நாட்டுப்புறவியல் என்னும் சமூக அறிவியல் துறைக்குக் கள ஆய்வு இன்றியமையாதது. கள ஆய்வு என்பது களம் தரவு என்ற இரண்டின் அடிப்படையில் அமைகிறது. மக்கள் கூட்டத்தையும் அவர்களது வாழ்வியல் நடத்தைகளான வழக்காறுகளையும் கொண்டுள்ள ஒரு பருண்மையான இடப்பரப்பே களம் ஆகும். களம் என்பது ஆய்வுக்கான தரவுகளைக் கொண்டிருப்பது மட்டுமின்றி அது எந்த நேரமும் உயிர்ப்புடன் இருக்கும் ஒரு குழு வாழ்ந்துவரும் இடப்பரப்பும் ஆகும் (ச.பிலவேந்திரன், 2001.26.27) தரவுகள் மக்களின் வாழ்வியலோடு நெருங்கியத் தொடர்புடையவை. ஒரு குறிபிட்ட வரலாறு தொடர்பான ஆய்வுகளுக்கு அவ்வழக்காறு காணப்படும் களத்தின் பின்னணி இன்றியமையாதது. எனவே திருநெல்வேலி மாவட்டத்தில்   கங்கைகொண்டான் பஞ்சாயத்துக்குட்பட்ட இராஜபதி கிராமத்தில் உள்ள மாரியம்மன் வழிபாட்டு மரபுகளையும் பண்பாட்டுக் கூறுகளையும் ஆய்வதாக இக்கட்டுரை அமைகிறது.

கோயில் அமைவிடம்

    திருநெல்வேலி மாவட்டத்தில் மானூர் ஊராட்சி ஒன்றியத்திலுள்ள கங்கைகொண்டான் பஞ்சாயத்துக்குட்பட்ட இராஜபதி கிராமம் ஆய்வுக்குரிய களமாகும். இக்கிராமம் திருநெல்வேலிலிருந்து 19கி.மீட்டர் தொலைவில் மதுரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கங்கைகொண்டானுக்கு மேல்புறம் அமைந்துள்ளது. இவ்வூரின் அருகில் சித்ரா நதி என்றழைக்கப்படும் சிற்றாரும் தென்கிழக்கே சீவல்லபேரி வடகிழக்கே பராக்கிரமப்பாண்டியன் மன்னன் கட்டிய குளம், கன்னடியன் மடை, கயத்தார்   மேற்கே இராணி மங்கம்மாள் சாலையின் அருகே ஐவர் ராஜா கோவிலும் கிழக்கே 100மீட்டர் தொலைவில் கங்கைகொண்டான் சிவன் கோயிலும்   மன்னன் வெங்கலராஐா கோயிலையும் எல்லைகளாகக் கொண்டு அமைந்துள்ளது.

மாரியம்மன் உருவம்

     ‘மாரி‘ என்ற சொல்லுக்கு ‘மழை‘என்று பொருள். வெப்பத்தைத் தணிவித்து வெப்புநோயான அம்மை முதலியவற்றைப் போக்கி நாடு தழைக்கச் செய்து மக்களை மழை போல் இத்தெய்வம் காப்பாற்றுகிறது என்று கருதி மக்கள் இத்தெய்வத்திற்கு மாரியம்மன் எனப் பெயரிட்டனர் என்று சிறப்புப் பேரகராதி (ப.563) குறிப்பிடுகிறது. மாரியம்மன் வழிபாடு பண்டைய தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப்படவில்லை என்றாலும் தமிழ்நாட்டில் மாரியம்மன் வழிபாடு இருந்ததற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. மாரி என்பது தூய தமிழ்ச் சொல் என்பதாலும் மாரியம்மன் வழிபாடு தமிழ்நாட்டில் பழங்குடி மக்களிடையே இருந்தது (மேலது, ப.553) என்றும் சிறப்புப் பேரகராதி குறிப்பிடுகிறது.

அவ்வகையில், இவ்வூரில், மாரியம்மன் கற்சிலை இரண்டு அடி உயரத்தில் வலது காலை மடக்கி இடது காலைத் தரையில் ஊன்றி சிம்மவாகனத்தில் நான்கு கைகளில் ஒவ்வொரு கையிலும் சூலாயுதம், கப்பறை, ஈட்டி, உடுக்கை போன்றவற்றைக் கொண்டு, அமர்ந்துள்ள வடிவத்தின்மேல் ஐந்து அடி உயர மூங்கில் பிரம்பு ஒன்று சாத்தி வைக்கப்பட்டுள்ளது (இது பேய் பிடித்தவர்களை விரட்டுவதற்காகச் சாத்தி வைக்கப்பட்டுள்ளது என்று கூறுகின்றனர் இவ்வூர் மக்கள்).

மாரியம்மன் பற்றிய வாய்மொழிக் கதைகள்

     கங்கைகொண்டான் கி.பி. 12ஆம் நூற்றாண்டில் ஸ்ரீவல்லபாண்டிய மன்னனின் ஆட்சியின் போது. அங்குள்ள சிவன் கோயில் ஒன்று கட்டி முடிக்கப்படாத நிலையில் இருந்தது. அப்போது மன்னன் எண்ணிய காரியம் நிறைவேறியதால் கோட்டை கட்டி கொடிமரம் நாட்டி குடமுழுக்கு நடத்த அரசன் ஆணையிட்டுள்ளான். அதன்பேரில் கொடிமரம் ஆரியங்காவு மலையில் இருந்து வெட்டி வர பல இன்னல்களைக் கடந்து வந்தபின் வேள்வி வளா்க்கப்படுகிறது. அவ்வேள்வியில் கோபமாக எழுந்து வந்த மாரியம்மன் கங்கைகொண்டான் சிவனிடம் இடப வாகனத்தில் அமர இடம் கேட்க அதற்குச் சிவன், பார்வதி இருக்கும்பொழுது உனக்கு இடம் இல்லை. நீ மாமிசத்தை விரும்புபவள். ஆகையால் இராஜபதி கிராமத்தில் என் மக்களோடு (காலாங்கரையான் கோயில்) மக்களாய் அவர்களுக்குத் தாயாக இரு என்று கூறி அனுப்பி வைத்ததாகவும் கதை கூறப்படுகிறது. கோபமாக வந்த மாரியம்மன் வடக்கு நோக்கி அமர்ந்து இராஜபதி கிராம இடையர் குலத்திற்குச் சொந்தமான ஆடு, மாடுகளுக்கு சேதம் விளைவிக்க, இதைக் கண்ட இராஜபதி காவல் தெய்வமான காலாங்கரையான், ஊருக்குள் உன்னை நுழையவிட்டால் என் மக்களை அழித்துவிடுவாய் என்பதை அறிந்து, மாரியம்மனிடம் “நீ வந்த திசை நோக்கி உட்கார்” என்றாராம். “நான் வந்த திசை நோக்கி உட்கார வேண்டுமானால் எனக்கு அறுபத்தொரு நரபலி வேண்டும்” என்று மாரியம்மன் கேட்டாளாம். அதற்குக் காலாங்கரையான் “உனக்கு வருடந்தோறும் அறுபத்தொரு நரபலி கொடுக்க முடியாது. வந்த திசைநோக்கி உட்கார்ந்தால் என் வீட்டில் முதல் பங்கும் பூசையும் தருகிறேன்” என்று கூறி வடக்கு நோக்கி இருந்தவளைத் தெற்கு நோக்கி அமர வைத்தாராம் காலாங்கரையான். அன்றிலிருந்து காலாங்கரையானால் கொடுக்கப்பட்டு வந்த முதல் ஊட்டும் முதல் பூசையும் மாரியம்மனுக்குக் கொடுக்கப்படுகிறது. வைகாசி மாதத்தில் நடைபெறும் இக்கொடைவிழாவை இன்றும் காலாங்கரையான் ஊர்க்கொடை விழா என்றே அழைக்கின்றனர். ஆனால் கொடை விழா சடங்கு முறைகள் முதலில் மாரியம்மனுக்கே முதல் ஊட்டும் முதல் பூசையும் கொடுக்கப்பட்டு கொடை முடிவில் காலாங்கரையானிடம் மாரியம்மன் சாமியாடிகள் கும்பம் தூக்கி “உன் பூசையைப் பரிபூர்ணமாக ஏற்றுக் கொண்டேன்” என்று கூறுவதோடு கொடை விழா நிறைவுபெறுகிறது. இம்மரபைமீறி காலாங்கரையானுக்கு முதல் பூசை நடத்தினால் மாரியம்மன் கொடையை ஏற்கமாட்டாள் நடத்தவிடமாட்டாள் என்பது இவ்வூர் மக்களின் நம்பிக்கை.

கோயிலின் அமைப்பு

மாரியம்மன் தெற்கு நோக்கி தனிச்சன்னிதியில் அமர்ந்துள்ளாள். சன்னிதியின் வலதுபுறத்தில் கோட்டைச் சுவர் உள்ளது. கோட்டைச்சுவரின் உள்ளே தனிச்சன்னிதியில் காலாங்கரையான் (குத்துக்கல்) கல் பீடமாக 3 அடி உயரத்தில் உள்ளது. அதன் வலது புறத்தில் புதுமாடன், அக்கினிமாடன், பாதாள கண்டியம்மன், பேச்சியம்மன், புதியவன் மற்றும் இடது புறத்தில் காலாங்கரையான் மாறு வேடம் அதாவது சந்நியாசி கோலத்தில் தெற்கு நோக்கி அமர்ந்துள்ளார். இத்தெய்வங்களைச் சுற்றிலும் கோட்டைச் சுவர் உள்ளது. அக்கோட்டைச் சுவரின் வாசல் ஒருவர் மட்டும் சென்று வருவதற்காக வழி அமைக்கப்பட்டுள்ளது. தொடக்க காலத்தில் காலாங்கரையானுக்கு ஆகமவிதிப்படி பிராமணர்களால் பூசையும் வழிபாடும் செய்யப்பட்டு வந்ததாலும் பிற சாதியினர் கோட்டைச் சுவரின் உள்ளே சென்று வணங்க அனுமதி மறுக்கப்பட்டதாலும் வாசலின் அமைப்பு சிறியதாக உள்ளது என்று இவ்வூர் மக்கள் கூறுகின்றனர். சிறிது காலத்திற்குப் பின் காலாங்கரையான் அசைவப் பலி கேட்க, பூசைகள் இராஜபதி யாதவ குல மக்களிடம் கொடுக்கப்பட்டது. ஆகையால் தான் இக்கோயிலில் கொடிமரம் கிடையாது போலும். கோட்டைச் சுவருக்கு வெளியே காலாங்கரையானுக்கு நேர்எதிரில் புதுமாடன், குஞ்சுச்சுடலை, நந்தி, மாசானம், பூரணவல்லி பலவேசக்காரன், மாடதேவதை, கருப்பன், முத்துமாடன், வண்ணாரமாடன் பின்புறத்தில் சாவாட்டி (கோயிலின் பக்தர், சாமி கும்பிடும் போது இறந்தவர்) பீடம் இடது புறத்தில் சீவல்லபேரி, சுடலைமாடன், பேச்சியம்மன், கோட்டைச்சுவருக்கு வெளியே ஆனந்தவல்லி, 20 அடி தள்ளி சின்னத் தம்பி, மாடக்கோனார் பீடம் – ஒவ்வொன்றும் மாரியம்மனைப் போல வரம் வாங்கி ஒவ்வொரு தெய்வம் வேறுவேறு திசையை நோக்கி வேறு வேறு படையலுடன் பூசையும் நடத்தப்பட்டு வருகிறது.  இக்கொடை விழா கோனார், பிள்ளைமார், பிராமணர், மறவர், செட்டியார், வண்ணார், சக்கிலியர், குயவர் போன்ற சாதியினரால் வழிபாடு செய்யப்பட்டு வருகின்றது.

ஊர்க்கொடை (ஆருத்ராம் கொடை)

ஊர் மக்களால் நடத்தப்படுவது ஊர்க்கொடை விழா.  இக்கொடைவிழா ஆரம்பத்தில் காலாங்கரையானுக்கு மட்டுமே நடத்தப்பட்டு வந்துள்ளது. மாரியம்மன் வந்ததும் முதல் ஊட்டும் முதல் பூசையும் மாரியம்மனுக்குக் கொடுக்கப்பட்ட பின்னரே காலாங்கரையானுக்கும் அதனைத் தொடர்ந்து பிற தெய்வங்களுக்கும் வரிசையாக நடத்தப்படுகிறது. இத்தெய்வத்தின் கொடை விழாவிற்கு “ஆருத்ராம் கொடை” என்ற பெயரும் உள்ளது. மாரியம்மன் வந்த அன்று 61 நரபலி கேட்டதால் அதற்கு மாற்றீடாக 61 கிடாய்கள் மட்டுமே பலியிடப்பட்டு வந்த மாரியம்மனுக்கு தற்பொழுது 500க்கும் மேற்பட்ட கிடாய்கள் வெட்டப்படுகின்றன என்று கூறுகின்றனர் இவ்வூர் மக்கள்.

நோன்பு போடுதல்

ஊர்க்கொடை விழா வைகாசி – திங்கள் கிழமை தொடங்கி மூன்றாம் நாள் புதன்கிழமை மதியம் வரை நடைபெறுகின்றது. கொடை விழா நடத்தப்படுவதற்கு முன் நோன்பன்று இரவு ஏழு மணிக்கு ஊரின் நடுவே உள்ள கோயில் வீட்டில் உள்ள காலாங்கரையான் சாமியிடம் ஊர் நாட்டாண்மை வந்து காணிக் கையிட்டு “கொடையை நல்லபடியாக நடத்திக் கொடுப்பா” என்று கூறுவார். அதற்கு காலாங்கரையான் சாமியாடி “நல்லபடியாக் கொடையை நடத்தித் தாரேன்ப்பா என்று கூறி திருநீறு வழங்குவதை நோன்பு போடுதல் என்பர். நோன்பு போட்ட நாள்முதல் கோயில் கோமரத்தாடி (பிள்ளை) காலாங்கரையான் சாமியாடி (சங்கு கோனார்) மாரியம்மனுக்குக் கும்பம் எடுக்கும் வகையறா, அரண்மனைப் பானை பொங்கல் வைக்கும் வகையறா, கிடாய் வெட்டுவோர் வகையறா, மண்கலயம் செய்து தருவோர் வகையறா, மாபிள்ளை, மஞ்சனப் பிள்ளையை வைக்க சொளவு செய்து தரும் ஆசாரி மற்றும் கொத்தனார் வகையறா, மாத்து விரிப்பு தரும் வண்ணார் மற்றும் சக்கிலியர் போன்றோர் விரதம் மேற்கொண்டு கொடை விழாவை நடத்துகின்றனர்.

ஐவர் ராசாவை வணங்குதல்

கங்கைகொண்டான் இராஜபதி கிராமத்தில் புதுமாடன், மாரியம்மன், பன்றிமாடன், முத்துமாடன், காலாங்கரையான் ஆகியோர் ஐவர் என அழைக்கப்படுகின்றனர்.  இவ்வூரில் எந்தத் தெய்வத்திற்குக் கொடை விழா நடத்தினாலும் முதலில் ஐவர் ராசாவுக்கு (குலசேகர பாண்டிய மன்னன்) முதல் பூசையும் செங்கிடாய் பலி, அரண்மனைப் பானைப் பொங்கல் வைத்துப் படையிலிட்டுப் பூசை நடத்திய பின்னரே கொடைவிழாவை நடத்துகின்றனர். இவர் நிறைசூலியைப் பலி கேட்டதால் ஊர் மக்கள் எல்லாம் ஒன்று கூடி எங்களால் வருடந்தோறும் நிறைசூலியைப் பலி கொடுக்க முடியாது. நாங்கள் உன் கோட்டைக்குள் எந்த கோவிலில் கொடை விழாவை நடத்தினாலும் உனக்கு முதல் பூசையும் பலியும் தருகிறோம் என்று கூறியதால், இன்றும் இம்மரபு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. நிறைசூலியைப் பலி கேட்டதற்கான காரணம் அறிய இயலவில்லை. மாரியம்மன் கொடை விழாவன்று இரவு ஏழு மணிக்கு அனைத்துச் சாமியாடிகளும் தலைமைத் தெய்வமாக இருக்கும் ஐவர் ராசாக் கோவிலுக்கு வருகின்றனர். ஐவர் ராசா கோயிலை வழிபடுவோர் பொம்மையாத் தேவர் வகையறாக்களே ஆவர். அவர்களை இராஜபதி கோனார் சாதியினர், காலாங்கரையான் கோவில் சாமியாடிகள் சுருள்முறி கொடுத்து அழைக்கின்றனர். அதன்பின்னரே ஐவர் ராசாவுக்கு, அதனருகில் உள்ள கைலாசநாசா் (சிவன்), ஆனந்தவல்லி (பிராமண குலத்தைச் சார்ந்த பெண்) பூசையும் நடத்தப்பட்டு சைவப் படைப்பும் காவல் தெய்வங்களுக்குச் செங்கிடாய் பலியும் கொடுக்கப்பட்டு, பின்னரே மாரியம்மனுக்குப் பூசை நடத்த மேளதாளத்துடன் ஊர் எல்லையில் காலாங்கரையான் கட்டுப்பாட்டில் இருக்கும் மாரியம்மனுக்குக் கொடை விழா நடத்துகின்றனர்.

தடியங்காய் பலி

மாரியம்மன் கோயிலின் வடபுறம் கோயில் பூசாரி முழுத் தடியங்காயை எட்டுத் துண்டாக வெட்டி, குங்குமம் சந்தனம் தடவி தீபாராதனை காட்டி, சீவலப்பேரி சுடலைமாடன் கோமரத்தாடி கையில் நான்கு துண்டும், காலாங்கரையான் சாமியாடி கையில் நான்கு துண்டும் கொடுத்து அனுப்ப, கணியான் மகுடம் தட்டி, சாமியாடிகளை வரவழைத்து மூன்று முறை கோயிலைச் சுற்றி வரச் செய்து, முதல் சுற்றில் நான்கு துண்டு தடியங்காயையும் இரண்டாம் சுற்றில் நான்கு துண்டு தடியங்காயையும் மூன்றாம் சுற்றில் எலுமிச்சம்பழமும், முட்டையும் பலியிட்டுத் திரும்பிப் பார்க்காமல், கை, கால், முகம் கழுவி கோயிலுக்குள் வருவர். இப்பலி நரபலிக்கு மாற்றீடாகக் கொடுக்கப்படுவதற்காக என்று கூறுகின்றனர்.

மாரியம்மன் கும்பம் ஊர்சுற்றி வருதல்

மாரியம்மன் சாமியாடிகள் மூவரும் ஊருக்குள் இருக்கும் மாரியம்மன் கோவிலிருந்து கும்பம் எடுத்து வந்து மாரியம்மனிடம் கும்பத்தை இறக்கிய பின்னரே பூசை ஆரம்பமாகிறது. ஊருக்குள் சாந்தமாக இருக்கும் மாரியம்மன் கொடைவிழாவன்று முளைப்பாரியும் கோபமாக வந்தமர்ந்த எல்லை மாரியம்மனுக்குக் கும்பமும் சிறப்பம்சமாகக் கருதப்படுகிறது.

வாகனச் சீலை கும்பிடுதல்

தெய்வங்களின் உருவப்படங்கள் வரைந்த வாகனச் சீலை ஒன்று சிதைந்த நிலையில் உள்ளது. அச்சீலையை மூன்று முறை திருப்பி, தந்தன தந்தன எனப் பாடிக்கொண்டு சாமியாடிகள் அனைவரும் உருண்டு வணங்குகின்றனர். இதனை சத்தியம் செய்வதற்கு ஒப்பு என்கின்றனர். சத்தியம் செய்வதற்கான காரணம் அறிய முடியவில்லை. அதன்பின் மாரியம்மனுக்குச் செங்குட்டியைச் சரிவாகப் படுக்கப் போட்டு கழுத்தைத் துண்டாக அறுத்துப் பலியிடுகின்றனர். மறுநாள் புதன்கிழமை மீண்டும் மாரியம்மன் கும்பம் மாரியம்மன் சாமியாடும் சாமியாடிகளின் தலையில் கொடுக்கப்பட்டு அவர்கள் கோட்டைக்குள் இருக்கும் காலாங்கரையானிடம் “பரிபூரணமாக உன் கொடையை ஏத்துக்கிட்டேன்” என்று கூறியதும் மேளம் உச்சநிலையில் இசைக்கப்பட்டு சாமியாட்டம் நடைபெறும். கும்பத்தை இறக்கிய பின்னர் மாரியம்மன் சன்னிதி முன்பு சாமியாடிகள் எல்லை குறித்த 10அடி உயர குழி வெட்டப்படுகிறது. அதன்பின் காலாங்கரையான் சாமியாடி கருங்காலி கம்புடன் காடு பார்க்கச் செல்வார். காடு பார்க்கச் சென்று திரும்பி வருவதற்குள் காலாங்கரையானுக்குப் போடப்பட்ட படைப்பின் விரிப்பு மாற்றி விரிக்கப்படுகிறது. அதன்பின் மாரியம்மன் முன் வெட்டப்பட்ட குழியினுள் திசைக்கிடாய்கள் நான்கு பலியிடப்படுகின்றன. அதன்பின் நேர்ந்து விடப்பட்ட ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட ஊர்க் கிடாய்கள் பலியிடப்படுகின்றன. காலாங்கரையான் கோமரத்தாடி கிடாய்கள் வெட்டப்பட்ட குழியில் இறங்கி முதலில் வெட்டிய கிடாயினைத் தூக்கிக் காட்டுகிறார். அதன்பின்னர் மாரியம்மன் சாமியாடிகள் தலையில் கும்பத்தைத் தூக்கி, கோட்டைக்குள் இருக்கும் காலாங்கரையானிடம் சென்று பரிபூர்ணமாக உன் கொடையை ஏற்றுக்கொண்டேன் என்று கூறுவதோடு கொடை நிறைவேறுகிறது.

மாரியம்மனுக்கு முட்டைப்பலி கொடுத்தல்

கொடை முடிந்து அனைத்துச் சாமியாடிகளும் மேளதாளத்துடன் கோயிலை விட்டுச் செல்லும்போது மாரியம்மனுக்கு முட்டைப்பலி கொடுக்கின்றனர். மாரியம்மனிடம் “நாங்கள் போய்ட்டு வாரோம்” என்று சாமிகள் கூறிச் செல்வதாகக் கூறுகின்றனர். அதன்பின் படைப்பைப் பிரித்துச் சாமியாடிகளுக்குக் கோடித்துண்டு வேட்டி வழங்கி ஊருக்குள் இருக்கும் கோயில் வீட்டுக்குச் செல்கின்றனர். செல்லும் வழியில் உள்ள தெய்வங்களுக்கு முட்டைப்பலி கொடுக்கப்படுகிறது. எட்டாங் கொடை மயானத்தில் தீா்த்தக் கோழி (முட்டையிட்ட பெட்டைக்கோழி) பலியிட்டுப் பொங்கல் வைத்துப் பூசை செய்து வழிபடுகின்றனர்.

முடிவுரை

நிறைசூலியைப் பலி கேட்ட ஐவர் ராசாவுக்கு வருடம் தோறும் நிறைசூலியைப் பலி கொடுக்க முடியாததால் அவ்வூரில் அனைத்துத் தெய்வங்களின் கொடை விழாவின் துவக்கத்தில் ஐவர் ராசாவை வழிபட்ட பின்னரே பிற தெய்வங்களுக்குக் கொடை விழா நடத்துகின்றனர். இதை மீறினால் ஐவர் ராசா கொடையை நடத்த விடமாட்டார் என்ற நம்பிக்கை இவ்வூர் மக்களிடம் உள்ளது. அதேபோல் ஐவர் ராசாவை வழிபடும் சாதியினர் பிற ஊர்களில் இருந்து வந்து கொடை விழாவை நடத்துவதால் இவ்வூர் மக்கள் முக்கியமாக சாமியாடிகள் அவர்களைச் சுருள்முறி கொடுத்து அழைக்கும் மரபு இன்றும் உள்ளது. அதன் பிறகு காலாங்கரையானுக்கு நடத்தப்பட்டு வந்த ஊர்க் கொடைவிழா ஊர் மக்களைக் காக்கவே மாரியம்மனுக்கு முதல் பூசையும் பலியும் கொடுக்கப்பட்டு நடத்தப்படுகிறது. இக்கொடைவிழாவில் ஊருக்குள் இருக்கும் மாரியம்மனைக் கும்பம் எடுத்து அழைத்து வருவதும் கும்பம் இறங்கியதும் கொடையை நடத்துவதும் மீண்டும் கும்பம் சாமியாடிகளின் தலையில் ஏற்றப்பட்டு, கோட்டைக்குள் இருக்கும் காலாங்கரையானிடம் உன் கொடையை பரிபூர்ணமாக ஏற்றுக் கொண்டேன் என்று மாரியம்மன் சாமியாடிகள் கூறி கும்பத்தை மாரியம்மனிடம் இறக்குவதையும் காண முடிகிறது. ஊருக்குள் இருக்கும் மாரியம்மன் தாய்தெய்வம் என்பதால் முளைப்பாரியும் கோபமாக வந்தமர்ந்த மாரியம்மனைக் குளிர்விக்க கும்பமும் எடுத்து வருவதைக் காணலாம். இக்கொடைவிழாவில் முதலில் மன்னன் குலசேகர பாண்டிய மன்னனான ஐவர்ராசாவுக்கும் மாரியம்மன் காலாங்கரையான் சீவலப்பேரி சுடலைமாடன் 21 தேவாதிகளுக்கும் பூசைகளும் படையல் பலிகளும் கொடுக்கப்பட்டு வருகின்றன. இவ்வட்டாரக் கோயில்களை வரலாற்று நிலையில் ஆய்வு செய்தால் கி.பி.12 ஆம் நூற்றாண்டிலிருந்து உள்ள வழிபாட்டு முறைகளையும் மன்னர் ஆட்சியையும் பண்பாட்டு மரபுகளையும் அறிய முடியும். ஏனெனில் குலசேகர பாண்டிய மன்னனான ஐவர் ராசாவை (குலசேகர பாண்டிய மன்னனின் சகோதரர்கள் ஐந்து பேர்) ராசா என்றும் காலாங்கரையானை மந்திரி என்றும் அழைக்கின்றனர் இவ்வூர் மக்கள். இவர்கள் போரினால் இறந்து தெய்வமாகியிருக்கலாம். காலாங்கரையான் கல் வழிபாடு நடுகல் வழிபாட்டின் எச்சம் எனலாம்.

துணைநூல்கள்

  • பிலவேந்திரன், ச., 2001, தமிழ்ச் சிந்தனை மரபு, நாட்டுப்புறவியல் ஆய்வு, தன்னனானே பதிப்பகம், பெங்களூர்.
  • இராமசாமி, சு.அ., 1970, சிறப்புப் பெயரகராதி, கழக வெளியீடு, சென்னை.
  • கதிரைவேற்பிள்ளை, சி., 1998, தமிழச் சொல்லகராதி, உலகத் தமிழ்ராய்ச்சி நிறுவனம், சென்னை.
  • சிவசுப்பிரமணியன், ஆ., 1998, மந்திரமும் சடங்குகளும், காலச்சுவடு பதிப்பகம், நாகா்கோவில்.
  • ஜெயக்குமார், கோ., 2009, நா.வானமாமலையின் ஐவர் ராசாக்கள் கதை, நாம் தமிழா் பதிப்பகம், சென்னை.
  • Arockiasamy, M., The Cult & Mariamma of the Goddess of Rain.

முனைவர் சு.பேச்சியம்மாள்

தமிழியல் துறை, உதவிப் பேராசிரியர்

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்

திருநெல்வேலி, அலைபேசி: 9788749246, spetchi29@gmail.com