எந்தவொரு சிறப்பான படைப்பிலக்கியமும், பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்படும். அந்த வகையில் மகாபாரதத்தின் கிளைக்கதையாகத் தோன்றிய நளன்கதையானது தமிழ், மலையாளம், வடமொழி எனப்பல மொழிகளில் முழுநூலாக உருப்பெற்றதோடு, தமிழ் மொழியில் தோன்றிய பிற இலக்கியங்களிலும் ஆங்காங்கே எடுத்தாளப்பட்டுள்ளன. அவற்றை எடுத்துரைக்கும் விதமாகவே இக்கட்டுரை அமைகின்றது.

தமிழ் இலக்கியங்களில் நளன்கதை

 1. மகாபாரதத்தில் நளன்கதை

பாண்டவர்கள் சூதாட்டத்தில் நாட்டையும், நல்வாழ்வையும் இழந்து கானகத்தில் இருந்த போது வியாச முனிவர் வருகிறார். அவரிடம் தருமன், ‘கண்ணிருந்தும் குருடன் போல் சூதாடி நாட்டை இழந்து காட்டை அடைந்தவன் வேறு யாரேனும் உளரோ’ என வினவ,

கேடில் விழுச்செல்வங் கேடெய்து சூதாடல்

             ஏடவிழ்தார் மன்னர்க் கியல்பே காண்

என்கிறார். இது மன்னவர்களுக்கு இயல்பே. உன்னைப்போல் நளன் என்ற மன்னவனும் இருந்தான் என மகாபாரத ‘வனப்பருவத்தில்’ வியாசர் நளனின் கதையை எடுத்துரைக்கிறார்.

 1. சிலப்பதிகாரம்

சிலப்பதிகாரம் ஊர்காண் காதையில், கோவலன் என்னுடைய நெறி நீங்கிய ஒழுக்கத்தால், எல்லோருக்கும் துன்பத்தைக் கொடுத்து, நான் தற்போது அறியாத இடத்தில் நிற்கின்றேன். இப்பழமை வாய்ந்த ஊரில் என்நிலைமையை உணர்த்தி வருகின்றேன், எனக்கவுந்தியடிகளிடம் கூற, அதற்கு அவர் பெண்களும், உணவும் மட்டும் இன்பத்தைத் தருமென எண்ணியப் பலரும் துன்பத்தையே அடைந்தனர். என்கின்ற இடத்தில்,

                 “வல்லா டாயத்து மண்ணர சிழந்து

                  மெல்லிய றன்னுடன் வெங்கா னடைந்தேன்

                  காதலிற் பிரிந்தோ னல்லன் காதலி

                  தீதொடு படூஉஞ் சிறுமைய னல்ல

                  ளடவிக் கானகத் தாயிழை தன்னை

                  யிடையிருள் யாமத்திட்டு நீக்கியது

                  வல்வினை யம்றோ மடந்தைதன் பிழையெனச்

                  சொல்வது முண்டேற் சொல்லா யோநீ (ஊர் – 50 முதல் 57)

என ஊழ்வினையை விளக்குவதற்கும், கோவலனின் உள்ளத் தளர்ச்சியை நீக்குவதற்கும் வேண்டி, நளன் புட்கரனோடு சூதாடி தன் நாட்டையும், அரசையும் இழந்தான். அவன் தன் மனைவியை விட்டு வேறு ஒரு பெண்ணையும் காதலிக்கவில்லை. அவளும் தீமை அடையக் கூடிய செயலையும் செய்யவில்லை. இருப்பினும் நளன் நள்ளிரவில் அவளைப் பிரிந்தான். இதற்குக் காரணம் ஊழ்வினையே என்று நளன் கதையைக் குறிப்பிடுப்பிடுகின்றார்.

 1. கலித்தொகையில் நளன் கதை

தோழி, தலைவனிடம் இல்வாழ்க்கையின் சிறப்பை எடுத்துக் கூறுகையில், பொருளை எப்பொழுது வேண்டுமானாலும் தேடிச்செல்லலாம். ஆனால் இளமை என்பது மீண்டும் வராதது. எனவே ஓரே ஆடையைக் கிழித்து இருவரும் உடுத்தும் வறுமை ஏற்பட்டாலும், பிரியாது காதல் செய்வதே வாழ்க்கை என்பதனை,

ஒன்றன்கூறு ஆடை உடுப்பவரே ஆயினும்

                   ஒன்றினார் வாழ்க்கையே வாழ்க்கை அரிதுஅரோ

                   சென்ற இளமை தரற்கு                    (கலித் – 18.10-12)

எனும் பகுதியில், நிடத நாட்டை இழந்து நளனும், தமயந்தியும் கானகத்தில் இருக்கின்ற போது, கலியின் சூழ்ச்சியால் தமயந்தி, பொன்னிறப் பறவையைப் பிடித்துத்தரக் கூறுகிறாள். இருவரும் உடுத்தியிருக்கும் ஆடையைத் தவிர வேறு இல்லை. தமயந்தியின் சேலையின் நுனியை நளன் அணிந்து தன் உடையால் அப்பறவையைப் பிடிக்க, அத்துணியைப் பற்றிக் கொண்டு அப்பறவை பறந்துசெல்கிறது. அன்று இரவு தமயந்தியின் துயரைப் பொறாத நளன், தாம் இருவரும் அணிந்திருந்த ஒற்றை ஆடையைக் கீறி அவ்விடம் விட்டு நீங்கினான் என்ற குறிப்பை, பாலைப்பாடுவதில் வல்லவரான பெருங்கடுக்கோ கலித்தொகையில் எடுத்துரைக்கின்றார்.

 1. வில்லிபுத்தூரர் பாரதத்தில் நளன்கதை

வில்லிப்புத்தூரர் பாரதம் அருச்சுனன் தவநிலைச் சருக்கத்தில்,   பிருகதசுவர் முனிவர், தவம்புரியச் செல்லும் அருச்சுனனுக்கு,

நீவிரே யல்லிர் முன்னா ணிலமுழு தாண்ட நேமி

            நாவிரி கீர்த்தியாள னளனெனு நாம வேந்தன்   

            காவிரி யென்னத் தப்பாக் கருணையான் சூதிற்றோற்றுத்

            தீவிரி கானஞ் சென்ற காதைநுஞ் செவிப்படாதோ”  (செய் – 24)

என்னும் அடிகளில், நளன் புட்கரனோடுச் சு+தாடி, நாட்டை இழந்து தன் மனைவியுடன் கானகம் சென்று, அங்கு தன் மனைவியைப் பிரிந்து, பின் மீண்டும் மனைவியையும், நாட்டையும் பெற்று இன்புற்று வாழ்ந்தான் எனும் செய்தி எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

 1. நல்லாப்பிள்ளை பாரதத்தில் நளன்கதை

     தருமன் முதலிய ஐவரும் சூதாடித் தம் நகர், அரசாட்சி, சேனை முதலியவற்றை எல்லாம் இழந்து, திரௌபதியுடன் காமியவனம் புக்கமர்ந்த காலத்தில், வியாச முனிவர் அங்கு சென்று, அவர்களுக்கு நீதிகள் கூறித் தேற்றினார். அப்போது யுதிட்டிரர், முனிவரை வணங்கி ‘எம்மைப் போன்று முன்னஞ் சூதாடிப் பு+மியைத் தோற்றுக் கானக மடைந்தாருளரோ’ வெனக்கேட்க வியாசர், நளன் சரிதத்தைக் கூறினார்.

இதனை நல்லாப்பிள்ளை அவர்கள், ‘நளன்கதை உரைத்த சருக்கம்’ என்று தம் நூலில் ஒரு சருக்கமிட்டு, நூற்றைம்பத்து மூன்று செய்யுட்களால், நைடதத்தைச் சுருக்கமாக அழகுறப் பாடியுள்ளார்.

 1. தேவாரத்தில் நளன்கதை

திருஞானசம்பந்தர் தேவாரத்தில் இடம் பெறுகின்ற திருநள்ளாற்றுப் பதிகத்தில்,

வளங் கெழுவு தீபமொடு தூபமலர் தூவி

         நளன்கெழுவி நாளும் வழிபாடு செய் நள்ளாறே  (தேவா – 1821)

என்னும் அடிகளில் சிவபெருமான் இருக்கும் இடம், நளன் வந்து தங்கி நாள்தோறும் மலர்தூவி வழிபட்டு, கலி நீங்கப்பெற்ற திருநள்ளாறாகும் என நளன்கதை எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

 1. நளவெண்பா

வெண்பா பாடுதலில் வல்லவரான புகழேந்திப் புலவர் முரனைநகர்ச் சந்திரன்சுவர்க்கி என்னும் அரசனது விருப்பின்படி, வெண்பா யாப்பினாலே நளன்கதையை ஒரு காப்பியமாகவே 13 –ஆம் நூற்றாண்டில் விரிவாகப் பாடியுள்ளார். இந்நூலானது சுயம்வர காண்டம், கலிதொடர் காண்டம், கலி நீங்கு காண்டம் எனும் மூன்று காண்டங்களையும், 418 பாடல்களையும் கொண்டுள்ளது.

 1. நைடதம்

        நளன் கதையை முழுக்காப்பியமாக, நளவெண்பாவிற்கு அடுத்து விருத்தப்பாவால், 16 – ஆம் நூற்றாண்டில் புவிச்சக்கரவர்த்தியாகிய அதிவீரராம பாண்டியர் 28 படலமாக இயற்றியுள்ளார். இந்நூல் 1172 பாடல்களைக் கொண்டது.

 

 1. நிகண்டு

சூடாமணி நிகண்டு, பிங்கல நிகண்டு போன்றவற்றில் வரைவின்றி யாவர்க்குங் கொடுக்கும் முதல் ஏழு வள்ளல்கள் பெயர் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றுள் ‘நளன்’ பெயரும் இடம்பெறுகின்றது. (செம்பியன், காரி, விராடன், நிருதி, துந்துமாரி, சகரன், நளன்)

மிக்கசெம் பியனே காரி விராடனே நிருதி தானுந்

          தக்கதுந் துமாரி தானுஞ் சகரனு நளனும் தாமும்”     (சூடா- 2.23)

         “சகரன் காரி நளன் றுந்துமாரி நிருதி

          செம்பியன் விராடன் றலைவள்ளல்”   (பிங்கல நிகண்டு)

       என்னும் அடிகளில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

 1. கூர்மபுராணம்

பு+ருவகாண்டம் 28-வது சந்திரன் மரபுரைத்த அத்தியாயத்தில்,                                  “விழுதுபட் டொழுகு முத்த வெண்ணிலா மாலை தாழு

                  மெழுவுத் குவவுத் திண்டோட் சுமந்துவி னெழில்கொண் மைந்தன்

                  கழுதுகை கொட்டி யால வொன்னலர்க் கடிந்த வாய்வாள்

              முழுதுல கொருகோ லோச்சு நளனெனு மூரி வேலோன்”   (செய்யு- 85)

       என்னும் அடிகளில், நிடதநாட்டை சிறப்பாக ஆட்சிசெய்தான் நளன் என்னும் குறிப்பு காணப்படுகிறது.

 1. நாடகம்

                1872  –  நளவிலாசம்                 –    தாமோதர முதலியார்

1876  –  நளநாடகம்                  –    கிருஷ்ணசாமிப் பிள்ளை

1883  –  நளநாடகம் என்னும்

தமயந்தி நாடகம்         –     தஞ்சை கிருஷ்ணசாமிப்பிள்ளை

1971 –   தமயந்தி நாடகம்

போன்ற நாடகங்களும் நளன்கதையை எடுத்துரைக்கின்றன.

 1. நாட்டுப்புற இலக்கியம்

நாட்டுப்பாடலாக இருந்து இலக்கியமாக ஏற்றம் பெற்ற வகைகளுள் ஒன்று அம்மானை. நளன், தமயந்திக் கதையைக் கூறும் ‘நளனம்மானை’ நாட்டுப்புற வடிவமாகும்.

புராணங்களில் மணிப்படிக்கரைப் புராணமும், திருநள்ளாற்றுப் புராணமும், சிற்றிலக்கியங்களில் மன்விடுதூது, மதன வித்தார மாலை, செயங்கொண்டார் சதகம், திருவேங்கட சதகம் போன்ற பல்வேறு இலக்கியங்களும் நளன் கதையை எடுத்துரைப்பதாக குறிப்புகள் காணப்படுகின்றன. இருப்பினும் நளன் கதையைக் கூறும் முழுமையான நூற்கள் என்றால் நளவெண்பாவும், நைடதமும் தான்.

பிறமொழிகளில் நளன்கதை

வடமொழியில் நைஷதம்

ஹர்ஷரால் வடமொழியில் 12- ஆம் நூற்றாண்டில் இயற்றப்பெற்ற இந்நூலில் 22 சருக்கங்கள் உள்ளன. இச்சருக்கங்களுக்குப் பெயர்கள் இல்லை. இந்நூலில் நளன், தமயந்தி திருமண நிகழ்வு வரை மட்டுமே கதை இடம் பெறுகின்றது. இந்நூல் பல அணி நயங்களுடன் 22 சருக்கங்களைக் கொண்டுள்ளது. இந்நூலுக்கு 1. நாராயணர்  2. ஜினராசர் 3.சாரித்திரவர்த்த சூரி  4. நரஹரி 5. வித்யாதரர் 6.மல்லிநாதசூரி எனும் ஆறுபேர் உரையெழுதியுள்ளனர். இவர்களது உரைகள் நைஷதியப் பிரகாசம், சுகரவ போதம், திலகம், தீபிகை, சாகித்ய வித்தியாதரி, ஜீவரது போன்றவைகளாகும். இவற்றுள் ஸ்ரீமல்லிநாதசூரி இயற்றிய ‘ஜீவரது வியாக்கியானமே’ சிறந்ததாகக் கருதப்படுகின்றது.

மலையாள மொழியில் நைஷதம்

சம்பு இலக்கியம்

இடைக்கால சம்பு இலக்கியங்களில் 16 –ஆம் நூற்றாண்டில் தோன்றியது பாஷா ‘நைஷத சம்பு’. இதனை எழுதியவர் ‘மழமங்கலத்து நாராயணன் நம்பு+திரி’ ஆவார். இந்நூல் பு+ர்வபாகம், உத்தர பாகம் எனும் இரண்டு பாகங்களைக் கொண்டு நளன்கதையை எடுத்துரைக்கின்றது.

ஆட்டக்கதை

கதகளியின் இலக்கிய அமைப்பு ஆட்டக்கதை ஆகும். 17 மற்றும் 18 ஆம் நூற்றாண்டுகளின் இடைப்பட்ட காலகட்டத்தில், உண்ணாயிவாரியரால் ‘நளசரிதம் ஆட்டக்கதை’ இயற்றப்பட்டுள்ளது. இவையின்றி குஞ்சன் நம்பியார் இயற்றிய ‘நளசரிதம் – துள்ளல்’, ‘நளசரிதம் – கிளிப்பாட்டு’, ‘நளசரிதம் – மணிப்பிரவாளம்’ போன்ற நூல்களும் நளன் கதையை எடுத்துரைக்கின்றன.

முடிவுரை

            காலந்தோறும் பல இலக்கிய வடிவங்களைப் பெற்ற நளன்கதையானது துன்ப நிலையில் இருக்கக் கூடிய ஒவ்வொருவருக்கும், அத்துன்பத்தை நீக்கும் பொருட்டு, பல்வேறு கால கட்டங்களில் இலக்கியங்களாக உருப்பெற்றமையை நம்மால் இக்கட்டுரையின் மூலம் அறிந்து கொள்ளமுடியும்.

துணை நூற்கள்

 1. வழித்துணை ராமன் ஏ.எஸ். – 2005, நைடதம், பாரிநிலையம், சென்னை. 600 108
 2. கதிரைவேற்பிள்ளை. நா – 1930, நைடதம் மூலமும் விருத்தியுரையும், வித்யாரத் நாகர அச்சுக்கூடம், சென்னை.
 3. அருணாசலம்.மு – 2005,16- ஆம் நூற்றாண்டு தமிழ் இலக்கிய வரலாறு, சென்னை. 600 014
 4. பாக்யமேரி- 2011, வகைமை நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு, சென்னை. 600 098
 5. பரமேஸ்வரன் நாயர் – 2014, மலையாள இலக்கிய வரலாறு, சாகித்திய அகாதெமி, புதுடெல்லி. 110 001
 6. சைனபா. எம் – 2014, நளசரிதம் மணிப்பிரவாளம், கேரளப்பல்கலைக் கழகம், திருவனந்தபுரம். 695 581
 7. எரிமேலி பரமேஸ்வரன் பிள்ளை – 2010, மலையாள சாகித்யம் காலகட்டங்களிலூடே, கரண்ட் புக்ஸ், திருவனந்தபுரம்.

Rajadurai.L

Research Scholar

ORI & MSS Library

University of Kerala

+91 8281471857, 09656903757

[email protected]