கல்வியும் சமூகமும்

பொதுவாக ஒரு சமூகத்தின் கல்வி அச்சமூகத்தின் வரலாற்றை அறிய உதவும்.  மனிதன் தன் வாழும் காலத்தில் பல்வேறு வகையான நோக்கங்களை அடைவதற்கு வழிகாட்டி. கல்வியே ஒரு சமூகத்தின் அறிவு வளர்ச்சியையும், சிந்தனை மரபையும் நிர்ணயிக்கும். மனிதனின் திறனை வளர்க்கவல்ல ஒரு மகத்தான சக்தி.  கல்வி ஒரு சமூகத்தில் தொடர்ந்து உருவாகி வந்துள்ள அறிவை, பண்பாட்டை, சிந்தனையை, திறனை, வழங்குவதிலும், அறநெறிகளையும், விழுமியங்களையும் அடுத்தடுத்த தலைமுறைக்கும் பாதுகாப்பானதாக ஆக்குவதற்கும் அவர்கள் கையிடம் கொண்டு செல்லும் இடையறா ஒரு தொடர் சங்கிலி எனலாம்.  தம் முன்னோர்களிடமிருந்து இளம் தலைமுறையினருக்குக் கொடுத்து வரும் பல உள்ளீடுகளைக் (Inputs) கல்வி தன்னகத்தே கொண்டதாகும்.

இன்றும் கல்வி மனிதர்களை மேம்படுத்தி மனிதனின் முன்னேற்றத்திற்கும், செல்வாக்கிற்கும் தேவையான கருவியாக இருப்பதைக் காண்கிறோம். அன்றைய மனிதனின் வாழ்வுக்கும், வளத்திற்கும் அவர்களின் ஆட்சி மேன்மைக்கும் மூலமாக இருந்தது கல்வியின் பின்புலம்தான்.  அரசன் மிகுந்த அறிவுடையவனாக விளங்கினால் தான் உலகம் மேம்படும்.  கல்வி அறிவு இல்லாமல் அறியாமை நிரம்பியவனாக இருந்தால் உலகம் கெட்டழியும் என்பதைப் பின்வரும் புறப்பாடல் சுட்டிக்காட்டுகிறது.

அறிவுடை வேந்தன் நெறிஅறிந்து கொளினே

கோடி யாத்து நாடுபெரிது நந்தும்

மெல்லியன் கிழவன் ஆகி (புறம்.184: 5 – 7)

கல்விவிளக்கம்

கல்வி என்ற சொல் காலத்திற்கு ஏற்றவாறு பல்வேறு பொருளில் வழங்கப்பட்டு வந்துள்ளது. மனிதனின் வளர்ச்சிக்கு உதவும் அனைத்துத் துறைகளிலும் கல்வியானது ஊடுருவி உள்ளது. கல்விக்கு கற்றல், கற்கை, கல்வியறிவு, வித்தை, பயிற்சி, நூல் எனப் பல பொருள்களைத் தருகின்றது தமிழ் லெக்சிகன்.  Education எனும் சொல் Educare எனும்  இலத்தீன் மொழிச் சொல்லிலிருந்து பெறப்பட்டது(A.S.Seetharamu, Philosophies of Education (1989-11). Educare என்பதன் பொருள் விளக்கம் வெளிக்கொணர்தல் ஆகும்.  இதனையே தான் மாணவர்களின் நற்பண்புகளை வெளிக்கொணர்தல் என்று விவேகானந்தரும் கூறுவார். கல்வி என்பது தவk; முதலாகிய அகக்கருவிகளின் செயற்றிறம் என்கிறார் பேராசிரியர்.

“கல்வி தறுகண் இசைமை கொடையெனச்

சொல்லப் பட்ட பெருமிதம் நான்கே” (தொல். பொருள். மெய். 9)

“வேண்டிய கல்வி யாண்டுமூன்று இறவாது” (தொல். பொருள். கற். 47)

“ஓதல் பகையே தூதுஇவை பிரிவே” (தொல். பொருள். அகத்.27)

“அவற்றுள்,

ஓதலும் தூதும் உயர்ந்தோர் மேன” (தொல். பொருள். அகத்.28)

என்று பெருமிதம் குறித்த மெய்ப்பாட்டினை விளக்கும் பொருட்டும் அக்காலக் கல்வி மரபைக் குறிக்கும் ஓதல் என்ற சொல் பல இடங்களில் வந்திருப்பதனைக் கல்வி, ஓதல் எனும் இரண்டு சொற்களும் ஒரு பொருள் குறித்த சொல்லாகவே பயன்படுத்தியுள்ளார்.

ஆரம்பகாலக் கல்வி முறை குருசீடர் கல்விமுறை (Teacher Central Education) என அழைக்கப்படும்.  குரு சொல்லும் சொல் ஒவ்வொன்றையும் சீடன் மீண்டும் மீண்டும் மனனம் செய்யும் நிலை காணப்பட்டது.  எனவே கல்வி, ஓதல் என்ற சொற்கள் ஒலித்தல் (Sound) எனும் பொருளிலேயே வந்துள்ளன. எனவே நன்கு வளர்ச்சியடைந்த காலத்திலேயே கல்வி ஒலித்தலுடன் தொடர்புடையதாக இருந்துள்ளதால் இச்சொல்லின் தோற்றம் ஒலித்தலுடன் தொடர்பு கொண்டுள்ளது எனலாம்.

இன்றைய தொழில்நுட்ப யுகத்தில் நன்கு வளர்ந்துவிட்ட அறிவியல்சார் கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது.  கற்பித்தலில் பல மாற்றங்கள் ஏற்பட்டாலும், கற்பித்தலுக்கான கருவிகள் போதுமானதாக இல்லை.  தொடக்க காலத்தில் கல்வி என்பது ஒலித்தலின் மூலம் மட்டுமே கற்றல் என்பது பரிமாறப்பட்டது என்பதில் ஐயமில்லை.  இத்தகைய உயர்ந்த கல்வியை நாற்கவிராசர், தான் இயற்றிய நம்பியகப்பொருளில் எங்ஙனம் சுட்டியுள்ளார் என்பதை நோக்குவதே இக்கட்டுரையின் நோக்கம்.

நாற்கவிராசர்

இவர் சைன சமயத்தைச் சார்ந்தவர் என்பதைப் பாயிரத்தின்வழி அறியமுடிகிறது.  நம்பி நயினார் என்ற இயற்பெயர் கொண்ட இவர் பாண்டி நாட்டுத் திருப்புள்ளியங்குடியில் வாழ்ந்த உய்ய வந்தார் என்ற முத்தமிழ் ஆசானுடைய மகனார்.  ஆசு, மதுரம், சித்திரம், வித்தாரம் என்னும் நால்வகைக் கவிகளையும் பாடவல்லவராதலின் இவர் நாற்கவிராச நம்பி எனச் சிறப்புப் பெயர் பெற்றார்.  இவரது காலம் கி.பி.12ஆம் நூற்றாண்டின் இறுதியும் 13ஆம் நூற்றாண்டின் தொடக்கமுமான பாண்டியன் குலசேகரன் காலமாகும்.  தொல்காப்பியத்தையும், சங்க இலக்கியத்தையும் இறையனார் களவியலுரையையும் நன்கு ஆராய்ந்து அவற்றுள் வகுத்துக் கூறப்பட்ட தகவல்களைத் தொகுத்துச் சுருக்கமாக இந்நூலைச் செய்துள்ளார். அகத்திணையியல், களவியல், வரைவியல், கற்பியல், ஒழிபியல் என ஐந்தாகப் பகுத்து மொத்தம் 252 நூற்பாக்களில் அகப்பொருட் செய்திகளைச் சொல்லிச் சென்றுள்ளார்.  இவரே இந்நூலுக்கு உரையையும் எழுதியுள்ளார்.

“மனிதரும் தேவரும் துதிக்க, முக்குடையின்கீழ்ச் சிங்கம் சுமந்த பொற்கட்டிலில் மதிமூன்றும் கவிய, உதய மலையில் இளஞாயிறு ஒன்று இருந்தாற்போல அழகோடு விளங்கியவனும், மெய்ப்பொருளை அருளிச் செய்தவனுமான அருகதேவனது திருவடியைச் சேர்ந்த திருப்புள்ளியங்குடி உய்ய வந்தான் என்னும் ஆசிரியனுக்கு மைந்தனாய்த் தோன்றி ஆரியம் தமிழ் என்னும் இரண்டற்கும் தலைவனாகவும் உள்ள பாற்கடல் போன்ற பல்புகழைப் பரப்பிய நாற்கவிராச நம்பி என்ற பெயருடையவன் ஆவான்” என்று சிறப்புப் பாயிரம் பாடியுள்ளனர். ஆனால் சிறப்புப் பாயிரம் பாடியவர் யார் என அறியமுடியவில்லை.

சமயக் கல்வி

தொடக்க காலத்தில் அந்தணர்களுக்கு மிகுந்த மதிப்பு வழங்கப்பட்டிருந்தது.  அவர்களைக் கல்வியாளர் எனப் போற்றியுரைத்துள்ளனர். மறைநூல்களைக் கற்றுணர்ந்து பலருக்கும் பயன் நல்கும் பணியை அந்தணர்கள்; செய்துள்ளனர்.

“ஓதல் முதலா ஓதிய ஐந்தினும்

பிரிவோன் அழுங்கற்கும் உரிய னாகும்” (நம்பி.அகத்.86)

என்பதில் பிரிவு பற்றி அகத்திணையில் உரைக்கும்போது கல்வி பயிலுதல் முதலாக ஓதற்பிரிவு, நாடுகாவல், தூதிற்பிரிவு, துணைவயிற்பிரிவு, பொருள்வயிற் பிரிவு என ஐந்துக்கும் தலைவன் பிரிந்து செல்வான் எனச் சொல்லுமிடத்தில் ஓதற் பிரிவு என்பது வேதம் ஓதுதல் என்னும் கல்வி காரணமாகப் பிரியும் பிரிவு.  இது அந்தணர், அரசர், வைசிகர் என்னும் மூவகை வருணத்தார்க்கும் உரியது என்றும்,

“ஓதற் றொழிலுரித் துயர்ந்தோர் மூவர்க்கும்”

“அல்லாக் கல்வி எல்லார்க்கும் உரித்தே” (நம்பி. அகத். 69,70)

வேதம் அல்லாத பிற கல்வி நான்கு வருணத்தார்க்கும் உரியது என்றும் கூறுவர். இதில் அல்லாக் கல்வி என்பது வேதக் கல்வியல்லாத பிற கல்வி. அஃதாவது, படைக்கலம் பயிறல், யானை, தேர், குதிரை முதலியன ஊர்தல் என்பர்.  இதில் அந்தணர் தவிரப் பிறரும் கல்வி பயின்றனர் என்பதையும் அக்காலத்தில் அந்தணர்களால் மட்டுமே சமயப் படைப்புகள் காக்கப்பட்டன எனவும், சமயக் கல்வி முறையாகக் கற்பிக்கப்பட்டது எனவும் தெரியவருகிறது.  இக்கூற்றுக்குப் பின்வரும் சங்க அடிகளைச் சான்றாகக் காட்டலாம்.

“மறைநவில் அந்தணர் நுவலவும் படுமே” (புறநானூறு 1:6)

“நான்மறை முனிவர்” (புறநானூறு 6:20)

“வேத வேள்வித் தொழின்” (புறநானூறு 224:9)

மேலும்,

“ஓதலும் தூதும் உயர்ந்தோர் மேன”

எனத் தொல்காப்பியர் சுட்டும் இடத்தில், ஓதல் என்ற சொல் அக்காலத்தின் அடிப்படைக் கல்விமுறையையே குறித்துள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் ஔவையாரின் “ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்” என்னும் பாடலடியும் அமைந்துள்ளது. அனைத்துச் சமூகத்தினருக்கும் பொதுவாகவே ஔவையார் மொழிந்துள்ளதைக் காணும்போது, அக்காலக் கல்வி ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டுமானதாக இல்லை என்பதை உணரமுடிகின்றது. இதன்வழி அக்காலக் கல்விமுறையில் வருணப் பாகுபாடு ஆளுமை செலுத்துகின்ற ஒன்றாக இல்லை என்பதை நம்மால் அறியமுடிகிறது. பின்னாளில் இக்கருத்தில் மாற்றங்கள் நிகழ்துள்ளதையும் உணரமுடிகின்றது.

குருகுலக் கல்வி

அக்காலத்தில் குருவுக்கு உதவியாக அருகில் இருந்தும்> தேவையான பொருட்களைத் தந்தும் குருவிடம் கல்வி பயின்றதைப் புறநானூற்றால் அறியமுடிகின்றது.

“உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்

பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே”             (புறநானூறு 183:1-2)

அங்ஙனம் கொடுத்துg; பயிலுதலுக்குj; தலைவன் தலைவியை விட்டுப் பிரிந்து செல்ல நேர்ந்தது. கற்புf; காலத்தில் நிகழும் பிரிவின் வகையில்,

“இல்வாழ்க்கையே பரத்தையிற் பிரிவே

ஓதற் பிரிவே காவற் பிரிவே

தூதிற் பிரிவே துணைவயிற் பிரிவே

பொருள்வயிற் பிரிவெனப் பொருந்திய ஏழும்

வளமலி கற்பின் கிளவித் தொகையே”        (நம்பி. 201)

என்பதில் இல்வாழ்க்கையில், பரத்தையிற்பிரிவு, ஓதற்பிரிவு, காவற்பிரிவு, தூதிற்பிரிவு, துணைவயிற் பிரிவு, பொருள்வயிற் பிரிவு எனப் பொருந்துகின்ற ஏழும் வரும்.  இதில் ஓதற்பிரிவு என்பது கல்வி காரணமாகப் பிரியும் பிரிவு. இப்பிரிவிற்கான காலவரையறையையும் நாற்கவிராச நம்பி கீழ்வருமாறு சுட்டுகின்றார்.

“ஓதற் பிரிவுடைத் தொருமூன் றியாண்டே”    (நம்பி. 89)

என்பதில் ஓதற்பிரிவு மூன்றாண்டு எல்லையை உடையது.  பிற பிரிவுகள் ஓராண்டுக்கு உரியன. இங்ஙனம் கல்விக்காகப் பிரியும் தலைவன் கல்வி முதலாகிய எல்லா வினைகளுக்கும் தலைவன் தலைவியிடம் சொல்லியும் சொல்லாமலும் பிரிவான்  என்பதை,

“கல்வி முதலாக எல்லா வினைக்குஞ்

சொல்லி அகறலுஞ் சொல்லா தகறலும்

உரியன் கிழவோன் பெருமனைக் கிழத்திக்கு”        (நம்பி. 80)

என்று சுட்டுகிறார் நம்பி.  ஏனெனில் குருகுலக் கல்விNa பழங்காலத்தில் பண்பாட்டையும் இலக்கியr; செல்வத்தையும் கலை மாட்சியையும் அரசியல் ஒழுக்கங்களையும் ஆய்வியல் திறனையும் அறிவதற்கு வாய்ப்பளித்தது. அதற்கு இல்லற வாழ்க்கை இடையூறாக இருந்துவிடf; கூடாது என்பதற்காகg; பிரிவு மேற்கொண்டிருக்கலாம். இந்த மூன்றாண்டு காலப் பிரிவில்,

“ஓதற் ககன்றோன் ஒழிந்திடை மீண்டு

போதற் கியையவும் புலம்பவும் பெறாஅன்”           (நம்பி. 92)

தலைவியை விட்டு ஓதற்குப் பிரிந்த தலைவன் அவ்வோதலைத் தவிர்j;து இடையிட்டு மீண்டு வருதலும், ஓதுகின்ற இடத்தில் தலைவியை நினைj;துg; புலம்பலும் கூடாது என்கிறார். ஏனெனில் அக்காலத்தில் ‘இளமையில் கல்’ என்னும் உயர்நெறி சான்றோர் பெருமக்களால் வற்புறுத்தப்பட்டது.  இளம் வயதில் கற்காதவன் மிகவும் இரங்கத் தக்கவனாவான். இது அரசர் முதல் அனைவருக்கும் உணர்த்திய அறவுரையாகும்.  அறியாமை என்னும் அவல நிலையிலிருந்து விடுபடக் கல்வி என்னும் கருவியைக் கையிலெடுக்க முனைந்தனர். ஆனால் தலைவியானவள்,

“பிரிவறி வுறுத்தல் பிரிவுடன் படாமை

பிரிவுடன் படுத்தல் பிரிவுடன் படுதல்

பிரிவுழிக் கலங்கல் வன்புறை வன்பொறை

வருவழிக் கலங்கல் வந்துழி மகிழ்ச்சியென்

றொருமையிற் கூறிய வொன்பது வகைய

கல்வி முதலா வெல்லாப் பிரிவும்”          (நம்பி. 209)

என்பதில் 1. கல்விக்குரிய பிரிவைத் தலைவனால் உணர்ந்த தோழி தலைவிக்கு உணர்த்தல் 2. தலைவன் கல்விக்குப் பிரிந்தவிடத்துத் தலைவி கார்ப்பருவம் கண்டு புலம்பல் 3. ஓதற்குத் தலைவன் பிரிந்த போது கார்ப்பருவம் கண்டு வருந்திய தலைவியைத் தோழி ஆற்றுவித்தல் எனத் தலைவி பல நிலைகளில் புலம்பிக் காலங் கடத்துவாள்.  ஏனெனில் அக்காலத்தில் பெண்கள் கல்விக்காகப் பிரிதல் என்பது இல்லை. கல்வியின் மேன்மையினை உணராமையினால் பல நிலையில் புலம்பக் கூடியவளாக இருந்திருக்கின்றாள்.  கல்லாதோரும் தகைசான்ற மனிதராய் வாழ்ந்த இப்பூமியில் கற்பது கைம்மண் அளவாயினும் ‘செய்வன திருந்தச் செய்’ என்னும் பழமொழிக்கேற்றவாறு அக்கல்வியை முழுமையாகக் கற்க முற்பட்டனர்.

தொல்காப்பிய காலந்தொட்டே கல்வி மையப் பாடம், விளிம்புநிலைப் பாடம் என இருவேறு நிலையில் இயங்கி வந்துள்ள நிலையை நம்பியகப்பொருளிலும் காண முடிகின்றது.

முடிவுரை

நம்பியகப்பொருளைக் கல்வியியல் நோக்கில் அணுகியதன் வாயிலாக அகத்திணைக் கல்வியின் முக்கியதுவத்தையும் வடமொழி சார்ந்த கல்வி தமிழகத்தில் மையங் கொண்டுள்ளமையும் தெரிந்து கொள்ள முடிந்தது.  மையமாக விளங்கிய வடமொழி சார்ந்த கல்விக்கு இணையாகத் தமிழ்மரபு சார்ந்த கல்வி சங்கத் தமிழர்களின் வாழ்க்கை வீரம், காதல் என்ற பண்பாட்டுக; கூறுகளில் மட்டும் அமையாமல், அறம் தவறாமை, பெரியோரை மதித்தல், கற்றவரை வணங்குதல், ஒழுக்கத்தைக் கற்றுக் கொடுத்தல் போன்றவற்றின் கலவையாக அவர்களின் வாழ்வு வடமொழி சார்ந்த கல்விக்கு விளிம்பில் இயங்கி வந்ததை அறியலாம்.  இன்றைய கல்வியும் இவ்வாறுதான் செயல்படுகிறது.  தாய்மொழிவழிக் கல்வி விளிம்பிலும், வேற்றுமொழிக் கல்வி அதாவது அந்நிய மொழிக் கல்வி மையத்திலும் இயங்கிக் கொண்டிருக்கின்றது என்பது உண்மையே!

துணைநூல்கள்

  • தொல்காப்பியம், கழக வெளியீடு.
  • புறநானூறு, கழக வெளியீடு.
  • நம்பியகப்பொருள், கழக வெளியீடு.

முனைவர் நா.ஹேமமாலதி

துணைப் பேராசிரியர், தமிழ்த்துறை,

சாரதா கங்காதரன் கல்லூரி, புதுச்சேரி.