு நபருக்குக் கடன் தொகையினைப் பெற்றுக்கொடுத்தல் என்றவாறு பல காரணங்களினால் குடும்பத்தில் சச்சரவுகள் ஏற்படுகின்றன.

எந்தவொரு கடனைப் பெறும்போதும் ஒரு நபரோ அல்லது இரு நபரோ குறித்த கடனாளிக்குப் பிணையாகச் சாட்சி கையொப்பமிடும் நிலை காணப்படுகின்றது. எனவே இவ்விதம் சாட்சி கையெழுத்திடும் நபர் கடனாளியின் மீது நம்பிக்கையின் அடிப்படையில் குறித்த நபருக்குப் பிணை நிற்கின்றார். கடன்தொகை பெறப்பட்ட பின்னர் தவணை முறைகளில் கடன் தொகையானது கடனாளியினால் சரியான முறையில் செலுத்த தவறுகின்ற பட்சத்தில் குறித்த நுண்கடன் நிறுவனமானது கடனாளியைக் கடனைக் கட்டி முடிக்குமாறு பணிக்கும். அவ்வாறு கடனாளி கடன் தொகையினைக் கட்ட தவறுகின்ற பட்சத்தில் குறித்த கடனாளிக்குப் பிணையாக இருந்த நபர் கடன் நிறுவத்தின் அழுத்தங்களுக்கு உட்படுகின்றார். இதனால் கடனாளிக்கும் மற்றும் கடனாளிக்குப் பிணையாக இருந்தவருக்குமிடையே பிணக்குத் தோன்றுகின்றது.

கடனாளியினால் கடன் தொகையினைக் கட்ட இயலாத நிலையில் அவர் கடன் பெற்றுக் கொண்ட நிறுவனத்தின் மோசமான செயற்பாடுகளுக்கு உட்பட வேண்டிய நிலை உருவாகின்றது. இதனால் கடனாளி, ஏமாத்துக்காரர் என்கின்ற பட்டம் சூட்டப்பட்ட நிலையில்தான் வாழும் நிலை உருவாகின்றது. இதனைவிடவும் மதுபாவனையின் பாதிப்பும் சமூகத்தினைப் பாதிக்கின்றது. மனைவி கடனினைப் பெறும்போது கணவன் அதனைத் தவறான முறையில் மதுபாவனையில் மூழ்கிக் கரைத்துவிடுகின்றான். இதனால் ஒட்டு மொத்த குடும்பமும் இதனால் பாதிக்கப்படுகின்றது.

அறியாமையினால் தமது வருமானத்தை மீறிக் கடனைப் பெற்றுக் கொள்வதனால் கடனில் இருந்து இருந்து மீள முடியாத நிலை உருவாகிறது. அதாவது நுண்கடன் நிறுவனங்களினது விண்ணப்பங்கள் மற்றும் விதிமுறைகள் என்பன ஆங்கில மொழியிலே காணப்படுவதனால் நுண்கடன்களைப் பெற்றுக் கொள்கின்ற மக்கள் குறித்த நிறுவனத்தின் கடன்தொகை தொடர்பான பூரணமான விளக்கத்தினைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலையானது காணப்படுகின்றது. எனவே எல்லோரும் கடன் எடுக்கின்றார்கள் நாமும் கடனைப் பெறலாம் என்ற ஆசை தூண்டப்பட்ட நிலையில் கடனுக்குள் போய் சிக்கிக் கொள்கின்றனர். கடன் தொகையினைக் கட்ட ஆரம்பிக்கின்ற போதுதான் உண்மையான நிலையினைக் கண்டு கொள்கின்றனர்.

தம்முடைய வழமையான வருமானத்தினைக் கொண்டு கடன் தொகையினைக் கட்டவும் முடியாமல், கடன் தொகையில் இருந்து மீளவும் முடியாமல், குடும்பத்தினைக் கொண்டு சரிவர நடத்தவும் முடியாமல் அல்லல்படுகின்றனர். கடன்களைப் பெற்றுக் கொள்கின்ற கடனாளிகளின் குடும்பத்தினுடைய எதிர்கால பணத்துடன் தொடர்புடைய நல்ல திட்டங்களானது பாதிக்கப்படும். கடன்களில் சிக்கித் தவிப்பதனால் பெற்றோர்கள் தமது பிள்ளைகளுக்குக் கூட போசாக்கான உணவினைக் கொடுக்க முடியாத நிலையில் காணப்படுவர். இவ்வாறு பல்வேறுபட்ட பாதகமான தாக்க விளைவுகளினை நுண்கடன்கள் ஏற்படுத்துகின்றது.

தீர்வுகள்

நுண்கடன் ஏற்படுத்தும் பாதகமான தாக்க விளைவுகளுக்கு நுண்கடன் நிறுவனங்களும் மற்றும் கடனாளியும் இவ் மோசமான பிரச்சினையில் இருந்து மீள்வதற்கான உபாயங்களினைக் கண்டு அதற்கேற்பச் செயற்பட வேண்டும். நுண்கடன்களினைப் பொறுத்த வரையில் நுண்கடன் திட்ட நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்குப் போதியளவான விரிவாக்கமான செயற்றிட்டங்களினைக் கொண்ட உறுதியானதும், வினைத்திறன் மிக்கதுமான நுண்பாக நிதியியல் முறைமையொன்று காணப்படுதல் வேண்டும். அவ்வாறான பலம் பொருந்திய நுண்பாக நிதியியல் நிறவன முறை உருவாகுவதற்கு அந்நிறுவனங்கள் சிறந்த நுண்பாக நிதியியல் நடைமுறைகளைக் கடைப்பிடித்தல் அவசியமாகும்.

அநேகமான நுண்பாக நிதி நிறுவனங்கள் தாம் வழங்குகின்ற கடன்களுக்கு அதிக வட்டியை அறவிடுகின்றன. நிதியங்களைத் திரட்டுவதற்காக ஏற்கவேண்டி நேரிடுகின்ற அதிக செலவீனம், இடநேர்வு தவணைத் தொகைகள் (Margin & Risk) ஆகிய காரணிகள் அதிக வட்டி அறவிடுவதற்குக் காரணமாக அமைகின்றன. அந்த அனைத்து காரணிகளையும் கருத்திற் கொண்டு வட்டி வீதத்தினைத் தீர்மானிக்கின்ற முறையியல் ஒன்றை அமைப்பதன் மூலம் கடன்பட்டோருக்குப் பாதிப்பு ஏற்படாத விதத்திலும் நிறுவனத்திற்கு நட்டம் ஏற்படாத வகையிலும் சமநிலையான விதத்தில் ஆராய்ந்து வட்டி வீதத்தைத் தீர்மானிப்பதற்கு இயலுமாயிருக்கும்.

மேலும் கடனாளிகளினைப் பொறுத்தவரையில் அவர்களின் நோக்கம் கடனைப் பெற்று அதனைக் கொண்டு தங்களினது நோக்கத்தை நிறைவு செய்து கொள்வதேயாகும். பெரும்பாலான நேரங்களில் கடனாளிகள் தாம் பெற்றுக் கொள்ளும் கடனுக்கான வட்டி வீதங்களை அறியாத நிலையே காணப்படுகின்றது. எனவே கடன்பட்டோர் தாம் செலுத்தும் வட்டி வீதத்தைத் திட்டவட்டமாக அறிந்து கொள்ளும் பொருட்டு அந்த வட்டி வீதங்களை ஆண்டு வட்டி வீதங்களாகக் காட்டுதல் முக்கியமானதாகும். ஒவ்வொரு வகைக் கடனுக்கும் அறவிடுகின்ற வட்டி வீதங்களைப் பொது மக்கள் அறிந்து கொள்ளும் பொருட்டு ஆவணமாக வெளியிடுதல் வேண்டும்.

கடன் அறவிடும் தகுந்த முறையியல்களை அமைத்தல் மற்றும் அது தொடர்பில் பகிரங்கத் தன்மையுடன் கூடியதாகச் செயற்படுதல். இதன் மூலம் வாடிக்கையாளர்களுடைய நலன் உறுதி செயற்படும் என்பதோடு கடன் அறவிடும் பொருட்டு ஆக்கிரமிப்பு ரீதியிலான கொள்கைகளைக்கடைப்பிடித்தல் தொடர்பில் நுண்பாக நிதியியல் நிறுவனங்கள் மீது விடுக்கப்படுகின்ற குற்றச்சாட்டுக்களை இவ்வாறான கொள்கைகளின் ஊடாக குறைத்துக்கொள்வதற்கு இயலுமானதாகவிருக்கும். கட்டாய சேமிப்புக்களை அல்லது காப்புறுதித் தவணைத் தொகைகளைக் கடனாளியிடமிருந்து அறவிடாதிருத்தல். கடன்பெறும் பொருட்டு மேற்கொள்ளப்படுகின்ற கட்டாய சேமிப்புக்கள் தொடர்பில் குறைந்தபட்ச வட்டி வீதங்களைத் தீர்மானித்து அவற்றினை வெளியிட வேண்டும். அத்தோடு கடனுக்கான வட்டி வீதங்களைக் குறைத்து செல்கின்ற மீதிக்கு கணிப்பிட வேண்டும்.

குடும்ப பின்னணியைக் கருத்திற் கொண்டு பிள்ளைகள் பாடசாலை இடைவிலகல், சிறுவர்கள் தொழிலுக்குச் செல்லுதல் போன்ற சட்ட ரீதியான தண்டனைக்குரிய விடயங்களைக் கருத்திற் கொண்டு கடன் கொடுத்தல் தொடர்பான நிபந்தனைகளை உருவாக்குதல் வேண்டும். நுண்கடன் வழங்கும் நிறுவனங்கள் குடும்பப் பின்னணியையும் நிபந்தனைகளில் ஒன்றாகச் சேர்க்க வேண்டும். கணவன் மனைவிக்கிடையில் கடன்தொகை சார்பான கூட்டுப் பொறுப்பினை ஏற்படுத்தும் வண்ணம் நிபந்தனைகளை விதிக்க வேண்டும். நுண்கடன்கள் தொடர்பாகப் பெண்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். கடன் திட்டங்களை அமுல்படுத்தும்போது இதற்கென ஒரு அரச அதிகாரி ஒருவர் பொறுப்பாக்கப்பட வேண்டும். பொறுப்பாக்கப்பட்ட அதிகாரி கடன் திட்டம் தொடர்பான நிபந்தனைகள் சரிவர விளக்கப்படுகின்றதா?, வட்டி வீதங்கள், அறவீட்டுப் பணம் தொடர்பில் சரிவர தெளிவுபடுத்தப்பட்டுள்ளதா? மற்றும் அது தொடர்பான சட்ட ரீதியான நடைமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளதா? என்பன தொடர்பில் பொறுப்புக்களைக் கொண்டிருக்க வேண்டும்.

வழங்கப்பட்ட கடன் குறிப்பிட்ட நோக்கத்தை அடைகின்றதா என்பதைக் கண்காணித்தல். அத்தோடு கடன்களைக் கூடுமானவரை பகுதியளவில் வழங்குதல். நுண்கடன் வழங்கும் நிறுவனங்கள் சுயதொழிலுக்கான கடன்களை வழங்கிய பின்னர் அது தொடர்பான பார்வையிடலுக்கான பொறிமுறைகளைச் செயற்படுத்தல். நிதி நிறுவனங்கள் சட்டவிரோதமாகச்செயற்படும் தமது பணியாளர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்வதற்கு நிதிநிறுவனங்கள் முன்வர வேண்டும். மேலும் கடன் வழங்கும் நிறுவனம் சார்ந்த அதிகாரிகளுக்கும், குடும்ப உறுப்பினர்களுக்குமிடையிலான உறவு முறையில் சீரான தன்மையினைப் பேணக்கூடிய பொறிமுறையினை ஏற்படுத்துதல். மனிதாபிமானமற்ற தரக்குறைவான நடத்துகின்ற தன்மை போன்றவை மனித உரிமை சார்ந்த விடயங்களுக்கு ஊடாக முன்னுரிமைப்படுத்தப்படல் வேண்டும். இவ்வாறான தீர்வுகளினைச் சரிவர முன்னெடுக்கப்படுகின்ற போது நுண்கடன் என்னும் பாதகமான தாக்க விளைவுகளில் இருந்து சமூகத்தினையும் மற்றும் நாட்டினையும் பாதுகாக்க முடியும்.

முடிவுரை

அபிவிருத்தியுடன் கூடிய நாட்டினைக் கட்டியெழுப்புவதில் நுண்கடன்களின் பங்கு இன்றியமையாததாகக் காணப்படுகின்றது.மக்களது வாழ்க்கையில் இவ் நுண்கடன்கள் மூலம் பல முன்னேற்றகரமான செயற்றிட்டங்கள் நடந்தேறியுள்ளது. வறுமைக் கோட்டின்கீழ் வாழ்வோரின் வறுமையினை அரைப்பங்காக குறைப்பதற்கான மிலேனிய அபிவிருத்தி திட்ட குறிக்கோள்களை அடைய நுண்கடன் திட்டமானது உதவுவதாக இருந்தாலும் இன்றைய காலகட்டத்தில் பல்வேறு சமூக மற்றும் பொருளாதார ரீதியான பல பிரச்சினைகளின் உருவாக்கத்திற்கும் அதிகரிப்பிற்கும் வழிசமைக்கும் காரணியாக உருவாகியுள்ளமை நடைமுறை உண்மையாகின்றது. நுண்கடன் என்னும் மாயை வலைக்குள் பகுத்தறிவு கொண்ட மனிதர்கள் தெரிந்தும், தெரியாமலும் வீழ்ந்து கொள்கின்றனர். நுண்கடன் மூலம் ஏற்படுகின்ற பாதகமான தாக்க விளைவுகளினைச் சர்வசாதாரண விடயமாக கருதிவிடக் கூடாது. அதற்குத் தக்க நடவடிக்கைகளை எடுப்பதன் மூலமே சரியான ஒரு அவிபிருத்தியுடன் கூடிய நாட்டினை கட்டியெழுப்ப முடியும்.

துணைநின்றவை

 • அமலநாதன் எஸ், (2006), “சிறுகடன்”, குமரன் பதிப்பகம், கொழும்பு.
 • இராசேந்திரன் ரா. (2000), “சமூகப்பிரச்சினைகள்”, அண்ணாமலை பல்கலைக்கழகம், ஆக்சப் செட் பிரின்ரஸ், ஃபாவா முதலியார் தெரு, சிதம்பரம்.
 • பைசல் எம்.எஸ்.எம், (2000), “அபிவிருத்தி – ஒரு நோக்கு”, பூபாலசிங்கம் புத்தக சாலை, கொழும்பு – 11
 • விக்னராஜா.பொன், “பெண்கள் வறுமை கடன் வாய்ப்பு”, ஐக்கிய நாடுகள் பல்கலைக்கழகம், தென் ஆசிய இயலுறுத் தோற்றங்கள் திட்டம்.
 • காஞ்சனா ஆரியசிங்க, (மார்ச்ஃஏப்பிரல் – 2013), “சிறந்த நுண்பாக நிதியியல் நடைமுறைகள்”, குறிப்பேடு
 • Tazul Islam, (2007), Micro Credit poverty Alleviation”, Ashgate Publishing Limited.
 • Thomas Fisher, Sriram.M.S, (2002), “Beyond Micro Credit Putting Development Back”, Vistar Publication.
 • Chalangani and Ariyawadana, (2007), Analysis of Lending by Public and Private Micro – Financial Institution To Enterprises In Nuwara Eliya: Sabragamuwa University Journal.
 • உயிர் கொல்லும் நுண்கடன் battinews.com/?m=1 (18/12/2017) 6.40 pm
 • நுண்கடனால் நிர்க்கதியாகும் மக்கள்keetru.com (18/12/2017) 8.30 am.
 • வறியவர்களின்இரத்தம்குடிக்கும்நுண்கடன்என்னும்அரக்கன், m.dailyhunt.in/news/india/tamil/dinamani-epaper-dinamani (20/12/2017) 9.45 pm.
 • http://m.youtube.com/#watch?v=0y-4zLDQAxc (14.01.2018) 7.25 am.

வி.வசந்தா

கலைமாணி மாணவர், பொருளியல் துறை

கலை கலாசார பீடம், கிழக்குப் பல்கலைக்கழகம்

இலங்கை.