சங்க இலக்கிய அகப்பாடல் மரபுகளுள் குறிப்பிடத்தக்க இரு கூறாக அமைவன  தூதும் மடலும். தலைவன், தலைவி சந்திப்புக்கு இடையூறு நேரும்பொழுது, தம் உள்ளக்கிடக்கையைத் தாம் விரும்பும் நபரிடம் வெளிப்படுத்தும் உதவி செய்வோரைத் தூதுவர் என்றழைப்பர். அவ்வகையில், நற்றிணையில் காணப்படும் தூதையும் மடலையும் ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

தூது விளக்கம்

அன்றைய அரசர்கள் காலம் முதல் இன்றைய மக்களாட்சிக் காலம் வரை அரசிற்குத் தூதாகச் செல்வோருமுண்டு. சங்க இலக்கியம் சுட்டிக்காட்டும் காதலர் வாழ்வில் தூதும் இடம்பெற்றிருக்கிறது.

தூது என்பதற்கு ஒருவகைப் பிரபந்தம், இருவரிடையே பேச்சு நிகழ்தற்கு உதவியாக நிற்கும் ஆள், கூழாங்கல், செய்தி, பகை, தானாபதி, இராசதூதர், தன்மை1 என்று கழகத் தமிழ் அகராதி பொருள் தருகின்றது.

தொல்காப்பியர், தலைவன் – தலைவியரின் அகவாழ்க்கைக்குப் பங்காற்றுவோரை வாயில்கள் எனக் குறிப்பிடுவார். அவ்வகையில்,

தோழி தாயே பார்ப்பான் பாங்கன்

                        பாணன் பாடினி இளையர் விருந்தினர்

                        கூத்தர் விறலியர் அறிவர் கண்டோர்

                        யாத்த சிறப்பின் வாயில்கள் என்ப              (தொல்.அகத்.கற்பு.52)

ஆகியோரை வாயில்களாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், சில அஃறிணைப் பொருட்களையும் காதல் வாழ்க்கையில் காதலர் தூதாக விடுவர் எனக் குறிப்பிடுகின்றார் தொல்காப்பியர். அந்நூற்பா வருமாறு:

ஞாயிறு திங்கள் அறிவே நாணே

                        கடலொடு கானல் விலங்கே மரனே

                        புலம்புறு பொழுதே புள்ளே நெஞ்சே

                        அவையல பிறவும் சொல்லிய நெறியால்

                        சொல்லுந போலவும் கேட்குந போலவும்

                        சொல்லியாங்கு அமையும் என்மனார் புலவர்       (தொல்.பொருள். செய்.201)

கண்ணீர்த் தூது

இன்றுசெல்

                        இகுளையர்த் தரூஉம் வாடையொடு

                        மயங்கிதழ் மழைக்கண் பயந்த தூதே         (நற்.5:7-9)

என்ற பாடலடிகளில் பெருங்குன்றூர்க் கிழார் என்னும் புலவர், பல தோழியர் தலைவியின் துன்பத்தை நீக்கிவிட்டு இன்று புறப்படுவதாக இருந்தது. ஆனால் மீண்டும் அவர்கள் உன் துயரைச் சரிசெய்வதற்கு வந்துள்ளனர். வாடைக்காற்றினால் வருத்தத்துடன் காணப்படுகிறாய். மழை போன்று கண்ணீரை வரவழைத்து அழுகிறாய். உன் அழுகையின்போது வந்த நீர் தலைவனின் மனநிலையைப் பாதிக்கும்வண்ணம் தூதாகச் செல்கிறது எனத் தோழி, தலைவியிடம் கூறுவதாகக் கூறுகின்றார்.

அயலவர்த் தூது

ஒல்காது ஒழிமிகப் பல்கின் தூதே               (நற்.165:9)

என்ற பாடலடியில் தோழி தலைவியிடம், நீ வருந்தாமல் என்னருகில் அறத்தோடு நிற்கிறாய். உன்னைத் தலைவன் மணம்முடிக்கச் செய்யச் சம்மதிக்குமாறு நான் கூற வேண்டுமென அயலவர் அதிகமாகத் தூது விடுகின்றனர் என்கிறாள்.

பாணன் தூது

தலைவனின் கட்டளைக்கு இணங்க பாணன் தூது செல்கிறான். தூது சென்றவிடத்தில் தோழி பாணனிடம், நீ தூதுவனாக வந்திருக்கிறாய், தலைவனின் பெருமைகளை எடுத்துக் கூறினாய், ஆனால் நீ கூறியதெல்லாம் மென்மையான பொய்யான வாக்குறுதிகள் எனக் கூறியதை,

            … தூதொடும் வந்த

                        பயன்தெறி பனுவல் பைதீர்பாண

                        நின்வாய்ப் பணிமொழி       (நற்.167:5-7)

இப்பாடலடிகளில் காணமுடிகின்றது.

மடல் விளக்கம்

தன் காதல் நிறைவேறாத சூழலில் பனங்கருக்கில் குதிரை உருவம் செய்து அதனை மடலாக்கி, அந்த மடல்மேலேறி ஊரார்க்குத் தலைவன் தன்காதலை அறிவிக்கும் நிகழ்வு மடல் எனப்படும்.

ஓர் ஆடவன் ஒரு பெண்ணைக் களவுடனோ அல்லது களவின்றியோ அடைய மேற்கொள்ளும் வழிமுறையே மடலேறுதல் எனப்படும்.2 என்று க.காந்தி கூறுகிறார்.

மடலேறுதல் என்பதனைப் பெருந்திணைக்கு உரியதாகத் தொல்காப்பியர் கூறியதை,

ஏறிய மடல்திறம் இளமை தீர்திறம்

                        தேறுதல் ஒழிந்த காமத்து மிகுதிறம்

                        மிக்க காமத்து மிடலொடு தொகைஇச்

                        செப்பிய நான்கும் பெருந்திணைக் குறிப்பே3

என்ற நூற்பாவால் அறிய முடிகின்றது.

தலைவன் மடலேறிய காட்சி

வில்லாப் பூவின் கண்ணி சூடி

                        நல்ஏ முறுவல்எனப் பல்ஊர் திரிதரு

                        நெடுமாப் பெண்ணை மடல் மானோயே  (நற்.146:1-3)

இப்பாடலடிகளில் கந்தரத்தனார் என்னும் புலவர், தலைவன் தன்னைப் பற்றித் தோழி கேட்குமாறு, விலைபோகாத பூக்களால் கட்டிய மாலையைச் சூடிப் பித்துப் பிடித்தவன் என ஊரார் நோக்கும்படிப் பல ஊர்களிலும் சுற்றித் திரிந்தேன். பின்னர் கருமையான பனைமடலில் குதிரை செய்து அதிலும் சுற்றி வந்தேன் என்று உணர்த்தியுள்ளார். மேலும்,

மடலே காமம் தந்தது அலரே

                        மிடைபூ எருக்கின் அலர்தந் தன்றே            (நற்.152:1-2)

என்ற பாடலடிகளில் தலைவன், தோழியிடம் தன் துன்பத்தைக் கூறுகிறான். என்னுடைய அன்பெல்லாம் பனங்கருக்காலே கட்டிய குதிரையின் மேல் ஏறி மடலேறும் நிலையைத் தந்தது. ஊரில் தூற்றும் பழியெல்லாம் என்னைச் சேர்ந்தது. ஆவிரை, பூளை, உழிஞை போன்ற மலர்களைத் தொடுத்த எருக்க மாலையை எனக்குத் தந்தது எனும் குறிப்புக் காணப்பெறுகின்றது. இதன்வழித் தலைவனின் மனநிலையைக் காணமுடிகின்றது.

மடலேறத் துணியும் தலைவன் எவ்வெவற்றை அணிந்திருப்பான் எனக் கலித்தொகைப் பாடலொன்று நன்கு வெளிப்படுத்தி நிற்கின்றது. அப்பாடற்பகுதி பின்வருமாறு:

அணியிலங்கு ஆவிரைப் பூவோடு எருக்கின்

                        பிணையல்அம் கண்ணி மலைந்து மணிஆர்ப்ப

                        ஓங்குஇரும் பெண்ணை மடல் ஊர்ந்து      (கலி.139:8 -10)

மேலும்,

கண்டவி ரெல்லாம் கதுமென வந்துஆங்கே

                        பண்றியா தீர்போல நோக்குவீர் கொண்டது

                        மாவென்று உணர்மின் மடலன்று மற்றிவை

                        பூவல்ல பூளை உழிஞையோடு யாத்த

                        புனவரை யிட்ட வயங்குதார்ப் பீலி

                        பிடியமை நூலொடு பொய்ம்மணி கட்டி

                        அடர்பொன் அவிரேய்க்கும் ஆவிரங் கண்ணி       (கலி.140:1-7)

எனும் பாடற்குறிப்பின்வழி, ஆவிரைப்பூ, எருக்கம்பூ, பூளைப்பூ, உழிஞைக்கொடி, மயிற்பீலி ஆகியவற்றைச் சேர்த்துக் கட்டிய மாலையைத் தலைவன் மடலேறுவதற்கு முன் அணிந்திருப்பான் எனும் செய்தியை அறிய முடிகின்றது.

இப்பாடலடிகளில், தலைவன் ஊரிலுள்ளோரைப் பார்த்து, நீங்கள் எல்லோரும் வேகமாக வந்து முன்பு என்னைத் தெரியாதவர் போன்று பார்க்காதீர்கள். நான் ஏறிவருவது மடல் அன்று, குதிரை என்றே அறியுங்கள். நான் அணிந்திருப்பது பொன்நகை அன்று, பூளை, உழிஞை, பீலி முதலியவற்றை நூலிலே மணியுடன் சேர்த்துக்கட்டி, பொன்னிறமுடைய ஆவிரம் பூவையும் சேர்த்து நானே தொடுத்து அணிந்துள்ள மலர்க்கண்ணி என உணருங்கள் எனத் தலைவன் பொதுமன்றத்தில் கூடியுள்ள சான்றோரைப் பார்த்துக் கூறுகின்றான்.   அவ்வகையில், தன் காதல் கைகூடுவதற்குத் தலைவன் மேற்கொள்ளும் இறுதி முயற்சியே இந்த மடலேறுதல் நிகழ்வு எனலாம்.

முடிவுரை

 • சங்க இலக்கியங்கள் முழுவதும் இருந்த தூதும் மடலும் நற்றிணையில் காணப்பட்டன.
 • தூதில் மாறுபட்ட ஒன்றாக தலைவியின் கண்ணீர் கூட தூதாக உள்ளதை நற்றிணைப் பாடலொன்றில் காணமுடிகின்றது.
 • மடலில் தலைவனின் மடலேறும் காட்சி ஊரில் உள்ளோர் அனைவரும் காணும் வகையிலும், தோழிக்கு தலைவன் கூறும் வகையிலும் இருந்துள்ளது.

சான்றெண் விளக்கம்

 1. கழகப் புலவர் குழுவினர், கழகத் தமிழ் அகராதி, பக்.566.
 2. டாக்டர் க. காந்தி, தமிழர்பழக்க வழக்கங்களும் நம்பிக்கைகளும், பக்.16
 3. தொல்காப்பியம் – பொருளதிகாரம் இளம்பூரணர் உரை, நூற்பா எண்.54

துணைநின்றவை

 • காந்தி க., 2003, தமிழர் பழக்கவழக்கங்களும் நம்பிக்கைகளும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.
 • கௌமாரீஸ்வரி எஸ்.(பதி.), 2009, தொல்காப்பியம் பொருளதிகாரம் இளம்பூரணர் உரை, சாரதா பதிப்பகம், சென்னை.
 • தமிழமுதன்(உரை.), 2012, கலித்தொகை மூலமும் உரையும், சாரதா பதிப்பகம், சென்னை.
 • புலியூர்க்கேசிகன்(உரை.), 2012, தொல்காப்பியம் (எழுத்து – சொல் – பொருள்), சாரதா பதிப்பகம், சென்னை.
 • வேங்கடராமன் ஹெச். (உரை.), 2013, நற்றிணை மூலமும் உரையும், டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல்நிலையம், சென்னை.
 • ………….., 2010, கழகத் தமிழ் அகராதி, சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை.

ப.மணிகண்டன்

முனைவர்பட்ட ஆய்வாளர்

பாரதிதாசன்  உயராய்வு மையம்

பாரதிதாசன் பல்கலைக்கழகம்

திருச்சிராப்பள்ளி – 24

[email protected]